உன் விழியில் கைதானேன் 9

 விழி 9



அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சந்தியாவின் முகம், கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் சம்பவத்தை நினைத்துக் குழம்பி இருந்தது.


அவளின் முகத்தைப் பார்த்தே அவள் மனமறிந்த சூர்யா, “என்னாச்சு சந்தியா? எதுவும் பிரச்சனையா? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்று கேட்டான் அக்கறையாக.


அதற்கு அவன் அருகில் இருந்த நிலாவோ, “இதென்ன கேள்வி? இவளுக்கு இருக்க ஒரே ப்ராப்ளம் தேவா தான். வேற என்ன புதுசா வந்திடப் போகுது.” என்றவளைப் பார்வையால் அடக்கிய சூர்யா, “நீ சொல்லுமா, எதுவும் ப்ராப்ளமா?” என்று மீண்டும் கேட்டான் சூர்யா.


முதலில் சூர்யாவிடம் நடந்ததைச் சொல்ல நினைத்த சந்தியா, பின் ஏற்கனவே தன்னை நினைத்து வருத்தத்தில் இருக்கும் தன் அக்கா, மாமாவுக்கு இதையும் சொல்லி பயமுறுத்த வேண்டாம் என்று நினைத்தவள், “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல மாம்ஸ்… கொஞ்சம் வேலை டென்ஷன், அவ்ளோதான்!” என்றாள் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு.


அவளை ஒரு கணம் கூர்மையாகப் பார்த்த சூர்யா, “உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் என்கிட்ட இல்ல, அர்விந்த்கிட்டச் சொல்லிடு சந்தியா… எதையும் மறைச்சு வைக்காத.” என்று அழுத்தமாகச் சொன்னவனை இமைகள் உயர்த்திப் பார்த்தவளுக்குப் புரிந்தது, சூர்யா எதை மனதில் வைத்து இதைக் சொல்லுகிறான் என்று.


“இல்ல மாமா… இனி ஒருமுறை அந்தத் தப்பு நடக்காது.” என்றவள் முகத்தில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்துச் சூர்யாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட, எழுந்து வந்து அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டவன்,‌ “நான் உன்னைக் காயப்படுத்த அப்படிச் சொல்லலமா. உனக்காக நாங்க எல்லாம் இருக்கோம்னு புரியணும்னு தான் அப்படிப் பேசிட்டேன்.” என்றவன், “சாரி” என்று சொல்ல அவன் அணைப்பில் இருந்து விலகியவள், “ப்ச்ச்… என்ன மாம்ஸ் இது? என்கிட்டப் போய் சாரி எல்லாம் கேட்டுட்டு… நீங்க எது சொன்னாலும் என் நல்லதுக்கு தான் சொல்லுவீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். தேவையில்லாம எதுக்கு சாரி எல்லாம் கேட்டுட்டு… அப்புறம் என்ற அப்பாடக்கர் புருஷனையே உன்கிட்டச் சாரி கேக்க வச்சிட்ட இல்லடின்னு, மூக்குல புசுபுசுன்னு காத்தடிச்சிட்டே இந்தப் பிசாசு, உங்க போண்டா டி என்னை அடி வெளுக்க வருவா… அதுக்குதான் ப்ளான் பண்றீங்களா?” என்றவள், நிலா, “அடிங்கு பிடாரி…” என்று அடிக்க வருவதற்குள் தன்னறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.


இங்கு நிலாவோ, “நைட் கொட்டிக்க வெளிய வந்து தானடி ஆகணும். அப்ப வச்சிக்கிறேன் உன்னை.” என்றவள் சூர்யாவைத் திரும்பிப் பார்க்க, அவனோ சத்தமாகச் சிரித்துக் கொண்டிருக்க, அவனை முறைத்தவள் “அவ என்னைப் பிசாசுன்னு சொல்லிட்டுப் போறா… நீங்க சிரிக்கிறீங்களா? உங்களுக்கு நைட் சோறு கட்” என்று விட்டுச் செல்ல, போகும் மனைவியின் செல்லக் கோவத்தை ரசித்துக் கொண்டிருந்தான் சூர்யா.


