உன் விழியில் கைதானேன் 19

 விழி 19


மருத்துவமனை அறையில் தேவா படுத்திருந்த கட்டிலின் அருகில் அவன் கையைப் பிடித்துக் கொண்டு விழி மூடிப் படுத்திருந்த சந்தியாவுக்கு‌ யாரோ தன்னை உற்றுப் பார்ப்பதுபோல் தோன்றச் சட்டென எழுந்தவள் கட்டிலில் இருந்தவனைப் பார்க்க, அவனும் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவள் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர்த் துளிகள் முத்து முத்தாக இறங்கியது.


முழுதாக இரண்டு நாள்கள் அனைவரையும் பயத்திலேயே வைத்திருந்த தேவா, எந்த ஆபத்துமின்றி அப்போதுதான் கண் விழித்திருந்தான்.


‘எனக்குத் தெரியும்டா… எனக்குத் தெரியும், உனக்கு ஒன்னும் ஆகாதுன்னு…’ என்று நினைத்தவள் அவன் கையை மெல்ல அழுத்த, ‘இந்த ஜென்மத்தில் உன்னைத் தனியா நிம்மதியா விட்டு நான் போக மாட்டேன்டி.’ என்று அவளுக்குத் தன் கண்களால் பதில் சொன்னவனைப் பார்த்து, சந்தியாவுக்குச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே வந்தது.


அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து வேறு அறைக்கு மாற்றப்பட்டான் தேவா. இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் அவன் இருக்க வேண்டும் என்று, மருத்துவர்கள் சொன்ன பிறகே அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு வெளிவந்தது.


அந்த ஒரு வாரமும், ஆர்த்தி கர்ப்பமாக இருந்ததைக் காரணம் காட்டி, அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்த சந்தியா, யாரையும் தேவா அருகில் விடாமல் அவளே அவனை உடனிருந்து கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டாள். ஆனால், அவனிடம் ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை. அவனும் அவள் செய்யும் அனைத்துப் பணிவிடைகளையும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டானே தவிர, அவனும் அவளுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இருவருக்கும் இடையில் அவர்கள் காதலும் மௌனமும் மட்டுமே பாலமாக இருந்தது. அவன் சொல்லாமல் அவன் கண்ணசைவை வைத்தே அவன் மனமறிந்து அவனுக்கு அனைத்தையும் செய்பவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு மேலும் மேலும் அவள் மீது காதல் கூடிப் போனது‌.


இவர்கள் இருவரின் போக்கு அனைவருக்கும் வித்தியாசமாக இருந்தாலும், அவர்கள் விவகாரத்தை அவர்கள் இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று யாரும் எதுவும் பேசவில்லை.


அன்று தேவாவை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர்கள் சொல்லிவிட அவனின் மருந்துகள், மற்றப் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்த சந்தியா, “மாம்ஸ், டிஸ்சார்ஜ் பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சாச்சு இல்ல… நீங்க எல்லாரும் கிளம்புங்க, நான் இவனை வீட்டுல விட்டுட்டு வரேன்.” என்று சொல்ல தேவா அவளை அழுத்தமாகப் பார்த்தான்.


“என்ன சந்தியா சொல்ற? வீட்டுல விட்டுட்டுப் போயிடுவியா… அப்ப நீ எங்ககூட இருக்க மாட்டியா?” என்று ஆர்த்தி ஆதங்கமாகக் கேட்க, சந்தியா எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.


அவளின் மௌனத்தின் அர்த்தம் தேவாவைத் தவிர அங்கு யாருக்கும் புரியவில்லை. 


அப்போது நிலானி, “ஆர்த்தி இப்ப வரை இவங்க ரெண்டு பேரும் எலியும் பூனையுமா தான் சீறிட்டு இருக்காங்க. முதல்ல ஒரு நல்ல நாள் பார்த்து ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிப்போம். அப்புறம் அவங்க ரெண்டு பேர் பாடு… என்ன பண்றாங்களோ பண்ணிக்கட்டும். அதுவரை அவ எங்க கூட இருக்கட்டும்.” என்றுச் சொல்ல, ஆர்த்திக்கும் அதுதான் சரியென்று தோன்றியது. ஆனால், சம்பந்தப்பட்ட இருவரும் அங்கு நடக்கும் பேச்சு வார்த்தைக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.


