உன் விழியில் கைதானேன் 14
விழி 14
அடுத்து வந்த இரண்டு நாள்களும் அமைதியாகவே சென்றது.
அன்று காலை உறங்கிக் கொண்டிருந்த தேவாவின் அறைக்கதவைப் பலமாகத் தட்டினான் ரகு.
கண்களைக் கசக்கியபடியே எழுந்த தேவா, கடிகாரத்தைப் பார்க்க அதில் காலை எட்டு மணி என்று காட்டியது.
“என்ன இது, இன்னைக்கு இவ்ளோ நேரம் தூங்கிட்டேன்” என்றபடியே எழுந்து வந்து கதவைத் திறந்த தேவா, முகம் முழுவதும் மகிழ்ச்சியோடு கையில் இனிப்புடன் இருந்த ரகுவைப் பார்த்தான்.
“என்னடா?” என்று கேட்க அவன் வாயில் இனிப்பைத் திணித்தான் ரகு.
“டேய்… டேய்…” என்று அவனைத் தடுத்தவன், “இன்னும் பிரஷ் கூடப் பண்ணலடா” என்றவனைக் கட்டிப்பிடித்த ரகு, “அண்ணா நம்ம ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தது இன்னைக்கு நடந்திடுச்சு” என்று குதூகலமாகச் சொல்ல அவனைப் புரியாமல் பார்த்த தேவா, “என்னடா ஆச்சு? முதல்ல விஷயத்தைச் சொல்லு” என்றான்.
“அண்ணா, அந்த தீனாவோட சாராயம் காய்ச்சுற இடம் மொத்தமும் போலீஸ் வந்து சீஸ் பண்ணிடுச்சு. அந்த தீனாவையும், அவன் ஆளுங்களையும் அரஸ்ட் பண்ணிட்டாங்க… அந்த எம்.எல்.ஏவால கூட ஒன்னும் செய்ய முடியல…” என்று சொல்லத் தேவா திகைத்து நின்றான்.
“எப்படி? என்னன்னு தெரியல, இன்னைக்கு மார்னிங் ஒரு ஸ்பெஷல் டீம் போலீஸ் வந்து மொத்தமாக எல்லாரையும் புடிச்சிட்டாங்க.” என்று சந்தோஷமாகச் சொன்னவன் அங்கிருந்து செல்ல, தேவாவின் புருவங்கள் யோசனையாகச் சுருங்கியது.
இரண்டு நாள்கள் முன் சந்தியா சொன்னது அவன் நினைவில் வர, ‘ஒருவேளை இதெல்லாம் அவதான் செஞ்சாளா?’ என்று யோசித்தவனுக்கு உடனே அவளைப் பார்த்து இதைப்பற்றிக் கேட்க வேண்டும் என்று மனம் பரபரத்தது. ஆனால், அவளை எங்குச் சென்று தேடுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் பேரைத்தவிர வேறு ஒன்றும் அவனுக்குத் தெரியாமல் இருக்க, அவளை எப்படிப் பார்த்துப் பேசுவது என்று குழம்பியவனை ஆர்த்தியின் குரல் கலைத்தது.
“டேய் தேவா… இந்த ரகு என்னமோ சொல்றானே, அதெல்லாம் உண்மையா?” என்று கேட்ட அக்காவின் முகம் பார்த்தவன், “ரகு சொன்னா உண்மையா தான் இருக்கும். எதுக்கும் நான் அங்கப்போய் என்னன்னு பார்த்துட்டு வரேன்.” என்றவன் ரகுவுடன் கிளம்பிச் சென்றான்.
அங்குச் சென்று பார்க்க, ரகு சொன்னதுபோல் அந்த மொத்தக் கூட்டத்தையும் போலீஸ் கைது செய்திருந்தது. அதைப் பார்த்த தேவாவுக்கு நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது. கண்களை மூடி ஆழ்ந்து மூச்செடுத்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ குறுகுறுப்பு. அவன் உள்மனது சந்தியா தன் அருகில் தான் இருக்கிறாள் என்று சொல்வது போல் இருக்க, சட்டெனக் கண்களைத் திறந்தவன் விழிகள் அங்கும் இங்கும் அவளைத் தேடி அலைய, அவன் விழிகளுக்கு வலியைக் கொடுக்காமல் அவன் கண்கள் தொடும் திசையில் அவனைப் பார்த்துச் சிரித்தபடியே நின்று கொண்டிருந்தாள் சந்தியா.
