இதயம் 7

 இதயம் 7


ஆதர்ஷ் கத்திய கத்தலில் இங்கு அதீஷனுக்கு காதில் சவ்வு கிழிந்திருக்குமோ என்ற சந்தேகமே வந்துவிட்டது.


“டேய்… கத்தாம கொஞ்சம் பொறுமையாப் பேசு” என்றவன் மட்டும் இப்போது ஆதர்ஷின் முன்னால் இருந்திருந்தால் அதீயின் கதி அதோகதிதான் என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு கோபத்தின் உச்சியில் இருந்தான் ஆதர்ஷ்.


“பொறுமையா? எப்படிடா பொறுமையாப் பேசுறது… நீ பண்ண வேலைக்கு இப்ப மட்டும் நீ என் எதிரில் இருந்திருந்த…” என்று பல்லைக் கடித்தவன், “ஏன்டா இப்படி பொறுப்பில்லாம இருக்க… நான் எத்தனை முறை சொன்னேன், ரூம் விஷயம் எல்லாம் ஓகேவான்னு… அப்ப எல்லாம் மண்டைய மண்டைய ஆட்டிட்டு இப்ப இப்படிப் பண்ணி வச்சிருக்கயேடா ராஸ்கல்… இப்ப என்னடா பண்றது?‌” என்றவனின் கோபத்தை எச்சில் விழுங்கியபடி ஒரு பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி.


’அம்மாடி! எவ்ளோ கோவம் வருது இவருக்கு. இவர் கோபப்பட்டு இன்னைக்கு தான் பார்க்குறேன்’ என்றவள், ‘ம்ம்ம், சும்மா சொல்லக் கூடாது… கோவத்தில் கூட செம்ம அழகாதான் இருக்காரு’ என்று வாய்க்குள் முணுமுணுக்க, அந்த நேரம் ஆதர்ஷ் அவளைப் பார்க்க, சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள்.


“சாரி தர்ஷா… முதல்ல நீயும், நானும் ஸ்டே பண்ணறதா தானே ப்ளான். அதான் ஒரு ரூம் மட்டும் புக் பண்ணி இருந்தேன். அப்புறம் தர்ஷினிதான் உன் கூட வராங்கன்னு இன்னொரு ரூம் ஹோல்ட் பண்ணிதான் வச்சேன். பட் அதுக்கப்புறம் தன்வி பண்ண டென்ஷன்ல அதை ஃபாலோ பண்ணவே மறந்துட்டேன்டா…” என்று பச்சையாகப் பொய் சொன்னவன், “நீ கொஞ்சம் வெய்ட் பண்ணு, அந்த ஹோட்டல் மேனேஜர் என்னோட ப்ரண்டுதான், நான் அவர்கிட்ட இன்னொரு ரூம் கிடைக்குமான்னு கேட்டுப் பார்க்கிறேன்.” என்க ஆதர்ஷனும், “சீக்கிரம் ஏதாவது பண்ணுடா” என்று எரிச்சலாகச் சொன்னவன் அழைப்பைத் துண்டிக்க, தர்ஷினி அவனையே பார்த்தபடி இருந்தாள்.


அழைப்பைத் துண்டித்த அதீஷன் தன்வியைப் பார்க்க அவளோ, “என்ன சார், சேதாரம் கொஞ்சம் பலமோ” என்று சிரிப்போடு கேட்க, கண்களை மூடித் தோளைக் குலுக்கியவன், “கொஞ்சம் இல்லடி, பயங்கரம்… ஈவ்னிங் நான் கண்டிப்பாக ஈ.என்.டி டாக்டரைப் பார்க்கணும் போல. கண்டிப்பா என் இயர் ட்ரம் (eardrum) அந்து போயிருக்கும். அந்தக் கத்து கத்துறான்…” என்றபடி காதைக் குடைந்தான்.


“சரி, இப்ப என்ன பண்ணப் பேறீங்க?” என்று கேட்டாள் தன்வி.


