உன் விழியில் கைதானேன் 5
விழி 5
அன்றைக்கும் வழக்கம்போல் சந்தியா அவள் கம்பெனி வாகனத்திற்காக வழக்கமாக நிற்கும் இடத்தில் காத்திருக்க, அருகில் அவளோடு நின்றிருந்தாள் அவளுடன் பணிபுரியும் வைஷ்ணவி.
எப்போதும் சந்தியாவுடன் வரும் வைஷ்ணவி ஒரு வாரம் உடல்நிலை காரணமாக விடுப்பில் இருந்தவள், இன்று தான் வேலைக்குத் திரும்பி இருந்தாள்.
வைஷ்ணவி கன்னத்தில் தன் ஆள்காட்டி விரலை வைத்துத் தட்டிக் கொண்டே எதையோ தேடியபடி, “காணுமே…” என்று சொல்ல சந்தியா அவளைத் திருப்பிப் பார்த்தவள், “என்னடி காணும், எதையும் மிஸ் பண்ணிட்டியா?” என்று கேட்டாள்.
“ம்ம்ம் ஆமா சந்தியா… ஒரு வாரம் உங்க லவ் ஸ்டோரி அப்டேட்ஸ் மிஸ் பண்ணிட்டேன். சரி, இன்னைக்குப் பார்க்கலாம்னு நினைச்சு ஆசையா இருந்தா, இன்னும் உன் ஆளைக் காணும்” என்றாள் சோகமாக.
அதைக் கேட்டு புசு புசுவென்று கோபமாக மூச்சை வெளியே விட்டபடி சந்தியா, வைஷ்ணவியின் தலையில் நங்கு நங்கென்று கொட்டியவள், “வெஷம் வெஷம் வெஷம்… ஏன்டி உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன். அவனை என் ஆளுன்னு சொல்லாத சொல்லாதன்னு… உன் என்டர்டெயின்மென்ட்டுக்கு நான் தான் கெடச்சேனா? உன் போதைக்கு ஏன்டி என்னை ஊறுகாய் ஆக்குற” என்றவளைப் பாவமாகப் பார்த்தபடி சந்தியா கொட்டிய இடத்தைத் தடவிக் கொண்டே,
“ஏன்டி, ஒரு அப்பாவிப் புள்ளையை இப்படிக் கொட்டுன? ஓசில ஒரு லவ் சீன் பார்க்கலாம்னு நினச்சது அவ்ளோ பெரிய குத்தமா?” என்றவளைச் சந்தியா மீண்டும் முறைக்க வைஷ்ணவி ஓரடி பின்னால் சென்றவள், “அடியேய்! உனக்கு தைரியம் இருந்தா… மாசக்கணக்கில் உன் பின்னாலயே சுத்துறாரே, அவர்கிட்டப் போய் உன் தைரியத்தைக் காட்டுடி… அதவிட்டுட்டு ஒரு பச்சப்புள்ளகிட்ட உன் கோவத்தைக் காட்டுறியே... பாரு, மண்டை ரெண்டு இன்ச் பொடச்சிருக்கு” என்று தலையைக் குனிந்து காட்ட, அவள் சொன்னதைக் கேட்டுக் கோவம் மறந்து கலகலவெனச் சிரித்து விட்டாள் சந்தியா.
“சாரி வைஷூ…” என்றபடி அவள் தலையில் கைவைத்து நன்கு தேய்த்து விட்டவள் கையைப் பிடித்துக் கொண்ட வைஷூ, “அம்மா தாயே, விடு விடு… நீ தேக்கும் தேயில, பிரம்மன் என் மண்டையில் எழுதின எழுத்தே அழிஞ்சிடும் போல” என்றவளைச் செல்லமாக முறைத்தாள் சந்தியா.
“உன்னைத் திருத்தவே முடியாதுடி…” என்று சலித்துக் கொண்ட சந்தியாவுக்கு, “டைம் வேஸ்ட்… ட்ரை பண்ணாத” என்று பதில் சொன்ன வைஷ்ணவியைப் பார்க்கும்போது அப்படியே பள்ளி, கல்லூரி நாட்களில் தன்னைப் பார்ப்பது போலவே இருந்தது.
