உன் விழியில் கைதானேன் 13

 விழி 13


சந்தியா அந்த ஊருக்கு வந்து இரண்டு நாள்கள் கழிந்திருந்தது. தன் தோழி கீர்த்தியுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, கதையடிப்பது, சாப்பிடுவது, தூங்குவது என்று படு பிஸியாகச் சென்று கொண்டிருந்தது அவளின் நாள்கள்.


“அடியே கீர்த்தி, உங்க ஊர் செமையா இருக்கு… எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கு மட்டும் நிச்சயம் ஆகாம இருந்திருந்தால் பேசாம இந்த ஊர்லயே ஒரு பையனைக் கரெக்ட் பண்ணி மேரேஜ் பண்ணி இங்கயே செட்டில் ஆகியிருப்பேன்.” என்று சிலாகித்துச் சொல்ல அவளைப் பார்த்துச் சிரித்த கீர்த்தி, “யாரு நீயி… இந்த ஊர்ல… அடிப்போடி சும்மா. நீயாவது உன் குடும்பத்தை விட்டுட்டு இவ்ளோ தூரம் வர்றதாவது. அவங்களைப் பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தானே, வந்த பாதி மாப்பிள்ளையை வேணாம்னு சொல்லி விரட்டி விட்ட நீ… அப்படிப்பட்ட நீ இந்த ஊர்ல வாக்கப்படப் போறியாக்கும்.” என்று சொல்ல, சந்தியா சிரித்தபடி தலையாட்டியவள், “அதுவும் உண்மை தான். என்னோட பலம், பலவீனம் ரெண்டுமே என்னோட குடும்பம் தான். அதுவும் நிலாக்கா, தேனக்கா, தேவியக்கா பசங்க எல்லாம் என்மேல அவ்ளோ பாசமா இருப்பாங்க, தெரியுமா? இந்த ரெண்டு நாள்ல ஐ மீஸ் யூ ன்னு அவ்ளோ மெசேஜ்.” என்றவளுக்குக் குழந்தைகளின் நினைவில் முகம் மலர்ந்தது.


“சரி என் கதையை விடு, உன் கதைக்கு வா. உன்ற வருங்கால ஊட்டுக்காரர் கால் எதுவும் பண்ணாரா? எதாவது ரொமான்ஸ், ஸ்வீட் நத்திங், சீக்ரெட் மீட்டிங், டேட்டிங் எதாவது?” என்று கண்ணடிக்க, அதில் கன்னங்கள் சிவந்த கீர்த்தி, “ச்சீச்சீ… அதெல்லாம் ஒன்னும் இல்ல… எப்பவாவது கால் பண்ணி சாப்பிட்டியான்னு கேப்பாரு… அவ்ளோதான்” என்றவள் வெட்கத்தில் தலையைக் குனிந்து கொள்ள, சந்தியா அவள் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டி விளையாடிய சமயம், அவர்கள் இருவரையும் நோக்கி வேகமாக ஓடிவந்தது ஒரு காளை மாடு.


முதலில் சந்தியா தான் அந்த மாட்டைப் பார்த்தாள்.


“கீர்த்தி, மாடு…” என்று அவள் கத்த, திரும்பிப் பார்த்த கீர்த்திக்கு ஈரக்குலை நடுங்கி விட்டது. 


சந்தியா, கீர்த்தியின் கையைப் பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பிக்க, மாடு இருவரையும் விடாமல் துரத்தியது.


இருவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, வரம்பில் இறங்கி ஓடிய நேரம், சந்தியா அங்கிருந்த சேற்றில் கீர்த்தியைத் தள்ளிவிட்டு விட்டு இவள் மட்டும் வேறு பாதையில் ஓட, சேற்றில் விழுந்த கீர்த்தியை விட்டு விட்டு மாடு இவளை விரட்டியது.


மாடு விரட்டும் பயத்தில் ஓடிய வேகத்தில் ஒரு இடத்தில் கால்தடுக்கி விழுந்தவளை, இரு வலிய கரங்கள் தாங்கிப் பிடித்தது. இழுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், மாட்டின் மூக்கணாங் கயிற்றை இறுக்கிப் பிடித்திருந்தான்.