அவளைப் பார்த்தது பார்த்தபடி அவன் நிற்க, அவன் முன்னால் வந்து நின்ற சந்தியா, “ஹாய் தேவா… குட் மார்னிங்” என்றாள் துள்ளல் குரலில்.
அதில் சுயவுணர்வுக்கு வந்தவன், “இதெல்லாம் நீதான் செஞ்சியா?” என்று கேட்டான் நேரடியாக.
“எது நானா? நானெல்லாம் சாதாரணமான ஆளு… என்னால என்ன செய்ய முடியும்?” என்று ராகம் இழுத்தவளை அவன் அழுத்தமாகப் பார்க்க, அவனைப் பார்த்துச் சிரித்தவள், “ஏன் பாஸ், பூனை கருவாட்டுப் பானையைப் பார்க்குற மாதிரி இப்படிக் குறுகுறுன்னு பார்க்குறீங்க…” என்றவளின் அருகில் சென்று நெருங்கி நின்றவன், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “நீதான் இதெல்லாம் செஞ்சேன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஒழுங்கா சொல்லு, என்ன செஞ்ச?” என்று மூச்சுக்காற்று தொடும் தூரத்தில் நின்றவனின் நெருக்கத்தில் ஒரு நிமிடம் தடுமாறிய சந்தியா, அடுத்த நொடி தன்னை மீட்டுக் கொண்டு, “ஹலோ எல்லச்சாமி, கொஞ்சம் தள்ளி நில்லுங்க… இது வில்லேஜ், யாராச்சும் பார்த்தா தப்பா நினைக்கப் போறாங்க…” என்று அவள் சொன்ன நேரம், தவறான ஒரு ஜோடிக் கண்களில் இவர்களின் இந்த நெருக்கமான காட்சி விழுந்து தொலைந்தது.
அவள் சொல்லிய பிறகே அவளை வெகுவாக நெருங்கி இருந்ததை உணர்ந்த தேவா, அவளை விட்டு விலகித் தலையை அழுத்திக் கோதிக் கொண்டவன், “சாரி… சாரிம்மா… ரொம்ப சாரி” என்றான் உண்மையான வருத்தத்துடன்.
அதை உணர்ந்த சந்தியா, “இட்ஸ் ஓகே” என்றதும் தான் தேவாவுக்கு நிம்மதியாக இருந்தது.
“சரி, முதல்ல நீ எப்படி இதெல்லாம் செஞ்சேன்னு சொல்லு” என்றான் விடாக்கண்டனாக.
“அது ஒன்னும் பெரிய மேட்டர் இல்ல பாஸ்… நீங்க தானே போலீஸ், மந்திரி எல்லாம் இவங்களுக்கு சப்போர்ட்டுன்னு சொன்னீங்க. அதான் இங்க எடுத்த போட்டோ, வீடியோஸ் எல்லாத்தையும் சிஎம் செல்லுக்கு, கமிஷனர், டிவி சேனல், சோசியல் மீடியான்னு அங்க இருக்கற என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாத்துக்கும் அனுப்பி வச்சிட்டேன். அவ்ளோதான்… உடனே மேட்டர் பத்திக்கிச்சு. அடிச்சான் பாரு, அப்பாயின்மென்ட் ஆர்டருன்ற மாதிரி உடனே ஆக்ஷன் எடுத்துட்டாங்க. உங்க மந்திரி எங்க தன்னோட பதவிக்கு ஆப்பு வந்திடுமோன்னு பயந்து, அவர்தான் ஸ்பெஷல் போலீஸ் டீம் வச்சு இதெல்லாம் பண்ணாரு.” என்றவள், “இங்க சொல்ற விதம்னு ஒன்னு இருக்கு தேவா… அதுமாதிரிச் சொன்னால் தான் சில பிறவிங்களுக்குப் புரியும். சில விஷயத்தில் சோசியல் மீடியா கொஞ்சம் தப்பா இருந்தாலும், அதனால இந்த மாதிரிச் சில நல்ல விஷயங்களும் செய்ய முடியும்.” என்றவளைப் பிரமிப்பாகப் பார்த்தான் தேவா.
