இதயம் 8

இதயம் 8


தங்களின் அறைக்கு வந்த இருவருமே பயணக் களைப்புடன், இவ்வளவு நேரம் தங்கும் அறைக்கான பிரச்சனையில் ஹோட்டல் லாபியில் காத்திருந்ததும் சேர்ந்து சோர்ந்து போயிருக்க, மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாகக் குளித்து முடித்து இரவு உடைக்கு மாறினர்.


ஆதர்ஷன் இரவு உணவை அறைக்கே வரவைத்திருக்க, தர்ஷினி அவனுக்கு உணவை எடுத்து வைத்துவிட்டுத் தானும் உண்டவள், “ஓகே சார்… ரெண்டு பேரும் செம்ம டயர்டா இருக்கோம். சோ நெக்ஸ்ட் ரெஸ்ட்டு” என்று வடிவேலு பாணியில் சொன்னவளைப் பார்த்து ஆதர்ஷன் இதழ் பிரித்துச் சிரிக்க, அவனது சிரித்த முகத்தைப் பார்த்துத் தாவிக் குதித்த தன் மனதை தலையில் தட்டி அடக்கி, “குட் நைட் தர்ஷன்” என்று சொன்னவள், அந்த அறையில் இருந்த இன்னொரு படுக்கையறையில் சென்று படுத்து விட்டாள்‌. ஆனால் தூக்கம் தான் அவளை நெருங்காமல் ஆதர்ஷனின் நினைவுகளை அவள் நெஞ்சில் ஓடவிட்டு அவளைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது.


வெகு நேரம் புரண்டு புரண்டு படுத்தவளுக்குத் தூக்கம் தான் வந்த பாடில்லை. அவனின் சிரித்த முகமே மனக்கண் முன் வந்து வந்து அவளை இம்சை செய்ய, சட்டென எழுந்து படுக்கையில் உட்கார்ந்தபடி தலையைப் பிடித்துக் கொண்டவள், ‘கடவுளே! ஏன் என்னை இப்படி படுத்தி எடுக்கிற? ஆசைப்பட்டுக் காதலிக்கிறவரு தான் என்னை அலைய விடுறாருன்னா… இப்பத் தூக்கமும் என்னைத் தொங்கல்ல விட்டுடுச்சே…’ என்று புலம்பித் தள்ளியவளுக்கு சட்டென மனதில் அந்த ஆசை தோன்றியது. 


மெல்ல ஓசைப்படாமல் அடிமேல் அடி வைத்து நடந்தவள், சத்தம் வராமல் கதவைத் திறந்து பார்க்க, அவள் நல்ல நேரம் கதவு தாழிடப்படாமல் இருந்தது. மெதுவாகத் தலையை நீட்டி ஆதர்ஷன் அறைக்குள் எட்டிப் பார்த்தாள். 


அங்கு அவன் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். தூங்கும் அவனைப் பார்க்கப் பார்க்கக் காதல் கொண்ட பேதைக்குக் கொஞ்சமும் சலிக்கவில்லை போல, இமை சிமிட்டும் நேரம் கூட வீணாக்காமல் அவனையே ஒரு மென் புன்னகையுடன்‌ ரசித்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி.


’பச்ச்… தூங்கும் போது கூட எவ்ளோ அழகா இருக்காரு’ என்றவளுக்கு அவன் கை அணைப்பில் இருக்கும் தலையணையாக மாறிவிட மாட்டோமா! என்ற பேராவல் எழ, ‘அடியேய் தர்ஷினி, நீ ரொம்ப ஓவரா போற… மரியாதையா உன் கற்பனைக் குதிரையின் காலை உடைச்சுப் போட்டுட்டு, ஒழுங்காப் போய் தூங்குற‌ வேலையைப் பாரு… இப்ப மட்டும் தர்ஷன் முழிச்சு நீ இங்க நிக்குறதைப் பார்த்தாரு… மகளே, உன் கதைக்கு எண்டு கார்டு தான்… போடி ஒழுங்கா’ என்று அவள்‌ மனசாட்சி அவளுக்குள் மணியடித்து நோட்டிபிகேஷன் தர, இரு கண்களிலும் அவனை நிரப்பிக் கொண்டு கட்டில் வந்து படுத்தவளை, நித்திரா தேவி ஆரத்தழுவிக் கொண்டாள்.


