இதயம் 3

 இதயம் 3 


அதீஷன் சொன்ன அனைத்தையும் கேட்ட தர்ஷினிக்கு கண்களில் கண்ணீர் வழிவது நிற்கவே இல்லை.


"ஏன்? ஏன் அந்தச் சித்ரா இப்படிப் பண்ணா? அவ ஏன் ஆதர்ஷ் சார் லைஃப்ல வந்தா… என்னைப் பார்க்கும் முன்ன கடவுள் ஏன் அவளை அவர் கண்ணுல காட்டினாரு? ஏன் அந்த ஆலனுக்கு தர்ஷனைப் புடிக்கணும்? ஏன் இப்படியெல்லாம் நடக்கணும்? ஏன்…" என்று சொல்லிச் சொல்லி அவள் கதற, அங்கிருந்தவர்கள் இவர்களை ஒரு மாதிரிப் பார்த்தனர்.


அதைக் கவனித்த அதீஷன், "ப்ளீஸ் தர்ஷினி… எல்லாரும் பார்க்குறாங்க… கண்ட்ரோல் யுவர் செல்ப்" என்றபடி டிஸ்யூவை எடுத்து நீட்ட இருக்கும் இடம் உணர்ந்து அமைதியானாள்.


அந்த நேரம் "ஆனாலும், அந்தப் பைத்தியம் சித்ரா ஒருத்தி தப்பு பண்ணதை வச்சு இந்த ஆது, இப்படிப் பொண்ணுங்களே புடிக்காதுன்னு சொன்னா எப்படி?" என்றாள் தன்வி ஆதங்கத்தில்.


"இல்ல தன்வி, நீ சொல்றது தப்பு… அவர் சித்ராவை நினைச்சோ, பொண்ணுங்களைப் பிடிக்காமயோ அவங்களை விட்டு விலகிப் போகல… உண்மையைச் சொல்லணும்னா, அப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகும் அவர் இன்னும் பொண்ணுங்களை மதிக்கிறாரு… அதுக்கு நானே பெரிய உதரணம். நம்ம ஆஃபிஸ்ல எத்தனை லேடிஸ் வேலை பார்த்திருக்கோம்? யார் கிட்டயாவது இதுவரை அவர் வெறுப்பாவோ, மரியாதைக் குறைவாவோ நடந்தது இல்லயே. சோ, அவர் பொண்ணுங்களை வெறுக்கல, ஜஸ்ட் விலகிப் போறாரு…" என்று விரக்தியாகச் சிரித்தவள், "இன்னொரு முறை ஏமாற அவர் மனசுக்குத் தெம்பு இல்ல தன்வி. அதான் அவர் என்னையும் விலக்கி வைக்கக் காரணம்" என்று சொல்ல அவளின் புரிதலை நினைத்து அதீஷனுக்கு நிம்மதியாக இருந்தது.


