இதயம் 2

 இதயம் 2


தர்ஷினியின் முகம் வாடி இருந்ததைப் பார்த்த அமிர்தா எழுந்து அருகில் சென்று அமர்ந்தவர், அவள் வலக்கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்து அழுத்திக் கொண்டு, "என்னம்மா ஆச்சு? ஏன் முகம் வாடிப் போச்சு?" என்று அன்பாகக் கேட்க, அவர் அரவணைப்பில் தர்ஷினிக்கு உள்ளம் நெகிழ்ந்து போனது.


"நீங்க நினைக்கிறது நடக்காதுமா" என்றாள் தொண்டை அடைக்க.


அதைத் கேட்டுப் பதறிய அமிர்தா, "ஏம்மா, நீ தர்ஷனைப்பத்தி தப்பா எதுவும் நினைக்குறயா? அவன் உனக்குப் பொருத்தம் இல்லைன்னு நினைக்குறயா?" என்று தர்ஷினி சொன்ன வார்த்தையின் தாக்கத்தில் அவர் தாய்‌ மனம் துடிக்க, அடுத்த நொடி அவரும் தானும் ஒரு பெண்ணென்று நினைவு வர தர்ஷினிக்காக யோசித்தவர், அவளுக்கும் அவளின் திருமணத்தைப் பற்றி கனவும், எதிர்பார்ப்பும் இருக்கும் என்று நினைத்து, "பரவாயில்லமா… இது உன்னோட வாழ்க்கை, உன்னோட முடிவு. இதைப்பத்திப் பேசவோ கேள்வி கேக்கவோ எங்களுக்கு எந்த உரிமையும் இல்ல… உன்னோட சந்தோஷம் தான் முக்கியம். தர்ஷன் பத்தி தெரிஞ்சும் அவனுக்கு உன்னைப் பொண்ணு கேட்டது தப்புதான். என் பையனுக்கு கொடுத்து வைக்கலன்னு நினைச்சுக்குறேன்." என்றார் கரகரத்த குரலில்.


"இல்லம்மா, சத்தியமா நீங்க நினைக்குற மாதிரி எதுவும் இல்ல. நான் சொன்னதை நீங்க சரியா புரிஞ்சிக்கல…" என்று பதறியவள், "எங்க தர்ஷன் சாருக்கு என்னமா குறைச்சல்? அழகை விடுங்க, அவரோட அந்த அன்பான மனசு யாருக்குமா வரும். நான் அவர் கீழ வேலை செய்யுற பொண்ணு… நான் அவரை விரும்புறேன்னு தெரிஞ்சதும், அவர் நினைச்சிருந்தால் போடி வெளியன்னு என்னை வேலையை விட்டு அனுப்பி இருக்கலாமே… ஆனா, அவர் அப்படிச் செய்யலியே, நான் அவரை மறக்கணும்னு அவரைப்பத்தி யாருக்கும் தெரியாத விஷயத்தை எனக்காக, என் வாழ்க்கைக்காக சொன்னவரு அவரு… அவரை விடவா நல்லவன் எனக்கு ஒருத்தன் கிடைச்சிடப் போறான்" என்றவளின் குரலில் ஆதர்ஷனைத் தவிர வேறு யாருக்கும் அவள் மனதில் இடம் இல்லை என்ற உறுதி அப்பட்டமாகத் தெரிந்தது. 


அதைக் கேட்டு மகிழ்ந்த தன்வி, "அப்ப ஏன் வினிக்கா இது நடக்காதுன்னு சொல்றீங்க?" என்று கேட்டாள் பதில் தெரிந்து கொண்டே.


"ம்ம்ம்" என்று சின்னதாகச் சிரித்த தர்ஷினி, "பதில் தெரிஞ்சிட்டே கேள்வி கேக்குறயே தன்வி" என்று விரக்தியாகச் சொன்னவள், "சத்தியமா தர்ஷன் சார் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கவே மாட்டாரு. நான்னு இல்ல, வேற எந்தப் பெண்ணையும் சரி" என்றவள் ஒரு நிமிடம் நிறுத்த, "வேற எந்த ஆணையும் அவர் வாழ்கையில் ஏற்க மாட்டாரு. அது உனக்கு நல்லாவே தெரியும் இல்ல. அவரைப் பொருத்த வரை அவர் வாழ்கையில் ரெண்டே ரெண்டு பொண்ணுங்களுக்கு தான் இடம். ஒண்ணு அவர் அம்மா, அடுத்தது நீ. உங்க ரெண்டு பேரைத் தவிர அவர் வாழ்கையில் எந்தப் பொண்ணும் நுழைய முடியாது" என்றாள் கண்ணீரோடு.


