இணை சேருமோ இதயம் 1

இணை சேருமோ இதயம்






இந்தக் கதை என்னுடைய 'விழி வழி காதல் நுழைந்ததடி' கதையில் வரும் ஆதர்ஷன் மற்றும் அவனை ஒருதலையாகக் காதலிக்கும் தர்ஷினியின் கதை‌. 


இந்தக் கதைக்குள் போவதற்கு முன் எனது, 'விழி வழி காதல் நுழைந்ததடி' கதையின் ஒரு சின்னச் சுருக்கம். அந்தக் கதை படிக்காமல் இந்தக் கதை படித்தாலும் உங்களுக்கு கதை புரியும்.


முன் கதைச் சுருக்கம்… 


இந்தியாவின் ஒரு பெரிய தொழில் நிறுவனத்தின் வாரிசு ஆதர்ஷன். இப்போது குடும்பத்தின் தொழிலை எடுத்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறான். அவனுடைய சின்ன வயதில் இருந்து அவன் வீட்டில் வளரும் தன்வி. ஆதர்ஷன், தன்வி இடையே ஒரு அழகான நட்பு இருக்க, ஆதர்ஷனின் தாத்தா வீரராகவன், இவர்களின் நட்பை உறவாக்க விரும்புகிறார். ஆதர்ஷ், தன்வியிடம் இதைப்பற்றிச் சொல்ல‌.‌.. இருவருமே திருமணத்தை மறுக்கின்றனர். வீரராகவன் உறுதியாக, இருவரும் யாரையும் காதலிப்பதாக இருந்தால் அவர்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்… இல்லையென்றால் அவர்கள் இருவருக்கும் திருமணம், என்றும் அதற்கு மூன்று மாதங்கள் தான் அவகாசம் என்றும் குண்டைத் தூக்கிப் போட, ஆதர்ஷ் வேறு வழியின்றி, தன்வியிடம் தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்கிறான். 


அவன் வெளிநாட்டில் படிக்கும்போது அங்கு அவனோடு படிக்கும் நண்பன் ஆலனை அவன் விரும்புவதாகச் சொல்ல, தன்விக்கு தலையில் இடி விழுந்தது போல் ஆனது. அதுவரை அவளின் ஆதுவைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொன்னவள், அவனைப்பற்றி உண்மை தெரிந்ததும் அவனுக்காகவும், அவனைப் பற்றித் தாத்தாவுக்குத் தெரிந்தால் அவர் தாங்க மாட்டார் என்றும் நினைத்து ஆதர்ஷனைத் திருமணம் செய்யச் சம்மதம் தெரிவிக்க, அவளின் முடிவில் அதிர்ந்த ஆதர்ஷன் அவளை அடித்து விடுகிறான்.


என் கௌரவத்தைக் காப்பாற்ற உன் வாழ்க்கையை வீணாக்க நான் தயார் இல்லை என்று சொல்ல, எவ்வளவோ பேசிப் பார்த்த தன்வி, கடைசியாகத் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்லி அவனை மிரட்டுகிறாள். அதில் மனமுடைந்த ஆதர்ஷ் அமெரிக்காவுக்குச் சென்றவன், தன்னைப் போலவே இருக்கும் தன் இரட்டைப் பிறவி தம்பி அதீஷனைத் தன்வியைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறான். முதலில் மறுக்கும் அதீஷன், தன்வியைப் பார்த்தபின் அவளிடம் காதல் கொண்டு அவளை மணந்தும் கொள்கிறான். ஆனால், அவளிடம் தான் யாரென்ற உண்மையை மட்டும் மறைத்து வைக்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் தன்வியின் உயிருக்கே ஆபத்து வரும் என்ற நிலையில் அவளை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் தன் தாயை அவளுக்கு அறிமுகம் செய்து வைப்பவன், ஆதர்ஷன் முன்னிலையிலேயே அவளிடம் இதுவரை மறைத்து வைத்த அனைத்து உண்மைகளையும் சொல்கிறான். அதைக்கேட்டு முதலில் கோபம் கொள்ளும் தன்வி பிறகு அனைத்தும் தன்னுடைய நல்வாழ்வுக்காக தான் எனச் சமாதானம் ஆனவளிடம், ஆதர்ஷன் அவளின் கோபத்தைத் தணிப்பதற்காய் என்ன கேட்டாலும் அதை நிறைவேற்றி வைக்கிறேன் என்று ஒரு வாக்கைக் கொடுக்க, அதை வைத்து அவனை வீழ்த்தும் திட்டம் ஒன்றைத் தீட்டினாள் தன்வி. 


