உன் விழியில் கைதானேன் 11

 விழி 11


அந்த மருத்துவமனையில் தேவாவுக்குச் சிகிச்சை நடந்து கொண்டிருக்க, அந்த அறுவை சிகிச்சை அறையின் முன் தன் கையில் ஒட்டியிருந்த தேவாவின் உதிரத்தை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் சந்தியா.


அறுவை சிகிச்சை முடிந்து தேவா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு இருந்தான்.


சந்தியாவின் மொத்தக் குடும்பமும் அங்கு தான் இருந்தது. 


ஆர்த்தி ஒரு பக்கம் அழுது கொண்டு இருக்க, அவள் கணவன் அருள் அவளைச் சமாதானம் செய்து கொண்டு இருந்தான்.


மருத்துவர்கள் அந்த அறையை விட்டு வெளியே வர, மொத்தக் குடும்பமும் அவரைச் சூழ்ந்து கொண்டது.


“தேவாக்கு இப்ப எப்படி இருக்கு டாக்டர்?” என்று ஆர்த்தி கண்ணீரோடு கேட்க, சந்தியா ஒருவிதத் தவிப்போடு டாக்டர் முகத்தையே பார்த்திருந்தாள்.


“ஆப்பரேஷன் முடிஞ்சது‌. புல்லட்டை ரிமூவ் பண்ணியாச்சு. பட்…” என்று அவர் இழுக்கச் சந்தியாவுக்கு நெஞ்செல்லாம் அடைத்தது.


“என்ன டாக்டர், என் தம்பிக்கு என்ன?” என்று ஆர்த்தி பதற சூர்யா முன்னால் வந்தவன், “என்ன டாக்டர், என்ன ப்ராப்ளம்? எதுவா இருந்தாலும் சொல்லுங்க. இன்னும் டாக்டர்ஸ் வேணுமா? இல்ல இதைவிடப் பெரிய ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போகணுமா? இல்ல ஃபாரின் எங்கயாவது கூட்டிட்டுப் போகணும்னாலும் சொல்லுங்க டாக்டர்… எதுவா இருந்தாலும் பரவாயில்ல, எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல… அவன் உயிரோட நல்லபடியா திரும்பி வரணும்.” என்று சொல்ல அவன் தோளில் தட்டிய மருத்துவர், 


“அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல மிஸ்டர் சூர்யா… எங்களால் முடிஞ்சதை நாங்க செஞ்சிருக்கோம். இனிமே பேஷன்ட் பொழைக்கிறது அவரோட வில் பவர்லதான் இருக்கு. ஒருவேளை அவர் கோமா ஸ்டேஜுக்குப் போயிட்டா எங்களால ஒன்னும் பண்ண முடியாது” என்றவர், “கடவுளை வேண்டிக்கோங்க” என்று விட்டுச் செல்ல, சந்தியா மொத்தமாக உடைந்து விட்டாள். 


வாய் விட்டு அழுதால் கூட அவளின் வலி குறைந்திருக்குமோ என்னவோ? ஆனால், அவனுக்கு எதுவும் ஆகாது என்ற நம்பிக்கையில் இருந்தவளுக்கு துளி கண்ணீர் கூட வரவில்லை. 


பாரமேறிய மனதோடு அந்த மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவளின் கால்கள், அங்கிருந்த கோயிலை நோக்கிச் சென்றது.


கருணையே உருவாக அமர்ந்திருந்த அம்மனின் முகத்தைப் பார்த்த சந்தியாவுக்குக் கண்களில் கோபம் மின்னியது.


“இன்னும் என் வாழ்க்கையில் என்னென்ன மா பாக்கி வச்சிருக்க நீ? இதுவரை நாங்க பட்டது போதாதா? இன்னும் உன் கோவம் தீரலியா?” என்று கேட்டவள், அவள் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த சங்கிலியை எடுத்து மார்புக்கு வெளியே போட, அந்தச் சங்கிலியில் தொங்கிய தங்கத்தாலி அவள் நெஞ்சில் வந்து விழுந்தது.


