உன் விழியில் கைதானேன் 15
விழி 15
சந்தியா அந்த ஊரில், ஒரு இடம் விடாமல் கீர்த்தியுடன் சுற்றித் திரிந்தாள்.
இன்னும் மூன்று நாட்களில் அந்த ஊர் அம்மன் கோவிலில் ஆடிமாதத் திருவிழா இருக்க, அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருந்தது.
கீர்த்தியின் தந்தை கோயிலில் பூ அலங்காரம் செய்யும் பொறுப்பை ஏற்றிருக்க, அவருக்கு உதவியாகக் கீர்த்தியுடன் வந்திருந்தாள் சந்தியா.
அலங்காரத்திற்குத் தேவையான பூக்கள் வந்திருக்க சந்தியா, அதை வண்டியில் இருந்து கீழே இறக்கி வைத்துக் கொண்டு இருந்தவள் அங்கு தேவாவைப் பார்க்க, “ஹலோ எல்லச்சாமி” என்று கத்தி அழைத்தாள்.
அவள் குரலில் சட்டெனத் திரும்பிப் பார்த்தவன் கண்கள் இரண்டும் அவளைப் பார்த்தது பார்த்தபடியே அப்படியே வியந்து நின்றது.
பாவாடை, தாவணியில் பச்சரிசிப் பற்கள் தெரிய அழகாகச் சிரித்தபடி நின்றவளின் கோலத்தில் சித்தம் கலங்கித் தான் போனான் ஆணவன், ஒரு நிமிடம். அடுத்த நிமிடமே அவள் வேறொருவருக்கு நிச்சயம் செய்த பெண் என்ற நினைவு வர, தன் தலையை உலுக்கி அவன் மனதை நிலைபடுத்தியவனை, “எல்லச்சாமி, இங்க கொஞ்சம் வாங்க” என்ற சந்தியாவின் அழைப்பு அவளை நோக்கிச் செல்ல வைத்தது.
“என்ன வேணும்? எதுக்குக் கூப்பிட்டிங்க?” என்றவனைப் புருவம் சுருக்கிப் பார்த்தவள், “என்ன பாஸ், மரியாதை எல்லாம் பலமா இருக்கு” என்றாள் அவனைப் பார்த்துக் குறும்பாகக் கண்ணடித்துச் சிரித்தபடி.
அதில் ஒரு நிமிடம் தடுமாறிய மனதைக் கஷ்டப்பட்டு அடக்கியவன், “எதுக்குக் கூப்பிட்டிங்க?” என்றான் இறுக்கமான குரலில்.
அவனைப் புரியாமல் பார்த்த சந்தியா, “இல்ல, நிறையப் பூக்கூடை இருக்கு, அதான் ஹெல்ப் கேக்கலாம்னு கூப்பிட்டேன்.” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன் திரும்பி வண்டியில் பார்த்தான்.
கிட்டத்தட்ட ஐம்பது பூக்கூடைகள் இருக்க, அவள் ஒருத்தியால் அதை எடுத்து வைக்க முடியாது என்று தெரிந்தவன், “ரகு இங்க வா” என்று அழைக்க ரகுவும் உடனே அங்கு ஓடிவந்தான்.
“எனக்குக் கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. இவன் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவான்” என்றவன் ரகுவிடம் திரும்பி, “கூடை எல்லாத்தையும் எடுத்து வைக்க அவங்களுக்கு உதவி பண்ணு” என்றவன் விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட, செல்லும் அவனையே கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா.
“என்னாச்சு இவருக்கு?” என்று முணுமுணுக்க அவளை முறைத்துப் பார்த்த ரகு, “என்ன செய்யணும் சொல்லு” என்றான் கடுப்பாக.
இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள், “ஹலோ, என்னங்க ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்? அவர் என்னடான்னா யாரோ தெரியாத ஆள்கிட்டப் பேசுற மாதிரிப் பேசிட்டுப் போறாரு, உங்களை எனக்கு யாருன்னு கூடத் தெரியாது. நீங்க இப்படிக் கடுப்பாப் பேசுறீங்க. எனக்கு ஒண்ணுமே புரியல.” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவளை மீண்டும் முறைத்தவன், மடமடவென அனைத்துக் கூடைகளையும் இறக்கிக் கீழே வைத்தான்.
“அவ்ளோதான்… எல்லாம் இறக்கி வச்சாச்சு, நான் கிளம்புறேன்.” என்று அவன் அங்கிருந்து நகர்ந்த நேரம் அங்கு வந்தாள் கீர்த்தி.
ரகு அங்கிருந்து செல்வதைக் கண்டவள், “அந்த அண்ணா இங்க ஏன்டி வந்தாரு?” என்று கேட்டாள்.
“பூக்கூடை நிறைய இருக்கு இல்ல… அதான் இறக்கி வைக்க ஹெல்ப்க்கு என்னோட ஸ்பெஷல் ஃப்ரெண்ட் எல்லச்சாமியைக் கூப்பிட்டேன். அவரு ஏதோ முக்கியமான வேலைன்னு, இந்த வீச்சருவாள் வீராசாமியை எனக்கு ஹெல்ப் பண்ணச் சொன்னாரு.” என்க, அவள் சொல்வதைக் கேட்ட கீர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஏய் அவரு, இந்த ஊரு பெரிய வீட்டு தேவா அண்ணாகிட்ட வேலை பார்க்குற ஆளு. அவரை உனக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லிச் சொன்னது யாருடி?” என்று கேட்டாள்.
“வேற யாரு, நீ சொன்ன அந்த தேவா தான் எனக்கு உதவி பண்ணச் சொன்னாரு.” என்றாள் அசால்ட்டாக.
அதைக்கேட்டுத் திகைத்த கீர்த்தி, “ஏய் என்னடி சொல்ற? யாரோ உன் பிரண்டு எல்லச்சாமி ஹெல்ப் பண்ணாருன்னு சொன்ன, இப்ப தேவா அண்ணான்னு சொல்ற? எனக்கு ஒன்னும் புரியல” என்றவளின் கன்னத்தில் கிள்ளிய சந்தியா, “நீ சொல்ற தேவா தான்டி, நான் சொன்ன எல்லச்சாமி.” என்றவள் தேவாவை முதலில் சந்தது முதல் இன்று வரை அனைத்தையும் சொல்லி முடிக்க, கீர்த்தியின் கண்கள் அதிர்ச்சியில் விரித்துக் கொள்ள தேவாவைப் பற்றிச் சொல்ல தொடங்கினாள்.
இரண்டு கண்களும் தெறித்துவிடும் அளவுக்கு விழித்த சந்தியா, “நீ என்ன சொல்ற கீர்த்தி! நீ சொல்றது எல்லாம் உண்மையா?” என்று நம்ப முடியாமல் கேட்டாள்.
“ஆமாடி… தேவா அண்ணாவோட அப்பா சேதுபதி தான் இந்த ஊருக்கே தலைவர். இந்த ஊரே அவர் பேச்சுக்குக் கட்டுப்படும். நல்லவங்களுக்கு நல்லவரு, கெட்டவங்களுக்குக் கெட்டவரு.” என்று சொல்ல, “ம்ம்ம்… நம்ம நாயகன் படத்துல வர வேலு நாயக்கர் மாதிரி.” என்று ஆர்வமாகக் கேட்க, “கிட்டத்தட்ட” என்றாள் கீர்த்தி.
“அவருக்கும் இப்ப இந்த ஊருக்கு எம்.எல்.ஏ வா இருக்கானே தயாளன், அவனுக்கும் குடும்பப் பகை. அந்த ஆள் அவளோ நல்லவன் இல்ல… எதாவது பிரச்சனை பண்ணிட்டே இருப்பான். சேதுபதி ஐயாவும் அதுக்கு பதிலடி கொடுத்துட்டே இருப்பாரு. இவங்க சண்டைல அந்த தயாளனோட தம்பி அந்த எரும தீனா, வந்ததும் நெருப்புல பெட்ரோல் ஊத்தின மாதிரி பத்திட்டு எரிய ஆரம்பிச்சிடுச்சு... எப்பப்பாரு சண்டை, வெட்டு, குத்துன்னு எப்ப என்ன நடக்கும்னு எல்லாரும் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருந்த சமயம் தான் தேவா அண்ணா இந்த ஊருக்கு வந்தாரு.”
