இதயம் 6

 இதயம் 6


காகிதம் போல் ஒரு மாத காலம் பறந்திருந்தது, தர்ஷினி அங்கு வேலையில் சேர்ந்து. 


என்னதான் இரு மனநிலையில் ஆதர்ஷன் அவளை வேலைக்கு வைத்திருந்தாலும் அவளின் வேலை செய்யும் திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது என்று அடிக்கடி ஆதர்ஷனுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தவள், தன் காதலை உணர்த்தவும் தவறவில்லை.


வாய் வார்த்தையாகவோ செயலாகவோ இல்லாமல் கண் பார்வையில், அவனுக்காகச் செய்யும் சின்னச் சின்னக் காரியங்களில், அவனது தேவையறிந்து நடப்பது என்று தன்னுள் அவன் எந்தளவுக்கு நிறைந்திருக்கிறான் என்று நேரம் அமையும் போதெல்லாம் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள் தர்ஷினி.


ஆதர்ஷனுக்கும் இதெல்லாம் புரிந்தாலும் அவள் கண் பேசும்  மொழியை மொழி பெயர்க்க விரும்பாமல், ஒன்றும் அறியாதவன் போலவே அவன் நடந்து கொள்ள, அதை நினைத்துச் சற்றும் சோர்ந்து போகாமல் தன் முயற்சியையும், காதலையும் சளைக்காமல் தொடர்ந்தாள் தர்ஷினி.


அன்று யாரோ அவனை உற்றுப் பார்ப்பது போல் தோன்ற சட்டென நிமிர்ந்து தன் எதிரில் இருந்த தர்ஷினியைப் பார்த்தான்.


அவளோ லேப்டாப்பில் தன் வேல் விழிகளைத் தவழ விட்டபடி, தன் வெண்டைப் பிஞ்சு விரலால் எதையோ தீவிரமாக டைப் செய்தபடி அமர்ந்திருந்தாள்.


“யாரோ உத்துப் பார்க்குற மாதிரி இருந்துச்சே?” என்று மெதுவாக அவன் முணுமுணுக்க அது அவள் காதில் தெளிவாக விழுந்தது.


அதைக் கேட்டவள் இதழ்கள் லேசாக விரிந்த அடுத்த கணம் சிரிப்பை இதழ்களுக்குள் மறைத்துக் கொண்டாள்.


இந்த ஒரு மாதத்தில் இது அடிக்கடி அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வு தான்.


அவன் வேலையில் மூழ்கி இருக்கும் சமயம், அவன் அறியாமல் தன்னவனை விழுங்கும் பார்வை பார்ப்பவள், அவன் பார்க்கும் போது வேலை பார்ப்பது போல் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள, பாவம் ஆதர்ஷ் தான் குழம்பிப் போவான்.


அவன் அவளையே பார்த்தபடி இருக்க, “என்ன தர்ஷன் சார், ரொம்ப நேரமா என்னையே பார்த்துட்டு இருக்கீங்க.? என் முகத்தில் ஏதாவது ஒளிவட்டம் தெரியுதா என்ன?” என்று இரு புருவம் உயர்த்திக் குறும்பாக அவனைப் பார்த்துக் கேட்ட ஒரு நொடி… ஒரே ஒரு நொடி அவள் பார்வையில் தடுமாறியவன், “அதெல்லாம் ஒளிவட்டமும் தெரியல, முக்கோணமும் தெரியல. நான் உன்கிட்ட ஏதோ சொல்ல வந்தேன்.” என்றான் தடுமாறியபடி.


“அப்படியா…” என்று ஆச்சரியமாக விழிகளை விரித்தவள், “என்ன சொல்லணும் சார்?” என்று கேட்டாள் அதே குறும்புக் குரலில்.


அவள் குரலில் உள்ள கேலியைப் புரிந்து அவளை முறைத்தவன், “இன்னும் ரெண்டு நாள்ல நம்ம ரெண்டு பேரும் நியூயார்க் போறோம் இல்ல… அதுக்குத் தேவையான எல்லா ஏற்பாட்டையும் செஞ்சிட்டியான்னு தான் கேக்க வந்தேன்” என்றவனை ரசனையாகப் பார்த்தவள், “இதே கேள்வியை நேத்து ரெண்டு முறை, இன்னைக்கு மார்னிங் ஒரு முறை கேட்டுட்டீங்க தர்ஷன் சார்.” என்றவள்,  “எல்லாம் பெர்ஃபெக்ட்டா செஞ்சு முடிச்சாச்சு‌ சார்…” என்றவள் விரைப்பாக உட்கார்ந்தபடி சல்யூட் அடிக்க, அவள் குறும்பில் வாய் விட்டுச் சிரித்தான் ஆதர்ஷன். 