அருள் காரை எடுக்க ஆர்த்தி அவன் அருகில் அமர்ந்து கொள்ள, தேவாவும் சந்தியாவும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர். சூர்யாவும் அரவிந்தும் மற்றவர்களை அழைத்துக்கொண்டு அவர்கள் காரைப் பின்தெடர்ந்து வந்தனர்.


வீட்டிற்கு வந்த தேவாவையும் சந்தியாவையும் நிற்க வைத்துக் கலைவாணியும், தனலட்சுமியும் அவர்களுக்கு ஆர்த்தி எடுத்தவர்கள், “இனிமே உங்க ரெண்டு பேருக்கும் எந்தக் குறையும் வராது” என்று திருஷ்டி சுத்திப்போட, இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.


அனைவருடனும் ஹாலில் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த தேவா, “எனக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கு, நான் மேல போறேன்.” என்றவன் மெதுவாகக் கையை ஊன்றி எழப் பார்க்க, சட்டென அவன் தோளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள் சந்தியா.


“நான் இவனை மேல ரூம்ல படுக்க வச்சிட்டு வரேன்.” என்றவளின் தலையில் கொட்டிய கலைவாணி, “என்னடி இது, மரியாதை இல்லாம அவன் இவன்னு பேசிட்டு… ஒழுங்கா வாங்க, போங்கன்னு கூப்பிட்டுப் பழகு” என்று மீண்டும் அவள் தலையில் ஒரு கொட்டு வைக்க, அனைவரும் சந்தியாவைப் பார்த்து, 


“இது தேவையா?” என்றபடி சிரிக்க, தேவா இதழ் கடித்துத் தன் சிரிப்பை அடக்கப் பார்க்க, அவனைக் கண்கள் சுருக்கி முறைத்த சந்தியா, “இங்கப்பாரு கலை… உன் அதிகாரத்தை எல்லாம் உன் புருஷன் கிட்ட வச்சிக்கோ… தேவை இல்லாம எங்க லைன்ல க்ராஸ் பண்ணாத?” என்று சொன்னவள் தலையில் மறுபடியும் ஒரு கொட்டு விழ, 


“இஸ்ஸ்…” என்று தலையைத் தடவிக் கொண்ட சந்தியா, “மாம்ஸ், பாருங்க இந்தக் கலையை?” என்று மாமனிடம் சிபாரிசுக்குச் செல்ல சூர்யாவும், “பாவம் அத்த, அவளை விடுங்க. போகப்போக சரியாகிடுவா… அதோட இதுங்க ரெண்டுபேர் விஷயத்திலும் தலையிடாமல் இருக்கிறது தான் நமக்கு நல்லது… அப்புறம் நாளைக்கு இவனே வந்து, என் பொண்டாட்டி என்னை எப்படி வேணும்னாலும் கூப்பிடுவா… அதுல உங்களுக்கு என்ன பிரச்சனைனு கேப்பான். சோ இந்த ரெண்டுங்க மேட்டரில் நம்ம இன்வால்வ் ஆகாமல் இருக்கிறது தான் நமக்கு நல்லது.” என்றவன் தேவாவைப் பார்த்து, “என்ன பிரதர், நான் சொல்றது கரெக்ட் தானே?” என்று கேட்க அவன் சிரிப்பை பதிலாகத் தர, அதைப் பார்த்துச் சிரித்த அரவிந்த், 


“டேய் சூர்யா, நம்ம பையன் இப்பவே பொண்டாட்டி முன்னாடி வாயைத் திறந்து பேச மாட்டேங்கிறான். நீ வேணும்னா பாரு, இவன் பியூச்சர்ல உன்னைவிடப் பெரிய பொண்டாட்டி தாசனா வருவான்.” என்று சொல்ல அங்குச் சிரிப்பலை பரவியது. 


