உன் விழியில் கைதானேன் 12

 விழி 12


காலையும் மதியமும் கலந்த பொழுதில், வெயில் மிதமாகக் காய்ந்து கொண்டிருக்க, இரண்டு பக்கமும் தென்னந்தோப்புகள் இருந்த வழியாகச் சென்று கொண்டிருந்தது அந்தப் பேருந்து.


காதில் இருந்த இயர் போனில் ஏ.ஆர். ரஹ்மான் பாட்டைக் கேட்டபடியே, ஜன்னல் வழியாக வெளியில் தெரிந்த இயற்கைக் காட்சிகளையும் ரசித்தபடி வந்தாள் சந்தியா.


அப்போது அவளது அலைபேசி அடிக்க, அதை எடுத்துப் பார்த்தவள் முகத்தில் லேசான புன்னகை மலர்ந்தது. ப்ளூடூத் வழியாக அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க ஆகாஷ்” என்றாள்.


“சேஃபா ஊருக்குப் போயிட்டியா சந்தியா? ட்ரெயின் கரெக்ட் டைமுக்கு ரீச் ஆகிடுச்சா?” என்று கேட்டான் ஆகாஷ்.


“ம்ம்ம், ஊருக்கு வந்தாச்சு ஆகாஷ். இப்ப பஸ்ல போயிட்டு இருக்கேன். என் ஃப்ரெண்டோட அப்பா என்னை பஸ் ஸ்டாப்புல வந்து பிக் பண்ணிக்குவாரு… வீட்டுக்குப் போயிட்டு கால் பண்றேன்” என்றவள் மேலும் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், தன் விரலில் இருந்த ஆகாஷ் போட்டுவிட்ட தங்கள் நிச்சயதார்த்த மோதிரத்தை வருடிக் கொண்டாள்.


ஆகாஷ் சென்னையில் பிரபலமான வக்கீல். பெரிய குடும்பத்தின் மூத்த வாரிசு. சந்தியாவை ஒரு திருமண விசேஷத்தில் பார்த்துப் பிடித்துப் போய்விட, அவன் தாயிடம் அவளைப்பற்றிச் சொல்லி, அவள் யார், என்ன என்பதை விசாரித்து நேரடியாகச் சூர்யாவின் வீட்டிற்கு முறைப்படி பெண் கேட்டு தன் தாய் தந்தையை அழைத்து வந்து விட்டான்.


அவனைப் பற்றி சூர்யாவும், அரவிந்தும் முழுவதும் விசாரித்து, அவன் சந்தியாவுக்குப் பொருத்தமான மாப்பிள்ளை என்று முடிவு செய்த பிறகே, சந்தியாவிடம் ஆகாஷ் பற்றிப் பேசினர்.


இதுவரை ‘இப்பக் கல்யாணம் வேணாம்’ என்று சந்தியாவும் தனக்கு வந்த பல வரன்களை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாள். அவளுக்குச் சம்மதம் இல்லாத போது கட்டாயப்படுத்தக் கூடாது என்று அவள் குடும்பத்தினரும் அவளை வற்புறுத்தவில்லை. ஆனால், இந்த முறை ஆகாஷ் பற்றி விசாரித்ததில் இப்போது விட்டால் இனி இப்படி ஒரு பொருத்தமான வரன், சந்தியாவுக்குக் கிடைப்பது கஷ்டம் என்று நினைத்த சூர்யாவும் அரவிந்தும் சந்தியாவிடம் பேச, எந்த ஒரு விஷயத்திலும் தன்னை வற்புறுத்தாத, தன் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுக்கும் தன் மாமாக்கள் இருவரும் இவ்வளவு சொல்லும்போது அதை மறுத்துப்பேச அவளுக்குத் தோன்றவில்லை. 


ஆகாஷூடன் சிறிது காலம் பழகிப் பார்த்தவளுக்கு, அவனின் கண்ணியமான குணம் பிடித்துப் போனது. இருவருக்கும் இடையே அழகிய நட்பு உருவாக, இருவரும் திருமணம் செய்ய முழு மனதாகச் சம்மதித்தனர்.


சூர்யாவின் வீட்டில் இருவருக்கும், இரு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்த விழா நடந்து முடிந்தது. திருமணத்தை மட்டும் இன்னும் ஆறு மாத காலங்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று சந்தியா கேட்க, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இந்தக் கால அவகாசம் தேவை என்று நினைத்த குடும்பத்தினர், அவள் விருப்பப்படி ஆறு மாதம் கழித்து இருவருக்கும் திருமண நாள் குறித்தனர்.


நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு வாரத்தில் சந்தியா தன் தோழியின் திருமணத்திற்காகத் தோழியின் சொந்த ஊருக்குச் சென்று அவளுடன் கொஞ்ச நாட்கள் இருப்பதாகச் சொல்லிக் கிளம்பி இருந்தாள்.


சந்தியாவை ஆகாஷ் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட, ஆயிரம் முறை பத்திரம் என்று சொல்லி அவளை வழி அனுப்பி வைத்த சூர்யா, நிலானிக்கு அப்போது தெரியாது. தங்கள் வீட்டுப் பெண்ணாக இங்கிருந்து செல்பவள், திரும்பி இந்த வீட்டிற்கு வரும்போது அடுத்தவன் மனைவியாக, தன் உணர்வையும் உயிர்ப்பையும் இழந்து தான் வரப்போகிறாள் என்று. 


ஆகாஷ் ரயில் நிலையத்தில் அவளை இறக்கி விட்டவன், “ஊருக்கு ரீச் ஆனதும் எனக்கு மெசேஜ் பண்ணு சந்தியா. எதுவும் வேணும்னா தயங்காம எனக்குக் கால் பண்ணு…” என்றவன் அவளை வழியனுப்பி வைக்க, இதுதான் அவளைத் தன்னவளாக அவன் பார்ப்பது கடைசி என்று அறியாமல் சிரித்த முகத்துடன் அவளை ரயில் ஏற்றி விட்டான் ஆகாஷ்.


இயற்கையை ரசித்தபடியே வந்தவள், அவள் இறங்க வேண்டிய ஊரைத் தவற விட்டுவிட, அடுத்த ஊரில் சென்று இறங்கினாள்.


அங்கிருந்த டீக்கடையில் அடுத்த பஸ் எப்போது வரும் என்று அவள் கேட்க, அந்த வேளையில் அங்கு எந்தப் பேருந்தும் வராது என்றனர் அந்தக் கடைக்காரர்.


அதைக்கேட்டு என்ன செய்வது என்று யோசித்தவள், “இங்கே இருந்து அந்த ஊர் எவ்வளவு தூரம்” என்று விசாரித்தவள், அவர் சொன்ன மூன்று கிலோமீட்டர் என்ற‌ வார்த்தையில், “நாசமாப் போச்சு” என்றபடி தலையில் கை வைத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டாள்.


“இங்க எதுவும் ஆட்டோ, டாக்ஸி, மாதிரி எதுவும் கிடைக்குமா அண்ணா?” என்று கேட்டாள்.


“இந்த நேரத்துல எதுவும் வாரதுமா… காலையில சாயங்காலம் தான் ஆட்டோ கிடைக்கும்.” என்றார் டீக்கடைக்காரர்.


“கடவுளே…” என்று மேலே பார்த்துப் புலம்பியவள், “தனியா இருந்தா கூட மெதுவா நடந்தே போயிடுவேன். இந்த லக்கேஜ் வச்சிட்டு மூன்று கிலோ மீட்டர் நான் எப்படிப் போவேன்.” என்று முகத்தைப் பாவம் போல் வைத்துக் கொண்டவளைப் பார்க்க அந்தக் கடைக்காரருக்கும் பாவமாகத்தான் இருந்தது.


“வயசுப் பொண்ணு அந்த வழியா தனியாப் போறது அவ்ளோ நல்லது இல்லம்மா” என்றார் அக்கறையுடன்.


“ஏன்? அந்தப்பக்கம் பேய், பிசாசு எதுவும் சுத்துதா?” என்று கேட்டாள் கொஞ்சம் பயத்தோடு.


“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. இங்க இருக்க சில மனுசங்களைவிட பேய், பிசாசு எவ்வளவோ பரவால்ல…” என்றவர், அந்த நேரம் தூரத்தில் ஒரு ஜீப் வருவதைப் பார்த்தார்.


உடனே சந்தியாவைப் பார்த்தவர், “உனக்கு இன்னைக்கு நல்ல நேரம் தான்மா” என்றவர் ஓடி வந்து அந்த ஜீப்பை நிறுத்தினார்.


ஜீப்பில் இருந்தபடி எட்டிப் பார்த்தவன், “என்ன அண்ணா? எதுக்கு வண்டிய நிறுத்துனீங்க?” என்று கேட்டான் அவன்.


