உன் விழியில் கைதானேன் 17

 விழி 17


தேவா வீட்டுக்குச் சந்தியா வந்து முழுதாக ஒருநாள் ஓடியிருந்தது.


நாள் முழுவதும் அறையிலேயே அடைந்து கிடக்கும் சந்தியாவைப் பார்த்த தேவாவுக்கு மனது பிசைந்தாலும், ஒரு பக்கம் ஏனோ அவன் மனதில் சொல்ல முடியாத ஒரு அமைதி நிலவியது, அவன் மட்டுமே அறிந்த உண்மை. 


அவளுக்குத் திருமணம் நிச்சயமாகி விட்டது என்று தெரிந்தபோது, அவன் உள்மனம் உணர்ந்த வலி அவனுக்கு மட்டும் தான் தெரியும். பின்பு தன் நிலை உணர்ந்தவன் எங்கிருந்தாலும் அவள் நன்றாக இருந்தால் போதுமென்று நினைத்து அவன் உணர்வுகளைத் தனக்குள் அடக்கி அணைகட்டி வைத்திருக்க, தீனா அவனின் வார்த்தைகளால் அந்த அணையைத் தகர்த்திருந்தான். 


தீனா அழைத்தபோது எங்கு அவளுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று அவன் இதயம் துடித்தது. அங்குச் சென்று அவளை நல்லபடியாய் பார்த்த பிறகுதான் அவனுக்கு மூச்சே வந்தது. அப்போதும் கூட அவனுக்குச் சந்தியாவைத் தன் வாழ்க்கையில் இணைக்கும் எண்ணம் இல்லை. ஆனால், தீனா கடைசியாகச் சொல்லிச் சென்ற வார்த்தைகளைக் கேட்டவனுக்கு, அதற்கு மேல் வேறு எதையும் நினைக்கத் தோன்றவில்லை. நேராக அவளை இழுத்துச் சென்று தாலியைக் கட்டி, அவளின் ஆயுளுக்கு, அவளுக்குப் பாதுகாப்பாகத் தன்னை நிறுத்தி விட்டிருந்தான் சந்தியாவின் எல்லைச்சாமி‌.


நடந்து முடிந்த நிகழ்வுக்குப் பிறகு தான் எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்பது சந்தியாவுக்கே புரியவில்லை. எங்கோ வெறித்துப் பார்த்தபடி அவள் அமர்ந்திருக்க, கீர்த்தி கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி சந்தியாவின் அருகில் அமரந்திருந்தாள். 


“கடவுளே! இப்பக் குமாருக்கும், கலைக்கும் நான் என்ன பதில் சொல்லுவேன்? உங்களை நம்பித்தான் என் பொண்ணை அனுப்பி வைக்கிறேன். அவளைப் பாத்துக்கோங்கன்னு படிச்சுப் படிச்சு சொன்னாங்களே… இப்படி நடந்து போச்சே, நான் என்ன செய்வேன்.” என்று கீர்த்தியின் தந்தை தலையில் அடித்துக் கொண்டு கதற, சந்தியா அவரைத் திரும்பிப் பார்த்தவள், “இதுல உங்கத் தப்பு எதுவும் இல்ல அங்கிள், எல்லாம் என் தலைவிதி.” என்றவளுக்குக் கண்ணில் கண்ணீர் கூட வற்றிப்போய் இருந்தது.


“இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு… இப்படி ஆகிப்போச்சே, இப்ப எந்த முகத்தை வச்சிட்டு நான் உங்க அப்பா, அம்மா முகத்துல முழிப்பேன்.” என்றவரின் கவலைக் குரல் வாசலில் கேட்ட கார் சத்தத்தில் நின்றது.


தேவா மற்றும் ஆர்த்தியுடன் அந்த ஊர்ப் பெரிய மனிதர்களும் அங்கு வந்திருந்தனர்.


அனைவரையும் அங்குப் பார்த்த ராமசாமிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்னர் தன்னைச் சுதாரித்துக் கொண்டவர் அனைவரையும் அமரச் சொல்ல, தேவாவின் கண்களோ சந்தியாவைத் தேடியது.


