உன் விழியில் கைதானேன் 6
விழி 6
சந்தியா வேகமாக வீட்டுக்குள் நுழைய அதைப் பார்த்த தனலட்சுமி, ‘காலைல கிளம்பி வேலைக்குப் போனவ, என்ன உடனே வீட்டுக்கு வந்துட்டா?’ என்று யோசித்தபடியே, சந்தியா அருகில் வந்தவர், “என்னம்மா வேலைக்குப் போன கையோட திரும்பி வந்துட்ட? எதுவும் மறந்துட்டியா?” என்று கேட்க அவரிடம் தன் எரிச்சலைக் காட்ட விரும்பாத சந்தியா, “இல்ல அத்தை, திடீர்னு ஒரே தலைவலி. அதான் வந்துட்டேன்.” என்றாள் நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு.
“அச்சோ! திடீர்னு என்னம்மா ஆச்சு? காய்ச்சல் எதுவும் அடிக்கிதா?” என்று அவள் வெற்றியைத் தொட்டுப் பார்க்க அவர் கையைப் பிடித்துக் கொண்ட சந்தியா, “அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை. தலை மட்டும் தான் கொஞ்சம் வலிக்கிது. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் சரியாகிடும்.” என்றாள்.
“சரிம்மா… நீ அப்படி உக்காரு, நான் சூடா காபி போட்டுக் தரேன். குடிச்சிட்டுப் போய்க் கொஞ்ச நேரம் தூங்கு…” என்றவரிடம், “காபி எல்லாம் வேணாம் அத்தை. நான் தைலம் போட்டுட்டுத் தூங்குறேன்.” என்றவள் அவசரமாகத் தன் அறை நோக்கிச் செல்ல, அப்போது அவள் எதிரில் வந்த நிலானி, “என்னடி, வேலைக்குப் போன கையோட வந்துட்ட?” என்று கேட்க தமக்கையைத் தீயாக முறைத்துவிட்டுச் அவள் செல்ல, நிலானியோ ‘என்னாச்சு இவளுக்கு? ஏன் இப்படி முறைச்சிட்டுப் போறா?” என்று முணுமுணுத்தபடியே தன் மாமியார் அருகில் வந்தவள், “இந்தப் பிடாரிக்கு என்னாச்சு அத்தை? ஏன் இப்படி முறைச்சிட்டே போகுது?” என்று கேட்டாள்.
“அவளுக்குத் தலைவலியாம் நிலா. அதான் வேலைக்கு கூடப் போகாம வீட்டுக்கு வந்துட்டா… கொஞ்ச நேரம் கழிச்சுப் போய் அவளைப் பாரு. தலைவலி சரியாகாட்டி டாக்டர்கிட்டப் போலாம்.” என்றவர் அங்கிருந்து செல்ல நிலானியோ, ‘காலைல நல்லாதானே இருந்தா? திடீர்னு என்ன தலைவலி?’ என்று யோசித்தவள் சூர்யாவின் குரல் கேட்டதும், “ஹான் இதோ வந்துட்டேன்.” என்றவள் தங்கள் அறைக்குச் சென்றாள்.
அவளைப் பார்த்த சூர்யா, “என்னடி பொலம்பிட்டே வர?” என்று கேட்க, அவளோ, “ம்ம்ம் எல்லாம் உங்க ஆசை மச்சினியால தான்” என்றாள் உதட்டைச் சுழித்தபடி.
“ஏன்டி, எப்பப்பாரு அவகிட்டையே வம்பு பண்ணிட்டு இருக்க?” என்று சூர்யா சந்தியாவுக்காகப் பேச, அவனைக் கண்கள் சுருக்கி செல்லமாக முறைத்தவள், “என்னைக்காவது பொண்டாட்டி எனக்குச் சப்போர்ட் பண்ணி இருக்கீங்களா நீங்க? எப்பவும் அவளுக்குத்தான் முட்டுக் குடுப்பீங்க இல்ல?” என்றாள் பொய் கோபத்துடன்.
