உன் விழியில் கைதானேன் 18

 விழி 18


கீர்த்தியின் திருமணத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த சந்தியாவின் முன்னில் கையில் தட்டுடன் தயங்கித் தயங்கி வந்து நின்றாள் ஆர்த்தி.


“என்ன ஆர்த்தி?” என்று கேட்ட சந்தியாவின் முன் அழகிய பட்டுப் புடவையையும், நகைகளையும் வைத்தவள், “இதெல்லாம் எங்க பரம்பரை நகை, வரப்போற மருமகளுக்காக எங்கம்மா ஆசையாய் எடுத்து வச்சது. இன்னைக்குக் கல்யாணத்துக்குப் போகும்போது இதெல்லாம் போட்டுட்டுப் போயேன்.” என்று கெஞ்சலாகக் கேட்க, அதற்கு மறுப்பாகத் தலையாட்டிய சந்தியா, “இல்ல ஆர்த்தி, இதெல்லாம் எனக்கு வேணாம். இந்த நகை எல்லாம் உங்கம்மா மருமகளுக்கு ஆசையாய் எடுத்து வச்சதுன்னு சொல்றீங்க… எனக்கு நடந்ததுக்குப் பேர் கல்யாணம்னே சொல்ல முடியாது. அப்படி இருக்க, எந்த வகையில் நான் இதெல்லாம் போட்டுக்கிறது சொல்லுங்க.” என்றாள் விரக்தியாகச் சிரித்தபடி.


“ப்ளீஸ் சந்தியா, அப்படி எல்லாம் பேசாத. எப்படி நடந்திருந்தாலும் கல்யாணம் கல்யாணம் தான். நீ இந்த வீட்டு மருமகள் தான். இனி அதை யாராலயும் மாத்த முடியாது.” எனும் போதே சந்தியா ஏதோ சொல்ல வர ஆர்த்தி அவள் வாய் மேல் கை வைத்தவள், “நீ சொன்ன இல்ல, என்னை உன் அக்காவாப் பார்க்குறேன்னு. அது உண்மையாய் இருந்தா என்னோட சந்தோஷத்துக்காகவாது இதெல்லாம் போட்டுக்க… இல்லாட்டி பரவாயில்ல.” என்ற ஆர்த்தி அந்த அறையை விட்டு வெளியேற, சந்தியாவுக்குதான் என்ன சொல்வதென்று புரியாத நிலை.


திருமணத்திற்குத் தேவாவும் கிளம்பி இருந்தவன் சந்தியாவுக்காகக் காத்திருந்த வேளை, மெல்லிய கொலுசொலி கேட்கச் சத்தம் வந்த திசை திரும்பிப் பார்த்தவனின் கண்கள் பார்த்தது பார்த்தபடி அசந்து நின்றுவிட்டது.


அவளுக்காக அவன் தேடித்தேடிய வாங்கிய அரக்கு வண்ணப் பட்டுப் புடவையில், ஆர்த்தி கொடுத்த அழகிய பச்சை வண்ணக் கற்கள் பதித்த நகைகளை அணிந்து கோயில் சிலைபோல் படிகளில் இறங்கி வந்தவளை விட்டுக் கண்கள் இங்கும் அங்கும் நகரவில்லை தேவாவுக்கு.


ஆர்த்தி தம்பியின் புஜத்தில் கிள்ளியவள், “டேய், வாயில இருந்து வர வாட்டர் பால்ஸை கண்ட்ரோல் பண்ணு. அவ பார்த்தா உன் மானம் கப்பல் ஏறிடும்.” என்று அவன் காதோரமாகச் சொல்ல, சட்டெனத் தன்னைச் சுதாரித்துக் கொண்டவன் இயல்புக்குத் திரும்பி இருந்தான்.


ஆர்த்தி சந்தியாவிடம் சென்றவள், “ரொம்ப தேங்க்ஸ் சந்தியா…” என்றபடி அவள் கன்னம் வழித்தவள், “ரொம்ப அழகா இருக்க… நீங்க திரும்பி வந்ததும் உனக்குத் திருஷ்டி சுத்திப் போடணும்.” என்று சொல்ல, சந்தியா கண்களைச் சுருக்கி ஆர்த்தியைக் கேள்வியாகப் பார்த்தவள், “நீங்கன்னா என்ன அர்த்தம்? நான் மட்டும் தானே மேரேஜுக்குப் போறேன்?” என்றாள் புரியாமல்.