தன்வி இழுத்து மூச்சு விட்டவள், "நீங்க சொன்ன அந்த ரெண்டு மூணாகி ரொம்ப வருஷம் ஆகிடுச்சு" என்றாள் சிறு புன்னகையுடன்.


தன்வி சொன்னது புரியாமல் தர்ஷினி முழிக்க, "அவ சொல்றது உண்மைதான் தர்ஷினி. ஆதர்ஷ் லைஃப்ல அவனுக்கு நெருக்கமான மூணாவது பொண்ணும் இருக்கா!" என்று தன்வியை ஒரு அர்த்தப் பார்வை பார்த்துவிட்டுத் திரும்பி தர்ஷினியைப் பார்த்து, "அது வேற யாரும் இல்ல…" என்று சிறு இடைவெளி விட்ட அதீஷன், "நீங்க தான் அந்தப் பொண்ணு" என்று சொல்ல, தர்ஷினியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொள்ள, அவள் உள்ளுக்குள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.


"நீ… நீங்க என்ன சொல்றீங்க?" என்று கேட்டாள் அவன் சொன்னதை நம்ப முடியாமல்.


"ஆமா தர்ஷினி‌‌… நீங்க சொன்னது உண்மைதான். அவன் வாழ்க்கையில் எந்தப் பொண்ணு நுழைய முடியாது… பிகாஸ், அவனுக்கு ஏற்பட்ட காயம் அப்படி" என்றவன் குரலில் ஒருவித வலியை உணர்ந்த தர்ஷினி, 


"ஏன்? என்னாச்சு அவருக்கு… யாரு அவரைக் காயப்படுத்தினது? பூ மாதிரி மனசு என் தர்ஷனுக்கு. அவரை யார் கஷ்டப்படுத்தினது" என்று பதறிவள், தன்னையும் அறியாமல் சொன்ன என்னோட தர்ஷன் என்ற வார்த்தையைக் கேட்ட மூவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.


அதீஷன் இறுகிய முகத்துடன், இதுவரை யாரும் அறியாத ஆதர்ஷனின் கடந்த காலத்தின் சில பக்கங்களைச் சொல்லத் தொடங்கினான்.


"அம்மாவும் நானும் அவனை விட்டு வந்த பிறகு அவன் ரொம்பத் தனிமையை உணர ஆரம்பிச்சிட்டான். தன்வியோட அவன் விளையாடும் நேரம், தன்வி அம்மாகூட இருக்கும் நேரம் தான் அவனைவிட்டு அந்தத் தனிமை போகும். அவங்க இல்லாத நேரம் எல்லாம் அவனோட தனிமை அவனை ரொம்பப் பயமுறுத்த ஆரம்பிச்சிடுச்சு. என்னதான் தாத்தா அவன்மேல அன்பா இருந்தாலும் அது அம்மா கூட இருக்கற மாதிரி வராதுன்றது அவருக்குப் புரியல. இஷ்டப்பட்ட பொருளை வாங்கித் தர்றது, புடிச்ச சாப்பாடு கொடுக்குறது, வசதியா வாழ வைக்கிறது, பெரிய ஸ்கூல்ல சேர்த்தால் அவன் சந்தோசமா இருப்பான்னு நினைச்சவருக்குத் தெரியல, அது அவனோட இறுக்கத்தை ஒரு பர்சண்ட் கூடக் குறைக்காதுன்னு" என்று விரக்தியாகச் சிரித்தவனின் கண்கள் கலங்கி இருந்தது.