எத்தனை அழகான காலங்கள் அவை. அப்பா, அம்மா, அக்கா என்று ஒரு சிறிய கூட்டில் சிரிப்பும் சந்தோஷமுமாக இருந்தவர்கள் வாழ்க்கையில், நல்ல தோழமையாக தேவி, தேன்மொழி நுழைய, அதோடு சேர்ந்து உயிரைக் கொடுக்கும் சொந்தமாக வந்து சேர்ந்த சூர்யா, அரவிந்த் அவர்களின் குடும்பம் என்று எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் தெளிந்த நீரோடையின் மெல்லிய இசை போல் தாளம் தப்பாமல் சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கை, என்று? எந்தப் புள்ளியில் திசை மாறியது என்று நினைத்தவளுக்குக் கண்கள் கலங்கியது.
வைஷ்ணவி பார்க்கும் முன் தன்னைச் சமாளித்துக் கொண்டவள் அமைதியாக இருக்க, “சந்தியா நான் ஒண்ணு கேக்கவா?” என்ற வைஷ்ணவியின் குரலில் அவளைத் திருப்பிப் பார்த்தவள், “என்ன?” என்று கேட்டாள்.
“இல்ல…” என்று அவள் இழுக்க,
“சொல்லுடி?” என்றாள் சந்தியா.
“இல்ல… இந்த ஆளு மாசக்கணக்கா உன் பின்னாடியே எங்கப் போனாலும் வந்துட்டு இருக்காரு, நீ அவரைப்பத்திப் பேசினாலே டென்ஷன் ஆகுற. அப்டி இருக்க, உங்க மாமா ரொம்பப் பெரிய ஆளுன்னு எனக்குத் தெரியும். அவர்கிட்ட நீ ஒரு வார்த்தை சொன்னா இந்த ரோமியோவை ஒரு வழி பண்ணிட மாட்டாரு…” என்றவள் நிறுத்தி, “நீ ஏன் அதைச் செய்ய மாட்ற? ஒருவேளை உனக்கும் அவர் மேல…” என்று மீண்டும் அவள் ராகம் இழுக்க சந்தியா அவளை அனல் தெறிக்கும் பார்வை பார்த்தாள்.
அதில் சற்றுத் தயங்கிய வைஷூ, “எனக்கு அப்படித் தான்டி தோணுது… நீ நினைச்சா அவரை உன் பின்னால வராத மாதிரிப் பண்ண முடியும். ஆனா, நீ அதைப் பண்ண மாடேங்குற? அது ஏன்னு யோசிக்கும்போது எனக்கு இப்படி தான் தோணுச்சு…” என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு.
அவள் குழந்தை முகத்தைப் பார்த்து பாவம் சந்தியாவுக்கு கோபம் கூட வராமல் போக, அவளைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தவள், “உனக்கு என்னை மிஞ்சிப் போன என்ன ஒரு ஆறுமாசமா தானே வைஷூ தெரியும். கொஞ்ச வருஷம் முன்னாடி இருந்த சந்தியா பத்தி உனக்கு எதுவும் தெரியாது இல்ல. சோ ப்ளீஸ், இனிமே இது மாதிரி குழந்தைத் தனமா பேசாத…” என்றவள் மனதில், ‘தீப்புடுச்சு எரியும் காட்டில் நடு மத்தியில் மாட்டிட்டு இருக்கேன். எந்த வழியில் போனால் என் வாழ்க்கை மாறும்னு தெரியாம நானே தவிச்சிட்டு இருக்கேன். இதுல உனக்கு நான் என்ன பதில் சொல்றது வைஷூ’ என்று நினைத்தவளின் கண்கள் முன் அவள் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குச் கூட்டிச் செல்லும் வழிகாட்டி அவன்தான் என்பது போல் கம்பீரமாக வந்து கொண்டிருந்தான் தேவா.
