உன் விழியில் கைதானேன் 23
விழி 23
ஒரு பக்கம், தான் தேவாவுடன் சேர்ந்து வாழ்ந்தால் பின்னாளில் தன் வேலையில் அதை வைத்து மற்றவர்கள் தன் நேர்மையைச் சந்தேகப் படுவார்கள் என்று நினைத்து மறுகியவள், தன் குடும்பத்திற்கும் அவனைப் பிடிக்கவில்லை என்று தெரிந்த பிறகு மொத்தமாக உடைந்து விட்டாள். நடந்த கல்யாணத்தால் ஏற்கனவே தன் குடும்பம் பட்ட கஷ்டமும் அவமானமும் போதும் என்று நினைத்தவள், தன் காதலைத் தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டவள், இனித் தன் வாழ்க்கையில் தேவாவைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்பதையும் முடிவு செய்து கொண்டாள்.
நாள்கள் அதன் போக்கில் செல்ல, மீண்டும் ஒரு கேஸூக்காகச் சந்தியா பெங்களூர் போய்விட, அந்த நேரம் தேவாவும் விடுதலையாகி வெளியே வந்திருந்தான்.
சென்னையில் அருள் தொழில் தொடங்கியது தெரிந்து, “உங்களை யாரு மாமா இங்க பிசினஸ் ஸ்டார்ட் பண்ணச் சொன்னது.” என்றவனுக்கு இங்கே இருந்தால் எங்கே தன் கட்டுப்பாட்டையும் மீறிச் சந்தியாவைப் பார்க்கச் சென்று விடுவோமோ என்ற பயமிருக்க, முதலில் அருள் மேல் கோபம் கொண்டவன், குறைந்தபட்சம் அவளிருக்கும் ஊரில் இருக்கும் நிமமதியாவது தனக்குக் கிடைக்கட்டும் என்று நினைத்தவன் அதன் பிறகு அமைதியாகி விட்டான்.
அருள் ஆரம்பித்த தொழிலைத் தன் கையில் எடுத்துத் திறம்பட நடத்திய தேவா கொஞ்ச நாளிலேயே, அதில் முதலிடத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். தன் பழைய வாழ்க்கையை மொத்தமாக மறந்துவிட்டுப் புது வாழ்க்கையைத் தொடங்கியவன், ரகு உட்பட தன்னுடன் இருந்தவர்களுக்கு வேறு வேறு ஊரில் தொழிலை ஏற்படுத்திக் கொடுத்து விட்டான். அதன் பிறகு அவர்களுடன் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருந்தவன், சந்தியா கடத்தப்பட்ட போது தான் அவர்கள் உதவியை நாடினான்.
தேவாவின் வளர்ச்சி பற்றிய செய்தி சூர்யாவின் காதிற்கும் சென்றது. அதை அர்விந்துடன் பகிர்ந்து கொண்ட சூர்யா, “அந்தத் தேவா நல்ல டேலண்டெட் பர்சன் தான்டா மச்சி… பிஸினஸ் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்தான் ஆகுது. அதுக்குள்ள டாப்ல வந்துட்டான்.” என்று சொல்ல, அரவிந்தும் ஆமாம் என்று தலையாட்டியவன், “அதெல்லாம் ஓகே தான்டா… ஆனா, அவன் வெளிய வந்து இத்தனை மாசம் ஆகுது. ஆனா, இப்பவரை ஒரு தடவைகூட அவன் நம்ம சந்தியாவைப் பார்க்க ட்ரை கூடப் பண்ணலடா… ஆர்த்தி சிஸ்டர் தான் தேவா வெளிய வந்த விஷயத்தைச் சொல்ல, நம்ம வீட்டுக்கு ஒருமுறை வந்தாங்க. ஆனா, இவன் இப்ப வரை அவகிட்டப் பேசக்கூட ட்ரை பண்ணலியே… ஒருவேளை நம்ம நினைக்கிற மாதிரி அவனுக்கு இவ மேல லவ் எதுவும் இல்லயா? இல்ல இவ அவன்கிட்ட தன்னைப்பத்தி மறச்சு வச்சு அவனை அரஸ்ட் பண்ணதை நினைச்சு அவளை வெறுத்துட்டானா?” என்று சொல்ல, சூர்யாவும் அப்போது தான் அதைப்பற்றி யோசித்தான்.
