இதயம் 10

 இதயம் 10


அவன் பேசிவிட்டுச் சென்று அரைமணி நேரம் கடந்த பிறகும், அழுதபடியே இருந்த தர்ஷினியைப் பார்த்த ஆதர்ஷனுக்கும் உள்ளுக்குள் வலிக்கத் தான் செய்தது‌. அவளுக்குத் தன்மீதான காதல் எந்தளவுக்கு மனதில் வியாபித்து இருக்கிறது என்பதை நேற்றைய சம்பவம் அவனுக்கு நன்றாகவே உணர்த்தி இருந்தது‌.


அவனுக்கு அவள் காதல் புரிந்தது, சொல்லப் போனால் அவளால் தான் காதலிக்கப் படுகிறோம் என்ற உணர்வையே அவன் வெகுவாக ரசித்தான். அவளை அவனுக்குப் பிடிக்கும், அவள் காதலும் பிடித்துத்தான் இருந்தது. ஆனால், அவனுக்கு அவள் மீது காதல் இருக்கிறதா? என்று அவனுள் தேடிப் பார்க்க மட்டும் அவன் தயாராக இல்லை. அப்படித் தேடினால் அதற்கு என்ன பதில் கிடைக்கும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அந்தப் பதிலில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்பதால், தர்ஷினியைத் தன்னை விட்டுத் தள்ளி வைப்பது தான் சரியென்ற முடிவுக்கு வந்துவிட்டான். 


நேராகத் தர்ஷினியிடம் சென்றவன், “டைம் ஆச்சு… கிளம்பு. பீட்டர் வந்துட்டு இருக்காரு” என்றான் இறுகிய குரலில்.


முகத்தை மூடி அழுது கொண்டு இருந்தவள், தீடிரெனக் கேட்ட அவன் குரலில் அதிர்ந்து எழுந்தவள், அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.


“நீங்க… உங்க… நான்… தன்வி…” என்று பேச்சை மறந்த குழந்தை போல் அவள் வார்த்தைகளுக்குத் தத்தளிக்க, போதும் என்பதுபோல் அவள் முன் கையைக் காட்டியவன், “இங்க எதுவும் பேச வேணாம்… கிளம்பு” என்றவன் அந்த அறையைவிட்டு வெளியே செல்ல, கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்த தர்ஷினி, நேராகக் குளியலறைக்குள் சென்றாள்.


பயணத்தின் போதும் சரி, விமானத்திலும் சரி ஆதர்ஷ் அவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவன் ஏதாவது திட்டி இருந்தால் கூட அவளுக்கு இந்த அளவுக்குப் பதட்டமாக இருந்திருக்காது. உண்மை தெரிந்த பிறகு அவன் காட்டும் இந்த அமைதி அவளை ரொம்பவே பயமுறுத்தியது. ஆதிஷன், தன்விக்கு இங்கு நடந்ததைச் சொல்லாம் என்றால், ஆதர்ஷ் அவள் அருகிலேயே இருக்க அவளால் எதுவும் செய்ய முடியாது போனது.


விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த தர்ஷினி, அவள் உடமைகளை எடுத்துக் கொண்டு திரும்பி ஆதர்ஷின் முகம் பார்க்க, அவனோ, “உன்னோட லக்கேஜ் எல்லாம் என் கார்ல வை” என்றான் அழுத்தமான குரலில்.


“எ…எதுக்கு?” என்றவள், “பரவாயில்ல. நா…நான் டாக்ஸில வீட்டுக்குப் போயிடுவேன்” என்றாள்.


“நான் உன்னை ட்ராப் பண்ணக் கூப்புடல. நீ இப்ப உன்னோட வீட்டுக்கு இல்ல, என்னோட வீட்டுக்கு வர்ற” என்றான் உத்தரவாக.


எ..எதுக்கு நான் அங்க வரணும்?” என்றாள் பதட்டமாக.


“காரணம் சொன்னாதான் வருவியா? தன்வி உன்னை இங்க வரச்சொல்லிக் கூப்பிட்ட போது காரணம் கேட்டயா நீ? இல்ல இல்ல, அதே மாதிரி இப்பவும் எதுவும் பேசாமல் வா” என்று ரெண்டடி எடுத்து வைத்தவன், நின்று திரும்பி வந்து அவள் கையில் இருந்த கைப்பேசியை பிடுங்கிக் கொண்டான்.


