உன் விழியில் கைதானேன் 22

 விழி 22


அந்த வீடே அமைதியாக இருந்தது. அடுத்து என்ன என்று யோசிக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தனர் அனைவரும்.


கலைவாணி மட்டும் அழுதுகொண்டே இருந்தவர், “இப்படி ஆகிடுச்சே… இனி இவ வாழ்க்கையை எப்படிச் சரிபண்ணப் போறேன்.” என்று அழுது புலம்பியபடியே இருந்தவரை யாராலும் தேற்ற முடியவில்லை.


அன்றைய தினம் திடீரென வீட்டுக்கு வந்த ஆகாஷ் குடும்பத்தைப் பார்த்து ஒரு நிமிடம் தடுமாறிய சூர்யா, அடுத்த நொடி தன்னைச் சுதாரித்துக் கொண்டு, “வாங்க… வாங்க ஆகாஷ்.” என்று அவர்களை வரவேற்று அமர வைத்தவன், “நானே உங்களை வந்து பார்த்துப் பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன்‌.” என்று சொல்ல, “இனி அதுக்கு எந்த அவசியமும் இல்ல.” என்றான் ஆகாஷ் இறுகிய குரலில்.


அவன் சொன்னதைக் கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்த கலைவாணி, “அது மாப்பிள?” என்று ஏதோ சொல்லவர போதும் என்பது போல் கை காட்டிய ஆகாஷ், “எனக்கு நடந்த எல்லா விஷயமும் தெரியும்.” என்றவன், “நாங்க இப்ப இங்க வந்ததே இனிமே இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டுப் போகத்தான்.” என்று சொல்ல அனைவருக்கும் நெஞ்சம் பதறியது என்றால், சந்தியா மட்டும் ஆகாஷை நிதானமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.


அப்போது சூர்யா, “நடந்ததை மறைக்க நாங்க நினைக்கல ஆகாஷ். உங்ககிட்ட இதைப்பத்திப் பேசதான் நான் உங்களைப் பார்க்க வந்தேன். பட் நீங்க ஊர்ல இல்லைன்னு சொன்னாங்க.” என்ற சூர்யா, “நடந்ததில் சந்தியாவோட தப்பு எதுவும் இல்லை. அது ஒரு ஆக்சிடென்ட்.” என்று சொல்ல அதற்கு ஆகாஷின் தாயோ, “எது, ஆக்சிடென்ட்டா… என்ன பேசுறீங்க நீங்க? ஊர் முன்னாடி வச்சு ஒருத்தன் இவளுக்குத் தாலி கட்டி இருக்கான். இந்தப் பொண்ணும் அவனோட ஒரே வீட்ல ஒண்ணாத் தங்கி இருந்திருக்கா… இதெல்லாம் என்ன சின்ன விஷயமா? இத்தனை நாள்ல இவங்க ரெண்டு பேருக்குள்ளயும் எதுவும் நடக்காமயா இருந்திருக்கும்.” என்று வாய்க்கு வந்ததைப் பேச, அரவிந்த்துக்கு அதுவரை இருந்த பொறுமை காற்றில் கரைந்து போனது.


“என்ன பேசுறோம்னு கொஞ்சம் யோசிச்சுப் பேசுங்க… எங்க வந்து யாரைத் தப்பாப் பேசிட்டு இருக்கீங்க.” என்று எகிறியவனைத் தடுத்து நிறுத்திய தேன்மொழி, “ப்ளீஸ், கொஞ்சம் அமைதியா இருங்க… இது நம்ம சந்தியாவோட வாழ்க்கை. கொஞ்சம் பொறுமையாப் பேசுங்க.”‌ என்று கெஞ்ச, “என்னால இவங்க பேசுறதை எல்லாம் கேட்டுட்டு அமைதியா இருக்க முடியாது தேனு.” என்றவன் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டான்.