“நீ சொல்றதும் கரெக்ட் தான் மச்சி. ஒருவேளை அப்படி எதுவும் இருந்தா? நம்ம சந்தியா லைஃப் தான் அஃபெக்ட் ஆகும்” என்றவன், “உடனே நம்ம தேவாவை மீட் பண்ணி, என்ன எதுன்னு பேசி இந்த மேட்டரைக் கிளியர் பண்ணிக்கணும்.” என்றவன் உடனே அரவிந்தை அழைத்துக் கொண்டு தேவாவின் வீட்டுக்கு விரைந்தான்.
தேவாவுக்கு நடப்பது கனவா நினைவா என்று எதுவும் புரியாமல் தன் முன்னால் அமர்ந்திருந்த சூர்யா மற்றும் அரவிந்தனை உற்றுப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.
“நீங்க சொல்றது உண்மையா அண்ணா?” என்று கேட்ட ஆர்த்தி முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
“கன்பர்மா தெரியல… ஆனா, அப்படி இருக்குமோன்னு வீட்ல எல்லாருக்கும் தோணுது. அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தாலே, எனக்கு இப்பக் கல்யாணம் வேணாம்னு சொல்றா? சரி, தேவாவை விரும்புறயான்னு கேட்டா, அதுவும் இல்ல, நடந்தது ஒரு ஆக்சிடென்ட். அதை நான் மறந்துட்டேன்னு சொல்றா… எங்களுக்கு என்னமோ அவ உங்க தம்பியை விரும்புறாளோன்னு ஒரு டவுட். அதான் உங்க முடிவு என்னான்னு தெரிஞ்சிக்க வந்தோம்.” என்றான் சூர்யா.
“இதுல நாங்க சொல்ல என்ன இருக்கு… சந்தியா எங்க வீட்டுக்கு வர நாங்க கொடுத்து வச்சிருக்கனும்.” என்று ஆர்த்தி மகிழ்ச்சியாகச் சொல்ல சூர்யா, தேவாவைப் பார்த்தவன், “உங்க தம்பி ஒன்னும் சொல்லாம இருக்காரு? அவருக்கு இதுல விருப்பம் இல்லயா?” என்று கேட்க சூர்யாவை நிமிர்ந்து பார்த்த தேவா, “அவளுக்கு என்னைப் புடிக்கும்னு எனக்குத் தெரியும் சார். ஆனா, அவ கண்டிப்பா என்னோட சேர்ந்து வாழ ஒருநாளும் சம்மதிக்க மாட்டா” என்று சொல்ல, சூர்யாவும் அரவிந்தும் அவனைக் கேள்வியாகப் பார்த்தனர்.
“ஆமா சார். உங்க அளவுக்கு அவளை எனக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா, இத்தனை நாளில் எனக்கு அவளைப் பத்தித் தெரிஞ்ச வரையில் அவளுக்கு இந்தப் போலீஸ் வேலை மேல எவ்ளோ ஈடுபாடுன்னு எனக்கு ஓரளவு தெரியும். அப்படி இருக்க அவளால எப்படி ஜெயில்ல இருந்து வந்த ஒருத்தன் கூட வாழ முடியும்? நாளைக்கு அவளோட கெரியர்ல இது ஒரு ப்ளாக் மார்க்கா இருக்குமே சார்” என்று கேட்க, சூர்யாவும் அரவிந்தும் ஒருவரை ஒருவர் அர்த்தப்பார்வை பார்த்துக் கொண்டனர்.
