உன் விழியில் கைதானேன் 7
விழி 7
சந்தியா பகல் முழுவதும் தன் அறையிலேயே கழித்தவள், மாலை நேரம் போல் வெளியே சென்றிருந்தாள்.
“நிலா… இந்தப் பிடாரி எங்க போனா? சொல்லிட்டுக் கிளம்பலாம்னு பார்த்தா ஆளையே காணும். நம்ம ஆர்த்தியைப் பார்க்கப் போறோம்னு அவளுக்குத் தெரியுமா இல்லயா?” என்று கேட்ட தேவியிடம், ஆர்த்திக்காக எடுத்து வைத்திருக்கும் பலகாரங்களைக் கொடுத்த நிலா, “அதெல்லாம் காலைலயே சொல்லிட்டேன் தேவி… காலைல இருந்து தலைவலின்னு சொல்லி ரூமை விட்டு வெளியவே வரல. இப்பப் பார்த்தா ஆளைக் காணும்.” என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே சந்தியா இரண்டு கைகள் நிறையப் பைகளுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.
அவளைப் பார்த்த தேன்மொழி, “இதோ வந்துட்டா நிலா” என்றவள் சந்தியாவிடம், ”எங்கடி போன நீ? உனக்குத்தான் உடம்பு சரியில்ல இல்ல... அப்புறம் எதுக்குடி இப்ப வெளிய போன?” என்ற தேனுவின் அருகில் வந்து அமர்ந்த சந்தியா, “காலையில் இருந்து படுத்துட்டே இருந்தது ரொம்ப போர் அடிச்சிது அக்கா. அதான் சும்மா ஈவினிங் சாப்பிடக் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கலாம்னு வெளிய போனேன்.” என்றவளை விசித்திரமாகப் பார்த்தனர் தமக்கைகள் மூன்று பேரும்.
அவர்களைப் பார்த்தவள், “ஏன் மூணு பேரும் இப்படி ஏதோ ஜந்துவைப் பார்க்குற மாதிரி என்னைப் பார்க்குறீங்க?” என்று கேட்டாள்.
“ம்ம்ம், ஜந்து மாதிரி இல்லடி… நீ விசித்திரமான ஜந்துவே தான்.” என்ற தேவி, அவள் வாங்கி வந்த பைகளைக் காட்டி, “நார்மல் மனுஷி யாரும், சும்மா ஈவினிங் திங்குறதுக்கு இப்படிக் கடையையே வாங்கிட்டு வருவாங்களாடி?” என்று முறைக்க, “அது..அது வந்துக்கா… அங்க எல்லா ஐட்டமும் நல்லா டேஸ்ட்டா இருந்துச்சு. அதான், குழந்தைகளுக்காக இவ்ளோ வாங்கிட்டு வந்துட்டேன்.”என்று மூவரையும் பார்த்து அசடு வழியச் சிரித்து வைத்தாள் சந்தியா.
சந்தியா முகத்தையே யோசனையாகப் புருவம் சுருக்கிப் பார்த்த நிலா, ‘இல்லயே, இவ சொல்றதுக்கும் இவ மூஞ்சி மாடுலேஷனுக்கும் சிங்க் ஆகலயே? எப்பவும் குழந்தைகளுக்கு ஹெல்தியா சாப்பிடக் குடுங்க, இந்த மாதிரி ஐட்டம் எல்லாம் குடுக்காதீங்கன்னு எங்களைத் திட்டுறவ, இன்னைக்கு ஏன் இவ்ளோ வாங்கிட்டு வந்திருக்கா?’ என்று யோசித்தவள், அவள் வாங்கி வந்த பொருட்களைப் பார்த்ததும் நிலா முகத்தில் கீற்றுப்போல் புன்னகை மலர்ந்தது.
தேனு, தேவிக்கு கண்கள் அவள் வாங்கி வந்த பொருட்களைக் பார்க்கும்படி ஜாடை காட்டத் தேனு, தேவிக்கும் புரிந்துவிட்டது. அவள் அதையெல்லாம் யாருக்காக வாங்கி வந்திருக்கிறாள் என்று.