வந்தவர்கள் அமைதியாக இருக்க ஆர்த்தி எழுந்து நின்றவள், “நடந்தது நடந்து போச்சு. இனி அதைப்பத்திப் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்ல… ஊரறிய என் தம்பி அந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டான். அவனுக்கு அவதான்னு அந்த அம்மனே முடிவு பண்ணிட்டா… இனி அடுத்து என்னன்னு நம்ம எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வரணும். நீங்க சந்தியாவோட அப்பா, அம்மாக்கு இங்க நடத்தை எடுத்துச்சொல்லி இங்க வரச்சொல்லுங்க… மேல நடக்க வேண்டியதை எல்லாம் ரெண்டு குடும்பமும் சேர்ந்து முடிவு பண்ணலாம்” என்றாள் தெளிவாக.


அவள் சொன்னதைக் கேட்ட ராமசாமிக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியாத நிலை. “அந்தப் பொண்ணு ஏற்கனவே இன்னொருத்தனுக்கு நிச்சயமான பொண்ணு. இன்னும் கொஞ்சநாள்ல அதுக்குக் கல்யாணம் மா, இப்பப் போய் இல்ல, அந்தக் கல்யாணம் நடக்காது, உங்கப் பொண்ணுக்கு இப்படி ஒரு கல்யாணம் நடந்து போச்சின்னு, எப்படிம்மா என்னால அவங்க பெத்தவங்கிட்ட சொல்ல முடியும்? அவங்க சென்னையில் பெரிய குடும்பம் மா, அதுவும் இந்தப் புள்ளையோட மாமன்காரனுங்களுக்கு மட்டும் இங்க நடந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சது, அவ்ளோதான்! அந்தத் தீனாவை மட்டும் இல்ல, இந்த ஊரோட சேர்ந்து உங்க தம்பியையும் கொன்னு புதைச்சிடுவங்கம்மா…” என்று சொல்ல, அதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து தான் போயினர்.


“நீ என்ன சொல்ற ராமசாமி? அந்தப் பொண்ணோட குடும்பம் பெரிய குடும்பம்னா, நம்ம தேவா தம்பி மட்டும் என்னவாம்? அவருக்கும் இந்த ஊரு முழுக்கச் சொத்துபத்து இருக்கு தானே… எல்லாத்தையும் விட தேவா தம்பியோட நல்ல குணம் வேற யாருக்கு வரும்னு சொல்லு… அவங்க தேடினாலும் இப்படி ஒரு ஒழுக்கமான பையனை அவங்க பொண்ணுக்குப் பார்க்க முடியாது.” என்று சொல்ல, அப்படியே கொஞ்ச நேரம் வாக்குவாதம் தொடர்ந்தது.


“எல்லாரும் கொஞ்சம் நிறுத்துங்க” என்ற தேவாவின் சத்தத்தில் அந்த இடமே அமைதியாக தேவா, ராமசாமி முன்னால் வந்து நின்றவன், “இது எனக்கும், நான் தாலி கட்டின அவளுக்குமான பிரச்சனை. சோ இதை நாங்க ரெண்டு பேரும் பேசித் தீர்த்துக்குறோம்‌.” என்றவன், “அவ எங்க?” என்று கேட்ட நொடி, கீர்த்தியோடு அங்கு வந்தாள் சந்தியா.


அழுதழுது அவள் முகமே சிவந்து வீங்கிப் போயிருக்க, அதைப் பார்த்த தேவாவுக்கு இதயத்தில் யாரோ கத்திகொண்டு அறுப்பது போல் வலித்தது.


அவள் அருகில் சென்றவன், “உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்.” என்று அவள் கண்ணைப் பார்த்துச் சொன்னவன், அவள் கையைப் பிடித்து பின்பக்கம் அழைத்துச் சென்றான்.


அவள் எங்கோ வெறித்தபடி இருக்க அவள் முன்னால் வந்து நின்றவன், “என்னை மன்னிச்சிடுமா…” என்றான் உள்ளத்தில் இருந்து. 


