இதயம் 11
இதயம் 11
அதிகாலை தூக்கம் கலைந்து எழுந்த ஆதர்ஷனின் பார்வை அங்கு மேசை மேல் இருந்த டிஜிட்டல் நாள்காட்டியில் பதிந்தது.
இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது அவன் தர்ஷினியைப் பார்த்து. அன்று இனி உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டுச் சென்றவள், அதன் பிறகு அவன் கண் முன்னால் கூட வரவே இல்லை. ஆனால் அவள் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் ஒழுங்காக, இன்னும் சொல்லப் போனால் வேக வேகமாகச் செய்து கொண்டிருந்தாள்.
அதற்கான காரணம் ஆதர்ஷனுக்கும் புரிந்தது. சீக்கிரம் ப்ராஜெக்ட் முடித்து விட்டு அவன் கண் பார்வையில் படாமல் வேறு நாட்டிற்குச் செல்ல அவள் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறாள் என்று கேள்விப்பட்ட நாளில் இருந்து அவன் அவனாக இல்லை. இந்தப் ப்ராஜெக்ட் முடிந்த பிறகு அவள் முகத்தைப் பார்க்க முடியாது என்ற எண்ணம் அவனை வெகுவாக பாதித்தது. அதற்காக அவள் காதலை ஏற்கவும் அவனால் முடியவில்லை. விருப்புக்கும், வெறுப்புக்கும் இடையில் மாட்டித் தவித்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷன்.
அவன் இப்படி என்றால் தர்ஷினியோ உயிர் தொலைத்த உடலாக மாறிப் போனாள்.
அன்று தர்ஷினியைப் பார்க்க, தன்வியோடு அவள் வீட்டுக்கு வந்திருந்தான் அதீஷன்.
முகத்தில் சிறிதும் உயிர்ப்பில்லாமல் உயிருள்ள இயந்திரம் போல் இருந்தவளைப் பார்க்கப் பார்க்க அதீஷனுக்கும், தன்விக்கும் குற்றவுணர்ச்சி அதிகரித்தது.
“அவங்க பாட்டுக்கு வேற நாட்டுல நிம்மதியா அவங்க வேலையப் பார்த்துட்டு இருந்தாங்க, நீ இவனுக்காக அவங்களை இங்க வர வச்சிட்டு, இப்ப அவங்க நிம்மதி, சந்தோஷம் எல்லாம் போச்சு.” என்று சொல்ல தன்விக்கு முகம் விழுந்து விட்டது.
“நான் நல்லது நெனச்சுதான் செஞ்சேன். இந்த ஆது இப்படி லூசு மாதிரி நடந்துப்பாருன்னு எனக்கு எப்படித் தெரியும்? நான் பார்த்து வளர்ந்த ஆது இவர் இல்ல, இப்ப ரொம்ப மாறிட்டாரு…” என்றவள் விட்டால் அழுது விடுவாள் போல் இருந்தது அவள் முகம்.
“ப்ளீஸ் தன்வி… நீ ஃபீல் பண்ணாத. இந்த மாதிரி நேரத்தில் நீ ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாது. அது பேபியை அஃபெக்ட் பண்ணும். ப்ளீஸ் காம் டவுன்…” என்றவள் அதீஷனைப் பார்த்து, “இதுல தன்வி மேலயோ உங்க மேலயோ… ஏன்? தர்ஷன் மேல கூட எந்தத் தப்பும் இல்ல அதீ… இது முழுக்க முழுக்க என்னோட தர்ஷன் மேலான காதலால் நடந்த தப்பு. அவர் வேணாம்னு சொல்லியும் பிடிவாதமா அவரையே நினைச்சு இருந்த, இருக்கப் போற என்னோட தப்பு. இதுல தன்வியை நீங்க திட்ட ஒண்ணும் இல்ல. அவ என்னை இங்க வரச்சொல்லி கூப்பிட்டா தான். ஆனா, இந்த விளையாட்டுக்குள்ள நான் என் முழு விருப்பத்தோட தானே உள்ள வந்தேன். அட் தீ எண்ட் என் தர்ஷன் எனக்குக் கிடைப்பாருன்ற ஒரு சின்ன நப்பாசையில் வந்துட்டேன். அதுக்கு இப்ப அனுபவிக்கிறேன்.” என்றவளின் கண்கள் அழக்கூட கண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்தது.
“ஆதுக்கு உங்களைப் பிடிச்சிருக்கு அக்கா… ஆனா, ஏன் அதை ஒத்துக்க மாட்டேங்குறார்னு தான் தெரியல…” என்றாள் தன்வி வருத்தமாக.