அதைக் கேட்டுச் சிரித்த சூர்யா, “அவ குழந்தைடி…” என்றவனை இப்போது அவள் மெய்யாகவே முறைக்க அவள் கணவனோ, “சரி… சரி, இப்ப என்ன ஆச்சு? எதுக்கு அவளைப் பத்தி இப்பப் புலம்பிட்டு இருக்க?” என்று கேட்டான்.
“காலையில வேலைக்குப் போனவ, உடனே திரும்பி வந்துட்டா… என்னடி ஆச்சுன்னு கேட்டா என்னைப் பார்த்து அந்த முறை முறைச்சிட்டுப் போறா அவ… அத்தைகிட்டத் தலைவலின்னு சொன்னாளாம்.” என்றாள் எங்கோ பார்த்தபடி.
“ப்ச்ச்… ரொம்பத் தலைவலியா இருக்கும்டி. அதான் அப்படி பிஹேவ் பண்ணி இருப்பா, விடு” என்றவனைப் பார்த்து இல்லை என்று தலையாட்டியவள், “அவளை நான் சின்ன வயசில் இருந்து பார்க்குறேன் சூர்யா. அவளைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும். ஒருவேளை, உண்மையாவே அவளுக்குத் தலைவலியா இருந்தா, என்னைப் புடிச்சு உக்கார வச்சு, என் மடியில படுத்துகிட்டுத் தலையை அமுக்கிவிடச் சொல்லி இருப்பா… ஆனா, இன்னைக்கு என்னடி ஆச்சுன்னு கேட்டதுக்கு அவ என்னைக் கோவமா பார்த்துட்டுப் போறா… கண்டிப்பா வேற என்னமோ நடந்திருக்கு…”என்றாள் தங்கையைப் புரிந்தவளாக.
நிலானி சொன்னதைக் கேட்ட சூர்யா, “நீ சொல்றது கரெக்டா இருந்தால், இந்தத் தலைவலிக்குக் காரணம் அவனாத்தான் இருக்கணும். இரு அவனையே கேக்குறேன்.” என்றவன் உடனே தேவாவுக்கு அழைத்தான்.
சூர்யா எண்ணைப் பார்த்ததும் கண்களை மூடி இழுத்து மூச்சு விட்ட தேவா, “என்ன, உங்க மச்சினி வீட்டுக்கு வந்துட்டாளா?” என்று கேட்டான் எந்தவித உணர்வும் இல்லாமல்.
“அப்ப நான் நினைச்சது சரிதான். சந்தியாக்கு வந்த தலைவலி நீதானா?” என்று கேட்ட சூர்யா, “ஆனா, இது தினமும் நடக்குறது தானே… நீ அவளைப் பார்க்குறது தான் காரணமா இருந்தால் அவ தினமும் இல்ல வேலைக்குப் போகாம இருக்கணும்.” என்ற சூர்யாவின் கையில் இருந்த அலைபேசியைப் பறித்த நிலானி அவசரமாக, “உண்மையைச் சொல்லுங்க தேவா, இன்னைக்கு என்னாச்சு? ஏன் அவ அவ்ளோ கோவமா இருக்கா?” என்று கேட்டாள் தவிப்பாக.
ஒரு நிமிஷம் அமைதியாக இருந்த தேவா, “இன்னைக்கு நான் சந்தியாகிட்டப் பேசினேன் நிலா மேடம்” என்றான்.
அதைக் கேட்டுச் சூர்யாவும் நிலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டனர்.
“அவகிட்ட என்ன பேசினீங்க?” என்று கேட்டான் சூர்யா.