அவனைப் பார்த்த சந்தியா, “ம்ம்ம், இப்ப தான் ஒரு இம்சை முடிஞ்சது… உடனே அடுத்ததா?” என்றவளுக்கு அப்போது தான் அவன் தன்னை நோக்கி வருவது தெரிந்தது.
‘என்ன? எப்பவும் தூரமா நின்னு நம்மளைப் பார்த்துட்டு, வண்டில ஃபாலோ பண்ணிட்டு நம்ம ஆபிஸ் போனதும் போயிடுவான்… இன்னைக்கு என்ன நம்மகிட்ட நெருங்கி வரான்.’ என்று நினைத்தவளுக்கு அவன் நடந்து வரும் தோரணையைப் பார்த்துக் கண்கள் சுருங்கி விரிய, ‘அய்யோ! ஒருவேளை, மறுபடியும்…” என்று நினைத்தவளுக்கு இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
பதட்டத்தில் எச்சில் விழுங்கியபடி நின்ற சந்தியாவின் முன் வந்து நின்ற தேவா, அவளை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் ஆசையாக வருடியவன் கேட்ட முதல் கேள்வி, “ஏன்டி இப்படி இளைச்சிப் போயிருக்க?” என்றது தான்.
அவன் என்ன செய்வானோ என்ற பதட்டத்தில் இருந்த சந்தியா அவன் கேள்வியில் முதலில் திகைத்தவள், “மைண்ட் யூவர் ஒன் பிசினஸ்” என்றாள் கோவத்தில் வார்த்தைகளைக் கடித்துப் துப்பியபடி.
“உன்னைக் கவனிக்கிறது மட்டும் தான்டி என்னோட வேலையே” என்றவனைப் பார்க்கப் பிடிக்காமல் அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவள் இரு கன்னத்தையும் ஒரு கையால் பிடித்துத் தன் முகத்தைப் பார்க்க வைத்தவன், “நான் உன் மனசு மாறும் வரை காத்திருக்க தான்டி நினச்சேன்” என்றவன் ஒரு கணம் நிறுத்தி, “பட், இப்ப அது முடியாது… இன்னும் ஆறு மாசத்துக்குள்ள நம்ம கல்யாணம் நடந்தாகணும்” என்றவனின் அழுத்தமாக குரலில் பாவை அவள் உள்ளுக்குள் பயந்தாலும் அதை முகத்தில் காட்டாமல், அவன் கையைத் தட்டி விட்டவள், “லிசன், நீ கல்யாணம் பண்றதுன்னா பண்ணேன்டா… அதை ஏன்டா என்கிட்ட வந்து சொல்ற?” என்றவளை இப்போது புருவம் உயர்த்திப் பார்த்த தேவா, “உன்கிட்டச் சொல்லாம வேற யார்கிட்ட சொல்றது? நீதானே கல்யாணப் பொண்ணு” என்றவனை அவள் அடிக்கக் கையோங்க, சட்டென அவள் கையைப் பிடித்து முறுக்கி அவள் முதுகின் பின்னால் கொண்டு சென்றவன் அவளை இன்னும் தன்னோடு நெருக்கி இருந்தான்.
தேவாவின் செய்கையைப் பார்த்துப் பதறிய பிரபு, “தேவா சார், வேணாம்” என்று கத்தியபடி உடனே காரில் இருந்து இறங்கி ஓடிவர, அதுவரை அங்கு நடந்ததைப் பார்த்து பயந்து நின்ற வைஷ்ணவி, தேவா தோழியின் கையைப் பிடித்து முறுக்கியதைப் பார்த்ததும், ”சார்… என்ன பண்றீங்க? அவ கையை விடுங்க முதல்ல, இல்ல நடக்குறதே வேற” என்று தன் பிஞ்சு விரலை நீட்டியபடி, கீச்சுக் குரலில் கத்தியவளைத் திரும்பிப் பார்த்தான் தேவா.