“தர்ஷன் என்ன பண்றீங்க நீங்க? எதுக்கு என்னோட ஃபோனை பிடுங்குனீங்க?” என்றவளை அழுத்தமாகப் பார்த்தவன், “ஏன்? யாருக்கும் எதாவது இன்பர்மேஷன் பாஸ் பண்ணனுமா?” என்று கோபமாகக் கேட்க, அவள் என்ன செய்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்தபடி, “இல்லயே… அப்படி ஒண்ணும் இல்ல” என்றாள். 


“ம்ம்ம், அப்ப ஓகே… கால் எதுவும் வந்தா அப்ப நான் ஃபோனைத் தரேன். என் முன்னாடியே பேசு… அதுவரை இது என்கிட்ட இருக்கட்டும்.” என்றவன் அவன் சட்டைப் பைக்குள் அவள் கைப்பேசியைப் போட்டுக் கொண்டவன், அவள் கையைப் பிடித்துக் கிட்டத்தட்ட அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.


’போச்சு… இவருக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சு போச்சுன்னு இப்ப நான் தன்விக்கு எப்படி சொல்வேன்’ என்று வாய்க்குள் முணுமுணுக்க, ஆதர்ஷ் அவளை வெடுக்கென்று திரும்பிப் பார்க்க, வாயை இறுக்கி மூடிக் கொண்டாள் தர்ஷினி.


கார் ஆதர்ஷ் வீட்டு வாசலில் நின்றது. ஆதர்ஷன், தர்ஷினியைத் திரும்பிப் பார்த்தவன், “உள்ள வந்து யார் கிட்டேயும் எதுவும் பேசக்கூடாது. அமைதியா இருக்கணும், புரியுதா?” என்று கேட்க, திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் திருதிருவென விழித்தவள், “ம்ம்ம்” என்றாள் குரலே வெளியே வராமல்.


அவர்கள் இருவரும் உள்ளே நுழையும் நேரம், ஹாலில் அமர்ந்து தன் லேப்டாப்பில் எதையோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அதீஷன்.


யாரோ வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த அதீஷன், “டேய் வந்துட்டியா… வா, வா…” என்றபடி ஆதர்ஷ் அருகில் சென்றவன், “பீட்டர் கால் பண்ணாரு… போன வேலை செம்ம சக்ஸஸ் போல…” என்றபடியே அவனை அணைத்துக் கொள்ள, ஆதர்ஷ் அவனுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.


அதை கவனிக்காத அதீஷன் திரும்பித் தர்ஷினியைப் பார்த்து, “இந்த ப்ராஜெக்ட் இவ்ளோ சீக்கிரம் அப்ரூவல் ஆனதுக்கு நீங்களும் பெரிய காரணம் தர்ஷினி… தேங்க் யூ…” என்றவன் அதோடு நிறுத்தி இருக்கலாம், விதி‍ யாரை விட்டது.


“நான் என் ப்ரண்ட் அஜய்க்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.” என்றவனை இப்போது கூர்மையாகப் பார்த்த ஆதர்ஷ், “எதுக்கு அஜய்க்கு தேங்க்ஸ் சொல்லணும்.” என்று கேட்டான் புருவம் உயர்த்தி.


“பின்ன. அவன் தானே தர்ஷினியை இந்த ஜாப்க்கு ரெக்கமண்ட் பண்ணினது.” என்றவனை ஆதர்ஷ் புருவம் சுருக்கி அழுத்தமாகப் பார்க்க, தர்ஷினியோ மனதில், ‘ஐய்யோ அதீ… போதும், இதோட நிறுத்துங்க. ரீல் அந்து போச்சு’ என்று மைண்ட் வாய்ஸ்சில் புலம்ப பாவம் அதீஷனுக்கு அது கேட்கவில்லை.