தேவா நடந்ததை மறைக்காமல் அனைத்தையும் சொன்னவன், “நான் முடிவு பண்ணிட்டேன் சூர்யா… அவ எனக்குத்தான். இந்த ஜென்மத்தில் அவதான் என் பொண்டாட்டி. நான் அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். இதை யாராலும் மாற்ற முடியாது. ஏன் அவளே நினைச்சாலும் இதை மாற்ற முடியாது. அவ வாழ்ந்தாலும் என்னோட தான், செத்தாலும் என்னொட தான்.” என்று அழுத்தமாகச் சொன்னவன், “இதை நீங்களும் ஞாபகம் வச்சிக்கோங்க… இனி அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலை எல்லாம் வேணாம். இதோட நிறுத்திக்கோங்க…” என்றவன் ஒரு கணம் பொறுத்து,
“புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்.” என்றவன் அழைப்பைத் துண்டிக்க, அவன் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்த சூர்யா, நிலானி இருவரும் ஒருவரை ஒருவர் கலக்கத்தோடு பார்த்துக் கொண்டனர்.
“என்ன சூர்யா இது? நேத்து வரை அவ நல்லா இருந்தாலே போதும்னு சொல்லிட்டு இருந்த மனுஷன், இன்னைக்கு என்ன ஆன்டி ஹீரோ மாதிரி அவ எனக்குத்தான், யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு நம்மை மிரட்டுற மாதிரிப் பேசிட்டு இருக்காரு?” என்ற நிலானியின் முகத்தில் கவலை சூழ்ந்திருக்க, அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் சூர்யா.
“நீ எதை நினைச்சும் கவலைப்படாம இருடி… தேவா ஒன்னும் தப்பான ஆள் இல்ல. அது தெரிஞ்சு தானே நம்ம அவனுக்கு சப்போர்ட்டா நிக்குறோம்.” என்றவன் அவள் முகம் பார்த்து, “அப்படி ஒருவேளை அவன் சந்தியா விஷயத்தில் அவனோட பழைய முகத்தைக் காட்ட நினைச்சா, அவனுக்கு நான் யாருன்னு காட்ட வேண்டியது தான். இவ்ளோ நடந்த பிறகும் இப்ப வரை நானும் அரவிந்தும் அவனை ஏன் ஒன்னும் செய்யாமல் இருக்கோம்னு உனக்கு நல்லாவே தெரியும். சோ, நீ எதுக்கும் பயப்படாம இரு.” என்றவனுக்கு இன்னும் தேவா மேல் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கத்தான் செய்தது.
தனது அறையில் படுத்திருந்த சந்தியாவின் நினைவுகளில் இன்று தேவா பேசியதே திரும்பத் திரும்ப வந்து வந்து போனது. கூடவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அழையா விருந்தாளியாக ஒவ்வொன்றாக அவளின் மண்டைக்குள் ஊர்வலம் போக ஆரம்பித்தது. அவள் பொய்யாகச் சொன்ன தலைவலி இப்போது உண்மையில் அவள் மண்டையைப் பிளந்தது.
தலையை இறுக்கிப் பிடித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தவள், கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க, அங்கு கையில் ஆவி பறக்கும் காபியுடன் நின்றிருந்தாள் நிலானி.
காஃபியை அவள் முன் நீட்டியபடி நிலானி நிற்க, காஃபி கப்பையும் தன் அக்காவையும் மாறி மாறிப் பார்த்தவள், “எனக்கு இப்ப நிஜமாவே தலைவலிக்குது க்கா” என்றாள் கண்கள் கலங்க.
அதைக் கேட்ட அடுத்த நொடி காஃபி கப்பை அருகில் இருந்த மேசையில் வைத்த நிலானி, கட்டிலில் அமர்ந்தவள் தங்கையைத் தன் மடியில் படுக்கவைத்துக் கொண்டு, மெதுவாக அவள் தலையைப் பிடித்து விடத் தொடங்க, சந்தியா மெதுவாகக் கண்களை மூடிக் கொண்டாள்.
