இதயம் 4

 இதயம் 4


மதிய வெயில் சுகமாகக் காய்ந்து கொண்டிருந்த வேளையில் தன்வி தலை கோதிவிட, அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு அவள் வயிற்றில் முகம் புதைத்துத் தன் மகவின் இருப்பை உணர்ந்து சிலிர்த்துக் கொண்டிருந்தவனை, “அதீஈஈஈஈ” என்ற ஆதர்ஷின் கோபம் நிறைந்த குரல் நிகழ்காலத்தில் இழுத்து விட்டது.


தீடிரெனக் கேட்ட ஆதர்ஷின் குரலில் பதறி எழுந்தனர் அதீஷனும், தன்வியும்.


“என்ன தஷ்… இப்பதான் ஆபிஸ் போனாரு… அதுக்குள்ள வந்துட்டாரு… ஒருவேளை, தர்ஷினி அக்கா முகத்தைப் பார்த்தவுடன் தெறிச்சு ஓடி வந்துட்டாரு போல” என்று சொல்லிச் சிரிக்க அவனும், “இருக்கும்டி… அவங்களைப் பார்த்துட்டு அந்தக் கோவத்துலயே அப்படியே இங்க ஓடி வந்திருப்பான்… குரலே சொல்லுதே அவன் கோவத்தை” என்றான் அதீஷன்.


“ம்ம்ம்… நிச்சயம் செம்ம காண்டுலதான் இருப்பாரு, பார்த்துங்க… மேல விழுந்து பிராண்டிடப் போறாரு” என்ற தன்வியை முறைத்தான் அதீஷன்.


“கொழுப்பு கூடிப் போச்சுடி உனக்கு… நைட் சிக்குவ இல்ல, அப்ப கவனிச்சிக்குறேன்.” என்றவன், “கீழ வந்து ஐயா ஆக்டிங்கைப் பாருடி” என்றவன் வெளியே செல்லப் போக, பின்புறமாக அவன் சட்டைக் கையைப் பிடித்து இழுத்தாள் தன்வி.


“என்னடி? கிஸ்ஆஆஆ… வந்து தரேன்டி” என்றவன் கன்னத்தில் செல்லமாக அடித்தவள், “ஆசைதான்…” என்றவள், “இப்படியே வெளிய போனா எப்படி?” என்றாள்.


“பின்ன வேற எப்படிப் போகச் சொல்ற? அதான், இங்க ஒண்ணும் நடக்கலியே… அதுக்குள்ள தான் கரடி மாதிரி வந்துட்டானே…” என்றவன், “ட்ரஸ் எல்லாம் ஒழுங்கா தானடி இருக்கு?” என்றவனை என்ன செய்வதென்று புரியாமல், “கடவுளே!” என்று தலையில் அடித்துக் கொண்ட தன்வி, “நம்ம ரெண்டு பேருக்குள்ள சண்டைன்னு ஆது நினைச்சுட்டு இருக்காரு, மறந்துட்டீங்களா?” என்று கேட்டாள்.


“இப்பத்திக்கு எனக்கு நினைவுல இருந்து இம்சை பண்ற ஒரே விஷயம் அது ஒண்ணு தான்டி” என்றான் கடுப்பாக‌.


“ம்ம்ம்… ஞாபகம் இருக்கில்ல… அப்புறம் இப்ப என்னோட ரூம்ல இருந்து வெளிய போனால் எப்படிங்க” என்றவள், “ஒழுங்கா வழக்கம் போல ஜன்னல் வழியா வெளிய போங்க” என்றவளை, ”எதே!” என்பதுபோல் பார்த்தான் அதீஷன்.


“எது, வழக்கம் போலவா? அடியேய் நான் உன் புருஷன்டி” என்றான் அப்பாவியாக.


“பச்ச்… அதை இப்ப யாரு இல்லைன்னு சொன்னா… அதான் பத்து பவுன்ல தாலி கட்டி இருக்கீங்களே, எப்படி மறப்பேன்…” என்று அலட்சியமாகச் சொன்னவள், “சரி சரி… ஆது வேற கீழ உங்க பேரை ஏலம் விட்டுட்டு இருக்காரு, சீக்கிரம் போங்க” என்று அவனை ஜன்னல் பக்கம் தள்ளிக் கொண்டு போக, “எல்லாம் என் தலவிதிடி” என்றபடி ஜன்னல் வழியாகக் கீழே குதித்து இறங்கியவன், முன்பக்கம் வந்து வாசல் வழியாக உள்ளே வரவும் அவனை ஆதர்ஷ் பார்க்கவும் சரியாக இருந்தது.