“தேவா வந்தாருன்னா என்னடி அர்த்தம்? அப்ப அவரு இந்த ஊர்ல இல்லியா?”
“இல்ல சந்தியா, அவரு சின்ன வயசிலயே வெளிநாட்டுக்குப் படிக்கப் போயிட்டாரு. படிச்சி முடிச்சு அங்கயே வேலையில் இருந்ததா அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன்.”
“ஓஓஓ… அப்ப எல்லச்சாமி பாரின் ரிட்டனா!” என்றவள், “சரி… சரி, மேல சொல்லு.” என்றாள்.
“அன்னைக்குச் சேதுபதி ஐயா எந்த நேரத்தில் தேவா அண்ணாவை ஊருக்குக் கூட்டிட்டு வந்தோரோ தெரியல... அன்னையில் இருந்து அவர் வாழ்கையே மாறிப் போச்சு.” என்றவள் கதையைத் தொடர்ந்தாள்.
வெகு காலம் கழித்து மகனைப் பார்த்த சந்தோஷத்தை ஊரைக் கூட்டி விருந்து வைத்து வெளிப்படுத்தினார் சேதுபதி.
“இந்த முறை எத்தனை நாள் இந்த ஊர்ல இருக்கப்போற தேவா?” என்ற மாமன் அருளைப் பார்த்த தேவா, “ஒன் மந்த் இருப்பேன் மாமா. என்னோட பிசினஸ்காக சென்னை, பெங்களூர்ல இடம் பார்க்கலாம்னு இருக்கேன். எங்க செட் ஆகுதோ அங்கயே பிசினஸ் ஸ்டார்ட் பண்ணப் போறேன். அந்த வேலை எல்லாம் கொஞ்சம் இருக்கு. அதெல்லாம் முடிச்சிட்டு என்னோட வேலையை ரிசைன் பண்ணிட்டு, மொத்தமா இந்தியாவுக்கு வந்திடுவேன்.” என்று தன் கனவைச் சொல்ல, அவன் விதியோ அடுத்து நடக்கப் போகும் அனர்த்தங்களை நினைத்து அவனைப் பாவமாகப் பார்த்தது.
“ம்ம்ம் ஓகே தேவா. எதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு.” என்ற அருளை முறைத்த ஆர்த்தி, “மக்கும், நீங்களே இன்னும் ரெண்டு நாள்ல துபாய் கிளம்புறீங்க. திரும்பி வர ரெண்டு வருஷம் ஆகும். இதுல நீங்க இவனுக்கு ஹெல்ப் பண்ணப் போறீங்களா” என்றவள் தம்பியிடம், “நீ முதல்ல பிசினஸ் ஸ்டார்ட் பண்ணுடா. அப்புறம் நம்ம எல்லாரும் அந்த ஊருக்கே போயிடுவோம். இந்த ஊரே நமக்கு வேணாம். எப்ப என்ன நடக்கும்னு தெரியாம உயிரைக் கையில புடிச்சிட்டு இருக்க வேண்டி இருக்கு…” என்ற ஆர்த்தியைப் பார்த்து மென்மையாகச் சிரித்த சேதுபதி, “அப்படி எல்லாம் பேசக் கூடாதுமா. இது நம்ம பொறந்து வளர்ந்த பூமி. இதை எப்படி விட்டுப்போக முடியும்? நீயும் உன் தம்பியும் வேணும்னா வெளியூர் போய் வாழுங்க. ஆனா, என்னால இந்த ஊரைவிட்டு வரமுடியாது ஆர்த்தி. என் உயிரு போனா அது இந்த மண்ணுலதான் போகும்.” என்றவரின் வாயை அவசரமாகப் பொத்திய தேவா, “என்ன பேச்சுப்பா இது?” என்று கலங்க, அவன் கையை வாயில் இருந்து எடுத்தவர், “நெருப்புன்னு சொன்னா வாய் சுட்டுடுமா என்ன?” என்றவருக்கு யார் சொல்வது? சில நேரங்களில் பின்னால் நடக்கப்போகும் நிகழ்வுகள் நம் வார்த்தைகளில் வெளிப்படும் என்று.