"யூ ஆர் ரைட் தர்ஷினி… நீங்க சொன்ன மாதிரி இன்னொரு முறை அவன் மனசு காயப்பட்டால், அதுக்கு மேல அவனை நம்மளோட ஆதர்ஷனாப் பார்க்க முடியும்னு எனக்குத் தோணல… ஆனா, அவனோட இந்தக் கட்டுப்பாடு எல்லாத்தையும் தாண்டி அவன் மனசை நீங்க தொட்டிருக்கீங்க… அம்மாவையும், தன்வியையும் அடுத்து அவனோட பர்சனல் விஷயத்தைச் சொல்ற அளுவுக்கு அவன் மனசை நெருங்கினது நீங்க ஒருத்தர் மட்டும் தான். அவன் என்னதான் நீங்க அவனைப்பத்திய உண்மை தெரிஞ்சால் அவனைவிட்டு விலகிப் போயிடுவீங்கன்னு உங்ககிட்ட உண்மையைச் சொன்னதாய் சொல்லி இருந்தாலும், அந்த நிமிஷம் அவன் உங்களை நம்பி இருக்கான். அவன் மனசு உங்களை யாரோவா பார்க்கல… அதான், உங்ககிட்ட அவனைப் பத்தின அவ்ளோ பெரிய உண்மையை எந்தத் தயக்கமும் இல்லாம சொல்லி இருக்கான். அவன் நினைச்சிருந்தால் நீங்க சொன்ன மாதிரி வேற எதாவது பொய்யான காரணத்தைச் சொல்லி இருக்கலாமே… ஏன் அவன் வேற பொண்ணை விரும்புறதா கூட பொய் சொல்லி இருக்கலாம்… ஆனா, அவன் அப்படிச் செய்யல… பிகாஸ், ஹீ டிரஸ்ட் யூ… அம்மாவை, தன்வியை அவன் எந்த இடத்தில் வச்சிருக்கானோ அங்கதான் நீங்களும் இருக்கீங்க" என்றவன் ஒரு நிமிடம் அமைதியானவன், "இனி எல்லாம் உங்க முடிவு தான். ஆலன் கூட அவன் ரிலேசன்ஷிப்ல இருந்திருந்தாலும் அது வெறும் மனசளவில் மட்டும் தான் இருந்தது.” என்று அழுத்தமாகச் சொன்னவன் ஒரு கணம் நிறுத்தி,


 “நான் சொல்றது உங்களுக்குப் புரியும்னு நினைக்குறேன்” என்று சொல்ல, ‘தர்ஷினியோ என்னவனைப் பற்றி எனக்குத் தெரியாதா?’ என்று நினைத்தவள், மெல்ல ஆம் என்று தலையை ஆட்டியபடி, “அவரு மனசுக்கு தான் ஒரு துணை தேவைப்பட்டிருக்கு, அதான் ஆலன் நேசத்தை அவர் ஏற்கக் காரணம்.” என்று சொல்ல,


“ம்ம்ம்…” என்ற அதீஷனுக்கு மறுபடியும் தர்ஷினி தான் ஆதர்ஷனுக்குச் சரியான மனைவி என்ற முடிவை மனது உறுதி செய்தது.


“சரி… இப்பச் சொல்லுங்க, உங்க முடிவு என்ன? நான் உங்களை தர்ஷினின்னு கூப்பிடுறதா? இல்ல, அண்ணின்னு கூப்பிடுறாதான்னு நீங்க தான் சொல்லனும்." என்றவன், "இதுல நாங்க மூணு பேரும் உங்களுக்கு எந்தச் சூழ்நிலையிலும் துணையா இருப்போம்…" என்றவன் நிமிர்ந்து தர்ஷினியின் முகத்தைப் பார்த்தான்.


ஒரு முழு நிமிடம் அதீஷனின் முகத்தைப் பார்த்த தர்ஷினி, "நீங்க என்னை தர்ஷினின்னே கூப்பிடுங்க" என்று சொல்ல மூவரின் முகம் விழுந்து விட்டது.


அவர்களின் முகத்தைப் பார்த்த தர்ஷினி, "ஆமா… இவருக்கு என்னைவிட வயசு அதிகம் தானே… அப்புறம் இவரு என்னை அண்ணின்னு கூப்பிட்டா எனக்கு ஒரு மாதிரி வயசான ஃபீல் வருமில்ல" என்று கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்தபடியே சொல்ல, ஒரு நிமிடம் திகைத்து விழித்த மூவரும் பின் அவள் சொன்னதின் அர்த்தம் புரிய மனம் மகிழ்ச்சியில் திளைத்திட தன்வியோ, "மீ ரொம்ப ஹாப்பி அக்கா" என்று கத்திக் கொண்டே எழுந்தவள் தர்ஷினியைப் பாய்ந்து கட்டிக் கொண்டாள்.