அது ஆதர்ஷனின்‌ திருமணம்.


அதற்கு ஆதரவாகத் தன்னவனையும், தன் மாமியாரையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டு, எட்டு வருடங்களாக ஆதர்ஷை ஒரு தலையாகக் காதலிக்கும் தர்ஷினியைச் சந்திக்கிறாள். அவளுக்கு ஏற்கனவே ஆதர்ஷ், ஆலன் இருவரின் காதல் பற்றித் தெரிந்திருக்க, அவளின் முடிவு என்னவாக இருக்கும்? ஆதர்ஷனை அவள் ஏற்பாளா? அவள் சம்மதித்தாலும் ஆதர்ஷ் இந்த உறவை ஏற்பானா?


ஆதர்ஷ் பற்றிய உண்மைகள் அனைத்தும் தெரிந்தும் இந்த நொடி வரை அவனைக் காதலிக்கும் தர்ஷினியின் காதல் வெற்றி பெற்றுக் கல்யாணத்தில் முடியுமா? அவள் காதல் அவனை மாற்றுமா? 


பதிலை இந்த 'இணை சேருமோ இதயம்' கதையில் தெரிந்து கொள்ளுங்கள்.

இதயம் 1


அழகாய் விடிந்த அந்த காலைப் பொழுதில், பறவைகளின் கீச் கீச்சென்ற ஒலியைக் கேட்டு, இதழில் மெல்லிய புன்னகையுடன் மெதுவாகக் கண் விழித்தாள் தர்ஷினி.


கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்தபடியே படுக்கையை விட்டு எழுந்தவள், அவளின் அறையின் பால்கனிக்குச் சென்று அங்கிருந்த பறவைக் கூண்டைப் பார்த்தாள். பல வண்ண நிறங்களில் இருந்த லவ் பேர்ட்ஸை ஆசையாகப் பார்த்து, "குட் மார்னிங் குட்டிஸ்" என்று உற்சாகமாகச் சொல்ல அவைகளும் தன் கீச்சுக் குரலில் சத்தம் எழுப்பியது. 


கடந்த பல வருடங்களாக இந்தப் பறவைகள் தான் தர்ஷினியின் நட்பு, உறவு, சந்தோஷம் எல்லாம். காலை எழுந்தவுடன் அவைகளிடம் கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டுச் செல்பவள், இரவு அன்று நடந்த அனைத்தையும் அவைகளிடம் பகிர்ந்து கொண்ட பிறகே உறங்கச் செல்வாள். ஆதர்ஷனை அடுத்து அவளின் வாழ்க்கையில் முக்கியமான உயிர்கள் இவைகள் தான். 


அன்றும் கண் விழித்தவுடன் அவைகளிடம் கொஞ்ச நேரம் பேசியவள், அவைகளுக்கான தண்ணீரையும் உணவையும் சரி பார்த்து, வெளியே சுற்றித் திரியும் பறவைகளுக்காகத் தண்ணீரையும், உணவையும் அவைகளுக்கான இடத்தில் வைத்து விட்டுக் குளியலறைக்குள் புகுந்தவள், அரைமணி நேரத்தில் தயாராகி வந்து அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் அமர்ந்தாள்.


இயற்கையிலேயே அவள் அழகிதான். ஆனால், ஏனோ இன்று அவள் முகம் பிரகாசமாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அதற்குக் காரணம் இன்று அவள், அவளின் ஆதர்ஷனைச் சந்திக்கப் போகிறாள். இன்று மட்டும் அல்ல, இனிமேல் அவனுடனேயே பயணிக்கப் போகிறாள்… அவன் வாழ்க்கைத் துணையாக அல்ல… அவனின் தொழிலில் அவனுக்குத் துணையாக. இனி தினமும் அவன் முகத்தைப் பார்க்கலாம் என்று நினைக்கும் போது அவளுக்கு நெஞ்சமெல்லாம் தேனாய் இனித்தது.


"போதும் ஆதர்ஷ்… எனக்கு இது போதும்… தினமும் உங்க முகத்தைப் பார்க்குறதே எனக்குப் போதும்." என்று நினைத்தவள், கொஞ்ச நாட்களுக்கு முன் தன்வி மற்றும் அதீஷனிடம் பேசியதை நினைத்துப் பார்த்தாள்.