அதை எடுத்து அம்மன் முன் நீட்டியவள், “இது என் தேவா உன்னைச் சாட்சியா வச்சு எனக்குக் கட்டுன தாலி… நான் அவனோட சேர்ந்து வாழறேனோ இல்லயோ… ஆனா, நான் உயிரோட இருக்குற வரை இது என் கழுத்துல தான் இருக்கும், இருக்கணும்… அவன் என் கண்ணு முன்னால உயிரோட நடமாடணும். தினமும் என் பின்னாடியே வரணும். இப்ப மாதிரியே ஆயுசுக்கும் என்னைப் பைத்தியமா காதலிச்சிட்டே இருக்கணும். அதுக்கு அவன் பொழச்சு வரணும். நீ அவனை என் கையில் உயிரோட பத்திரமா திருப்பிக் கொடுக்கணும்.” என்று அம்மனை அழுத்தமாகப் பார்த்தவள், “அது உன்னோட பொறுப்பு.” என்று கட்டளையாகச் சொன்னவள், “அப்படி மட்டும் நீ செய்யல… அவனுக்கு ஏதாவது நடந்துச்சு…” என்றவளின் பார்வை கோபமாக அம்மன் மீது விழ, அம்மனோ அவளைக் கருணையாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.


மாலை போல் அங்கு வந்தனர் யுக்தாவும் ஆதியும். 


“என்னாச்சு நிலா, தேவா எப்படி இருக்கான்?” என்று கேட்க, நிலா கலங்கிய கண்களுடன் தோழியைப் பார்த்தவள், “ஆப்பரேஷன் முடிஞ்சிடுச்சு யுகி. இன்னும் கண்ணு முழிக்கல… கொஞ்சம் சீரியஸ்னுதான் சொல்லுறாங்க. நல்லவேளை புல்லட் இன்னும் ஒரு இன்ச் இறங்கி இருந்தால் ஹார்ட்ல பட்டிருக்கும்னு டாக்டர் சொன்னாரு… நம்ம நல்ல நேரம் அப்படி எதுவும் நடக்கல.” என்று டாக்டர் சொன்ன அனைத்தையும் சொன்னவள், மேலே பார்த்துக் கையடித்துக் கும்பிட்டு, “இனி கடவுள் தான் அவரைக் காப்பாத்தனும்” என்றாள்.


சூர்யா யுக்தாவிடம் வந்தவன், “அங்க எல்லாம் ஓகே தானா? தேவாக்கும், சந்தியாக்கும் எதுவும் பிராப்ளம் வராது இல்ல?” என்று கேட்டான்.


“இல்ல சூர்யா. எதுவும் பிரச்சனை வராது‌. அந்த தீனா ஏற்கனவே ஜெயில்ல இருந்து தப்பிச்ச கிரிமினல். அவன் மேல ஷூட்டிங் ஆர்டர் கூட இருக்கு‌. சோ பிரச்சனை எதுவும் இல்ல. இவ எம்.டியையும் அவனோட ஆளுங்களையும் கூட அரஸ்ட் பண்ணிட்டோம். சந்தியா கொஞ்சம் நார்மல் ஆனதும், கமிஷனர் ஆஃபிஸுக்கு வந்து அவளோட ஸ்டேட்மெண்ட் கொடுத்தால் போதும்‌. இவளுக்கு எந்தப் பிராப்ளமும் வராம நான் பார்த்துக்குறேன்.” என்றாள் உறுதியாக.


மொத்தமாக உடைந்து போய் இருந்த சந்தியாவின் அருகில் வந்து அமர்ந்த யுக்தா, அவள் கையை எடுத்துத் தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டவள், “அவனுக்கு ஒன்னும் ஆகாதுடி… அவ்ளோ சீக்கிரம் எல்லாம் உன்னை நிம்மதியாத் தனியா விட்டுட்டு அவன் போக மாட்டான். குறைஞ்சது இன்னும் ஒரு நாப்பது, ஐம்பது வருஷம் உன்னைக் கட்டிக்கிட்டு டார்ச்சர் பண்ணனும்னு ஒரு லட்சியமே வச்சிருக்கான் உன் ஆளு. அவ்ளோ ஈசியா உன்னை விட்டுப் போயிட மாட்டான்.” என்று சொல்ல சந்தியா கலங்கிய கண்களுடன் மெதுவாக நிமிர்ந்து யுக்தாவைப் பார்த்தாள்.