"ரொம்ப சந்தோஷம்… நான் உங்களை இனிமே தர்ஷினின்னே கூப்பிடுறேன்" என்று சிரிப்பினூடே சொன்னவன், சில நொடி மௌனத்திற்குப் பிறகு இழுத்து மூச்செடுத்து, "ஆனா, இதுல ஒரு பிரச்சனை இருக்கு தர்ஷினி. நான் சொல்ற எல்லாத்தையும் முழுசா கேட்ட பிறகு நீங்க உங்க கடைசித் தீர்மானத்தைச் சொல்லுங்க…" என்றவன் தொடந்து,


"என்னதான் இதுல நாங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணாலும் முடிவு உங்க ரெண்டு பேருதுதான். நீங்க, ஆதர்ஷ் ரெண்டு பேரும் சம்மதிச்சா மட்டும் தான் இந்தக் கல்யாணம் சாத்தியம். இதுல உங்களுக்குச் சம்மதம்னு நீங்க சொல்லிட்டிங்க… இதே வார்த்தை ஆதர்ஷனும் சொல்லணும். இப்பவரை அவனுக்கு உங்களைப் புடிக்கும்னுதான் நமக்குத் தெரியும். ஆனா, அந்தப் பிடித்தம் உங்களைக் கல்யாணம் பண்ற அளவுக்கு அவனுக்குள்ள ஒரு மாற்றத்தைக் கொண்டு வருமான்னு நமக்குத் தெரியாது. இது ஒரு ஒன் சைட் எபர்ட் மட்டும் தான். இங்க நீங்க மட்டும் தான் உங்க காதலுக்காகப் போராடப் போறீங்க… நாங்க உங்களுக்குத் துணையா நிப்போம், அவ்ளோதான். இதுல நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி… அதோட பலனை முழுக்க முழுக்க அனுபவிக்கப் போறது நீங்க தான். நீங்க மட்டும் தான். ஐ மீன்… இவ்ளோ வருஷம் அவனுக்காகக் காத்திருந்தது போதாதுன்னு இனிமே நீங்க அவன் உங்களைக் காதலிக்கறதுக்காகக் காத்திருக்கப் போறீங்க… இதுல நீங்க பணையம் வைக்கப் போறது உங்க வயசு, எதிர்காலம், வாழ்க்கை இது மூணையும் தான். மூணுமே போனால் திரும்பி வராது. அதை ஆதர்ஷனுக்காக இழக்க நீங்க ரெடியா? ஜ மீன், ஒருவேளை கொஞ்ச வருஷம் நீங்க போராடிப் பார்த்த பிறகும் கடைசிவரை அவன் மனசு மாறாட்டி உங்க நிலை என்ன ஆகும்னும் நீங்க யோசிக்கணும்" என்றான் நேர்மையாக.


தன்விக்கும் அமிர்தாவுக்கும் கூட அதீஷன் பேசிய பிறகே இந்த விஷயத்தில் இப்படி ஒரு கோணம் இருப்பதே புரிந்தது. ஒருவேளை, ஆதர்ஷ் கடைசிவரை பிடிவாதமாக இருந்து விட்டால் அதன்பின், தர்ஷினியின் நிலை என்ன என்று யோசிக்காமல் விட்ட தங்கள் மடத்தனத்தை நினைத்து நொந்தவர்கள் தர்ஷினியின் பதிலுக்காகக் காத்திருந்தனர். 


அதீஷன் சொன்னதைக் கேட்டு மெல்லியதாகச் சிரித்த தர்ஷினி, "இவ்ளோ நாள் எனக்கு அவர் கிடைக்க வாய்ப்பே இல்லைன்னு தெரிஞ்சும் அவரைக் காதலிச்சுட்டு இருந்தேன். இனிமே அவருக்கு என்மேல காதல் வர ஒரு பர்சன்ட் வாய்ப்பிருக்குன்ற நம்பிக்கையில் அவரைக் காதலிக்கப் போறேன். என் ஆயுசுக்கும், நான் காத்திருக்க அந்த ஒரு பர்சன்ட் நம்பிக்கை மட்டும் போதும் சார் எனக்கு. எங்க ரெண்டு பேருக்கும் சேர்ந்து என் ஒருத்தியோட காதலே போதும்" என்றவளை ஒரு மிரட்சியுடன் பார்த்தனர் மூவரும்.