நிலாவோ, “சரி சரி போதும். சந்தியா தேவாவை மேல ரூம்க்கு கூட்டிப்போ.” என்றாள். 


அவன் தோளைப் பிடித்து மெதுவாக அவன் அறைக்குள் அழைத்து வந்தவள், மெத்தையில் அவனைப் படுக்க வைத்துவிட்டு எழுந்த நேரம் அவள் கையைப் பிடித்து இழுத்திருந்தான் தேவா.


திடீரென்று அவன் கையைப் பிடித்து இழுத்ததில் நிலை தடுமாறி அவன் மீதே விழுந்தவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தவன், அவளைச் சுழற்றித் தனக்குக் கீழே கொண்டு வந்தான்.


அவன் உடல் முழுவதும் அவள் மேல் படர்ந்திருக்க, அவளால் இம்மியளவும் அசைய முடியாது போக, அவனை அழுத்தமாகப் பார்த்தவளின் விழிகளை இவம் நேருக்கு நேர் சளைக்காமல் பார்க்க, நூலளவு இடைவெளியில் இருந்த அவன் முகத்தைப் பார்க்க முடியாது சந்தியா முகத்தைப் பக்கவாட்டில் திருப்பிப் கொண்டாள்.


“அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வச்சு என்னடி சொன்ன?” என்று அழுத்தமாகக் கேட்டவனின் குரல் அவள் காதை உரச, அவன் இதழ்கள் அவள் காது மடலை உரசியது.


“சொல்லுடி… அன்னைக்கு எந்த தைரியத்தில் அப்படிச் சொன்ன?” என்று அவன் மீண்டும் கேட்க வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்தியவள், தலையைத் திருப்பி அவன் முகம் பார்த்து, “என் மனசுல இருக்கிறதைச் சொல்ல எனக்கென்ன பயம்…” என்று கேட்டவளின் புருவ நெளிப்பில் ஒரு கணம் மயங்கியவன், அடுத்த கணம் “ம்ம்ம்… அப்போ மேடம் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க ரெடிதான் இல்ல?” என்று கேட்க, “அஃப் கோர்ஸ், நான் தான் அன்னைக்கே சொன்னேனே… ஹான்ஸமா ஒரு பையனைக் கல்யாணம் பண்ணி, அழகா ஒரு புள்ளையைப் பெத்துப்பேன்.” என்று சொல்லி முடிக்கும்முன் அவள் இதழ்களைத் தன்வசமாக்கி இருந்தான் தேவா.


எத்தனை நேரம் அந்த இதழணைப்பு நீடித்தது என்று இருவருக்கும் தெரியவில்லை. மெல்ல அவள் இதழ்களை விடுவித்த தேவா, “இந்த ஜென்மத்தில் உனக்கு நான் மட்டும் தான். எனக்கு நீ மட்டும்தான். என்ன சொன்ன நீ, உனக்குப் பொறக்கும் புள்ளைக்கு என் பேரை வைப்பேன்னு சொன்ன இல்ல… நீ கவலைப்படாத, நமக்குப் பொறக்கப்போற எல்லாக் குழந்தைக்கும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே பேர் வைப்போம்.” என்றவன் மீண்டும் அவள் இதழ்களைச் சிறையெடுக்க, மீண்டும் அங்கு முத்த யுத்தம் தொடங்கியது.


அவளைவிட்டு விலகிய தேவா, “இதுக்குப் பிறகு நான் இருக்கும்போது, நீ எப்படி வேற எவனையும் கல்யாணம் பண்றேன்னு நானும் பார்க்குறேன்.” என்றவனைத் தள்ளிவிட்ட சந்தியா, “ஓஓஓ… சார் என்னை மிரட்டுறீங்களா…” என்று இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள், “அப்படி நான் வேற கல்யாணம் பண்ணா என்னடா செய்வ?” என்று திமிராகக் கேட்க அவளை நெருங்கி வந்தவன், “உன்னால அது முடியாதுடி” என்றான் உறுதியாக.


