உன் விழியில் கைதானேன் 16
விழி 16
அன்றைக்கு மறுநாள் கோவில் திருவிழா நடக்க இருக்க, பாதி ஊர் அந்தக் கோவிலில் தான் கூடி இருந்தது.
அன்றைக்கும் கீர்த்தியின் தந்தைக்கு உதவியாகக் கீர்த்தி, சந்தியா இருவரும் கோவிலுக்கு வந்திருந்தனர்.
அன்றைய கோவில் திருவிழாவுக்குக் கோவிலுக்கு வந்திருந்தவனின் கழுகுக் கண்களில் அங்கிருந்த ஆள்களை வேலை வாங்கிக் கொண்டிருந்த சந்தியா விழுந்தாள்.
சாராயக் கேஸில் ஜெயிலுக்குச் சென்றிருந்த தீனா, தன் பணத்தை வைத்து அந்தக் கேஸிலிருந்து தப்பி இருந்தான்.
பார்ப்பதற்குக் கொள்ளை அழகாக இருந்தவளை விட்டு இம்மியளவும் நகரவில்லை தீனாவின் கண்கள்.
“யாருடா இவ? பார்க்க செம்மயா இருக்கா? இந்த ஊர்ல இருந்துட்டு இதுவரை என் கண்ணுல படாம இருந்திருக்காளே?” என்றவனின் பார்வை போன திசையில் இருந்த சந்தியாவைப் பார்த்த தீனாவின் கையாள்,
“அண்ணா இந்தப் பொண்ணு அந்த தேவாவோட ஆளு” என்றுச் சொல்ல, தீனா சட்டென அவனைத் திரும்பிப் பார்த்து அவன் சட்டையைப் பிடித்தவன், “நீ சொல்றது உண்மையாடா” என்று ஆக்ரோஷமாகக் கேட்க அவனும், “ஆமா ண்ணா… எனக்கு நல்லாத் தெரியும். அன்னைக்கு இந்தப் பொண்ணு, அந்தத் தேவாகூட இந்த ஊருக்குள்ள வந்ததை நான் பார்த்தேன். அதுக்குப்பிறகு ஒரு நாள் நடுரோட்ல ரெண்டு பேரும் கட்டிப் புடிச்சிட்டு நின்னாங்க…” என்றவன் சற்று நிறுத்தி, “அதோட…” என்று இழுக்க, தீனா அவன் முகத்தைத் தீவிரமாகப் பார்த்தவன், “சொல்ல வந்ததை முழுசாச் சொல்லுடா” என்றான் கட்டளையாக.
“ஒரு நாள் இந்தப் பொண்ணும், அந்தத் தேவாவும் நம்ம சாராயம் காச்சுற இடத்துல ஒண்ணாப் பார்த்தேன். அப்ப அந்தப் பொண்ணு கையில கேமரா இருந்துச்சுண்ணா… அப்புறம் ரெண்டு பேரும் ஒண்ணா அவனோட ஜீப்புல ஏறிப்போனாங்க… அதுக்கு அப்புறம் தான் நம்ம இடத்தை போலீஸ் ரெய்டு பண்ணாங்க. எனக்கு என்னமோ இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் நமக்கு எதிரா இந்த வேலையைப் பார்த்திருப்பாங்கன்னு தோணுது.” என்று சொன்ன அடுத்த நொடி தீனாவின் பார்வை வன்மமாகச் சந்தியாவின் மேல் விழுந்தது.
அந்த நிமிடம் அவளைக் கொன்று போடும் அளவுக்கு அவனுள் எழுந்த கோவத்தை அவளின் அழகு முகமும், இளமையும் திசைதிருப்பி விட்டது.
அவளைத் துகிலுரிக்கும் பார்வை பார்த்தபடியே தன் ஆட்களுடன் சென்றவன், மனதில் போட்டு வைத்த திட்டம் தெரியாமல் கீர்த்தியுடன் அரட்டை அடித்தபடி இருந்தாள் சந்தியா.