“எட்டு வருஷம் முன்ன பாத்த அதே குறும்புக்கார வினியை இப்பதான் மறுபடியும் பார்க்குறேன்” என்றவன், “ஆனா, எனக்குத் தெரிஞ்சு நீ இதுக்கு முன்ன வேலை பார்த்த இடத்தில் எல்லாம் உன்னை உம்மணா மூஞ்சின்னு இல்ல சொன்னாங்க…” என்று கேட்க, அதைக் கேட்டவள் இதழ்கள் லேசாக விரிந்து கொள்ள, “எட்டு வருஷம் முன்ன என்னோட சிரிப்பு தொலைஞ்சு போச்சு தர்ஷன். அதை எங்க தொலைச்சேன்னு தெரியாமல் இத்தனை வருஷம தேடிட்டு இருந்தேன்.” என்றவள் இமைகளை உயர்த்தி அவனை ஆழ்ந்து பார்த்தபடி, “அதை இப்பதான் இந்த ஊரில் தான் கண்டு புடிச்சேன். இனி அதை என்னைவிட்டு எங்கேயும் போக விடாமல் என் உதட்டுலயே கட்டிப் போட்டு வச்சிக்கப் போறேன்” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டுச் சென்றவள் அறியவில்லை, யாரால் மனம்விட்டு இப்போது சிரிக்கிறாளோ, அவனாலேயே கூடிய சீக்கிரம் மனமுடைந்து ஒருநாள் கதறி அழப் போகிறாள் என்று. 


சோஃபாவில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டிருந்த ஆதர்ஷ் அருகில் வந்து அமர்ந்தான் அதீஷன்.


“என்னடா செம்ம டயர்டா இருக்க… ரொம்ப வேலையா?” என்று கேட்க, கண்களை மெல்லத் திறந்து அதீயைப் பார்த்தவன், “டயர்டு வேலையினால இல்லடா… நீ வேலைக்கு வச்ச ஆள்னாலதான்” என்றான் சலிப்பாக.


“நான் வச்ச ஆளா… யாரு?” என்று யோசித்த அதீஷன் தலையில் தட்டிய ஆதர்ஷன், “டேய் ரொம்ப நடிக்காதடா… நான் யாரைச் சொல்றேன்னு உனக்கு நல்லாத் தெரியும்னு‌ எனக்கும் தெரியும்” என்றான் அவனை முறைத்தபடி.


“சரி… சரி… இப்ப தர்ஷினினால என்ன பிரச்சனை உனக்கு. நான் இருந்திருந்தால் கூட வொர்க் இவ்வளவு ஃபாஸ்டா நடக்குமான்னு தெரியல. அவங்க அவ்ளோ எபிஷீயன்ட்டா வொர்க் பண்றாங்க” என்றான்.


“ம்ம்ம், வொர்க்ல எல்லாம் அவளை எந்தக் குறையும் சொல்ல முடியாது. அவ அவ்ளோ ஷார்ப்” என்று பெருமையாகச் சொல்ல அதீஷன் மனதிற்குள், ‘ஓஹோ… சாருக்கு பெருமையைப் பாரு…’ என்று மைண்ட் வாய்ஸ் போட்டவன், “அப்ப‌ என்ன தான்டா பிரச்சனை?” என்றான். 


“அ…அது அவ… அவ என்னை?” என்று பழைய டைப் ரைட்டிங் மிஷின் போல் டைப்படிக்க, அதீஷன் அவனை‌ முகத்தைச் சுருக்கிப் பார்த்தவன், “ஏன்டா மிஷின்ல இங்க் தீர்ந்து போச்சா?” என்று கேட்க, “எது இங்க்காஆஆ?” என்று புரியாமல் விழித்தான் ஆதர்ஷ்.