அவள் கண்களை மூடித் திறந்து, “ஆமாடி… இத நான் சொல்லல, நான் தேவாவை மீட் பண்ணபோது அவன் சொன்னதுதான் இது. அவனுக்கு உன்மேல அவ்ளோ லவ் இருக்குடி… அவன் உயிரே நீதான்னு சொல்லலாம். அந்த அளவுக்கு அவன் உன்னை லவ் பண்றான். அது எனக்கு அவன் கூடப் பேசும்போதே நல்லாப் புரிஞ்சிது. அதனாலதான் நடந்தது எல்லாம் தெரிஞ்சும், அவனுக்காக உன்கிட்டப் பேசினேன்‌. எப்ப நான் அந்த நாதாரி உதயோட தேவாவைக் கம்பேர் பண்ணும்போது உனக்குக் கோவம் வந்துச்சோ, எப்ப என் தேவா, அந்த உதய் மாதிரிக் கேவலமான ஆள் இல்லைனு நீ சொன்னியோ, அப்பவே எனக்குப் புரிஞ்சிடுச்சுடி… நீயும் அவன் மேல உயிரா இருக்கேன்னு. உதய் கூட உன் தேவாவைக் கம்பேர் பண்ணறதையே உன்னால தாங்கிக்க முடியல… அந்த அளவுக்கு நீ அவனை நம்புற. அப்புறம் ஏன்டி உன் மனசை மட்டும் மறச்சு வைக்கிற? உன் மனசுல தேவா தான் இருக்கான்னு இங்க இருக்கற எல்லாருக்கும் தெரியும். ஆனா, தெரிய வேண்டியவனுக்கு அதை இன்னும் நீ சொல்லல… இப்ப உனக்கு எந்தத் தடையும் இல்ல… உன் காதலை அவன்கிட்டச் சொல்லுடி‌… நீ சொல்லுற அந்த ஒரு வார்த்தைக்குதான் அவன் உயிரைப் புடிச்சித் திருப்பிக் கொண்டு வரும் சக்தி இருக்கு… போடி போ… போய் உன் புருஷனைக் காப்பாத்தித் திருப்பிக் கூட்டிட்டு வா” என்றவள் சந்தியாவை தேவா இருந்த அறைக்குள் அனுப்பி வைத்தாள்.


அந்த அறையில் மிஷின்களின் ஓசையிடையே பல வண்ண ஒயர்கள் அவன் உடலைச் சுற்றி இருக்க, அவனின் இதயம் சீராகத் துடிக்கவில்லை என்பதை அவளுக்குக் கேட்கும்படி கத்திச் சொல்லிக் கொண்டிருந்தது அந்தக் கருவி. 


மெல்ல தேவாவின் அருகில் சென்றவள், அங்கிருந்த சேரில் அமர்ந்தபடியே கொஞ்ச நேரம் அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“நீ அன்னைக்கு ஒன்னு சொன்ன, உனக்கு ஞாபகம் இருக்காடா?” என்று கேட்டாள், அவனிடம் இருந்து பதில் வராது என்று தெரிந்தும்.


“ஆர்த்திக்குக் குழந்தை பிறக்கும்போது நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து புருஷன், பொண்டாட்டியா இருந்து குழந்தைக்குப் பேர் வைக்கணும், நம்ம சேர்ந்து வாழணும், என் வயித்துல நம்ம புள்ள வளரும். அதுக்கு எனக்குப் புடிச்ச சாமி பேர் வைப்போம், அதெல்லாம் என்னோட சம்மதத்தோட நடக்கும்னு சவால் விட்ட இல்ல நீ, நினைவு இருக்கா?” என்றவளின் இதழ்கள் லேசாக வளைய, எழுந்து அவனின் இருபுறமும் கைகளை ஊன்றி அவன் முகத்தைப் பார்த்தவள், “இப்ப நீயே ஒரேயடியா இந்த உலகத்தை விட்டுப் போகப் போறேன்னு டாக்டர் சொல்லிட்டாரு… அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமாடா? தி கிரேட் தேவா… என்கிட்ட, இந்தச் சந்தியாகிட்டப் போட்ட சவால்ல தோக்கப் போறாருன்னு அர்த்தம்” என்று நக்கலாகச் சொன்னவள் மீண்டும் சேரில் கம்பீரமாக அமர்ந்தவள், அவன் வலக்கையை எடுத்துத் தன் கைமேல் வைத்துக் கொண்டாள்