“தேங்க்ஸ்… என்னால செய்ய முடியாததை நீ செஞ்சிருக்க… ரொம்ப தேங்க்ஸ்.” என்றவனைப் பார்த்துச் சிரித்தவள், “நீங்க செய்யக் கூடாதுன்னு நினைக்கல, நீங்க எதுவும் ஸ்டெப் எடுத்தால் ரெண்டு ஊருக்கு நடுவுல கலவரம் எதுவும் வந்து, அதனால உயிர் சேதம் எதுவும் நடந்துடுமோன்னு தானே யோசிச்சீங்க.… உங்களால முடிஞ்சதை நீங்க செஞ்சீங்க, என்னால முடிஞ்சதை நான் செஞ்சேன். இந்த நாட்டோட குடிமகள்ன்ற முறையில், இந்தக் குடிமகன்களோட உயிரைக் காப்பாத்தும் கடமை எனக்கும் இருக்கில்ல.” என்றவளின் ஒவ்வொரு வார்த்தையும் தேவாவின் கருத்தைக் கவர்ந்ததென்றால், பேசும் அவளின் முகம் அவன் மனதை மொத்தமாகக் கொள்ளையிட்டு இருந்தது.
“சரி எல்லச்சாமி… நான் கிளம்புறேன். இனிமே இந்த வழியில எல்லாரும் தைரியமாய் போலாம்.” என்றவள் தன் வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல, தேவா புன்னகை முகமாக அவளைப் பார்த்தபடியே நின்றான்.
“அண்ணா போலாமா?” என்ற ரகுவின் குரலில் தலையை உலுக்கித் தன் இயல்புக்கு வந்தவன், “ம்ம்ம் போலாம்.” என்றபடி வண்டியில் ஏறிக் கொண்டான்.
அவன் மனம் முழுமையிலும் அவள் முகம் மட்டுமே நிறைந்து இருந்தது. அவளின் அழகோடு, அவளின் குணமும், செயலும் அவனை ரொம்பவே ஈரத்திருந்தது.
“அந்தப் பொண்ணு யாருன்னா?” என்று ரகு கேட்க, “தெரியாது” என்றான் எங்கோ பார்த்தபடி.
சந்தியா மீதான பிடித்தம் அவன் முகத்தில் தெளிவாகத் தெரிய, அதை மனதில் குறித்துக் கொண்ட ரகு, வீட்டிற்குச் சென்றதும் அதை ஆர்த்தியிடம் பத்த வைக்கவும் தவறவில்லை.
“என்னடா சொல்ற?” என்று ஆர்த்தி ஆர்வமும் ஆச்சரியமாகவும் கேட்க, “ஆமாக்கா… அந்தப் பொண்ணு இவரைத் தேவான்னு தலையில அடிச்ச மாதிரி பேர் சொல்லித்தான் கூப்பிட்டுச்சு… அதோட நம்ம அண்ணா அந்தப் பொண்ணை எப்படி நெருங்கி நின்னாரு, தெரியுமா? அதுகூடப் பரவால்ல, அன்னைக்கு அந்தப் பொண்ணைக் கட்டிப் புடிச்சிட்டு நின்னாரு.” என்று அன்று பாம்பிடம் இருந்து சந்தியாவைக் காப்பாற்ற தேவா அவளை இழுத்துப் பிடித்திருந்ததைச் சொல்ல, ஆர்த்திக்கு அதிர்ச்சியில் கண்கள் விரித்துக் கொண்டது.
“அந்த பொண்ணைப் பார்க்கும்போது அண்ணா முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுதுக்கா… எனக்கு என்னமோ நம்மாளுக்கு அவங்களைப் புடிச்சிருக்கின்னு தோணுது.” என்றான் ரகு குதூகலமாக.
“அப்படி மட்டும் இருந்தா உன் வாயில ஒரு படி சர்க்கரையைக் கொட்டறேன்டா… நீ சொன்ன மாதிரி அவனுக்கு அந்தப் பொண்ணைப் புடிச்சிருந்தால், எப்பாடுபட்டாவது அவனுக்கு அந்தப் பொண்ணைக் கல்யாணம் செஞ்சி வச்சிடுவேன். அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை அமையனும். இந்த ஊரைவிட்டு எங்கயாவது போய் அவன் சந்தோஷமா எல்லாத்தையும் விட்டுட்டு, பழசை மறந்துட்டு நிம்மதியா வாழணும்.” என்றவளுக்குக் கண்கள் கலங்கி விட்டது.
“நீ ஒன்னும் அழுவாதக்கா… நாளைக்குள்ள அந்தப் பொண்ணு யாரு என்னன்னு விசாரிச்சு முழுத் தகவலோட உன் முன்னாடி நிக்குறேன்.” என்ற ரகுவுக்குத் தெரியாது அவன் கொண்டு வரப்போகும் தகவல் அவ்வளவு இனிப்பானதாக இருக்காது என்று.