‘ஆர்த்திக்குப் புடிச்ச ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்து வாங்கிட்டு வந்திட்டு, எப்படி நடிக்கிறா பாரு’ என்று நினைத்த நிலா தங்கையிடம் விளையாட நினைத்து, “ம்ம்ம் சரி, சரி. எங்களுக்கு டைம் ஆச்சு. நாங்க ஆர்த்தியைப் பார்க்கக் கிளம்புறோம். அத்தை குழந்தைங்களைக் கூட்டிட்டு வெளிய போயிருக்காங்க. நீ ஒழுங்கா வீட்டைப் பார்த்துக்கோ… நீ வாங்கிட்டு வந்த எல்லாத்தையும் உள்ள எடுத்து வை… அப்புறமா தேனு, தேவிக்குப் பிரிச்சுக் கொடுத்துக்கலாம்.” என்றவளுக்கு இதழ் தாண்டிச் சிரிப்பு வரப் பார்க்க, கஷ்டப்பட்டு உதட்டைக் கடித்து அடக்கிக் கொண்டாள்.
நிலாவின் விளையாட்டைப் புரிந்து கொண்ட தேவியும் தேனுவும் கூட, ”ஆமா ஆமா… இவதான் கடையையே வாங்கிட்டு வந்துட்டா… நீங்க மட்டும் இதெல்லாம் காலி பண்ண முடியாது. நம்ம திரும்பி வந்ததும் நாங்க ரெண்டு பேரும் பாதியை எடுத்துக்குறோம்” என்று நிலாவுக்கு ஒத்து ஊத, சந்தியா என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தாள்.
“அக்கா… இதுல இருக்கிறது எல்லாம் உங்களுக்கு அவ்ளோவா புடிக்காது க்கா. நான் வேணும்னா உங்களுக்குப் புடிச்ச ஐட்டமா ஆர்டர் பண்ணி விடுறேனே” என்றாள் தவிப்பாக.
“ஏன்டி, புடிக்காதுன்னு நீயே சொல்ற. அப்புறம் எதுக்குடி வாங்கிட்டு வந்த?” என்ற தேவி, “சரி தள்ளு, அப்படி என்னென்ன ஐட்டம் வாங்கிட்டு வந்திருக்கேன்னு பார்ப்போம்?” என்றவள் ஒன்றாக எடுத்துப் பார்த்துவிட்டு, “என்னடி இது? உனக்குத்தான் இந்தப் பணியாரம், முறுக்கு இதெல்லாம் அவ்ளோவா புடிக்காதே… அப்புறம் எதுக்குடி அதெல்லாம் வாங்கி இருக்க? கூடவே பாதாம் ஸ்வீட், ஜாங்கிரி, பால் கோவா, மல்லிப்பூ, நிறையப் பழம் எல்லாம் வேற வாங்கி இருக்க…” என்றாள் தேவி.
“ஆமா தேவி… இதெல்லாம் நம்ம வீட்ல யாருக்கும் அவ்ளோவா புடிக்காது.” என்றவள் சந்தியாவைப் பார்த்தபடி, “நம்ம ஆர்த்திக்குத் தான் இதெல்லாம் ரொம்பப் புடிக்கும். என்னடி பிடாரி கரெக்ட்டா?” என்று சந்தியாவைப் பார்த்துக் கண்ணடிக்க, சந்தியா திருதிருவென விழித்தபடி நின்றாள்.
உடனே தேவி, “என்ன தேனு… அப்ப இவ இதெல்லாம் நம்ம ஆர்த்திக்காக வாங்கிட்டு வந்தான்னு நீ சொல்லற மாதிரி இருக்கே?” என்றவளுக்குச் சிரிப்பை அடிக்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டாள்.