“எஸ் தர்ஷினி… அவனுக்கு உங்களைப் புடிச்சிருக்கு. சொல்லப்போனா, அவனுக்கும் உங்க மேல ஃபீலிங்ஸ் இருக்குன்னு தான் எனக்குத் தோணுது. இந்த ஒரு வாரமா அவன் அவனாவே இல்ல… எதையோ பறிகொடுத்த மாதிரி தான் சுத்திட்டு இருக்கான். ஆலன் அவனை விட்டுப் போன சமயம் கூட அவன் இப்படி உடைஞ்சு போகல… ஆனா, இப்ப மனசளவில் அவன் ரொம்ப உடைஞ்சு போயிருக்கான். அதுக்குக் காரணம் நீங்க தான்.” என்றவன் தொடர்ந்து, “அவனுக்கும் அவனோட மாற்றம் எல்லாம் நல்லாப் புரியுது. ஆனா, ஏன் அதை வெளிப்படையா ஒத்துக்க மாட்டேங்குறான்னு தான் புரியல… அவனோட அந்த முடிவுக்குப் பின்னாடி ஏதோ பெரிய காரணம் இருக்கு. அவன் அதை வெளிய சொல்லத் தயங்குறான்.” என்றவனின் யோசனை எங்கோ சொல்ல, தன்வி தன் கணவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏன் ஆது இப்படிச் செய்றாரு? இதுக்குப் பின்னாடி என்ன காரணம் இருக்கும்னு நீங்க நினைக்குறீங்க தஷ்.?” என்று கேட்க, தன்வியையும் தர்ஷினியையும் மாறிமாறிப் பார்த்தவன், “எனக்கு ஒரு கெஸ் இருக்கு, அதுமட்டும் சரியா இருந்தால்…” என்றவன் முக மாற்றத்தைப் பார்த்த தன்வி, அவன் தோளில் கைவைத்து அழுத்த அதில் உணர்வுக்கு வந்தவன் தர்ஷினியைப் பார்த்து, “நீங்க கவலைப்படாமல் இருங்க… நாங்க எங்களால் முடிஞ்சதைப் பண்றோம். நம்பிக்கையோட இருங்க” என்றவன் சற்றுப் பொறுத்து, “அவன் இல்லாட்டி என்ன? உங்க அழகுக்கும் நல்ல குணத்துக்கும் உங்களுக்கு இதைவிட நல்ல வாழ்க்கை அமையும்.” என்றவனை வலியோடு ஏறிட்டுப் பார்த்த தர்ஷினி, “நான் அன்னைக்குச் சொன்னது தான் அதீ. நான் வாழ தர்ஷனோட ஞாபகங்கள் மட்டும் போதும் எனக்கு.” என்றவளிடம் அவன் ஏதோ சொல்ல வர, போதும் என்பது போல் கை காட்டியவள்,
“நான் நல்லா இருக்கேன் அதீ. நீங்க ரெண்டு பேரும் தேவையில்லாமல் என்னைப் பத்தி யோசிக்காதீங்க…” என்றவள் மெல்லிய குரலில், “இந்தக் கோவத்தை அவர் மேல காட்டாதீங்க… நீங்க, தன்வி, அமிர்தா அம்மா மூணு பேரும் தான் அவர் உலகமே… நீங்க அவரை வெறுத்தால் அவரால் தாங்க முடியாது…” என்றாள் வேண்டுதலாக.
இப்போதும் அவனுக்காக யோசிக்கும் இந்தப் பைத்தியக்காரப் பெண்ணை என்ன சொல்வது என்று தெரியாமல் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
காரில் அமைதியாக வந்த கணவனைப் பார்த்த தன்வி, “ஆது, தர்ஷினியை வேணாம்னு சொல்ல என்ன காரணம் இருக்கும்னு நீங்க யோசிக்குறீங்க?” என்று கேட்க, அவன் அவளைத் திரும்பிப் பார்த்தவன் எதுவும் பேசாமல் மீண்டும் காரை ஓட்ட, தன்விக்குப் புரிந்துவிட்டது அவன் என்ன நினைக்கிறான் என்று.
“இதைப்பத்தி என்னால அவர்கிட்டப் பேச முடியாது. நீங்க பேசிப் பாருங்க…” என்றவளைப் பார்த்தவனுக்கு தான் சொல்லாமலே தன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட தன்னவளின் புரிதலில் உள்ளுக்குள் கர்வம் கொண்டவன், “ம்ம்ம்” என்றுபடி கண்களை மூடித் திறந்தான்.
“ஒருவேளை, அப்படி இருந்தால் கூட தர்ஷினி அக்கா அவரை வெறுக்க மாட்டாங்க தஷ்.”
