உன் விழியில் கைதானேன் 10

 விழி 10


தன் முன்னால் மயக்க நிலையில் படுத்திருந்த சந்தியாவைப் பார்த்து வன்மமாகச் சிரித்த அவளின் முதலாளி கருணா, அவன் அருகில் இருந்த அடியாள்களைப் பார்த்து, “எப்படா, இவளுக்கு மயக்கம் தெளியும்?” என்று கேட்டான்.


“இன்னும் பத்து நிமிஷத்தில் மயக்கம் தெளிஞ்சிடும் பாஸ்.” என்றான் ஒருவன். 


“ம்ம்ம்… மயக்கம் தெளிஞ்சதும் இவளுக்கு இருக்கு… என் கிட்டயே வேலை பார்த்துட்டு, என்னோட கம்பெனிக்கு எதிராவாடி வேலை பார்த்துட்டு இருக்க? நீ பண்றது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்ட இல்ல... இப்போ பார்த்தியாடி, உன்னையே தூக்கிட்டேன்.” என்று சத்தமாகச் சிரித்தவன், “இவ கண்ணு முழிச்சதும் சொல்லுடா… எனக்கு எதிரா எதுவும் செஞ்சா அதோட விளைவு எப்படி இருக்கும்னு இவளுக்குப் புரியணும்.” என்றான் அவளின் உடல் மேல் வக்கிரமாகப் பார்வையைப் பதித்தபடி.


“இவளை என்ன செய்யப் போறீங்க? கொன்னுடப் போறீங்களா பாஸ்?” என்று கேட்டான் ஒருவன்.


“இதென்னடா அறிவு கெட்ட கேள்வி? பார்க்க நல்லாப் பளபளன்னு கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கறவளைக் கடத்திட்டு வந்துட்டு அனுபவிக்காம எந்த முட்டாளாவது கொல்லுவானாடா?” என்றவனின் வார்த்தையை மட்டும் சந்தியா கேட்டிருந்தால், பேசும் அவன் வாயை உடைத்து நாக்கைப் பிடுங்கி வெளியே எறிந்திருப்பாள். ஆனால், அவனின் நல்லநேரம் அவளின் உடலில் அவர்கள் கொடுத்த மருந்தின் வீரியம் இன்னும் குறையாமல் இருந்ததால் அவன் வாய் தப்பியது. 


“சரி… இவ முழிச்சதும் சொல்லுங்க” என்ற கருணா அந்த அறையில் இருந்து வெளியே வர, அப்போது அங்கு வந்தான் கருணாவின் நண்பன் ரவி.


“என்னடா கருணா… ஏதோ பொண்ணைத் தூக்கணும்னு ஆள் கேட்டிருந்தியே… வேலை நல்லபடியா முடிஞ்சுதா?” என்று கேட்டான் அவன்.


“ம்ம்ம்… எல்லாத்தையும் கரெக்ட்டா முடிச்சிட்டானுங்க உன்னோட பசங்க… அவ இப்ப இங்க தான் இருக்கா… இன்னும் மயக்கம் தெளியல” என்றான் கருணா.


“என் பசங்க எப்பவும் ஷார்ப்… இந்த மாதிரி வேலை எல்லாம் பர்ஃபெக்டா முடிச்சிடுவானுங்க.” என்றவன், “சரி ஆள் எப்படி? நல்லா இருப்பாளா?” என்று கண்ணடித்தான் அவன்.


“அதைக் கேட்டுச் சிரித்த கருணா, “நீயே வந்து பாரு… இன்னைக்கு அவதான் நமக்கு என்டர்டெயின்மென்ட், வா வந்து பாரு” என்று சந்தியா இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான் கருணா.


கண்களில் காமம் மின்ன ஆசையாகச் சென்றவனது விழிகள், சந்தியாவின் முகத்தைப் பார்த்ததும், எமனைப் பார்த்தது போல் பயத்தில் விரித்துக் கொண்டது.


