இதயம் 9

 இதயம் 9


மறுநாள் காலையில் நேரத்துக்கே தயாராகி ஆதர்ஷன், தர்ஷினி இருவரும் போக வேண்டிய இடத்திற்கு விரைந்தனர்.


அவர்கள் வந்த வேலை முழுவதும் சிறப்பாக முடிந்திருக்க, ஆதர்ஷின் கம்பெனியோடு தொழில் தொடர்பு வைத்துக் கொள்வதாக முடிவு செய்து, அனைவரும் கையெழுத்திட்டிருக்க, ஆதர்ஷனுக்கு அவன் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் போனது. 


அந்த நேரம் தர்ஷினி, “கங்கிராஜுலேஷன்ஸ் தர்ஷன்” என்று தன் வலக்கையை நீட்டிப் புன்னகை முகமாக அவன் முன் நிற்க, மகிழ்ச்சி மிகுதியில் இருந்த ஆதர்ஷ், அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டவன், “தேங்ஸ் வினி… தேங்க்யூ சோ மச்” என்று உற்சாகம் நிறைந்த குரலில் சொல்ல, பாவம்! அவள்தான் அவன் சொன்னதை உணரும் நிலையில் இல்லை.


ஆதர்ஷ் அவளை அணைத்த கணமே அவள் மனம் அவளது கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆகாயத்தில் சஞ்சரிக்கத் தொடங்கிவிட, அவனது ஒற்றை அணைப்பில் உலகம் மறந்து நின்றாள், அவன் மேல் பித்தம் கொண்ட பேதை அவள்.


அவள் நிலையை உணராத ஆதர்ஷ் அவளை அணைத்தபடியே, “இதெல்லாம் உன்னால தான் வினி… இது என்னோட பல வருஷக் கனவு… இன்னைக்கு இது நிறைவேற நீயும் ஒரு முக்கியமான காரணம்” என்றவனின் பிடி இறுகிய போது, அவளின் பெண்மையின் மென்மையைத் தன் நெஞ்சோடு உணர்ந்தவனுக்கு அப்போதுதான் அவளை இறுக அணைத்திருப்பது புத்தியில் உரைத்தது. சட்டென அவளை விட்டு விலகி வந்தவன் அவள் முகம் பார்க்கத் தயங்கி, “சா… சாரி வினி… ஏதோ ஒரு நெனப்புல உன்னை ஹக் பண்ணிட்டேன். சாரி” என்றவன் அவள் முகத்தைத் தயக்கமாக நிமிர்ந்து பார்த்தவன், அதிர்ந்து நின்றான் அவள் கண்கள் சொன்ன செய்தியில்.


சில நொடிகள் ஒருவரை ஒருவர் உயிரை ஊடுருவும்படி ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த இருவரையும், “மிஸ்டர்.ஆதர்ஷ்” என்ற ஆதர்ஷின் தொழில் நண்பன் பீட்டரின் குரல் நிகழ்வுக்குக் கொண்டு வந்தது.


“எவ்ரிதிங் கோஸ் வெல் ஆதர்ஷ். ஐ ஆம் வெரி ஹாப்பி டூ வொர்க் வித் யூ” என்று கை நீட்ட, அவன் கையைப் பிடித்துக் குலுக்கிய ஆதர்ஷ், “சேம் ஹியர் பீட்டர்” என்றவனின் நினைவு முழுவதும் தர்ஷினியின் பார்வை சொன்ன செய்தியே ஓடிக்கொண்டு இருந்தது.


வந்த வேலை சீக்கிரம் முடிந்துவிட, அன்றைக்கு மறுநாள் தான் அவர்களுக்கு விமானம் என்பதால் ஆதர்ஷ், தர்ஷினி இருவரையும் அந்த ஊரைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர், பீட்டரும் அவன் மனைவி ஜெசிகாவும்.


ஆதர்ஷின் ஒற்றை அணைப்பில் தர்ஷினியின் காதல் ஹார்மோன்கள் அதிவேகமாகச் செயல்படத் தொடங்கிவிட, முகம் முழுவதும் புன்னகையோடும், கண்கள் நிறைந்த காதலோடும், அவள் அவனோடு செல்லும் இந்தப் பயணத்தை ரசித்துக் கொண்டே வர, ஆதர்ஷனோ அவளின் ஒவ்வொரு முகபாவனைகளையும் அவதானிக்க முயன்று கொண்டிருந்தான்.