தர்ஷினியின் மனது முழுவதும் ஆதர்ஷ் தான் நிறைந்திருக்கிறான். ஆலன் என்ற ஒருவன் ஆதர்ஷ் வாழ்க்கையில் இருக்கிறான் என்று தெரிந்த பிறகு அவனை விட்டு விலகிச் சென்றவளின் மனது மட்டும் அவனுடனேயே தங்கி விட்டது. இன்றும் அவனை நினைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கையே தனக்குப் போதுமென்ற நினைப்போடு வாழ்பவளுக்கு ஆதர்ஷை, ஆலன் ஏமாற்றிவிட்டுச் சென்றது இந்த நிமிடம் வரை தெரியாமல் இருக்க, அவளுக்கும் ஆதர்ஷனுக்கும் எப்படியாவது திருமணத்தை நடத்தி விடவேண்டும் என்ற முடிவோடு தர்ஷினியைப் பார்த்துப் பேச காபி ஷாப்பிற்கு அழைத்திருந்தாள் தன்வி. அங்கு அவளின் கணவனும் ஆதர்ஷனின் இரட்டை சகோதரனான ஆதிஷனும் இருக்க, கூட ஆதர்ஷ், ஆதீஷனின் தாய் அமிர்தாவும் இருந்தனர்.


தர்ஷினி அந்த நொடி வரை தன்விக்கும் ஆதர்ஷனுக்கும் தான் திருமணம் நடந்தது என்று நினைத்துக் கொண்டிருக்க, தன்வி இரட்டையர்கள் இருவரும் சேர்ந்து திட்டம் போட்டுத் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்த கதையைச் சொல்லி முடித்தவள், தர்ஷினி அதிர்ச்சி அடைவாள் என்று எதிர்பார்க்க, அவளோ சாதாரணமாக, ஆதர்ஷ் பற்றிய‌ உண்மை தனக்கு முன்பே தெரியும் என்ற குண்டைத் தூக்கிப் போட, மீதி இருந்த மூவரும் தான் அதிர்ச்சியில் விழி விரித்து நின்றனர்.


"எப்படி? எப்படி உங்களால தர்ஷன் பத்தித் தெரிஞ்ச பிறகு அவனை இன்னமும் காதலிக்க முடியுது?" என்று ஆச்சரியமாகக் கேட்டான் அதீஷன்.


அதைக் கேட்டு மென்மையாகச் சிரித்தவள், "நான் ஆதர்ஷன் என்ற மனுஷனைத் தான் விரும்பினேன். அவரு உடலால், உள்ளத்தால் வேற எப்படி இருந்தாலும் அடிப்படையில் அவர் ஒரு நல்ல மனுஷன், அதுக்குப் பெரிய சாட்சியே தன்வி தான். அவர் நினைச்சிருந்தால் தன்வியோ, இல்ல என்னையோ கூட இந்த சொசைட்டிக்காக மேரேஜ் பண்ணிட்டு யாருக்கும் தெரியாமல் ஆலன் கூட அவர் ரிலேஷன்ஷிப்பைத் தொடர்ந்து இருக்கலாமே… பட், அவரு அதைச் செய்யலியே… அவரோட ரிலேஷன்ஷிப்புக்கு அவரு ரொம்ப நேர்மையாய் இருக்காரு. தன்னால எந்தப் பொண்ணும் பாதிக்கப்படக் கூடாதுன்னு நினைச்சு தானே, தன்கிட்ட வேலை பாக்குற ஆளு தானே இவள்னு நினைக்காமல் அவரைப் பத்திய அவ்ளோ பெரிய உண்மையை என்கிட்டச் சொன்னாரு… அந்த உயர்ந்த மனசு போதும். நான் சாகும் வரை ஒரு நல்ல மனுஷனை நினைச்சுதான் வாழ்ந்தேன்ற நிம்மதி ஒண்ணு போதும் எனக்கு" என்றவளைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருந்தது மூவருக்கும்.


அவள் சொன்னதைக் கேட்ட அமிர்தாவுக்கு அதற்கு மேல் தன்னுணர்வுகளை இழுத்துப் பிடிக்க முடியாமல், "தன்வி சொன்னது சரிதான்… நீதான் என் தர்ஷனுக்கு ஏத்த பொண்ணு" என்றவர் சட்டெனத் தர்ஷினியின் கையைப் பிடித்துக் கொண்டு, "என் தர்ஷனைக் கல்யாணம் பண்ணிகிட்டு நீ என் வீட்டுக்கு மருமகளா வரணும்னு எனக்கு ஆசையா இருக்கும்மா… நீ எனக்கு மருமகளா, என் தர்ஷனுக்குப் பொண்டாட்டியா வருவியா?" என்று கலங்கிய கண்களுடன் ஒரு எதிர்பார்ப்போடு கேட்டார் அமிர்தா.