அதற்குப் பின் அடுத்து செய்ய வேண்டியதைத் திட்டம் போட்டனர். அத்திட்டத்தின் முதல்படி தான், அதீஷன் அவனுக்குப் பதில் தர்ஷினியைத் தன்னுடைய இடத்தில் வேலைக்கு அமர்த்தியதும். அதற்கு தர்ஷினியின் திறமையும் ஒரு காரணம். ஆதர்ஷ் நினைத்தது போல் அமெரிக்காவில் தன் நிறுவனத்தை நிலை நிறுத்த அவனுக்கு தர்ஷினி போன்ற ஒருவரின் துணை அவசியம் தேவை என்பதையும், இதை ஆதர்ஷன் மறுக்க முடியாது என்றும் உணர்ந்தே அதீஷன் இந்த முடிவை எடுத்திருந்தான்.


அவர்களின் நல்லநேரம் பல வருடங்களாக ஒரு இடத்தில் வேலை பார்த்து வந்த தர்ஷினி, ஒரு மாறுதல் வேண்டுமென்று அந்த வேலையை விட்டுவிட்டு வேறு நாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தாள். அதனால்தான் தன்வி அழைத்ததும் அவளால் அமெரிக்கா வர முடிந்தது. அதனால் அதீஷன் திட்டம் சுலபமாக நடந்தது. உடனே தர்ஷினி தங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தவன், அவள் வீட்டுப் பொருட்களோடு, அவளின் உறவுகளான பறவைகளையும் இங்கு வரவழைத்து விட்டிருந்தான். 


அவர்களின் திட்டப்படி தர்ஷினி இன்று ஆதர்ஷனின் ஆஃபிஸில் முதல் நாள் பணியில் சேரச் செல்கிறாள்.


மனது முழுவதும் வெகு காலம் கழித்துத் தன்னவனைப் பார்க்கப் போகும் எதிர்பார்ப்பு நிறைந்திருந்தாலும், ஒரு ஓரத்தில் ஆதர்ஷ் தன்னை அங்குப் பார்த்த பிறகு என்ன சொல்வானோ என்ற பயமும் இருக்கத்தான் செய்தது.


எது நடந்தாலும் சரி, இனி அவனை விட்டுப் பிரியக் கூடாது என்ற முடிவோடு தன்னுடைய பொருட்களை எல்லாம் சரிபார்த்து எடுத்துக் கொண்டு அலுவலகம் புறப்பட்டாள் ஆதர்ஷனின் தர்ஷினி…


இனி இந்த விளையாட்டை விளையாடப் போவது விதி மட்டுமே… பார்ப்போம் விதியின் விளையாட்டில் இவர்கள் சேர்வரோ இல்லை?


இங்கு வீட்டில் ஆதர்ஷ் அவன் உடன்பிறப்பைக் கண்கள் சுருக்கி முறைத்தபடியே இருந்தான்.


“டேய் ஏன்டா இப்படிப் பண்ற? தாத்தா கூட இங்க இல்ல, இந்தியாவில் இருக்க பிஸ்னஸ் எல்லாம் பார்க்க நான் அங்க இருந்தால் தான் சரியா இருக்கும்னு சொல்லி அங்க போயிட்டாரு. இப்ப நீயும் ஆபிஸ் வரமாட்டேன்னு சொன்னா என்னடா அர்த்தம்?” என்றான் கோவமாக.