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல… நான் ஏன் ஆர்த்திக்காக இதெல்லாம் வாங்கணும்? அதான் பெரிய கோயில் நந்தி மாதிரி ஒரு எருமமாடு தம்பி இருக்கானே… அவன் வாங்கித்தரப் போறான். நான் ஏன் வாங்கித் தரணும்?” என்று முறுக்கிக் கொள்ள நிலா அவளை ஏற இறங்கப் பார்த்தவள், “ஓஓஓ… மேடம் அப்ப இதெல்லாம் ஆர்த்திக்காக வாங்கல, அப்படித்தானே?” என்று கேட்கச் சந்தியாவும் வீம்பாக “ஆமாம்” என்றாள்.
“ம்ம்ம்… அப்ப சரி, நீ இதெல்லாம் எடுத்து உள்ள வை. நாங்க கிளம்புறோம்.” என்று நிலா நகர அவள் முன் வந்து நின்ற சந்தியா, “நிலா... வேணும்னா நீ இதெல்லாம் எடுத்துட்டுப் போ, இதெல்லாம் ஆர்த்திக்குப் புடிக்கும்னு வேற சொல்லிட்டீங்க. அவ வேற முழுகாம இருக்கா… இதெல்லாம் நீங்களே எடுத்திட்டுப் போங்க, எனக்கு ஒன்னும் அப்ஜக்ஷன் இல்ல.” என்று தன் கெத்தை விடாமல் சொல்ல நிலா உள்ளுக்குள் சிரித்தவள்,
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நாங்களும் ஆர்த்திக்கு நிறைய ஐட்டம் வீட்லயே செஞ்சிருக்கோம். உன்னோடதை நீயே வச்சிக்கோ… அவ்ளோ வேண்டா வெறுப்பா நீ ஒன்னும் அவளுக்குச் செய்ய வேண்டாம்.” என்றாள் நிலானி வேண்டுமென்றே.
நிலா சொன்னதைக் கேட்டு அவளை முறைத்த சந்தியா, “நான் ஒன்னும் வேண்டா வெறுப்பாய் கொடுக்கல… புள்ளத்தாச்சிப் பொண்ணு புடிச்சதைச் சாப்பிட்டா அவளுக்குச் சந்தோஷமா இருக்கும்னு தான் கொடுக்குறேன். ஒழுங்கா எல்லாத்தையும் எடுத்துட்டுப் போய் குடுங்க” என்றவள் வேகமாகத் தன்னறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
அவளின் செய்கையைப் பார்த்துச் சிரித்த தேவி, “பார்த்தியா நிலா? ஆர்த்திக்காக எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துட்டு, நம்மகிட்ட என்னமா சீன் போடுறான்னு…” என்று தேவி சொல்ல தேனுவும் சிரித்தபடியே, “அவளுக்கு ஆர்த்தியை ரொம்பப் புடிக்கும்டி… என்னதான் தேவா, சந்தியா உறவு காம்ப்ளிகேட்டடா இருந்தாலும், சந்தியாவுக்கு ஆர்த்தி மேல எப்பவும் அக்கறை இருந்திருக்கு.”
“உன்மையில் ஆர்த்தி ரொம்ப நல்லப் பொண்ணு தேனு” என்ற நிலா, “சரி சரி… டைம் ஆச்சு வாங்க கிளம்பலாம்.” என்ற நிலா ஆர்த்திக்காக சந்தியா வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டாள்.
நிலா அனைத்தையும் எடுத்துக் கொண்டு செல்வதைக் கதவின் ஓரம் மறைந்திருந்து பார்த்த சந்தியாவின் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.
ஆர்த்தி வீட்டில் சந்தியா செய்ததைப்பற்றி நிலா சொல்லிச் சிரிக்க, ஆர்த்திக்குக் கண்கள் கலங்கி விட்டது.
“ஏய் ஆர்த்தி… என்ன இது, சின்னப் புள்ள மாதிரி அழுதுட்டு. இந்த மாதிரி நேரத்தில் நீ அழக்கூடாது.” என்ற தேவி அவள் கண்களைத் துடைத்துவிட, ஆர்த்தி அவளுக்காகச் சந்தியா வாங்கிய அனைத்துப் பொருட்களையும் பார்த்தவள், “இதெல்லாம் எனக்கு ரொம்பப் புடிச்ச ஐட்டம் நிலா. அதெல்லாம் ஞாபகம் வச்சு எனக்காக வாங்கிக் கொடுத்திருக்கா…” என்றவளுக்குச் சந்தியாவின் அக்கறையில் மனமெங்கும் இதம் பரவியது.
