உன் விழியில் கைதானேன் 4

 விழி 4


சந்தியாவின் வாகனம் முன்னே செல்ல, அந்தக் காரைத் தொடர்ந்த படியே பின்னால் தன் காரில் அவளைத் தொடர்ந்தான் தேவா‌.


காரை ஓட்டிக் கொண்டிருந்த தேவா பக்கவாட்டில் திரும்பி பிரபுவைப் பார்த்தவன், “என்னடா? நானும் ரொம்ப நேரமா பாக்குறேன்… என்னையே அப்படி அடிச்சுப் பார்த்துட்டு இருக்க? ஒருவேள…” என்று உருவம் உயர்த்தியவன்,‌ “டேய் நான் அந்த மாதிரி ஆள் இல்லடா… இந்த ஜென்மத்தில் எனக்கு என் சந்தியா மட்டும் தான். என்னை அப்படி எல்லாம் பாக்காதடா,‌ நோ யூஸ்… அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லை.” என்று கிண்டல் செய்தவன் கவனம் முழுவதும் தனக்கு முன் சென்று கொண்டிருந்த சந்தியாவின் வாகனத்தின் மேலேயே‌ இருக்க, அதைக் கேட்ட பிரபுவுக்குதான் பிபி எகிறியது.


”ஹலோ பாஸ் நானும் அது மாதிரி ஆள் இல்ல…” என்றான் ரோசமாக. 


“அப்பறம் எதுக்குடா என்னையே பாத்திட்டு இருக்க?”


“ம்ம்ம் இருக்கு எல்லா வேலையும் விட்டுட்டு… தினமும் இப்படி அந்த பொண்ணுக்கு பாடிகார்ட் வேலைப் பாக்குறீங்களேன்னு பாத்தேன்.” என்றவனை பார்த்து தேவா சிரிக்க, அதில் கடுப்பான பிரபு,


“நான் உங்ககிட்ட வேலைக்குச் சேர்ந்து ஒரு வருஷம் ஆகுது. சேர்ந்த நாள்ல இருந்து நானும் பார்த்துட்டே தான் இருக்கேன். நீங்க தினமும் அந்தப் பொண்ணை அப்படி அடிச்சுப் பார்த்துட்டு இருக்கீங்க. அந்தப் பொண்ணு உங்களை மொறச்சுப் பார்த்துட்டு இருக்கு… எனக்கு நல்லாப் புரியுது, நீங்க அந்த பஸ் ஸ்டாப் பொண்ணை லவ் பண்றீங்கன்னு… அப்ப அதை அந்தப் பொண்ணுகிட்டச் சொல்ல வேண்டியது தானே? இப்படியே தூரமா நின்னு பார்த்துட்டு இருந்தால் அந்தப் பொண்ணு முறைக்க தான் செய்யும்” என்று கேட்டவனைத் திரும்பிப் பார்க்காமல், “சொன்னா என்ன நடக்கும்னு நீ நினைக்கிற?” என்றான் ஒரு விரக்திச் சிரிப்போடு.


அதைக் கவனிக்காத பிரபு, “சொன்னா என்ன நடக்கும்? அந்தப் பொண்ணுக்கு உங்களைப் புடிச்சிருக்கு, இல்ல புடிக்கலைன்னு ஒரு முடிவைச் சொல்லிடும்..‌. புடிச்சிருந்தால் அந்தப் பொண்ணு வீட்ல பேசுங்க.” என்றான்.


“அவ வீட்ல பேசியாச்சு, அவங்க எல்லாருக்கும் எங்க கல்யாணத்தில் சம்மதம் தான்” என்றான் காரை வளைவில் திருப்பியபடி.


“அப்படியா” என்று ஆச்சரியப்பட்ட பிரபு, “அப்புறம் என்ன சார்… சீக்கிரம் கல்யாணத்தை முடிக்க வேண்டியது தானே” என்றான்.


“அது முடியாது பிரபு”


“ஏன் சார்?”