“கல்யாணம் ஆகி முதல் முதல்ல வெளிய போறீங்க, அதுவும் கல்யாணத்துக்கு. நீ மட்டும் தனியாப் போனா அவ்ளோ நல்லா இருக்காதும்மா. அதான் தேவாவும் உன்னோட வரான். அதோட இந்த ஊர்ல நடக்கும் எல்லாப் பொண்ணுங்க கல்யாணத்துக்கும் எங்க குடும்ப வழக்கப்படி சீர்வரிசை இந்த வீட்ல இருந்து போகும். அதை நீயும் அவனும் சேர்ந்துதான் தரணும். அதுதான் இந்த வீட்டுக்குப் பெருமை” என்று சொல்லிட, ஏனோ சந்தியாவால் அதை மறுக்க முடியவில்லை. 


அமைதியாகத் தேவாவுடன் கிளம்பி திருமணத்திற்குச் சென்றவளுக்குத் தேவாவின் மனைவி என்ற முறையில் அங்கு ஏகமரியாதை. அனைத்துச் சடங்குகளிலும் அவளையே அனைவரும் முன்னிருத்த அவளுக்கு ஒருமாதிரிச் சங்கடமாகிவிட, அசௌகரியமாக நெளிந்தவளின் நிலையை உணர்ந்த தேவா, “இங்க நிறையப் பெரியவங்க இருக்கீங்க. இந்தச் சடங்கெல்லாம் நீங்க செஞ்சால் தான் நல்லது.” என்றவன் நாசூக்காக அங்கிருந்த வயதான பெண்களின் தலையில் அந்தப் பொறுப்பைக் கொடுத்துவிட, சந்தியாவுக்கு அப்போது தான் மூச்சே வந்ததது.


“ஃபீலிங் பெட்டர்?” என்று அவள் காதோரம் குனிந்து கேட்டவனைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தவள், “ம்ம்ம்” என்றாள் மென்மையாக.


அன்று மட்டும் அல்ல, அதற்குப் பிறகு வந்த நாள்களிலும், அவள் சொல்லாமல் அவளின் உணர்வுகளைப் புரிந்து எந்த வகையிலும் அவளின் மனம் வருந்தாமல் பார்த்துக் கொண்டான் தேவா. அதுவே சந்தியாவின் மனதில் அவன் மேல் நல்ல எண்ணத்தை உருவாக்கி இருக்க, அவள் மனதில் அவன் மேல் அன்பென்ற விதை மெல்லியதாக வேர்விடத் தொடங்கியது. அது அவளவனுக்கும் புரிந்திருந்தது.


மொட்டை மாடியில் இயற்கையை வேடிக்கை பார்த்தபடி இருந்தவளிடம் வந்த ஆர்த்தி, “சந்தியா… உனக்குப் பால் கொழுக்கட்டை புடிக்கும்னு சொன்ன இல்ல… இந்தா சாப்பிடு” என்று கிண்ணத்தை அவள் முன் நீட்டியபடி நின்றவள், கலங்கி இருந்த அவள் கண்களைப் பார்த்து, “அச்சோ… என்னாச்சு சந்தியா? ஏன் உன் கண்ணு கலங்கி இருக்கு? உடம்புக்கு எதுவும் முடியலியா?” என்ற ஆர்த்தி அவள் நெற்றி, கழுத்து, கன்னம் எல்லாம் தொட்டுக் காய்ச்சல் அடிக்கிறதா என்று பார்க்க அவள் கையைப் பிடித்துக் கொண்ட சந்தியா, “எனக்கு ஒன்னும் இல்ல ஆர்த்தி. நான் நல்லா தான் இருக்கேன்.” 


