இதயம் 5

 இதயம் 5


ஆதர்ஷ் ஆஃபிஸ் கிளம்பிய உடனேயே தர்ஷினிக்கு ஃபோன் செய்திருந்தான் அதீஷன்.


“ஹலோ தர்ஷினி… தர்ஷன் கிளம்பிட்டான். கேர்ஃபுல்லா இருங்க… அங்க அவனைப் பார்த்ததும் உடனே முகத்தில் சந்தோஷத்தைக் காட்டிடாதீங்க… அவனை இப்ப தான் அங்க பார்க்குற போல காட்டிங்கோங்க… எக்காரணம் கொண்டும் உங்க முகத்துல நீங்க அவனை எதிர்பார்த்துட்டு இருந்தீங்கன்னு அவனுக்குத் தெரியவே கூடாது. அப்படி மட்டும் அவனுக்கு எதுவும் டவுட் வந்துச்சு… நம்ம மொத்த ப்ளானும் ஊத்திக்கும்… சோ ரொம்ப கவனமா இருங்க” என்று சொல்லி விட்டான்.


’ம்க்கும்… அவருக்கு என்ன எதுவும் ரியாக்ட் பண்ணாதேன்னு சொல்லிட்டாரு…’ என்றவள், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, ‘நான் சும்மா இருந்தாலும் இது சும்மா இருக்காதே… அவரைப் பார்த்ததும் கண்டமேனிக்கு குதிக்க ஆரம்பிச்சிடுமே… அதுவும் எட்டு வருஷம் கழிச்சு அவரைப் பார்க்கப் போறேன்…’ என்று சிணுங்கியவள், ‘கடவுளே, நீதான் எனக்குத் துணையா இருக்கணும். என் மனசைக் கொஞ்ச நேரம் என்னோட கன்ட்ரோல்ல வைக்க ஹெல்ப் பண்ணு’ என்று அனைத்து தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்க, அப்போது அங்கு ஓடிவந்த அந்தக் கம்பெனி மேனேஜர் ஜான், 


“மிஸ் தர்ஷினி, பாஸ் இஸ் கம்மிங்… பீ கூல் அன்ட் கான்பிடென்ட்” என்று சொன்ன நேரம், வாசலில் காலடி ஓசை கேட்க இழுத்து மூச்சு விட்டபடி,அமர்ந்திருந்த இருக்கையில் இன்னும் அழுத்தி அமர்ந்தவள், தன் கைப்பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். 


ஜான், “பாஸ், திஸ் இஸ் மிஸ். தர்ஷினி சிவராமன். யுவர் பர்சனல் அசிஸ்டன்ட்” என்று சொல்ல, தர்ஷினி மெல்ல எழுந்து திரும்பி ஆதர்ஷனைப் பார்த்தபடி நின்றாள்.


அதுவரை முன்புறமாக அமர்ந்திருந்த தர்ஷினியின் முகத்தைப் பார்க்காத ஆதர்ஷ், “ஹாய்…” என்று ஆரம்பித்தவன் வார்த்தை பாதியில் நிற்க, “ஹலோ சார்” என்று வந்த தர்ஷினியின் வார்த்தைகளும் முற்றுப்புள்ளி இல்லாமல் நின்று போனது.


“நீ… நீ…? வினி தானே?” என்று கேட்ட ஆதர்ஷனுக்கு அவன் கண்களையே நம்ப முடியவில்லை. ‘எத்தனை வருடங்கள் கழிந்து விட்டது இவளைப் பார்த்து’ என்று நினைத்தவனுக்கு அவளை அங்குப் பார்த்ததில் ஆச்சரியம் தான்.


அவன் கேள்விக்கு மெல்ல ஆமாம் என்று தலையாட்டிய‌ தர்ஷினி, “இத்தனை வருஷம் கழிச்சும் உங்களுக்கு என்னோட பேரும் என் முகமும் நினைவில் இருக்கா சார்?” என்று கேட்டாள் மனதில் உண்டான மகிழ்ச்சியைக் கஷ்டப்பட்டு மறைத்தபடி.