“ம்ம்ம் ஆமா… இப்படி விட்டுவிட்டு வார்த்தையை டைப் அடிக்கிறயே… அதான் இங்க் காலியான்னு கேட்டேன்” என்றவன் தோளில் பட்டென்று ஒரு அடியைப் போட்டவன், “நேரம் காலம் தெரியாம காமெடி பண்ணிட்டு… ஒரு மனுஷன் ஒரு விஷயத்தைச் சொல்ல வந்தால் அதை ஒழுங்கா கேக்கணும்னு தோணாதாடா உனக்கு…” என்றான் சலிப்பாக.


“நீ ஒழுங்கா சொன்னா நான் ஒழுங்கா கேக்கப் போறேன். அதை விட்டு நீ இப்படி அவ, இவ, அஆஇஈன்னு இழுத்துட்டு இருந்தால் நான் என்னடா பண்ண? ஒழுங்கா விஷயத்தைச் சொல்லு” என்றான் அதீஷன்.


“அது… அவ இன்னமும் என்னைத்தான் லவ் பண்ணிட்டு இருக்காளோன்னு எனக்கு டவுட்டா இருக்குடா” என்றான் தாழ்ந்த குரலில்.


’ம்க்கும்… இதையே நீ இப்பதான் கண்டு புடிச்சியா… வெளங்கிடும்’ என்று முணுமுணுத்தவன், “நீ ஏன் அப்படி யோசிக்குற? நீங்க மீட் பண்ணி எட்டு வருஷம் ஓடிப் போயிடுச்சு. இந்த எட்டு வருஷத்தில் உன்னைவிட அழகா, உன்னைவிட ஹாண்ட்சமா, வசதியா, வெல் செட்டில்டான ஆள் யாரையும் அவங்க பாத்திருக்க மாட்டாங்கன்னா நீ நினைக்கிற… அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. அவங்க இருக்கற அழகுக்கும், திறமைக்கும் எத்தனையோ பேர் அவங்களை மேரேஜ் பண்ணிக்க போட்டி போட்டு இருப்பாங்க.” என்றவன் ஆதர்ஷின் முகம் பார்த்து, “ஏன், அவங்களை வேலைக்கு ரெக்கமன்ட் பண்ண என்னோட ப்ரண்ட், அதான் ஜி.கே கம்பெனி சி.இ.ஓ! அவன் கூட அவங்களை மேரேஜ் ப்ரபோஸ் பண்ணி இருக்கான் தெரியுமா?” என்று கேட்க, பக்கவாட்டில் விழியைத் திருப்பி அதீஷனை முறைத்த ஆதர்ஷ், “அதுக்கு அவ என்ன சொன்னா?” என்று கேட்டான் இறுகிய குரலில்.


“வேறென்ன… நாட் இன்ட்ரஸ்டட், எனக்கு இப்ப மேரேஜ் பண்ற‌ தாட் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம்” என்றான் ஆதர்ஷ் முகத்தில் வந்து போன உணர்வுகளை உற்றுக் கவனித்தப்படி.


“ம்ம்ம்… அதைத்தான் ஏன்னு நானும் கேக்குறேன். அவ ஏன் உன் ப்ரண்டை வேணாம்னு சொல்லனும்?” என்று கேட்டான் கோவமாக.


“இதென்னடா கேள்வி… அவங்களுக்கு அவனைப் புடிக்கல. சோ வேணாம்னு சொல்லி இருப்பாங்க” 


“அதான் அதேதான்… அவ இன்னமும் என்னைத்தான் மனசுல நினைச்சுட்டு இருக்கா… அதான் இன்னும் மேரேஜ் பண்ணாம இருக்கா… நான் கேக்கும் போது கூட மனசுக்குப் புடிச்ச பையனைக் கல்யாணம் பண்ண இப்பதான்நேரம் வந்திருக்குன்னு சொன்னா தெரியுமா… இதுக்கெல்லாம் அப்ப என்ன அர்த்தம்” என்று ஒரேயடியாகக் குதித்தான் ஆதர்ஷ்.


இழுத்துப் பெருமூச்சு விட்ட அதீஷன், “லிசன் தர்ஷா… அவங்க ரொம்ப பிராக்டிகலான பொண்ணு, இவ்ளோ பெரிய நாட்ல நல்ல பெரிய பொசிஷன்ல இருக்கவங்க… சோ மேரேஜ் பத்தி அவங்க என்ன ஒபினியன் வச்சிருக்காங்கன்னு நமக்குத் தெரியாது.” என்றவன் ஒரு கணம் பொறுத்து, “அவங்க மனசுக்குப் புடிச்ச பையன் இங்க தான் இருக்கானோ என்னவோ? யார் கண்டா… அவங்க அந்தப் பையன் கூட லிவிங் ரிலேஷன்ஷிப்ல கூட இருக்கலாம். கொஞ்ச நாள் கழிச்சுக் கல்யாணம் பண்ற ஐடியா கூட இருக்கலாம் இல்ல” என்றது தான் ஆதர்ஷனுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ, “ஸ்டாப் இட் அதீ” என்று கத்தியே விட்டான்.