அவர் சொன்னது புரியாமல் முதலில் விழித்த தர்ஷினி, சில நொடிகள் கழித்து, "அம்… அம்மா ப்ளீஸ் அழாதீங்க… நா..நான்... அதுக்குக் கொடுத்து வைக்கலம்மா… எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்ல" என்றவளுக்கு குரலில் அப்படி ஒரு ஏமாற்றம்.


"ஏன் வினிக்கா, அப்படிச் சொல்றீங்க?" என்று கேட்டாள் தன்வி.


"என்ன தன்வி? எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படிக் கேட்டால் என்ன அர்த்தம்? நான் எப்படி" என்றவள் ஒரு நிமிடம் தடுமாறி, "அவர் எப்படி என்னைக் கல்யாணம் செய்வாரு… அவர் லைஃப்ல தான் அந்த ஆலன் இருக்கான் இல்ல… அது தெரிஞ்சும் நான் எப்படி தன்வி" என்றவளுக்குக் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.


"அப்ப ஆது வாழ்க்கையில் அந்த ஆலன் இருக்கிறது தான் உங்க பிரச்சனை…" என்ற தன்வி, "ஒருவேளை, இப்ப அந்த ஆலன் அவர் வாழ்க்கையில் இல்லாமல் இருந்தால்… நீங்க அவரைக் கல்யாணம் செஞ்சுப்பீங்களா? அவரைப்பற்றி எல்லாம் தெரிந்த அப்புறம்… ஐ மீன் அவர் ஒரு கே ன்னு தெரிஞ்ச பிறகும் அவரை ஏத்துக்கத் தயாராய் இருக்கீங்களா?" என்று கேட்க ஆதீஷனோ, "தன்வி… என்ன பேசிட்டு இருக்க நீ?" என்றவனுக்குக் கண்களை மூடித் திறந்து ஏதோ சமிக்ஞை செய்ய, அதைப் புரிந்து கொண்ட அவனும் அமிர்தாவும் அமைதியாக இருந்தனர்.


தன்வி பதிலுக்கு தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தைப் பார்த்த தர்ஷினி, "இந்தக் கேள்விக்கு நான் ஆல்ரெடி பதில் சொல்லிட்டேன் தன்வி. நான் விரும்புறது அவர் மனசை‌… அவர் என் கூட இருந்தாலே எனக்குப் போதும். இன்னும் உனக்கு பச்சையாய் சொல்லணும்னா… அவர் என்னோட இருக்கணும்னு தான் நான் விரும்புகிறேன். என்னோட படுக்கணும்னு இல்ல" என்றவளுக்கு அவளையும் மீறிக் கண்ணீர் வந்துவிட, "நான் கிளம்புறேன்" என்று எழுந்து கொண்டவள் கையைப் பிடித்து நிறுத்தினான் அதீஷன்.


"அதுக்குள்ள போனா எப்படி அண்ணி அவர்களே… இன்னும் கல்யாண விஷயம் எவ்வளவு பேச வேண்டி இருக்கு" என்றான் அவளிடம் தன் உறவை நிலை நிறுத்தியபடி.


தன்வி ஒரு நிறைவான புன்னகையுடன் தர்ஷினியைப் பார்த்தவள், "நீங்க ஆதுபத்தி தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் ரெண்டு இருக்கு க்கா…" என்றவள். ஒற்றை விரலை நீட்டி, "பர்ஸ்ட் ஆது கே இல்ல…" என்றவள் அடுத்த விரலை நீட்டி, "அடுத்தது… ஆலன் இப்ப அவர் லைஃப்ல இல்லை. தே ப்ரேக் அப்‌ (They broke up)" என்று சொன்னதுதான், "வாட்" என்று அலறியபடியே சேரில் அமர்ந்தவள், "நீ என்ன சொல்ற தன்வி? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. ஆதர்ஷ் சார் எந்தச் சூழ்நிலையிலும் தன்னை நம்பினவங்களைக் கை விடவே மாட்டாரு. அவரு ப்ரேக் அப் பண்ண வாய்ப்பே இல்ல…" என்று சத்தமாகச் சொன்னவள், "என் ஆதர்ஷ் அப்படி இல்ல" என்று முணுமுணுக்க, அது மூவர் காதிலும் தெளிவாக விழுந்தது.