‘ஆமாம்… அவள் கேட்குறது சரிதான்… முழுசா எட்டு வருஷம் ஆச்சு நான் இவளைக் கடைசியாப் பார்த்து… ஆனா, எனக்கு இன்னமும் இவ முகம் மனசுல அழுத்தமாகப் பதிஞ்சு போயிருக்கே? எப்படி இது… இவ பேரைக்கூட நான் இன்னும் மறக்கலியே, யோசிக்க ஒரு செகண்ட் கூட தேவைப்படாம சட்டுன்னு வினின்னு சொல்லிட்டேனே…’ என்று குழம்பித் தான் போனான் ஆதர்ஷன்.


“ஹான்… இல்ல சட்டுன்னு நினைவு வரல… ஜான் உன் பேரைச் சொன்னது தோணுச்சு, அவ்ளோதான் தான்” என்று சமாளித்தவன், அவள் முகத்தை ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, அவள் முகம் அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் பிரகாசமாக இருந்தது.


“ஆமா… நீ லாஸ்ட் த்ரீ இயர்ஸா லண்டன்ல இருக்கேன்னு இல்ல கேள்விப்பட்டேன்?” என்றான் புருவம் உயர்த்தி.


அதில் அவள் இதழ்கள் பூவாக மலர்ந்தது, அவன் ஏதோ ஒரு வகையில் தன்றைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறான் என்று. 


அதே புன்னகையோடு, “ஆமா சார், அங்கதான் இருந்தேன். எந்த மாற்றமும் இல்லாம தினமும் ஒரே வேலையைச் செஞ்சு செஞ்சு, வேலையும் அந்த நாடும் போர் அடிச்சுப் போச்சு. அதான், ஒரு மாறுதலுக்கு வேற வேலை தேடிட்டு இருந்தேன். அப்பதான் என்னோட ப்ரண்ட் ஒருத்தர் இந்த ஜாப் பத்திச் சொன்னாரு… ஆன்லைன்ல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணேன். மிஸ்டர்.ஜான் தான் இன்டர்வியூ பண்ணாரு… ஜாப் கன்பார்ம் ஆனதும் இங்க கிளம்பி வந்துட்டேன். இங்க வந்து பார்த்தால் நீங்க இருக்கீங்க. இட்ஸ் ஏ ப்ளஸண்ட் ஷாக் ஃபார் மீ, தர்ஷன் சார்” என்று அதீஷன் சொல்லிக் கொடுத்ததை அச்சுப் பிசகாமல் சொன்னாள் தர்ஷினி.


“சோ உனக்கு… உன் ப்ரண்ட் சொல்லித்தான் இந்த ஜாப் பத்தித் தெரியுமா…?” என்று கேட்டவன் முகத்தில் இருந்த நம்பாத பாவனையைப் பார்த்து எச்சில் விழுங்கியபடி நின்றாள் தர்ஷினி.


“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல வினி” என்று அழுத்தமாக வந்தது அவன் குரல்.


“எ…எஸ் சார்… இது உங்க கம்பெனின்னு எனக்கு இப்பதான் தெரியுது. கம்பெனி எம்.டி நேம் ஏதோ அதீஷன்னு தான் ஜான் சொன்னாரு… நீங்க பேரை மாத்திட்டீங்களா சார்?” என்று அப்பாவியாகக் கேட்ட தர்ஷினியை முறைத்த ஆதர்ஷன்,


“அதீஷ் இஸ் மை டுவின் ப்ரதர். அவனும் நானும் சேர்ந்துதான் இந்த பிஸ்னஸ் பார்த்துட்டு இருக்கோம்” என்றான் அதே அழுத்தத்துடன்.


“வாட்? உங்களுக்கு டுவின் ப்ரதர் இருக்காரா? எனக்கு இவ்ளோ நாள் இந்த விஷயம் தெரியாதே” என்று அப்பட்டமாக நடிக்க, “தன்வி உன்கிட்ட ஒண்ணும் சொல்லலியா?” என்று சந்தேகமாகக் கேட்டான் ஆதர்ஷ்.


