அழகிய தமிழ் மகள் 15

அழகி 15


‌அந்த கல்யாண மண்டபம் முழுவதும் சொந்தங்களால் நிறைந்து வழிந்தது. திரும்பும் திசையெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்த முகங்கள் தான் தெரிந்தது.


நான்கு குடும்பத்திற்கும் செல்லப் பெண்ணான சம்யுக்தாவின் திருமணம். ஒரு நாட்டின் இளவரசியின் திருமணம் போல் அனைத்து ஏற்பாடுகளையும் அவ்வளவு விமர்சையாகச் செய்திருந்தனர் யுக்தாவின் அன்பு அண்ணன்கள்.


உதய் மணமேடையில் கம்பீரமாக அமர்ந்திருக்க, இங்கு மணமகள் அறையில் ஒரு கலவரமே நடந்து கொண்டிருந்தது.


ராம் ஒரு பக்கம் அவன் வாங்கி வந்த நகையைப் போட சொல்ல, வினய் ஒரு புறம் அவன் வாங்கி வந்த நகைகளைக் கடை பரப்பிவைக்க, வெற்றி, ஜீவா, விஷ்ணு தன் பங்கிற்குச் சில நகைகளை வைத்துக் கொண்டு அதை யுக்தா போட்டே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்க, நான்கு அப்பாக்களும் அவரவர் வாங்கி வந்ததையும் எடுத்து வைக்க இதில் பரதனும் கூட்டு சேர்ந்து கொண்டார்.



இவர்கள் செய்த அழும்பில் அயர்ந்து போன கோதையும், சாருமதியும் இவர்களுடன் சண்டை போட்டு முடியாமல், "அய்யோஓஓஓஓ…" என்று உட்கார்ந்து விட, மது, கயல்விழி, நிஷா, ஜானவி, ராஷ்மியும் கூடப் "போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்…" என்று தலையில் கை வைத்துத் தரையில் கால் நீட்டி உட்கார்ந்து விட்டனர்.


யுக்தா அங்கு நடக்கும் வேடிக்கைகளை எல்லாம் பார்த்து, 'பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா!' என்று எழுந்தவள்,


"டேய் அண்ணாஸ்… என்ன நெனச்சிட்ருக்கீங்க நீங்க? இம்புட்டு நகையைக் கடை பரப்பி வச்சிட்டு வெளயாடுறீங்களா? இங்க என்ன நகைகடை அட்சூட்டிங்கா நடக்குது? இவ்ளோ நகையைக் குமிச்சு வச்சிருக்கீங்க. ஒழுங்கு மரியாதையா இப்ப எல்லாரும் வெளியபோறீங்களா இல்லயா?" என்று இடிப்பில் கை வைத்து முறைக்க,


"அடியேய் ராங்கி… என்னடி வாய் ரொம்பத் தான் நீளுது…" என்று ஒரு குரலில் வர, அந்தக் குரல் யாருடையது என்று உணர்ந்த யுக்தா முகத்தில் மகிழ்ச்சி புன்னகை விரிய, அதை மறைத்தவள் முகத்தை முறைப்பாக வைத்துக் கொண்டு திரும்ப, அங்கு வினய், மதுவின் அப்பா கணேஷின் அம்மா சிவகாமி யுக்தாவை எரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.



“ஏன் டி ராங்கி என் மகன்களும், பேரப்புள்ளைகளும் ஆசைய உனக்கு இம்புட்டு நகையை வாங்கிக் குமிச்சிருக்கானுங்க... என் பேத்தி மது கல்யாணத்துக்குக் கூட இம்புட்டு செய்யல…" என்று அலுத்துக் கொண்டவர், "ஆனா உனக்கு நகை கடையையே வாங்கிட்டு வந்திருக்காங்க… அதுக்குச் சந்தோஷப்படமா, அவங்களை வெரட்டிட்டு இருக்க… என்ன திமிர் டி உனக்கு?"


"ஆமா கெழவி திமிர் தான். அதுக்கு இப்ப என்னவாம்? இவ்ளோ நகையை எப்படிப் போட்டுக்கிறதாம். எனக்கு என்ன பத்துக் கழுத்தா கெடக்கு. உனக்குக் கொஞ்சமாச்சு கூறு இருந்தா இப்படிப் பேசுவியா?" என்று சிவகாமியிடம் சரிக்கு சரி வாயடித்தவள், சிவகாமி பாட்டியின் கணவர் முத்துவிடம் திரும்பி,


