உன் விழியில் கைதானேன் 8
விழி 8
அன்றும் வழக்கம் போல் சந்தியாவைப் பின்தொடர்ந்து வந்தான் தேவா.
அவள் காரில் இருந்து இறங்கி, திரும்பி இவனைப் பார்த்து முறைத்து விட்டுச் செல்ல, அவளின் கோபத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.
’முறைச்சிட்டா போற… போடி போ… இன்னைக்கு இருக்கு உனக்கு’ என்றவன் உதட்டில் குறும்புப் புன்னகை மலர்ந்தது.
சந்தியா அவள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளிடம் வந்த வைஷ்ணவி, “சந்தியா, இன்னைக்கு ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்காம். கான்ஃபரன்ஸ் ரூம்ல இருக்கற சிஸ்டம் எல்லாத்தையும் செக் பண்ணி பக்காவா வைக்கணும்னு பாஸ் சொன்னாரு.” என்று சொல்ல, சலிப்பாக அவளைப் பார்த்த சந்தியா,
“அந்தத் தேங்கா நார் மண்டையனுக்கு வேற வேல இல்லியாடி… எப்பப்பாரு வேலை ஏவிட்டே இருக்கான். போன வாரம் தானே அங்க இருந்த சிஸ்டம் எல்லாம் ரெடி பண்ணி வச்சேன். அதுக்குள்ள என்னவாம்? அந்தாளுக்குக் கொஞ்சம் கூட நாலேஜ் இல்ல… ஆனா, அந்தாளைப் போய் இப்ப்டி பொறுப்பான பதவியில் வச்சிருக்காரு நம்ம எம்.டி” என்றவளைப் பார்த்துச் சிரித்த வைஷ்ணவி, “ஏய் மெதுவாப் பேசுடி… அந்த ஆள் காதுல விழுந்தது, நீ அவ்ளோதான்.” என்று அவளை எச்சரிக்க,
“ப்ச்ச்… கேட்டா கேக்கட்டுமே… மிஞ்சிப் போனா என்ன செஞ்சிடுவாரு உன்ற பாஸூ, வேலையை விட்டுத் தூக்குவாரு. அவ்ளோதான… அப்படி நடந்தால் சந்தோஷம் தான். எனக்கே இந்த வேலையை விட்டுச் சீக்கிரம் போனால் நல்லா இருக்கும்னு தான் தோணுது. தினமும் அந்த தேங்காநார் மூஞ்சியப் பார்த்துப் பார்த்து, எனக்கு இப்பெல்லாம் கனவுல பூச்சாண்டி வர்றதில்ல, இந்த ஆள் மண்டை தான் கனவு வருது. நிம்மதியா தூங்கக்கூட முடியல” என்று சகித்துக் கொள்ள, “ அந்தாளு நம்ம எம்.டியோட சொந்தக்காரன் சந்தியா. அதான் ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாட்டியும், அந்தாளை இங்க வச்சிருக்காரு” என்றாள் வைஷ்ணவி.
“ம்ம்ம்…” என்று பெருமூச்சு விட்ட சந்தியா, “எல்லாம் என் தலையெழுத்து” எனப் புலம்பியபடியே அந்தத் தேங்காய் நார், ச்சீ… அவளின் மேலாளர் சொன்ன வேலையைப் பார்க்கச் சென்றாள்.
கணினிகள் அதன் செயல்பாடு, இணைப்புகள் என்று அனைத்தையும் சரிபார்த்து விட்டுத் திரும்பியவள், அங்கு நின்றிருந்தவனைக் கவனிக்காமல், அவன் மீது மோதி கீழே விழப்போக, அவளை இடையோடு சேர்த்துப் பிடித்து இழுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான் தேவா.
அங்கே அவனைச் சற்றும் எதிர்பார்க்காத சந்தியா, அவனை விழி விரித்துப் பார்த்தது பார்த்தபடியே நிற்க, மீண்டும் ஒருமுறை அவளின் கருந்துளை விழியில் விரும்பியே விழுந்தான் தேவா.