“இங்க பாரு தர்ஷா… இதுல தப்பு எதுவும் என்மேல இல்ல… எல்லாம் உன்னோட அருமை லிட்டில் பிரின்சஸ்னால வர்ற பிரச்சனை தான்‌. உனக்கே தெரியும், அவ எம்மேல இன்னும் கோவத்தில் தான் இருக்கான்னு. நானே அதைக் குறைக்க என்னென்ன செய்யலாம்னு ஒவ்வொரு செகண்டும் யோசிச்சிட்டு இருக்கேன். கூடவே அவ இப்ப ப்ரெக்னன்டா வேற இருக்கா… இந்த சிட்டுவேஷன்ல எப்படி என்னால உன்னோட ஊர் ஊராகச் சுத்த முடியும், நீயே சொல்லு. எங்க போனாலும் எனக்கு மனசுல அவ ஞாபகம் மட்டும் தான் இருக்கும். வேற எதைப் பத்தியும் என்னால யோசிக்க முடியாது. சோ ஐ ஆம் வெரி வெரி சாரி… எம் பொண்டாட்டி மலை இறங்கி வந்து என்னோடு பேசும் வரைக்கும் இருக்கும் இடத்தை விட்டு அசைய மாட்டான் இந்த அதீஷன்.” என்று மார்தட்டிக் கொள்ள, அவன் பேசியதை எல்லாம் ஒளிந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த தன்விக்கு தான் வந்த சிரிப்பை அடக்குவது பெரும்பாடாகிப் போனது.


உண்மை தெரியாத ஆதர்ஷனுக்கும் அதீஷன் சொல்வது நியாயமாகவே தேன்றியது‌.


“ம்ம்ம்… நீ சொல்றதும் சரிதான். என்னன்னே தெரியல… அவளுக்கு இன்னும் உன்மேல கோவம் போக மாட்டேன்னு அடம் புடிக்கிது. முன்ன எல்லாம் அவ இப்படி இல்லடா… ரொம்பச் சமத்து.‌‌ புடிச்சவங்ககிட்ட அவ கோவம் அஞ்சு நிமிஷம் மேல நீடிக்காது. ஆனா‍., இப்ப அவளுக்கு என்ன ஆச்சுன்னே புரியல. உன்னோட பேசக்கூட மாட்டேன்னு இல்ல பிடிவாதம் புடிச்சிட்டுச் சுத்திட்டு இருக்கா…” என்றவன், ,“ஒருவேளை இது பிரக்னன்சி டைம்ல வர்ற ஹார்மோன் சேஞ்ச்னால இருக்குமோ?” என்று கேட்டான்.


அதைக் கேட்ட அதீஷன், “ம்ம்ம்! இருக்கும், இருக்கும். அதனால்தான் சொல்றேன், இப்ப நான் என் பொண்டாட்டி கூடவே இருக்கணும்னு… அப்பதான் அவ கோவம் குறையும். அவ மைண்ட் ரிலாக்ஸா இருக்க வேண்டியது இப்ப ரொம்ப முக்கியம். என்னோட பேசாம இருக்குறது, எனக்கு மட்டும் இல்ல, அவ அவளுக்கே கொடுத்துக்குற தண்டனை தான்.” என்றவன் சிரிக்காமல் பேசியது அவனுக்கே ஆச்சரியம் தான்.


‘அடப்பாவி தஷ்… என்னென்ன சொல்றான் பாருங்க… கம்பி கட்டும் கதை எல்லாம் சொல்றான் மக்களே’ என்று மைண்ட் வாய்ஸ் போட்டாள் தன்வி.


ஆதர்ஷனோ, “ஆமா… ஆமா. அவ ஹெல்த் இப்ப ரொம்ப முக்கியம், முடிஞ்சா அவகூட இருக்க தமிழ் தெரிஞ்ச பொண்ணு யாராவது கிடைக்குமான்னு பாரு… உன் கிட்டையும் பேசுறது இல்ல… அம்மாதான் இப்ப அவளுக்கு இருக்க ஒரே துணை… அவளுக்குப் பேச்சுத் துணைக்கு யாரும் இருந்தால் நல்லா இருக்கும். அப்படி யாரும் கிடைப்பாங்களான்னு பாரு… இங்கயே நம்ம வீட்டுல தங்குற மாதிரி இருந்தாலும் ஓகே தான்” என்றவன் அலுவலகம் சென்றுவிட ஆதர்ஷ் சென்றதை உறுதிப்படுத்திய தன்வி, மொபைலில் அதீஷனை தன் அறைக்கு வரும்படி மெசேஜ் அனுப்பி விட்டாள்.