மதியம் வரை ஊரைச் சுற்றித் திரிந்த, நால்வரும் மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.


பெண்கள் இருவரும் ஷாப்பிங் செய்தபடி இருக்க, ஆதர்ஷனும் பீட்டரும் பொது விஷயங்களைப் பேசிக்கொண்டு பெண்கள் இருவரையும் தொடர்ந்து கொண்டு இருந்தனர். 


தர்ஷினி, தன்விக்காகக் கர்ப்ப கால உடைகளை அவளுக்குப் பொருந்தும்படி இருக்கிறதா என்று தேடித் தேடி வாங்கிக் கொண்டிருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷ், பீட்டரிடம், “எக்ஸ்கியூஸ் மீ பீட்டர், ஐ வில் பீ பேக்” என்றவன் நேராக தர்ஷினி அருகில் வந்தவன், “நீ எடுத்த டிரஸ் எதுவுமே உனக்கு சுத்தமா சூட் ஆகாது வினி… எதுக்கு இதெல்லாம் எடுத்துட்டு இருக்க?” என்று கேட்க, உடைகளைத் தடவிப் பார்த்து அது தன்விக்கு ஏதுவாக இருக்குமா என்பதைச் சோதித்தபடியே, “இதெல்லாம் எனக்கு இல்ல தர்ஷன். நம்ம தன்விக்கு தான். அவளுக்கு இந்த டைம்ல இந்த மாதிரி டிரஸ் தான் கம்ஃபர்டபிளா இருக்கும். அதான் நல்லா சாஃப்டா இருக்க மெட்டீரியலா பார்த்து எடுத்துட்டு இருக்கேன்.” என்றவளின் பதிலில் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷ், “அவளுக்கு எடுத்தது போதும், நீ உனக்காக ஏதாவது வாங்கு… எல்லாத்துக்கும் சேர்த்து நான் பே பண்றேன்…” என்றவனைத் திரும்பிப் பார்க்காமல் உடைகளிலேயே பார்வை பதித்திருந்தவள், “நான் எனக்காக எடுக்குறதுக்கு வேணும்னா நீங்க பே பண்ணுங்க.‌‌.. தன்விக்கு எடுக்குறதுக்கு நான் தான் பே பண்ணுவேன்.” என்றவள் அடுத்த உடையைப் பார்க்கச் சென்றுவிட, ஆதர்ஷ் தான் அவள் சொன்னதன் அர்த்தம் புரியாமல் குழம்பி நின்றான்.


ஒரு வழியாக இரவு ஏழு மணியளவில் தங்கள் ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு வந்தனர் தர்ஷினியும் ஜெசிகாவும்.


ஷாப்பிங் செய்த அனைத்துப் பொருட்களையும் காரில் வைத்துவிட்டு, வந்த இரு பெண்களோடு இரவு உணவுக்காக அங்கிருந்த ஒரு சாலையோர ரெஸ்டாரன்ட்டுக்குச் சென்றனர்‌ ஆதர்ஷனும் பீட்டரும்.


அங்கு உணவோடு மதுபான வகைகளும் இருக்க, ஏனோ தர்ஷினிக்கு அந்த இடம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனாலும் வேறு வழி இல்லாமல் சென்றவள், ஆதர்ஷ் பக்கத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.


அவள் முகத்தை வைத்தே அவள் மனதைப் புரிந்து கொண்ட ஆதர்ஷ், அவள் கையின் மீது தன் கையை வைத்து அழுத்தினான். அந்த ஸ்பரிசத்தில் அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். மெதுவாக இமைகளை மூடித் திறந்த ஆதர்ஷின் செய்கை, ’நான் இருக்கிறேன் உன் அருகில்’ என்று சொல்வது போல் இருக்க, தர்ஷினி மனதின் இறுக்கம் தளர்ந்து சகஜமானாள்.


நால்வரும் இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பும் வேலையில், ஆதர்ஷனின் கைப்பேசி மணியடிக்க அதீஷன் தான் அழைத்திருந்தான். 