“தம்பி, அங்க நிக்குற பொண்ணு நம்ம ஊருக்குப் போகணுமாம். உங்களுக்குத் தெரியுமில்ல, இந்த நேரத்துல இங்க வண்டி ஒன்னும் வராது. வயசுப் புள்ள, அந்த வழியாத் தனியாப் போறது அவ்ளோ பாதுகாப்பு இல்லன்னு உங்களுக்கே தெரியும். கொஞ்சம் அந்தப் புள்ளையைக் கூட கூட்டிப் போங்க தம்பி” என்றார் பணிவாக.


ஜீப்பில் இருந்தபடியே எட்டி சந்தியாவைப் பார்த்தவன், என்ன செய்வது என்று தெரியாமல் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தவளை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, “வண்டில ஏறிக்கச் சொல்லுங்க” என்றான்.


அதைக் கேட்டதும் சிரித்தபடி, சந்தியாவை அருகில் வரும்படி அழைத்தார் அந்தக் கடைக்காரர்.


அவளும் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு வந்தாள்.


“அம்மாடி இந்த வண்டில ஏறிக்க… இவரும் நீ போற ஊருதான். உன்னை அங்க இறக்கி விடுவாரு” என்று சொல்ல, சந்தியா திரும்பி ஜீப்பில் இருந்தவனை ஏற இறங்கச் சந்தேகமாக ஒரு பார்வை பார்த்தவள், மெல்ல அந்தக் கடைக்காரர் சட்டையைப் பிடித்து இழுத்து அவர் காதோரமாக, “என்ன அண்ணா, நீங்க தான் சொன்னீங்க. அந்தப் ஊர் பேய் பிசாசுங்களைவிட அந்த ஊர் மனுஷங்க மோசம்னு. இப்ப‌ அந்த ஊர் ஆளு கூடவே என்னைப் போகச் சொல்றீங்களே… இந்த ஆளை நம்பி நான் போகலாமா? நான் வேற அழகா, அம்சமா இருக்கேன். என் பேக்ல காசு வேற இருக்கு.” என்று கிசுகிசுக்க, அது வண்டியில் இருந்தவன் காதிலும் அச்சரம் பிசகாமல் விழ, அதுவரை அவளை நிமிர்ந்து பார்க்காதவன், அப்போதுதான் அவளைக் கவனித்தான்.


உயரமும் இல்லாத குள்ளமும் இல்லாத நடுத்தர உயரத்தில், கோதுமை நிறத்தில், துறுதுறுவென ரெண்டு கோலிகுண்டு கண்களுக்கு இடையில், ஒரு கூர் நாசி, அதற்குக் கீழே அவள் வார்த்தைகளின் நீளத்திற்குச் சற்றும் பொருந்தாத குட்டியான செப்பு வாய், கொஞ்சம் பூசினார் போல் உடல்வாகுடன் பார்க்க கண்ணுக்கு நிறைவாக இருந்தாளோ இல்லையோ, ஆனால் பார்த்ததும் மனதில் நிறையும் அளவுக்கு அழகாகவே இருந்தாள்.


‘ம்க்கும்… நல்ல பம்கின் மாதிரி இருந்துட்டு அழகா, அம்சமா இருக்காளாம்… வாய் ரொம்ப ஜாஸ்திதான் இவளுக்கு… போனால் போகுதுன்னு வண்டி ஏறச் சொன்னா என்னையே தப்பாப் பேசிட்டு இருக்கா இவ’ என்று மனதில் நினைத்தவனுக்கு, ஏனோ அவளை அங்குத் தனியாய் விட்டுச் செல்ல மட்டும் மனம் வரவில்லை.


அவன் ஏதோ சொல்ல வர அதற்குள் அந்தக் கடைக்காரர், “அம்மாடி, கொஞ்சம் வாயை அடக்கிப் பேசு… இந்தத் தம்பி எங்க ஊருக்குக் காவல் தெய்வம் மாதிரி. உனக்கு இவர் கூடப் போறது எங்க ஊரு எல்லை சாமியைத் துணைக்குக் கூட்டிப்போற மாதிரி. தப்பாப் பேசாத…” என்றவர் அவனிடம் திரும்பி, “இந்தப் புள்ளை ஊருக்குப் புதுசு தம்பி, அதான் உங்களைத் தெரியல… பயப்படுது.” என்றவர், “நீ இவர் கூட தைரியமா போம்மா… உனக்கு ஒன்னும் ஆகாது” என்று சொல்ல சந்தியாவும் சரி என்று தலையை ஆட்டியவள், அவள் பொட்டியை வண்டியின் பின்னால் வைத்து விட்டு, முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள்.