“என்ன சொல்லியும் நான் செஞ்சதை நியாயப்படுத்த முடியாது. ஏன்னா நான் செஞ்சது தப்பு இல்ல, அது பெரிய பாவம். ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம அவளுக்குத் தாலி கட்டுறது, கிட்டத்தட்ட அந்தப் பொண்ணை உயிரோட கொல்லுறதுக்குச் சமம்.” என்றவனை அவள் நிமிர்ந்து பார்க்க அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவன், “எனக்குப் புரியுதுமா… நான் செஞ்சது மகாதப்பு தான். ஆனா, அந்த நேரத்தில் உன்னை அந்த தீனாகிட்ட இருந்தும், இந்த ஊரோட ஏச்சுப்பேச்சுல இருந்தும் எப்படிக் கப்பாத்துறதுன்னு யோசிச்ச சமயம், எனக்குத் தோணினது இந்த ஒரு வழிதான்.” என்றவன் ஆழ்ந்த மூச்செடுத்து, “இப்பச் சொல்றேன்… உனக்கு என்னைப் புடிக்காத பட்சத்தில் நீ என்னோட வாழணும்னு உன்னை நான் எந்த விதத்திலும் கட்டாயப்படுத்த மாட்டேன், உனக்கு நான் வெறும் பாதுகாப்பு மட்டும் தான். நீ அடிக்கடி என்னைச் சொல்லுவியே எல்லைச்சாமின்னு, இனி நான் உனக்கு, உன்னைப் பாதுகாக்கும் எல்லைச்சாமியே தான். அந்தத் தீனாவால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராதபடி உனக்கும், உன் குடும்பத்துக்கும் தேவையான பாதுகாப்பைச் செஞ்சி வச்சிட்டு உன்னை உன் ஊருக்கு அனுப்பி வச்சிடுறேன். அதுக்குப் பிறகு உன்னோட வாழ்க்கையை நீ உன் விருப்பப்படி வாழலாம்.” என்றவன் குரல் கடைசி வரியைச் சொல்லும் போது கமுறிவிட சந்தியா அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தாள்.


அவன் கண்கள் சொன்ன செய்தியில் அவள் உள்ளம் ஒரு நிமிடம் வேலை நிறுத்தம் செய்ய, அவள் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.


“இனிமே நீ இங்க இருக்கிறது உனக்கும் சரி, ராமசாமி சாருக்கும் அவர் பொண்ணுக்கும் கூடப் பாதுகாப்பு இல்ல. இப்ப உனக்குப் பாதுக்காப்பான இடம் என்னோட வீடுதான். அதனால நீ இப்ப என்னோட வரணும்.” என்றவனை அவள் சட்டெனத் திரும்பிக் கூர்மையாகப் பார்த்தாள்.


அவள் ஆடைக்கு வெளியில் தொங்கிய தாலியைத் தூக்கிக் காட்டியவன், “சத்தியமா இதைக் கட்டுன உரிமையில் உன்னை நான் கூப்பிடல‌… இன்னைக்கு மட்டும் இல்ல, நீயா நம்ம உறவை நோக்கி முதல் அடி எடுத்து வைக்காம, நான் உன்கிட்ட எந்த உரிமையும் எடுத்துக்க மாட்டேன். இது என் அம்மா மேல சத்தியம். என்னை நீ நம்பினா என்னோட வா.” என்றவன் அந்த அறையில் இருந்து வெளியே வந்தான்.


அவன் சொல்வது போல் தன்னால் ராமசாமி, கீர்த்திக்கும் அவளின் திருமணத்திலும், எந்தப் பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டுமெனில் தான் அங்கு இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தவள், ராமசாமியை அழைத்து தன் முடிவைச் சொன்னவள், “இங்க நடந்த எதுவும் நான் சொல்லற வரை என் வீட்டுக்கு மட்டும் இல்ல, யாருக்கும் தெரியக் கூடாது. நேரம் வரும்போது நானே எல்லார் கிட்டயும் சொல்லிக்குறேன்.” என்றவளிடம் அவர் ஏதோ சொல்ல வர, “ப்ளீஸ் அங்கிள்… நான் சொன்னதைச் செய்யுங்க… இப்போதைக்கு இந்த விஷயம் எதுவும் என் வீட்டுக்குத் தெரிய வேணாம். இது தெரிஞ்சால் அவங்க தாங்க மாட்டாங்க…” என்றவள் தேவாவுடன் கிளம்பத் தயாரானாள்.


ஆர்த்தி, சந்தியா இருந்த அறைக்குச் சென்றவள், “நேத்துல இருந்து நீ எதுவும் சாப்பிடல… ப்ளீஸ்மா, இந்தப் பாலையாவது குடி.” என்று சொல்ல, ஆர்த்தியைத் திரும்பிப் பார்த்த சந்தியாவின் கண்களில் சிறிதும் உயிர்ப்பு இல்லை. அதைப் பார்த்து ஆர்த்திக்கோ நெஞ்சம் விம்மியது.