அவளைப் பார்த்ததும் அவனது சப்த நாடியும் அடங்கி அசையாமல் நிற்க, அவள் தோளில் அடித்த கருணா, “ஆள் எப்படிடா? இன்னும் ஒரு மாசத்துக்கு இவ ஒருத்தி போதும் இல்ல” என்று சொன்னது தான். அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தான் ரவி.


“ஒரு மாசமாஆஆஆ! இன்னைக்கு ராப்பொழுது தாண்டுவியான்னு பாருடா…” என்றான் பயத்தில் நடுங்கியபடி.


“என்னடா சொல்ற நீ?”


அவனை அந்த அறையில் இருந்து வெளியே இழுத்து வந்தவன், “டேய், அறிவு கெட்ட நாயே… நீ யார் மேல கை வச்சிருக்கேன்னு உனக்குத் தெரியுமாடா” என்றான் குறையாத பயத்தில்.


“டேய், இவ யாரு என்னன்னு எனக்கு நல்லாத் தெரியும். இவ அந்த சூர்யாவோட மச்சினின்னு தெரிஞ்சு தான் தூக்கி இருக்கேன்.” என்று திமிராகச் சொன்னவன் கன்னத்தில் மறுபடியும் அறைந்தவன், “டேய்… டேய்… உன்னை எல்லாம்…” என்று கருணாவின் கழுத்தைப் பிடித்து நெறித்தவன், “நீயே உன் சாவைச் சங்கு ஊதிக் கூப்பிட்டதும் இல்லாம, என்னையும் வேற இதுல சிக்க வச்சிட்டியேடா பாவி…” என்று பதட்டத்தில் தலையைப் பிடித்துக் கொண்டவன், “மொதல்ல அந்தப் பொண்ணுக்கு மயக்கம் தெளியுறதுக்கு முன்ன, அவளை ஒழுங்கா அவ வீட்டுக்கு அனுப்பி வச்சிடு… அட்லீஸ்ட் உயிராவது மிஞ்சும். இல்ல மொத்தமா உன் குடும்பத்தையே அழிச்சிடுவாங்கடா…” என்றதும் கருணாவின் மனதிலும் லேசாகப் பயம் சூழ்ந்து கொண்டது.


“டேய்… என்னடா என்னென்னமோ சொல்ற?” என்றான் கருணா.


“இப்ப அதெல்லாம் விளக்கமாகச் சொல்ல டைம் இல்ல… முதல்ல அந்தப் பொண்ணு கண்ணைத் திறக்கும் முன்ன அவளை இந்த வீட்டுல இருந்து வெளிய அனுப்பு” என்று சொல்லி முடிக்கும் முன், “அய்யோ!” என்று அலறியபடி வெளியே வந்து விழுந்தான் சந்தியாவுக்குக் காவலாக இருந்த ஒருவன்.


“போச்சு… போச்சு… எல்லாம் போச்சு. உன்னால இப்ப நானும் சாகப் போறேன்” என்று பயத்தில் எச்சில் விழுங்கியபடி நின்றவன் முன்னால் வந்து கம்பீரமாக நின்றாள் சந்தியா.


இன்னும் சரியாக மயக்கம் தெளியாமல் இருந்தாலும், அங்கிருந்த சூழ்நிலையை நன்கு உணர்ந்திருந்தாள் அவள்.


கருணா அவளைப் பார்த்ததும், அவளைப் பிடிக்கப் போக, அவன் கையைப் பிடித்து ஒரே திருப்பாக முதுகுப்பக்கம் திருப்பித் தன் காலடியில் போட்டு மிதித்தாள். 


வலியில் அவன் கத்திய கத்தில் அங்கிருந்தவர்களுக்கு அடிவயிறு கலங்கியது.