அவனும் வண்டியைக் கிளப்ப, “ஒரு நிமிஷம்… ஒரு நிமிஷம்” என்று கத்த அவன் சட்டென வண்டியை நிறுத்தியவன், “என்ன?” என்பது போல் அவளைப் பார்த்தான்.


அவள் சட்டென வண்டியில் இருந்து இறங்கியவள், ஓடிச்சென்று அந்தக் கடைக்காரரைக் கட்டிப் பிடித்து, “ரொம்பத் தேங்க்ஸ் அண்ணா… கரெக்ட் டைம்ல எனக்கு உதவி பண்ணதுக்கு, நான் திரும்பி ஊருக்குப் போகும்போது கண்டிப்பா பெரிய கிப்ட்டோட உங்களை வந்து பார்க்குறேன்.” என்றவள் அவசரமாகத் தன் பாக்கெட்டில் இருந்த டைரி மில்க் சாக்லேட்டை எடுத்து அவர் கையில் வைத்துவிட்டு, வேகமாக ஓடிவந்து மீண்டும் வண்டியில் அமர்ந்து கொண்டவள், “ம்ம்ம், போலாம் போலாம்.” என்றவளைப் பார்த்தவனுக்கு லேசாக இதழ்களின் ஓரம் வளைந்தது.


இரண்டு பக்கமும் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்திருக்கும் சாலையின் நடுவில் ஜீப் மிதமான வேகத்தில் செல்ல, முகத்தில் மோதிய தென்றலைக் கண்மூடி ரசித்துக் கொண்டு வந்தாள் சந்தியா.


“ம்ம்ம் டிவைன்…” என்று முணுமுணுக்க அவளைத் திருப்பிப் பார்த்தவன், “என்ன சொன்னீங்க?” என்று கேட்டான்.


அவன் கேள்வியில் அவனைத் திரும்பிப் பார்த்தவள், “அது ஒன்னும் இல்ல எல்லச்சாமி… இந்த ஊரு, இந்த ரோடு, இந்தக் காத்து எல்லாம் என்னைச் சொர்கத்துக்கே இழுத்துப் போயிடுச்சின்னு சொன்னேன்.” என்றவளை ஒற்றைப் புருவம் உயர்த்தி முறைத்தவன், “இப்ப என்னை என்னன்னு கூப்பிட்ட?” என்று கேட்டான்.


“எல்லச் சாமின்னு கூப்டேன்.” என்றாள் தோள்களைக் குலுக்கி‌.


“என் பேரு எல்லைச் சாமின்னு யார் உனக்குச் சொன்னா?” என்றான் கடுப்பாக.


“அந்த டீக்கடை அண்ணா சொன்னாரே, நீ அந்த எல்லைச்சாமி கூடப் போற, பயப்பட வேணாம்னு…” என்றவள், “அப்ப உங்க பேர் அது இல்லையா?” என்று கேட்க, அவன் ஏதோ சொல்ல வர அதற்குள், “ஆனா, அந்தப் பேர் உங்களுக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு தெரியுமா? நல்லா கம்பீரமா பெரிய மீசை வச்சு, பார்க்க அப்படியே அந்த எல்லைச்சாமி மாதிரியே இருக்கீங்க…” என்றவளை முறைத்துப் பார்த்தவன் மனிதில், ‘இவ சரியான அருந்த வாலா இருப்பா போல… இவ வீட்டுல எப்படி தான் இதை வச்சு சமாளிக்குறாங்களோ’ என்று நினைத்தவனுக்குத் தெரியாது, இனி காலம் முழுமைக்கும் அவளைச் சமாளிக்கப் போகும் பாவப்பட்ட ஜீவன் அவன் தான் என்று.


“அப்ப உங்க பேர் சாமி இல்ல… அப்ப உங்க பேர் என்ன சார்?” என்று கேட்டவளின் ஃபோன் அடிக்க, “ஒரு நிமிஷம்” என்றவள் ஃபோனை அதை எடுத்துப் பார்த்தாள்.


நிலா தான் அழைத்திருந்தாள்.


அழைப்பை ஏற்றவள், “ஹாய் அக்கா பிசாசு, என்னடா இன்னும் கால் வரலயேன்னு நினைச்சேன்.”