அந்த மெசேஜைப் பார்த்து, குஷியான அதீஷன் மொபைலுக்கு முத்தம் வைத்துவிட்டு, வெளியே எட்டிப் பார்க்க ஆதர்ஷின் கார் அங்கு இல்லை.


உடனே விசிலடித்தபடியே தன்வி அறைக்கு அவன் வேக வேகமாகச் செல்ல, இவ்வளவு நேரம் அவன் செய்கைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தன்விக்கு தன்னவனின் தன் மீதான காதலை நினைத்துக் கன்னங்கள் சிவந்து விட்டது.


அவன் வரும் முன் அறைக்குள் சென்றவள் கதவுக்குப் பின்னால் நிற்க அதீஷன், “மை டியர் பொண்டாட்டி நான் வந்துட்டேன்.” என்றபடி உள்ளே வர பின்னால் நின்றவள், கதவைச் சாற்றிய அடுத்த நொடி, கைகளால் அவன் முதுகில் பட்டென்று ஒரு அடியை வைத்தாள். 


“ஸ்ஸ்ஸ்…” என்று கொஞ்சம் கூட வலிக்காத முதுகைத் தடவி விட்டவன், “எதுக்குடி ராட்சசி, இப்படி அடிச்ச? இதுக்கு தான் மெசேஜ் பண்ணிக் கூப்பிட்டியா?” என்றான் முறைப்பாக.


“ப்ப்பா… என்ன நடிப்புடா சாமி…” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தவள், “கீழ இவ்ளோ நேரம் நடிச்சது பத்தாதுன்னு மறுபடியும் நடிப்பைப் பாரு” என்றாள் மிரட்டல் தொனியில்.


“நடிப்பா? நான் எங்கடி நடிச்சேன்?” என்றான் அவள் கணவன் அப்பாவியாக‌‌.


“அவ்வவ்வா..‌.” என்று வாயில் கை வைத்தவள், “ப்ராடு… ப்ராடு புல்லா ப்ராடு” என்றவள், “இப்ப நான் அடிச்சது வலிக்குதுன்னு சொன்னது அண்டப்புளுகு, அதைவிட என்னோட பேசாமல் அப்படியே வாடி வதங்கிப் போயிட்டேன்னு ஆதுகிட்டச் சொன்னது ஆகாசப்புளுகு.‌‌..” என்றவள், “என்னமோ வருடக் கணக்கா என்னோட பேசாம இருக்க மாதிரி இல்ல சீன் போட்டீங்க கீழ… அப்ப தினமும் நைட்ல திருட்டுத் தனமா என் ரூம் ஜன்னல் வழியா உள்ள வந்து என் மடியில படுத்துட்டு விடிய விடியப் பேசுறது எல்லாம் என்ன கணக்காம்?” என்றவளுக்கு அவளையும் மீறி வெட்கம் வந்துவிட, அவன் முகத்தைப் பார்க்காமல் திரும்பி நின்று கொண்டாள்.


அவளின் வெட்கத்தையும் அதற்கான காரணத்தையும் உள்ளுக்குள் ரசித்தவன், பின்புறமாக அவளை அணைத்துக் கொண்டான். “ம்ம்ம்… எல்லாம் என்னோட விதி! அவனவன் தாலியைக் கட்டிட்டுப் பெத்துக்கலாமா? இல்ல புள்ளையைப் பெத்துட்டுக் கட்டிக்கலாமானு ஜாலியா சுத்திட்டு இருக்கும்போது… நான் தாலியும் கட்டிட்டு புள்ளையும் வந்த பிறகும், இப்படி நைட்ல ஜன்னல் வழியா எகிறிக் குதிச்சு தான் என் பொண்டாட்டி புள்ளையப் பார்க்க முடியுது.” என்று ஏக்கப் பெருமூச்சுவிட அவளை அணைத்திருந்த கைகளை எடுத்து முத்தமிட்டவள்,  


“எல்லாம் ஆதுக்கு ஒரு நல்ல லைஃப் அமையும் வரை தானே… அப்புறம் எல்லாம் சரியாகிடும்” என்றாள் அவன் மனம் அறிந்து.