மறுநாள் காலையில் நேரத்துக்கே எழுந்த தர்ஷினி அவசர அவசரமாகக் குளிக்கச் சென்றாள்.


குளித்து முடித்த பிறகு ஹோட்டல் டவலைக் கட்டிக் கொண்டவள், மாற்று உடையைத் தேட அப்போதுதான் அணிந்து கொள்ள எடுத்து வைத்த உடையை அவளது அறைக் கட்டில் மேலேயே மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வர, தர்ஷினிக்கு அய்யோ என்றாகி விட்டது.


’காட்… என்ன இது? இப்ப நான் என்ன பண்ணுவேன்? எப்படி ட்ரஸ் எடுத்துட்டு வர மறந்தேன்?’ என்று தலையில் கொட்டிக் கொண்டவள், ‘இப்ப வெளிய போய் ட்ரஸ் எடுக்கலாம்னா, அதுக்கு தர்ஷன் ரூமைத் தாண்டிப் போகணுமே‌.‌.. ஒருவேளை, அவர் இன்னேரம் முழிச்சிருந்தால், இப்படி வெறும் டவலைக் கட்டிட்டு அவர் முன்னாடி எப்படி நிக்குறது?’ என்று புலம்பியவளுக்குக் கை, கால் நடுங்க படபடப்பு வந்து விட்டது.


கொஞ்ச நேரம் குளியலறையிலேயே இருந்தவள் நேரமாவதை உணர்ந்து, மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு கதவைக் கொஞ்சமாகத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்க்க, ஆதர்ஷ் முன் அறையில் உட்கார்ந்து லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு நெஞ்சம் விம்மியது.


நெஞ்சில் கை வைத்துக் கொண்டவள், ‘அய்யோ! இவரு வேற இப்படி உக்கார்ந்து இருக்காரே… நான் இப்ப எப்படி என் ட்ரஸ்ஸை எடுக்கப் போவேன்.’ என்றவளுக்குக் குளிரில் உடல் உதற ஆரம்பித்து விட்டது.


வெகு நேரமாக அவள் குளியலறையில் இருப்பதை உணர்ந்த ஆதர்ஷின் புருவம் யோசனையில் சுருங்கி விரிய மெல்ல எழுந்து அங்குச் சென்றான்.


மெதுவாகக் கதவைத் தட்டியவன், “வினி… வினி” என்றழைக்க அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.


மீண்டும் கதவைத் தட்டியவன், “வினி… ஆர் யூ ஓகே?” என்று சத்தமாகக் கேட்க, அந்த சத்தத்தில் அவள் உடல் தூக்கிப் போட, “எ..எஸ் சார், ஐ ஆம் ஓகே…” என்றவளின் குரல் தழுதழுக்க ஆதர்ஷனுக்கு எதுவோ சரியில்லை என்பது புரிந்தது.


“நீ ஓகேன்னா, அப்புறம் இவ்ளோ நேரம் உள்ள என்ன பண்ற?” என்று கேட்க, பாவை அவள் தன்னிலையை எப்படிச் சொல்வது என்று புரியாமல் அழ ஆரம்பித்துவிட ஆதர்ஷனுக்குக் கலக்கம் அதிகமானது.


“வினி… என்னம்மா ஆச்சு உனக்கு? எதுக்கு இப்ப அழற…” என்றவன் கதவைத் தட்டியபடி, “உன் வாய்ஸே சரியில்ல, நீ முதல்ல வெளிய வா?” என்று கத்த தர்ஷினி, “ப்ளீஸ் சார், நான் நல்லாத்தான் இருக்கேன். ப்ளீஸ், நீங்க முதல்ல இங்கிருந்து போங்க” என்றாள் அழுகையுடன் இயலாமையில்.


“ஓகே! நீ நல்லாத்தான் இருக்க… அதை வெளிய வந்து சொல்லு” என்றது தான், அவளுக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ… 


“ட்ரஸ்ஸை மறந்துட்டு வந்து, இப்ப வெறும் டவலோட நிக்குறேன்.  வா‌… வான்னு சொன்னா எப்படி டா வர முடியும்” என்று கோவத்தில் கத்தி விட்டாள்.