“எனக்குத் தெரியும்டி… இன்பேஃக்ட் இது தர்ஷனுக்கும் தெரியும். அதான் அவங்களை விட்டு விலகிப் போறான்.” என்றவன் ஆதர்ஷனிடம் இதைப்பற்றிப் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.
அன்று ஒரு வியாபார ரீதியான பார்ட்டி இருக்க, அதீஷனுடன் தயாரானாள் தன்வி.
தன் சூல் கொண்ட வயிற்றில் புடவை கட்ட முடியாமல் தவித்தவள், தன் மகவின் வளர்ச்சியில் மேடிட்டிருந்த வயிற்றைத் தொட்டுப் பார்க்க, அவளின் இதழ்களில் கீற்றுப் போல் குறுநகை தோன்றியது.
அவள் அருகில் வந்த அதீஷன், “சொன்னாக் கேளு தன்வி… புடவை எல்லாம் வேணாம். எதாவது கவுன் மாதிரி போட்டுக்க” என்றவனைப் பார்த்து இடவலமாகத் தலையாட்டி இல்லை என்றவள், “இங்க வந்ததில் இருந்து எப்பவும் கவுன் தான் போட்டுட்டு இருக்கேன். தர்ஷினி அக்கா வேற நிறைய பிரக்னன்சி கவுன் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டாங்க... நானும் அதையே போட்டுட்டு எப்பவும் திருப்பதி உண்டியல் உரை மாதிரி பொம்முன்னு திரிஞ்சிட்டு இருக்கேன். அட்லீஸ்ட் இன்னைக்காது புடவை கட்டுறேன்.” என்றவளைப் பார்த்து அழகாகச் சிரித்த அதீஷன், “உன் இஷ்டம்.” என்றவன் கீழே அமர்ந்து அவள் புடவையைச் சரிசெய்து விட்டான்.
புடவை கட்டி முடித்தவள், “எப்படி இருக்கேன்?” என்று ஆர்வமாகக் கேட்க, அவளை மேலிருந்து கீழ் உற்றுப் பார்த்தவன், “செம்ம அழகா இருக்கடி… முன்னையும் நீ அழகுதான். ஆனா, இப்ப என்னமோ ஒரு மாதிரி செம்ம அழகா இருக்க. சிம்பிளா சொல்லணும்னா டிவைன்.” என்றவன் அவள் நெற்றியில் முத்தம் பதிக்க, அவள் கன்னத்தில் வெட்கத்தின் செழுமை சிவப்பாக மின்னியது.
அவனைத் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கட்டிக்கொண்ட தன்வி, “இதே மாதிரி எப்பவும் நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் தஷ்…” என்றவளின் குரல் உணர்ச்சி மிகுதியில் கரகரக்க, அவள் தலையைத் தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்ட அதீஷன், “நம்ம புள்ளை பொறந்து அதுங்களுக்குக் கல்யாணம் ஆகி பேரன், பேத்தி எடுக்கும் வரை நான் இப்ப மாதிரியே உன்னைக் காதலிச்சுட்டே இருப்பேன்டி…” என்றவனை அவன் மார்பில் சாய்ந்தபடியே நிமிர்ந்து பார்த்தவள், “அப்ப பேரன், பேத்தி வந்த பிறகு என்னை லவ் பண்ண மாட்டீங்களா.?” என்று செல்லமாகச் சிணுங்க சத்தம் போட்டுச் சிரித்த அதீஷன், “நான் சாகும் வரை உன்னை லவ் பண்ணுவேன்டி, போதுமா?” என்று சொல்ல, பட்டென்று அவன் வாயிலேயே ஒரு அடியைப் போட்டாள் தன்வி.
“என்ன பேச்சு இது அபச குணமா?” என்று கண்கள் கலங்கிபடி முறைத்துக் கொண்டிருந்தவளை, மீண்டும் இழுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டவன், “உண்மைதான். நான் இருக்க வரை உனக்கு ஒண்ணும் ஆக விடமாட்டேன். நீ போன பிறகு நானும் இருக்க மாட்டேன்.” என்றவனின் காதலின் ஆழத்தை நினைத்தவளுக்குக் கண்கள் கலங்கிப் போனது.