தங்கள் முதலாளி அடிவாங்குவதைப் பார்த்து அவன் அடியாள்கள் சந்தியாவை அடிக்க வர, அங்கிருந்த பூச்சாடியை எடுத்து அவளை நோக்கி வந்தவன் தலையில் அடிக்க, அவன் மண்டையில் இருந்து ரத்தம் பீறிட்டுக் கொண்டு அங்கிருந்த சுவற்றில் தெறித்தது. 


அவன் தலையில் அடித்து உடைந்த பூச்சாடியின் கூர்மையான கண்ணாடித் துண்டைக் கைகளில் இறுக்கிப் பிடித்த சந்தியா, கருணாவின் முடியைப் பிடித்து இழுத்து அவன் முகத்தை நிமிர்த்தி, அந்தக் கண்ணாடித் துண்டை அவன் கழுத்தில் வைத்தாள். அவள் சின்னதாக ஒரு இழுப்பு இழுத்தால் போதும், கருணாவின் உயிர் கணப் பொழுதில் அவனை விட்டு கருணையே இல்லாமல் பிரிந்து விடும்.


கருணா இருந்த நிலையைப் பார்த்துச் சந்தியாவின் அருகில் செல்ல தைரியம் வராமல், அனைவரும் அவளைச் சுற்றி நிற்க, சந்தியா தன் காலடியில் மண்டியிட்டிருந்தவன் முகத்தைப் புருவம் உயர்த்தி முறைத்துப் பார்த்தவள், “ஏன்டா நாயே… நீ ஊரை ஏமாத்தி, கவர்மென்டை ஏமாத்திக் கோடி கோடியா சம்பாரிச்சிட்டு இருப்ப… அது தப்பில்ல! அதை நான் கண்டு புடிச்சு போலீஸ்ல சொன்னால் அது தப்பு! இல்ல?” என்றவள் அவன் முடியை அழுத்தமாகப் பிடித்து இழுக்க, வலியில் கத்தினான் கருணா.


அவன் அலறுவதைப் பார்த்து பயந்த ரவி, சட்டெனச் சந்தியாவின் முன் மண்டியிட்டவன், “நீங்க யாருன்னு தெரியாம இந்த நாய் இப்படி எல்லாம் பண்ணிடுச்சு. தயவுசெஞ்சு எங்களை மன்னிச்சிடுங்க, இனிமே நாங்க இப்படியெல்லாம் செய்ய மாட்டோம்.” என்று கையெடுத்துக் கும்பிட, அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்த சந்தியா, “நீ…” என்று ஒரு நிமிடம் யோசித்தவள், “நீ ரவி தான?” என்றவள், “சாரு, ஊரு விட்டு ஊரு வந்ததும் உங்க ரவுடிசத்தோட, இப்ப ஆள் கடத்தலும் செய்யற அளவுக்கு டெவலப் பண்ணிட்டு இருக்கீங்க போல…” என்று அழுத்தமாகக் கேட்டவளை எச்சில் விழுங்கியபடி பார்த்தவன்,


 “இல்லங்க… நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல. நான் முன்ன மாதிரி இல்லங்க… இவன் எனக்குத் தெரிஞ்சவன், ஏதோ கட்டிட வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னான். அதான் எனக்குத் தெரிஞ்ச பசங்களை அனுப்பி வச்சேன். மத்தபடி எனக்கு வேற ஒன்னும் தெரியாது” என்று பயத்தில் தன் நண்பனைக் கோர்த்துவிட, அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டாள் சந்தியா.


“யார் கிட்டப் பொய் சொல்ற? ராஸ்கல்! தொலச்சிடுவேன்.” என்று மறுபடியும் ஒரு அறை விட, அந்த நேரம் பார்த்து அங்கிருந்த ஒருவன் கண்ணாடித் துண்டு இருந்த சந்தியாவின் கையைப் பிடித்துவிட, அந்த நொடி நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவள் பிடியில் இருந்து தப்பிய கருணா, அங்கிருந்த கத்தியை எடுத்து அவளைக் குத்த வந்த கணம், காற்றைக் கிழித்துக் கொண்டு வந்த துப்பாக்கி குண்டு அவன் கையை பதம் பார்த்தது.