“அட‌… சாருக்கு அவ்ளோ கான்ஃபிடன்ஸா.‌.. எங்கிருந்து வந்தது இந்த கான்பிடன்ஸ்?” என்றவளைக் காதலாகப் பார்த்தவன், “கான்ஃபிடன்ஸ் தான்டி… உன்மேல நான் வச்சிருக்க, என்மேல நீ வச்சிருக்க காதல் மேல இருக்கற கான்ஃபிடன்ஸ்.” என்றபடி அவளை இன்னும் நெருங்கி வந்தவன், “எல்லாத்துக்கும் மேல” என்றவன் அவள் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த அவன் கட்டிய தாலியை வெளியே எடுத்தவன், “இது தந்த கான்ஃபிடன்ஸ். இவ்ளோ நடந்த பிறகும் இது உன் கழுத்துல இருக்குன்னா..‌. அதுக்கு அர்த்தம் ஒன்னே ஒன்னுதான். உன் மனசுலயும் வாழ்க்கையிலயும் என்னைத் தவிர வேற யாருக்கும் இடமில்லன்னு தானடி அர்த்தம். அப்படி வேற கல்யாணம் பண்ணறவளா இருந்திருந்தா, அதை நீ எப்பவோ செஞ்சிருப்பியே…” என்றதும் அவளது கண்கள் கலங்கிவிட, அவன் பார்க்கும் முன் முகத்தைத் திருப்பிக் கொண்டவள், தாலியை எடுத்து மீண்டும் தன் சட்டைக்குள் மறைத்து வைத்தவள், “எனக்கு டைம் ஆச்சு, நான் போறேன்.” என்றபடி அங்கிருந்து நகர அவள் கையை பிடித்திருந்தான் தேவா.


“நாம சேர்ந்து வாழ இப்ப நிறையக் காரணங்கள் இருக்குதான். ஆனா… என்றபடி அவள் முகத்தைப் பார்த்தவன், “நீ என்னை விட்டு விலகிப் போனதுக்கான காரணம் இன்னும் அப்படியே தான இருக்கு.” என்று சொல்ல, சந்தியா அவனைச் சட்டெனத் திரும்பிப் பார்க்க அவன் மேலும் கீழும் தலையாட்டியவன், “எனக்குத் தெரியும்டி… நீ என்னை மனசாரக் காதலிச்சும், ஏன் என்னைவிட்டு விலகிப் போனேன்னு எனக்கு நல்லாத் தெரியும்.” என்று சொல்ல, அதுவரை அவள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவள் இமைகளைத் தாண்டி வெளியே வந்துவிட, அதைத்துடைக்க தேவா கையைத் தூக்கச் சட்டென விலகியள், 


“ஐ அம் ஆல் ரைட். நான் கிளம்புறேன்” என்றுவிட்டுக் கீழே வந்தவள் அழுது சிவந்த முகத்துடன், யாரிடமும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட, கீழே அவர்களின் திருமணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த அனைவரும் ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றனர்.


வானில் தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்தபடி நின்றிருந்த சந்தியாவின் தோளில் யாரோ கை வைக்க, திரும்பி அது யாரென்று பார்த்தவள், “மாம்ஸ்…” என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டே.


சூர்யாவும், அர்விந்தும் அவளை ஆதூரமாகப் பார்த்தவர்கள், “எங்களுக்குத் தெரியும்டா…” என்று சொல்ல, அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் இருவரின் தோளில் சாய்ந்து கதறிவிட்டாள் பெண்ணவள்.


மனதில் இருக்கும் கவலை தீர கொஞ்ச நேரம் அவளை அழவிட்டவர்கள், “எங்களுக்குத் தெரியும் மா. இன்னைக்கு நீ செஞ்சது சாதாரணமான விஷயம் இல்ல… ஆனா, தேவாவுக்காக நீ அதைச் செஞ்சிருக்க, இதுல இருந்தே நீ அவனை எந்த அளவுக்கு விரும்புறேன்னு எங்களுக்குப் புரியது…” என்ற சூர்யாவைக் கண்ணீரோடு ஏறிட்டுப் பார்த்தவள், “ஏன் மாம்ஸ், எனக்கு இப்படி நடக்கனும். நான் எவ்ளோ ட்ரை பண்ணியும் என்னால என் தேவாவை மறக்க முடியல… அவன் என் வாழ்க்கையில் இருக்கணும்னா நான்… நான்…” என்றவள் மீண்டும் சத்தமாகக் கதறத் தொடங்க, அவளை இழுத்துத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் அரவிந்த்.