“நான் போன பிறவியில் ரொம்பப் புண்ணியம் பண்ணி இருக்கேன் தஷ். அதான் கடவுள் எனக்கு உங்களைக் கொடுத்திருக்காரு… எனக்கு மாதிரியே அந்தக் கடவுள் மனசு வச்சு, ஆதுவையும் தர்ஷினி அக்காவையும் சேர்த்து வச்சிட்டாருன்னா எனக்குப் போதும். அதுக்குப் பிறகு நான் கடவுள்கிட்ட ஒண்ணுமே கேக்க மாட்டேன்.” என்றவளைத் தன்னில் இருந்து பிரித்தவன், “நீ ஆசைப்பட்டது நடக்கும்டி… கண்டிப்பா அவங்க கல்யாணம் பண்ணிச் சந்தோஷமா வாழறதை நம்ம பார்ப்போம்.” என்று எதையோ யோசித்தவன், “நீ நினைச்சா அதைச் செய்ய முடியும் தன்வி. நீ தர்ஷன்கிட்ட ஒரு சத்தியம் வாங்கி இருக்க இல்ல… அதை வச்சு நீ அவனைத் தர்ஷினியை மேரேஜ் பண்ணிக்கச் சொல்லி சொல்லலாம் இல்ல…” என்றவனைப் பார்த்து இல்லை என்பது போல் தலையாட்டிவள், “அது தப்பு தஷ்… அப்படி செஞ்சா அது நான் தர்ஷினி அக்கா காதலை அசிங்கப்படுத்தின மாதிரி ஆகிடும். எப்பவும் நான் அந்தத் தப்பை மட்டும் செய்ய மாட்டேன்.” என்றவளை மெச்சும் பார்வை பார்த்த அதீஷன் மனதிலும் அதே எண்ணம் தான் இருந்தது.
“இன்னைக்குப் பார்ட்டிக்கு தர்ஷினி அக்கா வருவாங்க இல்ல?” என்று கேட்டாள் தன்வி கணவன் முகம் பார்த்து.
“ம்ம்ம்… நான் நேர்ல போய் கூப்பிட்டு வந்திருக்கேன். கண்டிப்பா வருவாங்கன்னு தான் நினைக்குறேன்.” நீ வா… கீழ போலாம்” என்றவன் தன்வியுடன் கீழே வர அங்கு ஏற்கனவே தயாராகி அமர்ந்திருந்தான் ஆதர்ஷ்.
அன்றைய நிகழ்வுக்குப் பிறகு தன்வி, ஆதர்ஷனுடன் பேசுவதையே தவிர்த்தாள். அவள் பேசாமல் இருப்பது அவனுக்கு எவ்வளவு பெரிய வலியைக் கொடுக்கும் என்று தெரிந்தே அந்த வலியை அவனுக்குக் கொடுக்க நினைத்தவள் அறியவில்லை, அவன் அதைவிடப் பெரிய வலியைக் கடந்த ஒரு வார காலமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
ஆம்… தன்வி கடந்த ஒரு வாரமாகத் தன்னுடன் பேசவில்லை என்பதைக் கூட உணர முடியாத அளவுக்கு தர்ஷினியின் நினைவிலேயே மூழ்கிப் போய் இருந்தான், என்பது அவன் உள்ளம் மட்டுமே அறிந்த உண்மை.
“டேய், நீ ரெடியா? போலாமா?” என்று கேட்ட ஆதீஷனுக்கு, தலையை மட்டும் ஆட்டிப் போலாம் என்றவன் அமைதியாகச் செல்ல ஆதீஷன், தன்வி இருவருக்கும் அவனைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.
“ஏன் இவன் இப்படிப் பண்றான்? இங்க இவன் முகத்தைப் பார்க்கவே முடியல, அங்க தர்ஷினி முகத்தைப் பார்க்க சகிக்கல… இவனும் கஷ்டப்பட்டு அவங்களையும் கஷ்டப்படுத்தி, நம்மையும் சேர்த்து வாட்டி எடுக்கிறான்.” என்று ஆதீஷன் கோவத்தில் கொதிக்க, தன்வி “ம்ம்ம்…” என்று இழுத்துப் பெருமூச்சு விட்டவள், “இவரை வர வரப் புரிஞ்சிக்கவே முடியல தஷ்… ஆனா, மனசுல எதையோ வச்சிட்டு தான் இவரு இப்படி எல்லாம் நடந்துக்குறாரு… நீங்க முதல்ல அவர்கிட்டப் பேசுங்க… அதுக்குப் பிறகு என்ன பண்ணறதுன்னு பார்க்கலாம். இப்ப வாங்க போலாம், ஆது வெய்ட் பண்றாரு…” என்றவளை அழைத்துக் கொண்டு சென்றான் அதீஷன்.
பார்ட்டிக்கு வந்தும் எதையோ பறிகொடுத்தது போல் அமர்ந்திருந்தான் ஆதர்ஷ்.