அதற்குள் இருவர் அங்கு ஓடிவர அவர்களை முறைத்தவன், “காளையை இப்படி தான் அசால்ட்டா ரோட்ல விடுவீங்களா?” என்று கோபமாகக் கேட்கத் தலையைச் சொறிந்த இருவரும், “தெரியாம தப்பு நடந்திடுச்சு தம்பி, மன்னிச்சிக்கோங்க” என்றவர்கள் அவனின் அணைப்பில் இருந்த சந்தியாவை உற்றுப் பார்த்தபடியே, மாட்டைப் பிடித்துக் கொண்டு செல்ல, பயத்தில் இருந்த சந்தியா இன்னும் அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டபடியே இருந்தாள்.


சில நொடிகள் கழித்து, “ஒன்னும் இல்ல… மாட்டைப் பிடிச்சாச்சு. இனி பயப்பட வேணாம்.” என்ற கம்பீரமான ஆணின் குரல், அவள் காதருகே கேட்க, மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள் சந்தியா.


அங்கு இருவர் மாட்டைப் பிடித்துக் கொண்டு செல்ல, அதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், அப்போதும் அவனை விடாமல் அணைத்தபடியே நின்றாள்.


“மேடம், மாடு போய் அரைமணி நேரம் ஆச்சு… இப்பவாச்சும் என்னை விடும் ஐடியா இருக்கா இல்லயா?” என்று வந்த நக்கல் குரலில் சட்டென அவனைவிட்டு விலகி வந்தவள், அப்போதுதான் நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள். பார்த்தவுடன் அவள் முகம் பிரகாசமாக, “ஐய்… நம்ம‌ எல்லைச்சாமி” என்று சொல்ல அவளை முறைத்துப் பார்த்தான் தேவா.


“என் பேர் எல்லைச்சாமி இல்லை?” என்றான் பல்லைக் கடித்தபடியே.


“ப்ச்ச்… அந்தப் பேர் தான் பாஸ்‌ உங்களுக்கு பர்ஃபெக்டா ஃபிட் ஆகுது. அன்னைக்குத் தனியா நிக்கும் போது துணைக்கு வந்தீங்க. இன்னைக்கு என் உயிரைக் காப்பாத்த சாமி மாதிரி வந்திருக்கீங்க… ஊரைக் காப்பாத்தும் அவர் எல்லைச் சாமின்னா, என்னைக் காப்பாத்தின நீங்களும் எனக்கு சாமி.” என்று சொல்ல, “உன்கிட்ட எல்லாம் பேசி ஜெயிக்க முடியாது போல… நகரு, எனக்கு வேலை இருக்கு” என்றவன் அங்கிருந்து நகர, “ஹலோ எல்லைச்சாமி, ஒரு நிமிஷம்.” என்று அவன் முன்னால் வந்து நின்றவளை அவன் இப்போது நிஜமாகவே முறைத்தான்.


அவன் கையை இழுத்துப் பிடித்து சாக்லேட் ஒன்றை வைத்தவள், “தேங்க் யூ சோ சோ மச்.” என்றவளுக்கு அப்போது தான் கீர்த்தியின் நினைவு வர, “அச்சோ என் ப்ரண்டு… அவளைச் சேத்துல தள்ளிவிட்டு வந்தேனே… என்ன ஆனான்னு தெரிலயே?” என்றவள் கீர்த்தியைப் பார்க்க ஓட வேகமாக ஓடும் அவளையே பார்த்திருந்தவன்,


’யாருக்கும் அடங்க மாட்டா போல… கொரங்கு பொறந்த நேரத்தில் இவளைப் பெத்துட்டாங்க போல அந்த 70’s அம்மா…’ என்று நினைத்தவன் அவள் கொடுத்த சாக்லேட்டைத் தூக்கிப் போட மனம் வராமல் அதைத் தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.


இங்கு கீர்த்தி தட்டுத் தடுமாறி எழுந்து நிற்க, அங்கே ஓடிவந்து அவளைத் தூக்கி விட்டாள் சந்தியா.


“சாரி கீர்த்தி, அந்த டைம்ல என்ன பண்றதுன்னு தெரியல. அதான் தள்ளி விட்டேன்.” என்று வருத்தமாகச் சொல்ல அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்த கீர்த்தி, “பரவால்ல, சந்தியா… என்னைக் காப்பாத்த தானே அப்படிப் பண்ண.” என்றவள், “ஆமா, உனக்கு ஒன்னும் அடிபடலியே? அந்த மாடு எங்க?” என்று அங்கும் இங்கும் பார்த்தாள் பயத்தில்.