அன்றைக்கு மறுநாள் அருள் துபாய் கிளம்ப இருக்க, அனைவரும் அருளின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்றிருந்தனர்.
மறுநாள் அருளை வழியனுப்பி விட்டு அருளின் வீட்டுக்கு வந்தவர்கள், ஆர்த்தி அங்கு கொஞ்ச நாள் இருக்க ஆசைப்படவும், அவளை அங்கு விட்டுவிட்டு, தேவாவும் சேதுபதியும் மட்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஊர் எல்லையில் நுழையும் போது அவர்களுக்கு எதிர் புறமாக வந்த ஜீப் ஒன்று இவர்கள் வாகனத்தை வந்து மோதிவிட, நிலை தடுமாறிய தேவாவின் கார் சாலையில் இருந்து தடுமாறிக் கீழாக உருண்டு சென்றது.
தேவா கஷ்டப்பட்டு வண்டியை நிறுத்திய வேளை, அங்கிருந்த மரத்தின் பின்னால் இருந்து ஐந்தாறு ஆட்கள் வெளியில் வர, அவர்கள் பின்னால் வந்தான் தீனா.
காரில் இருந்து தட்டுத் தடுமாறி வெளியே வந்த தேவா அவர்களின் முன்னால் வந்து நின்றான்.
ஏற்கனவே விபத்தில் அடிபட்டு இருந்தவனால், ஒரே நேரத்தில் அத்தனைப் பேரையும் சமாளிக்க முடியாத போதும், தன் தந்தையைக் காக்க தன் உயிரைப் பணயம் வைத்து அவன் சண்டையிட, அதற்குள் இரண்டு பேர் காரின் அருகில் சென்றவர்கள், காருக்குள் மயங்கி இருந்து சேதுபதியை வெளியே இழுத்து வந்தனர்.
தேவா அவன் தந்தையை நோக்கி விரைந்த சமயம் அவன் தலையில் கட்டையால் ஓங்கி அடித்தான் தீனா.
ஏற்கனவே பலகீனமான இருந்தவனை இந்த அடி நிலைகுலைய வைத்தது.
அப்படியும் தட்டுத்தடுமாறி தன் தந்தை அருகில் சென்றவனை இழுத்துப் பிடித்த தீனா, “டேய் இவனைப் புடிங்கடா… இவன் அப்பன் துடிதுடிச்சு சாகுறதை இவன் கண்ணால பார்த்துத் துடிக்கட்டும். இவனைப் புடிங்கடா…” என்று சொல்ல, தேவாவை ஓடிவந்து பிடித்துக் கொண்டனர் இருவர்.
அரை மயக்கத்தில், ”டேய், அவரை ஒன்னும் பண்ணாதடா... என்னை என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோ… அவரை விட்டுடு” என்று முனங்கிய தேவாவைப் பார்த்துக் கொடூரமாகச் சிரித்த தீனா, தன் கையில் இருந்த அருவாளைக் கொண்டு தேவாவின் முகத்தை நிமிர்த்தியவன், “விடுறதா? இது எங்களோட எத்தனை நாள் பிளான்னு தெரியுமாடா… உங்கப்பனைக் கொல்ல, கழுகு மாதிரி நேரம் பார்த்துக் காத்துட்டு இருந்தேன். இன்னைக்கு தான் அதுக்காக சரியான நேரம் கிடைச்சிருக்கு…” என்றவன் சேதுபதியைக் காட்டி, “முதல்ல உன் அப்பன், அடுத்து நீ” என்றவன் ஓங்கிய அருவாளை சேதுபதியின் கழுத்தில் இறக்க, மயக்கத்தில் இருந்தவரின் ரத்தம் தேவாவின் முகத்தில் தெறித்தது.