"அந்தச் சின்ன வயசுல தர்ஷன் ரொம்பக் கஷ்டப்பட்டான் தர்ஷினி. வளர வளர நத்தை மாதிரி அப்படியே தன்னைத் தன்னோட கூட்டுக்குள்ள சுருக்கிக்கிட்டான். அப்படியே கொஞ்ச வருஷம் போச்சு, அப்ப அவன் +1 படிச்சிட்டு இருந்தான். குழந்தையும் இல்லாம வயசுப் பையனும் இல்லாமல் ரெண்டுக்கும் இடைப்பட்ட காலம் அது. அந்த வயசுக்கே உண்டான ஆசைகள், மாற்றம், பொண்ணுங்களைப் பாத்தால் எக்சைட்மென்ட்னு எல்லா இயல்பான உணர்வுகளும் அவனுக்கும் இருந்துச்சு" என்று சொல்ல, தர்ஷினியோடு சேர்ந்து தன்வியும் அதீஷன் சொல்வதைப் கேட்டவள் கண்கள் யோசனையில் சுருங்க, "அப்போ யாரோ ஒரு பொண்ணு ஆது மனசையும், பொண்ணுங்க மேல இருக்க நம்பிக்கையையும் ஒடச்சி இருக்கா… ரைட்?" என்று கேட்க, அதீஷன் இமைகளை அழுத்தி மூடித் திறந்தவன் தலை ஆமாம் என்று ஆடியது.


"யார் அந்த நாய்? என் ஆது மனசை ஒடச்சவ?" எங்க இருக்கா அவ? அவளை நான் சும்மா விடமாட்டேன்" என்று தன்வி குதிக்க, தர்ஷினிக்கு கூட அந்த நேரம் அந்தப் பெண் கண்முன் நின்றால் அடித்து நொறுக்கும் அளவுக்குக் கோவம் வந்தது.


தன்வி முகத்தைப் பார்த்த அதீஷன், "அவ இப்ப உயிரோட இல்ல… மூணு வருஷம் முன்ன அவளும், அவ ஹஸ்பெண்ட்டும் போன கார் ஆக்சிடென்ட் ஆகி ஸ்பாட்லயே அவ செத்துட்டா" என்றவன் குரலில் சிறிதும் வருத்தம் இல்லை.


என்னதான் அந்த பெண் மீது கோவம் இருந்தாலும், ஒரு உயிர் போனதை நினைத்துச் சந்தோஷப்பட, பெண்கள் மூவராலும் முடியவில்லை‌. 'ம்ம்ம், அவ செஞ்ச தப்புக்கு கடவுள் தண்டனை கொடுத்துட்டார்' என்று மூவரும் அமைதியாக அதீஷனைப் பார்த்தனர், மேலே சொல் என்பதைப் போல்.


"அந்தப் பொண்ணு பேரு சித்ரா. +1 ல தான் தர்ஷன் கிளாஸ்ல ஜாயின் பண்ணா… நம்ம மாதிரி அந்தப் பொண்ணும் பெரிய வசதியான ஃபேமிலி தான். முதல்ல இவன் கூட அவ பழகவே இல்ல. அப்ப இவன் ரொம்ப ரிசர்வ் டைப். சோ, இவனும் அவளைக் கண்டுக்கல… அதிகம் யாரு கூடவும் பேச மாட்டான். அவன் உண்டு அவன் படிப்பு உண்டுன்னு இருப்பான். எப்பவும் ஸ்கூல்ல அவன் தான் பாஸ்ட்… அதுதான் அவனோட லைஃப்ல பெரிய பிரச்சனையா வரப் போகுதுன்னு அப்ப அவனுக்குத் தெரியல‌… 