அறைக்குள் வந்த சந்தியா மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தாள். அந்த நேரம் அவளது அலைபேசி அடிக்க, அதை எடுத்துப் பார்த்தவள், முகத்தில் தன் குழப்பத்திற்கான வெளிவு கிடைத்தது.


அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க க்கா” என்றாள்.


“எப்படி இருக்கடி நீ? அன்னைக்குப் பிறகு ஒரு ஃபோன் இல்ல, மெசேஜ் இல்ல… என்ன நினைச்சிட்டு இருக்க நீ” என்றாள் யுக்தா அதிகாரமாக.


“அக்கா ப்ளீஸ்கா. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். உங்களுக்கே என் நிலைமை தெரியும் இல்ல. தெரிஞ்சே நீங்க இப்படிப் பேசினால் எப்படி?” என்றாள் சலுகையாக.


அதைக்கேட்டு மென்மையாகச் சிரித்த யுக்தா, “சரி சரி… ரொம்பக் கொஞ்சாத… கொஞ்ச நாள் தான் உனக்கு டைம். மறுபடியும் நான் உன்னைப் பார்க்கும்போது உன்னோட முடிவு என்னன்னு எனக்குத் தெரிஞ்சாகணும். புரியுதா?” என்று கேட்க, சந்தியாவின் தலை மேலும் கீழும் ஆடியது.


“என்னடி, பதிலைக் காணும்” என்ற யுக்தாவுக்கு, “சரிக்கா… சீக்கிரம் என் முடிவைச் சொல்லறேன்” என்றாள் சந்தியா புன்னகையுடன்.


“சரி..‌. ஒழுங்கா சீக்கிரம் ஒரு முடிவுக்கு வா” என்றவள் அழைப்பைத் துண்டிக்கும் நேரம், “அக்கா…” என்றாள் சந்தியா.


“என்னடி?” என்றாள் யுக்தா.


“லாஸ்ட் டூ டேஸா என்னை யாரோ ரெண்டு பேர் ஃபாலோ பண்றாங்கக்கா. நானும் முதல்ல அதைப் பெருசா எடுத்துக்கல… ஆனா, அவனுங்க டே அன்ட் நைட்டா என்னையே பார்த்துட்டு இருக்காணுங்க…” என்றாள்.


“அவனுங்களை முன்னப் பின்ன நீ பார்த்திருக்கியா?” என்று கேட்டாள் யுக்தா.


“இல்லக்கா… நான் பார்த்தது இல்ல. ஆளுங்களைப் பார்த்தா நார்த் இந்தியன் மாதிரி இருக்காணுங்க… சின்னப் பசங்க தான். ஒரு இருபது வயசு தான் இருக்கும்.” என்றாள்.


“ஒருவேளை, இது அந்த தேவா வேலையா இருக்குமோ? உன்னோட செக்யூரிட்டிக்கு அவன் யாரையும் அனுப்பி இருப்பானா?” என்று கேட்டாள்.


“இல்லக்கா அப்படி இருக்காது. அதுக்கு வாய்ப்பு ரொம்பக் கம்மி. அப்படியே இருந்தாலும் நைட் டைம்ல, என்னை எதுக்கு வாட்ச் பண்ணனும், தேவாக்கு நல்லாத் தெரியும். என் மாமா வீட்டுக்குள்ள ஒருத்தனும் நுழைய முடியாதுன்னு, அப்படி இருக்க இவனுங்க டே அன்ட் நைட், என்னை வாட்ச் பண்றாங்க. இன்னைக்கு சூர்யா மாமாகூடக் கேட்டாரு. எதுவும் ப்ராப்ளமான்னு? நான் தான் தேவையில்லாம இதைப் பெருசாக்க வேணாம்னு அவர்கிட்ட எதுவும் சொல்லல. ஒருவேளை இவனுங்க?” என்று சந்தியா ஏதோ சொல்ல வர, “எனக்குப் புரியுதுடி.” என்ற யுக்தா சில நொடிகள் யோசித்தவள், “சரி, நீ ஒன்னும் கவலைப்படாத. இதை நான் என்னன்னு பார்க்குறேன்.” என்றாள்.