“அப்புறம் ஏன் அழுதுட்டு இருக்க?” என்றவளை ஏறிட்டுப் பார்த்தவள், “நிலா அக்கா கால் பண்ணி இருந்தா?” என்று தழுதழுத்த குரலில் சொல்ல, ஆர்த்திக்கு அவளின் கண்ணீருக்கான காரணம் புரிந்து விட்டது.


“கீர்த்தி கல்யாணம் முடிஞ்சு போச்சே, எப்ப ஊருக்கு வரேன்னு கேட்டாங்களா?” என்று ஆர்த்தி கேட்க, மெதுவாக மேலும் கீழும் தலையை ஆட்டிய சந்தியா, “கீர்த்தி புருஷனுக்கு ஆர்மில இருந்து உடனே கிளம்பி வரணும்னு ஆர்டர் வந்து அவர் கிளம்பிப் போயிட்டாரு. கீர்த்தி அங்கப் போக, இன்னும் கொஞ்ச நாள் ஆகும். அதுவரைக்கும் அவளோட இருந்துட்டு வரேன்னு சொல்லிட்டேன்.” என்றவளின் கட்டுப்பாடை மீறிக் கண்களில் கண்ணீர் வந்துவிட, ஆர்த்தி அவள் கண்களைத் துடைத்து விட்டவள், “நீ அவங்ககிட்ட உண்மையைச் சொல்லிடலாம் இல்ல. உன்னோட நானும் தேவாவும் சென்னை வந்து உங்க வீட்ல பேசுறோம். அவங்க புரிஞ்சிப்பாங்க.” என்றுச் சொல்ல சந்தியா இடவலமாகத் தலையாட்டியவள், 


“இங்க நடந்தது மட்டும் என்னோட சூர்யா மாமாக்கும், அரவிந்த் மாமாக்கும் தெரிஞ்சிது அவ்ளோதான். அந்தத் தீனாவையும் உயிரோட கொழுத்திடுவாங்க‌‌…” என்றவள் திரும்பி ஆர்த்தியைப் பார்த்தவள், “தாலி கட்ட வந்தவனுக்கே அந்த கதின்னா, தாலி கட்டின உங்கத் தம்பி நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சுப் பாருங்க…” என்றவள் அங்கிருந்துச் செல்ல, அங்கு நடந்த அனைத்தையும் மறைவில் இருந்து கேட்ட தேவாவுக்கு மனம் கனத்துப் போனது. இந்தக் கொஞ்ச நாளில் அவளுக்கு குடும்பத்தின் மேல் உள்ள அன்பினை நன்கு தெரிந்து வைத்திருந்தவனுக்கு, அவளின் மனவருத்தம் தெளிவாகப் புரிந்தது. கூடிய விரைவில் அவளின் குடும்பத்துடன் பேசி எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கொண்டு வரவேண்டும் என்று நினைத்தவன், அவளுக்கு இனிச் சின்ன மனக்கஷ்டம் கூட வரக்கூடாது என்று இன்னும் இன்னும் அவளை அக்கறையுடன் பார்த்துக் கொண்டான். அவனின் அன்பும், அக்கறையும் அவ்வப்போது சந்தியாவின் இறுகி இருந்த மனதைச் சற்று அசைத்துதான் பார்த்தது. 


அன்று ஆர்த்திக்கு லேசான காய்ச்சல் இருக்க, அவளை அறையில் சென்று ஓய்வெடுக்கச் சொன்னாள் சந்தியா.


“இல்ல சந்தியா, நைட் நான் இல்லாட்டி இந்தத் தேவா எதுவும் சாப்பிடாம அப்படியே பட்டினியாய் படுத்திடுவான். அதோட இன்னைக்கு இவன் அந்த தயாளன் ஊருக்கு வேற ஒரு வேலையாய் போயிருக்கான். அதுவே எனக்குப் பயமா இருக்கு. அவன் முகத்தைப் பார்த்தா தான் எனக்கு நிம்மதி” என்றவளுக்குக் காய்ச்சலின் வீரியத்தில் கண்கள் சுழற்றிக்கொண்டு வந்தது.