அதைக் கேட்ட மூவரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.


"உண்மைதான் வினிக்கா… உங்க ஆதர்ஷ் அப்படிப் பண்ண மாட்டாரு… ஆனால், அந்த ஆலன் அப்படிப் பண்ணலாம் இல்ல" என்றவள் நிறுத்தி, "பண்ணலாம் இல்ல… பண்ணிட்டான்." என்றாள் இறுகிய முகத்துடன்.


"ஆமா க்கா..‌. ஆலன் அப்பா அவன் ஆதுவை விட்டு வந்தால் தான் தன்னோட பிஸினஸ், சொத்து எல்லாம் உனக்குத் தருவேன்னு சொல்லிட்டார்னு ஆதுவை விட்டுப் போயிட்டான் அந்த வெள்ளைப் பன்னி" என்றதைக் கேட்ட தர்ஷினிக்கு அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை. ஆதர்ஷனுக்கு துரோகம் செய்ய அந்த ஆலனுக்கு எப்படி மனம் வந்ததென்று முதலில் வருந்தியவள், மனது ஏதோ ஒர் மூலையில் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்கே தெரியவில்லை. 


தன்வி நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, தர்ஷினி அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தவள், "சோ… அப்ப இதுக்காக தான் என்னை லண்டன்ல இருந்து வரவச்சிருக்க… ரைட்?" என்று கேட்க தன்வி இல்லை என்று தலையாட்டியவள், "நாங்க உங்களை ஆதுவைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி இங்க வரச் சொல்லலை… நீங்க விரும்பின ஆதர்ஷனைப்பத்தி நீங்க முழுசாய் தெரிஞ்சிக்கணும்னு தான் வரச் சொன்னேன்‌. முக்கியமாய் எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆகலன்னு உங்களுக்குத் தெரியணும்னு நினைச்சேன்.‌‌… அப்புறம் உங்க கல்யாணம் பத்தி முடிவெடுக்க எனக்கு எந்த உரிமையும் இல்ல. பட், எங்க ஆதுபத்தி தெரிஞ்சு நீங்க அவரை மேரேஜ் பண்ண விரும்பினால், நாங்க அதுக்கு உதவியும் சப்போர்ட்டும் பண்ண ரெடியாய் இருக்கோம்னு சொல்ல நினச்சேன் அவ்ளோதான்" என்று தோள்களைக் குலுக்க, தர்ஷினி சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்து முறைத்தவள், "ஆனால், தன்வி நீ இந்த எல்லா விஷயத்தையும் ஃபோன்ல இல்ல மெயில்லயோ சொல்லி இருக்கலாமே… எதுக்காக என்னை லண்டன்ல இருந்து இங்க வரவச்ச?" என்று புருவத்தை உயர்த்திக் கேட்க, 


"நீங்களும் நான் பேசணும்னு சொன்னதும், விஷயத்தை ஃபோன்ல இல்ல மெயில்ல சொல்லுன்னு சொல்லி இருக்கலாமே… எதுக்காக லண்டன்ல இருந்து இங்க வந்தீங்கலாம்?" என்று குறும்பாகக் கேட்கவும், தர்ஷினிக்குப் பதட்டமாகி விட பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.


பின் இங்கு வந்தால் ஒருமுறை அவள் ஆதர்ஷனைக் கண்களால் பார்த்து மனதில் நிறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துதான் நீ கூப்பிட்டவுடன் வந்தேன் என்ற உண்மையை அவளால் சொல்ல முடியுமா என்ன?


அவள் மௌனமே அவள் மனதில் இருப்பதைத் தெளிவாகச் சொல்ல, "ம்ம்ம்…. புரியுது புரியுது… நான் கூப்பிட்டவுடனே நீங்க எதுக்கு வந்தீங்கன்னு எனக்குத் தெளிவாய் புரியுது" என்று சிரித்த தன்வி, "இப்பக் கேக்குறேன் எங்க ஆதுவைக் கல்யாணம் பண்ணிட்டு எங்க வீட்டுக்கு அவர் பொண்டாட்டியா வர ரெடியா?" என்று கேட்க தர்ஷினியின் முகம் சடுதியில் வாடிவிட்டது