“என்ன மேடம்… என்னோட சர்ப்ரைஸ் எப்படி இருக்கு?” என்று அவளைப் பார்த்துக் கண்ணடிக்க, அதில் தன்னிலை மீண்டவள் அவன் பிடியில் இருந்து விலகி, “நீ இங்க என்னடா பண்ற?” என்று பதட்டமாகக் கேட்டவளின் விழிகள், யாரும் தங்களைப் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்த அறையின் வாசலில் பதிய, அவளின் பயத்தைப் பார்த்து இதழ்களுக்குள் சிரித்தவன், “இதென்ன கேள்வி? உன்னைப் பார்க்கதான் வந்தேன்.” என்றான் அலட்சியமாக.
அவன் பதிலில் அவனைத் தீயாக முறைத்தவள், “டேய், வர வர உன்னோட அட்ராசிட்டி அதிகம் ஆகிட்டே போகுது. இதெல்லாம் யார் கொடுக்குற தைரியம்னு எனக்குத் தெரியும்.” என்று மனதில் தன் குடும்பத்தைத் திட்டியவள், “முதல்ல இங்கிருந்து வெளிய போடா” என்று அவள் கத்திய நேரம், யாரோ அந்த அறைக்கதவைத் திறக்கும் ஓசை கேட்கச் சட்டென, தேவாவைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து பெரிய மேசையின் கீழ் மறைத்துக் கொண்டாள்.
“போச்சு போச்சு… யாராச்சும் இப்படி இங்க நம்மளை ஒண்ணாப் பார்த்தால் அவ்ளோதான். பூ வச்சுப் புடவை கட்டி, மாலை போட்டு என் மரியாதையை ஃபைட்ல வித்தவுட்ல ஏத்தி வெளிநாட்டுக்கு அனுப்பிடுவாங்க… அதுவும் அந்த வைஷூ மட்டும் உன்னை இங்கப் பார்த்தா… கேக்கவே வேணாம். மண்ணைப் போட்டு என்னை மூடிடு மாமேன்னு சொல்லிட்டு நானே குழிக்குள்ள படுத்துக்க வேண்டியது தான்.” என்று புலம்பிக் கொண்டே இருந்தவள் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன், அடுத்த நொடி துடித்துக் கொண்டிருந்த அவள் இதழ்களைச் சிறையெடுத்திருந்தான்.
அவனது அதிரடி முத்தத்தில், என்ன செய்வது என்று புரியாமல் திகைத்திருந்தவள், பின் தன்னிலை உணர்ந்து அவனிடம் இருந்து தன் இதழ்களை மீட்டுக் கொள்ளப் போராட, ம்ஹூம்! அவன் விடுவதாக இல்லை. கடந்த காலப் பிரிவுக்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக, அனைத்தையும் சேர்ந்து மொத்தமாக அவளிடம் வசூலிக்கும் முடிவோடு, அவளை மொத்தமாகத் தன் முத்தத்தில் மூழ்கடித்திருக்க, சில நொடிகள் அவனுடன் மல்லுக்கட்டிப் பார்த்தவள், தன்னையும் அறியாமல் அவன் முத்தத்தில் மூழ்கிப்போய் விழிகளை மூடிக் கொண்டாள்.
எத்தனை நேரம் அந்த முத்த யுத்தம் நீடித்தது என்று இருவருக்கும் புரியாது போக, ஒருவரில் ஒருவர் மூழ்கி நின்ற நேரம், ஏதோ சத்தம் கேட்டுச் சந்தியா கண்களைத் திறந்து பார்க்க, அங்கு அவன் இல்லை.