"அந்தக் கிளாஸ் பொண்ணுங்க மட்டும் இல்லாம, அந்த ஸ்கூல்ல இருந்த நிறையப் பேருக்கு இவன் மேல் ஒரு க்ரஷ். ஆனா, இவன் யாரையும் பாக்க மாட்டான். அது அவனுக்குப் பொண்ணுங்களை புடிக்காதனால இல்ல. அவனுக்கு அவங்ககிட்ட எப்படிப் பழகணும்னு தெரியாதனால. தன்வியோட இயல்பா ஒட்ட முடிஞ்ச அவனால, வேற யாரோடவும் ஒட்ட முடியல. அதுக்கு இன்னொரு காரணம் அவன் நல்லா படிச்சால், மேல் படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்புறேன்னு தாத்தா சொல்லி இருந்தாரு. அப்படி அவனை இங்க அனுப்பினால், அம்மாவோட இருக்கலாம்னு ஆசை. அது அவனை படிப்பைத் தவிர வேற எதைப் பத்தியும் யோசிக்க விடல… ஆனா, அது மத்தவங்களுக்குப் புரியல. அவன் பெரிய பணக்காரன், அதான் ஆட்டிட்யூட் காட்றான்னு அவனைத் திட்ட ஆரம்பிச்சாங்க. பட், தர்ஷன் அதைப்பத்தி எல்லாம் காதுல வாங்காம படிக்க ஆரம்பிச்சான். அந்த டைம் நடந்த எக்ஸாம்ல இவன்தான் கிளாஸ் ஃபர்ஸ்ட், அந்தப் பொண்ணு சித்ரா ரெண்டாவதா வந்தா…" என்று இழுத்து மூச்செடுத்தவன், "அந்தப் பொண்ணுக்கு இயல்பிலேயே பிடிவாதம், பணம் இருக்குன்ற தைரியம், அதோட ஸ்கூல்லியே தான் தான் அழகுன்ற திமிரு, கூடவே இதுவரை படிப்பு, ஸ்போர்ட்ஸ்னு எல்லாத்துலயும் அவதான் ஃபர்ஸ்ட் வருவாளாம். ஆனா, அந்த டைம் முதல் முதல்ல அவ தர்ஷன்கிட்ட படிப்புல, இன்னும் ரெண்டு மூணு விஷயத்தில் தோத்துப் போய்ட்டா… அவ ப்ரண்ட்ஸ் வேற இவனைப்பற்றி தப்புத் தப்பாச் சொல்லி இருக்க, இவனை அவ பின்னாடி சுத்த வைக்குறேன்னு பெட் கட்டி இவனை டார்கெட் பண்ணி இருக்கா. முதல்ல படிப்புல டவுட் கேக்குற மாதிரி அவனோட பேச ஆரம்பிச்சு அப்படியே அவனோட பிரண்ட் ஆகிட்டா… முதல் முதலா ஒரு பொண்ணு தேடி வந்து தன்கிட்டப் பேசினது, அந்த வயசுக்கே உண்டான ஆர்வம் இவனை அவகிட்ட நெருங்க வச்சிருக்கு…" என்றவன் அமைதியாகிவிட, "அப்புறம் என்னாச்சு சார்?" என்று ஒரு பரிதவிப்போடு கேட்டாள் தர்ஷினி.


"ம்ம்ம்… என்னாகும்? அவ எதை நினைச்சு தர்ஷனை நெருங்கினாளோ அது நடந்துச்சு. அவன் கவனம் புடிப்புல இருந்து குறஞ்சு அவமேல அதிகமாச்சு… கொஞ்ச கொஞ்சமா தர்ஷனை அவளோட கன்ட்ரோல்ல அந்தப் பொண்ணு கொண்டு வந்துட்டா… அப்பதான் ஒருநாள்..." என்றவனின் குரல் இறுகிவிட முகம் கோவத்தில் சிவந்து இருந்தது‌.


"என்னாச்சு தஷ்?" என்று கேட்ட தன்விக்கும் இதயம் தாறுமாறாகத் துடிக்கத்தான் செய்தது.


"ஒருநாள் தர்ஷனைப் படிக்க அவ வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கா… ரெண்டு பேரும் அவ ரூம்ல தான் இருந்திருக்காங்க… அப்ப இவ அவன்கிட்ட அவனை லவ் பண்றேன்னு சொல்லி இருக்கா… இவனுக்கும் அந்தப் பொண்ணை பிடிச்சிருந்தாலும், படிக்கிற வயசுல இதெல்லாம் தப்புன்னு சொல்லி இருக்கான். ஆனா, அந்தப் பொண்ணு இவனை விடல… நீ இல்லைன்னா நான் செத்துப் போயிடுவேன்னு சொல்லிட்டே இவனைக் கட்டிப் புடிச்சிருக்கா, அவ அப்படிச் செய்யவும் இவனுக்கு என்ன பண்றதுன்னு புரியாம இருந்த நேரம், அந்தப் பொண்ணோட அப்பா உள்ள வர, அவ அப்படியே பிளேட்டை திருப்பிப் போட்டுட்டா…" என்று சொல்லத் தன்வியும், தர்ஷினியும், "என்ன!" என்று அதிர அமிர்தா கண்களை துடைத்துக் கொண்டார்.