சிலரின் தலையெழுத்தை அடியோடு மாற்றப்போகும் அந்தக் காலைப் பொழுது விடிந்திருக்க, அது எதையும் அறியாமல் அடர் சிவப்பு நிறத்தில், மெல்லிய சரிகை கொண்ட பட்டுப்புடவை உடுத்தி, லேசாக மேக்-அப் போட்டுக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பினாள் சந்தியா.
பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக இருந்த தம்பியின் கையில் தங்கள் தந்தையின் தங்கக்காப்பைப் போட்டுவிட்ட ஆர்த்தி, “திருவிழால அந்தத் தயாளனும், அந்தப் பொறுக்கி தீனாவும் கண்டிப்பா ஏதாவது பிரச்சனை பண்ணக் காத்துட்டு இருப்பானுங்க தேவா… பார்த்துக் கவனமா இரு. நான் கோவிலுக்குப் போறேன், நீயும் சீக்கிரம் வந்திடு.” என்றவள் அங்கிருந்து சென்றாள்.
தேவா கிளம்பி கோவிலுக்குத் தன் காரில் சென்று கொண்டிருந்த சமயம் அவனது அலைபேசி அலறியது.
“ரகு ஃபோனை அட்டென்ட் பண்ணி ஸ்பீக்கர்ல போடு” என்றதும் ரகுவும் அழைப்பை ஏற்று அதை ஸ்பீக்கரில் போட்டான்.
“ஹலோ யாரு?” என்ற தேவாவின் குரல் கேட்டதும் அந்தப்பக்கம் நாராசமான சிரிப்பொலி கேட்டது.
“ஹலோ யாரு நீங்க?” என்று மறுபடியும் தேவா கேட்க, “என்ன தேவா, அதுக்குள்ள என்னோட குரல் மறந்து போச்சா? அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லயே… செத்துப்போன உங்கப்பனை நினைக்கும் போதெல்லாம் கண்டிப்பா என்னோட குரலும் உனக்குக் கண்டிப்பாய் ஞாபகம் வரணுமே” என்றதும் சட்டென சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்திய தேவா, “தீனா” என்றவனின் குரலில் அப்படி ஒரு அழுத்தம்.
“ம்ம்ம்… பரவால்லயே? கரெக்டா கண்டு புடிச்சிட்டியே…” என்று நக்கலாகச் சொல்ல, பற்களைக் கடித்துத் தன் கோவத்தை அடக்கிய தேவா, “நீ எதுக்குடா எனக்கு கால் பண்ண?” என்று கேட்டான் இறுகிய குரலில்.
“அது ஒண்ணும் இல்ல பங்காளி… இன்னைக்கு எனக்குக் கல்யாணம். இப்ப நீங்க தானே ஊருக்குப் பெரிய மனுஷன். அதான் கல்யாணத்துக்கு உங்களை அழைக்கக் கூப்பிட்டேன்.”
“நீ கல்யாணம் பண்ணு, இல்ல கருமாதி பண்ணு. அதெல்லாம் எதுக்குடா என்கிட்டச் சொல்லிட்டு இருக்க”
“உன்கிட்டச் சொல்லாம வேற யார்கிட்டச் சொல்றது? நீதான் பொண்ணு வீட்டுக்காரனாச்சே” என்றவன் சற்று நிறுத்தி, “ம்ம்ம், நான் குறுக்க வராம இருந்திருந்தா, நீ அந்தப் பொண்ணுக்கு வீட்டுக்காரன் ஆகி இருப்ப… என்ன பண்றது? உன் கெட்ட நேரம் அந்தப் பொண்ணு என் கண்ணுல பட்டுடுச்சு…” என்றவனின் பேச்சில் ஏதோ தவறாக உணர்ந்த தேவா, “என்னடா உளறிட்டு இருக்க?” என்று உறும மீண்டும் சத்தமாகச் சிரித்த தீனா, “நான் ஒண்ணும் உளறலடா… இன்னும் கொஞ்ச நேரத்தில் நீதான் பைத்தியம் புடிச்சு உளறிட்டு இந்த ஊர் முழுக்கத் திரியப் போற.” என்றதும் தேவாவின் கண்கள் கேள்வியாகச் சுருங்கியது.