“சரிக்கா‌‌…” என்ற சந்தியா மேலும் சில நொடிகள் யுக்தாவுடன் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், அவளின் அறை ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்க்க, அங்கு வெளிச் சாலையில் அந்த இரண்டு பேரும் அவர்கள் வீட்டைப் பார்த்தபடி நின்றிருந்தனர். அவர்களைத் தன் கைப்பேசியில் புகைப்படம் எடுத்து யுக்தாவுக்கு அனுப்பியவள், உறங்கச் சென்றாள். ஒருவேளை அப்போதே சந்தியா, சூர்யாவிடம் உண்மையைச் சொல்லி இருந்தால், மறுநாள் நடக்கவிருக்கும் அனர்த்தங்களைத் தடுத்து இருக்கலாமோ என்னவோ?


மறுநாள் காலையில் எழுந்த சந்தியா, மறுபடியும் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க, அந்த இரண்டு பேருடன் மேலும் இரண்டு இளைஞர்கள் நின்றிருந்தனர்.


உடனே அவள் யுக்தாவுக்கு அழைக்க, அவள் ஒரு முக்கியமான வழக்கு விசாரணையில் இருந்ததால் சந்தியாவின் அழைப்பை ஏற்க இயலவில்லை. உடனே யுக்தாவுக்கு சூழ்நிலையைப் பற்றிக் குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்துவிட்டு, குளித்து முடித்து வேலைக்குக் கிளம்பினாள். 


அன்றும் வழக்கம் போல் அவளைப் பின்தொடர்ந்த தேவாவின் கண்களில் பட்டனர் அந்த நான்கு இளைஞர்களும். கண்கள் சுருக்கி அவர்களைப் பார்த்து யோசித்தவன் மனதில், ‘நேத்தும் அதுக்கு முந்தின நாளும் இதுல ரெண்டு பேரை நான் பார்த்தேனே… ஒருவேளை, இவனுங்க இவளை ஃபாலோ பண்றாங்களா?’ என்று யோசித்தவன், அடுத்த கணம் காரில் இருந்து இறங்கி சந்தியாவை நோக்கிச் சென்றவன், “சந்தியா” என்றழைத்தான்.


அவள் திரும்பி என்ன என்பது போல் புருவம் உயர்த்த அவள் அருகில் வந்தவன், “உடனே திரும்பிப் பார்க்காத… அங்க ஒரு நாலு பசங்க நிக்குறானுங்க இல்ல… அதுல ரெண்டு பேர், ரெண்டு நாளா உன் பின்னாடியே வர்றானுங்க” என்று சொல்ல, சந்தியா மெதுவாக தேவாவை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்குத் தெரியும்” என்றாள் நிதானமாக.


அதைக் கேட்ட தேவா, “தெரியும்னு சொல்லிட்டு ஏன்டி அமைதியா இருக்க? நீ வா, அவனுங்களைப் போய் நல்லா வெளுத்து விடுவோம்.” என்று அவள் கையைப் பிடித்து இழுக்க, அவன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்ட சந்தியா, “டேய், கொஞ்சம் அடங்குடா… நான் நேத்தே யுக்தா அக்காகிட்ட‌ இதைப்பத்திச் சொல்லிட்டேன். எல்லாத்தையும் அவங்க பார்த்துப்பாங்க… நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு. சும்மா வந்துட்டான், ஹீரோ மாதிரி சீன் போட” என்று அவள் வழக்கமான துடுக்குத் தனத்துடன் பேச, தேவா அவளை முறைத்தவன், “உன்னைத் திருத்த முடியாதுடி.” என்று தலையில் அடித்துக் கொண்டான்.


“ஈவ்னிங் ஆஃபிஸ் முடிஞ்சதும் வெயிட் பண்ணு. நான் வந்ததும் கிளம்பு. அதுக்கு முன்ன ஆஃபிஸ் விட்டு வெளிய வந்த…” என்று கண்டிப்பான குரலில் சொன்னவன், அவள் அருகில் கொஞ்சம் தள்ளி நின்ற வைஷ்ணவியிடம் தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்தவன், “இவளைக் கொஞ்சம் பார்த்துக்கம்மா… எதுவும் பிரச்சனைன்னா எனக்குக் கால் பண்ணு” என்று உத்தரவாகச் சொன்னவன், அவள் எண்ணையும் வாங்கிக் கொண்டான். 