“அதெல்லாம் அவருக்கு ஒன்னும் ஆகாது ஆர்த்தி. நீ பேசாமல் போய் படு. அவர் வந்தும் நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” என்றவள் கட்டாயப்படுத்தி மருந்து கொடுத்து ஆர்த்தியை உறங்க அனுப்பி வைத்தவள், தேவாவுக்காகக் காத்திருந்தாள்.


நேரம் இரவு பனிரெண்டு மணியைத் தொட்டிருக்க, இன்னும் தேவா வரவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், தயங்கித் தயங்கி அவன் அலைபேசி எண்ணுக்கு அழைக்க, அதுவோ சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. 


நேரம் ஆக ஆக ஆர்த்தி சொன்னதை நினைத்துச் சந்தியாவுக்கும் பயம் தொற்றிக் கொள்ள, பதட்டமாக மீண்டும் மீண்டும் அவன் எண்ணுக்கு முயன்று பார்த்தவளுக்கு சுவிட்ச் ஆஃப் என்று தகவலே திரும்பத் திரும்ப வர, நேரம் இரவு ஒரு மணியைத் தொட்டிருந்தது.


அதற்குமேல் முடியாது என்று நினைத்தவள், அவளே அவனைத் தேடிச்செல்லக் கிளம்பி வெளியே வந்த நேரம் சரியாக வீட்டுக்குள் நுழைந்தான் அவள் கணவன்.


அவனைக் கண்ட அடுத்த கணம் எதைப்பற்றியும் யோசிக்காமல், பாய்ந்துசென்று அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டவள், “உனக்கு ஒன்னும் ஆகல… நீ நல்லா இருக்க” என்றாள் நிம்மதியான குரலில். 


ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்த தேவா, தாமரைக் கொடியாகத் தனை முழுவதும் சுற்றி வளைத்திருந்தவளின் அணைப்பில் தன்னை மறந்து நின்றான்.


எவ்வளவு நேரம் அந்த அணைப்பு தொடந்தது என்று இருவருக்கும் புரியாத நிலையில் முதலில் சுயவுணர்வுக்கு வந்த சந்தியா, சட்டென அவனை விட்டு விலகி வந்தவளுக்கு அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட முடியவில்லை.


“அ..அது… ரொம்ப லேட் ஆகிடுச்சு. நீ…நீங்க இன்னும் வரல, உங்… உங்களுக்கு எதுவும் ஆகி இருக்குமோன்ற பயத்தில் தான். இப்..இப்படி” என்று தலையைக் குனிந்தபடியே சொல்ல, குனிந்திருந்தவளின் தாடையை ஒற்றை விரலால் நிமிர்த்திப் பிடித்தவன், “எனக்கு எதாவது ஆனா… உனக்கென்ன? நீ ஏன் இவ்ளோ பதட்டமாக இருக்க? நான் உனக்கு யாரோ தானே… அப்படி எனக்கு எதுவும் ஆனாலும் உனக்கு நல்லது தானே. நீ சீக்கிரம் உன் குடும்பத்துகிட்டப் போயிடலாம். இங்க நடந்த எல்லாத்தையும் அப்படியே மறந்துட்டு நீ உன்னோட புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். நான் செத்தால் உனக்கு நல்லது தானே” என்றவனின் கன்னத்தில் ஓங்கிப் பளார் என்று ஒரு அறை விட்டாளே பார்க்கலாம். தேவாவுக்கு ஒரு நிமிடம் உலகமே நின்று சுற்றியது போல் ஆனது‌.


அவனை முறைத்துப் பார்த்தவள், “உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதா? லூசு மாதிரிப் பேசிட்டு இருக்க…” என்றவள், “டேபிள்ல சாப்பாடு இருக்கு. ஒழுங்கா சாப்பிட்டு படு. காலையில் நான் செக் பண்ணுவேன்.” என்றவள் அங்கிருந்து நகர அவள் கையைப்பிடித்து நிறுத்திய தேவா, “அன்னைக்கு நான் ஒன்னு சொன்னேன் நினைவு இருக்கா?” என்று கேட்டவனைப் புரியாமல் பார்த்தாள் சந்தியா.