“நான் பிசாசு இல்ல, அவ புருஷன் பேசுறேன்.” என்றான் சூர்யா. ஸ்பீக்கரில் சந்தியா பேசியதைக் கேட்டு முறைத்துக் கொண்டிருந்த நிலாவைப் பார்த்துச் சிரித்தபடி.


“ஹாய் மாம்ஸ்… என்ன? உங்க ஃபோன்ல பேலன்ஸ் இல்லியா… ஜியோல ரீசார்ஜ் அமவுன்ட் அதிகம் ஆகிடுச்சின்னு ரீசார்ஜ் பண்ணலயா? உங்க வூட்டுக்காரி ஃபோன்ல இருந்து கூப்பிடுறீங்க… நான் வேணும்னா ரீசார்ஜ் பண்ணி விடவா மாம்ஸ்.” என்றாள் குறும்பாக.


“அடியேய்… வர வர உனக்கு வாய் நீண்டுட்டே போகுது‌‌. சுண்டக்காய் நீ, எம் புருஷனுக்கும் ரீசார்ஜ் பண்றியா?” என்று நிலா கேட்க, “அய்யோ மாம்ஸ், ஃபோன் ஸ்பீக்கரில் இருக்குன்னு சொல்றதில்லையா… பாருங்க நம்ம மாமா, மச்சினி சீக்ரெட் எல்லாம் உங்க பொண்டாட்டிப் பிசாசு கேட்டுடுச்சே…” 


“அடியேய்” என்ற நிலாவை நிறுத்திய சூர்யா, “அடியேய், உங்க அக்கா, தங்கச்சி சண்டையை அப்புறம் வச்சிக்கோங்க” என்றவன், “நீ ஊருக்குப் பத்திரமாக ரீச் ஆகிட்டியான்னு கேட்கத்தான் கால் பண்ணேன். எதுக்காகக் கால் பண்ணேன்னு மறக்குற அளவுக்கு அக்காவும் தங்கச்சியும் அடிச்சிக்குறீங்க…” என்றவன், “அவதான் குழந்தை, உனக்கு என்ன? ரெண்டு புள்ள பெத்தும் இன்னும் சரிக்கு சரி அவகூட சண்டை போட்டு இருக்கியே” என்ற சூர்யாவை நிலா கண்கள் சுருக்கி முறைக்க, “ஹலோ மாம்ஸ், என்ன சவுண்ட் எல்லாம் ஜாஸ்தியா இருக்கு. எவ்ளோ தைரியம் இருந்தா என் அக்காவைத் திட்டுவீங்க, ஆள் இல்லைன்னு குளிர் விட்டுப்போச்சா…” என்று சந்தியா சண்டைக்கு நிற்க, நிலாவோ அவனை நக்கலாகப் பார்த்தவள், “எப்புடி?” என்று புருவம் உயர்த்திக் கேட்க சூர்யா, “உனக்குப்போய் சப்போர்ட் பண்ணேன் பாரு… என்னைச் சொல்லனும்” என்று தலையில் கைவைத்துக் கொண்டான்.


அதில் கணவனைப் பார்த்துச் சிரித்த நிலா, “சரி சரி, விளையாட்டு போதும்… நீ ஊருக்குப் போயிட்டியாடி?” என்று கேட்டாள் பொறுப்பான அக்காவாக‌.


“வந்துட்டேன் க்கா, ஒரு நிமிஷம்” என்றவள் அவனிடம் திரும்பி, “மிஸ்டர் எல்லைச்சாமி, ஊருக்குப்போக இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?” என்று கேட்க அவளை ஏற இறங்கப் பார்த்தவன், “இன்னும் ஒரு இருபது நிமிஷம் ஆகும்.” என்றான் கடுப்பான குரலில்.


“அக்கா இன்னும் 20 மினிட்ஸ்ல ஊருக்குப் போயிடுவேன்.” என்றாள்.