ஏற்கனவே அவன் துப்பாக்கியைக் காட்டியதில் பயந்திருந்த வைஷ்ணவி சரி என்று தலையை ஆட்டி வைக்க, “ஈவ்னிங் வெயிட் பண்ணு” என்று அழுத்தமாகச் சொன்னவன் அங்கிருந்து நகர, சந்தியா அவனுக்கு இதழைச் சுழித்து ஒழுங்கு காட்டிவிட்டு வைஷ்ணவியுடன் சென்றாள்.


ஏனோ அன்று தேவாவுக்கு ஒருவிதப் பதட்டமாகவே இருந்தது. மாலை மூன்று மணிவரை வேலையில் சரியாகக் கவனம் செலுத்த முடியாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தவன், அதற்கு மேல் முடியாமல் தன் காரை எடுத்துக் கொண்டு சந்தியாவின் அலுவலகம் நோக்கி விரைந்தான்.


அவனுக்கு நன்கு தெரியும். அவன் சொன்னதற்காகவே அவள், மாலை அவன் வருவதற்கு முன்பே வீட்டுக்குக் கிளம்புவாள் என்று. அதனாலேயே அவன் மதியமே அவள் அலுவலகம் சென்றான். 


அங்குச் சென்றவன் சந்தியாவைப் பற்றி விசாரிக்க அவள் வேலை விஷயமாக வைஷ்ணவியுடன் இரண்டு மணிக்கே வெளியே சென்று விட்டாள் என்று தெரிய, அவனின் பதட்டம் எல்லை கடந்தது. கண்களை மூடிக் கை முஷ்டியை இறுக்கியவன், ‘அவளோ சொல்லியும் வெளிய போயிருக்க’ என்று பல்லைக் கடித்தவன், அவள் எண்ணுக்கு அழைக்க, அதுவோ சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.


அதில் மேலும் பதட்டமான தேவா, சந்தியாவுடன் வைஷ்ணவி சென்றிருக்கிறாள் என்றதும் அவள் எண்ணுக்கு அழைக்க நினைத்த நொடி வைஷ்ணவியே தேவாவுக்கு அழைத்திருந்தாள். முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவன், முதலில் கேட்டது “சந்தியா எங்க இருக்கா?” என்றுதான்.


அந்தப் பக்கத்தில் வைஷ்ணவி அழும் சத்தம் கேட்க, தேவாவின் இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறியது.


“ஹலோ வைஷ்ணவி… எதுக்கு அழற? என்னாச்சு?” என்று கேட்க, அவள் அழுகையினூடே, “சா… சார், சந்தியாவ… சந்தியாவ யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்க சார்.” என்றவளுக்கு அழுகையில் நெஞ்சம் விம்மியது.


வைஷ்ணவி சொன்னதைக் கேட்ட தேவாவுக்கு ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது. 


“என்…என்ன சொல்ற நீ… இப்ப அவ எங்க? என்னாச்சு அவளுக்கு?” என்றவன், “நீ இப்ப எங்க இருக்க?” என்று கேட்டான்.


வைஷ்ணவி தான் இருக்கும் இடத்தைச் சொல்ல உடனே அங்கு புறப்பட்ட தேவா, சூர்யாவுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, சூர்யாவுக்கு தலையில் இடி இறங்கிய உணர்வு.


“டேய்… என்னடா சொல்ற நீ?” என்றவனுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.


“பேச நேரம் இல்ல சூர்யா. நான் இப்ப வைஷ்ணவி இருக்கற இடத்துக்கு தான் போறேன். நீங்களும் அங்க வாங்க.” என்றவன் இடத்தைச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, சூர்யா உடனே யுக்தாவுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவளும் அப்போது தான் சந்தியா அனுப்பிய குறுஞ்செய்தியைப் பார்த்தவள், ஆதியை அழைத்துச் சிலரைத் தூக்கச் சொல்லிவிட்டுச் சூர்யா சொன்ன இடத்துக்கு விரைந்தாள்.