சூர்யாவுக்கும் அவர்கள் சந்தியாவைப் பற்றி, நாகரீகம் இல்லாமல் பேசியது கோபத்தைக் கிளறினாலும், இதில் சந்தியாவின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்று கஷ்டப்பட்டு தன் கோபத்தை அடக்கியவன், “இங்கப் பாருங்க ஆகாஷ். அவ வேலையைப் பத்தி உங்களுக்கே நல்லாத் தெரியும். கேஸ் இன்வெஸ்டிகேஷனுக்காகப் போன இடத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துபோச்சு… நீங்களும் சொசைட்டியில ஒரு பெரிய லாயர். இதெல்லாம் உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்.” என்றவனை அலட்சியமாகப் பார்த்த ஆகாஷ், “நீங்க சொன்ன மாதிரி நான் இந்த சொசைட்டில பெரிய லாயர்தான் சூர்யா, அப்படிப்பட்ட நான் ஏன் இவளுக்கு செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்டா ஆகணும்.” என்று சொல்ல, சூர்யா ஆகாஷின் சட்டையைப் பிடித்து விட்டான்.


“சூர்யா… அவரை விடுங்க” என்ற நிலாவின் குரலில் நிதானத்துக்கு வந்த சூர்யா, “மைண்ட் யுவர் வேர்ட்ஸ் ஆகாஷ். நாங்க ஒன்னும் உங்க வீட்டு வாசல்ல வந்து எங்க பொண்ணைக் கட்டிக்கோங்கன்னு நிக்கல… நீங்கதான் விரும்பி வந்து பொண்ணு கேட்டீங்க?” என்றான் கோபத்தை அடக்கியவனாக‌.


“அஃப்கோர்ஸ்… நாங்கதான் பொண்ணு கேட்டு வந்தோம். இல்லன்னு சொல்லல. நான் ஒரு பெரிய லாயர், எனக்கு வர வைஃப் எனக்கு ஏத்தவளா, எல்லா விதத்திலும் எனக்குப் பொருத்தமாய் இருக்கணும்னு நினைச்சேன். அப்பதான் இவளைப் பார்த்தேன். பார்க்க அழகாய் இருந்தா… விசாரிச்சுப் பார்த்ததில் இவ உங்க மச்சினின்னும், போலீஸ் டிபார்ட்மெண்ட்ல நல்ல பொசிஷன்ல இருக்கான்னும் தெரிஞ்சுது. சோ இவ மாதிரி ஒருத்தியைக் கல்யாணம் பண்ணா இந்த சொசைட்டில எனக்குக் கௌரவமா இருக்கும்னு நினைச்சேன். அதான் பொண்ணு கேட்டு வந்தேன். அதுக்காக இப்படி இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிட்டுக் கொஞ்ச நாள் அவனோட குடும்பம் நடத்திட்டு, அவனையே அரஸ்ட் பண்ணித் தண்டனை வாங்கிக் கொடுத்தவளை என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீங்களா? அப்படி இவளுக்கு ரெண்டாவது புருஷனா வர்ற அளவுக்கு என்னோட ஸ்டேட்டஸ் ஒன்னும் குறைஞ்சு போயிடல.” என்றவனை அடிக்கப் பாய்ந்த சூர்யாவைத் தடுத்து நிறுத்திய சந்தியா, “அவரோட முடிவைச் சொல்ல அவருக்கு முழு உரிமை உண்டு மாமா…” என்றவள் திரும்பி ஆகாஷை அலட்சியமாகப் பார்த்தவள், “போலீஸா இருந்துட்டு, இவனோட பழகியும், இவனைச் சரியா கணிக்க முடியாத முட்டாளா இருந்துட்டேன்னு நினைக்கும் போது என்னை நினைச்சு எனக்கே அசிங்கமா இருக்கு மாமா. இவன் என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கல, சூர்யாவோட மச்சினி, சந்தியா ஐ.பி.எஸ்ஸை தான் கல்யாணம் பண்ணிக்க நினைச்சிருக்கான். அதும் இந்த சொசைட்டி முன்னாடி இவனை கெத்தா காமிச்சிக்க. பச்ச்… இவ்ளோ நாள் அது தெரியாம இருந்திருக்கேனே நானு…” என்றவள் திரும்பி ஆகாஷைப் பாரத்து, “இந்த மேரேஜ் நடக்காதுன்னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன். யூ ஆர் டூ லேட்.” என்றவள் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்து அவன் முன் நீட்டினாள். அது அவர்களின் நிச்சயதார்த்த மோதிரம். 