’எங்கப் போனான் இவன்? இங்க தான இருந்தான்’ என்று அவனைத் தேடியவள், ‘ஒருவேளை எல்லாம் என்னோட பிரம்மையா இருக்குமா? அவன் இங்க வரவே இல்லயா? நான் தான் அப்படி நினைச்சேனா?” என்றவள் தலையைப் பிடித்துக் கொண்டு, ‘லூசாகிட்டேனா நானு’ என்று புலம்பியவளின் இதழ்களில் அவன் உண்டாக்கிய காயத்தின் எரிச்சல் சொல்லியது, நடந்தது கனவோ பிரம்மையோ அல்ல நிஜம் தான் என்று.
மெதுவாகத் தன் உதட்டை வருடியவள், ‘இல்ல இல்ல… அந்த மலமாடு இங்க வந்திருக்கு. என்னைக் கிஸ் பண்ணி இருக்கு, அதான் லிப்ஸ்ல இந்தக் காயம் வந்திருக்கு. இல்லாட்டி நானே என் லிப்ஸ்ல கிஸ் பண்ணிக் கடிச்சிக்குவேனா என்ன?’ என்றவள்,
இடுப்பில் கை வைத்து, ‘என் ஆஃபீஸ்குள்ளே வந்து கிஸ் பண்ணிட்டு சைக்கிள் கேப்ல எஸ்கேப் ஆகிட்டானே கேடி…’ என்று அவள் வாய் முணுமுணுத்தாளும் மனமோ, ‘அவன் கேடின்னா நீ யாருடி. அவன் கிஸ் பண்ணும்போது நீ என்ன சும்மாவா இருந்த, நீயும் தானே அப்படியே மயங்கிப்போய் இருந்த…’ என்று கேட்ட மனசாட்சியின் கேள்வியில் பேந்தப் பேந்த முழித்தவள், “அதெல்லாம் நான் ஒன்னும் மயங்கி எல்லாம் இருக்கல… அந்தப் பக்கி என்னை அழுத்திப் புடிச்சிருந்தது. அதான் விலக முடியல.’ என்று சப்பைக்கட்டு கட்ட, ‘வாயைத் திறந்தாலே பொய்யி’ என்று அவள் மனசாட்சி அவளைக் காரித் துப்பி விட, வழக்கம் போல் அதைத் துடைத்துக் கொண்டாள் சந்தியா.
‘அது சரி… கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள இந்த மலமாடு எங்கப் போச்சின்னு தெரிலயே?’ என்று யோசிக்கும் போது, “வாட் ஆர் யூ டூயிங் ஹியர் சந்தியா?” என்ற அவளின் மேலாளரின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவள், அங்கு அவள் மேலாளருடன் நின்றிருந்த தேவாவைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.
“மிஸ் சந்தியா… உங்களைத் தான் கேக்குறேன்” என்று அவளின் பாஸ் அலற, “எஸ் சார்” என்றவள், “நீங்க தான் ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்கு, சிஸ்டம் எல்லாம் சரியா பங்க்ஷன் ஆகுதான்னு செக் பண்ணச் சொன்னீங்க…” என்றாள் பொய்யாகச் சிரித்தபடி.
“ஓஓஓ… எஸ், எஸ்… நான் மறந்தே போயிட்டேன்.” என்றவர், “எல்லாம் ஒகே தான?” என்று கேட்க அவளும், “போன வாரம் இருந்த மாதிரியே அப்படியே தான் இருக்கு சார்… எந்த சேஞ்சும் இல்ல…” என்று சத்தமாகச் சொன்னவள், ‘அப்படியே உன்னை மாதிரியே உருப்படியா எந்த சேஞ்சும் இல்லாம’ என்று மெதுவாகச் சொல்ல, அது தேவாவின் காதில் தெளிவாக விழ, ‘இவளுக்கு வாய் அடங்கவே அடங்காது.’ என்றவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
“ஓகே, நீங்க போங்க” என்றவர், “வாங்க மிஸ்டர்.தேவா, நம்ம பிஸினஸ் டீல் பத்திப் பேசலாம்.” என்றவர் தேவாவை அழைத்துச் செல்ல, சந்தியாவைக் கடக்கும் நேரம் அவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணை அடித்த தேவா, ஒரு பறக்கும் முத்தத்தை அவளிடம் பறக்கவிட்டுச் செல்ல, சந்தியா நெஞ்சில் கைவைத்துக் கொண்டாள்.