“அழாதடா… ப்ளீஸ் அழாத. நீ அழுத வரைக்கும் போதும். இனிமே நீ சந்தோஷமா இருப்ப… எதைப்பத்தியும் யோசிக்காத. உனக்கு எல்லாம் நல்லதாவேதான் நடக்கும். இனிமே நீ அழக்கூடாது.” என்றவனின் தோளில் அழுத்தமாக முகத்தைப் புதைத்துக் கொண்டாள் சந்தியா.


கன்னத்தில் கண்ணீர் கோடுகளுடன், அரவிந்த் மடியில் தலை வைத்து அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த சந்தியாவைக் கவலையாகப் பார்த்தபடியே இருந்தனர் அங்கிருந்தவர்கள்.


“இவளுக்கு மட்டும் ஏன்தான் இப்படி எல்லாம் நடக்குதோ?” என்று தேன்மொழி வருந்த,


“என்னத்த சொல்ல, ஒருபக்கம் இவ வாழ்க்கை சீராகிடுச்சுன்னு சந்தோஷமா இருக்கு. அதே சமயம் இவ நிலையை நினைச்சால் கஷ்டமாவும் இருக்கு.” என்றாள் தேவி.


“இதுல நம்ம செய்ய எதுவும் இல்லடி” என்ற நிலானி சந்தியாவின் தலை வருடியவள், “இது இவளோட முடிவு. அவ எல்லாத்தையும் யோசிச்சு தான் இவ்ளோ பெரிய முடிவை எடுத்திருப்பா… கொஞ்ச நாள் அதை நினைச்சு அழத்தான் செய்வா… அதுக்குப் பிறகு அவளே சரியாகிடுவா. சோ, நம்ம இனி இதைப்பத்தி எதுவும் பேசவேணாம். முடிஞ்ச வரை இவங்க கல்யாணத்தைச் சீக்கிரம் முடிச்சு வைக்கிற வழியைப் பார்க்கணும். இப்போதைக்கு இவளுக்கு ஒரு சேஞ்ச் கண்டிப்பா தேவை.” என்க, அனைவருக்கும் அதுவே சரியென்று பட்டது.


“ஆமா… நிலா சொல்றதுதான் சரி… முடிஞ்ச வரை இவ கல்யாணத்தைச் சீக்கிரம் முடிக்கணும்.” என்ற சூர்யா, “நாளைக்கே நான் வீட்ல இருக்க பெரியவங்கிட்டப் பேசுறேன்‌” என்று சொல்ல நிலாவும், “ஆமா சூர்யா… நான் சொல்ல மாறந்துட்டேன், நாளைக்கு அம்மா இவளை வீட்டுக்குக் கூட்டிப்போக வராங்க. கல்யாணம் வரைக்கும் இவ அங்க இருக்கட்டும்னு சொன்னாங்க.” என்று சொல்ல, 


“ஏன்? ஏன்? இவ இங்க இருந்தா என்ன? அதெல்லாம் அனுப்ப முடியாதுன்னு அம்மாகிட்டச் சொல்லு” என்று அரவிந்த் சண்டைக்கு வர, அவன் தலையில் கொட்டிய தேனு, “லூசுப் புருஷா… இவ்ளோ நாள் இவ மேல இருந்த கோவத்தில் அம்மாவும் அப்பாவும் காசில போய் உக்காந்துட்டாங்க. இப்பதான் இந்த மகாராணி மனசு இறங்கி வந்து கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சு இருக்கா. இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம். அதுக்குப் பிறகு அவ தேவா வீட்டுக்குப் போயிடுவா. கொஞ்ச நாளாவது பொண்ணு கூட இருக்கணும்னு கலை அம்மாக்கு ஆசை இருக்காதா?” என்ற மனைவியை முறைத்த அர்விந்த், “அப்ப அம்மாவையும் அப்பாவையும் இங்க வரச்சொல்லு, இவ ஏன் அங்க போகணும்” என்று குழந்தைபோல் அடம்பிடிக்க சூர்யாவும், “ஆமா, அவன் சொல்றதுதான் சரி. நிலா நீ அம்மா, அப்பாவை இங்க வரச்சொல்லு.” என்று சொல்ல, பெண்கள் மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவர்கள் அடுத்த கணம் சத்தமாகச் சிரித்து விட்டனர்.