“இதப்புடி” என்று மோதிரத்தை அவனை நோக்கித் தூக்கிப்போட உடனே ஆகாஷும், அவன் கையில் இருந்த அவள் போட்ட மோதிரத்தைக் கழற்றி அவளிடம் நீட்ட, அதைக் கையில் வாங்காமல் அவனை அலட்சியமாகப் பார்த்தவள், “அதைக் கையில தொடக்கூட எனக்குப் புடிக்கல… இதைப் போற வழியில குப்பையில் போட்டிரு… அதுக்கான சரியான இடம் அதுதான்.” என்று திமிராகச் சொன்னவளை முறைத்தபடியே தன் குடும்பத்தோடு அங்கிருந்து கிளம்பினான் ஆகாஷ்.


கல்யாணம் நின்ற வேதனை ஒரு பக்கம் இருந்தாலும், ஆகாஷின் உண்மை முகம் தெரிந்த பிறகு, நல்லவேளை இந்தக் கல்யாணம் நடக்கவில்லை என்றே அனைவரின் மனநிலையும் இருந்தது‌. 


இந்தச் சூழ்நிலையில் சந்தியா இடம் மாறி இருந்தால் நல்லது என்று நினைத்த சூர்யாவும் அரவிந்தும், கலைவாணியிடம் பேசி அவரைச் சம்மதிக்க வைத்துச் சந்தியாவை டெல்லிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.


இதனிடையே வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற ஆர்த்தியின் கணவன் அருள், அங்கு நடந்த ஒரு திருட்டில், யாரோ செய்த தவறுக்காக அவன் மாட்டிக் கொண்டு இருப்பதை அறிந்த சந்தியா, அருளை அந்த வழக்கில் இருந்து காப்பாற்றச் சூர்யாவிடம் உதவி கேட்டாள்.


சூர்யாவுக்குத் தேவா மேல் கோபமும் ஆத்திரமும் இருந்தாலும், ஆர்த்தியின் நிலையை நினைத்துப் பார்த்தவன், அவளுக்காக அருளுக்கு உதவி செய்ய முன் வந்தான்.


அன்று சந்தியா டெல்லிக்குப் புறப்பட, அவளைத் தயக்கமாகப் பார்த்தபடி நின்றாள் ஆர்த்தி.


அவள் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சந்தியா, “நான் இல்லன்னு யோசிக்காதீங்க… எங்கம்மா உங்களை நல்லாப் பார்த்துப்பாங்க, எதைப் பத்தியும் யோசிக்காம நிம்மதியா இருங்க” என்றவளின் கையைப் பிடித்துக் கொண்ட ஆர்த்தி, “நீ சொல்லவே வேணாம் சந்தியா. நீ இங்க இல்லாட்டியும் உங்கம்மா என்னை நல்லாப் பார்த்துப்பாங்கன்னு எனக்குத் தெரியும். அவங்க மனசு அப்படி. நீ ரொம்ப லக்கி. உனக்கு எல்லா உறவும் அருமையா அமைஞ்சிருக்கு…” என்றவளைச் சட்டென நிமிர்ந்து பார்த்த சந்தியா, ஏதோ சொல்ல வந்தவள், பின் அமைதியாய் “ம்ம்ம்… நான் கிளம்புறேன், உங்க ஹஸ்பண்ட் பத்தி மாமாகிட்டச் சொல்லி இருக்கேன். கூடிய சீக்கிரம் அவர் இந்தியாக்கு வந்திடுவாரு.” என்றவள் சற்று நிறுத்தி, “உங்..‌.உங்க தம்பியைப் பார்க்கத் தோணுச்சின்னா, நீங்க அப்பாகிட்டச் சொல்லுங்க. அவரு உங்களைக் கூட்டிட்டுப் போவாரு… தனியாப் போகாதீங்க, அப்புறம்…” என்று ஏதோ சொல்ல வந்தவள், “ஒன்னும் இல்ல..‌.” என்று விட்டுச் சென்றாள்.