ஆதர்ஷனும், “ம்ம்ம்… அப்ப வினியை ரெக்கமண்ட் பண்ணது அஜய் தான்? அஜய் சொல்லித்தான் வினி பத்தி உனக்குத் தெரியுமில்ல?” என்று கேட்க அதீஷனும், “ஆமா… இல்லாட்டி எனக்கு எப்படி இவர்களைத் தெரியும்?” என்றவன் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்தான் ஆதர்ஷ்.


அதீஷன் அடி வாங்கியதைப் பார்த்த தர்ஷினி உடல் நடுங்கிக் கொண்டு நிற்க, 


அதீஷன் கண்களைச் சிமிட்டி சிமிட்டி ஆதர்ஷனைப் பார்த்தவன் திரும்பி தர்ஷியைப் பார்த்து, லேசாகத் தலையை உயர்த்தி என்ன என்பது போல் கேட்க, அவள் பாவமாக அவனைப் பார்த்தபடி நின்றாள்.


‘ம்ம்ம்,‌ ஓகே… இவனுக்கு மேட்டர் தெரிஞ்சு போச்சு’ என்று புரிந்து கொண்ட அதீஷன்‍ விழியை மட்டும் உயர்த்தி ஆதர்ஷனைப் பார்க்க, அவனோ இவனைப் பொசுக்கும் பார்வை பார்த்தபடி, “உன் அருமைப் பொண்டாட்டியைக் கூப்பிடு” என்றான்.


“டேய், அவ பாவம்டா‌.‌.. அவளை டென்ஷன் பண்ணாத” என்று சொல்ல அடுத்த நொடி “தன்வி” என்று கத்தினான் ஆதர்ஷ்.


ரூமில் இருந்த தன்வியோ எதுவும் தெரியாமல், “ஆது வந்துட்டாரு போல” என்றபடி சிரித்த முகமாக வர, தர்ஷினி, அதீஷனைப் பார்த்து, “ரெண்டு பேரும் அமைதியா அங்க போய் உக்காருங்க… அவ முன்னாடி எதுவும் பேசுறது, சிக்னல் கொடுக்கிறது கூடாது” என்றான் அழுத்தமாக.


“ஹாய் ஆது… வந்துட்டீங்களா? எங்க என்னோட சாக்லெட்? என்றபடியே அவள் அருகில் வந்தாள்.


“உனக்குச் சாக்லேட் வேணும்னா, உன் புருஷனைக் கேட்டா கிலோ கணக்குல வாங்கித் தரப்போறான். ஏன் என்கிட்ட கேட்டுட்டு இருக்க தன்வி?” என்றவனின் குரலில் இருந்த வேறுபாட்டை முதலில் உணராத தன்வி, “ப்ச்ச்… எனக்கும் அவருக்கும் தான் பேச்சு வார்த்தையே இல்லயே… அப்புறம் நான் எப்படி அவர்கிட்டக் கேட்பேன்.” என்க, அதீஷன் மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவன், ‘இவ வேற, ஷோவே முடிஞ்ச அப்புறம் வந்து இன்ட்ரோ கொடுத்துட்டு இருக்கா” என்று மெதுவாக முணுமுணுக்க தர்ஷினி, அதீஷன் தோளில் தன் விரல் கொண்டு சுரண்டினாள்.


அதில் அவளிடம் திரும்பிய அதீஷன், “என்னத்துக்கு இப்ப எலி மாதிரிச் சுரண்டிட்டு இருக்கீங்க?“ என்று கேட்க தர்ஷினி, “இல்ல… அவர் இருக்கற கோவத்தில் தன்வியை எதுவும் அடிச்சிட மாட்டாரு இல்ல?” என்று பதட்டமாகக் கேட்டாள்.


“யாரு அவன்? தன்விய அடிக்கிறது?” என்று அலட்சியமாகச் சொன்னவன், “அட நீங்க வேற… அவளை அதட்டி ஒரு வார்த்தை பேசிடட்டும், நான் என்‌ ஒரு பக்கத்து மீசையை எடுத்திடுறேன்.” என்றான் தன் அண்ணனுக்கு தன்விமேல் இருக்கும் அன்பின் அளவைப் புரிந்தவனாக‌.