அக்காவின் அரவணைப்பில் சற்று வலி குறைந்திருந்தது சந்தியாவுக்கு. கண்களை மூடியபடியே, “ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது க்கா?” என்றவள் மடியில் படுத்திருந்த படியே நிலானியை இமைகள் உயர்த்திப் பார்த்தவள், “எனக்குத் தெரியும் நீங்க எல்லாரும் அந்த தேவா பக்கம் தான்னு…” என்று சொன்னவளின் குரலில் இருந்த வலியை நிலானியால் நன்கு உணர முடிந்தது.
மெல்லத் தங்கையின் தலையை வருடி விட்டவள், “நடந்த எதையும் நம்மால் மாத்த முடியாதுடி… நீ அதையே நினைச்சிட்டு உன்னோட வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க. உன்னை நாங்க எதையும் உடனே மறக்கச் சொல்லல… ஆனா, மறக்க முயற்சியாவது பண்ணுன்னு தான் சொல்றோம். மூணு வருஷம் போயிடுச்சு. இன்னமும் அப்படியே இருந்தா என்னடி அர்த்தம்? அன்னைக்கு உன்னோட கல்யாணம் நின்னு போன சமயம் நாங்க எல்லாரும் எவ்ளோ மனவேதனையில் இருந்தோம்னு நான் உனக்குச் சொல்ல வேண்டியது இல்ல… அந்த நாளுக்குப் பிறகு நடந்த ஒவ்வொரு சம்பவமும், அதுக்குப் பிறகு இந்த வீட்ல யாரையும் நிம்மதியா இருக்க விடல. ஆனாலும் உனக்காக எல்லாரும் நார்மலா இருக்க மாதிரி நடிச்சிட்டு இருக்கோம்.” என்றவள் தங்கை முகம் பார்த்து, “உன்னை மாதிரியே” என்க, சந்தியாவின் கண்களில் கண்ணீர் கோடுகளாக வழிந்தது.
“நாங்க எல்லாரும் எப்ப உனக்கு ஒரு கல்யாணம் நடக்கும், நீ எப்ப உண்மையா சிரிச்சு சந்தோஷமா இருப்பன்னு ஒவ்வொரு நாளும் ஏங்கிட்டு இருக்கோம்டி.” என்றவள் சில நொடிகள் கழித்து,
“இன்னைக்கு என்ன நடந்ததுன்னு தேவா சொன்னாரு…” என்று தங்கை முகம் பார்த்தவள், “இன்னைக்கு அவர் பண்ணது தப்பு தான். ஆனா, அவரும் ரெண்டு வருஷமா அமைதியா உன்னோட மனசு மாறத் தானே வெயிட் பண்ணிட்டு இருந்தாரு, இப்ப ஆர்த்திக்காக உடனே உன்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்குறாரு…” என்றவள் சூர்யாவிடம் தேவா பேசியதையும் சொல்ல, சந்தியா அவள் மடியில் இருந்து எழுந்து கொண்டவள், விழிகளை உயர்த்தி அழுத்தமாக நிலாவைப் பார்த்தாள்.
“அப்படிப் பார்க்காதடி… தேவான்னு இல்ல, நீ யாரைச் சொன்னாலும் உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நாங்க ரெடி தான். அது உனக்கும் தெரியும். ஆனா, நீ எந்தப் பதிலும் சொல்லாமல் இப்படியே காலத்தைக் கடத்திட்டு இருக்கிறது எங்க எல்லாருக்கும் எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? அப்பாவும் அம்மாவும் தினமும் ஃபோன் பண்ணிப் புலம்பிட்டு இருக்காங்க…” என்றாள் ஆற்றாமையாக.
அதைக்கேட்டுச் சந்தியா தலை குனிந்து கொள்ள, அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்திய நிலானி, “நான் உன் கூடப் பிறக்காம இருக்கலாம்டி… ஆனா, உன்னை நான் முழுசாப் புரிஞ்சி வச்சிருக்கேன். அதை வச்சுச் சொல்றேன். முன்ன நீ தேவாவை வேணாம்னு சொல்லக் காரணம் நாங்க என்ன நினைப்போம்னு யோசிச்சு தானே?” என்று கேட்கச் சந்தியாவிடம் பதில் இல்லை.