அவன் கேள்வியில் ஒரு நிமிடம் தடுமாறியவள், “இல்லயே சார்… நான் அவகூட கான்டாக்ட்ல இல்ல சார்” என்றவள், “ப்ளீஸ் அவ நம்பர் கொஞ்சம் தாங்க சார், பேசி ரொம்ப வருஷம் ஆச்சு” என்றவளை யோசனையாகப் பார்த்த ஆதர்ஷ், “ம்ம்ம்” என்றவன், “சிட்…” என்றபடியே இருக்கையைக் காட்டியவன், “ஜான்… யூ மே கோ” என்று அவனை அனுப்பி வைத்தான். 



எதிரெதிரே இருவரும் அமர்ந்திருக்க, “தன்விக்கு மேரேஜ் ஆகிடுச்சு தெரியுமா?” என்றவன் கண்கள் அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தது.


அதைப் புரிந்து கொண்ட தர்ஷினி, “வாவ்… நிஜமாவா சார். எப்ப சார் கல்யாணம் ஆச்சு? இப்ப எங்க இருக்கா சார் அவ… அவ ஹஸ்பெண்ட் என்ன பண்றாரு?” என்று கேள்வியாகக் கேட்டு வைக்க, ஆதர்ஷனால் அவளை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவும் இல்லை. 


குழப்பமான மனநிலையில், “அவ இங்கதான் இருக்கா, என்னோட ப்ரதர் அதீஷன் தான் அவ ஹஸ்பெண்ட். இப்ப அவ பிரக்னண்டா இருக்கா” என்றான்.


“சூப்பர் சார்… தன்வியோட நல்ல மனசுக்கு அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு” என்றவள் தொடர்ந்து, “எனக்கு அவளைப் பார்க்கனும் சார்” என்றாள் ஆசையாக.


“ம்ம்ம்…” என்று ஆதர்ஷ், “நீ எப்படி இருக்க? அப்பா எப்படி இருக்காரு?” என்று கேட்டான்.


அந்த ஒரு அன்பான வார்த்தையே அவளுள் லட்சம் பட்டாம் பூச்சிகளைப் பறக்கச் செய்தது.


“ம்ம்ம்… இருக்கேன் சார்” என்றவள் ஒரு நிமிடம் நிறுத்தி தலை குனிந்தபடி, “அப்பா இல்ல சார்… ரெண்டு வருஷம் முன்ன…” என்று ஆரம்பித்தவள் குரல் கரகரக்க ஆதர்ஷனுக்குப் புரிந்து விட்டது.


“ஐ ஆம் சாரி” என்றவன், “அதீக்கு கொஞ்சம் பர்சனல் வொர்க் இருக்கு, தன்வி பிரக்னண்டா இருக்கறதுனால அவன் இப்ப அவ கூட இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். இந்த சமயத்தில் அவனால என்னோட சேர்ந்து டிராவல் பண்ண முடியாது. அதான் உன்னை அப்பாயிண்ட் பண்ணி இருக்கான்.” என்றவன் அவளை நிமிர்ந்து பார்த்து, 


“இந்த வொர்க்ல நீ என்னோட சேர்ந்து நிறைய டிராவல் பண்ற மாதிரி இருக்கும். அது ரொம்ப அன்கம்ஃபர்டபிளா இருக்கும்… சோ, இந்த வேலை உனக்கு வேணாம்…” என்றவனைப் பார்த்து அவள் லேசாகச் சிரிக்க, ஆதர்ஷ் ஒற்றைப் புருவம் உயர்த்தி அவளைப் பார்த்தான்.


“இப்ப எதுக்கு சிரிச்ச?” என்று கேட்டான்.