“நீயா நம்ம உறவில் முதல் அடியை எடுத்து வைக்காமல், நான் உன்னை நெருங்கி வரமாட்டேன்னு சொன்னேன்.” என்றவன் அவளை ஆழ்ந்து பார்க்க, சந்தியாவுக்கு உள்ளம் படபடத்தது.


“இன்னைக்கு நான் உன் கண்ணுல பார்த்தது காதல் இல்ல தான். ஆனா, உன் மனசுல என்மேல அன்பும் அக்கறையும் இருக்குன்னு நீ இந்த ஒரு ஹக்ல சொல்லிட்ட…” என்றவனை எச்சில் விழுங்கியபடி பார்த்தவள், “அது… அது ஒரு பதட்டத்தில்” என்றவளின் வாயைத் தன் கைகொண்டு மூடியவன், “ப்ளீஸ்… எதுவும் சொல்லிடாத. எனக்குக் கிடைச்ச ஒரு சின்ன நம்பிக்கை இது‌. எதாவது சொல்லி அதை உடைச்சிடாத.” என்றவனின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாது வேகமாக அங்கிருந்து சென்றவள், தன் அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொள்ள, சிறு புன்னகையோடும், பெரும் நம்பிக்கையோடும் உணவு மேசைக்குச் சென்றவன், அவன் மனைவி சொல்லைத் தட்டாமல் மனநிறைவோடு உணவை உண்டவன், இனி நடக்கப் போகும் விபரீதங்கள் பற்றி எதும் அறியாமல் நிம்மதியாக உறங்கிப்போக, சந்தியாவோ உறக்கத்தோடு தன் நிம்மதியையும் இழந்து தவித்துக் கொண்டிருந்தாள்.


நாளுக்கு நாள் தேவா, சந்தியாவுக்கு இடையே இருந்த இடைவெளி குறைந்து கொண்டே வந்ததை இருவரும் உணர்ந்தே இருந்தனர். இது தேவாவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்க, அதற்கு மாறாகச் சந்தியாவுக்குப் பயத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு முறை அவள் வீட்டில் இருந்து அழைப்பு வரும் போதெல்லாம் அவள் மனதில் ஒரு போரே நடந்துகொண்டு இருந்தது. கலைவாணி அவளின் திருமணத்திற்குத் தேவையான பொருட்களைப் பார்த்துப் பார்த்து வாங்கி அதை ஃபோட்டோ எடுத்து இவளுக்கு அனுப்பி பிடித்திருக்கிறதா என்று கேட்கும் போதெல்லாம் வரும் அழுகையை அடக்கப் படாதபாடு படுவாள் இவள். இதில் ஆகாஷ் அழைத்து விட்டால் அவ்வளவு தான். அன்று முழுவதும் ஏதோ செய்யக்கூடாத தவறு செய்த குற்றவாளி போல் கூனிக்குறுகிப் போவாள். 


கஷ்டப்பட்டு தேவாவின்மேல் படரும் தன் உணர்வுகளை அவள் அடக்கி வைக்க இவள் போராடிக் கொண்டு இருக்க, அன்பு, அக்கறை என்ற ஆயுதங்களைக் கொண்டு அவளின் மனதை மெல்ல மெல்லத் தன்வசம் ஆக்கிக் கொண்டிருந்தான் தேவா.


அன்று தேவாவின் கரும்புத் தோட்டத்தில் அறுவடை நடந்தது. அதில் ஆர்த்தி அவள் கையால் நட்டு வைத்த கரும்புகளை மட்டும் தனியாக எடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்த தேவா, மீதிக் கரும்புகளைத் தன் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டிக்கு வந்தவன், கண்களை நிறைத்தாள் அவன் மனைவி.


அன்று காலை ஆர்த்தி வீட்டில் சின்னதாகப் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்ததால் பட்டுப்புடவை கட்டி, தலை நிறையப் பூ வைத்திருந்த சந்தியா, ஒற்றைக் கண்ணை மூடியபடி, பெரிய கரும்பு ஒன்றை வாயில் வைத்துக் கடித்தவள், அதன் இனிப்பைக் கண்கள் மூடி ரசித்துச் சுவைத்துக் கொண்டு இருந்ததை கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் தேவா.