“ஆமா ஆர்த்தி… அவளுக்கு உன்னை எப்பவும் ரொம்பப் புடிக்கும்.” என்ற நிலாவைப் பார்த்த ஆர்த்தி, “எனக்குத் தெரியும் நிலா. அதனால்தான் அந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எதைப் பத்தியும் யோசிக்காம சந்தியா என்னை உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தா…” என்றவளுக்குப் பழைய சம்பவங்கள் ஞாபகம் வந்து மேலும் அவளை உணர்ச்சிவசப்பட வைக்க, தேவி அவள் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள்.
“ஆர்த்தி ப்ளீஸ்… பழசு எதையும் நம்ம பேச வேண்டாம். இப்ப நீங்க ப்ரெக்னன்டா இருக்கீங்க… இந்த மாதிரி டைம்ல நீங்க ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாது. அது உனக்கும் சரி, உள்ள இருக்கற பாப்பாக்கும் சரி. நல்லது இல்ல… இப்ப ஒரு நல்ல ஃப்ரண்ட்ஸா நாங்க உன்னைப் பாக்க வந்திருக்கோம். சோ வந்த எங்களைக் கவனி. வந்ததில் இருந்து அந்தப் பிடாரி பத்தியே பேசிட்டு இருக்க நீ… எங்களுக்கு எதுவும் வேணுமான்னு கூடக் கேக்கல.” என்று அங்கிருந்த சூழ்நிலையை இலகுவாக்கும் விதமாகப் பேச, ஆர்த்தி கண்களைத் துடைத்துக் கொண்டவள்,
“அச்சோ சாரி, நீங்க வந்த சந்தோஷத்தில் எனக்கு எல்லாம் மறந்து போச்சு. இருங்க, உங்களுக்கு சாப்பிட, குடிக்க எதுவும் எடுத்திட்டு வரேன்.” என்று அவள் எழ எத்தனித்த வேளையில் சூடான காஃபியும், சிற்றுண்டியும் கைகளில் ஏந்தியபடி அவர்கள் முன் வந்து நின்றான் தேவா.
அன்று காலை அவன் பேசியதை நினைத்து நிலாவுக்கு அவனைப் பார்க்கச் சற்று சங்கடமாக இருந்தது.
அதைப் புரிந்து கொண்ட தேவா, “காலையில் நான் பேசினதையே நீங்க இன்னும் நினைச்சிட்டு இருக்கீங்க போல?” என்று கேட்க நிலாவும் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஆமா… இப்ப அதுக்கு என்ன? நீங்க பேசினது அப்படி” என்றாள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு.
தேவா இழுத்துப் பெருமூச்சு விட்டவன், “சாரி நிலா மேடம். எனக்கு வேற வழி தெரியல… இந்த முடிவு ஆர்த்திக்காக மட்டும் இல்ல, அவளுக்காகவும் தான். இப்படியே விட்டா அவ எந்த முடிவும் எடுக்காம நாளைத்தான் கடத்திட்டு இருப்பா… அவளை வழிக்குக் கொண்டு வர இதுதான் சரியான வழி, சரியான நேரமும் கூட” என்றான் தேவா உறுதியாக.
அவன் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்று நிலாவுக்குப் புரிந்தாலும், தங்கையின் மனது எந்த வகையிலும் கஷ்டப்பட்டு விடக் கூடாது என்று ஒருபக்கம் அவள் மனம் அடித்துக் கொண்டது.
“இன்னைக்கு உங்க ப்ரண்ட் யுக்தா என்னைப் பார்க்க வரச்சொல்லி இருந்தாங்க…” என்று தேவா சொன்னதைக் கேட்டதும் மூவரும் ஒரே நேரத்தில், “யுகி என்ன சொன்னா?” என்று கோரஸாகக் கேட்டனர்.