“ம்ம்ம் குட் தேவா... நீங்க அவளைச் சரியாப் புரிஞ்சு வச்சிருக்கீங்க. அவ அப்படி நினைக்க வாய்ப்பு இருக்கு. ஆனா, அவளுக்கு அவ வேலை எவ்த் முக்கியமோ, அதைவிட அவளோட எதிர்காலம் எங்களுக்கு முக்கியம். அவ உங்களை லவ் பண்ற பட்சத்தில் வேற யாரையும் அவ மேரேஜ் பண்ணிக்க மாட்டா… அப்படி உங்க கூட அவ வாழணும்னா அவ வேலையே அதுக்குத் தடையா இருக்கும்னா அப்ப அவ வாழ்க்கை என்னாகுறது? அட்லாஸ்ட் அவ எதாவது ஒரு முடிவுக்கு வந்துதானே ஆகணும். அந்த முடிவு உங்களை ஏத்துக்கிறதாய் இருக்கணும்.” என்ற சூர்யா,
“நாங்க இங்க வந்தது, அவ நீங்கதான் வேணும்னு முடிவேடுதா அதுல எங்க எல்லாருக்கும் முழு சம்மதம்னு சொல்லத்தான். நீங்க என்ன செஞ்சு அவ மனசை மாத்துவீங்கன்றது உங்க பிரச்சனை. ஆனா, அவ நீங்க தான் வேணும்னு முழுமனசோட சொல்லனும். நீங்க சொல்ல வைக்கணும். அதுக்கு எங்களால் முடிஞ்ச உதவியை நாங்க செய்யறோம்.” என்று சொல்ல, அன்றில் இருந்து சந்தியாவின் மனதை வெல்ல அவள் பின்னால், விக்ரமாதித்தன் வேதாளம் பின்னால் அலைவது போல் அலைந்தவன், இன்று அதில் வெற்றியும் பெற்றிருந்தான்.
தேவாவுக்கு உடம்பு முழுவதும் குணமான பிறகு இருவருக்கும் திருமணத்தை நடத்தலாம் என்று இரு குடும்பத்தாரும் முடிவு செய்திருக்க, காலையில் இருந்து மாலை வரை தேவாவுக்குத் தேவையான அனைத்தையும் அவளே உடனிருந்து பார்த்துப் பார்த்துச் செய்பவள், இரவு தான் அவள் வீட்டிற்குச் செல்வாள்.
அன்று வெந்நீர் கொண்டு தேவாவின் உடலைத் துடைத்துக் கொண்டிருந்த சந்தியாவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.
அவன் தன்னைப் பார்ப்பது தெரிந்தும் அமைதியாக இருந்தவள், அவன் உடலைத் துடைத்து முடித்து அங்கிருந்து நகர, அவள் கையைப் பிடித்து இழுத்தான் தேவா.
அவளும் அவனைத் திரும்பிப் பார்க்க, “எனக்காகவா இப்படிச் செஞ்ச?” என்று கேட்டவன் குரலில் வருத்தமும் சந்தோஷமும் கலந்தே இருந்தது.
“என்னை வேற என்னடா செய்யச் சொல்ற?” என்றவளின் கண்கள் கலங்கி விட்டது.
“ப்ளீஸ்டி அழாத” என்ற தேவாவுக்கும் மனம் வலிக்கத்தான் செய்தது.
“என்னால முடியல தேவா… மனசு முழுக்க உன்னை வச்சிட்டு, என்னால பொய்யா நடிக்க முடியல. இதுக்கு முன்ன என்னோட குடும்பமா நீயான்னு வரும்போது என்னோட குடும்பத்துப் பக்கம் சாஞ்ச என்னோட மனசு, அன்னைக்கு… உன்னை அந்த தீனா சுட்ட நேரம், உன்னை இந்தக் கையில தாங்கின நொடி சத்தியமா என்னால வேற எதையும் யோசிக்க முடியலடா… நீ உயிரோட பொழச்சு வந்தால் மட்டும் போதும். வேற எதுவும் வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். என்னோட வேலையா நீயான்னு வரும்போது எனக்கு என் தேவா தான் முக்கியம்” என்றவளை இழுத்து அணைத்துக் கொண்டான் தேவா.