“அதுல ஒரு சின்னப் பிரச்சனை இருக்கு…”


“என்ன சார், ஜாதகம் எதுவும் பொருந்தலையா?” என்றவன், “அப்படி இருந்தால் சொல்லுங்க சார். எனக்குத் தெரிஞ்ச சாமி ஒருத்தர் இருக்காரு… அவரை வச்சுப் பரிகாரம் எதுவும் செஞ்சிடலாம். இல்ல அவங்க ஃபேமிலில ஏதாவது பினான்சியல் ப்ராப்ளமா சார்” என்று ஆர்வமாகக் கேட்க மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்த தேவா, “அவ யார்னு உனக்குத் தெரியுமா? சூர்யா இண்டஸ்ட்ரீஸ் ஓனர் சூர்யாவோட மச்சினி. அவருக்கு ரெண்டு குழந்தை இருந்தும்‌ இவதான் அவருக்கு மூத்த பொண்ணு… அவளுக்குப் பணத்துக்குப் பஞ்சமே இல்ல… அவ நினைச்சா என்னை மாதிரி பத்துப் பணக்காரனை விலைக்கு வாங்குவா“ என்றான்.


“அப்ப ஜாதகம் தான் பிரச்சனை, இல்ல சார்” என்று கேட்டான் பிரபு.


“இல்லை” என்றான் தேவா.


“அப்ப என்னதான் சார் ப்ராப்ளம்?” என்று பொறுக்க முடியாமல் கத்தி விட்டான் பிரபு.


“நீ நினைக்கும் அளவு அவ்ளோ பெரிய பிரச்சனை எல்லாம் இல்ல பிரபு… ஜஸ்ட் சின்ன ப்ராப்ளம் தான்” என்றான்


“அது என்னன்னு சொல்லுங்க சார்… என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்” என்றவன் மனதில், ‘தினமும் இப்படி பஸ் ஸ்டாப்ல இருந்து அந்தப் பொண்ணு ஆபிஸ் வரை பாடி கார்டு வேலை பார்க்கிறதுக்கு இது எவ்வளவோ மேல்’ என்று நினைத்துக் கொண்டான்.


“அது ஒண்ணும் இல்ல பிரபு, அவகிட்ட நான் உன்னைப் புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன். அவ என்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டா அவ்ளோதான்” என்றான் சாதாரணமாக.


கண்கள் வெளியே வந்து விழுந்து விடும் என்று சொல்லும் அளவுக்கு விழியை விரித்த பிரபு, “எதே… இது சின்னப் ப்ராப்ளமா…” என்றான் சத்தமாக.


அதற்கு “ப்ச்…” என்று உச்சுக் கொட்டியா தேவா, ”எஸ்” என்றான் தோள்களைக் குலுக்கி.


அந்தப் பொண்ணு தான் உங்களைப் புடிக்கலன்னு சொல்லிடுச்சே சார்… அப்புறம் ஏன் தினமும், இருக்குற அவ்ளோ வேலைவெட்டிய விட்டுட்டு அந்தப் பொண்ணு பின்னாடியே சுத்திட்டு இருக்கீங்க?” என்றான் கடுப்பாக.


“அவ என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னான்னுதான் சொன்னேன். அவளுக்கு என்னைப் புடிக்காதுன்னு நான் எப்பச் சொன்னேன்.” என்றான் புருவம் உயர்த்தி.


“புடிச்சிருந்தால் ஏன் சார் கல்யாணம் வேணாம்னு சொல்லப் போறாங்க?” என்றான் அவன் ஒன்றும் புரியாமல்.


“அவ சொல்லுவா… பிகாஸ் ஷீ இஸ் சந்தியா” என்றவன் குரலில் அவளை நினைத்துக் கர்வமும் அவள் தன்னை விலக்கி வைக்கும்‌ கவலையும் கலந்து இருந்தது.