“உழக்கு சைஸ்ல இருந்துட்டு இதெல்லாம் என் முன்னாடி விரல் நீட்டிப் பேசுது. பச்ச்… எல்லாம் உன்னால தான்டி” என்று சந்தியாவைப் பார்த்துச் சலிப்பாக சொல்ல, அவள் உயரத்தைப் பற்றி அவன் சொன்னதும் வைஷ்ணவிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.
“ஹலோ! யாரைப் பாத்து உழக்குன்னு சொன்னீங்க? நான் ஒண்ணும் அவ்ளோ குள்ளம் எல்லாம் இல்ல. நான் நாலடி ரெண்டங்குலம் தெரியுமா?” என்று ஆறடி ஆடவன் அவன் முன் ரோஷமாகச் சொன்னவளின் குழந்தைத் தனத்தைப் பாரத்து தேவாக்கு லேசாக இதழ்கள் மலர, பிரபுவோ அங்கிருக்கும் நிலையில் இவள் பேசுவதை நினைத்து தலையில் அடித்துக்கொண்டான்.
“ஹலோ! இப்ப எதுக்குச் சிரிக்குறீக?” என்றவள், “முதல்ல என் ப்ரண்ட்டு கையை விடுங்க” என்று கண்களை உருட்டிச் சொல்ல, அவளை அலட்சியமாகப் பார்த்த தேவா, “கையை விடாட்டி என்ன பண்ணுவ?” என்று திமிராகக் கேட்க, முகத்தைச் சுருக்கி அவனை முறைத்தவள், “கத்தி ஆளுங்களைக் கூட்டுவேன்” என்றாள்.
தேவா தன் பார்வையால் அவளைச் சுற்றிப் பார்க்கும்படி செய்கை செய்ய, உடனே வைஷ்ணவி தன் கோலிக் குண்டு கண்களால் அந்த இடத்தை அலசிப் பார்க்க, பாவம் இரு பெண்களின் கெட்ட நேரம் அங்கு அவர்கள் நால்வரையும் தவிர வேறு யாரும் இல்லை.
‘அடக்கடவுளே! என்ன ஒரு பயபக்கியையும் காணும்’ என்று மனதில் புலம்பியவள் வெளியில் கெத்தை விடாமல், “இங்க யாரும் இல்லாட்டி என்ன... நான் போலீஸைக் கூப்பிடுறேன்.” என்றதும் சட்டெனத் திரும்பி சந்தியாவைப் பார்த்த தேவா ஒற்றைப் புருவம் உயர்த்தி, “என்ன… போலீஸைக் கூப்பிட்டுடலாமா?” என்று நக்கலாகக் கேட்க, அவனைத் தீயாக முறைத்த சந்தியா, “வைஷூ... நீ சும்மா இரு… எனக்கு ஒண்ணும் ஆகாது... நீ கொஞ்ச நேரம் பேசாம இரு” என்று தோழியை அடக்கப் பார்க்க அவளோ, “அதெப்படி சும்மா இருக்க முடியும்டி? இப்படி பட்டப் பகலில் இந்த ஆளு உன்கிட்ட வம்பு பண்றாரு. என்னை வேற உழக்குன்னு கிண்டல் பண்ணி இருக்காரு. இவரை எப்படி சும்மா விட முடியும்” என்றவள் தேவாவிடம் திரும்பி, “ஹலோ, இவ யாருன்னு தெரியாம நீ இவகிட்ட வம்பு பண்ணிட்டு இருக்க… அவ நெனச்சா ஒரு நிமிஷம் போதும், உன்னை உண்டு இல்லைன்னு பண்ண... இவ மாமா யாருன்னு தெரியுமா உனக்கு?” என்று கேட்க தேவாவோ, “ஓஓஓ! இவ மாமா என்ன அவ்ளோ பெரிய ஆளா?” என்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே கேட்க, சந்தியாவுக்கோ எங்கேயாவது சென்று முட்டிக் கொண்டால் என்ன என்று தோன்றியது.