ஆதர்ஷன், தன்வியைப் பார்த்து, “அப்ப நீ அவன்கிட்டப் பேசமாட்ட இல்ல?” என்று கேட்க, அப்போதுதான் அவன் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்தவள், சட்டெனத் திரும்பி ஆதர்ஷ் முகத்தை ஆழமாகப் பார்த்தாள்.


அவன் முகத்தில் தெரிந்த வலியைப் பார்த்தே அவனுக்கு உண்மை தெரிந்துவிட்டது என்று புரிந்து கொண்டவள், தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு இழுத்து மூச்செடுத்தவள், தன் கணவனைப் பார்த்து, “தஷ்… எனக்குக் கொஞ்சம் மூச்சு வாங்குது, என்னால நின்னுட்டுப் பேசமுடியல, என்னைக் கொஞ்சம் உக்கார வைங்க” என்றது தான், அதீஷன் வரும்முன் அவளைத் தோளைப் பிடுத்து அருகில் இந்த சோஃபாவில் மெதுவாக அமர வைத்தான் ஆதர்ஷ்.


இருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்ட தன்வி, “ம்ம்ம்‌… இப்பப் பேசுங்க” என்றாள் நிதானமாக.


அவளை அடிப்பட்ட பார்வை பார்த்த ஆதர்ஷ், “ஏன் இப்படிப் பண்ண‌ தன்வி?” என்று கேட்டவன் குரலில் அத்தனை வலி.


அவன் கேள்விக்குத் தன்வியோ, “ம்ம்ம்… ஏன் இப்படிப் பண்ணேன்?” என்று அவன் சொன்னதையே திருப்பிச் சொன்னவள், “இதையே நான் திருப்பிக் கேட்டால்?” என்றாள்.


“புரியல…” என்றான் ஆதர்ஷ்.


“ம்ம்ம் புரியும்படியே கேக்குறேன். நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கேக்கும் போது நீங்க என்ன செஞ்சிருக்கணும்? முடியும், முடியாதுன்னு உங்க முடிவைச் சொல்லி இருக்கணும். அதைவிட்டு நீங்க என்ன பண்ணீங்க? உங்க தம்பியை வர வச்சு, உங்களை மாதிரியே நடிக்க வச்சு, நான் அவரைக் கல்யாணம் செய்யும் படியான சிட்டுவேஷனை உருவாக்குனீங்களே, அது ஏன்?” என்று கேட்க, ஆதர்ஷ் அவள் கேள்வியில் கடுப்பானவன், “ப்ச்ச் நான் என்ன கேட்டுட்டு இருக்கேன், நீ என்ன சொல்லிட்டு இருக்க? அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம்… அதைப்பத்தி இப்ப எதுக்குப் பேசிட்டு இருக்க நீ” என்றான் எரிச்சலாக.


“அந்த முடிஞ்சு போன விஷயத்துக்கு நீங்க கொடுத்த விளக்கம் தான், இப்ப நீங்க என்னைக் கேட்ட கேள்விக்கும் பதில்” என்றவளை ஆதர்ஷ் முறைக்க, அதீஷன் உதடு தாண்டத் துடித்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.


ஆதர்ஷ், “தன்வி…” என்று பல்லைக் கடிக்க, “இங்க பாருங்க பாஸ். நீங்க எப்படி நான் நல்லா இருக்கணும்னு உங்க தம்பியை என்னைக் கேக்காமலே என் தலையில் கட்டினீங்களோ… அதையே‌ தான் நானும் பண்ணி இருக்கேன். ஆனா, நான் உங்கள மாதிரி ஆள்மாறாட்டம் பண்ணி எல்லாம் ஏமாத்தல… ஜஸ்ட் ஒரு பொய் சொன்னேன், அவ்ளோதான்… நீங்க எனக்குப் பண்ணது நியாயம்னா… நான் உங்களுக்கு பண்ணதும் நியாயம் தான்.” என்றவளை முறைக்க மட்டுமே முடிந்தது ஆதர்ஷனால். 