அழைப்பை ஏற்றுக் காதில் வைத்த ஆதர்ஷ் கண்களால் தர்ஷினியிடம், ‘ஒரு நிமிஷம் வந்திடுறேன்’ என்றவன் அதீஷனுடன் பேசியபடி கொஞ்ச தூரம் தள்ளிச் செல்ல, அந்த நேரம் குடி போதையில் வந்து ஒருவன் தன் கையில் இருந்த மதுபானத்தைத் தர்ஷினியின் மேல் கொட்டிவிட தர்ஷினி, “ஆர் யூ ப்ளைன்ட்…” என்று கோவத்தில் கத்தியவள், தன் மேல் கொட்டி இருந்த மதுவின் நாற்றத்தில் முகம் சுழித்தபடி நின்றாள்.


போதையில் இருந்த அவனோ, “ஏய் பியூட்டி… ஐ ஆம் நாட் ப்ளைன்ட்… ஐ கேன் சீ யுவர் பியூட்டிஃபுல் ஃபேஸ், ஆன்ட் கியூட் லிப்ஸ்” என்றபடி அவளை முத்தமிட நெருங்கி வர, தர்ஷினிக்கோ கோவத்தில் கண்கள் சிவந்துவிட, “பளார்” என்று அவன் கன்னத்தில் தன் ஐந்து விரல்களும் பதியும்படி, ஒரு அறை வைக்க போதையில் இருந்தவன் நிலை தடுமாறி பெத்தென்று கீழே விழுந்தான்‌.


இதைப் பார்த்த அந்த போதை ஆசாமியின் நண்பர்கள் தர்ஷினியை நெருங்கி வந்து அவள் மேல் கை வைக்கப் போக, அதைப் பார்த்த பீட்டர், “ஏய்” என்று கத்திக் கொண்டே தர்ஷினி அருகில் வரும் முன், தர்ஷினி மேல் கை வைக்க வந்தவன், வயிற்றைப்ப் பிடித்துக் கொண்டு, கீழே விழுந்து கிடந்தான் ஆதர்ஷன் விட்ட உதையில்.


“ஹவ் டேர் யூ…“ என்று கர்ஜித்தவன், “அவ மேல எவனாவது கையை வச்சிங்க, ஒருத்தன் உடம்புலயும் கை இருக்காது” என்று ஆங்கிலத்தில் சொல்ல, தர்ஷினி அவன் முதுகுக்குப் பின்னால் வந்து நின்று அவன் சட்டையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவள், தன்னை அவனுள் மறைத்தபடி நின்று கொண்டாள்.


போதையில் இருந்தவர்களுடன் கைகலப்பு ஏற்பட, உடனே பீட்டர் போலீஸுக்கு அழைத்து விட்டான். அதற்குள் சிலர் ஆதர்ஷனை அடிக்க வர, ஆதர்ஷனும் பீட்டரும் சேர்ந்து அவர்களைப் புரட்டி எடுத்தனர். 


அந்த நேரம் அங்கு போலீஸ் வந்துவிட, அதைப் பார்த்த வம்பு செய்தவர்களில் ஒருவன், அங்கிருந்த மதுபாட்டில் ஒன்றை உடைத்து பின் பக்கமாக ஆதர்ஷனைக் குத்த வர, ஆதர்ஷ் இதை கவனிக்கவில்லை. அந்த நேரம் அதைப் பார்த்துவிட்ட தர்ஷினி, “தர்ஷன்“ என்று அடிவயிற்றில் இருந்து கத்த, அதில் திரும்பிய ஆதர்ஷ், தன்னைக் குத்த வந்தவனின் கையைப் பிடித்துக் கொண்டவன், அவன் வயிற்றில் ஓங்கி ஒரு குத்துவிட, அவன் அந்த இடத்திலேயே மயங்கிச் சரிய, போலீஸ் அவர்கள் அனைவரையும் கைது செய்து கொண்டு சென்றனர்.