அவள் சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் சிலை போல் நினறவன், அடுத்த நொடி அங்கிருந்து நகர்ந்து விட்டான்.


சில நொடிகள் கழித்து மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க எரிச்சலான தர்ஷினி, “இப்ப என்ன வேணும்?” என்று கத்த ஆரம்பிக்கும் முன், “டோருக்கு வெளிய என்னோட டீ ஷர்ட்டும், ட்ராக் பேண்ட்டும் வச்சிருக்கேன். நான் கீழ ஹோட்டல் லாபிக்குப் போறேன். வர பத்து நிமிஷம் ஆகும்” என்றவன், விறுவிறுவென அந்த அறையை விட்டு வெளியேறி இருக்க, தர்ஷினிக்கு அப்போதுதான் சீராக மூச்சே வந்தது.


மெதுவாகக் கதவைத் திறந்து கையை மட்டும் வெளியே நீட்டியவள், அவன் வைத்து விட்டுச் சென்ற உடையை எடுத்து வேக வேகமாக உடுத்துக் கொண்டவள், வெளியே வந்து வேகமாகத் தன்னறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டவளுக்கு இதயம் அதிவேகமாகத் துடிக்க, தன் நெஞ்சில் கைவைத்து அழுத்தி தன் சுவாசத்தைச் சீர்படுத்தியவள், தன் உடைகளை அணிந்து கொண்டாள்.


சொன்னது போல் பத்தி நிமிடம் கழித்து அறைக்குள் நுழைந்தான் ஆதர்ஷன். 


மூடி இருந்த அவள் அறைக் கதவைப் பார்த்தவன், “வினி” என்றழைக்க, தர்ஷினிக்கு அவனுடன் பேசவே ஒரு மாதிரி இருந்தது.


மீண்டும் அவன், “வினி“ என்றழைக்க உள்ளிருந்து, “ம்ம்ம்ம்” என்று சத்தம் மட்டும் வந்தது.


அவள் தன் முகம் பார்க்கச் சங்கடப்படுகிறாள் என்பதை உணர்ந்த ஆதர்ஷ், “லிசன் வினி, நீ தேவையில்லாமல் இப்ப அக்வேடா (awkward) ஃபீல் பண்ணிட்டு இருக்க. ட்ரஸ் மறந்து போறதெல்லாம் இட் ஹாப்பன்ஸ்… இதே நான் ரூம்ல இல்லாமல் நீ தனியா இருந்திருந்தால், இல்ல இந்த ரூம்ல உன்னோட ஒரு பொண்ணு இருந்திருந்தால் நீ இப்படி எல்லாம் ஃபீல் பண்ணி இருப்பியா என்ன? இதை அப்படி நினைச்சிக்கோ..‌. சின்ன வயசில் எத்தனை முறை குட்டிப் பாப்பா ட்ரஸ் மறந்துட்டு குளிக்கப் போயிட்டு, பாத்ரூம்ல இருந்து ‘ஆது ட்ரஸ் மறந்துட்டேன்’னு கத்துவா தெரியுமா? அப்ப எல்லாம் நான் தான் அவளுக்கு ட்ரஸ் எடுத்துட்டுப் போய் கொடுப்பேன். அப்ப நான் என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மைண்ட் செட்டோட தான், இன்னைக்கு உனக்கும் ட்ரஸ் எடுத்துட்டு வந்து கொடுத்தேன். சோ, நீ இதுல அசிங்கம்னோ இல்ல, அவமானம்னோ ஃபீல் பண்ண எதுவும் இல்ல…” என்றவன் ஒரு கணம் நிறுத்தி, “நான் சொன்னது உனக்குப் புரிஞ்சிருந்தால் கதவைத் திற” என்று முடிக்கும் முன் கதவைத் திறந்திருந்தாள் தர்ஷினி.


அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தவன், “நம்ம போக கார் அரேஞ்ச் பண்ணிட்டேன். பிரேக் பாஸ்ட் ஆர்டர் பண்ணிட்டேன். நான் போய் குளிச்சிட்டு வரேன். வந்ததும் சாப்பிட்டுக் கிளம்பலாம்” என்று திரும்பியவனை, “சாரி” என்று வந்த அவளின் மெல்லிய குரல் நிறுத்தியது.