“வேறென்ன? கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு, அவனுக்கு ஃபோன் பண்ணி என் ஃப்ரெண்ட் எவ்வளவோ ட்ரை பண்ணான், பட் ரூம் கிடைக்கலன்னு சொல்ல வேண்டியது தான். தர்ஷினிகூட அவன் ஒரே ரூம்ல தான் இருந்தாகணும். அவனுக்கு வேற‌ வழி இல்ல…” என்றான் ஒற்றைக் கண்ணை அடித்தபடி.


“ம்ம்ம்… ஐடியா எல்லாம் ஓகே தான். பட் ஆது நேரா ஹோட்டல்லயே இன்னொரு ரூம் கிடைக்குமான்னு கேட்டா என்ன பண்றது?” என்று கேட்டாள்.


“கேட்டா இல்ல… கண்டிப்பா கேட்பான். ஆனா, அவனுக்கு ரூம் கிடைக்காது. நான் ஏற்கனவே ரூம் அவைலபிலிட்டி செக் பண்ணிட்டேன். அதோட என் ப்ரண்ட் கிட்டயும் சொல்லிட்டேன். சோ, இவனுக்கு எஸ்ட்ரா ரூம் கிடைக்க சான்சே இல்ல” என்றவனின் கன்னத்தில் முத்தமிட்ட தன்வி, “ப்ப்பா என் புருஷனுக்கு எவ்ளோ அறிவு” என்றபடி மறு கன்னத்திலும் முத்தம் வைக்க, “இங்கயும் கூட கிஸ் பண்ணலாம்… நான் ஒண்ணும் தப்பா எடுத்துக்க மாட்டேன்” என்று அவன் உதட்டைத் தொட்டுக் காட்ட, அவனைக் கண்கள் சுருக்கிச் செல்லமாக முறைத்தவள், “ஆசை தோசை… முடியாது போ” என்று ஆரம்பித்தவளின் வார்த்தைகளை அவன் இதழ்களுக்குள் இழுத்துக் கொண்டான் அவளவன்.


அதே நேரம் இங்கு தர்ஷினியே, “என்ன சார்… அதீ சார் என்ன சொன்னாரு?” என்று கேட்க அவளை முறைப்பாகப் பார்த்தவன், “ம்ம்ம்… சொன்னான் சுரக்காய்க்கு உப்பு இல்லைன்னு… கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா நீ” என்று அவன் சிடுசிடுக்க தர்ஷினியின் முகம் சட்டென வாடி விட்டது.


அதைக் கவனித்தவன் தன் நெற்றியில் அடித்துக் கொண்டு, “ஏய்… ஏய்…. சாரிம்மா, ரொம்ப சாரி… டென்ஷன்ல அந்த அதீ எரும மேல இருந்த கோவத்தை உன்மேல காட்டிட்டேன். சாரி வினி” என்றவனின் கனிந்த குரலில் மனம் நெகிழ்ந்தவள், “இட்ஸ் ஓகே தர்ஷன்…” என்றாள் லேசாக இதழ் மலர்ந்து.


“இந்த அதீ வர வரச் சுத்தமா சரியில்ல… முன்ன எல்லாம் அவன் எல்லா விஷயத்திலும் பயங்கர பர்ஃபெக்ட்டா இருந்தவன், இப்ப எல்லாம் என்னன்னே தெரியல… மொத்தமா மாறிட்டான். என்ன கேட்டாலும் தன்வி டென்ஷன்ல மறந்துட்டேன், தன்வியைத் தவிர வேற‌ எதையும் யோசிக்க முடியலன்னு அதையே‌ திரும்பத் திரும்பச் சொல்லிட்டு இருக்கான்.” என்றவன், “இந்தக் குட்டிப் பாப்பாக்கும் என்னாச்சின்னு புரியல… இதுவரை அவ இப்படி எல்லாம் யார் மேலயும் கோவமா இருந்ததே இல்ல தெரியுமா வினி? ஆனா, இப்ப என்னன்னா அதீ கூடப் பேசுறது கூட இல்ல. அவனைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிட்டுப் போறா… இவனும் தேவதாஸ் வர்ஷன் 2024 மாதிரி அவ பின்னாடியே அலைஞ்சிட்டு இருக்கான்… இதுல ஹைலைட்டே அம்மா இதைப் பத்தி எதுவும் பேசாம இருக்கறதுதான்… எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.” என்று புலம்புவனைப் பார்க்க அவளுக்குக் கஷ்டமாக இருந்தது.