ஆர்த்திக்குக் கூட இந்த விஷயம் இப்போதுதான் தெரியும் என்பதால் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவள் கண்கள் தம்பியைப் பார்த்துக் கொண்டிருந்தது.
தேவா, யுக்தாவுடன் பேசியது அனைத்தையும் சொன்னவன், “நாளைக்குச் சந்தியாவை அவங்களைப் பார்க்க வரச்சொல்லி இருக்காங்க.” என்று கூடுதல் தகவலையும் கொடுத்தான்.
அனைத்தையும் கேட்ட நிலா, “அவ உங்ககிட்டப் பேசி இருக்கும்போதே, எவ்ளோ தைரியம் இருந்தா எங்ககிட்ட அப்படிப் பேசி இருப்பீங்க… யுகிக்கு மட்டும் நீங்க பேசினது தெரிஞ்சது…” என்று மிரட்டும் தொனியில் சொல்ல தேவா இதழ் வளைத்துச் சிரித்தவன், “அவங்க கிட்டயும் இதையே தான் சொன்னேன்.” என்றுச் சொல்ல மூவருக்கும் அதிர்ச்சி.
“என்ன, நீங்க இப்படி சொல்லியும் யுகி ஒன்னுமே சொல்லலியா?” என்ற தேவியைப் பார்த்து, “அந்தப் பிடாரிக்கு நீதான் சரியான ஆள்னு சொன்னாங்க…” என்று சொல்ல நால்வரும் சிரித்து விட்டனர்.
“அதுவும் சரிதான், அந்த வேதாளத்துக்கு ஏத்த விக்ரமாதித்தன் நீங்க தான்.” என்ற தேவியைப் பொய்யாக முறைத்த தேவா, “ஹலோ… இதுவரை அவ உங்க தங்கச்சி, நீங்க அவளை எப்படி வேணும்னாலும் கிண்டல் பண்ணி இருக்கலாம். பட் இப்ப அவ என்னோட பொண்டாட்டி… சோ இனிமே யாரும் அவளைப் பிடாரி, வேதாளம்னு எல்லாம் சொல்லக் கூடாது.” என்றவன் முகத்தில் கோபம் இல்லாமல் இருந்தாலும், அவன் வார்த்தைகளில் இருந்த அழுத்தமே சொன்னது, அவனவளை யாரும் கிண்டல் செய்வதை அவன் விரும்பவில்லை என்பதை.
அதைப் புரிந்து கொண்ட தேவி, “சாரி தேவா… சின்ன வயசில் இருந்து இப்படியே பழகிடுச்சு… எங்களுக்கு இன்னமும் அவ குழந்தை தான். இப்ப நீங்க சொல்லும் போது தான் அவ வளர்ந்துட்டானே புரியுது.” என்றவளின் கண்கள் கலங்கிவிட தேவாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“அச்சோ மேடம்… ப்ளீஸ் ஃபீல் பண்ணாதீங்க. எப்பவும் அவ உங்க தங்கச்சி தான். நீங்க அவளை எப்படி வேணும்னாலும் கிண்டல் பண்ணலாம். வேணும்னா ஏஞ்சல், அழகி, பட்டுக்குட்டி, புஞ்சுகுட்டு அப்படி இப்படின்னு எதாவது சொல்லிக் கூட கிண்டல் பண்ணுங்களேன். நான் எதுவும் கேட்கமாட்டேன்” என்று தேவியை வம்பிழுக்க, கண்களைத் துடைத்துக் கொண்ட தேவி, “ஏதே ஏஞ்சல், அழகியா? உங்களுக்குக் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லயா? கோடி ரூபா கொடுத்தாலும் அப்படி அண்டப் புளுகு புளுக மாட்டா இந்தத் தேவி…” என்று சொல்ல தேவாவால் சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டுச் சிரித்தான்.
அவன் சிரிப்பதையே கண்களில் நீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.
“நீ இப்படிச் சிரிச்சு எத்தனை வருஷம் ஆகிடுச்சுடா… அப்பா இறந்த பிறகு நீ இப்படி மனசு விட்டுச் சிரிச்சு நான் பார்த்ததே இல்ல…” என்றவளுக்குக் குரல் கரகரக்க, அக்காவை ஆதரவாக அணைத்துக் கொண்டான் தேவா.