இழுத்துப் பெருமூச்சு விட்ட பிரபு, “சத்தியமா எனக்கு நீங்க சொல்றது ஒண்ணும் வெளங்கல சார்… கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க” என்று தலையைச் சொறிய, ஒரு கணம் கண்களை மூடித் திறந்த தேவா, “என் வாழ்க்கையைப்பத்தி எனக்கே ஒண்ணும் புரியாமல் இருக்கும்போது அவளால் தான் என் வாழ்க்கை மாறுச்சு. மாறிய வாழ்க்கையை அவ கூட வாழணும்னு நான் ஆசைப்படும் போது…” என்றவன் ஆழ்ந்த மூச்செடுத்தபடி, “அவ எனக்குக் கிடைக்காமல் போனாலும் பரவாயில்ல… ஆனா, அவ நல்லா இருக்கணும்‌. அதுதான் எனக்கு வேணும். கடவுள்னு ஒருத்தன் இருந்தால் கண்டிப்பாக அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும்.” என்றவன் கைகள் காரின் ஸ்டேரிங்கை அழுத்திப் பிடிக்க, அந்த அழுத்தமே சொன்னது அவன் உதடுகள் சொன்ன வார்த்தைகளை மனம் ஏற்கவில்லை என்று.


‘நிச்சயமா இவரு அந்தப் பொண்ணை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாரு’ என்று பிரபு நினைக்க, தேவாவும் சந்தியா அலுவலகம் இருந்த கட்டடத்திற்குள் அவள் செல்வதைப் பார்த்தபின் அவன் அலுவலகம் சென்றான்.


தேவாவுக்கு அன்றைக்கு அதிக வேலை இருக்க, மதியம் சாப்பிட வீட்டுக்குகூடச் செல்லாமல் மும்மரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவனின் அறைக்கதவு திறக்கும் ஓசை கேட்டு, அவனின் அறைக்குள் கதவு தட்டாமல் உள்ளே வரும் தைரியம் ஒரே ஒரு ஆளுக்குத்தான் இருக்கிறது என்பதால், நிமிர்ந்து பார்க்காமலே வந்திருப்பது யாரென்று தெரிந்து கொண்டவன், இதழ்களில் சின்னப் புன்னகையுடன் தன் மணிக்கட்டைத் திருப்பி தன் வாட்ச்சைப் பார்க்க அதில் மணி இரண்டு என்று காட்டியது. 


“டேய் எழுந்து வாடா” என்ற அதட்டலில் அவன் மெல்ல நிமிர்ந்து பார்க்க அங்கு கையில் உணவுக் கேரியருடன் நின்றிருந்தாள் அவனின் அக்கா ஆர்த்தி.


அனைவரையும் தன் கண் பார்வையில் அடக்கி ஆள்பவன், அடங்கிப் போவது இருவரிடம் மட்டுமே… ஒன்று அவன் உயிராக நேசிக்கும் சந்தியா, அடுத்தது அவன் அன்னையாகப் பார்க்கும் அவனின் அக்கா ஆர்த்தி.


“உனக்கு எத்தனை முறை சொல்றது ஆர்த்தி. இந்த டைம்ல நீ ஏன் தேவையில்லாமல் ஸ்டெய்ன் பண்ணிக்குற” என்றபடி அவளின் நான்கு மாத வயிற்றைப் பார்த்துக் கேட்டவனை கோவமாய் முறைத்த ஆர்த்தி,


 “ம்ம்ம் வேண்டுதல்… நீ ஒழுங்கா டைமுக்கு வீட்டுக்கு வந்திருந்தால் நான் ஏன்டா சாப்பாட்டைத் தூக்கிட்டு இங்க வரப் போறேன்?” என்றவள், “சீக்கிரம் வாடா… பசிக்குது” என்றது தான், சட்டெனச் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு எழுந்து அவள் அருகில் வந்து அவள் கையில் இருந்த கேரியரை வாங்கிக் கொண்டு, அவளை அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தவன், “நீ இன்னும் சாப்பிடலயா?” என்று கேட்டான் கோபமாக.


அவன் குரலில் இருந்தே அவன் கோபத்தை உணர்ந்து கொண்ட ஆர்த்தி, “உன் மாமா வேலை விஷயமா வெளிய போயிட்டாருடா… மதியம் சாப்பிட வரமாட்டேன்னு சொல்லிட்டாரு… எனக்குத் தனியா‌ சாப்பிட ஒரு மாதிரி இருந்தது. நீ வருவேன்னு பார்த்தேன்… நீ வரல‌, அதான் இங்கயே உன்னோட சேர்ந்து சாப்பிடலாம்னு வந்துட்டேன்.” என்றாள் குழந்தை போல் கண்களைச் சிமிட்டி.