“இல்ல, நீங்க எந்தக் காலத்தில் இருக்கீங்கன்னு நினைச்சு சிரிச்சேன். ஒரு ஆம்பளைகிட்ட ஒரு பொண்ணு வேலை பார்க்குறது, வேலை விஷயமா வெளிய டிராவல் பண்றதெல்லாம் ரொம்பச் சாதாரணம் சார் இப்ப… இதைப் போய் பெரிய இஷ்யூ மாதிரி பேசிட்டு இருக்கீங்க… என்ன சார் நீங்க…” 


அவள் சொல்வது சரியென்று ஆதர்ஷனுக்கும் தெரியும் தான். ஏன் இப்போது தர்ஷினி இடத்தில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால் தான் கண்டிப்பாக அதை ஒரு பெரிய விஷயமாக யோசித்து இருக்க மாட்டோம் என்று அவனுக்குப் புரிந்து தான் இருந்தது. ஆனால் ஏனோ அவனுக்கு தர்ஷினியுடன் வேலை செய்யத் தயக்கமாகவே இருந்தது. அதற்கான காரணம் மட்டும் அவனுக்குப் புரியவில்லை. அதே யோசனையில் அவன் இருக்க, “சார்” என்று அழைத்தாள் அவள்.


அதில் மௌனம் கலைந்தவன் அவளைப் பார்க்க, “உங்களுக்கு நான் இங்க வேலை செய்யறதுல உங்களுக்கு எதுவும் பிரச்சனையா சார்?” என அவள் வருத்தமாய் கேட்க, 


“ச்சே, அப்படிலாம் இல்ல” என்றவன், முன்னிலிருந்த ஃபைலில் அவள் சம்பந்தப்பட்ட தகவல்களைப் பார்த்தான்.


அதில் ‘மிஸ். தர்ஷினி’ என்றிருக்க ஒற்றைப் புருவம் உயர்த்தி, ‘மிஸ்ஸா’ என்று முணுமுணுத்தவன், “நீ இன்னும் மேரேஜ் பண்ணிக்கலியா?” என்று கேட்டான் கோவமாக.


அதைக்கேட்டு விரக்தியாகச் சிரித்தவள், “நீங்க தானே சார் மனசுக்குப் புடிச்ச பையனைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னீங்க. இப்பதான் அதுக்கான நேரம் வந்திருக்குன்னு நினைக்கறேன்.” என்றவளை அவன் தீயாக முறைக்க,


“சார்… ஒருவேளை மறுபடியும் எங்க நான் உங்களை லவ் பண்ணிடுவேன்னு நினைச்சுதான்… என்னை வேலைக்கு வேணாம்னு சொல்றீங்களா என்ன?” இல்ல ஒருவேளை….” என்று ஒரு மாதிரி குரலை இழுத்தவள், “உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லயா?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி, வேண்டுமென்றே நீங்கலாக கேட்டு, அவன் ஈகோவைத் தூண்டிவிட அதில் கடுப்பான ஆதர்ஷன், 


“லிசன் வினி… நான் ஏற்கனவே என்னைப்பற்றி உன்கிட்டத் தெளிவாச் சொல்லிட்டேன். நான் எப்பவும் ஒரே மாதிரி தான் இருப்பேன். நீ இங்க வேலை பார்க்குறதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. உன் ஆர்டர்ல சைன் பண்ணிடுறேன். நீ போய் ஜானைப் பாரு” என்று கடுப்பாகச் சொன்னவன், அவளின் அப்பாயின்மென்ட் ஆர்டரில் கையெழுத்திட்டான். 


எழுந்து நின்று அவன் கையெழுத்திட்ட ஆர்டரைக் கையில் எடுத்துக் கொண்டவள், “தேங்க்ஸ் சார்” என்றுவிட்டு அங்கிருந்து செல்ல, போகும் அவளையே பார்த்திருந்தான் ஆதர்ஷ்.


 ‘ம்ம்ம்… எப்படியே மனசுக்குப் புடிச்சு கல்யாணம் பண்ணி நல்லா இருந்தால் சந்தோஷம் தான்’ என்றவன் ஒரு கணம் பொறுத்து, ‘இரு இரு… இவ மனசுக்குப் புடிச்சவன்னு யாரைச் சொல்லிட்டுப் போறா?’ என்று யோசித்தவனுக்குக் கிடைத்த பதிலில் சிறிதும் உடன்பாடு இல்லாமல் போக, கோவத்தின் உச்சியில் உடனே அதீஷனைப் பார்க்கக் கிளம்பி வந்து விட்டான்.