அவன் நெஞ்சில் சாய்ந்தபடி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “உனக்கு எப்படித் தெரியும்? நான் இன்னும் வீட்ல கூட இதைப்பத்திச் சொல்லல…”
“காலையில யுக்தா மேடம் கால் பண்ணி இருந்தாங்க… என்னடா பண்ண என் தங்கச்சிய? உனக்காக அவ அவ்ளோ ஆசைப்பட்டு சேர்ந்த போலீஸ் வேலையை ரிசைன் பண்ணிட்டா… என்ன மந்திரம் போட்டு அவளை மயக்கினேன்னு கேட்டாங்க.” என்றவன் நெஞ்சில் இன்னும் வாகாகச் சாய்ந்து கொண்டாள் சந்தியா.
“யுக்தா அக்காவைப் பார்த்துதான் தேவா எனக்குப் போலீஸ்ல சேரணும்னு ஆசையே வந்துது. ஷீ இஸ் மை இன்ஸ்பிரேஷன். அவங்களை மாதிரி ஸ்ட்ராங்கான லேடியை நான் பார்த்ததே இல்லடா. உன்னோட கேஸ்க்கு அப்புறம், சிலர் என்னைத் தப்பாப் பேசும்போது நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். உன்னை நான் ஒதுக்கி வச்சதுக்கு அதுவும் ஒரு காரணம். ஏன் அப்ப இருந்த மனநிலையில் நான் வேலையை ரிசைன் பண்ற அளவுக்குக் கூடப் போனேன். அப்ப பரதன் அங்கிள் மட்டும் இல்லாட்டி நான் அப்பவே இந்த வேலையை விட்டிருப்பேன்.” என்றவளைக் கவலையாகப் பார்த்த தேவா,
“இப்ப என்னால நீ வேலையை விட்ட இல்ல.” என்று வருத்தமாகக் கேட்க, அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், “அப்ப நான் வேலையை விட்டிருந்தா கண்டிப்பா அதை நினைச்சு நினைச்சு நான் உள்ளுக்குள்ளயே அழுதிருப்பேன். பிகாஸ் அப்ப என்னோட மனநிலை வேற. ஆனா, இப்ப அப்படி இல்ல. நான் இதுவரை என் பதவிக்கு நேர்மையா இருந்தேன்ற திருப்தி இருக்கு. எல்லாத்துக்கும் மேல, இனி உன்னோட எந்த உறுத்தலும் இல்லாம என்னால நிம்மதியா வாழ முடியும். அதுபோதும் எனக்கு.” என்றவளைத் தன் நெஞ்சோடு புதைத்துக் கொண்டான் அவள் கணவன்.
“உண்மையில் நான் யுக்தா அக்காக்கு தான்டா தேங்க்ஸ் சொல்லணும். உன் விஷயத்தில் நான் குழப்பத்தில் இருந்த சமயம் அவங்கதான் எனக்குப் புரிய வச்சாங்க. அவங்க அந்த நாதாரி உதய் கூட உன்னைக் கம்பேர் பண்ணதை என்னால தாங்கவே முடியல. சட்டுன்னு என்னையும் மீறி, என் தேவா அப்படி இல்ல. அவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டேன். அப்ப அக்கா சிரிச்சிட்டே, அடியே பைத்தியம் உன் மனசு முழுக்க அவன்தான் இருக்கான். ஒழுங்கா சீக்கிரம் அவனோட சேரும் வழியப் பாருன்னு சொன்னாங்க…” என்று வெட்கத்தில் சிவந்த முகத்துடன் சொன்னவள்,
“அதுக்குப் பிறகு எதுக்காகவும் உன்னை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன். அந்தக் கருணா கேஸை முடிச்சிட்டு வேலையை ரிசைன் பண்ணனும்னு முடிவு செஞ்சேன். அந்த நேரத்தில் தான் இந்த தீனா குறுக்க வந்தான். பழனி கொலைக் கேஸ்ல அரஸ்ட் ஆன தயாளன், ஜெயில்ல தற்கொலை பண்ணிட்டான். அதுக்குப் பழிவாங்க தான் இந்தத் தீனா ஜெயில்ல இருந்து தப்பிச்சு இருக்கான். நீ ஜெயில்ல இருந்தனால உன்னை அவனால் ஒன்னும் செய்ய முடியல. என்னைக் கொல்ல என்னைத் தேடி அவன் சென்னை வந்த சமயம் நான் டெல்லில இருந்தேன். அதுக்குப் பிறகு அவன் மும்பையில் இருந்த ஒரு அண்டர்வேர்ல்ட் கும்பல் கூடக் கூட்டு சேர்ந்து இருக்கான். அவங்க மூலமா தான் என்னைக் கண்டு புடிச்சு இருக்கான். அப்படி தான் அன்னைக்கு நம்மைக் கொல்ல அவன் அங்க வந்தான், செத்தும் போயிட்டான்.