“சரிடி. உன் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போனதும் எனக்குக் கால் பண்ணுடி” என்றவள் குரல் லேசாகக் கரகரக்க அதில் பதறிய சந்தியா, “அக்கா என்னாச்சு க்கா..‌. ஏன் திடிர்னு குரல் ஒரு மாதிரி ஆகிடுச்சு? உடம்புக்கு எதுவும் முடியலியா? அம்மா, அப்பாக்கு எதுவும்.” என்று பதறிட, 


“ஏய்… ஏய், அதெல்லாம் ஒன்னும் இல்லடி… எல்லாரும் நல்லாதான் இருக்கோம்.” என்றதும் நெஞ்சில் கைவைத்துக் கொண்டவள், “பிசாசு பிசாசு… ஒரு நிமிஷம் பயமுறுத்திட்டியே?” என்று திட்ட, அவளை விசித்திரமாகப் பார்த்தான் ஜீப்பை ஓட்டியவன்.


‘கொஞ்சம் முன்ன சின்னக் குழந்தை மாதிரிக் குறும்பா பேசினா? உடனே மாறி சீரியஸாப் பேசினா, இப்ப செண்டிமெண்ட் ஆகி அடுத்த செகன்டே, கோவமாப் பேசுறா? இவ எப்படிப்பட்ட கேரக்டர்னே புரியலியே?’ என்று யோசித்தவனுக்குத் தன் எண்ணம் போகும் திசையை நினைத்து நெஞ்சம் அதிர்ந்தது.


‘ச்சீ… என்ன இது. நான் ஏன் இவளைப்பத்தி யோசிச்சிட்டு இருக்கேன். இவ எப்படிப்பட்டவளா இருந்தா எனக்கென்ன? இன்னும் கொஞ்ச நேரத்தில் இறக்கிவிட்டுப் போகப் போறேன். அவளைப் பத்தி ஏன் நான் இவ்வோ யோசிக்குறேன்?’ என்று தன்னைத் தானே திட்டியவன் வாகனத்தை ஓட்டுவதில் கவனத்தைத் திருப்பினான். 


“என்னாச்சு நிலா?” என்று கேட்டாள் அக்கறையாக.


“இல்லடி என்னன்னு தெரியல, நீ போனதில் இருந்து ஒரு மாதிரியா இருக்கு? மனசு ஒரு நிலையில் இல்ல” என்றவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டான் சூர்யா.


“என்னக்கா, இது சின்னப் புள்ள மாதிரி. என்னமோ இதுதான் நான் முதல் முறை இப்படி ஊருவிட்டு ஊரு வந்திருக்கற மாதிரி பதறிட்டு இருக்க… எத்தனை முறை வேலைக்காக நான் வேற வேற இடத்துக்குப் போயிருக்கேன். அப்பெல்லாம் இல்லாம இப்ப என்ன வந்துச்சு உனக்கு? அந்த 70’ கிட் கலைகிட்ட எதுவும் பேசினியா? அவங்க எதுவும் பிட்டு போட்டுவிட்டு அதுல பயந்து இப்படிப் பேசுறியா என்ன?” என்றவள், “மாம்ஸ், நான் எத்தனை முறை சொல்லியிருக்கேன். அந்த 70’s கலைகூட இவளைச் சேர விடாதீங்கன்னு கேட்டீங்களா?” என்று நிலாவிடம் ஆரம்பித்து சூர்யாவிடம் முடிக்க, அவள் பேசியதில் நிலா சிரித்து விட்டாள்.


“அப்பாடி சிரிச்சிட்டியா… இப்ப தான் எனக்கு ஹாப்பியா இருக்கு. இதேமாதிரி சிரிச்சிட்டே இருப்பியாம். நான் சீக்கிரம் வந்திடுவேனாம். கலை கிட்டயும் அத்தை, மாமா, அப்பா கிட்டையும் நான் அப்புறம் கால் பண்றேன்னு சொல்லிடு.” என்றவள் அழைப்பைத் துண்டிக்க, மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது அவனுக்கு.


“ம்ம்… என்னமோ பேசிட்டு இருந்தோமே?” என்று யோசித்தவள், “ஹான், உங்கப் பேரு என்ன?” என்று கேட்டவள், அவன் பேச வாய் திறக்கும் முன், “என்னோட நேம் சந்தியா… சென்னையில் இருக்கேன். இங்க என்னோட ப்ரண்ட் மேரேஜ், அதுக்காக வந்தேன்.” என்று மடமடவென அனைத்தையும் சொன்னவள், “என்ன சார்… நான் இவ்ளோ பேசிட்டு இருக்கேன். நீங்க உம்முன்னே வரீங்களே?” என்று கேட்க, அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தவன், “என்னை எங்க நீங்க பேச வீட்டீங்க? வந்ததில் இருந்து நீங்க தான பேசிட்டு இருக்கீங்க” என்றான் சலிப்பாக.