“நான் மட்டும் அவர் பேரைச் சொன்னேன், நீ பயந்து நடுங்கி எங்க ரெண்டு பேர் கிட்டையும் மன்னிப்புக் கேட்டுட்டு இங்கிருந்து ஓடியே போயிடுவ” என்று சொல்ல, “அப்படி யாரும்மா அவரு, இவ மாமா…” என்று தேவா கேட்க சந்தியாவோ தேவாவின் நெருக்கத்தில் உடலை நெளித்தவள், “அடியேய், கொஞ்சம் சும்மா இருடி” என்றாள் எரிச்சலாக.
“நீ சும்மா இரு… உனக்கொண்ணும் தெரியாது. சூர்யா சார் கிட்ட நல்லா வாங்கினாதான் இவனெல்லாம் திருந்துவான்” என்று சொல்ல, தேவாவும், “சூர்யான்னா என்ன ஆக்டர் சூர்யாவா?” என்று வேண்டுமென்றே அவளைக் கிண்டலடிக்க வைஷூவோ, ‘இவனுக்கு ரொம்பக் கொழுப்பு தான்’ என்று நினைத்தவள், ”ஆக்டர் சூர்யா இல்ல… சூர்யா இண்டஸ்ட்ரீஸ் ஓனர் சூர்யா” என்று சொல்ல சட்டென சந்தியாவைப் பிடித்திருந்த கையை எடுத்துவிட்ட தேவா, “நீ நிஜமாவா சொல்ற? இவ சூர்யா இண்டஸ்ட்ரீஸ் ஓனர் வீட்டுப் பொண்ணா?” என்று பயந்தவன் போல் கேட்க, ‘அய்யா பயந்துட்டான்’ என்று வைஷ்ணவிக்கு உள்ளுக்குள் குதுகளித்தவள், அடுத்த கணமே சந்தியாவை நெருங்கித் தோளோடு அணைத்துக் கொண்ட தேவாவைப் பார்த்து அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றாள் வைஷ்ணவி.
“இவ யாரு, எண்ணென்றதெல்லாம் உன்னைவிட எனக்கு நல்லாவே தெரியும் உழக்கு… சோ நீ…” என்றவன் முதுகிற்குப் பின்னால் இருந்து துப்பாக்கியை எடுத்து அவள் நெற்றிப் பொட்டில் வைத்தவன், “வாயை மூடிட்டுப் போ…” என்றது தான் வைஷ்ணவிக்குச் சப்த நாடியும் அடங்கிவிட, தன் கையால் வாயை அழுத்தி மூடிக் கொண்டாள்.
‘வாயை மூடிட்டுச் சும்மா இருடின்னு சொன்னால் கேக்கணும். இப்பப் பாரு… கன்னைப் (gun) பாத்ததுக்கே சிலையாகிட்ட’ என்று சந்தியா முணுமுணுக்க, அந்தச் சமயம் தேவாவின் செயலில் அதிர்ந்து நின்ற பிரபுவைப் பார்த்த தேவா, “பிரபு, இந்தப் பொண்ணைக் கொஞ்ச தூரம் தள்ளிக் கூட்டிப் போ… நான் எங்க வருங்காலம் பத்தி என் பொண்டாட்டி கிட்ட சில பேமலி மேட்டர் பேச வேண்டி இருக்கு” என்று உத்தரவாகச் சொல்ல, பிரபு வேறு வழியின்றி வைஷ்ணவியை அழைத்துச் செல்ல, சந்தியா தன்செருப்புக் காலை வைத்துத் தேவாவின் காலை அழுத்தி மிதித்துவிட, அதில் அவன் கவனம் தவற, அதைப் பயன்படுத்தி அவனது பிடியில் இருந்து விலகி வந்தவள், “யாரு, யாருக்குடா பொண்டாட்டி?” சென்னையின் வெயிலைவிட வெகு அனலாக வந்து விழுந்தது அவள் வார்த்தைகள்.
“வேற யாரு? நீதான்!” என்றான் அவன் கூலாக.