“என்ன இன்னும் புரியலியா? நீ எவளை ஆசையாய் காதலிக்கறியோ, எவளை வச்சு என் சாராய சாம்ராஜ்யத்தை அழிச்சியோ, அவதான் கல்யாணப் பொண்ணு…” என்றவன், “டேய், என் வருங்காலப் பொண்டாட்டி பேர் என்ன சொன்னீங்க?” என்றுக் கேட்க அவனின் அடியாள் ஒருவன், “சந்தியாங்க அண்ணா” என்றுச் சொல்ல, அந்தப் பேரைக் கேட்டதும் தேவாவுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
“டேய்… டேய்… அந்தப் பொண்ணுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. நீ தேவையில்லாம நம்ம பிரச்சனையில் அந்தப் பொண்ணை இழுக்காத” என்றவனுக்குச் சந்தியாவுக்கு எதுவும் தவறாக நடந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளம் பதறியது.
“ம்ம்ம் பரவால்லயே… நான் நினைச்சதைவிட நல்லாதான் பயப்படுற… அவ்ளோ லவ்வுஉஉஉ” என்றவனின் முகம் இறுக, “உன் காதலி இப்ப என் கண்ணு முன்னாடி தான் நிக்கிறா… சும்மா சொல்லக் கூடாது. பட்டுப் புடவையில் பார்க்க சும்மா கும்முன்னு செம்மையா இருக்கா… இன்னும் பத்து நிமிஷத்தில் அம்மன் கோயில் திருவிழால வச்சு அவளுக்கு நான் தாலிகட்டப் போறேன். அதுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் அவளுக்கு நரகம்னா என்னன்னு காட்டுறேன்டா. அவ துடிக்கிறதைப் பார்த்து நீ அணு அணுவாய் சாகணும்டா.” என்றவனின் வார்த்தையில் தேவாவின் கோவம் எல்லை கடக்க, அது அவன் கைகளின் வழியே காரில் ஸ்டியரிங்கில் வெளிப்பட, கார் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது.
“டேய்… அவ மேல உன் சுண்டுவிரல் நகம் பட்டாலும் சரி… உன்னை நான் உயிரோட விடமாட்டேன்” என்று கர்ஜிக்க, “சுண்டுவிரல் மட்டும் இல்லடா… இன்னைக்கு ராத்திரி அவளை மொத்தமா ஒரு இஞ்ச் விடாமல் தொடப்போறேன்.” என்றவன் அழைப்பைத் துண்டிக்க தேவாவுக்கு உடல் முழுவதும் படபடத்தது.
“உனக்கு ஒண்ணும் ஆகாதுடி… நான் வந்துட்டு இருக்கேன். சீக்கிரம் வந்துடுவேன். உனக்கு ஒண்ணும் ஆகாது” என்றவன் காரை வேகமாக ஓட்ட, அதற்குள் தன் ஆட்களைத் தொடர்புக் கொண்ட ரகு, அனைவரையும் கோயிலுக்கு வரச் சொன்னவன், திரும்பி தேவாவின் முகம் பார்க்க, அதில் சந்தியா மேல் தேவா வைத்திருக்கும் காதலும் அக்கறையும் அப்பட்டமாகத் தெரிந்தது.
‘கடவுளே! இவங்க ரெண்டுப் பேரை எப்படியாவது சேர்த்து வச்சிடுங்கப்பா’ என்று அவசரமாக மனதிற்குள் வேண்டுதல் ஒன்றை வைத்தான்.
அதே நேரம் கோவிலில் தீனா, சந்தியாவை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு செல்ல, கீர்த்தியும் அவள் தந்தையும் அவளை விட்டு விடும்படி அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தனர்.
அவனின் ஆள்கள் கையில் கத்தி, அருவாள் வைத்துக் கொண்டு மக்களை மிரட்டிக் கொண்டு இருக்க, அனைவரும் அவனை நெருங்க முடியாது பயத்தில் ஒதுங்கி நின்றனர்.