அவள் டெல்லிக்குச் சென்ற அடுத்த வாரம் தேவாவைப் பார்க்க வந்த ஆர்த்தி, தான் இப்போது சந்தியா வீட்டில் இருப்பதைச் சொன்னவள், சந்தியாவின் கல்யாணம் நின்றது உட்பட அனைத்தையும் தம்பியிடம் சொல்லி முடித்தாள்.


“என்னை சந்தியா குடும்பம் ரொம்ப நல்லாப் பார்த்துக்குறாங்கடா. உங்க மாமாவை இந்தியாக்கு கூட்டிவர சூர்யா அண்ணா ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்காரு. கூடிய சீக்கிரம் மாமா இங்க வந்திடுவாரு” என்றவள், “அவர் வந்ததும் சந்தியா வீட்ல உன்னையும் அவளையும் பத்திப் பேசிப் பார்க்கலாம்னு இருக்கேன்.” என்றவளைப் பார்த்து இடவலமாகத் தலையாட்டிய தேவா, “அப்படி எதுவும் செஞ்சிடாத ஆர்த்தி… நீ நினைக்கிறது நடக்காது.” என்றான் வலி நிறைந்த குரலில்.


“ஏன்டா அப்படிச் சொல்ற… உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சிடா… அவ உன் பொண்டாட்டி தேவா.” என்றாள் தவிப்பாக.


“சின்னக் குழந்தை மாதிரிப் பேசாத ஆர்த்தி. முதல்ல அவளோட விருப்பம் இல்லாம நடந்த கல்யாணம் சட்டப்படி செல்லாது. அதோட அவ ஒரு போலீஸ் ஆபிஸர். நான் ஜெயில்ல இருக்கற குற்றவாளி. அவளும் நானும் எப்படிச் சேர்ந்து வாழமுடியும்னு நீ நினைக்கிற. இதுக்கு அவங்க குடும்பம் எப்படிச் சம்மதிக்கும் சொல்லு. இவ்ளோ நடந்த பிறகும் உன்னை அவங்க வீட்ல வச்சு நல்லபடியாப் பார்த்துக்கும்போது தெரியுது. அவங்க எல்லாம் எவ்ளோ நல்லவங்கன்னு. அப்படிப்பட்ட குடும்பத்துக்குத் தெரியாம ஒருதரம் நான் செஞ்ச துரோகம் போதும். தெரிஞ்சே மறுபடியும் அந்தத் தப்பை நான் செய்ய விரும்பல. அவ அவளுக்குப் பொருத்தமான யாரையாவது கல்யாணம் பண்ணிட்டுச் சந்தோஷமாய் இருக்கட்டும்.” என்றவனைக் கண்ணீரோடு பார்த்த ஆர்த்தி, “அப்ப நீ?” என்றாள் வேதனை முகத்துடன்.


“அவ கூட இருந்த அந்தக் கொஞ்ச நாள் ஞாபகங்கள் போதும் ஆர்த்தி எனக்கு, நான் நிம்மதியா இருப்பேன்.” என்றவன் அங்கிருந்து சென்றுவிட, இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த சந்தியாவின் தந்தை ராம்குமாருக்குத் தேவா மீது ஒரு நல்லெண்ணம் தோன்றியது.


சந்தியா டெல்லிக்குச் சென்ற பிறகு சூர்யாவும், அரவிந்தும் அவளுக்காகத் தீவிரமாக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இது தெரிந்த சந்தியா இப்போது தான் அதற்குத் தயாராக இல்லையென்று விட்டாள் முடிவாக.


சூர்யாவின் முயற்சியில் ஏழு மாதங்கள் கழிந்து இந்தியா திரும்பி இருந்தான் அருள். நடந்தது அனைத்தும் தெரிந்த பிறகு அவனுக்குச் சந்தியாவின் மேல் கோபம் இருந்தாலும், அதனால் தேவா ஒரு கொலைப் பழியில் இருந்து தப்பித்தான். அதோடு தன் மனைவியையும் இத்தனை நாள் பாதுக்காப்பாக வைத்திருந்த சந்தியா மற்றும் அவள் குடும்பத்தின் மேல் அவனால் கோபம் கொள்ள முடியவில்லை.


அருளோடு தேவாவை ஜெயிலுக்குச் சென்று பார்த்தாள் ஆர்த்தி.