“லிசன்! நீ நினைக்கிறது எப்பவும் நடக்காது. தேவையில்லாமக் கனவு காணாமப் போய் வேற வேலை இருந்தாப் பாரு” என்றவளைப் பார்த்து, “கனவுல இல்லடி… நிஜத்தில் நம்ம கல்யாணம் நடக்கும். நான் நடத்திக் காட்டுறேன்.” என்றவன் அவளைப் பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்தி, “அதுல உனக்கு எந்த டவுட்டும் இருக்காதுன்னு நினைக்கிறேன்” என்று சொல்லி அவள் கோவத்தில் அவன் இன்னும் பெட்ரோலை ஊற்றிவிட, வெடுக்கென்று திரும்பி அவனைப் பார்த்தவள், “தெரியும்டா, நல்லாத் தெரியும்… உன்னைப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நீ எந்தத் திமிர்ல இப்படி ஆடுறேன்னும் எனக்குத் தெரியும். ஆனா, உனக்குதான் இந்தச் சந்தியா பத்தி ஒண்ணும் தெரியாது. நான் ஒரு முடிவெடுத்துட்டா அதுல இருந்து என்னைக்கும் மாற மாட்டேன். அதை நீ போகப் போகத் தெரிஞ்சிப்ப” என்றவள் அவனைவிட்டு விலகி ரெண்டடி எடுத்து வைத்தவளின் கையைப் பிடித்த தேவா, “ஆர்த்தி ப்ரெக்னன்டா இருக்கா… நாலு மாசம்.” என்று சொல்ல, அவன் தன் கைப்பிடித்ததில் கோவமாக அவனைத் திட்ட வாய் திறந்தவள் காதில் கேட்ட செய்தியில் அப்படியே சிலை போல் நின்றாள்.
அவள் பார்வை ‘இது உண்மையா?’ என்பது போல் அவன் மீது படிய, அதைப் புரிந்து கொண்டவன், “ஆமாடி” என்றான் புன்னகையுடன்.
ஒரு நிமிடம் கண்களை மூடிக் கடவுளுக்கு நன்றி சொன்னவள், அடுத்த கணம் அவன் பிடித்திருந்த கையை உதறிவிட்டு, “அதை ஏன் என்கிட்டச் சொல்ற?” என்று கேட்டாள் வீம்பாக.
‘திமிருடி உனக்கு’ என்று மனதில் நினைத்தவன், “நான் நம்ப கல்யாணம் உடனே நடக்கணும்னு சொல்றதுக்குக் காரணமே ஆர்த்தி தான்… அதான் சொன்னேன்” என்றவனை அவள் எரிச்சலாகப் பார்த்து வைக்க, அவளின் பொறுமை கொஞ்ச கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வருகிறது என்று உணர்ந்த தேவா, “அவளுக்கு என்ன வேணும்னும் கேட்டேன். என்ன கேட்டாலும் செய்வியான்னு கேட்டா… நானும் அவ என்ன கேக்கப் போறான்னு தெரியாம வாக்குக் கொடுத்துட்டேன்” என்று சொல்ல, அதைக் கேட்ட சந்தியாவின் புருவங்கள் சுருங்கிப் பார்வை அழுத்தமானது.
“அவ குழந்தைக்கு நம்ம ரெண்டு பேரும் தான், புருஷன் பொண்டாட்டியா இருந்து பேர் வைக்கணும்னு கேட்டா” என்று சொல்ல, சந்தியாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.
“உனக்கு நல்லாத் தெரியும். நான் கொடுத்த வாக்கை என்னைக்கும் மீறிப் பழக்கம் இல்ல. சோ, நம்ம கல்யாணம் நடந்தே ஆகணும்.” என்றான் உறுதியாக.