“அதெல்லாம் மாட்டை எல்லைச்சாமி புடிச்சிட்டாரு” என்றாள் கீர்த்தியின் முகத்தில் இருந்த சேற்றைத் துடைத்தபடி.


“அது யாருடி எல்லைச்சாமி?” 


“அதுவா… என்னோட ஸ்பெஷல் சாமி. எனக்கு ஒரு பிராப்ளம்னா என் கண்ணு முன்னாடி வந்து நிப்பாரு.” என்றாள் கெத்தாக.


“எனக்குத் தெரிஞ்சு இந்த ஊர்ல அந்தப் பேர்ல யாரும் இல்லயே?’ என்று யோசித்தவளின் தலையில் செல்லமாகக் கொட்டிய சந்தியா, “அதெல்லாம் அப்புறமா யோசிக்கலாம். இப்ப வீட்டுக்குப் போய் முதல்ல குளி” என்றவள் தோழியை இழுத்துச் சென்றாள்.


வீட்டுக்கு வந்த தேவா தன் உடையை மாற்றும் போது, அதிலிருந்த சந்தியா கொடுத்த சாக்லேட்டைப் பார்த்தவன் முகத்தில் சின்னதாகப் புன்னகை மலர, “சரியான அறுந்த வாலு” என்றான் மெல்லிய குரலில்.


“யாரைடா வாலுன்னு சொல்ற?” என்ற ஆர்த்தியின் குரல் பின்னால் கேட்க, சட்டெனத் திரும்பியவன் கையில் இருந்த சாக்லேட்டைப் பார்த்தவள், “என்னடா இது?” என்று கேட்டாள்.


“இது என்னன்னு கூடத் தெரியலியா? இதுதான் சாக்லேட்” என்றவனைச் செல்லமாக முறைத்தவள், “எனக்கு ஒன்னும் கண்ணு குருடு இல்ல… அது சாக்லேட்னு எனக்குத் தெரியுது. ஆனா, அதை நீ ஏன் வாங்கி வச்சிருக்க?” என்று கேட்க, “நான் வாங்கல, அவ குடுத்தா” என்று வாய் தவறி உளறி விட்டான்.


“எதே குடுத்தாளா… யாருடா அவ?” என்று கேட்க, அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தவன், “அவ… அவ இல்ல… அவன்… ஆம்பள… கடைக்காரன். உனக்காக தான் கடையில வாங்கினேன்.” என்றவன் அவள் கையில் சாக்லேட்டை திணித்துவிட்டு நகர, போகும் தம்பியைக் கண்களைச் சுருக்கிப் பார்த்து முறைத்தபடி, ‘சம்திங் ராங்’ என்றாள் தனக்குள்ளே.


மறுநாள் காலை, உணவு மேடையில் தன் எதிரே அமர்ந்து இருந்த தம்பி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.


“ஏய் ஆர்த்தி… எதுக்கு இப்பக் குறுகுறுன்னு என்னையே பார்த்துட்டு இருக்க? என்று கேட்க ஆர்த்தியோ, “கொஞ்ச நாளா உன் முகத்துல ஒரு வித்தியாசம் தெரியுதுடா… இப்பெல்லாம் அடிக்கடி உனக்குள்ள சிரிக்கிறதை நான் பார்க்குறேன். என்னடா மேட்டர்? என்கிட்ட எதாவது மறைக்கிறயா?” என்றாள் குறும்பாக.


“அதெல்லாம் எந்த மேட்டரும் இல்ல… நீயா எதுவும் கற்பனை பண்ணாத?” என்றவன் உணவில் கவனமாக,


 ஆர்த்தி, “ம்க்கும்” என்று உதட்டைச் சுழித்து ஒழுங்கு காட்டியவள், தன் கையில் இருந்த ஜூஸைக் கஷ்டப்பட்டுக் குடிக்க, அவளைப் பார்த்த தேவா, “என்ன அது… ஏன் இப்படிக் கஷ்டப்பட்டு குடிக்கிற?” 


“ஜூஸ் டா” என்றாள் கடுப்பாக.