அவளையே இமைக்காமல் பார்ப்பவனைப் பார்த்து இரு புருவத்தை உயர்த்தி, “என்ன?” என்பது போல் கேட்க, மெதுவாக இடவலமாகத் தலையாட்டி, “ஒன்னும் இல்ல.” என்றான் தேவா.


“ஒன்னும் இல்லாட்டி எதுக்கு, குழந்தைங்க ஐஸ்வண்டியப் பார்க்குற மாதிரி என்னையே அப்படிப் பாத்துட்டு இருக்கீங்க?” என்றவள் தன் கையில் இருந்த கரும்பைப் பார்த்து, “கரும்பு வேணும்னா வாயத் திறந்து கேளுங்க… அதைவிட்டு ஏன் இப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க.” என்றவள், “இந்தாங்க, வேணும்னா இதை நீங்களே சாப்பிடுங்க… இது ஒன்னும் அவ்ளோ ஸ்வீட்டா இல்ல” என்று அவன் முன் கரும்பை நீட்டினாள்.


அவள் சொன்னதைக் கேட்டுக் கடுப்பான தேவா, “என் தோட்டத்துக் கரும்பு அவளோ ஸ்வீட்டா இல்ல இல்ல.” என்று எகத்தாளமாகக் கேட்டவன், அவள் மென்று துப்பி இருந்த சக்கையைக் காட்டி, “ஸ்வீட்டா இல்லாதப்பவே இவளோ கரும்பைச் சாப்பிட்டு இருக்கயே… இதுல இன்னும் ஸ்வீட்டா இருந்திருந்தால் அப்புறம் மொத்தக் கரும்புக் காட்டையும் உனக்குத்தான் குடுக்கணும் போல. சுகர் ஃபேக்டரிக்கு ஒரு கரும்புகூட மிஞ்சாது.” என்று அவளைக் கேலி செய்ய, முகத்தைச் சுருக்கி அவனை முறைத்தபடியே அவன் முன் வந்து நின்றவள், “ஹலோ… அப்ப நான் பொய் சொல்றேன்னு சொல்றீங்களா?” என்று கரும்பை வாயில் மென்றுகொண்டே, அவனுடன் சண்டைக்கு நிற்க, தேவா மேலும் கீழும் தலையாட்டியவன், “கண்டிப்பா நீ பொய் தான் சொல்ற. எங்க கரும்பளவுக்கு டேஸ்ட்டான கரும்பு இந்த ஏரியாலயே இல்ல தெரியுமா?” என்று அவனும் அவளுடன் மல்லுக்கு நிற்க, அவனை இடுப்பில் கைவைத்து முறைத்த சந்தியா, “நான் ஒன்னும் பொய் சொல்லல… வேணும்னா நீங்க இந்த கரும்பை டேஸ்ட் பண்ணிப் பாருங்க.” என்றவள் அவள் சாப்பிட்டுப் பாதி வைத்திருந்த, கரும்பை அவன் முன் நீட்டியபடி அவனை நெருங்கி நின்றாள்.


தன்னை நெருங்கி நின்றவளின் மேனியில் இருந்து வந்த அவளின் வாசத்தில் ஒரு நிமிடம் தன்னை மறந்த தேவா, அவள் கையில் இருந்த கரும்பையும் அவளின் செவ்விதழ்களில் வழிந்து கொண்டிருந்த கரும்புச் சாறையும் மாறிமாறிப் பார்த்தவன், சட்டென்று அவள் கையைப் பிடித்து இழுத்து அவள் பின்னந்தலையில் கைவைத்து தன்புறம் இழுத்தவன், அடுத்த கணம் அவள் இதழ்களில் தன்னிதழ்களை அழகாக இணைத்திருந்தான்.