அதீஷனும் தன்வியும், தனக்காகவும் ஆதர்ஷனுக்காகவும் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று நினைத்தவளுக்கு உள்ளுக்குள் வருத்தமாக இருந்தது.


“அவங்க லவ்வர்ஸா இருந்து புருஷன் பொண்டாட்டியா ஆகல தர்ஷன்… புருஷன் பொண்டாட்டி ஆகிட்டு லவ்வர்ஸ் ஆனவங்க… லவ்ல இந்தச் சின்னச் சின்ன கியூட் சண்டை, ஊடல், கூடல் எல்லாம் சகஜம்… அதெல்லாம் சூப்பர் ஃபீல் தெரியுமா? அழகான ஸ்வீட் மெமரிஸ், பின்னாடி இதெல்லாம் நினைச்சு நினைச்சு ரெண்டு பேரும் சிரிப்பாங்க” என்றவளை இமைக்க மறந்தும் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷ்.


அந்த நேரம்… ஒரு நொடி… ஒரே ஒரு நொடி அதீஷன், தன்வி இருக்கும் இடத்தில் தன்னையும், தர்ஷினியையும்‌ வைத்து அவன் மனம் சிலிர்க்க, அடுத்த கணம் அவன் எண்ணம் போகும் திசை நினைத்துத் திகைத்தவன் இருக்கும் இடம் மறந்து, “நோ” என்று சத்தமாகக் கத்தியவன், இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொள்ள, தர்ஷினிக்கு தூக்கிவாரிப் போட்டது.


“தர்ஷன்… தர்ஷன், என்னாச்சு உங்களுக்கு” என்று அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தவள், அவன் கன்னங்களைத் தன் கையில் ஏந்திக் கொண்டு அவன் கண்களையே ஒரு தவிப்போடு பார்த்துக் கொண்டிருக்க, தனக்கொன்றென்றால் துடிக்கும் அந்தப் பெண்மானின் மிரண்ட விழிகள் அவனை ரொம்பவும் பாதித்தது.


தன் கன்னங்களைத் தாங்கி இருந்தவள் கையை விலக்கியவன், “ஒன்… ஒண்ணும் இல்ல வினி. ஐ ஆம் ஆல்ரைட்” என்றவன் குரலில் ஒருவித அலைப்புறுதலை உணர்ந்தவள், அதற்கு மேல் எதுவும் அவனைக் கேட்கவில்லை. அவன் கையில் தண்ணீர் பாட்டிலைக் கொடுத்தவள், “குடிங்க சார்… யூ ஃபீல் பெட்டர்” என்றவள் அவள் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.


தண்ணீரைக் குடித்தபின் ஓரளவுக்கு சமநிலைக்கு வந்த ஆதர்ஷனுக்குத் தன்னை நினைத்தே திகைப்பாக இருந்தது.


தான் முன்போல் இல்லை. தன்னிடம் நிறைய மாற்றங்கள் தோன்றியுள்ளது என்று அவனுக்குத் தோன்றியது. இந்த மாற்றமெல்லாம் தர்ஷினியின் வருகைக்குப் பிறகு தான் தனக்குள் நடக்கிறது. அவள் அருகாமையில் தன்னையும் அறியாமல் தன் மனம் அவளிடம் அலை பாய்வது அவனுக்கு வியப்பாக இருந்தது. அவன் நினைத்தால் ஒரு நிமிடம் போதும், அவளை வேலையை விட்டு அனுப்ப. ஆனால், ஏனோ அவனால் அதைச் செய்ய முடியவில்லை. ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. அதற்குக் காரணம் இந்த வேலைக்கு அவள் பொருத்தமாக இருப்பது தான் என்று அவன் அறிவு சொன்னாலும், அவளின் அருகாமையை இழக்க அவனுக்கு விருப்பம் இல்லை என்பது தான் அவனும் மறுக்க முடியாத உண்மை. 