அதில் சிறுபிள்ளை போல் நாக்கைக் கடித்துக் கொண்டவள், “சாரி” என்று சொல்ல, அந்தக் காட்சி அவன் மனதில் சட்டென ஒட்டிக் கொண்டது.


“சரி, இப்ப சொல்லுங்க உங்க நேம் என்ன?” என்று கேட்டாள்.


மெதுவாக அவளைத் திரும்பிப் பார்த்தவன், “தேவா பாண்டியன்.“ என்று ஆரம்பித்தவன் சற்றுப் பொறுத்து, “தேவா” என்றான் சுருக்கமாக.


“ம்ம்ம் தேவா… சூப்பர் நேம். பேர் மாதிரி நீங்களும் பார்க்க சூப்பரா இருக்கீங்க” என்று சட்டெனச் சொல்லிவிட, தேவா அவளைப் பட்டெனத் திரும்பிப் பார்த்தான். 


இதுவரை அவனிடம் எந்தப் பெண்ணும் இப்படி தைரியமாக, எந்தத் தயக்கமும் இன்றிப் பேசியது இல்லை‌. அவன் அம்மா, அக்காவைத் தவிர்த்து இந்த ஊரில் இருக்கும் அனைவரும் அவனை மரியாதையோடு தான் பார்ப்பார்கள். அப்படிப் பட்டவனுக்குக் கொஞ்சமும் தயங்காமல், எந்தப் பயமும் இல்லாமல் தன்னுடன் வாயடிக்கும் இந்த வாயாடியை லேசாகப் பிடித்துப் போனது.


கொஞ்ச நேரம் அமைதியாக வந்தவன், “ஒன்னு கேக்கலாமா?” என்று கேட்டான்.


சாப்பிட்டுக் கொண்டிருந்த சாக்லேட்டை மறைத்துக் கொண்டவள், “வேற சாக்லேட் இல்லீங்க… இது ஒன்னு தான் இருக்கு. எச்சில் பண்ணிட்டேன்.” என்றவளைப் பார்த்துச் சிரிப்பு வந்துவிட இதழ்களைக் கடித்து அதை அடக்கினான்.


“அதெல்லாம் எனக்கு வேணாம்.” என்றான்.


“அப்புறம்…” 


“இல்ல, இப்படி வாய் ஓயாமல் பேசிட்டு இருக்கீங்களே, உங்களுக்கு வாய் வலிக்கவே வலிக்காதா?” என்று கேட்க அவனை முகத்தைச் சுருக்கிப் பார்த்தவள், “என்ன தேவா சார், நீங்களும் அந்த 70’s kid கலை மாதிரியே என்னைக் கலாய்க்குறீங்களே“ என்றாள் பாவமாக.


“அது யாரு 70’s kid?” 


“அது கலை, கலைவாணி மை மம்மி” என்றவளை விசித்திர ஜந்துவைப் போல் பார்த்தான் அவன்


“அப்போ இப்ப ஃபோன்ல நீங்க பேசிட்டு இருந்தது உங்க சொந்த அம்மாவைப் பத்தியா?” என்று கேட்க, “அப்கோர்ஸ்… மை ஓன் மம்மி மிசஸ். கலைவாணி பத்தி தான் பேசினேன்” என்று தோள்களைக் குலுக்கியவளை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று புரியாமல் குழம்பினான் தேவா.


“ஆமா சார், இந்த வழி என்ன அவ்ளோ மோசமா? அந்த அண்ணா தனியாப் போறாது ஆபத்துன்னு சொன்னாரு?” என்று கேட்டாள்.


“ம்ம்ம் ஆமா. இந்த டைம்ல அந்தப்பக்கம் போறது கொஞ்சம் ரிஸ்க் தான்.” 


“ஏன் சார்?” என்று மறுபடியும் கேட்டாள் அவள்.


“அந்தப்பக்கம் கொஞ்சம் காடு மாதிரியான இடம் இருக்கு… அங்க சில பொறுக்கிங்க இந்த டைம்ல சாராயம் காய்ச்சிட்டு இருப்பாங்க. அது குடிக்கக் குடிகாரனுங்க நிறையப்பேர் வருவாங்க. அந்த நேரம் பொண்ணுங்க அந்த வழியாப் போறது சேஃப்டி இல்ல.”


“போலீஸ் இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்களா?”