அப்போது தேவா, “இனி தனக்கு அந்த ஊருக்குப் போக விருப்பம் இல்லையென்றவன், அங்கிருந்த விளைநிலங்களை அந்த ஊர் விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கச் சொன்னவன், மற்ற அனைத்து சொத்துக்களையும் விற்றுவிடச் சொல்லி விட்டான். அதன்படி அருள் அனைத்தையும் செய்து முடித்தவன், ஆர்த்தி சொன்னதன் பெயரில் தேவாவுக்காகச் சென்னையிலேயே ஒரு தொழிலைத் தொடங்கியவன், இங்கேயே ஒரு வீட்டையும் வாங்கி ஆர்த்தியுடன் அங்கு சென்று விட்டான்.


டெல்லிக்குச் சென்ற வேலை நினைத்ததைவிட அதிக நாள்கள் இழுத்துக் கொள்ள, முழுதாக எட்டு மாதங்கள் கழித்துத் திரும்பி வந்த சந்தியாவை மீண்டும் கல்யாணம் பற்றிப் பேசி நச்சரிக்கத் தொடங்கி விட்டார் கலைவாணி.


அவள் பிடிகொடுக்காமல் இருக்க, “ஏன்டி நான் பாட்டுக்கு இங்க பேசிட்டு இருக்கேன். நீ அமைதியா இருந்தா என்னடி அர்த்தம். இப்ப பதில் சொல்லப் போறியா இல்லயா?” என்றவர் மகளை அழுத்தமாகப் பார்த்தபடி, “நீ அந்தப் பையனை விரும்புறயாடி?” என்று நேரடியாகக் கேட்டுவிட, ஒரு நிமிடம் தடுமாறித்தான் போனாள் பெண்ணவள்.


“நீ… நீ யாரைச் சொல்ற?” என்று தெரியாதது போல் கேட்டவளை முறைத்த கலைவாணி, “நான் யாரைப்பத்திக் கேக்குறேன்னு நீ நினைக்கிறயோ… அந்தப் பையனைப் பத்திதான் கேக்குறேன்.” என்றவரை எரிச்சலாகப் பார்த்த சந்தியா, “ம்மா… சும்மா லூசு மாதிரிப் பேசிட்டு இருக்காத… நான் ஒன்னும் தேவாவை விரும்பல. அவன் ஒரு கைதி, நான் போலீஸ்… எப்படி நான் அவனை… நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காத…” என்றவளின் முகமே சொன்னது அவள் சொல்வது பொய்யென்று.


தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த ஃபேனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் எண்ணம் முழுவதும் தேவா மட்டுமே நிறைந்திருந்தான். காலையில் தன் அன்னை கேட்டபோது, அவன் மேல் எந்தவித எண்ணமும் இல்லை என்று மறுத்தவளுக்கு, தன் மனசாட்சியிடம் பொய் கூற இயலவில்லை.


அவன் மீது அவளுக்குக் காதல் இருக்கிறது என்பதற்கான சாட்சி அவள் நெஞ்சோடு உரசிக்கொண்டு இருக்கும்போது அவளால் எப்படி இல்லை என்று சொல்ல முடியும். தன் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த தாலியை வெளியே எடுத்துப் பார்த்தவளின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கிப் போனது. “ஏன்டா நீ என் வாழ்க்கையில் வந்த? ஒரு நல்ல சூழ்நிலையில் நான் உன்னைப் பார்த்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும். ஏன்டா நமக்கு மட்டும் இப்படி நடக்கணும்.” என்று வாய்விட்டுப் புலம்பியவளுக்குத் தேவா விஷயத்தில் தெளிவாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் போக, தன் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் எப்போதும் தீர்வு சொல்லும் தன் மாமன்களைத் தேடிச் சென்றாள்‌ சந்தியா.


அவள் அங்குச் சென்ற நேரம் கலைவாணி, காலையில் அவருக்கும் சந்தியாவுக்கும் நடந்த சண்டையைப் பற்றிச் சொன்னவர், “எனக்கு என்னமோ இவ அந்த தேவாவை விரும்புறான்னு தோணுது அண்ணி. அதான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அடம் புடிச்சிட்டு இருக்கா” என்றுச் சொல்ல சந்தியா அப்படியே சுவரோரம் மறைந்து நின்றவள், அவர்கள் பேசுவதைக் கவனித்தாள்.