திடீரென நடந்த இந்த நிகழ்வில் சந்தியா உறைந்து நிற்க, சில நொடிகள் கழித்து அவளின் இதழ்களுக்கு விடுதலை கொடுத்த தேவா, அவள் முகத்தை மையலாகப் பார்த்தபடி, “எங்க கரும்பு எப்பவும் ஸ்வீட் தான். ஆனா, ஏனோ தெரியல, இன்னைக்கு ரொம்ப ரொம்ப ஸ்வீட்டா இருக்கு” என்றவன் அவள் இதழ்களை வருட, சட்டென அவனைத் தள்ளிவிட்டு விலகி வந்த சந்தியா அங்கிருந்து ஓடிவிட, கலங்கிய கண்களுடன் அங்கிருந்து செல்பவளைப் பார்த்த தேவாவுக்கு அப்போது தான் தான் செய்த தவறே புரிந்தது. 


ஒரு நிமிடம் அவளின் நெருக்கத்தில் தன்னிலை மறந்து தான் செய்த காரியம் அவளை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்று யோசித்தவனுக்கு உள்ளம் பதறியது.


இந்த நிகழ்வுக்குப் பின்னர் சந்தியா, தேவாவிடம் பேசுவதையே நிறுத்தி இருக்க, தான் செய்த தவறுக்குத் தண்டனையாக அவள் அடித்தால் கூட அவனால் தாங்கிக்கொள்ள முடிந்திருக்கும். ஆனால், அவளின் மௌனத்தை அவனால் தாங்க முடியாமல் போனது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன், நேராக அவளிடம் சென்று ஒரு சவுக்கை அவள் கையில் கொடுத்தான்.


“நான் பண்ணது தப்புதான். உன்னோட சம்மதம் இல்லாமல் கிஸ் பண்ணது தப்புதான். அதுக்காக நீ என்ன பனிஷ்மென்ட் வேணும்னாலும் கொடு. பட், இப்படி என்கிட்டப் பேசாம மட்டும் இருக்காதடி… என்னால உன் கோவத்தைத் தாங்க முடியும். ஆனா, உன் மௌனம் என்னைக் கொல்லுதுடி…” என்றவன், “இந்தா, இந்தச் சவுக்கால உன் கோவம் தீரும் வரைக்கும் என்னை அடி. நான் வாங்கிக்கறேன். பட், என்னோட பேசாமல் இருக்காதடி. எனக்கு ரொம்ப வலிக்கிது.” என்றவனின் குரலில் தெரிந்த வலியைச் சந்தியாவால் நன்கு உணரமுடிந்தது.


‘நான் பேசாமல் இருந்தா… இந்த எல்லச்சாமிக்கு இவ்ளோ வலிக்குமா? அந்த அளவுக்கு இவர் என்னை லவ் பண்றாரா?’ என்று நினைத்தவளுக்கு அதற்கு மேல் அவன் மீது கோவத்தைக் கட்டி வைக்க முடியாமல் போக, சாட்டையைக் கீழே போட்டவள், “நான் போறேன்.” என்ற வார்த்தையில், இனி உன்னோட பேசுவேன் என்பதை அவனுக்கு உணர்த்தியவள் அங்கிருந்து நகர, “ஒரு நிமிஷம்” என்றான் தேவா.


அவள் என்ன என்பது போல் பார்க்க, “உன் சம்மதம் இல்லாமல் கிஸ் பண்ணது தப்பு தான். ஆனா, என்மேல விருப்பம் இல்லாத பொண்ணை நான் கிஸ் பண்ணல.” என்றவனை அவள் கேள்வியாகப் பார்க்க, அவளைப் பார்த்துச் சன்னமாகச் சிரித்தவன், “அன்னைக்கு நான் உன்னைக் கிஸ் பண்ணும்போது உன் முகத்துல கோவமும், அழுகையும் தான் இருந்துச்சு. அதுல துளி கூட அருவெறுப்பு இல்ல. சோ இப்ப நான் கேட்கும் சாரி, உனக்கு நான் கிஸ் கொடுத்ததுக்காக இல்ல, உன் பர்மிஷன் இல்லாமல் கிஸ் பண்ணதுக்கு தான் இந்த சாரியைக் கேட்டேன்.” என்றவன் குறுஞ்சிரிப்போடு அங்கிருந்து செல்ல, அவன் பேசியதில் இருந்த உண்மை சந்தியாவுக்குப் புரிய, அவள் திகைத்து நின்றாள்.