"இதுக்குத் தான் டார்லிங் நான் உனக்குப் படிச்சு படிச்சு சொன்னேன். இந்தக் கெழவிய வெட்டி விட்டுட்டு என்னை இரண்டாவது கல்யாணம் கட்டிக்கோ. நா உன்னைக் கண்ணுல வச்சு பாத்துக்குறேன்னு, நீ கேட்டியா? இப்படி ஒரு கூறு கெட்ட கெழவிகிட்ட உன் வாழ்க்கையை அடகு வச்சிடியே டார்லிங்…" என்று சிவகாமியை வெறுப்பேத்த,


"என்ன பண்றது சமி குட்டி எல்லாம் என் தலையெழுத்து!" என்று முத்து எறியும் தீயில் இன்னும் எண்ணெயை ஊத்த,


"அடி செருப்பால… வாடி என் சக்களத்தி… உனக்கு எம்புட்டு திமிர் இருந்தா எம் புருஷனையே வளைக்கப் பாப்ப? கண்ணுல வச்சு பாத்துப்பியா நீயி? மகளே அந்தக் கண்ணையே நோண்டி புடுவேன் நோண்டி.‌ கல்யாண நாளும் அதுவும பேச்ச பாரு கழுதைக்கு. யோவ் என்னய்யா அவளையே பாத்துட்டு இருக்க… என்னை விட்டுட்டு இந்தச் சிறுக்கிய கட்டிக்குவியா நீ?" என்று அனலாய் முறைக்க, முத்து கப்பென வாயை மூடியவர் டக்கென வெளியே ஓடிவிட அவர் போனவுடனே இனி யுக்தா, சிவகாமி சண்டையில் தங்கள் டங்குவாறு அந்துவிடும் என்று பயந்து தெரிந்து ஓடி விட்டனர் மற்ற ஆண்களும்.‌


"அடியேய் குமாரிகளா… மூகூர்த்த நேரம் நெருங்குது. இந்தக் கழுதைய சீக்கிரம் அலங்காரம் பண்ணி இழுத்துட்டு வாங்க…" என்றவர் யுக்தாவை பார்த்து முறைத்து தன் தாடையை தோளில் இடித்துக் கொண்டு வெளியே வந்தவர்,


"அடியேய் மதி…" என்று தன் மருமகளை அழைத்தவர், கனமான தங்க வளையல் இரண்டை சாருமதி கையில் வைத்து திணித்து, "அடியேய் இது உங்க மாமனார் அம்மாவோட வளையல். ரொம்ப ராசியான வளையலும் கூட. நம்ம ஊர் எல்லைசாமி கோயில்ல வச்சு பூச பண்ணி எடுத்துட்டு வந்தேன். இதை அந்த ராங்கிக்குப் போட்டுவிடு. நான் தான் தந்தேன்னு சொல்லாத… என்ன புரிஞ்சிதா? சும்மா மசமசன்னு நிக்காம போய் அவள ரெடி பண்ணு. நேரம் ஆகுது சீக்கிரம். அப்பறம் கன்னத்துல திஷ்டி பொட்டு வைக்க மறந்துடாத… ஏற்கனவே தங்க சிலை மாதிரி இருப்பா… இப்ப கல்யாண பொண்ணா இன்னும் அழகா இருந்து தொலையும் அந்தக் கழுத…! ஒருத்தர் கண்ணு மாதிரி இன்னொருத்தர் கண்ணு இருக்காது புரிஞ்சிதா?" என்று மருமகளுக்கு ஒன்றுக்கு ரெண்டு முறை சொல்லிவிட்டு சிவகாமி அங்கிருந்து செல்ல,


"அம்மாடி போய்ட்டாங்கடா சாமி…" என்று சாருமதி இழுத்து நிம்மதி பெருமூஞ்சு விட்டவர், யுக்தாவிடம் அந்த வளையல்களைக் கொடுக்க அந்த வளையலை பார்த்தவுடனேயே யுக்தாவிற்குத் தெரிந்துவிட்டது அதை யார் கொடுத்திருப்பார்கள் என்று.


அவளின் சின்ன வயதில் அவள் ஆசைப்பட்டு அந்த வளையல் வேணும் என்று பலமுறை சிவகாமியிடம் சண்டையிட்டிருக்கிறாள்.


இன்று அந்த வளையல் அவள் திருமணத்தன்று அவளுக்குக் கிடைத்த மகிழ்ச்சியில், அவள் முகம் முழுவதும் புன்னகையில் மிளிர, தன் கைகளில் இருந்த வைர வளையல்களைக் கழட்டியவள், சிவகாமி கொடுத்த வளையல்களைக் கண்ணாடி வளையோடு சேர்ந்து அணிந்து கொண்டாள்.