“என்னம்மா சொல்றீங்க நீங்க… அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது. நம்ம சந்தியா எங்க, அந்தத் தேவா எங்க… அவனைப்போய் எப்படி இவ விரும்புவா?” என்றான்‌ அரவிந்த்.


“இல்ல தம்பி, எனக்கு அப்படிதான் தோணுது. ஆனா, அவகிட்ட கேட்டா இல்லவே இல்லன்னு சாதிக்கிறா. நீங்க ஒரு முறை அவகிட்டப் பேசிப்பாருங்க” என்றார்.


“இல்லம்மா, அப்படி இருக்க வாய்ப்பே இல்ல. என்ன இருந்தாலும் அவன் ஒரு‌ கைதி. அவனைப் எப்படிச் சந்தியா ஏத்துக்குவா… அப்படியே அவளுக்கு ஒரு எண்ணம் இருந்தாலும்‌ நம்ம எடுத்துச் சொல்லிப் புரியவைப்போம். ஒருவேளை அந்தத் தேவா எதுவும் பிரச்சனை பண்ணா அவனை என்ன செய்யணும்னு எங்களுக்குத் தெரியும்.” என்று சூர்யா சொல்ல, ஏற்கனவே தேவா பற்றி முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருந்த சந்தியா, தன் குடும்பத்திற்கும் அவனைப் பிடிக்கவில்லை என்று நினைத்தவள், கலங்கிய மனதோடே அங்கிருந்துச் சென்றுவிட, அதற்குப் பின் நடந்தது அவளுக்குத் தெரியவில்லை.


சூர்யா பேசியதைக் கேட்ட ராம்குமார், “அந்தப் பையன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான்.” என்றவர் அன்று அவன் ஜெயிலில் ஆர்த்தியிடம் பேசியதைச் சொன்னவர், “எனக்கு என்னவோ அந்தப் பையன் நல்லவன்னு தான் தோணுது. ஒரு வேளை, கலை சொல்றது உண்மையா இருந்து, அவனை மனசுல வச்சிட்டு தான் சந்தியா கல்யாணம் வேணாம்னு சொல்றான்னா… கண்டிப்பாக அவ எப்பவும் வேற கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டா… அவளுக்கு அவனைப் புடிச்சிருந்தா ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிடலாமே…” என்க சூர்யாவின் தாய், தந்தைக்கும் கூட அவர் சொல்வது தான் சரியெனத் தோன்றியது.


“அண்ணா சொல்றது உண்மை தான்டா சூர்யா. அவனைச் சந்தியா விரும்பும் பட்சத்தில் அவனுக்கே இவளைக் கட்டி வச்சிடலாம். அவ சந்தோஷம் தான் நமக்கு முக்கியம் என்றுச் சொல்ல… அந்தப் பையனும் தப்பானவனாய் தெரியல. அப்படி இருந்தா கண்டிப்பா சந்தியாவே அவனை வெறுத்து ஒதுக்கி இருப்பா” என்று தனலட்சுமி சொல்ல, சூர்யா திரும்பி அரவிந்தைப் பார்த்தான்.


சூர்யாவின் பார்வையின் அர்த்தம் புரிந்தவன் ஆழ்ந்து மூச்செடுத்து, “நீங்க சொல்றதை நாங்க ஒத்துக்குறோம். ஆகாஷ் விஷயத்தில் ஒருமுறை தப்பு நடந்து போச்சு… மறுபடியும் அப்படி நடக்கக் கூடாது. அந்தத் தேவா ஜெயில்ல இருந்து வெளிய வர இன்னும்‌ ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள நாங்க அந்த தேவாவைப்பத்தி நல்லா விசாரிச்சிட்டு, அவனோட நேர்ல பேசிப் பார்த்துட்டு எங்க முடிவைச் சொல்றோம். அதுவரைக்கு இங்க நடந்த எதுவும் சந்தியாவுக்குத் தெரிய வேணாம்.