அதைக்கேட்டு கொந்தளித்தவள், “என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க அக்காவும் தம்பியும்… உங்க அக்கா ஆசைப்பட்டால் அதுக்கு நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணுமா? எனக்கென்ன தலையெழுத்தா? ஆர்த்தி ஆசையை நிறைவேத்த நினைச்சா ஊர்ல என்ன பொண்ணா இல்ல… எவளையாவது கல்யாணம் பண்ணிட்டுச் சாவு. அதைவிட்டு என்னை ஏன்டா டார்ச்சர் பண்ற” என்று நெருப்பில் தோய்த்து அவன் மீது வார்த்தையைக் கொட்டியவளின் குரல்வளையைப் பிடித்து நெறிக்க, அவளோ சற்றும் அசையாமல் அவனை எரிப்பது போல் பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவள் பார்வையில் இருந்த தைரியத்தைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஏதேதோ காட்சிகள் ஓட, கண்களை மூடித் திறந்து அதை விரட்டியவன், “இங்க பாருடி… இத்தனை வருஷமா உன் மனசு மாறும்னு தான் நானும் வெய்ட் பண்ணேன். இனியும் வெய்ட் பண்ண நான் தயார் தான். பட், வெறும் தேவாவா இல்ல, உன் புருஷன் தேவாவா இருந்து உன் மனசு மாறும் வரை காத்திருப்பேன்…” என்றவன் அவள் முகத்தை, இதழும் இதழும் உரசும் அளவுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு வந்தவன், “நீயே வருவடி, என்னைத் தேடி நீ வருவ… என் காதலைப் புரிஞ்சிட்டு வருவ... நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழ்வோம். அதுக்குச் சாட்சியா உன் வயித்துல நம்ம புள்ளை வளரும். அதுக்கு உன் இஷ்ட தெய்வம் பேரை நம்ம வைப்போம்… இதெல்லாம் நடக்கும்… நான் நடத்திக் காட்டுவேன்” என்ற தேவா, அவள் மீதிருந்த தன் கையை எடுத்தவன்,
“இது அத்தனையும் உன் முழு சம்மதத்தோட தான்டி நடக்கும்.” என்று திரும்பி நடந்தவன், “சீக்கிரம் கல்யாணத் தேதி பத்திப் பேச, சகலையைப் பார்க்க வீட்டுக்கு வரேன்னு சொன்னேன்னு உன் மாமா சூர்யாகிட்டச் சொல்லிடு” என்று நடந்த வாக்கிலேயே சொல்லிவிட்டுச் சென்றவனைத் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா.
தேவாவும் பிரபுவும் அங்கிருந்து சென்றுவிட, வைஷ்ணவி வேகமாக சந்தியாவிடம் ஓடி வந்தவள், “ஏய்… ஏய் சந்தியா” என்று அவள் தோளைப் பிடித்து உலுக்க, அப்போதுதான் சுய உணர்வுக்கு வந்தாள் அவள்.
“என்னடி நடக்குது இங்க… நான் அந்த ஆளை ரோமியோன்னு நினைச்சா, அவரு என்னன்னா ஜேம்ஸ் பாண்ட் மாதிரி நெத்திப் பொட்டுல துப்பாக்கியைத் தூக்கி வைக்கிறாரு? எனக்கு ரொம்பப் பயமா இருக்கு சந்தியா… ஏதோ பெரிய பிரச்சனையில் நீ சிக்கி இருக்க மாதிரி எனக்குத் தோணுது…” என்றவளுக்குப் பதில் சொல்லாமல் சந்தியா அமைதியாக இருக்க அதில் கடுப்பானவள், அவர் யாருன்னு உனக்குத் தெரியும் தான? அதான், அவரு துப்பாக்கி காட்டியும் நீ கொஞ்சம் கூட பயப்படாம நின்ன இல்ல?” என்றவள் தொடர்ந்து, “யாருடி அவரு? அவருக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்? அவரென்ன போலீஸா? துப்பாக்கி எல்லாம் வச்சிருக்காரு?” என்று கேட்க,
அவளைத் திரும்பி வெற்றுப் பார்வை பார்த்த சந்தியா, “உன்னோட எந்த கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்லடி” என்றவள், “எனக்கு மனசு சரியில்ல... நான் இன்னைக்கு ஆஃபிஸ் வரலன்னு சொல்லிடு” என்றவள் ஆட்டோ பிடித்து வீட்டுக்குச் சென்றுவிட, பாவம் வைஷ்ணவி தான் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் முழி பிதுங்கி நின்றாள்.