திடீரெனக் கேட்ட துப்பாக்கிச் சத்தத்தில் அனைவரும் திரும்பிப் பார்க்க, அங்கு ஆஜானுபாகுவான ஐவர் பின்னில் நிற்க, கண்ணில் கொலை வெறியுடன் கையில் துப்பாக்கியுடன், அவர்களுக்கு முன்னால் நின்றிருந்தான் தேவா.


தேவாவையும், அவனுடன் வந்தவர்களையும் பார்த்துச் சந்தியா திகைத்து நின்ற நேரம், அந்த ஐவரும் அங்கிருந்த அனைவரையும் அடித்து நொறுக்கி இருந்தனர். அடிபட்டு அரை உயிராய்க் கிடந்த ரவியை இழுத்து வந்து கருணாவின் அருகில் போட்டவர்கள், இருவரையும் மாறி மாறி வயிற்றிலேயே மிதிக்க, அவர்கள் வாயில் இருந்தும் ரத்தம் கொட்டியது.


அங்கு தேவாவைச் சற்றும் எதிர்பார்க்காத சந்தியா, ஓடிவந்து அவன் முன்னாள் நின்றவள், “டேய்! நீ ஏன் இங்க வந்த? இவங்க எல்லாம் எப்படி இங்க வந்தாங்க? முதல்ல நீங்க எல்லாம் இங்கிருந்து கிளம்புங்க. இந்த விஷயத்துக்குள்ள நீ வராத.” என்று கத்த, அவன் திரும்பி அவளைப் பார்த்த பார்வையில் மிரண்ட சந்தியா வாயை மூடிக் கொண்டாள்.


அவளைப் பிடித்துத் தள்ளி நிறுத்தியவன் பார்வை ரவி, கருணாவின் மீது பதிந்தது. அந்த ஒரு பார்வையில் இருவருக்கும் முதுகுத்தண்டு வரை ஜில்லிட்டுப் போனது. ரவி சொன்னதுபோல் இன்று தான் தன்னுடைய கடைசி நாளோ? என்ற மரணபயம் கருணாவின் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.


தேவா அருகில் நெருங்கி வர வர, ரவி, கருணாவின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.


சந்தியா அவன் அருகில் வந்தவள், “இதுங்களை ஒன்னும் பண்ணாத தேவா… யுக்தா அக்கா இங்க வந்துட்டு இருப்பாங்க. அவங்க வந்து இவனுங்களைப் பார்த்துப்பாங்க. தயவுசெஞ்சு இவனுங்களை நீ எதுவும் செஞ்சிடாதடா.” என்று அவள் கெஞ்ச, அவளைத் திரும்பி அழுத்தமான பார்வை பார்த்தவன், “உன் நிழலைத் தொட்டாலே நான் தாங்க மாட்டேன்டி. இந்த நாய் உன்னைத் தூக்கி இருக்கான். இவனை அணு அணுவா சிதைச்சாதான் என் ஆத்திரம் அடங்கும்.” என்றவன் அவர்களை நெருங்க, ரவி தேவாவின் காலைப் பிடித்துக் கொண்டான்.