“ம்ம்ம்… அப்ப வேணும்னா நீ எங்களைப்பத்தி யோசிச்ச அவரை வேணாம்னு சொல்லி இருக்கலாம். ஆனா, அதுக்கு இப்ப எந்த அவசியமும் இல்லைனு உனக்கே தெரியும்.” என்றவள் சந்தியாவைக் கூர்ந்து பார்த்தபடியே, “ஆனா, இப்ப நீ தேவாவை ஒதுக்கி வைக்கக் காரணம் இந்த சொசைட்டியும், உன்னோட கொரியரும் தானே?” என்று புருவம் உயர்த்தி அழுத்தமாகக் கேட்க சந்தியாவால் பதில் சொல்ல இயலவில்லை.
“எப்ப இருந்து என்னோட சந்தியா இந்தப் போக்கத்த சோ கால்டு சொசைட்டி பேசுறதை எல்லாம் நினைச்சுத் தன்னோடு மனசை மாத்திக்கும் அளவுக்கு வீக் ஆன பொண்ண மாறினா?” என்று கேட்க, சந்தியா உதட்டை பல்லால் அழுத்திக் கடித்தபடி அமைதியாக இருந்தாள்.
“எனக்குத் தெரிஞ்ச சந்தியாக்கு இந்த சொசைட்டி மேல இல்ல… தன்னோட மனசாட்சி மேல்தான் பயம் இந்ததது. அவ மனசாட்சி சரின்னு சொல்லும் எதையும் துணிச்சலா செய்யறவ தான் என்னோட தங்கச்சி. அவளுக்குப் புடிச்ச விஷயம் நேர்மையா இருக்கும் பட்சத்தில் அதை எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டா… அதுக்காகப் பெத்த அம்மா, அப்பா, அக்கான்னு மட்டும் இல்ல, அவ உயிருக்கு மேல மதிக்கும் அவ மாமாங்க பேச்சைக் கூடக் கேக்க மாட்டா… எதிர்த்து நிப்பா. அந்தச் சந்தியா இப்ப எங்க போனா?” என்றவளின் வார்த்தைகள் சந்தியாவை ஏதோ செய்தது.
“க்கா…” என்று அவள் விசும்ப, தங்கையின் தலையை மெதுவாக வருடியவள், “எனக்குப் புரியுதுடி… நீ எதை நினைச்சுத் தேவாவை தள்ளி வைக்குறேன்னு எனக்கு நல்லாப் புரியுது. ஆனா, அதெல்லாம் பெரிய விஷயமே இல்லடி. நீ யார்னு உன்னைத் தெரிஞ்ச எல்லாருக்குமே தெரியும். அவங்க எல்லாரும் உன்னைப் புரிஞ்சிப்பாங்க. நீ உன் மனசுக்கு நேர்மையா தான் எல்லாத்தையும் செஞ்ச… சோ, உன்னைப் பத்தித் தெரியாமப் பேசுறவங்க பேச்சை நீ மதிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை…” என்ற நிலா மெல்ல அவளைப் படுக்க வைத்தாள்.
“கொஞ்ச நேரம் கண்ணை மூடித் தூங்கு… அப்புறமா நான் சொன்னதை யோசிச்சுப் பாரு…” என்றவள், “இப்பவும் சொல்றேன், எங்களுக்கு உன்னோட சந்தோஷம் தான் முக்கியம். அதை எப்பவும் மனசுல வச்சிக்க…” என்றவள் போகும் போது, “இன்னைக்குச் சாயந்திரம் ஆர்த்தியைப் பார்க்க நாங்க தேவா வீட்டுக்குப் போறோம்.” என்ற நிலாவைச் சந்தியா சட்டென நிமிர்ந்து பார்க்கத் தங்கையின் பார்வையின் அர்த்தம் புரிந்தவள், “நாங்க ஆர்த்தியைப் பார்க்க மட்டும் தான் போறோம், வேற எந்தக் காரணமும் இல்ல” என்றவள் அங்கிருந்து சென்றாள்.