“பச்ச்… பார்த்தீங்களா தர்ஷினி… என் பொண்டாட்டி எப்படி பாய்ண்ட் புடிச்சுப் பேசுறான்னு… அங்க பாருங்க உங்க ஆளை… பீஸ் போன பல்பு மாதிரி நிக்கிறான்.” என்று ஆதர்ஷனைக் கிண்டலடிக்க தர்ஷினி அவளவனைச் சொன்னதும் மூக்கின் மேல் கோவம் வந்துவிட, “அதீ… சும்மா அவரைக் கலாய்க்காதீங்க…” என்றாள் முகத்தைச் சுருக்கிக் கொண்டு.


அதைப் பார்த்துச் சிரித்த அதீஷன், “சரி… சரி… உங்க ஆளை எதுவும் சொல்லல போதுமா?” என்றவனின் குரலில் ஆதர்ஷ் அவனைத் திரும்பி முறைத்துப் பார்த்தான்.


அதைக் கண்ட தன்வி, “ஹலோ… அங்க என்ன என் புருஷனை முறைச்சிட்டு இருக்கீங்க? இதுல தஷ், வினிக்கா தப்பு எதுவும் இல்ல… இந்த எல்லாப் ப்ளானும் என்னோடதுதான். தர்ஷினி அக்காவை வரவச்சது, அவங்களுக்கு நம்ம ஆபிஸில் வேலை வாங்கிக் கொடுக்கச் சொல்லி தஷ்கிட்ட சொன்னது எல்லாம் நான் தான். எது பேசுறதா இருந்தாலும், என்கிட்டப் பேசுங்க… அவங்க ரெண்டு பேரையும் எதுவும் சொல்லக் கூடாது.” என்றவளை எதுவும் சொல்ல முடியாது முறைத்துக் கொண்டு இருந்தான் ஆதர்ஷ்.


“ஏன் தன்வி இப்படி எல்லாம் பண்ற? எனக்கு வலிக்குது பாப்பா.” என்றவனின் வேதனைக் குரல் அங்கிருந்த மூன்று பேரையும் பாதிக்க, தன்வி கண்களை மூடித் திறந்தவள், “சாரி ஆது… எனக்கு வேற வழி தெரியல. நீங்க இப்படி இருக்கும்போது நான் மட்டும் எப்படி சந்தோஷமா தஷ் கூட வாழ முடியும்னு நீங்க நினைக்குறீங்க? உங்களுக்கு என்மேல இருக்கற அன்பும், அக்கறையும் எனக்கு உங்க மேல இருக்காதா?” என்றவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அதிக உணர்ச்சி மிகுதியில் அவளுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது.


“தன்வி” என்று ஓடிவந்த அதீஷன் அவளை அணைத்துக் கொள்ள, ஆதர்ஷ் அவளைக் கண்ணீரோடு பார்த்துக் கொண்டு இருந்தான்.


அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்ட அதீஷன், “போதும்டி… உனக்கு மூச்சு வாங்குது. மத்ததை நாளைக்குப் பேசிக்கலாம்.” என்ற கணவனைப் பார்த்து இல்லை என்பது போல் தலையாட்டினாள்.


“இல்ல தஷ்… எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்” என்றவள், “ஆது என்மேல சத்தியம் பண்ணிச் சொல்லுங்க, உங்களுக்கு வினி அக்காவைப் பிடிக்கலன்னு…” என்றவள் தொடர்ந்து, “அப்படி மட்டும் நீங்க சொல்லிட்டால், நான் இதோட எல்லாத்தையும் நிறுத்திடுறேன். என்ன? ஒரு அப்பாவிப் பொண்ணை, கல்யாண ஆசை காட்டி இவ்ளோ தூரம் கூட்டி வந்து ஏமாத்தின குற்ற உணர்ச்சியும், பாவமும் எனக்கும்‌ என் புள்ளைக்கும் வரும். அவ்ளோ தானே‌… பரவாயில்ல, அது எங்க தலைவிதின்னு நினைச்சுக்குறேன். தர்ஷினியையும் இங்க இருந்து அனுப்பிடுறேன். நீங்க சத்தியம் பண்ணுங்க…” என்று பிடிவாதமாகச் சொன்னவளைப் பார்க்கப் பார்க்க ஆதர்ஷின் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது.