புருவம் சுருக்கி அவளை யோசனையாகப் பார்த்தவன், “எதுக்கு சாரி?” என்று கேட்க அவளோ தலையைக் குனிந்தபடி, “அது… அது அப்ப டென்ஷன்ல… உங்..உங்களை டா போட்டுப் பேசிட்டேன்” என்றவளைப் பொய்யாக முறைத்தவன், “ஓஓஓ! அப்ப மேடம் டென்ஷன் ஆனா, வாடா போடா எல்லாம் வருமோ…” என்று கிண்டலாகக் கேட்க, அவளோ கூச்சத்தில் நுனி நாக்கைக் கடித்துக் கொண்டு நின்றாள்.


அதைப் பார்த்துச் சிரித்தவன், “ம்ம்ம்… அப்ப இனிமே மேடம்கிட்ட ரொம்பக் கேர்ஃபுலா இருக்கணும். டென்ஷன் ஆனா மேடம் வாடா போடா எல்லாம் தாண்டிக் கெட்ட வார்த்தையில் கூடத் திட்டுவாங்க போல” என்று கேலியாகச் சொல்ல, இப்போது அவனைச் சலுகையாகக் கோபித்துக் கொண்டவள், “ப்ச்! சும்மா என்னை ஓட்டாதீங்க தர்ஷன். ஏதோ ஒரு தடவை டா சொல்லிட்டேன். அதுக்கு இப்படி எல்லாம் கிண்டல் பண்ணதீங்க” என்று சிணுங்க, ஆதர்ஷ் இப்போது சத்தமாகச் சிரித்தான்.


“பச்ச்… சும்மா சிரிக்காமப் போய் குளிங்க… நீங்களாவது மறக்காமல் ட்ரஸ் எடுத்துட்டுப் போங்க‌.” என்றவள், “அப்படி மறந்துட்டுப் போனா, உங்கள மாதிரி என்னால என்னோட ட்ரஸ் எல்லாம் கொடுக்க முடியாது” என்று குறும்பாகச் சொன்னவளை, “அடிங்கு” என்று அவன் அடிக்க வர, அவன் கைக்கு சிக்காமல் அவள் விலகி ஓடிவிட, “சரியான வாலு” என்று சிரித்தபடியே குளிக்கச் சென்றான் ஆதர்ஷ்.


இருவரும் குளித்துத் தயாராகி, காலை உணவை அறையிலேயே அரட்டை அடித்தபடியே உண்டு விட்டு, அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்றனர்.


அவர்கள் வந்த வேலை எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் முடிந்துவிட, ஆதர்ஷனுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. 


“நான் எதிர்பார்க்கவே இல்ல வினி… வந்த வேலை இவ்ளோ சீக்கிரம், அதுவும் பெர்ஃபெக்டா முடியும்னு… இஸ்ட் ஆல் பிகாஸ் ஆப் யூ… நீ கொடுத்த ப்ராஜெக்ட் ரிப்போர்ட் அவ்ளோ பெர்ஃபெக்ட்டா இருந்துச்சு. அதான் நம்ம வந்த வேலை இவ்ளோ ஈசியா முடிஞ்சிடுச்சு” என்று மகிழ்ச்சியில் சின்னக் குழந்தை போல் சிரித்துப் பேசியவனை அவளை மறந்து ரசித்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி.


“வினி… வினி” என்று ஆதர்ஷ் போட்ட சத்தத்தில், “ஹான்” என்றபடி உணர்வுக்கு வந்தவள், “என்ன சார்? என்ன சொல்லிட்டு இருந்தீங்க?” என்று கேட்க, கண்கள் சுருக்கி அவளை முறைப்படியே, “எந்த உலகத்தில் இருக்க நீ… நான் ரொம்ப நேரமா வினி… வினின்னு கூப்பிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு உன்னோட தனி உலகத்தில் சுத்திட்டு இருக்கியா?” என்றவனை ரசனையாகப் பார்த்தவள், ‘ம்ம்ம் ஆமா தர்ஷன்… என்னோட உலகத்தைச் சுத்திட்டு இருக்கேன். நீங்க தான் என்னோட உலகம்… உங்க நினைப்பு தான் எனக்குள்ள எப்பவும் சுத்திட்டு இருக்கும்’ என்றவள் முன் சொடுக்கிட்ட ஆதர்ஷ், “போச்சுடா மறுபடியும் எங்கயோ போயிட்டியா நீ…” என்று தலையில் அடித்துக் கொண்டவன், “வா போலாம்” என்று அவளை அழைத்துச் சென்றான். 