"ஆமா… அவன் இவளை லவ் பண்றதா சொன்னதாவும், இவ அதெல்லாம் தப்புன்னு சொல்லி அவன் லவ்வை ரிஜெக்ட் பண்ணதாவும். அந்தக் கோவத்தில் அவகிட்ட இவன் மிஸ்பிஹேவ் பண்ணதாவும் சொல்லிட்டா… அவ அப்பாவும் நடந்தது என்னன்னு தெரியாம, "ப்ரண்டுன்னு நம்பி வீட்டுக்குள் விட்டா இப்படிப் பண்ணிட்டேன்னு சொல்லி, அவனை அடிச்சு வீட்டை விட்டுத் துரத்தி இருக்காரு. கூடவே ஸ்கூல்லயும் ரிப்போர்ட் பண்ணிட்டு தாத்தா கிட்டயும் சொல்லிட்டாரு…" என்றான் தாடை இறுக.


"பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் தெரியாத இவனெல்லாம் ஒரு அப்பா... முகத்தைப் பார்த்தா தெரிய வேணாம். யாரு தப்பு? யாரு சரின்னு... அதெப்படி அந்த மேனா மினுக்கி சொன்னதை நம்பி என் ஆதுமேல கையை வைப்பான் அந்த ஆளு" என்ற தன்வியின் கண்களில் இருந்து கண்ணீர்த்துளி உருண்டு விழ, தர்ஷினியோ பல்லைக் கடித்து தன் அழுகையைக் கட்டுப் படுத்தியபடி இருந்தாள்.


"வீட்டுக்கு வந்த தர்ஷன்கிட்ட தாத்தா என்னாச்சுன்னு கேட்டிருக்காரு… அவன் நிமிர்ந்து தாத்தா முகம் பார்க்க, அந்த முகத்தில் அப்படி ஒரு வலி… தன் பேரன் தப்புப் பண்ணி இருக்க மாட்டான். ஒருவேளை, அப்படி எதுவும் நடந்திருந்தால் தன்னோட முகத்தை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் அவனுக்கே இருக்காதுன்னு தாத்தா உறுதியாக நம்பினாரு… இருந்தாலும் என்ன நடந்துச்சின்னு தெரிஞ்சிக்க அவன்கிட்டக் கேக்க, ஒண்ணுமே சொல்லாம அமைதியா அவன் ரூமுக்குப் போயிட்டான். அன்னைக்கு சனிக்கிழமை. மறுநாள் ஞாயிற்றுக் கிழமை… சோ திங்கள் கிழமை ஸ்கூல் மீட்டிங்குன்னு தாத்தாவை வரச்சொல்லி இருந்தாங்க. ஞாயிறு புல்லா தர்ஷன் ரூம் விட்டு வெளிய வரவே இல்ல… தாத்தா எவ்ளோ கூப்பிட்டும் அவன் கதவைக் கூடத் திறக்கல. அப்படியே அந்தநாள் போக, மறுநாள் கட்டாயப்படுத்தி தர்ஷனோட ஸ்கூலுக்குப் போறாரு தாத்தா.