“ஜூஸ் குடிக்க எதுக்கு மூஞ்சு இப்படி அஷ்ட கோணல்ல போகுது?” 


“டேய்! இது பம்கின் ஜூஸ்டா…” என்க, பம்கின் என்ற பேரைக் கேட்டதும், தேவாவுக்கு சந்தியாவின் ஞாபகம் வந்துவிட, அவன் இதழ்களில் லேசாகப் புன்னகை விரிந்து கொண்டது.


அதைப் பார்த்த ஆர்த்தி, “டேய் டேய்… இப்ப எதுக்குச் சிரிக்கிற?” என்று ஆர்வமாகக் கேட்க, சட்டென்று முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டவன், “யாரு இப்பச் சிரிச்சா… அதெல்லாம் ஒன்னும் இல்ல.” என்றவன் எழுத்து கொள்ள, ஆர்த்தி அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள்.


“எனக்கு நிறைய வேல இருக்கு, நான் கிளம்புறேன்.” என்ற தேவா, அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட, ஆர்த்தி போகும் அவனைப் பார்த்தவள், “கண்டிப்பா என்னமோ இருக்கு… கண்டு புடிக்கிறேன்.” என்றவள் தன் ஜூஸைக் கஷ்டப்பட்டுக் குடித்து முடித்தாள்.


மதிய வேளை தன் வண்டியில் சென்று கொண்டிருந்த தேவா, அந்தக் காட்டுப் பகுதியில் ஒதுக்குப்புறமாக ஒரு ஸ்கூட்டியும், அதற்கு அருகில் ஒரு பெண்ணும் நிற்பதைப் பார்த்தவன், “ரகு வண்டி நிறுத்து.” என்க, சாலையோரம் வண்டியை நிறுத்தினான் ரகு.


“என்ன அண்ணா? என்ன ஆச்சு?” என்று கேட்டான் ரகு.


“அங்க ஒரு பொண்ணு நிக்குது பாரு… இந்த நேரத்துல இந்த மாதிரி இடத்தில் இந்தப் பொண்ணு என்ன பண்ணுதுன்னு தெரியலியே?” என்றவன், “நீ இங்கயே இரு” என்றவன் மெதுவாக அந்தப் பெண்ணின் அருகில் சென்றவன், சட்டென அவள் வாயைப் பொத்தித் தன்புறம் இழுத்து அவளைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டவன், “ஷ்ஷ்ஷ்” என்றான் அவள் காதோரம்.


அவள் அமைதியானதும் மெல்லத் தன் பிடியைத் தளர்த்தியவன், அப்போதுதான் அவள் முகத்தைப் பார்த்தவன், “நீயா?” என்று கேட்டான் அவளை அங்கு எதிர்பாராத பாவனையோடு.


“அது இருக்கட்டும், இப்ப எதுக்கு என்னைக் கட்டிப் புடிச்சீங்க?” என்று கண்களைப் பெரிதாக விரித்துக் கொண்டு கேட்க, அவளைப் பார்த்து முறைத்த தேவா, கண்களால் அவள் மறைந்திருந்த மரத்தைக் காட்டியவன், “அங்கப்பாரு” என்றான் இறுக்கமான குரலில்.


அவள் திரும்பிப் பார்க்க, அங்கு அவள் மறைந்திருந்த மரத்தின் கிளையில் ஒரு பாம்பு தொங்குவதைப் பார்த்தவள், “ஆத்தாடி” என்று கத்தியவள், தேவாவின் சட்டையை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள்.


“ஜஸ்ட் மிஸ்டு… நீங்க மட்டும் வராமல் இருந்திருந்தால் அந்த நாகினி இன்னேரம் என்னைப் போட்டிருக்கும், நானும் பொட்டுன்னு போயிருப்பேன்.” என்றவள், “நான் இதைச் சொன்னா நீங்க கடுப்பாவீங்க… இருந்தாலும் சொல்றேன். மறுபடியும் நீங்க ஒரு எல்லைச்சாமின்னு ப்ரூஃப் பண்ணிட்டீங்க. எனக்கு ஒரு பிரச்சனை வந்தால் சாமி மாதிரி என் முன்னாடியோ, இல்ல பின்னாடியோ நிக்குறீங்க…” என்று சொல்ல, தேவாவுக்கு ஏனோ இப்போது அவள் சொன்னதை மறுத்துப்பேச முடியவில்லை.