“சாரி மிஸ்டர். ஆதர்ஷ்… எங்க நாட்டுக்கு வந்த உங்களுக்கு இப்படி நடந்ததை நினைச்சு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு“ என்று மனதார வருந்திய பீட்டர் தோளில் தட்டிய ஆதர்ஷன், “இஸ்ட் ஓகே பீட்டர். இந்த மாதிரி ஆளுங்க எல்லா நாட்டிலும் தான் இருக்காங்க… இதுல உங்க தப்பு எதுவும் இல்லை, லீவ் இட்” என்றவன், “மிஸ்டர். ஆதர்ஷ், ப்ளீஸ் கம்” என்ற ஜெசிகாவின் பதட்டமான குரலில் அங்கு ஓடிவர அங்கு ஜெசிகா, தர்ஷினியின் தோளைப் பிடித்து உலுக்கி, “மிஸ்.தர்ஷினி‌… மிஸ்.தர்ஷினி… ஆர் யூ ஓகே?” என்று கத்திக் கொண்டிருக்க, தர்ஷினியிடம் எந்தப் பதிலும் இல்லை.


அங்கு வந்த தர்ஷன், “வாட் ஹாப்பன்?” என்று கேட்டவன், தர்ஷினியின் முகம் பார்க்க, அவள் முகமே வெளிறிப் போய் ரத்தப் பசையற்று இருக்க, அவள் கண்களோ எங்கோ பார்த்தபடி நிலைக்குத்தி நிற்க மூச்சுப் பேச்சற்றுக் கிடந்தாள்.


“வினி…‌ வினி…” என்று அவள் கன்னத்தில் தட்டியவன், “வினிம்மா… என்னடா ஆச்சு உனக்கு?” என்று அவளை உலுக்க அவளிடம் எந்த அசைவும் இல்லை. 


“உங்களைக் குத்த வந்ததைப் பார்த்து உங்க பேர் சொல்லிக் கத்தினவங்க தான்… அப்படியே ஸ்டன் ஆகி நின்னுட்டாங்க…” என்று ஜெசிகா பதட்டமாகச் சொல்ல, அதைக் கேட்ட ஆதர்ஷனுக்குச் சட்டெனக் கண்கள் கலங்கி விட்டது.


அவள் கன்னங்களைத் தன் கைகளில் ஏந்தியவன், “வினி… ஏய் வினி… என்னைப் பாருடி… வினி…” என்றவன் குரலில் தவிப்பும் பயமும் கலந்திருக்க, எங்கோ வெறித்திருந்தவள் கண்களைப் பார்த்தவன், “வினி… என்னைப் பாருடி… எனக்கு ஒண்ணும் இல்ல, நான் நல்லாத்தான் இருக்கேன்… என்னைப் பாருமா” என்றவனின் குரல் உடைந்துவிட, தர்ஷினியின் நிலையைப் பார்த்த பீட்டரும், ஜெசிகாவும் கூட பயந்துதான் போயினர்.


ஆதர்ஷ் ஒரு நொடி அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்துவிட்டுக் கண்களை மூடித் திறந்துவன், அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்‌.


அவன் விட்ட அறையில், மாயையில் இருந்து வெளிவந்தவள் போல் கண்கள் வேகமாகச் சிமிட்டிப் பார்த்தவள், பார்வை எதிரில் இருந்த ஆதர்ஷ் மேல் படிந்தது‌‌. 


அடுத்த நொடியே காற்றுக் கூட புக முடியாத அளவுக்குப் பாய்ந்து சென்று அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டவள் கண்களில் அருவி போல் கண்கள் கொட்டியது.


“உ…உங்களுக்கு ஒண்ணும் இல்ல இல்ல? அ…அவன் உங்களைக் குத்த வந்தானே” என்றவள் குரலில் இருந்த பயமும், பதட்டமும் ஆதர்ஷனை வெகுவாகப் பாதித்தது.


அவனை அணைத்திருந்தவளின் மேனியின் நடுக்கத்தை தன் உடலில் உணர்ந்தவன், மெல்ல அவள் தலையை வருடியபடியே, “எனக்கு ஒண்ணும் இல்ல வினி, ஆம் ஆல் ரைட்” என்றவன் குரல் கரகரத்தது.


அவன் சொன்னதைக் கேட்ட பிறகு தான் தர்ஷினிக்குப் போன உயிர் திரும்பி வந்தது. ஆதர்ஷனுக்கு எதுவும் ஆகிவிட்டதோ என்ற அதீத பயத்தில் இருந்தவளுக்கு அவன் நலமாக இருக்கிறான் என்று தெரிந்த பிறகும் கூட அதிக மன அழுத்தம் காரணமாக ஆதர்ஷன் கையிலேயே மயங்கிச் சரிந்தாள்.