 “அண்ணா… என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க ண்ணா… இதுக்கும் எனக்கும் எந்தத் சம்பந்தமும் இல்ல. இவங்க யாருன்னு தெரியாம இந்த நாய் இவங்களைத் துக்கிட்டான். ஏதோ பொண்ணைத் தூக்கணும், ஆள் வேணும்னு கேட்டான். நானும் ஆள் யாருன்னு தெரியாமல் தப்புப் பண்ணிட்டேன். பொண்ணு இவங்க தான்னு தெரிஞ்சிருந்தால் சத்தியமா நான் இந்தக் காரியத்தைச் செஞ்சிருக்க மாட்டேன். உங்களை எதிர்க்கும் தைரியம் எனக்கு இல்லைன்னு உங்களுக்கே தெரியும். இந்தக் கருணா தான் இதுக்கெல்லாம் காரணம். இவன் சொல்லித்தான் நான் இப்படிப் பண்ணிட்டேன். இவனுக்கு எதிராக என்கிட்ட நிறைய எவிடன்ஸ் எல்லாம் இருக்கு… அதை வேணும்னா உங்ககிட்டக் கொடுத்திடறேன். என்னை உயிரோட விட்டிருங்க” என்று அழுதவன், தேவாவின் காலில் தன் தலையை வைத்து, “இந்த ஒருமுறை என்னை மன்னிச்சிடுங்க. இனிமே இந்த மாதிரி எந்தத் தப்பான வேலைக்கும் போக மாட்டேன். இந்த ஊரை விட்டே எங்கயாவது போயிடுறேன்.” என்று கதற தேவா திரும்பி சந்தியாவைப் பார்த்தான்.


அவள் தலையை இடவலமாக ஆட்டி, ‘வேணாம்டா… எதுவும் செஞ்சிடாத’ என்று கண்களால் கெஞ்சினாள்.


அவளின் கோபத்தை அவனால் தாங்க முடியும். ஆனால் கண்களில் கண்ணீர் கோர்க்கத் தன்னிடம் கெஞ்சுபவளின் கண்ணீரைத் தாங்கும் சக்தி அவனிடம்‌ இல்லாமல் போக, கண்களை மூடி ஆழ்ந்து மூச்செடுத்தவன், “நீங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்கணும்னா… ஒழுங்கா உங்க தப்பை ஒத்துகிட்டு ஜெயிலுக்குப் போயிடுங்க… இனி ஒருமுறை தப்பித் தவறி என் கண்ணுல பட்டீங்க… அதுதான் உங்க கடைசி நாளா இருக்கும்.” என்றவனின் கர்ஜனையில் அங்கிருந்த அனைவருக்கும் கதிகலங்கியது.


உயிர்ப் பிச்சை கிடைத்த சந்தோஷத்தில், ரவியும் கருணாவும் மீண்டும் தேவாவின் காலைப் பிடிக்க, அது பிடிக்காமல் காலை இழுத்துக் கொண்டு அவன் திரும்பிய நொடி, அவன் கையை உரசிச் சென்று பின்னால் இருந்த சுவரில் குத்தி நின்றது ஒரு துப்பாக்கிக் குண்டு.


தேவா மேல் குண்டு பட்டு விட்டதோ என்று பதறிய சந்தியா, “தேவா” என்று கத்திக் கொண்டே அவன் அருகில் சென்றவள், பதட்டமாக அவன் கையை ஆராய்ந்தாள். 


அந்தக் குண்டு அவன் தோளை லேசாக உரசியபடி சென்றதால் பெரிதாக எதுவும் காயம் இல்லை என்று தெரிந்த பிறகே, யார் அவனைச் சுட்டது என்று திரும்பிப் பார்த்தவள், வாசலில் பத்துப்பேர் நிற்க, அவர்களுடன் நின்ற தீனாவையும், அவன் பிடியில் இருந்த தேவாவின் அக்கா ஆர்த்தியின் கணவன் அருளையும் கண்டு திகைத்து நின்றாள் சந்தியா.


தேவாவின் சிவப்பேறிய பார்வை வாசலில் நின்றவன் மேல் அழுத்தமாகப் படிந்திருக்க, சந்தியாவுக்கு உள்ளுக்குள் பதைபதைக்க ஆரம்பித்தது.


“நீங்க ரெண்டு பேரும் என்னை இங்க எதிர்பார்க்கல இல்ல…” என்றவனின் கண்களில் பழி வெறி அக்னியாக ஜொலித்தது.