அனைவரும் மணமகள் அறையையே ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்க, அரக்கு வண்ணப்பட்டில், தங்கச்சரிகை பளபளக்க, அப்பாக்களும், அண்ணன்களும் வாங்கிக் கொடுத்த நகைகளில் அவரவர் மகிழும் படி ஒவ்வொரு நகையை அணிந்து, மணமகளுக்கான முழு அலங்காரத்துடன், தலைநிறைய பூச்சூடி, நடுநெற்றியில் மெரூன் வண்ண பொட்டிட்டு, அதற்குமேல் மெல்லியதாக விபூதி வைத்து, குழி விழும் பட்டுக் கன்னத்தில் சின்னதாகக் கருப்பு மையில் திருஷ்டி பொட்டு வைத்து, தேவதை பூமியில் இறங்கி வருவதுபோல் மெதுவாக நடந்து வருவதைப் பார்க்க இரண்டு கண்கள் போதவில்லை அனைவருக்கும்.


யுக்தா குனிந்த தலையோடு நடந்து வந்தவள், சிவகாமி அருகில் வந்ததும் வேண்டுமென்றே வளையல் பூட்டிய கையை அவர் முகத்திற்கு முன் நீட்டி குலுக்கியவள் அவர் முறைத்ததும், தலைமுடியை காதுக்குப் பின் ஒதுக்குவது போல் நடித்து விட்டு நகர, “திமிர் புடிச்ச கழுத…” என்று திட்டிக் கொண்டே சிவகாமி மணமேடைக்குச் சென்றார்.


உதய்யும், யுக்தாவும் அருகருகில் அமர்ந்திருக்க, பெண்ணைத் தாரை வார்க்க பரிதி, ஆனந்தியை அழைக்க, பரிதியோ "சமி பொறந்த உடனேயே அவளை ராம், வினய் கையில் தந்துட்டேன். அவனுங்களுக்குத் தான் அவமேல முழு உரிமையும் இருக்கு. அதனால ராமும், மதுராவும் அவளுக்கு அண்ணா, அண்ணி இடத்துல இருந்து தாரை வார்த்து தருவாங்க…" என்று முடிவாகச் சொல்லிவிட ராமிற்குக் கண்கள் கலங்கி விட்டது.


ராமும், மதுவும் தம்பதிகளாக இருந்து அனைத்து சடங்குகளையும் செய்ய, வினய்யை அனைத்து சடங்களிலும் கூடவே இருந்திக் கொண்டான் ராம்.


முகூர்த்த நேரம் நெருங்க முத்துவும், சிவகாமியும் தாலி எடுத்து கொடுக்க, உதய், யுக்தா கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டு, மிஸ். சம்யுக்தா இளம்பிரிதியை, மிஸஸ்.சம்யுக்தா உதய்பிரதாப்பாக மாற்றி விட்டான்.


திருமண நல்லபடி முடிய, உதய்யும், யுக்தாவும் திருமணக் கோலத்தில் வீடு வந்து சேர்ந்தனர். உதய்யின் அப்பாவின் பிஸ்னஸ் மும்பையில் இருப்பதால் அவரும், உதய் அம்மாவும் மும்பையில் தான் இருந்தனர்.


உதய் இப்போது சென்னையில் தன் தொழிலை தொடங்கி இருந்ததாலும், யுக்தாவுக்கும் சென்னையில் தான் வேலை என்பதாலும், யுக்தா வீட்டிற்கு அருகிலேயே ஒரு பிளாட்டை விலைக்கு வாங்கி இருந்தான் உதய்.


திருமணம் முடிந்து தம்பதிகள் இப்போது அங்குத் தான் வந்திருந்தனர். இதில் அனைவருக்கும் செம்ம குஷி தான். இனியும் யுக்தா தங்கள் அருகிலேயே தான் இருப்பாள் என்ற மகிழ்ச்சி நிறைந்திருந்தது அனைவர் மனதிலும்.


அனைத்து சடங்குகளும் முடிந்து புதுத் தம்பதிகள் அமைதியாக அமர, காலையில் இருந்து கல்யாண வேலையில் சுற்றிக் கொண்டிருந்த அனைவரும் காற்று பிடிங்கிய பாலுன் போல் புஸ் சென்று ஆகிவிட, கிடைத்த இடத்தில் சுருண்டு படுத்து தூங்கி விட்டனர்.


மாலைப் போல் சாந்தி முகூர்த்த ஏற்பாடுகள் தொடங்கி நடந்து கொண்டிருக்க, ஜீன்ஸ் பேண்ட், சண்டையில் தயாராகி வெளியே வந்த யுக்தாவை பார்த்து அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்று விட்டனர்.