“இவனை என்ன பண்ணறதுன்னே தெரியலடி… எல்லாரும் என்கிட்ட வந்து, வாட் ஹேப்பன் டூ தர்ஷன். அவரு ஏன் ஒருமாதிரி இருக்காருன்னு துக்கம் விசாரிக்கிற மாதிரி கேட்டுட்டு இருக்காங்க…” என்று எரிச்சலாகச் சொல்ல, “ப்ளீஸ் தஷ்… அவரு நிலமை சரியில்ல, விடுங்க” என்றவள் திரும்பிப் பார்க்க அங்கு தர்ஷினி வந்து கொண்டிருந்தாள்.
“தஷ்… வினி அக்கா வராங்க” என்று சொல்லத் திரும்பி தர்ஷியைப் பார்த்தவனுக்கு தர்ஷன் மேல் குறைந்திருந்த கோபம் மீண்டும் துளிர் விட்டது.
“எப்படி சிரிச்சிட்டு சந்தோஷமா இருந்தாங்க… ஒரே வார்த்தையில் அவங்க சிரிப்பைக் கொன்னுட்டானே, இந்த லூசுப்பய” என்று பொரிய, தன்விக்கு தான் அவனை அடக்கி தர்ஷினி இருக்கும் இடம் அழைத்துப் போவது பெரும்பாடாகிப் போனது.
தர்ஷினி அந்த இடத்தில் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடி ஆதர்ஷனுக்கு உடல் சிலிர்த்து அடங்கியது.
சட்டெனத் திரும்பிப் பார்த்தவனின் விழிகளில் தன்வி, அதீஷனிடம் பேசிக் கொண்டிருந்த தர்ஷினி தெரிந்தாள்.
அதுவரை வெயிலில் வறண்டிருந்த பாலை நிலம் போல் இருந்தவன் மனதிற்குள், ஆகாய கங்கையாக இறங்கி வந்தாள் பெண்ணவள்.
ஒரு வாரம் அவளைப் பார்க்காமல் தவித்துக் கிடந்தவனுக்கு, அவளைப் பார்த்த கணம் அவளை ஏன் பார்த்தோம் என்று தான் தோன்றியது.
கண்கள் இருண்டு, உடல் மெலிந்து, உயிரற்ற கூடு போல் பார்க்கவே பாவமாக இருந்தவளைப் பார்த்தவனுக்கு, அவனையும் மீறிக் கண்கள் கலங்கிவிட நெஞ்சம் அடைத்துக் கொண்டது.
’என்னாச்சு இவளுக்கு? ஒழுங்கா சாப்பிடுறது, தூங்குறது இல்லயா? ரொம்ப இளைச்ச மாதிரி இருக்காளே? ஒருவேளை உடம்புக்கு எதுவும் முடியலியா?’ என்று அவளைப் பார்த்த ஒரு நொடியில் ஆயிரம் எண்ணங்கள் அவன் மனதில் தறிகெட்டு ஓடியது.
உடனே அதீஷனைக் கைப்பேசியில் அழைத்தான்.
திரையில் ஆதர்ஷன் எண்ணைப் பார்த்ததும், “நான் உள்ள போறேன்” என்று தர்ஷினி விலகிச் செல்ல, அழைப்பை ஏற்றுக் காதில் வைத்த அதீ, “சொல்லு” என்றான் கடுப்பாக.
“டேய், வினி ஏன் பார்க்க ஒரு மாதிரி இருக்கா? அவளுக்கு உடம்புக்கு எதுவும் சரியில்லயா? பார்க்க ரொம்ப இளைச்சிப்போய் இருக்கா? சரியா சாப்பிடுறாளா இல்லயா?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்க அதீஷன் பெருமூச்சு விட்டபடி, “நீ செஞ்ச வேலைக்கு அவங்க இப்படி இல்லாம வேற எப்படி இருப்பாங்கன்னு எதிர்பார்க்குற?” என்றவன் தொடர்ந்து, “அவங்களைச் சொல்றியே, நீ உன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து எத்தனை நாள் ஆகுது? முதல்ல போய் உன்னைப் பாரு… அவங்க ஏன் இப்படி இருக்காங்கன்ற காரணம் உனக்குத் தன்னால புரியும்.” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.
ஆதர்ஷனுக்கு தர்ஷினியின் நிலையை நினைத்து உள்ளுக்குள் பதைபதைத்தது.
“இவளை இப்படியே விட்டா அவ வாழ்க்கையே நாசமாப் போயிடும். என்னால மாறிப் போன அவ வாழ்க்கையை, நான் தான் சரி பண்ணனும்…” என்று முடிவெடுத்தவன் அதற்கான வேலைகளில் முழுமூச்சாக இறங்கினான்.