தனக்குள் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பமான மனநிலையில் இருந்த ஆதர்ஷனை அவன் அலைப்பேசி அடித்து இந்த உலகத்திற்குக் கொண்டு வந்தது.


“என்ன சொல்ற அதீ நீ… இப்ப நாங்க என்ன பண்றது?” என்று கத்தியவனுக்குப் பதிலாக, “டேய், ரூம் ஒண்ணு தான். பட், அது பெரிய இன்டர்கனெக்ட் ரூம்டா‌..‌. செப்பரேட் பெட் இருக்கும். சோ நீங்க ரெண்டு பேரும் அந்த ரூம்ல ஸ்டே பண்றதுல எந்தப் ப்ராப்ளமும் இல்ல” என்று கூலாகச் சொல்ல, இங்கு ஆதர்ஷ் காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் அவனை வசை மாரிப் பொழிந்து கொண்டிருக்க, அதைக் காது கொடுத்துக் கேட்க முடியாமல் தன் காதுகளை இறுக்கி மூடிக் கொண்டாள் தர்ஷினி.


“டேய்… டேய் என்னடா இப்படி அசிங்கமாத் திட்டற…” என்ற அதீஷனுக்கு அவன் திட்டிய திட்டில் கண்ணில் தண்ணியே வந்து விட்டது.


“பின்ன என்னடா… எங்க ரெண்டு பேரையும் ஒரே ரூம்ல ஸ்டே பண்ணச் சொல்றியே… உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா இல்லயா… நாங்க எப்படிடா ஒரே ரூம்ல இருக்க முடியும்” என்றவனின் பார்வை தர்ஷினியின் மேல் விழ, அவளும் இவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“ஏன் இருந்தா என்ன தப்பு… ரெண்டு பேர் மனசுலயும் எந்தத் தப்பும் இல்லாத போது இதெல்லாம் தப்பே இல்ல…” என்றவன் வேண்டுமென்றே, “எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு… பட்…” என்று இழுக்க ஆதர்ஷ் புருவம் சுருக்கி, “பட்…” என்று அழுத்தமாய் கேட்டான்.


“இல்ல… தர்ஷினி ஏற்கனவே உன்னை ஒன் சைடு லவ் பண்ணி இருக்காங்க, சோ… இந்த சான்ஸ் யூஸ் பண்ணி உன்கிட்ட நெருங்க ஏதாவது ட்ரை பண்ணுவாங்கன்னு நீ…” என்றவன் வார்த்தை அப்படியே நின்றது ஆதர்ஷன், “ஷட் ஆப்” என்று போட்ட சத்தத்தில்.


“யாரைப் பத்தி என்னடா பேசிட்டு இருக்க… ஒரு பொண்ணைப் பத்தி இப்படி தப்பா நினைக்க உன்னால எப்படிடா முடியுது… அதுவும் வினி பத்தி” என்று பல்லைக் கடித்தவன், “உன்கிட்ட இத நான் எதிர்பார்க்கல அதீ… ஐ அம் டோட்டலி டிசப்பாய்ன்டெட் வித் யூ” என்றவனின் குரல் தாழ்ந்து விட, இங்கு அதீஷன் உதட்டில் சிறு புன்னகையுடன், ‘ஐ ஆம் சாரி அண்ணி’ என்று மானசீகமாகத் தர்ஷினியிடம் மன்னிப்புக் கேட்டவன், “அவ்ளோ நம்பிக்கையாடா அவங்க மேல உனக்கு…” என்று கேட்டான்.


“என்னைவிட அதிகமாக நான் அவளை நம்புறேன். ப்ளீஸ் இனிமே அவளைப்பத்தி இப்படித் தப்பா நினைக்காதடா” என்றவன் வார்த்தையில் அதீஷனுக்கு மனம் நிறைந்து விட்டது. அந்த நேரம் அவன் மனதில் இருப்பதைக் கேட்கவேண்டும் என்று தோன்ற, “நீ ஏன்டா தர்ஷினியைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?” என்று நேரடியாகக் கேட்டுவிட ஆதர்ஷன் திகைத்து நின்றான்.