“தீனா தம்பி, என் பொண்ணு கல்யாணத்துக்கு வெளியூர்ல இருந்து வந்த பொண்ணுங்க, நீங்க நினைக்கிற மாதிரி அதுக்கும், தேவா தம்பிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல தம்பி… தயவு செஞ்சு அந்தப் பொண்ணை விட்ருங்க… அந்தப் பொண்ணு சென்னையில பெரிய குடும்பத்துப் பொண்ணு தம்பி. இன்னும் கொஞ்ச நாள்ல அதுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு… உங்க கால்ல விழுந்து கேக்குறேன். அந்தப் பொண்ணை விட்டிருங்க…” என்ற கீர்த்தியின் தந்தை தீனாவின் காலில் விழப்போக, தீனாவின் பிடியில் இருந்த சந்தியா, “அங்கிள் ப்ளீஸ், எனக்காக இந்த மாதிரிப் பொறுக்கிங்க கால்ல எல்லாம் நீங்க விழவேணாம். நீங்க பயப்படாதீங்க… இவனால என்னை ஒன்னும் பண்ண முடியாது.” என்று பெண் சிங்கமாக உறுமியவளை நக்கலாகப் பார்த்தான் தீனா.
“இந்த ஊரே ஒண்ணும் பண்ண முடியாம, பயந்துட்டு நிக்குது… எங்க இருந்து வந்ததுடி உனக்கு இவ்ளோ தைரியம்? என்ன அந்தத் தேவா வந்து காப்பாத்துவான்னு நினைப்போ...” என்று திமிராகச் சிரித்தவன், “அவன் இங்க வந்து சேரும்போது உன் கழுத்துல நான் கட்டுன தாலி ஏறியிருக்கும்” என்றவனைப் பார்த்து இதழோரமாகச் சிரித்த சந்தியா, “நீ… என் கழுத்துல தாலி கட்டப்போற?” என்றவள், “அதுக்கு முதல்ல நீ உயிரோட இருக்கணுமேடா...” என்றவள் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் முழங்கையால் அவன் வயிற்றில் ஓங்கிக் குத்த, திடீர் தாக்குதலில் தீனா நிலைகுலைந்து நின்ற நொடி, அவன் பிடியில் இருந்து விலகிய சந்தியா, வேகமாக அவன் கையைப்பிடித்து முறுக்கிப் பின்னால் திருப்பியவள், அவன் கையில் இருந்த அருவாளைப் பிடுங்கி அவன் கழுத்தில் பதித்திருந்தாள்.
நொடி நேரத்தில் இத்தனையும் நடந்துவிட, யாருக்கும் எதுவும் புரியவில்லை. அந்த நேரம் அங்கு நடந்த கலவரத்தைக் கேள்விப்பட்டு அங்கு வந்த ஆர்த்தி இந்தக் காட்சியைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.
சந்தியாவின் கையில் தீனாவின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க, அவனின் ஆள்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கச் சந்தியா, தீனாவின் கழுத்தில் அருவாளை வைத்து லேசாக ஒரு கோடு இழுக்க, உள்ளிருந்து உதிரம் எட்டிப் பார்த்தது.
அதைப் பார்த்து நக்கலாகச் சிரித்த சந்தியா, “ஏன்டா டேய்… உனக்கென்ன பொம்பளைன்னா அவ்ளோ கேவலமாய் போச்சா? உன் இஷ்டத்துக்கு நீ தாலி கட்ட நான் என்ன இந்த கோயில் மரமாடா?” என்றவள் அருவாளை அவன் கழுத்தில் வைத்து அழுத்திய நொடி, “சந்தியா” என்று கீர்த்தி கத்தும் சத்தம் கேட்டு அவள் திரும்பிப் பார்க்க, தீனாவின் அடியாள் கீர்த்தியின் கழுத்தில் தன் கத்தியை வைத்திருந்தான்.
அதைப் பார்த்த சந்தியாவின் கையிலிருந்த அருவாள் கீழே இறங்க, மீண்டும் அவளைத் தன் கை வளைவில் மடக்கிப் பிடித்திருந்தான் தீனா.