அடுத்த பத்து நிமிடத்தில் சூர்யா, யுக்தா, தேவா மூவரும் வைஷ்ணவி சொன்ன காபி ஷாப் முன்னிருந்தனர்.


வைஷ்ணவி தேம்பித் தேம்பி அழுதபடி இருக்க, யுக்தா ஆதரவாக அவள் கையைப் பிடித்துக் கொண்டவள், “ப்ளீஸ் வைஷூ… முதல்ல அழுகையை நிறுத்திட்டு என்ன‌ நடந்துச்சின்னு சொல்லு… அப்பதான் சந்தியாவை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும். நீ இப்படி அழுதுட்டு இருந்தால் டைம் தான் வேஸ்ட் ஆகும்” என்றதும் வைஷ்ணவி கண்களைத் துடைத்துக் கொண்டவள், “இன்னைக்கு மதியம் திடீர்னு எங்க எம்.டி ஆஃபிஸ்க்கு வந்தாரு மேடம்.” என்று சொல்ல மூவரும் அவள் சொல்வதைக் கூர்மையாகக் கவனித்தனர்.


“எம்.டி அடிக்கடி எல்லாம் எங்க ஆபீஸ் வரமாட்டாரு. வருஷத்துக்கு ஒரு தடவை தான் வருவாரு. அப்படி இன்னைக்கு வந்தவரு, சந்தியாவை ஏதோ வேலை இருக்குன்னு வெளிய அனுப்பி வச்சாரு. இன்பாக்ட் அது அவ வேலையே இல்ல. ஆனா, அவர் ஏன் அவளைப் போகச் சொன்னார்னு எனக்குப் புரியல. சந்தியாவுக்கும் இதே டவுட் தான். ஆனா, எம்.டி சொல்லும் போது அதைக் கேட்டுத்தான் ஆகணும்னு கிளம்பினா… இன்னைக்கு எங்க வீட்ல ஒரு பங்க்ஷன். அதுக்காக நான் ஆஃப் டே லீவு எடுத்திருந்தேன். சோ, நானும் சந்தியா கூடவே கிளம்பினேன். வழில எனக்குக் கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருந்துச்சு. அதான் இந்தக் காபி ஷாப் வந்தோம். ஒரு வெயிட்டர் சந்தியா மேல தெரியாம காபி கொட்டிட்டாரு, அதைக் கிளீன் பண்ணா வாஷ் ரூம் போனா, அவ போன ரெண்டு நிமிஷம் கழிச்சு நானும் ஃபேஸ் வாஷ் பண்ணலாம்னு ரெஸ்ட் ரூம் போனேன். அங்க யாரோ சந்தியாவைத் தூக்கிட்டுப் போனதைப் பார்த்தேன். எனக்கு சூர்யா சார் நம்பர் தெரியாது. மார்னிங் தேவா சார் அவர் நம்பர் கொடுத்தாரு… அதான் அவருக்குக் கால் பண்ணேன்.” என்றவள் மீண்டும் அழ ஆரம்பிக்க, யுக்தா அவள் தோளை மெதுவாக வருடியவள், “அவங்க தூக்கிட்டுப் போகும்போது சந்தியா எதுவும் செய்யலியா? ஐ மீன் அவங்ககிட்ட இருந்து தப்பிக்க எதுவும் முயற்சி பண்ணலையா?” என்று கேட்க, வைஷ்ணவி இல்லை என்று தலையாட்டியவள், “அவ கை, காலைக் கூட ஆட்டல மேடம்.” என்றாள் கமறும் குரலில்.


“மே பீ, அவ அசந்த நேரம் மயக்க மருந்து எதுவும் கொடுத்திருப்பாங்க மேடம். இல்லாட்டி அவளை எல்லாம் தூக்குறது இம்பாசிபிள்” என்றான் தேவா.