அவள் பேசுவதை வெளியே இருந்து கேட்ட மற்றவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர், “என்ன இது?” என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.


சந்தியாவோ தேவாவின் முகத்தையே பார்த்தவள், “நான் தான் அன்னிக்கே சொன்னேனேடா… உன்னால என்னை ஜெயிக்கவே முடியாதுன்னு… இப்ப நான் சொன்ன மாதிரியே நடந்திடுச்சு இல்ல… சார் இப்ப என்ன செய்யப் போறீங்க?” என்று கன்னத்தில் கை வைத்து யோசிப்பது போல் நடந்தவள், 


“ம்ம்ம், வேணும்னா இப்படிச் செய்யலாம். உன்னோட ஆசையில் பாதியை நான் நிறைவேத்தி வைக்கிறேன். நான் சீக்கிரம் ஒரு நல்ல, பொறுப்பான, அழகான, ஹான்சமான பையனைப் பார்த்து மேரேஜ் பண்ணிக்குறேன். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆர்த்தி பாப்பாவுக்கு நல்ல பேரா வைக்கிறோம். அது மட்டும் இல்ல, நீ சொன்ன மாதிரி அழகா, க்யூட்டா ஒரு பையனைப் பெத்து அவனுக்கு எனக்குப் புடிச்ச சாமி பேர் இல்ல… தேவான்னு உன் பேரையே வைக்கிறேன். பாவம் சாவப்போற உனக்கு என்னால செய்ய முடிஞ்சது இதுதான். உன்னோட கடைசி ஆசையா நினைச்சு இதை நான் செய்யறேன்.” என்றவள் சேரிலிருந்து எழுந்து நகர்ந்தவள் இதழ்களில் குறுநகை மலர, கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் முத்து முத்தாக உதிர்ந்தது.


மெல்ல அவள் திரும்பிப் பார்க்க, அவள் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டிருந்தான் மயக்கத்தில் இருந்த தேவா.


அடுத்த அரைமணி நேரம் நொடியில் பறந்திருக்க, அந்த அறையில் இருந்து வெளியே வந்த டாக்டர், “ஹீ இஸ் அவுட் ஆப் டேஞ்சர் நவ். ஹார்ட் பீட் ஸ்டேபிளா இருக்கு… இனிமே உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல” என்று சொல்லிவிட்டுச் செல்ல, அப்போதுதான் அங்கிருந்த அனைவருக்கும் போன உயிர் திரும்பி வந்தது.


விசயத்தைக் கேள்விப்பட்ட சந்தியாவின் தாய், தந்தை கூட அடுத்த விமானத்தில் கிளம்பிச் சென்னை வந்திருந்தனர்.


தேவா அபாய கட்டத்தைத் தாண்டி விட்டான் என்ற செய்தியைக் கேட்ட பின்பே அவர்களுக்கும் நிம்மதியானது.


ராம்குமார் சந்தியாவின் அருகில் சென்று அவளை அணைத்துக் கொள்ள, அவள் தாய் கலையோ அவளை முறைத்தபடியே இருந்தார். 


சந்தியா அம்மாவை நிமிர்ந்து பார்க்க அவரோ, “என்னை எதுக்குடி பார்க்குற… நான் ஒன்னும் உன்னைப் பார்க்க இங்க வரல… நான் தேவாவைப் பார்க்கதான் வந்தேன்.” என்று முறுக்கிக் கொண்டவரின் குரல் கரகரக்க, “அம்மா…” என்று அழுதபடி ஓடிச் சென்று அன்னையை இறுக்கிக் கட்டிக் கொண்டாள் சந்தியா.