கண்களில் கொலை வெறியோடு அவளைப் பார்த்த தீனா, “என்ன தைரியம் இருந்திருந்தா என் கழுத்துலயே அருவாளை வச்சிருப்ப… உன்னை விடமாட்டேன்டி… உன்னை மட்டும் இல்லடி. உன்னை விரும்புற அந்தத் தேவாவையும், உன் குடும்பத்தையும் அணுஅணுவாய்ச் சித்திரவதை பண்ணி, இனிமே இந்த வலியைத் தாங்க முடியாது, என்னைக் கொன்னுடுன்னு நீயா என் முன்னாடி மண்டி போட்டுக் கெஞ்சும்படி செய்யல, நான் தீனா இல்லடி” என்றவன், அவளை இழுத்துத் தன் முன் நிறுத்தியவன், கையை நீட்ட அவன் கையில் தாலியைக் கொடுத்தான் ஒருவன்.
தாலியோடு தன் எதிரில் நின்றவனைப் பார்த்துச் சிறிதும் பயம் தெரியவில்லை சந்தியாவின் கண்களில். ‘உன்னால என்னை ஒன்னும் செய்ய முடியாது’ என்று சொல்லாமல் சொல்ல, அதுவே தீனாவின் வெறியைத் தூண்டிவிட்டது.
அவள் நினைத்தால் ஒரு நொடியில் அவனை அடித்து வீழ்த்தும் திறமை அவளிடம் உண்டு. சிறுவயதில் இருந்து அனைத்துத் தற்காப்புக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தவளுக்கு இவனைப் போன்றவர்களை சமாளிப்பது பெரிய காரியம் இல்லைதான். ஆனாலும், கீர்த்தியின் உயிர் ஆபத்தில் இருக்க, எதுவும் செய்யமுடியாது அமைதியாக நின்றாள்.
தீனா தாலியோடு அவள் அருகில் வரவர, சந்தியாவின் பார்வை கூர்மையாக, தன் கையை இறுக்கி மூடியபடி நின்ற நேரம், தீனா தாலியை அவள் கழுத்தில் கட்டச் சென்ற நொடி, கீர்த்தியின் கழுத்தில் கத்தி வைத்திருந்தவன் காலிலும், தீனாவின் காலிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தது.
அடுத்த அரைமணி நேரத்திற்கு அங்கு ஒரு கலவரமே நடக்க, தேவாவின் ஆள்களுடன், ஊர்மக்களும் சேர்ந்து இறுதியில் தீனாவையும் அவன் ஆள்களையும் பிடித்திருந்தனர்.
கீர்த்தி ஓடிவந்து சந்தியாவைக் கட்டிக் கொள்ள, சந்தியாவும் அவளை அணைத்துக் கொண்டாள்.
சந்தியாவை நல்லபடியாகப் பார்த்த பிறகே தேவாவுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. மெல்லக் கண்களை மூடி ஆழ்ந்து மூச்செடுத்தவன், “உனக்கு ஒன்னும் இல்ல இல்ல?” என்று தவிப்போடு கேட்க, “ஆம் ஓகே” என்றாள் சந்தியா.
“ஐ அம் சாரி… என்னால்தான் உனக்கு இவ்ளோ பிரச்சனை. ஐ அம் ரியலி வெரி சாரி” என்றவனின் கண்களில் கண்ணீர் கோர்த்து நிற்க அதைப் பார்த்த சந்தியாவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
“இட்ஸ் ஓகே தேவா… அதான் ஒன்னும் நடக்கலியே.” என்றவளுக்கு அப்போதுதான் கீர்த்தி அவளைத் தேவாவுடன் ஏன் பழக வேண்டாம் எனச் சொன்னாள் என்று புரிந்தது.
தேவா போலீஸை அழைத்திருக்க, அவர் வந்து தீனாவையும் அவன் ஆள்களையும் கைது செய்து இழுத்துச்சென்ற சமயம், “டேய் தேவா… இன்னைக்கு அவளை என்கிட்ட இருந்து நீ காப்பாத்திடலாம். ஆனா, நான் மறுபடியும் வருவேன்… உன்னையும் அவளையும் நான் நிம்மதியா இருக்க விடமாட்டேன். இதுவே கடைசி இல்ல, எத்தனை நாளுக்கு உன்னால அவளைப் பாதுகாக்க முடியும். நாளைக்கே நான் ஜெயில்ல இருந்து வெளிய வருவேன். அவ கழுத்துல தாலி கட்டுவேன். உன்னால என்ன செய்ய முடியும்?” என்று சவால் விட்டபடியே செல்ல, அதைக்கேட்ட அனைவரும் சற்றுப் பயந்து தான் போயினர்.