“யூ ஆர் ரைட் தேவா.” என்ற யுக்தா, “இந்த விஷயத்தை என்னால அபீஷியலா மூவ் பண்ண முடியாது. அதுல நிறைய ப்ராப்ளம் இருக்கு. சோ இதை நானே பர்சனலா ஹேண்டில் பண்றேன்.” என்ற யுக்தாவைப் பார்த்த சூர்யா, “அவளுக்கு ஒன்னும் ஆகாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா, நிலாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப பயந்திடுவா மேடம். அவளுக்கு விஷயம் தெரியறதுக்குள்ள சந்தியாவைக் கண்டு புடிச்சிடுங்க.” என்றவனின் தவிப்பு நிறைந்த குரலே சொன்னது, அவன் உள்மனதின் பயத்தை‌.


"ஷ்யூர், சூர்யா சார். சீக்கிரம் அவளைக் கண்டு புடிச்சிடுவேன். கண்டிப்பா அவளோட எம்.டி தான் அவளை ப்ளான் பண்ணித் தூக்கி இருக்கான். லாஸ்ட் டூ டேஸா யாரோ ரெண்டு பேர் அவளை ஃபாலோ பண்றதாய் சொல்லி இருந்தா. அவளுக்கும் அவ எம்.டி மேல்தான் சந்தேகம். இப்ப வைஷூ சொல்றதை வச்சுப் பார்த்தா அந்தாளு தான் இந்த வேலையைச் செஞ்சிருக்கான்னு நல்லாத் தெரியுது. நான் ஆல்ரெடி ஆதியை அந்த எம்.டியை அன்அபிஷியலா தூக்கச் சொல்லிட்டேன். ஆள் இன்னும் கையில் சிக்கல..‌. டார்க் பண்ணச் சொல்லி இருக்கேன்.” என்ற யுக்தா தன் உதவியாளரிடம், அந்த காபி ஷாப்பின் சி.சி டிவி காட்சிகளை வாங்கிவரச் சொல்ல, தேவா சட்டென அங்கிருந்து எழுந்தவன், “நீங்க உங்க முயற்சியைப் பண்ணுங்க மேடம். நான் என் சந்தியாவைத் தேடிப் போறேன். அவ மேல கைவச்ச யாரையும் நான் சும்மா விடமாட்டேன்.” என்றவன் கண்ணில் தெரிந்த சினத்தைக் கண்டு அவனை முறைத்த யுக்தா,


“நீங்க என்ன யோசிக்குறீங்கன்னு எனக்குத் தெரியும். தேவை இல்லாம எந்தப் பிரச்சினைலயும் இறங்காதீங்க தேவா.” என்று எச்சரிக்க, தேவா அவளைப் பார்த்து அசட்டையாகச் சிரித்தவன், “அவளுக்காக என் உயிரைக் கொடுக்கவும் நான் தயங்க மாட்டேன். அவளுக்கு ஒரு பிரச்சனை வந்தா அடுத்தவன் உயிரை எடுக்கவும் நான் தயங்க மாட்டேன்.” என்றவன் அங்கிருந்துச் செல்ல, முதல் முறையாகச் சூர்யாவுக்கு தேவாவின் வார்த்தைகள் பயத்தைக் கொடுத்தது.


தேவாவின் கோபம் அவன் கைகளில் வெளிப்பட, அவன் ஓட்டிய கார் சாலையில் பறந்தது. யாருடன் எல்லாம் இனி எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது என்று இரண்டு வருடங்களாக ஒதுங்கி இருந்தானோ, இன்று அவர்களிடம் உதவி கேட்க வேண்டிய நிலை தேவாவுக்கு‌. அதுவும் யாருக்காக, அவன் அவர்களை ஒதுக்கி வைத்தானோ, இன்று அவளுக்காகவே அவர்களின் உதவி கேட்கும் சூழ்நிலை வரும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. 


ஆழ்ந்து மூச்செடுத்து தன்னைச் சமன் செய்து கொண்டவன், தன் அலைபேசியை எடுத்தான்.


சந்தியாவுக்கு ஆபத்து என்று தேவா சொன்ன அடுத்த அரைமணி நேரத்தில் அவன் முன் வந்து நின்றனர் அவனது ஆருயிர்த் தோழர்கள்.