மறுநாள் எப்போதும் விடியும் என்று ரகு கொண்டு வரும் செய்திக்காக ஆவலுடன் காத்திருந்த ஆர்த்தியின் கண்ணில் படாமல் ஆட்டம் காட்டிக் கொண்டு இருந்தான் ரகு. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆர்த்தி அலைபேசியில் அழைக்க, அதையும் அவன் ஏற்கவில்லை. அவன் செய்கையில் கோவத்தின் உச்சிக்குச் சென்ற ஆர்த்தி, “இன்னும் பத்து நிமிஷத்தில் நீ என் முன்னாடி இல்ல… நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைக்க, அடுத்து ஐந்தாவது நிமிடம் அவள் முன் வந்து நின்றான் வேறு வழி இல்லாமல்.
“ஏன்டா, காலையில் இருந்து எங்க போய்த் தொலஞ்ச… கால் பண்ணால் கூட துரை எடுக்க மாட்டீங்களா?” என்று பொரிந்து தள்ளியவளை நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்தபடியே நின்றான் ரகு.
“என்னடா… ஏன் இப்படி வாயை மூடிட்டு நிக்குற? எதாவது வாயத் திறந்து பேசுடா.” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் கலங்கி இருக்க, ஆர்த்திக்குப் பதட்டமாகி விட்டது.
“டேய் ரகு… என்னடா ஆச்சு? ஏன் உன் கண்ணு கலங்கி இருக்கு? என்னடா? என்று பதட்டமாகக் கேட்க,
“உங்க ஆசை நடக்காதுக்கா” என்றான் எந்த முகாந்திரமும் இல்லாமல்.
“எனக்குப் புரியலடா”
“நேத்து நான் ஒரு பொண்ணைப் பத்திச் சொன்னேன் இல்ல, அந்… அந்தப் பொண்ணுக்கு” என்றவனுக்கு அதற்கு மேல் பேச்சு வராமல் போக அவன் அருகில் வந்து ஆர்த்தி, “என்னடா… அந்தப் பொண்ணுக்கு என்ன? எதுவும் பிரச்சனையா?” என்றாள் பயத்தோடு.
“அந்தப் பொண்ணுக்கு கல்… கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சாம்க்கா” என்று கனத்த குரலில் சொல்ல, அதைக் கேட்ட ஆர்த்தி அதிர்ந்து நின்றாள்.
“என்னடா சொல்ற நீ? நீ சொல்றது உண்மையா?”
“ஆமாக்கா… அந்தப் பொண்ணு நம்ம ரிட்டையர்டு கான்ஸ்டபிள் ராமசாமி சார் பொண்ணு கல்யாணத்துக்கு தான் இந்த ஊருக்கு வந்திருக்கு… அவர்கிட்டச் சும்மா அந்தப் பொண்ணு பத்திக் கேட்டப்போ அவர் தான் சொன்னாரு… இங்க வர்றதுக்கு ஒரு வாரம் முன்ன தான் அந்தப் பொண்ணுக்கு நிச்சயம் ஆச்சாம். இன்னும் ஆறு மாசத்தில் கல்யாணமாம்.” என்றது தான். ஆர்த்தி கால் மடக்கி தரையில் அமர்ந்தவள் கன்னங்களில் கண்ணீர்த் துளிகள் முத்து முத்தாக உருண்டது.