அவள் சொன்னதைக் கேட்டு அக்காவை அனல் பார்வை பார்த்தவன், “ஏதாவது சாக்குச் சொல்லிட்டே இரு… டாக்டர் தான் உன்னை டைமுக்கு சாப்பிடச் சொல்லி இருக்காங்க இல்ல… யார் வந்தா என்ன? வராட்டி என்ன? ஒழுங்கா சாப்பிட வேண்டியது தானே” என்றவன் உணவை எடுத்துத் தட்டில் வைத்து அவளைத் திட்டிக் கொண்டே அவளுக்கு ஊட்டி விடத் தொடங்கினான்.


தம்பியின் அன்பில் மனம் நெகிழந்தவள், “போதும்டா, எனக்கு வயிறு ரொம்பிடுச்சு. நீ சாப்பிடு” என்று சொல்ல, “ஊட்டிவிட்ட எனக்குத் தெரியாது எவ்ளோ ஊட்டினேன்னு… ஒழுங்கா சாப்பிடு” என்று இன்னும் ரெண்டு வாய்‌ ஊட்டிவிட, சிரித்தபடி அதை வாங்கிக் கொண்டாள்.


“சந்தியா ரொம்ப லக்கி டா” என்று அவள் சிரித்தபடி சொல்ல, உணவு ஊட்டிக் கொண்டிருந்த தேவாவின் கை அந்தரத்தில் அப்படியே நின்றது.


அப்போதுதான் அவன் முகத்தைப் பார்த்த ஆர்த்தி, “என்னடா அவ இன்னும் ஓகே சொல்லலைன்னு கஷ்டமா இருக்கா?” என்றவள் மென்மையாக அவன் கேசத்தை வருடிவிட, வெறுமை சூழ்ந்த விழியோடு தமக்கையைப் பார்த்துவிட்டு எழுந்து சென்று கையைக் கழுவிவிட்டு வந்து ஆர்த்தி அருகில் அமர்ந்தவன், “அவ்ளோ சீக்கிரம் அவளால நடந்ததை எல்லாம் மறந்திட முடியாதுன்னு எனக்கும் புரியுது ஆர்த்தி… ஆனா, இந்தப் பாழாப் போன மனசு அதை ஏத்துக்க மாட்டேங்கிது. எனக்கு அவ வேணும் வேணும்னு அடம் புடிச்சிக்கிட்டு அவ பின்னாடியே போகுது. ஐ கான்ட் ஹெல்ப் இட்” என்றவன் குரல் கரகரக்க, அவன் தலையை தன் மடிமீது சாய்த்துக் கொண்டாள் ஆர்த்தி. 


“நான் சொன்னா நீ நம்பமாட்ட தேவா… ஆனா, அதுதான் உண்மை. சந்தியா உண்மையா உன்னை விரும்புறா… நான் இதை உன் அக்காவா சொல்லலடா, ஒரு பொண்ணா சொல்றேன். அவ கல்யாணம்னு ஒண்ணு பண்ணிக்கிட்டா அது உன்னைத்தான் பண்ணிக்குவா… இதை நான் அடிச்சு சொல்லுவேன்.” என்ற ஆர்த்தியை இமைகளை உயர்த்தி இயலாமையோடு பார்த்தான் தேவா.


ஒரு கணம் அவன் பார்வையில் துடிதுடித்துப் போனாள் ஆர்த்தி. 


‘எப்படி இருந்தவன் தன் தம்பி… இன்று இப்படி மாறியிருப்பதை அவளால் கிஞ்சித்தும் நம்ப முடியவில்லை. ஊரை ஆளும் ராஜாவின் கம்பீரத்தோடு இருந்தவன், இன்று மொத்தமாக மாறி சந்தியாவின் ஒரு விழிப் பார்வையை யாசிக்கும் நிலைக்கு வந்திருப்பதை நினைத்தவளுக்கு நெஞ்சம் வலிக்கத்தான் செய்தது. அதே சமயம் சந்தியாவின் மனநிலையை நினைத்தவளுக்கு அவளின் நிலையும் புரிந்தது. இருதலைக் கொள்ளி எறும்பைப் போல் பரிதவிக்கும் நிலை ஆர்த்திக்கு.’