“டேய்… நீ… நீ என்ன உளறிட்டு இருக்க… தன்வியோட சண்டைன்னு தண்ணி எதுவும் போட்டிருக்கியா என்ன? போ..போதையில் கண்ட மாதிரி பேசிட்டு இருக்கியா” என்றவனுக்குத் தான் வார்த்தை தடுமாறி வந்து விழுந்தது.


“நான் தெளிவா தான் இருக்கேன் தர்ஷா… நீதான் உன் மனசுக்கும் புத்திக்கும் நடுவுல மாட்டிகிட்டுத் தவிச்சிட்டு இருக்க” என்றவன் ஆழ்ந்து மூச்செடுத்தபடி, “உனக்கு அவங்க மேல இருக்க நம்பிக்கை, அவங்களுக்கும் உன்மேல இருந்தால் நீங்க ரெண்டு பேரும் ஒரே ரூம்ல இருங்க… இல்லாட்டி அடுத்த பிளேன் புடிச்சு ஊருக்கு வந்து சேருங்க” என்றவன் அழைப்பைத் துண்டிக்க ஆதர்ஷ் செய்வதறியாது நின்றான்.


அவன் அருகில் வந்த தர்ஷினி, “என்னாச்சு தர்ஷன்?” என்று கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன், “ரூ..ரூம் கிடைக்கல வினி…” என்றவன், ஒரு தவிப்போடு, “உ..உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைன்னா நா..நாம் ஒரே ரூம்ல இருக்கலாமா?” என்றவனுக்கு அந்த வார்த்தையைக் கேட்கவே உள்ளம் பதறியது.


அவன் இப்படித் தவிக்க அவளோ, “ஓகே சார்… எனக்கு எந்தப் ப்ராப்ளமும் இல்ல, வாங்க போலாம்” என்று சற்றும் அலட்டிக் கொள்ளாமல் சொல்ல, அவளை வியப்பாகப் பார்த்த ஆதர்ஷ், “உனக்கு என்னோட ஒரே ரூம்ல இருக்க அன்கம்பர்டபிளா இல்லயா?” என்றான்.


அவனைப் பார்த்து மென்மையாகச் சிரித்தவள், “கேக்க வந்ததை நேரடியாக் கேளுங்க சார்” என்றவள் தொடர்ந்து, “நான் உங்களை முழுசா நம்புறேன்… சோ எனக்கு எந்த பயமும் இல்ல. அதே மாதிரி நீங்களும் என்னை நம்பினால் மட்டும் உங்க கூட நான் இருக்கேன். இல்ல, எங்க இவ கூட ஒண்ணா இருந்தால் நம்மகிட்ட அட்வான்டேஜ் எடுப்பாளோன்னு உங்களுக்கு சின்னதாத் தோணினா கூட…” என்றவள் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன், “நான் செம்ம டயர்ட்… பேகை எடுத்துக்க, ரூம்க்கு போலாம்…” என்றவன் முன்னால் செல்ல சின்னச் சிரிப்போடு அவன் வழியை இவள் தொடர்ந்தாள்.


இங்கு அதீஷன் நடந்ததைத் தன்வியிடம் சொல்ல, அவளோ அவனை அனல் தெறிக்கும் பார்வை பார்த்தவள், “உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா தர்ஷினி அக்கா பத்தி தப்பாப் பேசுவீங்க” என்று புடவையை வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு நிற்க, ஒரே இழுவையில் அவளைப் பிடித்து இழுத்துத் தன் மடிமீது அமர்த்திக் கொண்டவன், ”ப்பா… என்ன கோவம் வருது என் தன்விக் குட்டிக்கு” என்றவனை மேலும் மேலும் முறைத்தாள் அவள்.