சந்தியா தன் கேபினுக்கு வந்தவள் தன் போக்கில், ‘தினமும் வெளிய இருந்து இம்சை பண்ணது போதாதுன்னு இப்ப உள்ளேயே வந்துட்டான் பிராடு. இன்னும் என் வீட்டுக்குள் மட்டும் தான் இவன் வரல… இப்படியே விட்டா அங்கயும் வந்துடுவான் போல.’ என்று புலம்பியபடியே இருக்க வைஷ்ணவி, அவளைக் குழப்பமாகப் பார்த்தவள், “என்னடி ஆச்சு? ஏன் இப்படிப் புலம்பிட்டு இருக்க?” என்று கேட்க அவளை எரிச்சலாகப் பார்த்த சந்தியா, “ம்ம்ம் வேண்டுதல்! போடி போய் வேலையைப் பாரு… இருக்கற கடுப்புல மேல விழுந்து கடிச்சிடப் போறேன்.” என்றது தான், வைஷ்ணவி ரெண்டடி பின்னால் சென்றவள், “ஏன்டி புலம்புறேன்னு கேட்டது ஒரு குத்தமா?” என்று அப்பாவியாகக் கேட்க, சந்தியா முறைத்த முறையில் வாயை மூடிக்கொண்டு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் வைஷ்ணவி.
சிறிது நேரம் கழித்துச் சந்தியாவை அழைத்திருந்தார் அந்தத் தேங்காய் நார் மேலாளர்.
’வர வர இந்தாளு இம்சை தாங்கல... மண்டையில் இருக்கற அந்தக் கொஞ்ச நஞ்ச நாரையும் ஒருநாள் பிச்சிடுறேன் பாரு…’ என்று கடுகடுத்தவள் அங்குச் சென்றாள்.
“சந்தியா நம்ம கிளையன்ட் லேப்டாப்ல ஏதோ பிரச்சனையாம், அது என்னன்னு பாரு.” என்றவர் தன் முன் இருந்த லேப்டாப்பை அவளிடம் நகர்த்தி வைக்க, சந்தியா திரும்பி தேவாவைப் பார்த்து கண்கள் சுருக்கி முறைத்தபடியே, “என்ன பிராப்ளம் சார்…” என்றாள் அந்தச் சாரில் ஒரு அழுத்து அழுத்தி.
அவளின் அவஸ்தையில் இதழ் தாண்டி வரத் துடித்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான் தேவா.
“மிஸ்.சந்தியா” என்றவன் அந்த மிஸ்ஸை அழுத்திச் சொல்லி, மறுபடியும் அவளின் முறைப்பைப் பரிசாகப் பெற்றுக் கொண்டவன், “என்னன்னு தெரியல, திடீர்னு ஸ்க்ரீன் ஹேங் ஆகிடுச்சு. இதுல நான் முக்கியமாய் நினைக்கும் நிறைய விஷயம் இருக்கு, ப்ளீஸ் என்னன்னு பாருங்களேன்” என்றவன் பார்வையில் தெரிந்த குறும்பை எரிச்சலோடு பார்த்தவள், நின்ற வாக்கிலேயே கணினித் திரையைப் பார்த்தவளுக்கு வந்த கோவத்தில் அந்தக் கணினியை எடுத்து அவள் பாஸ் தலையில் நச்சென்று அடிக்கலாமா? என்ற அளவுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.
‘டேய், உன்னை இத்தனை நாள் தேங்காய்னு மட்டும் தான்டா நினைச்சிட்டு இருந்தேன். இப்ப தான் தெரியுது. நீ எவ்ளோ பெரிய மாங்கான்னு… அவன் பாஸ்வேர்டு போட்டு லேப்டாப்பை லாக் பண்ணிட்டு பிராப்ளம்னு சொல்றான். அது கூடத் தெரியாம, என்னைக் கூப்பிட்டு இருக்கியே… நீ எல்லாம்…’ என்று மனதில் அவனைக் கழுவிக் கழுவி ஊத்தியவள், தேவாவையும் முறைக்கத் தவறவில்லை.