அன்னைக்கு ஸ்கூல் போர்ட் மெம்பர்ஸ் முன்னாலயும் அந்தப் பொண்ணு தர்ஷன் தான் தன்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணதா மறுபடியும் சொல்லி இருக்கா… ஆனா, தாத்தா அவகிட்ட நீ சொல்றது சுத்தப் பொய்… என் பேரன்‌ உன்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணி இருக்க மாட்டான். நீதான் வேணும்னே அவன்மேல பழி போடுறேன்னு சொல்ல, அவ அப்பாக்கும் தாத்தாக்கும் பயங்கர சண்டை. கடைசில தாத்தா, உன் பொண்ணுக்கு மனநிலை சரியில்ல. அவ பைத்தியம்னு சொல்ல, பெரிய பிரச்சினை ஆகிடுச்சு. அப்பதான் தாத்தா அந்தப் பொண்ணோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் போர்ட் மெம்பர்ஸ்கிட்டக் காட்டி, "இதுக்கு முன்னயும் இந்தப் பொண்ணு படிச்ச ஸ்கூல்ல இந்த மாதிரி நிறையத் தப்பு அவ பண்ணி இருக்கா… அப்புறம்தான் அவளுக்கு மனநிலை சரியில்லன்னு இவங்க டாக்டரைப் பாத்திருக்காங்க... இவ தப்பான பொண்ணு. என் பேரன் மேல எதுக்காகவோ வஞ்சம் வச்சி இப்படிப் பழி போடுறான்னு சொல்ல அந்தப் பொண்ணு, வெறி புடிச்ச மாதிரி கத்திட்டே ஓடிவந்தவ, அங்கிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து தாத்தாமேல தூக்கி அடிச்சிட்டா. நல்லவேள, அவருக்கு அடி ஒண்ணும் படல. ஆனா, அப்ப அவ "ஆமா… வேணும்னு தான் அவன்மேல நான் பழி போட்டேன், எல்லாத்துலயும் நான் தான் ஃபர்ஸ்ட்டா இருக்கணும், இருப்பேன். அதை டிஸ்டர்ப் பண்ற மாதிரி இவன் இருந்தான். அதான் இவனை பிரண்டாக்கி சரியா படிக்க விடாமல் பண்ணேன். ஸ்கூல்ல எல்லாப் பொண்ணுங்களுக்கும் இவன்தான் க்ரஷ்… சோ, இவனை என்னோட‌ பாய்பிரண்ட் ஆக்கி, இவனை என் பின்னால சுத்த வச்சு, அவங்க முன்னால கெத்தா இவன் என்னோட பாய்பிரண்ட்னு சொல்லனும்னு ஆசைப்பட்டேன்… அதான், இவர்கிட்ட ப்ரபோஸ் பண்ணேன். ஆனா, இவன் ஒத்துக்கல… அதான், இவன் என்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணதா சொன்னேன்" என்று சொன்ன அடுத்த கணம் அவள் கன்னத்தில் அறைந்திருந்தார் அவளின் அப்பா.


"ச்சீ நாயே‌… என்ன அசிங்கமான வேலை பார்த்திருக்க நீ… அப்ப இதுவரை மத்த ஸ்கூல்ல நடந்ததா நீ சொன்னதெல்லாம் பொய்தான் இல்ல…" என்று மீண்டும் அறைந்தவர், "பெத்த பொண்ணுன்னு உன்னை நம்பினதுக்கு… இப்படி என்னை அசிங்கப் படுத்திட்டியேடி…" என்றவர் திரும்பி ஆதர்ஷனைப் பார்க்க அவனோ சித்ராவையே வெறித்துப் பார்த்தபடி நின்றான்.


ஆதர்ஷன் முன்பு மண்டி போட்டு அமர்ந்த சித்ராவின் தந்தை, அவன் கைகளை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டவர், "என்னை மன்னிச்சிடுபா… இந்த நாய் சொன்னதைக் கேட்டு நான் உன்னை அடிச்சிட்டேன். எ..என்னை மன்னிச்சிடு" என்று தழுதழுத்த குரலில் சொல்ல, ஆதர்ஷன் எதுவும் பேசாமல் அந்த அறையில் இருந்து வெளியேறி விட்டான்.


இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தன் மகளின் மனநிலை பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசுவார்கள் என்று ஒரு தந்தையாகச் சித்ராவின் தந்தை, ஆதர்ஷனின் தாத்தா வீரராகவனிடம் சொல்ல, அவரும் ஒரு தந்தை என்ற முறையில் அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டவர், தன் பேரன் இனிமேல் இங்கிருக்க வேண்டாம் என்று முடிவு செய்து அவனைப் படிக்க அமெரிக்கா அனுப்பி வைத்தார்.


அதீஷன் நடந்ததை எல்லாம் சொல்லி முடிக்க, தன்விக்கு அவள் ஆதுவை நினைத்துக் கண்கள் கலங்க, தர்ஷினிக்கோ தன்னவனின் மனது எந்தளவுக்குக் காயம் கொண்டிருந்தால் தன் வாழ்க்கையில் பெண்களுக்கே இனி இடமில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பான்… அந்தச் சித்ரா மட்டும் ஆதர்ஷனின் வாழ்வில் வராமல் இருந்திருந்தால், இன்நேரம் தன்னவன் தனக்கென்று ஒரு குடும்பம், மனைவி, குழந்தைகள் என்று சந்தோஷமாக இருந்திருப்பானே, என்று வருந்திய சமயம், அந்த மனைவி இடத்தில் அவள் உருவத்தைக் கற்பனை செய்து பார்த்து சிலிர்த்தது மனது.