“அடியேய், சும்மா முறைக்காதடி… நான் ஒண்ணும் மனசுல தர்ஷினியைத் தப்பா நினைச்சு அவங்களை அப்படிப் பேசல… அவங்களை அப்படிப் பேசினால் தர்ஷன் எப்படி ரியாக்ட் பண்றான்னு பார்க்கத்தான் அப்படிச் சொன்னேன். நான் அவங்களைத் தப்பாப் பேசினதும் அவனுக்கு எவ்ளோ கோவம் வந்திடுச்சு தெரியுமா? தம்பின்னு கூடப் பார்க்காம என்னை அந்தத் திட்டு திட்டிட்டான்.” என்றவன் தன்வியின் தோளில் சாய்ந்து கொண்டு, “எனக்கென்னமோ அவனுக்கு தர்ஷினி‌மேல பீலிங் ஸ்டார்ட் ஆகிடுச்சோன்னு தோணுதுடி” என்று சொல்ல தன்வி உடனே, “எப்படிங்க சொல்றீங்க? ஆதுக்கு யாரைத் தப்பாப் பேசினாலும் புடிக்காது. சோ அதனால கூட உங்களைக் கண்டிச்சு இருக்கலாம் இல்ல?” என்று கேட்டாள்.


“ம்ம்ம் உண்மைதான்… ஆனா, இதுல சின்ன வித்தியாசம் இருக்குடி… இப்ப உன்னை வேற யாரும் தப்பாப் பேசினால் நான் என்ன செய்வேன்?” என்று கேட்டான்.


“வேறென்ன செய்வீங்க… பேசினவன் வாயை உடைப்பீங்க” என்றாள்.


“ம்ம்ம் ரைட்… அதே தர்ஷனோ இல்ல அம்மா, தாத்தா உன்னைத் தப்பாப் பேசினா நான் என்ன செய்வேன்?” என்று கேட்க, அவளோ, “பதிலுக்கு நான் அப்படி இல்லைன்னு சொல்வீங்க, அவங்களுக்குப் புரிய வைப்பீங்க” என்றாள்.


“எஸ்… அதைத்தான் இன்னைக்கு தர்ஷினிக்காகத் தர்ஷன் செஞ்சான். நான் அவங்களைத் தப்பா ஒரு வார்த்தை சொன்னதை அவனால தாங்க முடியல தன்வி… சட்டுன்னு என்னைத் திட்டினாலும், அவனோட மொத்தக் கவனமும் தர்ஷினி அப்படி இல்லைன்னு எனக்குப் புரிய வைக்குறதுல தான் இருந்தது. சோ, நான் கண்டிப்பா சொல்றேன், இன்னும் கொஞ்ச நாள்ல அவனுக்கு அவங்க மேல லவ் கண்டிப்பா வரும். அப்படி இல்லாட்டிகூட, நம்ம அவங்களை மேரேஜ் பண்ணிக்கச் சொன்னால் முடியாதுன்னு சொல்லாம மேரேஜ் பண்ணிப்பான்னு தோணுது” என்க, தன்வியோ, “அப்படி நடந்தால் முதல்ல சந்தோஷப்படும் ஆள் நான் தான்…” என்று அவன் தோளில் சாய அவன் கைகள் அவள் உடலில் ஊர்வலம் போக ஆரம்பித்தது. 


அதைப் பார்த்து அவனை அவள் முறைக்க, “ஏய்… ப்ளீஸ்டி… இத்தனை நாள் தர்ஷனுக்குப் பயந்து ஜன்னல் வழியாக வந்து வந்து அரையும் குறையுமா இன்ஸ்டால்மென்ட்ல உன்னைக் கொஞ்சிட்டுப் போறேன்‌. இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு அவன் தொல்லை இல்லன்னு நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன் தெரியுமா? அதுல மண் அள்ளிப் போட்டுறாதடி” என்று அவன் பாவமாகக் கேட்க, தன்விக்கு படக்கெனச் சிரிப்பு வந்துவிட்டது.


“இப்ப யாரு முடியாதுன்னு சொன்னது மை டியர் தஷ்” என்றவள் அவன் தேவைக்குச் சம்மதிக்க அவன் அவளில் தன் தேடலைத் தொடங்கினான்.


அதீஷனும் தன்வியும் ஆதர்ஷின் மனம் மாறிவிடும் என்று ஒரு கணக்குப் போட, ஆதர்ஷனோ யாரும்‌ நினைக்காத ஒரு முடிவை எடுத்திருந்தான். அந்த முடிவு தர்ஷினியை உயிரோடு வதைக்கும் என்று அறியாமல்.