“ப்ளீஸ் சந்தியா… நடந்த எதுவும் அவ்ளோ சீக்கிரம் மறக்கக் கூடியது இல்லதான். அது எனக்குப் புரியுது. ஆனாலும்…” என்றவளை நிமிர்ந்து பார்த்த சந்தியா, தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து அவள் முன் நீட்டியவள், “இதுக்கு என்னங்க அர்த்தம்? சொல்லுங்க இதுக்கு என்ன அர்த்தம்? அந்தப் பொறுக்கி என் விருப்பம் இல்லாமல் என் கழுத்துல தாலிகட்ட வந்தது தப்புன்னா, இப்ப உங்கத் தம்பியும் அதையேதான செஞ்சிருக்காரு…” என்றவளின் வாயை மூடிய ஆர்த்தி, “ப்ளீஸ்மா… தயவு செஞ்சு அந்த வார்த்தையைச் சொல்லாத… என் தம்பிய அந்தப் பொறுக்கி கூட கம்பேர் பண்ணாத. என தம்பி ரொம்ப நல்லவன்.” என்க, சந்தியா அவளை முறைத்தவள், “பொண்ணோட விருப்பம் என்னன்னு கேக்காம தாலி கட்டுறவன்தான் உங்க அகராதில நல்லவனா” என்றாள் கொதிப்பாக.


“அவன் உன்னைக் காப்பாத்த தான் சந்தியா இப்படிச் செஞ்சான்.” என்றவளை சந்தியா வெறுப்பாகப் பார்க்க, “உனக்கு அந்தத் தீனா பத்தித் தெரியாதுமா… அவன் ஒரு மிருகம். வெறி புடிச்ச சைக்கோ… அவனோட முதல் பொண்டாட்டிக்கு அவன் செஞ்ச கொடுமையெல்லாம் கேட்டால் நீ தாங்கமாட்ட… அவ்ளோ அருவருப்பான ராஸ்கல் அந்த நாய். அந்தப் பொண்ணை அவளோ சித்ரவதை செஞ்சான் அவன். பாவம் இவன் கொடுமை தாங்க முடியாம, ஊர் முன்னாடி வயித்துப் புள்ளையோட நெருப்பு வச்சிட்டு செத்துப்போச்சு அந்தப் பொண்ணு. அந்தப் பொண்ணு கத்துன கத்தல் இன்னும் என் காதுல கேட்டுட்டு இருக்கு, அந்தப்பொண்ணோட தற்கொலைக்கு இவன்தான் காரணும்னு அவனைப்பத்தி அந்த ஊர் டீச்சர் பொண்ணு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுச்சு, அதுக்காக அந்த தீனா அந்தப் பொண்ணை கடத்தி, நாலுநாள் அவனும் அவன் ஆளுங்களும் சேர்ந்து… ” என்றவளுக்கு அதற்கு மேல் பேசமுடியாது உடல் நடுங்கியது.


“தேவா அந்தப் பொண்ணைக் கண்டுபிடிக்க எவ்ளோ ட்ரை பண்ணான். ஆனா, அதுக்குள்ள அந்தப் பொண்ணை அவனுங்க…” என்று தலை குனிந்தவள், “அதுக்கு பிறகு அந்தப் பொண்ணு கேஸ்ல தேவா தீனாவை ஆர்ட்ஸ் பண்ணவும் வச்சான். ஆனா, அந்த பொண்ணோட அப்பா, அம்மா அந்த ஊர் காரங்க, அவங்க தீனாக்கு பயந்துட்டு அவங்கப் பொண்ணு காதல் தோல்வில தற்கொலை பண்ணிக்கிச்சுன்னு பொய் சொல்லிட்டாங்க. அதுக்குப் பிறகு இவனால் ஒன்னும் செய்ய முடியால… அந்தத் தீனா ஒரு விஷயம் நினைச்சா, அதை செஞ்சு முடிக்காம விடமாட்டான். எங்க அவன் சொன்ன மாதிரி, உன்னைக் எதுவும் பண்ணிடுவானோன்னு பயந்துதான், உனக்கு அந்தச் செத்துப்போன பொணுங்களோட நிலைமை வரக்கூடாதுன்னு நினைச்சு தான் என் தம்பி இப்படிப் பண்ணிட்டான். தயவு செஞ்சு அவனை மன்னிச்சிடும்மா” என்ற ஆர்த்தி அங்கிருந்து நகர்ந்தவள், நின்று திரும்பிச் சந்தியாவைப் பார்த்தவள், “அவன் உன்னைக் காப்பாத்த தான் கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஆனா” என்று நிறுத்தியவளைச் சந்தியா கேள்வியாகப் பார்க்க, “அவனுக்கு உன்னைப் புடிக்கும் சந்தியா. அவன் மனசுல வந்த முதல் பொண்ணும் நீதான்‌, கடைசியும் நீதான்.” என்றுவிட்டுச் செல்ல, அவளின் வார்த்தையில் திகைத்த சந்தியா, ‘அப்ப எல்லச்சாமி என்னை லவ் பண்றாரா’ என்று நினைத்தவளுக்கு உடல் தூக்கிவாரிப் போட்டது.