அவர்கள் வந்த வேலை கிட்டத்தட்ட முடிந்திருந்தது. நாளை முக்கியமான இரண்டு பேரும், ஆதர்ஷனும் கையெழுத்துப் போட்டு விட்டால் முழுதாக அவர்கள் வந்த வேலை முடிந்து விடும் என்பதால் அமெரிக்காவின் அலங்கார நகரான நியூயார்க்கின் அழகைக் கொஞ்ச நேரம் ரசிக்கலாம் என்று இருவரும் முடிவு செய்தனர்.


ஆதர்ஷ் பலமுறை நியூயார்க் வந்திருக்கிறான். ஆனால் தர்ஷினிக்கு இதுதான் முதல் முறை அங்கு வந்தது. 


கண்கள் விரிய, இரவு நேர நியூயார்க்கின் அழகை ரசித்தவளுக்கு மனதில் ஒரு பேராசை தேன்றியது. 


இரவில் விளக்கு ஒளியில் ஜொலிக்கும் அந்த வீதியில் ஆதர்ஷனின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டும் என்பதுதான் அது.


அவள் ஆசைப்பட்டு விட்டாள்… ஆனால், அது நடப்பது ஆதர்ஷ் கையில் அல்லவா இருக்கிறது என்று முகம் வாடியவள், ‘ச்சீ… ஜோடியா இவர் கையைப் புடிச்சி நடக்குற இந்தச் சின்ன சந்தோஷம் கூட நமக்குக் கொடுத்து வைக்கலியே” என்று வாய்க்குள் முணுமுணுக்க, அவளைச் சட்டெனத் திரும்பிப் பார்த்தான் ஆதர்ஷ். 


அவன் பார்வையில் பதறிய தர்ஷினி, ‘ஆத்தீ… மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு சத்தமாப் பேசிட்டோமா? இவருக்குக் கேட்டிடுச்சா?’ என்று சிறு பிள்ளை போல் திருதிருவென முழித்துக் கொண்டு அவள் நிற்க, “எதுவும் சொன்னியா வினி?” என்று கேட்டான் ஆதர்ஷன்.


‘சொன்னியாவா? அப்ப இவருக்கு நான் பேசினது கேக்கல போல… தேங்க் காட்’ என்று மனதிற்குள் கடவுளுக்கு நன்றி சொன்னவள், “இல்லயே… நான் ஒண்ணும் சொல்லலியே” என்று சொல்ல, ஆதர்ஷனோ, “ஏதோ சொன்ன மாதிரி… ப்ச்! இல்ல, ஏதோ புலம்பினா மாதிரி இருந்துச்சு” என்று சொல்ல உதட்டை ஒருபக்கம் சுழித்தவள், 


‘ம்க்கும். இந்தச் சத்தமெல்லாம் நல்லாக் கேக்குது… ஆனா, கூடவே ஒருத்தி தர்ஷன்.‌‌..‌ தர்ஷன்னு உள்ளுக்குள்ள புலம்பிட்டு இருக்கிறது மட்டும் இந்த மேங்கோக்குப் புரிய மாட்டேங்குது’ என்று மைன்ட் வாய்ஸ்சில் அவனை வெளுத்து வாங்கியவள் வெளியில், முத்துப்பற்கள் தெரிய “ஈஈஈ” என்று இளித்தவள், “நான் ஏன் சார் புலம்பப் போறேன்… அதெல்லாம் ஒண்ணும் இல்லை‌. உங்க காதுல ஏதோ தப்பாக் கேட்டிருக்கு” என்று சமாளித்தவளுக்குச் சட்டென அந்த யோசனை வந்தது.