அதைப் பார்த்தவன், “அப்பாஆஆஆ…” என்று கத்திய கதறல் அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.
சேதுபதியின் கடைசி மூச்சுப் பிரிந்திருக்க, அரை மயக்கத்தில் இருந்த தேவாவின் அருகில் தீனா வந்த சமயம், அந்தப்பக்கம் வேகமாக வந்தது ஒரு கார்.
அதிலிருந்து ரகு வேகாம இறங்க அவனுடன் இன்னும் சில ஆட்கள் ஓடிவந்தனர்.
“டேய், விடுங்கடா அவரை” என்று ரகு கத்திக் கொண்டே வர, தீனா தன் கையில் இருந்த அருவாளைத் தேவா மீது ஓங்கிய நொடி, அவன் கையைத் துளைத்தது ரகு சுட்ட துப்பாக்கிக் குண்டு. அதற்குமேல் அங்கிருந்தால் தனக்கு ஆபத்து என்று உணர்ந்த தீனா தன் ஆட்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றான்.
அந்க வீட்டில் ஊரே கூடி இருக்க, தன் முன்னால் உயிர் இல்லாத உடலாகக் கிடத்தி வைக்கப்படிருந்த தன் தந்தையின் உடலையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான் தேவா.
இதற்கு இடையில் தீனாவைப் போலீஸ் கைது செய்திருக்க, சேதுபதியின் ஆள்களுக்கும் தயாளன் ஆள்களுக்கும் வெட்டு, குத்தென்று அந்த ஊர் ரத்தபூமியாக மாறியது. நிலைமை இப்படியே செல்ல, அந்த மாவட்டத்தின் ஆட்சியர் தலையிட்டு, தேவாவின் உதவியோடு இரண்டு தரப்பினரும் இனி எந்தவிதக் கலவரத்திலும் ஈடுபடக் கூடாது என்று பேசிச் சமாதானம் செய்து வைத்தார்.
கதையைக் கேட்டுக் கொண்டிருந்த சந்தியாவின் கண்கள் கலங்கி இருக்க, “பாவம் எல்லச்சாமி.” என்றாள்.
கீர்த்தி, “ஆமாம்” என்று தலையாட்டிவள், “சேதுபதி அய்யா போனதில் இருந்து அந்த அண்ணா வாழ்க்கையே மாறிடுச்சு.”
“சரி, அந்த தீனாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க… அப்ப அந்தத் தயாளனை ஒன்னும் பண்ணலியா?”
“எங்க… அந்த தீனாவையே போலீஸ் விட்டுடுச்சு” என்க சந்தியாவுக்கு அதிர்ச்சி தான்.
“என்னடி சொல்ற?”
“ஆமா சந்தியா, சேதுபதி அய்யாவைக் கொன்னது நாங்க தான்னு தீனாவோட ஆளுங்க சரண்டர் ஆகிட்டாங்க… இந்தக் கொலையில் அப்ப இந்த ஊருக்கு எம்.எல்.ஏ வா இருந்த பழனிக்குத் தொடர்பு இருந்துச்சாம். சோ அந்தாளு பேர் வெளிய வராம இருக்க, தேவா அண்ணா பழைய பகையை மனசுல வச்சிட்டு தீனா மேல வீண்பழி போடுறான்னு சொல்லி கேஸை உடச்சி, அவனை விட்டுட்டாங்க. அதுவரை சட்டத்தை நம்பி இருந்த தேவா அண்ணாவுக்கு செம்ம கோவம். அவ்ளோதான், அதுக்கு மேல தேவா அண்ணாவை யாராலயும் தடுக்க முடியல… கடைசியில் அவரும் கையில் அருவாள் எடுக்க வேண்டியதாய் போச்சு”
“ஏய்… அப்ப தேவா கொலை செஞ்சி இருக்காரா?” என்று கேட்டாள் சந்தியா எச்சிலை விழுங்கியபடி.