“என்ன சந்தியா… என்னாச்சு? லேப்டாப்பை சரி பண்ணிட்டியா?” என்று அதிகாரமாகக் கேட்டவரை முறைக்கக்கூட முடியாது ஈ என்று இளித்தவள், “சரி பண்ணிட்டேன் சார். உங்க கிளையன்ட்டை பாஸ்வேர்ட் போட்டு ஓபன் பண்ணச் சொல்லுங்க சார்.” என்றாள் எரிச்சலை மறைத்துக் கொண்டு.
“இட்ஸ் ஓகே மிஸ்.சந்தியா, நான் பாஸ்வேர்ட் சொல்றேன். நீங்களே ஓபன் பண்ணி எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க” என்றவன் யாரும் பார்க்காமல் அவளைப் பார்த்துக் கண்ணடிக்க, அவளுக்கோ உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது.
“சரி சார்… பாஸ்வேர்ட் சொல்லுங்க.” என்றாள் காதில் புகை வராத குறையாக.
அவள் லேப்டாப் திரையைப் பார்த்தபடி இருக்க, ஒரு முழு நிமிடம் அவளை ரசனையாகப் பார்த்தவன், “ஐ லவ் யூ” என்றானே பார்க்கலாம். சந்தியாவோடு சேர்த்து அவளின் மேலாளரும் அதிர்ந்து விட்டார்.
“மிஸ்டர்.தேவா, என்ன சொல்றீங்க நீங்க?” என்று அதிர்ச்சியில் கேட்டவரை நிதானமாகப் பார்த்தவன், “அதுதான் சார் பாஸ்வேர்ட். அதைத்தான் சொன்னேன்” என்றான் வெகு கூலாக.
அதைக்கேட்டு அவர் சத்தமாகச் சிரிக்க, சந்தியா முகத்தில் கடுகு போட்டால் வெடித்துவிடும் அளவுக்குக் கோவத்தில் சிவந்திருந்தது.
சந்தியாவைத் திரும்பிப் பார்த்த தேவா, “ ஐ லவ் யூ சந்தியா.” என்று மறுபடியும் சொன்னவன், “அதுதான் பாஸ்வேர்ட் போடுங்க” என்றவன் அவளைப் பார்த்து மீண்டும் கண்ணடிக்க அவளோ, ‘மவனே, என்னைக்காவது நீ என்கிட்டத் தனியா சிக்காமலா போயிடுவ… அப்ப இருக்குடி உனக்குக் கச்சேரி’ என்று மனதில் கறுவியவள், அவன் சொன்ன பாஸ்வேர்டை போட்டு லேப்டாப்பை திறந்து பார்த்தவள் விழிகள், திரையில் தெரிந்த புகைப்படத்தைப் பார்த்து மலர்ந்து விரிந்து கொண்டது.
பட்டுப்புடவை கட்டி, அளவாக நகையணிந்து, தலைமுடியை அழகாகப் பின்னி, அதில் மல்லிகைப் பூவைச் சூடி இருந்தவள், ஒற்றைக் கண்ணை மூடியபடி, வாயில் கரும்பை வைத்துக் கடித்துக் கொண்டிருந்த சந்தியாவின் நிழல்படம் அழகாக அந்தக் கணினித் திரையை அலங்கரித்து இருந்தது.
அந்தப் படத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவளை, “என்ன சந்தியா, எல்லாம் ஓகே வா?” என்ற குரல் கலைக்கச் சட்டென அந்தக் கணினித் திரையைப் பாதி மூடியவள், “ம்ம்ம், எல்லாம் சரியா இருக்கு.” என்றவளின் விழிகள் தேவாவின் மீதே அழுத்தமாகப் பதிந்திருந்தது.