நேராக அதீஷன் அருகில் வந்து அவன் சட்டையைப் பிடித்தவன், “யார் ப்ளான்டா இது…? ம்ம்ம் சொல்லுடா, யார் போட்ட ப்ளான் இது? நீயா பண்ணியா இல்ல, உன் பொண்டாட்டி அந்தக் குட்டிப் பிசாசு சொல்லிச் செஞ்சியா?” என்று அவனை உலுக்க, அதீஷன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.


‘செம்ம கடுப்புல இருக்கான். இப்ப மட்டும் இவன்கிட்ட சிக்கினேன், நான் க்ளோஸ்… டேய் அதீ, உன் நடிப்புத் திறமையைக் காட்டுடா’ என்று மனதில் நினைத்தவன், “டேய் என்னடா பண்ற நீ? நீ என்ன சொல்றன்னே எனக்குப் புரியல முதல்ல… நீ சட்டையில் இருந்து கையை எடு ஃபர்ஸ்ட்?” என்று சொல்ல, அவனை முறைத்தபடி சட்டையில் இருந்து கையை எடுத்தான் ஆதர்ஷன்.


“ம்ம்ம் இப்பச் சொல்லு, என்னாச்சு? என்றவன், கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “ஆமா… நீ இந்த டைம்ல ஆபிஸ்ல தானே இருக்கணும். இங்க என்ன பண்ற?” என்று அப்பட்டமாக நடிக்க இதை மேல இருந்து பார்த்த தன்வி, ‘ப்ப்பா, எம் புருஷனுக்கு என்னமா ஆக்டிங் வருது.’ என்று மெச்சிக் கொண்டாள்.


அதீஷன் கேள்வியில் கடுப்பின் உச்சத்திற்குக்க் சென்ற ஆதர்ஷ், “டேய் நடிக்காத…” என்றவன், “யாரைக் கேட்டு வினியை வேலைக்கு வச்ச?” என்று கேட்டான்.


‘எது… வினியா? பார்றா, சார்‌ செல்லப்பேர் எல்லாம் வச்சிருக்காரு’ என்று நினைத்த அதீஷன், “யாரு வினி? நீ சொல்றவங்க யார்னே எனக்குத் தெரியல, இதுல நான் அவங்களை வேலைக்கு வச்சேன்னு சொல்லறியே தர்ஷா” என்றான்.


“டேய்…” என்று பல்லைக் கடித்த ஆதர்ஷன், “பொய் சொல்லாத அதீ… நீதானே உனக்குப் பதிலா என்னோட கூடவே இருந்து எல்லா வேலையும் பார்க்க அவளை வேலைக்கு வச்சிருக்கேன்னு சொன்ன” என்றான் அழுத்தமாக.


“டேய், நான் வேலைக்கு வச்ச பொண்ணு பேரு தர்ஷினி சிவராமன். நீ சொல்ற வினியை எனக்கு யாருன்னே தெரியாது” என்றதுதான், தன்விக்கு அடக்க முடியாத அளவுக்குச் சிரிப்பு வந்துவிட, வாயை அழுத்தமாக மூடிக் கொண்டாள்.


“நடிக்காத அதீ… நீ எல்லாம் தெரிஞ்சு தானே இப்படிப் பண்ண?” என்று கேட்டான்.


“டேய்… என்னடா ஆச்சு உனக்கு? வந்ததில் இருந்து சம்மந்தமே இல்லாம என்னென்னமோ பேசிட்டு இருக்க” என்றவன் நான் வினின்னு யாரையும் வேலைக்கு வைக்கலடா” என்றான் விடாப் பிடியாக.


“டேய்,‌ நான் சொல்ற வினியும் நீ சொல்ற தர்ஷினியும் ஓரே ஆள் தான்டா” என்றான் எரிச்சலாக‌.


“என்ன ரெண்டும் ஓரே ஆளாஆஆ?” என்று பொய்யாக ஆச்சரியப்பட்ட அதீஷன், “என்னடா, அதுக்குள்ள ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டீங்களா என்ன? வினின்னு ஷார்ட்டா எல்லாம் கூப்பிடுற… நீ அப்படி எல்லாம் இதுவரை எந்தப் பொண்ணையும் கூப்பிட்டு நான் பார்த்தது இல்லயே!” என்று அதீஷன் சொல்ல, அப்போதுதான் அது ஆதர்ஷனுக்கே புரிந்தது.