மூவரும் ஆர்த்தியிடம் சொல்லிட்டுக்கொண்டு கிளம்பும் போது, “நிலா மேடம், ஒரு நிமிஷம்.” என்ற தேவா ஒரு பையை அவளிடம் கொடுத்தான்.
நிலா என்ன என்பது போல் பார்க்க, “இது அவளுக்கு…” என்றான் சிறு புன்னகையுடன்.
நிலா அந்தப் பையைப் பிரித்துப் பார்க்க, அதில் சந்தியாவுக்குப் பிடித்த திரட்டுப் பாலும், ரசகுல்லாவும் இருந்தது.
“ம்ம்ம்… இங்கப் பாருங்கடி, என்ன பண்ணா அவளை இவரு வழிக்கு இழுக்கலாம்னு சரியாப் புரிஞ்சு வச்சிருக்காரு… பொண்டாட்டிக்குப் புடிச்சது எல்லாத்தையும் ஃபிங்கர்டிப்ல வச்சிருக்காரு…” என்று தேனு, தேவாவின் காலை வாரிவிட, தேவா முகத்தில் லேசாக வெட்கம் எட்டிப் பார்த்தது.
“ம்ம்ம், பின்ன என்ன பண்றது? அவதான் எங்களுக்குச் சோறு தான் முக்கியம் சங்கத்துத் தலைவியாச்சே... அப்ப அந்த ரூட்ல போனா தானே அவளைக் கரெக்ட் பண்ண முடியும்.” என்றதும் அங்குச் சிரிப்பலை பரவியது.
“சரி தேவா, நாங்க கிளம்புறோம்.” என்றவர்கள் ஆர்த்தியிடம், “எது வேணும்னாலும் ஃபோன் பண்ணு ஆர்த்தி. ஹாஸ்பிடல் போகும் போது சொல்லு. எங்க மூணு பேர்ல யாராவது வருவோம் சரியா…” என்றவர்கள் அங்கிருந்துச் செல்ல, ஆர்த்திக்கும் தேவாவுக்கும் மனது நிறைந்து போனது.
“சந்தியா ரொம்ப லக்கி இல்ல தேவா?” என்று ஆர்த்தி சொல்ல தேவாவின் தலை ஆமாம் என்று ஆடியது.
“இப்பப் புரியுது ஆர்த்தி… அவ ஏன் என்னை ஏத்துக்க இவ்ளோ யோசிக்கிறான்னு. எங்க அவ குடும்பத்துக்கும் அவளை நேசிக்கிறவங்களுக்கும் என்னால், எங்க உறவால் எதுவும் மனக் கஷ்டம் வந்திடுமோன்னு பயப்படுறா” என்றவன் ஒரு கணம் நிறுத்து, “அதுவும் நியாயம் தானே… என்ன இருந்தாலும் நான் அவளுக்கு” என்று ஏதோ பேச வந்தவன் வாயைத் தன் கைகொண்டு மூடினாள் ஆர்த்தி.
“பழசு எதையும் பேசாத… இப்ப இருக்கற நிலையைப் பத்தி மட்டும் யோசி. உன்னைப்பத்தி, சந்தியா பத்தின சிந்தனை மட்டும் தான் உனக்குள்ள இருக்கணும். வேற எதைப் பத்தியும் யோசிக்காம அவளைச் சீக்கிரம் நம்ம வீட்டுக்குக் கூட்டிவர வழியைத் தேடு” என்றவள் உள்ளே சென்றுவிட தேவா, சந்தியாவைப் பற்றி யோசித்தபடியே அமர்ந்து விட்டான்.
நாளை முதல் அவளை எப்படி தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பதைப் பற்றி அவன் யோசித்துக்கொண்டு இருக்க, இங்க ஒருவன் சந்தியாவையும், தேவாவையும் கொல்லும் திட்டத்தை போட்டு, அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தான்.