அதைக்கேட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்ட சந்தியாவின் கன்னங்களில் கண்ணீர் கோடாக இறங்கியது.
நிலானி பேசி விட்டுச் சென்றதும் சந்தியாவின் மனது ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டே இருந்தது. கண்கள் மூடி அமைதியாக வெகு நேரம் யோசித்தவளின் கவனத்தை அவள் அலைபேசி அடிக்கும் ஓசை கலைத்தது. அதை எடுத்து யார் அழைப்பது என்று பார்த்தவளுக்கு நெஞ்சில் நீர் வற்றிப்போக, அவள் உதடுகள் மெல்ல, “யுக்தா அக்கா” என்று முணுமுணுத்தது.
’கடவுளே என்னைக் காப்பாத்து’ என்று மனதில் வேண்டியபடியே, அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவள், “சொல்லுங்க அக்கா” என்றாள் பவ்யமாக.
“ஓஓஓ! மேடம்க்கு என்னை இன்னும் ஞாபகம் இருக்கா? சந்தோஷம்…” என்றவளின் வார்த்தையில் இருந்த சந்தோஷம் அவள் குரலில் துளியும் இல்லை என்பது சந்தியாவுக்கு நன்றாகப் புரிந்தது.
“ஏன் இப்படி எல்லாம் சொல்றீங்க க்கா? நா…நான் வேலையில் கொ..கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். அதான் உங்ககிட்டப் பேச முடியல” என்று இப்போது தான் பேசக் கற்ற மழலை போல் அவள் தடுமாற, அந்தப் பக்கம் யுக்தா பல்லைக் கடிக்கும் ஓசையே சொன்னது அவளின் கோபத்தின் அளவை.
அவளை எப்படிப் பேசிச் சமாளிப்பது என்று திணறியவள், பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “அக்… அக்கா, நீங்க எப்படி இருக்கீங்க? ஆதி சார், பாப்பா எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று கேட்க யுக்தாவோ, “நீ கேட்ட கேள்விக்கு எல்லாம் நான் நாளைக்கு உன்னை நேர்ல பார்க்கும்போது பதில் சொல்றேன். நாளைக்கு ஈவினிங் அஞ்சு மணிக்கு நான் சொல்ற இடத்துக்கு வா… இடத்தை மெசேஜ் பண்றேன்.” என்றது தான் சந்தியாவுக்குக் கை, கால்கள் நடுங்கத் தொடங்கி விட்டது.
“என்ன விஷயம் க்கா? ஃபோன்லயே சொல்லுங்களேன். நீங்க இருக்கற பிஸி ஷெடியூல்ல எதுக்கு நேர்ல எல்லாம் மீட் பண்ணிட்டு… உங்களுக்கு டைம் வேஸ்ட் தானே” என்றாள் தயக்கமாக.
“ஏன் என்னைப் பார்க்க மேடம்க்குப் புடிக்கலியோ?” என்று யுக்தா தன் கணீர் குரலில் கேட்க, சந்தியாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“அச்சோ! அதெல்லாம் இல்லக்கா… நீங்க ரொம்ப பிஸின்னு தான் நான் அப்படிச் சொன்னேன்.” என்றாள் பதட்டமாக.
“ம்ம்ம் பிஸி தான். ஆனா, ஃபேமிலின்னு வரும்போது அதெல்லாம் பார்க்க முடியாது. கொஞ்சம் டைம் ஒதுக்கத்தான் வேணும்.” என்றவள், “நாளைக்கு ரெடியா இரு… லொகேஷன் அனுப்பறேன்.” என்றவள் ஃபோனை வைக்கச் சந்தியா பேயறைந்தது போல் உறைந்து இருந்தாள்.
இங்கு சந்தியாவிடம் பேசிவிட்டு ஃபோனை வைத்தவள் முன் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான் தேவா.