‘ஆமா இல்ல… நான் அப்படி எந்தப் பொண்ணையும் இப்படிப் பேரைச் சுருக்கியோ, இல்ல ஒருமையிலோ யாரையும் கூப்பிட்டது இல்லயே… இவளை மட்டும் ஏன் நான் அவ, இவன்னு யோசிக்குறேன், பேசுறேன். ஏன் அவளை நான் வினின்னு கூப்பிட்டேன்’ என்று தன்னையே கேட்டவனுக்கு அதற்கு பதில் தான் தெரியவில்லை.


“தர்ஷா… டேய் தர்ஷா, என்னடா தீடிர்னு ஆஃப் ஆகிட்ட? என்னாச்சு?” என்றான் அதீ.


“டேய், எதுவும் பேசாம நான் கேக்கும் கேள்விக்கு மட்டும் ‌பதில் சொல்லு?” என்றவன், “வி” என்று ஆரம்பித்தவன், “தர்ஷினியை எதுக்கு வேலைக்கு வச்ச? அப்ப அவ யாருன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு அப்படித் தானே…?” என்று கேட்ட உடன்பிறப்பை பாவமாகப் பார்த்தான் அதீஷன்.


“டேய், என்னடா பேசிட்டு இருக்க நீ… எனக்குப் பதில் எல்லா குவாலிபிகேஷனோட ஒரு ஆள் வேணும்னு தேடிட்டு இருந்தேன். லண்டன்ல இருக்கற என்னோட ப்ரண்ட் தர்ஷினி பத்திச் சொன்னான். நான் அவங்க ஸ்கில்ஸ் செக் பண்ணேன். எனக்கு அவங்க இந்த வேலைக்கு கரெக்டா இருப்பாங்கன்னு தோணுச்சு, அதான் அப்பாயிண்ட் பண்ணேன். அவ்ளோதான்… மத்தபடி இப்ப நீ என்ன பேசிட்டு இருக்கன்னு எனக்கு ஒரு மண்ணும் புரியல” என்றவன் ஒரு நிமிடம் நிறுத்தி, “ஆமா..‌‌. அப்ப அவங்களை உனக்கு முன்னயே தெரியுமா?” என்று தெரியாதது போல் கேட்க, ஆதர்ஷின் தலை மேலும் கீழும் ஆமாம் என்று ஆடியது.


“எப்படித் தெரியும்?” என்று கேட்டான் அதீஷன்.


“அவ நம்ம சென்னை, பெங்களூர் பிரான்ச்ல வொர்க் பண்ணிட்டு இருந்தா” என்றான் வெற்றுக் குரலில்.


“ஓஓஓ!” என்று இழுத்த அதீஷன், “ரொம்ப நல்லதாப் போச்சு… ஏற்கனவே உங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியும்ன்றதால ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா வொர்க் பண்ண முடியும்” என்று சொல்ல, அவனை முறைத்த ஆதர்ஷ், “மண்ணாங்கட்டி… நீ நினைக்குற மாதிரி ஒண்ணும் நடக்காது.” என்றான் கோபமாக.


“ப்ச்ச்… என்னடா பிரச்சனை உனக்கு? வந்ததில் இருந்து ஏதோ மாதிரி பேசிட்டு இருக்க… ஒழுங்கா, தெளிவா என்ன மேட்டர்னு சொல்லுடா” என்ற அதீயை நிமிர்ந்து பார்த்தவன், “வி… வினி என்னை ஒன் சைடா லவ் பண்ணிட்டு இருந்தாடா” என்று ஆரம்பித்து அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவன், நிமிர்ந்து அதீயைப் பார்த்து, “எனக்கென்னமோ நீ உன் மனசுல ஏதோ கணக்குப் போட்டு, வேணும்னே வினியை இங்க வேலைக்கு வர வச்சிருக்கியோன்னு தோணுது” என்றவன் நிறுத்தி, “இப்பதான் இவன் வாழ்க்கையில் ஆலன் இல்லயேன்னு எதாவது ட்ரை பண்றீயா?” என்று தம்பியைச் சரியாகக் கணித்துக் கேட்டான் ஆதர்ஷன்.


அதில் சற்று அதிர்ந்த அதீஷன்‍, “ச்சீச்சீ..‌. நீ நினைக்குற மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்லடா… எனக்கு அந்தப் பொண்ணை யாருன்னே தெரியாது. குவாலிபிகேஷன் நல்லா இருந்தது. என்னோட ப்ரண்டும் நல்ல விதமாச் சொன்னான். அதான் நேர்ல கூடப் பார்க்காம, நம்ம மேனேஜரை வச்சு ஆன்லைன்லயே எல்லா ஃபார்மாலிடீஸ் முடிச்சிட்டேன்.” என்றவனை நம்பாத பார்வை பார்த்தான் ஆதர்ஷ்.