“ஜெயிலுக்குப் போன நாள்ல இருந்து இந்த நாளைத்தான் ஒவ்வொரு நாளும் நான் எதிர்பார்த்திட்டு இருந்தேன். உங்க ரெண்டு பேரையும் கொல்லணும்னுதான் ஜெயில்ல இருந்து தப்பிச்சு வந்தேன்.” என்றவனை தேவாவின் ஆட்கள் பிடிக்கப் பார்க்க, அவனோ அருளின் தலையில் துப்பாக்கியை வைத்தான்.


அதைப் பார்த்தும் சந்தியா பதறிவிட, “டேய் சும்மா இருங்கடா… அவன் கையில அருள் அண்ணா இருக்காரு, மறந்துட்டீங்களா…” என்று எச்சரிக்க ஐவரும் அப்படியே நின்றனர்.


“ம்ம்ம் குட். அந்தப் பயம் இருக்கணும்” என்றவனைக் கொலை வெறியோடு பார்த்த, தேவா, “என் மாமா மேல ஒரு கீறல் விழுந்தாலும் சரி… அதுக்குப் பிறகு நீங்க யாரும் உயிரோட இங்கிருந்து போக மாட்டீங்க. ஒருத்தனையும் விடமாட்டேன். உருத்தெரியாம அழிச்சிடுவேன்.” என்று அடிக்குரலில் எச்சரிக்க, தேவாவைப் பார்த்துச் சிரித்தான் தீனா.


“டேய்! இவன் உயிரெல்லாம் எனக்குத் தேவையே இல்ல. என்னோட முதல் டார்கெட் இவதான்.” என்று சந்தியாவைப் பழி வெறியோடு பார்த்தவன், “அடுத்தது நீ…” என்று தேவாவை நோக்கிக் குறி வைத்தவன், “இவளை உன் கண்ணு முன்னாலயே சித்ரவதை செஞ்சு கொல்லனும். அதைப் பார்த்து நீ கதறித் துடிக்கனும். அப்பதான் உங்களால செத்துப் போன என் அண்ணனோட ஆத்மா சாந்தியடையும்.” என்றவன் சந்தியாவை நோக்கி வர, சரியாக அந்த நேரம் ஆதி, யுக்தா, சூர்யா, அரவிந்துடன் ஒரு போலிஸ் படையும் அங்கு வந்துவிட்டது.


தீனா ஏற்கனவே ஜெயிலில் இருந்து தப்பி வந்த கைதி, அவனுடன் வந்த ஆட்கள் போலீஸால் தேடப்படும் குற்றவாளிகள் என்பதால், திடீரென அங்கு போலீஸைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பிக்க முயல, போலிஸூக்கும் தீனாவின் அடியாள்களுக்கும் கடும் சண்டை மூண்டது. அந்த நேரம் தீனா அங்கிருந்து தப்பிக்கப் பார்க்க, தேவா அவனை மடக்கிப் பிடித்திருந்தான்.


அவனைக் கையை மடக்கிப் பிடித்து அவன் முகத்தில் குத்தியவன், “எவ்ளோ தைரியம் இருந்தால் என் சந்தியாவைக் கொல்லுவேன்னு என்கிட்டயே சொல்லுவ? நீ உயிரோட இருந்தா தானடா அவளைக் கொல்லுவ” என்றவன் தீனாவின் மீது தன் முழுக் கோபத்தையும் காட்ட, அவன் அடித்த அடியில் தீனாவின் தாடையே உடைந்துவிட்டது.


எங்கு இன்னும் விட்டால் ஏதேனும் விபரீதம் நடந்து விடுமோ என்று பயந்த சந்தியா, அவனைக் கையைப் பிடித்துக் கொண்டவள், “டேய்… என்னடா செஞ்சிட்டு இருக்க நீ… அவனை விடுடா. நீ இன்னும் ரெண்டடி அடிச்சா அவன் செத்திடுவான்.” என்று கத்தியபடி அவனைத் தன் புறம் இழுக்க அவனோ அசையவே இல்லை. மீண்டும் மீண்டும் தீனாவைத் தாக்கியபடியே இருக்க, சூர்யாவும் அர்விந்தனும் ஓடி வந்து தேவாவைப் பிடித்து விலக்கி இழுத்துக் கொண்டு வந்தனர்.