“கொஞ்ச நாள் இவளை அம்மாகூட அனுப்பி வைக்க ரெண்டு பேரும் இப்படிப் பண்றீங்களே, நாளைக்குக் கல்யாணமாகிட்டா இவ மொத்தமா தேவாக்கு தான் சொந்தமாகிடுவா. அப்ப ரெண்டு பேரும் என்ன செய்வீங்க?” என்று கேட்க, மாமன்கள் இருவருக்கும் அந்த நாளை நினைத்து இப்போது கண்கள் வேர்த்தது.


“ப்ச்ச்… எங்கம்மாவும், அப்பாவும் தப்புப் பண்ணிட்டாங்க..‌. அவங்க மட்டும் எனக்கு ஒரு தம்பியைப் பெத்திருந்தா, அவனுக்கே சந்தியாவைக் கல்யாணம் பண்ணி வச்சு நம்ம கூடவே வச்சிருந்து இருக்கலாம் இல்ல” என்று சொல்ல அர்விந்தும், “ஆமாடா” என்று வருத்தமாகச் சொல்ல, இருவருக்கும் சந்தியா மீதிருக்கும் அன்பை நினைத்துப் பெண்கள் மூவருக்கும் நெஞ்சம் நெகிழ்ந்து போனது.


“என்னதான் நான் அண்ணா, அண்ணான்னு அன்பாய் கூப்பிட்டாலும், உங்களுக்கு எப்பவும் இவதான் ஸ்பெஷல் இல்ல அர்விந்த்.” என்று நிலானி செல்லமாக அர்விந்திடம் கோபிக்க, அவனோ “அப்படி இல்ல நிலா… எனக்கு உன் மேலயும் நிறையப் பாசம் இருக்கு… ஆனா, என்னையும் சூர்யாவையும் பொறுத்தவரை இவதான் எங்களோட முதல் குழந்தை. உன்னைக் கல்யாணம் செஞ்சு கொடுக்கும்போது ராம் அப்பா என்ன மனநிலையில் இருந்தாரோ அதை நிலை தான் இப்ப எங்களுக்கு” என்றவன், “சரி சரி… இவ ரொம்ப நேரமா உடம்பைக் குறுக்கிட்டுப் படுத்திருக்கா, உடம்பெல்லாம் வலிக்கும். டேய் சூர்யா, மெதுவா இவளைத் தூக்கு. ரூம்ல படுக்க வச்சிருவோம்.” என்க, சூர்யா அவள் தூக்கம் கலையாமல் அவளைத் தூக்கிக் கொள்ள, இருவரும் அவளை அவள் அறையில் படுக்க வைத்துவிட்டு மறுநாள் அவளின் கல்யாண வேலையைத் தொடங்க வேண்டும் என்று பேசிக்கொண்டே சென்றனர்.


அதுவரை மூடியிருந்த சந்தியாவின் விழிகள், அவர்கள் சென்ற அடுத்த நொடி திறந்துகொள்ள, அதிலிருந்து கண்ணீர் துளித்துளியாக வழிந்தது.


தன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் இந்தக் குடும்பத்திடம் அவள் மறைத்து வைத்த ஒரு உண்மை எந்தளவுக்கு அ

வர்களை வேதனைப் படுத்தியது என்று நினைத்தவளின் எண்ணங்கள் மீண்டும் பின்நோக்கிச் சென்றது.