“அப்ப உனக்கு அவளை யாருன்னு தெரியாது அப்படித் தானே?” என்று கேட்க, அதீஷன் மேலும் கீழும் தலையை ஆட்டினான்.


“ம்ம்ம்… அவளை உனக்குத் தெரியாது… பட் அவளுக்கு உன்னைத் தெரியும். ஐ மீன் உன் முகம், என்னோட முகம்… சோ, உன்னை நான்னு நினைச்சு இங்க வேலைக்கு வந்திருப்பாளோ?” என்றவன் உடனே, “அப்ப அவ இன்னும் என்னை மறக்கவே இல்ல… இன்னும் பைத்தியக்காரத் தனமா என்னை லவ் பண்ணிட்டு இருக்கா போல? நான் சொன்ன எதையும் அவ மதிக்கவே இல்ல இல்ல… பச்சப் புள்ளைக்குச் சொல்ற மாதிரி சொன்னேன் அன்னைக்கு. என்னை மறந்துட்டு மனசுக்குப் புடிச்சவனைக் கல்யாணம் பண்ணுன்னு… அதையெல்லாம் கொஞ்சம் கூடக் கேக்காம இன்னும் லூசு மாதிரி என்னையே நினைச்சிட்டு இருக்காளா?” என்றவனுக்குத் தன்னால் தான் அவள் இன்றும் தனியாக இருக்கிறாளோ என்ற குற்றவுணர்ச்சியில் கட்டுக் கடங்காத கோபம் வந்தது.


ஆதர்ஷன் சொன்னதைக் கேட்ட அதீஷனுக்கு அன்று தர்ஷினி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.


“அவர் யாரையும் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி இருந்தால்கூட நான் அவர் பேச்சை மீறக் கூடாதுன்னு யாரையும் கல்யாணம் பண்ணிருப்பேன். ஆனா, அவரு மனசுக்குப் புடிச்சவனைக் கல்யாணம் பண்ணுன்னு சொல்லிட்டாரே நான் எப்படிச் சொல்வேன், இந்த ஜென்மத்தில் உங்களைத் தவிர வேற யாரையும் என் மனசு விரும்பாதுன்னு” என்ற சொல்லி அழுத தர்ஷினியின் முகம் அதீஷனின் மனக்கண்ணில் வந்துபோக, ‘சொல்றதை ஒழுங்காச் சொல்லி இருக்கணும்’ என்று மெதுவாக முணுமுணுக்க, “இப்ப என்னடா சொன்ன?” என்று கேட்டான் ஆதர்ஷன்.


“ம்ம்ம்… அதெல்லாம் ஒண்ணும் இல்ல, அவங்க உனக்காகதான் வந்திருக்காங்கன்னு நீ எப்படிச் சொல்ற? நீ இங்க அமெரிக்காலதான் இருக்கேன்னு அவங்களுக்கு எப்படித் தெரியும், சொல்லு… அதோட அவங்களை இண்டர்வியூ பண்ணுது எல்லாம் நம்ம மேனேஜர், ஜான் தான். அவங்க என்னைப் பார்த்திருக்க வாய்ப்பே இல்ல, அப்புறம் எப்படி என்னை நீன்னு நினைச்சிருப்பாங்க சொல்லு. நீ எதேச்சையா நடந்த விஷயத்தை எல்லாம் தப்புத் தப்பாப் புரிஞ்சிட்டு கத்திட்டு இருக்கேன்னு தோணுது” என்றான்.


“நோ… எனக்கு என்னமோ இதெல்லாம் கோஇன்சிடென்ஸ் மாதிரி தெரியல… இதுல வேற என்னமோ இருக்கு” என்றவன் பார்வை அழுத்தமாகத் தம்பியின் மீது படிந்தது.


“டேய்… நீ சொல்றதைப் பார்த்தா இதெல்லாம் நான் வேணும்னு பண்ணேன்னு சொல்லுவ போல… எனக்கு அவங்க யார்னே தெரியாது‌. அப்புறம் எப்படி நான் இதெல்லாம் பண்ணி இருப்பேன்னு நீ நினைக்கிற?” என்றவன் அருகில் வந்தவன்‍, “வினி யாருன்னு உனக்குத் தெரியாமல் போகலாம்…” என்றவன் நிறுத்தி மேலே விரலை நீட்டி, “ஆனா, தன்விக்கு அவளை நல்லாவே தெரியும்” என்று அழுத்தமாகச் சொல்ல அதீஷனுக்கு மூச்சே வரவில்லை.