அவளுக்கு ஒரு பிரச்சனை என்றால், சரியான நேரத்தில் அந்த இடத்தில் தான் இருப்பது எப்படி என்று அவனுக்கே புரியவில்லை. 


“அதவிடு, நீ இந்த நேரத்தில் இங்க என்ன பண்ற?” என்க, சந்தியா தன் கேமராவைத் தூக்கிக் காட்டி, “ஃபோட்டோ எடுக்க வந்தேன்.” என்றாள்.


“உனக்கு ஃபோட்டோ எடுக்க வேற இடமே கிடைக்கலியா… சாராயம் காய்ச்சும் இடம் தான் கிடைச்சிதா?” என்றான் எரிச்சலாக.


“நேச்சரை போட்டோ எடுக்கணும்னா வேற எங்கயாவது போயிருப்பேன். சாராயம் காய்ச்சறதை ஃபோட்டோ எடுக்கனும்னா இங்க தானே வந்தாகணும்.” என்றவளைக் குழப்பமாகப் பார்த்தான் தேவா.


“நீ என்ன‌ சொல்ற?”


“நீங்க தானே சொன்னீங்க, இங்க இருக்கற போலீஸ் இதையெல்லாம் தட்டிக் கேக்குறது இல்லன்னு… அதான் இதையெல்லாம் ஃபோட்டோ எடுத்து என் அங்கிளுக்கு அனுப்பப் போறேன்.” என்றாள்.


“உங்க அங்கிள் என்ன அவ்ளோ பெரிய ஆளா? எம்.பியா இல்ல மந்திரியா?” என்று கிண்டலாகக் கேட்க, அவனைப் பொய்யாக முறைத்தவள், “அவரு சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர்.” என்றாள் இல்லாத காலரைத் தூக்கி விட்டபடி.


அதைக் கேட்டுச் சிரித்த தேவா, “நான் மினிஸ்டர் வரை ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன். அவரு அந்த ஊர் பிரச்சனையில் நீங்க ஏன் மூக்கை நுழைக்குறீங்க, ஏற்கனவே அந்த ஊர் எம்எல்ஏ க்கும் உங்களுக்கும் குடும்பப் பகை இருக்கு, தேவையில்லாம இந்தப் பிரச்சனையைத் தொடங்கி ரெண்டு ஊருக்கு நடுவுல கலவரம் எதுவும் இழுத்து விட்றாதீங்கன்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டாரு… இதுல நீ சென்னை போலீஸ் கமிஷனர் வச்சு இந்த ப்ராப்ளத்தை சால்வ் பண்ணிடலாம்னு சொல்ற… உனக்கே இது காமெடியா தெரியல.” என்றவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்த சந்தியா, “என்னால என்ன பண்ண முடியும்னு பொறுத்திருந்து தான் பாருங்களேன்.” என்றவள் அங்கிருந்து நகர அவள் கையைப் பிடித்து நிறுத்தினான் தேவா.


அவள் என்ன என்பது போல் பார்க்க, “நீ தனியாகப் போக வேணாம். யாராவது இங்க உன்னை இந்தக் கேமராவோட பார்த்தால் உனக்குத்தான் ஆபத்து. என்னோட வா.” என்று அவள் கையைப் பிடித்தபடி தன் ஜீப் அருகில் வந்தவனை அதிசயமாகப் பார்த்தான் ரகு‌.


“நான் என் பிரண்டோட ஸ்கூட்டில தான் வந்தேன். அதை என்ன பண்றது தேவா?” 


“அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல” என்றவன் ரகுவிடம், “ரகு அங்க நிக்கிற ஸ்கூட்டிய எடுத்திட்டு என் பின்னாடியே வா.” என்றவன் சந்தியாவிடம் திரும்பி, “நீ வண்டில உக்காரு. ஊருக்குள் போனதும் உன் ஸ்கூட்டியை எடுத்துக்க.” என்றதும் சரி என்று தலையாட்டியவள் ஜீப்பில் அமர்ந்து கொள்ள, தேவா வண்டியைக் கிளப்பினான்.


நடப்பது எதுவும் புரியாத ரகு, அந்த ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தான்.