இங்கு அதீஷனோ தர்ஷினியைப் பற்றி ஒன்றுமே‌ தெரியாது என்று சூடம் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாகச் சொல்லிவிட, ஆதர்ஷ் பொறுத்திருந்து இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று முடிவெடுத்தான்.


இங்கு ஆதர்ஷனோ தர்ஷினி பற்றிய யோசனையுடனேயே இருந்தான். அவளை வேலைக்கு வச்சது சரியா? தப்பா? என்று யோசித்து யோசித்துக் குழப்பிக் கொண்டு இருக்க, வழக்கம் போல் தன்வியின் அறைக்குள் ஜன்னல் வழியாகக் குதித்து உள்ளே வந்தான் அதீஷன்.


“எத்தனை நாளைக்குடி இந்தக் கொடுமை” என்று அலுத்துக் கொள்ள, “என்னைப் பாக்க வர்றது உங்களுக்குக் கொடுமையா” என்று சண்டைக்கு நின்றாள் தன்வி.


“அடியேய்! நான் எப்படி அப்படிச் சொன்னேன். இப்படி ஜன்னல் வழியாக வந்து பார்க்குறதைத் தான்டி கொடுமைனு சொன்னேன்.” என்றவன் தன்னவளைப் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.


அவன் கன்னத்தை மெதுவாக வருடியபடி, “ரொம்பக் கஷ்டமா இருக்கா?” என்று கேட்டாள் தன்வி.


“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லடி. உண்மையைச் சொல்லனும்னா இது கூட ஒரு மாதிரி கிக்கா தான் இருக்கு… டீனேஜ் பையன் லவ்வரைப் பார்க்க வர்ற மாதிரி ஃபீல் ஆகுது. கல்யாணத்துக்கு முன்ன நமக்கு லவ் சீன் இல்லன்ற குறையைக் கடவுள் இப்பத் தீர்த்து வைக்கிறாரு” என்றபடியே அவள் கன்னத்தில் முத்தம் பதித்தவன், அவளைக் கட்டிலில் அமர வைத்து அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.


“கீழ ஆது பேசினதைப் பார்த்து எங்க நம்ம ப்ளானை கண்டு புடிச்சிடுவாரோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன் தஷ். நல்லவேளை, நீங்க சமாளிச்சிட்டிங்க” என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்டாள்.


“ம்ம்கும்… எப்படியே இப்ப சமாளிச்சிட்டேன். ஆனா, அவனுக்கு உள்ளுக்குள் சந்தேகம் வந்திடுச்சு… கண்டிப்பா அவன் இதை இத்தோட விடமாட்டான்னு தோணுது” என்க, தன்வியோ, “தெரிஞ்சா தெரியட்டுமே… நமக்கென்ன பயமா? நம்ம ஒண்ணும் தப்புப் பண்ணலயே, அவர் நல்லதுக்கு தானே நம்ம போராடிட்டு இருக்கோம். அதைப் புரிஞ்சிக்காமப் போனா அது அவர் தப்பு. நம்ம என்ன செய்ய முடியும் சொல்லுங்க… நம்ம கடமை, அவர் வாழ்க்கைக்கு எது நல்லதுன்னு யோசிச்சி அதை நம்ம சொல்றோம். அதுக்காக முயற்சியும் பண்றோம். இதுக்கு மேல முடிவெடுக்க வேண்டியது ஆது தான்.” என்றவள்,


 “என்ன இதுல வினி அக்கா வாழ்க்கையும் இப்பச் சேர்ந்திருக்கு. சோ, நம்ம அவங்களுக்காகவும் யோசிக்கணும்” என்றபோது தான் அதீஷனுக்கு நினைவு வந்தது.


“ஆமா… அதென்ன நீயும், தர்ஷனும் அவங்களை வினின்னு கூப்பிடுறீங்க?” அவங்க பேரு தர்ஷினி தான?” என்று கேட்டான்.