“ம்ம்ம், சத்தியம் பண்ணுங்க ஆது…” என்று அவள் அவனை நச்சரிக்க, அவனால் எப்படி சத்தியம் செய்து இயலும்? அவனுக்குத்தான் தர்ஷினியைப் பிடிக்குமே… அப்படி இருக்க, எப்படி துணிந்து தன்வி மேல் பொய் சத்தியம் செய்ய முடியும் அவனால். அதனால் அவன் அமைதியாக நிற்க, தன்வியோ விடாமல் அவனைச் சத்தியம் செய்யச் சொல்லிக் கொண்டே இருந்தாள்.


இதற்கு மேல் பொறுமையாக இருந்தால் தன் மனதில் இருப்பது வெளியே தெரிந்துவிடும் என்று பயந்த ஆதர்ஷ், நேராகப் போய் தர்ஷினி முன்னால் நின்று, “உனக்கு என்னைப் புடிக்கும் இல்ல வினி?” என்று கேட்டான்.


அவள் அதற்கு ஆமாம் என்று தலையாட்டினாள்.


“எனக்காக எதுவும் செய்வியா?” என்று அடுத்த கேள்வி கேட்க, தர்ஷினிக்குப் புரிந்து விட்டது அவன் என்ன கேட்கப் போகிறான் என்று.


அவனை நிமிர்ந்து பார்த்து விரக்தியாகச் சிரித்தவள், “என்ன கேட்டாலும் செய்வேன்” என்றவளைக் கலங்கிய கண்களுடன் பார்த்த ஆதர்ஷ், “என்னை மறந்திடு… இனிமே என்னை லவ் பண்ணாத… என்னை விட்டு விலகிப் போ” என்று சொல்ல, “ஆது” என்று தன்வியும், “தர்ஷா என்ன இது?” என்று அதீஷனும் கத்த, அவர்களை நோக்கிக் கைகாட்டிப் பேச வேண்டாம் என்று நிறுத்தியவன், “இது எங்க ரெண்டு பேருக்கும் இடையில் நடக்கும் விஷயம், இதுல நீங்க தலையிட வேண்டாம்.” என்றான் முடிவாக.


தர்ஷினியைப் பார்த்தவன், “சொல்லு வினி‌… நான் கேட்டதைச் செய்வியா?” என்று கேட்க, கண்ணீர் கோர்த்துக் கொண்ட விழிகளை அவனுக்குக் காட்டாமல் தலையைக் குனித்துக் கொண்டவள், “அதுதான் உங்களுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரும்னா… அதை நான் செய்வேன். இந்தப் ப்ராஜெக்ட் முடிஞ்சதும் இங்கிருந்து போயிடுவேன். அதுக்குப் பிறகு உங்க கண் பார்வைக்குள்ள கூட வரமாட்டேன்” என்றவளின் குரல் கரகரக்க, அவள் மனவலி அவள் குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.


கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அதீஷன், தன்வியைப் பார்த்தவள், “சாரி…” என்றவள் குரல் உணர்ச்சி துடைத்து வர, அவர்கள் இருவருக்கும் மனதில் பாரம் ஏறிப்போனது.


ஆதர்ஷின் முகம் பார்க்காமல், “வா…” என்று ஆரம்பித்தவள், பின் விரக்தியாகச் சிரித்தபடி, “போறேன் சார்” என்றுவிட்டு அங்கிருந்து நகர, உடனே ஆதர்ஷ், “இரு வினி.‌.. அதீயை ட்ராப் பண்ணச் சொல்றேன், தனியாப் போகாத.” என்றான்.


அதற்கு தர்ஷினி, அவனைத் திரும்பி வெற்றுப் பார்வை பார்த்தவள், “இனி எப்பவும் தனியா தான சார் இருக்கப் போறேன். பழகிக்குறேன்.” என்றவள் அங்கிருந்து செல்ல, அவளின் வார்த்தையின் உள்ளர்த்தம் ஆதர்ஷனை உயிரோடு வதைத்தது. 


ஆலன் விட்டுச் சென்றபோது உணராத வலியை தர்ஷினியின் ஒற்றை வார்த்தையில் உணர்ந்தான் ஆதர்ஷ். காதலில் தோல்வியின் வலியை அவளுக்குக் கொடுத்தவன், அதே வலியை அவனுக்குள் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை அறியான்.