பீட்டர் வண்டியை ஓட்ட, அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஜெசிகா நொடிக்கொரு முறை பின்னால் ஆதர்ஷனின் தோளில் சாய்ந்தபடி நல்ல உறக்கத்தில் இருந்த தர்ஷினியையும், ஆதர்ஷனையும் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தாள்.


ஆதர்ஷ், தர்ஷினி தங்கியிருந்த ஹோட்டலில் வண்டியை நிறுத்திய பீட்டர், “ஒன்ஸ் அகைன், ஐ ஆம் சாரி மிஸ்டர் ஆதர்ஷ்.” என்றான்.


“இட்ஸ் ஓகே பீட்டர், லீவ் இட்‌” என்று காரில் இருந்து இறங்கிக் கொண்ட ஆதர்ஷன், தர்ஷினியைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.


அவர்கள் அறையில் தர்ஷினியைப் படுக்க வைத்துவிட்டு ஆதர்ஷ் வெளியே வர அவனிடம் வந்த பீட்டர், “டேக் கேர் ஆஃப் ஹர் ஆதர்ஷ். நாளைக்கு மார்னிங் நானே வந்து உங்க ரெண்டு பேரையும் பிக்கப் பண்ணி ஏர்போர்ட்ல டிராப் பண்ணிடுறேன்.” என்க ஆதர்ஷனும், “தேங்ஸ் பீட்டர்.” என்றவன் அங்கிருந்து நகர, “ஒன் மினிட் மிஸ்டர். ஆதர்ஷ்” என்ற ஜெசிகாவின் குரலில் நின்று திரும்பிப் பார்த்தான்.


அவன் அருகில் வந்த ஜெசிகா, “இதை நான் சொல்றது சரியா தப்பான்னு எனக்குத் தெரியல… பட், என் மனசில் நினைச்சதைச் சொல்லிடுறேன்.” என்றவள் ஒரு முறை அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்த தர்ஷினியின் முகத்தைப் பார்த்தவள் திரும்பி ஆதர்ஷனைப் பார்த்து, “ஷீ இஸ் மேட்லி இன் லவ் வித் யூ ஆதர்ஷ்.” என்று உறுதியாகச் சொல்ல, அவள் வார்த்தைகளில் ஆதர்ஷன் திகைத்து நின்றான்.


“எஸ் ஆதர்ஷ், அவங்க உங்களை லவ் பண்றாங்க… அதுவும் அளவுக்கு அதிகமாக. அது அவங்க கண்களிலேயே தெரியுது‌… உங்களுக்கு ஒண்ணுன்னு தெரிஞ்சதும் அவங்க மூச்சே நின்னு போச்சு, பாத்தீங்க இல்ல… அவங்க உயிர் மூச்சே நீங்க தான்.” என்றவள் சற்றுப் பொறுத்து, “அவங்க உங்ககிட்ட அவங்க லவ்வை சொல்லிட்டாங்களான்னு எனக்குத் தெரியாது‌… ஒருவேளை, இனிமே அவங்க உங்களைப் ப்ரபோஸ் பண்ணா ஒரு நிமிஷம் கூட யோசிக்காதீங்க… உடனே ஓகே சொல்லிடுங்க…” என்று விட்டு ரெண்டடி நகர்ந்தவள் திரும்பி, “யூ கைஸ் ஆர் மேட் ஃபார் ஈச் அதர்” என்று விட்டுச் செல்ல, ஆதர்ஷன் மெல்லத் தர்ஷினி அருகில் சென்று அமர்ந்தவன், உறங்குபவளின் முகத்தை ஒரு பரிதவிப்போடு பார்த்துக் கொண்டு இருந்தான்.


காலை ஐந்து மணி போல் உறக்கம் கலைந்து எழுந்த தர்ஷினியின் விழிகளில் அவளையே பார்த்தபடி இருந்த ஆதர்ஷ் தெரிந்தான். 


மெல்லக் கட்டிலில் எழுந்து அமரந்தவளுக்கு, நேற்றைய இரவு நடந்த நிகழ்வுகள் நினைவில் அலைமோத, சட்டென ஆதர்ஷன் தோள்களைப் பிடித்துக் கொண்டவள், “த…தர்ஷன்… நீங்க நல்லா இருக்கீங்க இல்ல? உங்களுக்குக் காயம் எதுவும் படல இல்ல” என்று பதட்டமாகக் கேட்டவள், அவனின் உடல் நலத்தைத் தன் கண்களால் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.