தேவா அருகில் வந்த கீர்த்தியின் தந்தை, அவனைக் கையெடுத்துக் கும்பிட்டு, “அந்தப் புள்ளை எங்க வீட்டுக்கு விருந்தாளியா வந்த புள்ளை தம்பி. வந்த இடத்தில் இப்படி எல்லாம்… இந்த ஊருக்கு இப்ப நீங்க தான் தலைவர்… இதுவரை எல்லாருக்கும் உங்கபேரு பாதுகாப்பைத் தான் கொடுத்திருக்கு. ஆனா, இப்ப…” என்றவருக்கு வார்த்தை வராமல் தொண்டை அடைத்தது.
அங்கிருந்த ஒரு பெரியவர், “அவர் சொல்றதும் சரிதான் தம்பி… எப்ப அந்தத் தீனா இந்த அளவுக்குப் போயிட்டானோ… இனிமே எதைச் செய்யவும் அவன் தயங்க மாட்டான். இந்தப் பொண்ணை மட்டும் இல்ல… அதோட குடும்பத்தையும் அவன் சும்மா விடமாட்டான். என்னைக்கு இருந்தாலும் அவனால இந்தப் பொண்ணுக்கு ஆபத்து தான்” என்க, தேவாவுக்கும் அப்படி தான் தோன்றியது.
அங்கிருந்த அனைவரும் ஆளுக்கு ஒன்றாகப் பேச ஆரம்பித்தனர். அதில் சிலர் சந்தியாவைப் பற்றித் தவறாகப் பேச, தேவாவின் கை முஷ்டிகள் இறுகியது.
மெல்லத் திரும்பிச் சந்தியாவின் முகத்தைப் பார்த்தவனுக்குத் தீனா சொல்லிச் சென்ற வார்த்தைகளே மீண்டும் மீண்டும் காதில் கேட்க, அழுத்தமாகக் கண்களை மூடித்திறந்தவன் ஒரு முடிவோடு, சந்தியாவின் முன் வந்து நின்றான்.
தன் முன் நின்றவனை நிமிர்ந்து பார்த்தவள் கையை இறுக்கிப் பிடித்த தேவா, அவளைக் கோவிலுக்குள் அழைத்துச் செல்ல, சந்தியா எதுவும் புரியாமல் அவன் இழுத்த இழுப்புக்குச் சென்றாள்.
அழகிய சிரிப்புடன் நடப்பதை எல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த அம்மன் முன் அவளைக் கொண்டு வந்து நிறுத்திய தேவா, அவள் கண்களைப் பார்த்து “இதுவரை நீ யாரோ, நான் யாரோ… ஆனா, இனி உனக்கு எல்லாமா நான் இருப்பேன். என் உடம்புல உயிர் இருக்கறவரை உன்னை ஒரு ஆபத்தும் நெருங்காது… என் உயிரைக் கொடுத்து உன்னை நான் காப்பாத்துவேன். இது இந்த அம்மன் மேல சத்தியம்” என்றவன் அவள் என்ன ஏதென்று யோசிக்கும் முன், பூஜை முடிந்ததும் சுமங்கலிப் பெண்களுக்குக் கொடுப்பதற்காக ஆர்த்தி வைத்திருந்த தாலிக்கயிற்றை எடுத்தவன், அவள் சுதாரிக்கும் முன் தாலியை அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சையும் போட்டிருந்தான்.
நடந்த நிகழ்வில் சந்தியா அதிர்ந்து நிற்க, ஆர்த்தியும் ரகுவும் தங்கள் ஆசையை நிறைவேற்றிய அந்தக் கடவுளுக்கு மனதார நன்றி கூறினர்.