“ம்ம்ம். ஆமா தஷ். முதல்ல நான் அவங்களை தர்ஷா அக்கான்னு தான் கூப்பிட்டுட்டு இருந்தேன்‌. அப்ப சிலர் ஆதுவையும் தர்ஷான்னு கூப்பிடுவாங்க… சோ, சில டைம் யார் யாருன்னு குழப்பம் வந்துச்சு. சோ, நானும் ஆது மாதிரி அவங்களை வினின்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டேன்.” என்றாள்.


அதைக் கேட்டு குறும்பாகச் சிரித்த அதீ, “வினின்னு முதல்ல அவங்களைக் கூப்பிட்டது நம்ம தர்ஷன் தானே?” என்று கேட்டான்.


“ம்ம்ம் ஆமா, அவங்க வேலையில் ஜாயின் பண்ணதில் இருந்து ஆது அவங்களை அப்படிதான் கூப்பிடுவாரு… ரெண்டு பேர் பேரும் ஒரே மாதிரி இருந்ததால அவரு அப்படிக் கூப்பிடுவாரு போல” என்றாள்.


“எங்கம்மா முழுப்பேரு என்னன்னு உனக்குத் தெரியுமா?” என்று சம்மந்தமே இல்லாமல் கேள்வி கேட்டான் அதீஷன்.


“அம்மா பேரு அமிர்தா தானே?” என்றாள் தன்வி அவன் கேட்டது புரியாமல்.


“ம்ம்ம் ஆமா, ஆனா, அவங்க முழுப் பேர் அமிர்தவர்ஷினி. அப்பா அவங்களை வினின்னு தான் கூப்பிடுவாரு… அதைப் பார்த்து தர்ஷனும் அம்மாவைச் சின்ன வயசுல வினின்னு தான் கூப்பிடுவான்” என்று ஒற்றைப் புருவம் உயர்த்திச் சொல்ல, அப்போதுதான் தன்விக்கு அவன் சொல்ல வந்தது புரிந்தது.


“ஓஓஓஓ… மேட்டர் அப்படிப் போகுதாஆஆஆ… அப்ப ஆதுக்கு தர்ஷினி அக்காவை முதல் முதல்ல பார்த்ததில் இருந்தே அம்மா ஞாபகம் தான் வந்திருக்கு. அதான் அவரு தன்னையும் அறியாமல் அவங்களை வினின்னு கூப்பிட்டிருக்காரு, அவங்ககூட எந்தவித நெருடலும் இல்லாமப் பழகி இருக்காரு.” என்றாள் தன்வி மகிழ்ச்சியான குரலில்.


“ஆமா தன்வி. இவனுக்கு அவங்க மேல காதல் இல்லைதான். ஆனா, அன்பும் அக்கறையும் நிறைய இருக்கு… இப்ப அவங்க அவன் கூடவே இருக்காங்க. நமக்கு நேரம்‌ நல்லா இருந்தால் இந்த அன்பு, காதலா மாற நிறைய வாய்ப்பிருக்கு.” என்றான் முழு நம்பிக்கையோடு.


“நானும் அதைத்தான் கடவுள்கிட்ட வேண்டிக்குறேன் தஷ்.” என்றபடி தன்னவனை அணைத்துக் கொண்டாள் தன்வி.


மாலை உணவு வேளையில் தன்வியும் அமிர்தாவும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, அப்போது அங்கு வந்தனர் ஆதர்ஷனும் அதீஷனும். 


அதீஷனைப் பார்த்ததும், தன்வி கோவமாக இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள, “தன்வி” என்று அமிர்தா அழுத்தமாக அழைத்தவர், “சாப்பிடும்போது பாதில எழுந்திருக்கக் கூடாது. உக்கார்ந்து சாப்பிடு” என்றவர், “உங்க ரெண்டு பேருக்கும்‌ என்ன சப்டைட்டில் போடனுமா… உக்காருங்க” என்றதும் ஆதர்ஷனும் அதீயும் அமர, இருவருக்கும் உணவை எடுத்து வைத்தார் அமிர்தா.