“ம்ம்ம்… எனக்கும் புரியுதுடி… ஆனா, நீ ப்ரெக்னன்ட்டா இருக்கும் இந்த டைம்ல எனக்கு உன்கூடவே இருக்கணும்னு ஆசையா இருக்குடி.


உன்னோட கையைப் புடிச்சிட்டு பாப்பாவோட ஹார்ட் பீட் சத்தம் கேக்கணும், அது முதல் முதல்ல உள்ள அசையும் மொமென்ட்டை உன்னோட சேர்ந்து நானும் உணரணும், நான் உன் வயித்துல கிஸ் பண்ணும்போது அது என்னைஎட்டி உதைக்கணும்” என்று அவன் அடுக்கிக் கொண்டே போக… அவனையே விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தன்வி. 


அவனுக்கு குழந்தைமீது ஆசை என்று அவளுக்குத் தெரியும்தான். ஆனால், இந்த அளவுக்கு அவனின் குழந்தையை எதிர்பார்க்கிறான் என்று அவள் நினைக்கவில்லை.


அந்த ஆனந்த அதிர்ச்சியோடு, “பாப்பாவுக்காக இந்த அளவுக்கு ஏங்குறீங்களா தஷ்?” என்று கேட்டாள் வியப்பாக.


அவன் சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன், “பாப்பாவை மட்டும் இல்லடி, அதைச் சுமந்துட்டு இருக்க அதோட அம்மாவுக்காகவும் தான் நான் ரொம்ப ஏங்கிப் போயிருக்கேன். அன்னைக்குச் சொன்ன மாதிரி, எந்தக் கஷ்டமான சூழ்நிலையையும் நீ தனியா கடந்து வாராமல் எப்பவும் நான் உன் கூடவே இருக்கணும்னு ஆசைப்படுறேன்டி… ஆனா, இப்ப இருக்கற சிட்டுவேஷன்ல எங்க அதைச் செய்ய முடியாமல் போயிடுமோன்னு பயமா இருக்குடி” என்றவன் குரல் கரகரத்தது‌.


“ஏய்! என்னப்பா இது… நீங்க எப்பவும் என் கூடத்தானே இருக்கீங்க… சும்மா ஆதுக்காக சண்டை போடுற மாதிரி நடிச்சிட்டு இருக்கோம். எப்பவாவது நம்மால முடியாத சூழ்நிலை வரும்போது ஆதுகிட்ட உண்மையைச் சொல்லிட வேண்டியது தான். இதுக்கு ஏன் ஃபீல் பண்றீங்க” என்றவளின் முகம் பார்த்தவன், 


“ஐ மீஸ் யூ சோ பேட்லிடி” என்று சொல்ல, அவன் குரலே சொன்னது அவன் மனது அவளை எந்த அளவுக்குத் தேடி இருக்கிறது என்று.


‘கடவுளே! இவருக்காகவாவது ஆது சீக்கிரம் தர்ஷினி அக்காவைக் கல்யாணம் பண்ணிக்கணும்’ என்று இறைவனை வேண்டிக் கொண்டவள், தன்னவனை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.


இங்கு அலுவலகம் வந்த ஆதர்ஷ் தன் அறையை நோக்கிச் சென்றான், அங்கு அவனுக்காகக் காத்திருக்கு அதிர்ச்சியைப் பற்றி அறியாமல்.