தேவா இன்னும் கோபம் தணியாமல் கொதித்துக் கொண்டு இருக்க, “தேவா, ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ப்.” என்று அவனைச் சமாதானம் செய்தான் சூர்யா.


யுக்தாவும், ஆதியும் அங்கிருந்த அனைவரையும் கைது செய்திருக்க, தீனாவை இரண்டு போலீஸ்காரர்கள் இழுத்துச் சென்ற நேரம், அவர்களைத் தள்ளிவிட்டு ஓடி வந்தவன், கண்ணிமைக்கும் நேரத்தில் தன் காலில் மறைத்து வைத்திருந்த சிறிய துப்பாக்கியை எடுத்துச் சந்தியாவை நோக்கிச் சுட்டிருந்தான்.


சூர்யாவும், அரவிந்தும், “சந்தியா” என்று கத்திக் கொண்டே ஓடி வர, அதற்குள் சந்தியாவைப் பிடித்து இழுத்துத் தன் பின்னால் பாதுகாப்பாக நிறுத்திக் கொண்ட தேவாவின் இடப்பக்க நெஞ்சைத் துளைத்திருந்தது அந்தத் துப்பாக்கி குண்டு.


அங்கு என்ன நடந்ததென்று புரியவே அனைவருக்கும் சில நிமிடங்கள் பிடித்தது.


தேவாவைத் தாங்கிப் பிடித்திருந்த சந்தியா, கைகள் நடுங்கியபடி அவன் காயத்தைத் தொட்டுப் பார்க்க, அவனின் சூடான ரத்தம் அவள் கைகளில் படிந்தது. 


அவன் ரத்தத்தை வெறித்துப் பார்த்தபடி உறைந்திருந்தாள் சந்தியா. 


ஆதி நொடியில் சுதாரித்துக் கொண்டவன், தீனாவை வளைத்துப் பிடித்து விட்டான்‌.


தேவாவின் நிலையைப் பார்த்துச் சிரித்த தீனா, “உன்னைக் கொன்னு அவனைத் துடிக்க வைக்க நினைச்சேன், அது நடக்கல… ஆனா, இப்ப இவன் சாகப்போறதை நினைச்சு எனக்குச் சந்தோஷமா இருக்குடி… இனி ஒவ்வொரு நாளும் இவனை நினைச்சு நினைச்சு நீ அழணும்‌. இத்தோட விட்டிருவேன்னு மட்டும் நினைச்சிடாத… நான் வருவேன்! திரும்பி வருவேன்! உன்னையும் உன் குடும்பத்தையும் சாகடிப்பேன்.” என்றவன் வார்த்தையை முடிக்கும் முன் அவன் நெஞ்சைத் துளைத்திருந்தது மூன்று குண்டுகள்.


தீனாவின் உயிரற்ற உடல் தரையில் விழ, அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் பார்க்க, சந்தியாவின் கையில் இருந்த துப்பாக்கி நழுவி கீழே விழுந்தது.


தன் மடியில் தலை வைத்திருந்த தேவாவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா.


கண்களில் காதல் நிறைந்திருக்க சந்தியாவின் கன்னத்தை வருடிய தேவா, “மிஸ் யூ டி பம்கின்…” என்றவன், மெல்ல அவளின் பின்னந்தலையில் பிடித்துத் தன் முகத்தை நோக்கி இழுத்தவன், மென்மையாக அவள் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்து, “லவ் யூ டி” என்றவனின் கண்கள் மெல்ல மெல்ல ஜீவன் இழந்து மூடிக் கொள்ள, “தேவா…” என்று அடி நெஞ்சில் இருந்து கத்திய சந்தியாவின் குரல் வானைப் பிளந்தது.