உடலை வருத்திப் பட்டினி கிடப்பதால் இனி எதுவும் மாறப்போவது இல்லை என்று உணர்ந்த சந்தியா, நடக்கும் அனைத்தையும் எதிர்த்து நிற்கத் தன் உடலில் தெம்பு வேண்டும் என்று முடிவு செய்தவள், தன் அறையை விட்டு வெளியே வர, அவளுக்காகவே அந்த அறை வாசலின் அருகில் சேரில் அமர்ந்த வாக்கிலேயே உறங்கிக் கொண்டிருந்த தேவாவைப் பார்த்தாள்.


கதவு திறந்த சத்தத்தில் தூக்கம் கலைந்த தேவா, அங்கு சந்தியாவைப் பார்த்ததும் சட்டென எழுந்து நின்றவன், “என்னமா எதுவும் வேணுமா?” என்று அக்கறையாகக் கேட்க நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “பசிக்கிது” என்றாள் மெல்லிய குரலில்.


அதைக் கேட்டவனுக்குச் சட்டென விழிகள் கலங்கிவிட, “வா… வாம்மா…” என்றவன் அவளைச் சமையல் அறைக்கு அழைத்துச் சென்றவன், “நீ இப்படி உக்காரு. ரெண்டு நிமிஷம், தோசை சுட்டுத் தரேன்.” என்றவன் மடமடவெனச் சட்னியை அரைத்து வைத்துவிட்டு, தோசையைச் சுட ஆரம்பிக்க, சந்தியா அவனையே விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஊரிலேயே பெரிய வீட்டுப்பிள்ளை. அவன் கண்ணால் இட்ட கட்டளையைத் தலையால் ஏற்றுச் செய்ய இந்த ஊரே காத்திருக்க, இவன் இன்று தனக்காகச் சமைப்பதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா. சூர்யாவும், அர்விந்தும் அடிக்கடி வீட்டில் உள்ள அனைவருக்கும் சமைத்துக் கொடுப்பது அவர்கள் வீட்டில் வழமைதான். ஆனால், ஏனோ தேவா அவளுக்காக இன்று சமைப்பதைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ மாதிரி இருந்தது.


அதே யோசனையில் இருந்தவள் முன் தோசையையும் சட்னியையும் வைத்தவன், “சந்தியா… சந்தியா” என்றழைக்க, சட்டென உணர்வுக்கு வந்தாள்.


“சூடாய் இருக்கும்போதே சாப்பிடு…” என்றவன் அடுத்த தோசையைப் போடப்போக, அவன் கையைப் பிடித்திருந்தாள் ஆர்த்தி‌.


“நீயும் போய் உக்கார்ந்து சாப்பிடு, நான் சுட்டுத் தரேன். நீயும் நேத்துல இருந்து ஒண்ணும் சாப்பிடல இல்ல…” என்று சொல்ல, சாப்பிட்டுக் கொண்டிருந்த சந்தியா சட்டென நிமிர்ந்து இருவரையும் பார்த்தாள்.