“எல்லாம் சீக்கிரம் சரியாகிடும். நான் இருக்கும்போது உனக்கு என்ன கவலை? யூ டோண்ட் வொர்ரி… நம்ம எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்” என்றாள் அவனுக்கு ஆறுதலாக.


“அவ மனசு மாறும்னு எனக்கு நம்பிக்கையே இல்ல ஆர்த்தி.” என்று ஆழ்ந்த மூச்செடுத்தவன், “அவ என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு கூட இல்ல… யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா இருந்ததாலே எனக்குப் போதும்” என்று வேதனை நிறைந்த குரலில் சொன்னவன் வார்த்தையில் துணுக்குற்ற ஆர்த்தி, உடனே “டேய்! நீ நான் ப்ரெக்னன்ட் ஆன சமயத்தில் இருந்து உனக்கு என்ன வேணும்? என்ன வேணும்னு கேட்டு என்னை அரிச்சிட்டு இருந்த இல்ல… இப்ப நான் ஒண்ணு கேக்குறேன், அதைச் செய்வியா?” என்று கேட்க அவள் மடியில் இருந்து எழுந்தவன், “என்ன வேணுமோ கேளு ஆர்த்தி… உனக்காக நான் எதுவும் செய்வேன்” என்றான் தேவா.


“ம்ம்ம் சரி… அப்ப எனக்குச் சத்தியம் பண்ணு…” என்று கையை அவன் முன் நீட்டினாள்.


அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தவன், “ம்ம்ம், என்ன சத்தியம் எல்லாம் கேக்குற? ரொம்பப் பெரிய விஷயம் எதுவும் கேக்கப் போறியா?” என்றபடி அவள் கையின் மேல் தன் கையை வைத்து, “நீ என்ன கேட்டாலும், அது எதுவா இருந்தாலும் நான் உனக்காகச் செய்வேன்.” என்று சத்தியம் செய்து ஆர்த்தியிடம் சிக்கிக் கொண்டான் தேவா.


“ஓகே கேளு” என்றவள், “எம்புள்ளை இந்த உலகத்திற்கு வந்ததும், நீயும் சந்தியாவும் புருஷன் பொண்டாட்டியா இருந்து நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் புள்ளைக்குப் பேர் வைக்கணும்.” என்றாள் எங்கு சந்தியாவை விட்டு அவன் விலகி விடுவானோ என்று அச்சத்தில்.


அக்காவின் முகத்தை விழி உயர்த்தி ஒரு கணம் அழுத்தமாகப் பார்த்தவன், “இதை நீ உனக்காகக் கேக்கல… எனக்காகக் கேட்டிருக்க” என்று சொல்ல அவளோ, “அது என்னவா வேணும்னா இருக்கட்டும்… நான் கேட்டதைச் செய்வியா இல்லியா?” என்று அதட்டலாகக் கேட்டாள் ஆர்த்தி.


கண்களை மூடி ஆழ்ந்து மூச்செடுத்த தேவா ஆர்த்தியைத் திரும்பிப் பார்த்து, “உன் குழந்தைக்கு நானும் அவளும் சேர்ந்து பேர் வைப்போம், இது சத்தியம்.” என்று உறுதியாகச் சொன்னவன் மனதில் அந்த நொடி இனி அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று தீர்மானித்துக் கொள்ள, அந்தக் கணம் அவன் மனம் முழுமையிலும் ஒரு இனம் புரியாத இன்பம் பரவியது


அவன் சுலபமாகச் சத்தியம் செய்து விட்டான். ஆனால், அவனுக்கு அப்போது தெரிந்திருக்காது, அவர்கள் இருவர் வாழ்வில் விதி போட்டு வைத்திருக்கும் கணக்கு‌ வேறு என்று.