ஆதர்ஷ் முன்னே சொல்ல, தர்ஷினி சட்டெனக் கால் மடக்கி தரையில் உட்கார்ந்து கணுக்காலைப் பிடித்துக் கொண்டவள், “தர்ஷன்” என்றழைத்தாள். 


அவள் குரல் கேட்டு அவன் திரும்பிப் பார்க்க, அங்கு முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு கணுக்காலைப் பிடித்தபடி அமர்ந்திருந்த தர்ஷினியைப் பார்த்தவன், “என்னாச்சு வினி?” என்றபடி அவள் அருகில் சென்றான்.


“கால் சுளுக்கிடுச்சு தர்ஷன்” என்றாள் மெல்லிய குரலில்.


“அச்சோ” என்று குனிந்து அவள் காலைத் தொட்டுப் பார்த்தவன், “நல்ல வேளை, வீக்கம் எதுவும் இல்ல…” என்றவன், “ரொம்ப வலிக்கிதா வினி, டாக்டர் கிட்ட வேணும்னாப் போகலாமா?” என்று கேட்டான்.


அதற்கு அவளோ, “டாக்டர் எல்லாம் வேணாம் தர்ஷன். சின்ன சுளுக்குத் தான். என்கிட்ட பெய்ன் ஸ்ப்ரே (pain spray) இருக்கு, ரூம்ல வச்சிருக்கேன்.” என்றபடி எழப் பார்த்தவள், “அவுச்…” என்று கத்திக் கொண்டே மீண்டும் காலைப் பிடித்துக் கொள்ள, அவள் கத்தியதில் பதறிய ஆதர்ஷ், “ஏய்,‌ என்னாச்சுமா?” என்று கேட்டான் பதட்டமாக.


“காலைத் தரையில ஊன முடியல தர்ஷன், ரொம்ப வலிக்கிது” என்று சொல்ல அவனும், “சரி, என் கையைப் பிடிச்சிட்டு மெதுவாக எழுந்து நில்லு” என்று அவன் வலக்கையை நீட்டினான்.


உள்ளுக்குள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த மனதைக் கஷ்டப்பட்டு அடக்கியவள், தன் வலக்கையை அவன் கைமீது வைத்து அழுத்திக் பிடித்துக் கொண்டாள்.


அவளின் அந்த இறுக்கமான பிடியில் ஒரு கணம் ஆதர்ஷன் மனம் அவள் ஸ்பரிசத்தில் தடுமாறிவிட, கண்களைச் சிமிட்டித் தன் மனதை சீர்படுத்தியவன், அவளை எழுந்து நிற்க வைத்தான்.


 அவளோ தன் கைக்குள் இருந்த அவன் கையை விட்டுவிடும் எண்ணம் சிறிதும் இன்றி, “கால் வலிக்குது தர்ஷன். கார்க்குப் போகும் வரை உங்க கையைப் பிடிச்சிக்குறேன்” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கேட்க, அவனால் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்.


“ம்ம்ம்” என்றவன் அவளின் தோளைப் பட்டும் படாமல் பிடித்துக் கொள்ள, தர்ஷினியின் ஆசைப்படி அவனுடன் கைகோர்த்தபடி அந்தத் தெருவில் சிறிது தூரம் நடந்து சென்றவள், கார் இருக்கும் இடத்திற்கு எவ்வளவு மெதுவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு மெதுவாகச் சென்றாள்.


ஒருவழியாக அவர்கள் வாகனத்தை நெருங்கிவிட, ‘இந்தக் காரை இன்னும் கொஞ்சம் தள்ளி பார்க் பண்ணி இருந்திருந்தா இன்னும் கொஞ்ச நேரம் அவர் கையைப் பிடிச்சிட்டு நடந்திருக்கலாம்’ என்று அவள் நினைக்க, ‘தேங்க் காட், கார் வந்திடுச்சு’ என்று ஆதர்ஷ் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.


இரவு உணவை வெளியிலேயே உண்டுவிட்டு வந்ததால், இருவரும் தங்கள் அறைக்கு வந்தவுடன் அலுப்பு தீரக் குளித்துவிட்டு உறங்கச் சென்று விட்டனர். நாளைக்கு நடக்கப் போகும் விபரீதம் அறியாமல்.