“ஆமா சந்தியா. நீ சாப்பிடாம நானும் சாப்பிட மாட்டேன்னு இவனும் நேத்துல இருந்து எதுவும் சாப்பிடல” என்று கவலையாகச் சொல்ல, சந்தியா அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல் தலையைக் குனிந்து கொண்டவள், உணவில் கவனமாக “நீ போய் உக்காருடா” என்ற ஆர்த்தி பிரிட்ஜில் இருந்த சாம்பாரை எடுத்துச் சுடவைத்து மேசை மீது வைத்தவள், இருவருக்கும் சேர்த்தே பரிமாறினாள்.


“மூன்றாவது தோசை சாப்பிட ஆரம்பிக்கும்போதே சந்தியாவின் வயிறு நிறம்பிவிட, போதும் என்று எழுந்துகொள்ள நினைத்தவள், எங்குத் தான் எழுந்தால் தேவாவும் உண்பதை நிறுத்தி விடுவானோ என்று நினைத்து, ரொம்பவும் மெதுவாக உண்ண, அதைப் பார்த்த ஆர்த்திக்குப் புரிந்துவிட்டது அவளின் எண்ணம். அதை நினைத்து மனதில் மகிழ்ந்தவள், தம்பியைக் கவனித்தாள்.


அவன் உண்டு முடிக்கும்போது தனக்கும் போதும் என்று எழுந்துகொண்ட சந்தியா அந்தப் பழைய அறைக்கே திரும்பிச் செல்லப்போக, அவளை நிறுத்திய தேவா, “நீ மேல இருக்கற ரூம்ல தங்கிக்கோ, அது நல்ல பெரிய ரூம். உனக்கு கம்பர்ட்டபிளாவும், அதோட உனக்குப் பாதுகாப்பாகவும் இருக்கும். உன்னோட திங்ஸ் எல்லாம் ராமசாமி சார் வீட்ல இருந்து எடுத்துட்டு வந்து அந்த ரூம்ல தான் வச்சிருக்கு. உனக்கு இன்னும் எதுவும் வேணும்னா சொல்லு, நாளைக்கு வாங்கிக்கலாம். எதைப்பத்தியும் கவலைப்படாம இரும்மா… சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்.” என்றவன் ஆர்த்தியிடம் “நீ சந்தியாவுக்குத் துணையாய் படுத்துக்கோ.” என்றவன் அங்கிருந்து செல்ல, சந்தியாவுக்கு அவனை எப்படி எடுத்துக் கொள்வது என்று கொஞ்சமும் புரியவில்லை.


அப்படியே இரண்டு நாட்கள் மெதுவாக நகர, ஆர்த்தியிடம் மட்டும் கொஞ்சமாகப் பேசிப் பழகினாள் சந்தியா. அவளுக்குச் சமையலில் சின்னச் சின்ன உதவிகள் செய்தாள். காலை வேளையில் தோட்டத்தில் அவளுடன் நடப்பாள். அவள் இருந்த மனநிலைக்கு ஆர்த்தியுடன் இருக்கும் நேரம் அவளுக்கு நிலாவை நினைவுபடுத்த, அவளுக்கு அது இதமாக இருந்தது. ஆனால், தேவா, சந்தியா இடையில் மட்டும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இறுக்கமாகவே சென்றது. சிலநேரங்களில் கொஞ்சம் நல்ல மனநிலையில் அவள் இருக்கும் சமயம் சென்னையில் இருந்து அழைப்பு வந்துவிட்டால், அவளின் இயல்பு மொத்தமாக மாறிப்போகும். அன்போடு விசாரிக்கும் அன்னை, தந்தையிடமும், அக்கறையாகத் தன் நலன் கேட்கும் அக்கா, மாமாவிடமும் நடந்ததை மறைக்கிறோம் என்ற குற்றவுணர்வு அவளை வதைக்க, இதழ்களைக் கடித்துத் தன் மனதை அடக்குபவள், முடிந்த வரை அவர்களிடம் தன்னை இயல்பாகக் காட்டிக் கொள்வாள். அந்த நேரத்தில் அவளின் வேதனை முகத்தைப் பார்க்கவே தேவாவுக்குச் சங்கடமாக இருக்க, “நான் வேணும்னா உங்க வீட்ல பேசவா?” என்று கேட்டவனைக் கையெடுத்துக் கும்பிட்டு, “நீங்க செஞ்ச வரைக்கும் போதும்” என்றுவிட, தேவாக்குதான் இதயம் கனத்துப்போகும்.


சில நாள்கள் இப்படியே செல்ல, அன்று கீர்த்தியின் திருமணம்.