அதீஷன் வந்ததும் தன்வி எழுந்து கொண்டதைப் பார்த்த ஆதர்ஷனுக்கு உண்மையில் இருவருக்குள்ளும் சண்டை தானா என்ற எண்ணம் எழ, மெல்ல நிமிர்ந்து தன்வியைப் பார்த்தான்.


“வினி நம்ம ஆஃபிஸ்ல ஜாயின் பண்ணி இருக்கா தன்வி” என்று சொல்ல, மூவரும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து ஆதர்ஷனைப் பார்த்தனர்.


அமிர்தாவோ, ‘வினியாஆஆஆ’ என்று ஒரு கணம் அதிர்ந்தவர், அடுத்த கணம் சின்னச் சிரிப்போடு சாப்பிடத் தொடங்கினார்.


தன்வியோ, “எந்த வினி?” என்று கேட்க, ஆதர்ஷ் அவளைக் கண்கள் சுருக்கிப் பார்த்தவன், “ம்ம்ம்… நம்ம ஆஃபிஸ்ல வேலை பார்த்துட்டு இருந்தாளே தர்ஷினி..‌. நீ கூட வினிக்கான்னு கூப்டுவியே” என்றான் பற்களைக் கடித்தபடியே.


தன்வி, “தர்ஷினியாஆஆ…” என்று நெற்றிப் பொட்டில் தட்டி யோசித்தவள், “ம்ம்ம். ஆமா… ஆமா ஞாபகம் இருக்கு. அவங்களும் அமெரிக்காவில் தான் இருக்காங்களா?” என்று கேட்டாள் அப்பாவியாக.


“ஏன் உனக்குத் தெரியாதா?” 


“எனக்கு எப்படித் தெரியும். அவங்க நம்ம ஆஃபிஸ் விட்டுப் போய் ரொம்ப வருஷம் ஆகிடுச்சு… அவங்களைப்பத்தி எனக்கு எப்படித் தெரியும்” என்றது தான் அதீஷனுக்குப் புரையேறி விட்டது.


அவனைத் தன்வி முறைக்க, ஆதர்ஷ் தண்ணீர் டம்ளரை அவன் முன் நகர்த்தியவன், “குடி” என்றான் அழுத்தமாக.


“ம்ம்ம்… நீ சொல்லு தன்வி, உனக்கு நிஜமா வினி பத்தி ஒண்ணும் தெரியாதா?” என்று கேட்க இழுத்து மூச்செடுத்தவள், “அவங்களைப் பத்தித் தெரிஞ்சிக்க எனக்கு என்ன இருக்கு… கொஞ்ச நாள் நம்ம கூட வேலை பார்த்தாங்க, அப்புறம் வேலை விட்டுப் போயிட்டாங்க… அதுக்கு அப்புறம் எந்தக் கான்டாக்டும் இல்ல. ஆனா, நீங்க சும்மா திரும்பத் திரும்ப, உனக்குத் தெரியாதா தெரியாதான்னு கேட்டுட்டு இருக்கீங்க. நான் அவங்க கூடப் பேசி இருந்தால் அதை ஏன் உங்ககிட்ட மறைக்கப் போறேன்” என்று மூச்சு வாங்கக் கத்தவும், அதீக்கு கோவம் வந்து விட்டது.


“டேய்‌ போதும் நிறுத்து, பிரக்னண்டா இருக்கற பொண்ணை ஏன்டா போட்டு டார்ச்சர் பண்ற? அவதான் தெரியாதுன்னு சொல்றா இல்ல… விடேன்” என்று அவளுக்காகப் பேச, “எனக்காக யாரும் ஒண்ணும் பேச வேண்டாம்” என்று முறுக்கிக் கொண்டாள் தன்வி.


‘எப்பா, இது ஒலக மகா நடிப்புடா சாமி’


ஆதர்ஷனோ, “சாரி தன்வி” என்றவன், ”வினி உன்னை ரொம்ப விசாரிச்சா, உன்னைப் பார்க்கணும்னு சொன்னா. உன் நம்பர் கொடுத்திருக்கேன்” என்றவன் எழுத்து சென்றுவிட, அவன் சென்ற பிறகே மூவருக்கும் மூச்சே வந்தது.