கலையும் அவள் தலையை அன்பாக வருடி விட்டவர், “ஏன்டி… ஏன் இப்படி எல்லாம்?” என்றவருக்கு அழுகை தான் வந்தது.


அடுத்த இரண்டு நாட்கள் பதட்டமாகவே சென்றது‌. என்னதான் அவன் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தாலும், தேவா இன்னும் கண் விழிக்காமல் இருந்தது அனைவரையும் லேசாகப் பயமுறுத்தியது.


அந்த அறை வாசலில் கண் மூடி நின்றிருந்த சந்தியாவின் முன் வந்து நின்றனர் தேவாவின் தோழர்கள்.


“அண்..அண்ணி…” என்று அவர்கள் தயங்கித் தயங்கி அழைக்க, சந்தியா மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள்.


“அண்ணன் இப்ப எப்படி இருக்காரு? பொ..பொழச்சிடுவாரு இல்ல…” என்று பயத்தோடு கேட்டவர்களைத் தீயாக முறைத்தாள் சந்தியா.


“அவனுக்கு ஒன்னும் ஆகாது… சீக்கிரம் எழுந்து வந்திடுவான். நீங்க தேவையில்லாம எதையும் யோசிக்காம முதல்ல ஊருக்குக் கிளம்புற வழியப் பாருங்க… அவனுக்கு உடம்பு சரியானதும் அவனே வந்து உங்களைப் பார்ப்பான்.” என்றாள் அழுத்தமாக.


“இல்ல… இல்ல அண்ணி. நாங்க எங்கேயும் போக மாட்டோம். அண்ணன் கண்ணு முழிக்குற வரை நாங்க இங்கதான் இருப்போம்.” என்றவர்கள் சந்தியா பார்த்த பார்வையில் அமைதியாகிவிட, 


“ஒழுங்கா எல்லாரும் இங்கிருந்து கிளம்பிடுங்க‌… இனிமே உங்க யாரையும் இங்க நான் பார்த்தேன்னு வையுங்க… என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஒழுங்காப் போய் உங்க பொழப்பைப் பாருங்க.” என்றாள் கட்டளையாக.


அதற்கு மேல் அவளை எதிர்த்துப் பேசும் தைரியம் அவர்களுக்கு இல்லாமல் போக, “அண்ணனைப் பார்த்துக்கோங்க. எந்த உதவி வேணும்னாலும் நாங்க இருக்கோம்னு மறந்துடாதீங்க அண்ணி. எங்களுக்கு அண்ணன் மேல எவ்வளவு மரியாதை இருக்கோ, அதே அளவு மரியாதை உங்க மேலயும் இருக்கு… உங்களுக்காக எப்பவும் நாங்க இருப்போம்” என்றவர்கள் அங்கிருந்துச் செல்ல, சந்தியா போகும் அவர்களையே நன்றியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.


தேவாவின் அறைக்குள் நுழைந்தவள், அவன் கையை எடுத்து தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டாள்.


“ஏன்டா, நம்ம வாழ்க்கையில் இவ்ளோ பிரச்சனை? ஒரு நல்ல சூழ்நிலைல நம்ம மீட் பண்ணி இருந்திருக்கலாமேடா. உன் காதலை எந்த உறுத்தலும் இல்லாமல் என்னால அனுபவிக்க முடிஞ்சிருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்? கல்யாணம் பண்ணியும் சேர்ந்து வாழ முடியாம இப்படி எதிர் எதிர் திசையில் விதி நம்மளை நிறுத்தி வச்சிடுச்சே… நீ கட்டுன தாலியைக் கூட என்னால தைரியமா வெளிய போட்டுக்க முடியாத ஒரு வாழ்க்கை ஏன்டா நமக்கு… ஏன்? ஏன்டா நமக்கு இப்படி?” என்று வாய்விட்டுப் புலம்பியவளின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.