“எனக்கு ஒண்ணும் இல்ல, நான் நல்லாத்தான் இருக்கேன்.” என்றவன் ஒரு கணம் நிறுத்தி ஆழ்ந்து மூச்செடுத்து, “இப்ப நான் உன்னை மூணு கேள்வி கேப்பேன். அதுக்கு நீ உண்மையை மட்டும் தான் சொல்லணும்.” என்றவன் சட்டென அவள் கையை எடுத்துத் தன் தலைமீது வைத்துக் கொண்டவன், “இது என் மேல சத்தியம்” என்று சொல்லிவிட, தர்ஷினிக்கு உள்ளுக்குள் பூகம்பமே வெடித்துச் சிதறியது.


ஆதர்ஷ் சத்தியம் வாங்கியதிலேயே அவளுக்கு ஓரளவு அவன் என்ன கேட்கப் போகிறான் என்று புரிந்துவிட, மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.


அவள் பதட்டத்தைப் பார்த்துமே ஆதர்ஷனுக்கும் புரிந்துவிட்டது, தான் கேட்கப் போகும் மூன்று கேள்விகளுக்கான பதில் என்னவென்று.


ஆதர்ஷ் அவளை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டே, “தன்வி தான் உன்னை அமெரிக்காவுக்கு வர வச்சாளா?” என்று கேட்டான்.


தர்ஷினி கலங்கிய கண்களுடன், தலையை மேலும் கீழும் ஆட்டியபடி, “ம்ம்ம்” என்றாள் சத்தமே வெளியில் வராமல்.


அதைக் கேட்டு ஆதர்ஷ் மூச்சை இழுத்து வெளிவிட்டவன், “தன்வி, அதீக்கு நீ யாருன்னு முன்னமே சொல்லிட்டா இல்ல… உன்னை யாருன்னு தெரிஞ்சு தானே அதீ, நம்ம ஆஃபிஸ்ல வேலைக்கு வச்சான்…? அவனுக்கும் தன்விக்கும் சண்டைன்னு சொன்னது எல்லாம் பொய் தானே?” என்று கேட்டவன் குரலில் வந்து போன கோவத்தில் அவனை நிமிர்ந்துப் பார்க்கத் தைரியம் இல்லாமல் தலையை இன்னும் குனிந்து கொண்டாள்.


“உன்னைத்தான் கேட்டுட்டு இருக்கேன் வினி… நான் சொன்னது உண்மைதானே?” என்று கேட்க, தர்ஷினி தலை அதற்கும் ஆமாம் என்று ஆடியது.


கை மூஷ்டியை இறுக்கித் தன் கோவத்தை அடக்கியவன், அவளைப் பார்க்காமல் பார்வையைத் திருப்பிக் கொண்டவன், “நீ… நீ என்னை… என்னை… இன்னும் லவ் பண்ணிட்டு இருக்கியா” என்று தட்டுத் தடுமாறிக் கேட்டவன் குரலே சொன்னது அவன் எந்த அளவுக்கு அவள் சொல்லப் போகும் பதிலை நினைத்துப் பயப்படுகிறான் என்று.


அதுவரை தலைகுனிந்து இருந்த தர்ஷினி அவன் அந்தக் கேள்வியைக் கேட்டதும் விருட்டென்று நிமிர்ந்து, தனக்கு முதுகைக் காட்டி நின்ற ஆதர்ஷனைப் பார்த்தவள், “சாகுற வரைக்கும் உங்களை லவ் பண்ணுவேன். செத்த அப்புறமும் உங்களை மட்டும் தான் லவ் பண்ணுவேன்...” என்று ஆணித்தரமாகப் பதில் சொன்னவளின் உறுதியில் ஒரு நிமிடம் தடுமாறி நின்ற ஆதர்ஷன், 


“ஒன்பது மணிக்கு ஃப்ளைட்… சீக்கிரம் ரெடியாகு” என்று விட்டு அந்த அறையை விட்டுச் செல்ல, தர்ஷினி அழுது வடிந்த தன் முகத்தைத் தன் முழங்காலில் புதைத்துக் கொண்டாள்.