இந்தக் கேஸ்க்கு அப்புறம் வேலையை விட நினைச்ச எனக்கு, அந்தத் தீனாவைச் சுட்டது கேஸ் எங்க பெரிய பிரச்சனையா வருமோன்னு யோசிச்சிட்டே இருந்தேன். தேங்க் காட், யுக்தா அக்கா ஹஸ்பண்ட் ஆதி சார். அந்தக் கேஸை வேற ஆங்கில்ல மாத்தி ரெண்டு கேங்குள்ள நடந்த ஷாட் அவுட்ல தீனா செத்துட்டான்னு சொல்லி, எனக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் பண்ணிட்டாரு. தேங்ஸ் டூ யுக்தா அக்கா அன்ட் ஆதி சார்.”
“ம்ம்ம்… அவங்களுக்கு உன்மேல அக்கறை அதிகம் தான். என்னை மீட் பண்ணும்போது அவங்க சொன்னது, சந்தியாவுக்கு உன்னைப் புடிக்காத பட்சத்தில் நீ அவளை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தான் சொன்னாங்க… இல்ல இல்ல மிரட்டுனாங்க. அப்ப நான் சொன்ன ஒரே வார்த்தை, அவளுக்கு என்மேல இருக்கற காதலுக்கான சாட்சி அவ கழுத்துல தொங்கிட்டு இருக்கு… வேணும்னா செக் பண்ணிப் பாருங்கன்னு” என்றவனை வியப்பாகப் பார்த்த சந்தியா,
“ஆமா… தாலி என் கழுத்துல தான் இருந்ததுன்னு உனக்கு எப்படித் தெரியும். நான் யாருக்கும் தெரியக் கூடாதுன்னு தான் லாங் செயின்ல தாலியப் போட்டு, டிரஸ்குள்ள மறச்சு வச்சிருந்தேன். என் அம்மாவுக்கு கூட அது தெரியாது. உனக்கு எப்படித் தெரியும்.” என்றவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தவன்,
“நமக்கு நடந்த கல்யாணம் வேணும்னா ஒரு வகையில் பொய்யா இருக்கலாம். ஆனா, அதுக்குப் பிறகு நம்ம ரெண்டு பேரும் வாழ்ந்த வாழ்க்கை உண்மை. அன்னைக்கு ஜெயில்ல நான் எல்லாமே பொய்யான்னு கேட்டப்போ நீ பாத்தியே ஒரு பார்வை, அதுவே சொல்லிடுச்சுடி உன் மனசை. ஒருவேள உன் மனசுல நான் இல்லாம இருந்திருந்தா, நீ எப்பவோ வேற கல்யாணம் பண்ணி இருப்ப… நீ அப்படிச் செய்யல… அதுக்கு அர்த்தம் உன் மனசுலயும் வாழ்க்கையிலயும் என் ஒருத்தனுக்கு மட்டும் தான் இடமிருக்கு. அப்புறம் எப்படிடி நீ நான் கட்ட தாலியைக் கழற்றி இருக்க முடியும்.” என்றவனைக் கண்ணீரோடு பார்த்தவள், அவன் பின்னந்தலையைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்தவள், அவன் இதழோடு தன் இதழ்களைப் பொருத்திக் கொண்டாள்.