“யாரைப்பத்தி என்ன பேசுறேன்னு யோசிச்சுப் பேசு அதீ. அ… அவளைப்பத்தி உனக்கென்னடா தெரியும். என்ன தெரியும், உனக்கு வினியப் பத்தி… எந்தளவுக்கு அவ மார்டனோ, அந்த அளவுக்கு நம்ம ட்ரெடிஷனை மதிக்கிற பொண்ணுடா அவ… அவளைப் போய் நீ…” என்று ஆத்திரமாகக் கேட்டவன், “அவ உருவம் மட்டும் அம்மா மாதிரி இல்லடா… அவ குணமும் செயலும் கூட அப்படியே நம்ம‌ அம்மா மாதிரி தான்‌. அப்படிப்பட்டவளைப் போய் எப்படிடா, உன்னால இப்படிப் பேச முடியுது” என்றவன் பட்டாசு போல் வெடிக்க, அமைதியான பார்வையோடு அவனைப் பார்த்தான் அதீஷன்.


“எந்தக் காலத்துல இருக்க தர்ஷா நீ? இல்ல, இப்ப எந்த நாட்டுல இருக்கேன்னாவது உனக்கு ஞாபகம் இருக்கா? இல்லயா? இந்த நாட்டுல‌ லிவிங் ரிலேஷன்ஷிப் எல்லாம் ரொம்ப சகஜம்… அது அவங்கவுங்க தனிப்பட்ட விஷயம். இங்க எத்தனையோ பேர் அப்படி இருக்காங்க… தர்ஷினிக்கு ஒருவேளை அப்படி யாரையும் புடிச்சிருந்து, அவன் கூட ரிலேஷன்ஷிப்ல இருந்தா அதுல என்ன தப்பு?” என்று கேட்டான் அதீஷன்.


அதீஷன் கேள்வியில் பல்லைக் கடித்த ஆதர்ஷ், “யார் வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் இருக்கலாம்… ஆனா, வினி அப்படி எல்லாம் பண்ற ஆள் இல்ல… பண்ணவும் மாட்டா…” என்று உறுதியாகச் சொல்ல, அவனை இப்போது அழுத்தமாகப் பார்த்த அதீஷன்,


 “தர்ஷினி மேல உனக்கென்ன இந்த அளவுக்கு நம்பிக்கை” என்றவன் தொடர்ந்து, “நம்பிக்கையை விடு… அதென்ன அவங்க மேல நீ இந்தளவுக்கு உரிமை எடுத்துக்குற. வினின்னு கூப்பிட்டது கூட ஓகே. ஆனா, அவங்களை அவ, இவன்னு சகஜமாப் பேசிட்டு இருக்க நீ… அவங்க மனசுல என்ன இருக்குன்றது நம்ம அப்புறம் யோசிக்கலாம். முதல்ல அவங்களைப்பத்தி நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? அவங்க உனக்கு யாரு? அவங்க உனக்கு வெறும் அசிஸ்டன்ட் மட்டும் தானா? இல்ல…” என்று அவன் இழுக்க, ஆதர்ஷனுக்கு தூக்கி வாரிப் போட்டது.


ஆதீஷன் சொல்லும்போது தான் ஆதர்ஷனுக்கே அவன் பேசிய வார்த்தைகள் மண்டையில் உரைத்தது.


‘ஆமா… நான் ஏன் வினி மேல இவ்ளோ உரிமை எடுத்துக்குறேன். அவ மேரேஜ் பண்ணா எனக்கென்ன? ரிலேஷன்ஷிப்ல இருந்தா எனக்கென்ன? அது அவ பர்சனல். நான் ஏன் தேவையில்லாமல் அவளைப் பத்தியே யோசிச்சிட்டு இருக்கேன்’ என்று தன்னைத் தானே கேள்வி கேட்டவனுக்குக் கிடைத்த பதில், அவள் வாழ்க்கை இப்படி இருக்கக் காரணம் தன்மேல் அவள் கொண்ட காதல்தான், அவளுக்கு நல்ல வாழ்வு அமையாமல் போனால் அதற்குக் காரணம் தான் என்ற குற்றவுணர்வு தான், தான் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கக் காரணம் என்று நினைத்தவன், அமைதியாக அங்கிருந்து செல்ல அதீஷன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.


எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் தர்ஷினி மீது ஆதர்ஷனுக்குக் காதல் வந்துவிடும் என்று அவன் நினைக்க, ஆதர்ஷனோ வேறு கோணத்தில் சிந்தித்துக் கொண்டு இருந்தான்.


இரண்டு நாட்கள் அமைதியாகக் கழிய, அன்று ஆதர்ஷனும் தர்ஷினியும் நியூயார்க் செல்லத் தாயராகிக் கொண்டிருந்தனர்.


ஏர்போர்ட்டில் இருவரும் அமர்ந்திருக்க தர்ஷினி வாய் ஓயாமல் எதையெதையோ பேசிக் கொண்டு இருக்க, ஆதர்ஷ் அதைச் சின்னச் சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தான்.


“இப்ப எல்லாம் நீ ரொம்ப… ரொம்ப அதிகமாப் பேசுற… வாய் ரொம்ப நீண்டு போச்சு உனக்கு. நீ முன்ன எல்லாம் இப்படி இல்ல வினி…” என்றான் அவளைப் பார்த்து.


அவனைக் குறும்பாகப் பார்த்தவள், “அப்படியா! என் வாய் பெருசாகிடுச்சா தர்ஷன்…” தன் கைப்பையில் எதையோ தேடியபடியே, “காலையில் கூட‌ மிரர்ல பார்த்தேனே” என்றபடி தன் பையில் இருந்து சிறிய‌ அளவிலான கண்ணாடியை எடுத்துத் தன் முகத்தைப் பார்த்துவிட்டு, “இல்லயே, லிப்ஸ் அதே சைஸ்ல தானே இருக்கு” என்று சொல்ல அவளைக் கண்கள் சுருக்கி முறைத்த தர்ஷன், அவள்‌ காதைப் பிடித்து திருகியவன், “வாயி… வாயி… இந்த வாய் மட்டும் இல்ல, உன்னை எல்லாம் வவ்வால் துக்கிட்டுப் போயிடும்” என்றவன் இன்னும் அழுத்தமாக அவள் காதைத் திருகிவிட, “ஸ்ஸ்ஸ்… ஆஆஆ… வலிக்கிது தர்ஷன்” என்று உட்கார்ந்தபடி குதித்தவள், “பேசுறது வாய்… நீங்க ஏன் பாவம்‌ ஒரு தப்பும் செய்யாத என் காதுக்கு பனிஷ்மென்ட் தரிங்க, வேணும்னா தப்புப் பண்ண என் லிப்ஸை பனிஷ் பண்ணுங்க” என்று விளையாட்டாகச் சொல்லிவிட, சட்டென அவன் பிடித்திருந்த அவள் காதை விடுவித்தவன் முகமோ ஒரு மாதிரி இயல்பைத் தொலைத்து இருந்தது.


அதைப் பார்த்த தர்ஷினி, “என்னாச்சு தர்ஷன்… ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்று கேட்டவள், “சாரி தர்ஷன்… நான் சும்மா விளையாட்டுக்குத் தான்” என்று ஆரம்பிக்கும் போது, அவர்கள் செல்லும் விமானத்திற்கான அறிவிப்பு வர, “டைம் ஆச்சு, வா போலாம்” என்றவன் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு செல்ல தர்ஷினி அமைதியாக அவனைப் பின் தொடர்ந்தாள்.


அதன்பின் இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்பதைவிட, தர்ஷினி பேசினாலும் ஆதர்ஷன் அமைதியாகவே இருந்தான் என்பது தான் உண்மை. கொஞ்ச நேரம் அவனுடன் பேச முயற்சி செய்து பார்த்தவள் பின் அமைதியாகி விட்டாள்.


பயணம் முடித்து அவர்கள் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு வரும் வரை அந்த அமைதி நீடித்தது.


அதீஷன் ஹோட்டலில் ஆதர்ஷனுக்கு வைத்திருக்கும் ஆப்பைப்பற்றி அறியாமல் இருவரும் உள்ளே வந்தனர்.