“அவங்களுக்கு மாசா மாசம் கட்டிங் போகும் போது, அவங்க எப்படிக் கண்டுப்பாங்க” என்றான் இறுக்கமான குரலில்.


“இந்த ஊர் எம்.எல்.ஏ கிட்டச் சொல்ல வேண்டியது தானே?” என்றவளைப் பார்த்து அசட்டையாகச் சிரித்தவன், “எம்.எல்.ஏ தம்பி தான் அந்தச் சாராயத்தைக் காய்ச்சுறதே…” என்றதும் சந்தியா எதுவும் பேசவில்லை.


“என்ன எம்.எல்.ஏன்னு சொன்னதும் பயந்துட்டீங்க போல?” என்றவன், “அவனைச் சொல்லி என்ன யூஸ். அறிவு கெட்டுப்போய் உயிருக்குக் கேடுன்னு தெரிஞ்சும், குடும்பத்தைப் பத்திக் கவலை இல்லாம, குடிக்கும் அந்த ஊர் ஆளுங்களைச் சொல்லணும்.” என்றான் எரிச்சலாக.


அதைக்கேட்ட சந்தியா, “அப்படிச் சொல்லாதீங்க… அவங்க எல்லாம் தியாகிகள் பாஸ். தன் குடும்பத்துக்காக தான் அவங்க குடிக்கிறாங்க.” என்றளை குழப்பமாகப் பார்த்தான் தேவா.


“அவங்க ஃபியூச்சர் பிளான் உங்களுக்குப் புரியல… ஒருவேளை நாளைக்கே சாராயம் குடிச்சு அவங்க செத்தா கவர்மெண்ட் லட்ச லட்சமா பணம் கொடுக்கும் பாஸ். அது அவங்க குடும்பத்துக்கு உதவி தானே‌… அதுக்காக அவங்க குடும்பத்துக்காகத் தன்னையே அழிச்சிக்கும் தியாகிங்க பாஸ் அவங்க…” என்றவளின் வார்த்தையில் இருந்த நியாமான கோபம் தேவாவுக்கு நன்கு புரிந்தது.


“காமெடியப் பார்த்தீங்களா பாஸ்… போர்ல நாட்டுக்காகச் சாகும் ஆர்மி ஆபீஸர்ஸ் குடும்பத்துக்கு வெறும் மெடல் தான் கிடைக்கும். ஆனா, இவனுங்களுக்கு நம்ம வரிப்பணத்தில் லைஃப் டைம் செட்டில்மென்ட், சூப்பர் இல்ல” என்று எரிச்சலாகச் சொன்னவளை இப்போது பார்த்தவனின் பார்வையில் மரியாதை கூடி இருந்தது.


சாலை ஓரம் அவள் செல்ல வேண்டிய ஊரின் பெயர்ப் பலகை அருகில் நின்றிருந்த தன் தோழியின் தந்தையைப் பார்த்தவள், “இங்கயே நிறுத்திக்கோங்க தேவா…” என்றதும் அவன் வண்டியை நிறுத்த, வண்டியில் இருந்த கீழே இறங்கி தன் உடமைகளை எடுத்துக் கொண்டவள், “ரொம்ப தேங்க்ஸ்… கரெக்ட் டைம்க்கு ஹெல்ப் பண்ணிங்க…” என்றவள் தன் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு டைரி மில்க் சாக்லேட்டை எடுத்து அவன் கையில் கொடுக்க, அவளையும் அவள் கொடுத்த சாக்லேட்டையும் முறைத்துக் பார்த்தான் தேவா.


அதில் கண்கள் சிமிட்டி சிரித்தவள், “இதுதான் லாஸ்ட் பீஸ். அப்பறம் சாப்பிடலாம்னு வச்சிருந்தேன்…” என்று முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு சொன்னவள், கொஞ்ச தூரம் சென்று திரும்பி அவனைப் பார்த்து, “ஆனா, தேவான்ற பேரவிட உங்களுக்கு எல்லைச்சாமின்ற பேர் தான் ரொம்பப் பொருத்தமா இருக்கு” என்று கத்திச் சொல்லிட்டு ஓடிவிட, வெகு காலம் கழித்து வாய்விட்டுச் சிரித்தான் தேவா.


அவளால் அவன் இதழ்களில் தோன்றிய புன்னகை அவன் வீட்டுக்குச் சென்று இறங்கும் வரை அவன் இதழ்களில் இருந்து இறங்காமல் இருக்க, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் அவன் அக்கா ஆர்த்தி.