“ஓகே தேவா சார். மீட்டிங் பர்ஃபெக்டா முடிஞ்சது. நெக்ஸ்ட் வீக் நம்ம எம்.டி இங்க வராரு. அவர் கூடப் பேசிட்டு நம்ம நெக்ஸ்ட் ஸ்டெப் போலாம்.” என்றவர் தேவாவின் கையைக் குலுக்கிவிட்டு வெளியே செல்ல, அவர் பின்னாலேயே சென்ற தேவா சட்டெனத் திரும்பி உள்ளே வந்து, பட்டென்று அவள் இதழ்களில் மீண்டும் அழுத்தமாக ஒரு முத்தத்தைப் பதித்து விலகியவன், “ஹாப்பி கிஸ் அனிவர்சரிடி பொண்டாட்டி.” என்று சொல்ல, சந்தியா இமைக்க மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் அந்த நிலையைக் குறுஞ்சிரிப்போடு பார்த்தவன், “ம்ம்ம்… அப்ப உனக்கும் இந்த டேட் ஞாபகம் இருக்கு… அப்படி தானே?” என்று துள்ளலான குரலில் கேட்டான்.
அவன் கேள்வியில் அவனைத் தீயாக முறைத்தவள், “அதெல்லாம் எனக்கு ஒரு மண்ணும் ஞாபகம் இல்ல... இது என்னோட ஆஃபீஸா இருக்கறதுனால நீ இப்பத் தப்பிச்சிட்ட… இல்லாட்டி நீ செஞ்ச வேலைக்கு உன்னை…” என்று அவள் பல்லைக் கடிக்க, அவள் இதழ்களைத் தன் விரல்களால் அழுத்திப் பிடித்தவன், “என்னடி செய்வ?” என்றான் திமிராக.
பட்டென்று அவன் கையில் ஒரு அடியைப் போட்டவள், “ஒழுங்கா இங்கிருந்து போடா… இல்ல நான் பத்ரகாளி ஆகிடுவேன்.” என்று கத்த, அவளைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தபடி நகர்ந்தவன், சட்டையைப் பிடித்து இழுத்தாள் சந்தியா.
அவளைத் திரும்பிப் பார்த்தவன், “என்னடி… இன்னொரு கிஸ் வேணுமா?” என்று குறும்பாகக் கேட்க, அவனை வெட்டவா குத்தவா என்பதுபோல் பார்த்தவள், “உன்னைக் கொல்லப் போறேன் பாரு…” என்றவளின் முகத்தில் இருந்த தீவிரத்தை உணர்ந்தவன், “சரி என்னன்னு சொல்லு” என்றான் விளையாட்டை விடுத்து.
“இந்தக் கம்பெனியோட எந்த டீலும் உனக்கு வேணாம்.” என்றாள் கட்டளையாக.
“ஏன்?” என்றான் அவன்.
“வேணாம்னா வேணாம்… அவ்ளோதான். கேள்வி எல்லாம் கேக்காத…” என்றவளைக் கூர்மையாகப் பார்த்தவன், “எனக்குப் புரிஞ்சிடுச்சு” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றவன், நின்று திரும்பி “ஒன்ஸ் அகைன் ஹேப்பி கிஸ் அனிவர்சரி” என்றுவிட்டுச் செல்ல, இதுவரை கோபத்தில் சிவந்திருந்த அவள் முகம் இப்போது வெட்கத்தில் சிவந்து விட்டது.
மனதில் மீண்டும் மீண்டும், ‘அப்ப உனக்கும் இந்த நாள் ஞாபகம் இருக்கில்ல?’ என்று அவன் கேட்டதே ஓட, ‘என்னால எப்படிடா நம்ம முதல் முத்தத்தை மறக்க முடியும்?’ என்றவளுக்கு ஒரு கணம் அந்த நாளின் நினைவுகள் இதயத்தைக் குளிரச்செய்த அதேநேரம், அன்றைய நாளுக்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அவள் இதயத்தைத் தீயாகச் சுட்டுப் பொசுக்கியது.