“இல்லடி… அவர் அந்த தீனாவை வெட்டப்போனது உண்மை தான். ஆனா, அவங்க அக்கா அவரைத் தடுத்துட்டாங்க. அதோட கலெக்டரும் தேவா அண்ணாவை வந்து பார்த்துப் பேசினாரு. அப்பாக்குப் பிறகு இந்த ஊரைச் சரியான வழில கொண்டுபோக வேண்டிய நீங்களே இப்படிப் பண்ணலாமான்னு கேட்டு அவரை அமைதியா இருக்க வச்சாரு. ஆனாலும் இந்தத் தயாளனும் தீனாவும் அடங்கவே இல்ல… அப்பப்போ எதாவது பிரச்சனை பண்ணிட்டே இருப்பாங்க. இவரும் அவங்களுக்கு பதிலடி கொடுப்பாரு… ஆனா, இதுவரை பெருசா உயிர் சேதம் எதுவும் வந்தது இல்ல.” என்ற கீர்த்தியிடம், “அப்ப தேவா யாரையும் கொலை பண்ணது இல்ல தானா?” என்று கேட்டாள் ஒருவிதத் தவிப்போடு.
அதற்கு கீர்த்தி எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டாள்.
“கீர்த்தி நான் உன்கிட்ட தான் கேட்டேன். தேவா யாரையும் கொலை பண்ணது இல்லதான?” என்று கேட்க, கீர்த்தியின் தலை இடவலமாக ஆடியது.
இரண்டு கண்களும் தெறித்து விழுந்துவிடும் அளவுக்கு கண்களைத் திறந்த சந்தியா, “ஏய்… நீ உண்மையைத் தான் சொல்றியா… அப்ப தேவா கொலைகாரனா?” என்றாள் அதிர்ச்சிக் குரலில்.
“அப்படி உறுதியாய் சொல்லிட முடியாதுடி… ஆனா, சேதுபதி அய்யா சாவுக்குக் காரணமாய் இருந்த அந்த எக்ஸ் எம்எல்ஏ பழனியைக் கொஞ்ச மாசமாய் ஆளையே காணும். அந்தாளைத் தேவா அண்ணா தான் கொன்னுட்டார்னு ஒரு ரூமர் இருக்கு. ஆனா, அதுக்கு எந்தச் சாட்சியும், ஆதாரமும் இல்ல. அந்தப் பழனியோட டெட்பாடி கூடக் கிடைக்கல” என்றவள், “இதெல்லாம் எங்கப்பா கான்ஸ்டபிளாய் இருக்கும் போது நடந்த சம்பவம். வீட்ல சில நேரம் அப்ப இந்தக் கேஸ் பத்திப் பேசுவாரு… அதனால் எனக்குத் தெரிஞ்சது இதான். சோ என்னால இதுல எதுவும் சொல்ல முடியாது.” என்க சந்தியா எங்கோ வெறித்தபடியே இருந்தாள்.
அவள் தோளை அழுத்திய கீர்த்தி, “இனிமே அவரோட பழகாத சந்தியா. அந்த அண்ணா நல்லவரு தான்… நான் இல்லன்னு சொல்லல, ஆனாலும் இந்த ஃப்ரெண்ட்ஷிப் எல்லாம் உனக்கு வேணாம். அவரோட ஃப்ரெண்ட்ஷிப், புலி வாலைப் புடிக்கிறதுக்குச் சமம். சோ இதெல்லாம் உனக்கு வேணாம். நீ எப்படிச் சந்தோஷமாய் இந்த ஊருக்கு வந்தியோ, திரும்பிப் போகும் போதும் அப்படியே போகணும்னு தான் சொல்றேன்.” என்ற கீர்த்தி அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.