“இவனுக்கு மட்டும் ஏன்டா இப்படியெல்லாம் நடக்கணும்? இவன் ஆசைப்பட்டது எதுவும் இவனுக்கு ஏன்டா கிடைக்க மாட்டேங்குது? இந்த ஊருக்குள்ள வரும் முன்ன எவ்ளோ சந்தோஷமாய் இருந்தான். எந்த நேரம் இந்த ஊருக்குள்ள காலடி எடுத்து வச்சானோ, அப்ப இருந்து அவன் வாழ்கையே நாசமாய் போச்சே…” என்று அழுதவளை எப்படி ஆறுதல் படுத்துவது என்று தெரியாமல் விழித்த ரகு, “அக்கா, நீங்க அழாதீங்க அக்கா… நிச்சயமான கல்யாணம் எல்லாம் அப்படியே நடந்திடுதா என்ன? அந்தப் பொண்ணு நம்ம அண்ணாக்குத் தான்னு அந்த ஆண்டவன் முடிச்சுப் போட்டிருந்தால் அது கண்டிப்பா நடக்கும்.” என்று சொல்ல, ஆர்த்திக்கோ மனதில் அப்படி எதுவும் நடந்து தன் தம்பிக்கு நல்லது நடந்துவிடாதா என்று மனம் வேண்ட ஆரம்பிக்க, அடுத்த கணமே ஒரு பெண்ணாகச் சந்தியாவின் நிலையை யோசித்தவள், மனதைத் தேற்றிக் கொண்டு, “நம்ம கையில் எதுவும் இல்ல ரகு… பார்ப்போம் கடவுள் அவன் வாழ்க்கையில் என்ன செய்யப் போறாருன்னு” என்றவள் அமைதியாக அங்கிருந்து செல்ல, அவர்கள் இருவரும் பேசியதைப் பின்னால் இருந்து கேட்டுக் கொண்டிருந்த தேவாவுக்கு, சந்தியாவின் கல்யாணச் செய்தி இதயத்தில் யாரோ முள்வைத்துக் குத்தியதுபோல் இருந்தது.
தேவா தன் லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க, அவன் அருகில் வந்து அமர்ந்தாள் ஆர்த்தி.
“என்ன ஆர்த்தி, நீ இன்னும் தூங்கலியா?” என்று கேட்டவனின் பார்வை முழுவதும் தன் வேலையின் மீதே இருக்க, அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்த ஆர்த்தி, “வேலு சித்தப்பா கால் பண்ணி இருந்தாரு.” என்றாள்.
“ம்ம்ம்… என்ன சொன்னாரு, வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்கலாம்?” என்று கேட்டான்.
“எல்லாரும் நல்லா இருக்காங்க… அவர் உன்னைப்பத்தி தான் பேசினாரு.”
“என்னைப் பத்தியா? என்ன விஷயம்” என்றான் எதையோ டைப் அடித்த படியே.
“அவரு சொந்தக்காரப் பொண்ணு ஒன்னு இருக்காம். அந்தப் பொண்ணை உனக்குக் கல்யாணம்” என்ற ஆரம்பிக்க, டைப் அடித்துக் கொண்டிருந்தவன் விரல்கள் வேலை நிறுத்தம் செய்ய, நிமிர்ந்து ஆர்த்தியை அழுத்தமாகப் பார்த்த தேவா, “முடியாதுன்னு சொல்லிடு.” என்றவன் விரைப்பாக.
“டேய், உனக்கும் வயசு ஆகிட்டே போகுதுடா… இன்னும் எப்பதான் கல்யாணம் பண்றதா உத்தேசம்.” என்றாள் கோவமாக.
“எனக்கு அந்த ஐடியாவே இல்ல ஆர்த்தி.” என்றான் முடிவாக.
“ஏன்டா?”
“ஏன்னு உனக்குத் தெரியாதா?” என்றான் அழுத்தமாக.
“தேவா…” என்று தவிப்போடு அழுத அக்காவை வாஞ்சையுடன் பார்த்தவன், “ப்ளீஸ் ஆர்த்தி… என்னோட வாழ்க்கை என் கையில் இல்ல. அந்த எம்.எல்.ஏயும் அவன் தம்பி தீனாவும் எப்ப என்னைக் கொல்லலாம்னு நேரம் பார்த்துட்டு இருக்கானுங்க… நான் வெளிய போயிட்டு முழுசாய் திரும்பி வர வரைக்கும் நீ உள்ளுக்குள் எப்படித் தவிச்சிட்டு இருக்கேன்னு எனக்கு நல்லாத் தெரியும். அதே தவிப்பை இன்னொரு பொண்ணுக்குக் கொடுக்க நினைக்கறியா நீ… எப்ப வேணும்னாலும் எனக்கு எதுவும் நடக்கலாம். தேவையில்லாம ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்க எனக்கு விருப்பம் இல்ல. அதோட அந்த எக்ஸ் எம்.எல்.ஏ கொலை…” என்று ஆரம்பித்தவன் வாயை மூடிய ஆர்த்தி கலங்கிய கண்களுடன் தலையை இடவலமாக ஆட்ட, தன் வாயை மூடி இருந்த அவளின் கையை எடுத்தவன், “என்னால முடியாது ஆர்த்தி.” என்றவன் அங்கிருந்து சென்று விட, ஆர்த்திக்குத் தன் தம்பியின் எதிர்காலத்தை நினைத்து நெஞ்சம் விம்மியது.