“டேய்… டேய், கொஞ்சமாச்சும் லாஜிக்கோட பேசுடா… அவளே இங்க வந்த நாள்ல இருந்து என்னோட பேசுறதே இல்ல… இதுல அவ எப்படி தர்ஷினி பத்தி என்கிட்டச் சொல்லியிருப்பா… அதோட அவ என் காலை வாரி விட்டாலும் விடுவாளே தவிர, உனக்கெதிரா ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்டான்னு உனக்குத்தான் தெரியும் இல்ல. அப்புறம் எப்படி இதெல்லாம்” என்ற அதீஷனைக் கூர்மையாகப் பார்த்தவன், 


“அஃப்கோர்ஸ்… தன்வி எனக்கு அகைன்ஸ்டா எதுவும் செய்ய மாட்டா” என்றவன் ஒரு கணம் நிறுத்தி, “பட் எனக்காக என்ன வேணும்னாலும் செய்வா… அது எனக்குப் புடிக்காத விஷயமா இருந்தாலும், அதனால் எனக்கு நடக்கும் நல்லதை மட்டும் தான் அவ யோசிப்பா..‌.” என்று புருவத்தை நெளித்தபடி எதையோ யோசித்தவன், விழியைப் பக்கவாட்டில் திருப்பி, “உண்மையாவே தன்வி உன்மேல கோவமா தான் இருக்காளா?” என்று கேட்க அதீஷனோடு, மேலே நின்றபடி இது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த தன்வியும் சேர்ந்து அதிர்ந்தாள்.


’ஆத்தீ… கண்டு புடிச்சிருவாரோ?’ என்று தன்வி பதற இங்கு அதீஷனோ, “டேய்!” என்று ஹை பிச்சில் கத்தியவன், “என்னடா பேசிட்டு இருக்க நீ… இல்ல, என்ன பேசிட்டு இருக்கன்னு புரிஞ்சுதான் பேசிட்டு இருக்கியா..‌. இங்க ஒருத்தன் ஆசையா காதலிச்சு, கல்யாணம் பண்ண பொண்டாட்டி ப்ரெக்னென்டா இருக்கும்போது அவகூடப் பேச முடியாம, அவ முகத்தைக் கூடப் பார்க்க முடியாம தவிச்சிட்டு இருக்குறது உனக்கு நடிப்பு மாதிரித் தெரியுதாடா… சொல்லுடா நடிப்பு மாதிரித் தெரியுதா? நேத்துக் காலையில் அவ சாப்பிடும்போது ஒரு ஓரமா ஒளிஞ்சு நின்று அவ முகத்தைப் பார்த்தது, அதுல இருந்து இப்ப வரை அவ முகத்தைக்கூடப் பார்க்க முடியலைன்னு நான் ஏங்கிட்டு இருக்குறது உனக்கு நடிப்பாத் தெரியுது இல்ல…?” என்று கத்தியவன், “நான் பாட்டுக்கு கல்யாணமும் வேணாம், ஒண்ணும் வேணாம்னு சும்மா தானடா இருந்தேன். நீதான என்னை வம்படியா இந்தியா அனுப்பி வச்ச…” என்றவன் திரும்பி ஆதர்ஷ் சட்டையைப் பிடித்து உலுக்கி, “நீ மட்டும் என்னை இந்தியா அனுப்பாட்டி, நான் அவளைப் பார்த்திருக்க மாட்டேன். லவ் பண்ணி இருக்க மாட்டேன், மேரேஜ் பண்ணிட்டு, இப்ப இப்படி ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்காகத் துடிச்சிட்டு இருக்க மாட்டேன்” என்று கத்திக் கொண்டே அவன் சட்டையில் இருந்து கையை எடுத்தவன், “எல்லாம் உன்னாலதான்… நீ தான் எல்லாத்துக்கும் காரணம்” என்று திட்டியபடி அவன் அறைக்குள் சென்று கதவை அடித்துச் சாத்திக் கொண்டவன், அடுத்த நொடி தன் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு, ‘ஜஸ்ட் மிஸ்… தப்பிச்சேன்டா சாமி’ என்று நெஞ்சைத் தடவிக் கொண்டான்.


இங்கு ஆதர்ஷனோ, ‘கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம, இவன் இப்படிச் சிவாஜி சார் மாதிரி பர்ஃபாமென்ஸ் பண்ணிட்டுப் போறதைப் பாத்தாலே டவுட் வருது… ம்ம்ம் பொறுத்திருந்து பார்க்குறேன்டா… நீங்க எல்லாம் என்ன கேம் ப்ளான் பண்றீங்கன்னு’ என்று மனதோடு சொல்லிக் கொண்டவன், மனதில் இன்று தர்ஷினியைச் சந்தித்த நிகழ்வு வந்து போனது‌.