"ஏய் சமி என்ன டி இது? பட்டுப்புடவை எங்கடி? ஏன் இந்த டிரெஸ்ல வந்து நிக்குற நீ?" என்று ஆனந்தி முறைக்க,


"அம்மா ஒரு முக்கியமான வேலைம்மா. அவசியம் நா போகணும் ம்மா. கேஸ் பத்தி ஒரு லீட் கெடச்சிருக்கும்மா…" என்ற யுக்தாவை குடும்பம் முழுவதும் தீயாக முறைக்கச் சிவகாமி தன் வாயை திறந்து விட்டார்.


"ஏன் டி, என்ன தான் டி நெனச்சிடு இருக்க நீ? உன்னை அடக்க ஆளே இல்லான்னு நெனச்சிட்டு ஆடிட்டு இருக்கீயா? காலையில் தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு… மதியம் சாப்ட்டது கூட இன்னும் செரிக்கல… அதுக்குள்ள குழாயை மாட்டிட்டு வந்து வெளிய போறேன்னு நிக்குற… ஒழுங்கு மரியாதைய போய் குளிச்சிட்டு, புடவை கட்டி ராத்திரி சடங்குக்கு ரெடியாகுற வழிய பாரு…" என்று தன் கணீர் குரலில் கத்த,


"அய்யோ கெழவி சொல்றதை புரிஞ்சுக்க… என்னோட வேலை அப்படி. நான் இப்ப போயே ஆகணும். நா சீக்கிரம் வீட்டுக்கு திரும்பி வந்துடுவேன்…" என்று தான் பிடித்த பிடியில் ஒற்றைக் காலில் நிற்க,


"அப்படி என்னடி பெரிய வேலை? கல்யாண நாளும் அதுவுமா போயே ஆகணும்னு சொல்ற வேலை?" என்று சிவகாமி ஒரு பக்கம் குதிக்க ஆனந்தி, கோதை, சாருமதி என்று அனைவரும் சிவகாமி பாட்டி பக்கமே பேசினர்.


கடைசியாக உதய் சொல்லிய சொல்லில் அனைவரும் அடக்கினார்.


"அவ வேலை அப்படி பாட்டி. எல்லாம் தெரிஞ்சு தானே நான் சமிய விரும்பி கட்டிக்கிட்டேன். அவ போகட்டும் பாட்டி…" என்று உறுதியாகச் சொல்லிவிட,


"இங்க பெரியவங்க பேச்சுக்கு எங்க மரியாதை இருக்கு? எப்படியோ போங்க…" என்ற சிவகாமி,


"அடியேய் ராங்கி உனக்கு ஏத்த புருஷன் தான் கெடச்சிருக்கான். சீக்கிரம் போய்ட்டு இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேரு…" என்றவர் புலம்பிக் கொண்டே செல்ல, நிஷா வேறு விஷயமாக வெளியே சென்றிருக்க யுக்தா தனியாகக் கிளம்பினாள்.


இங்கு வீட்டில் யுக்தா எப்படியும் வந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் இரவு சடங்குக்கு அனைத்து அலங்கார ஏற்பாடுகளையும் முடித்துப் பெண்கள் காத்திருக்க, இரவு பன்னிரண்டு மணி வரை யுக்தா வந்த பாடில்லை.


உதய் தான் அவர்களைச் சமாதானம் செய்து "நீங்க போய்த் தூங்குங்க அத்தை. சமி வந்துடுவா. நீங்க போங்க நான் அவளைப் பாத்துக்குறேன்…" என்று அனைவரையும் கட்டாயப்படுத்தி உறங்க அனுப்பி வைத்தவன் தன் அறைக்கு வந்து கட்டிலை பார்க்க, அங்கு அலங்கரித்திருந்த பூக்கள் எல்லாம் அவனைப் பார்த்து கிண்டல் செய்து சிரிப்பது போல் இருந்தது.‌


பேய்கள் ஊர்வலம் போகும் இரவு இரண்டு மணிக்கு யுக்தா வீடு வந்து சேர்ந்தாள். உதய் அறைக்குச் சென்று அவனைப் பார்த்தவள் முகம் வாடி விட்டது.


அலங்கரித்த கட்டிலில் தனியாக உதய் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் அருகில் சென்று அவன் தலைகோதியவள், "ஐம் ரியாலி சாரி உதய்" என்றவள் அலைந்து திரிந்த அலுப்பில் அருகில் இருந்த சோஃபாவில் படுத்து அப்படியே உறங்கி விட்டாள்.


விடியற்காலை நான்கு மணி போல் யுக்தாவிற்கு விழிப்பு தட்ட எழுந்து அமர்ந்தவள் மலங்க மலங்க முழித்து, முகத்தைத் தன் கையால் தடவியவள், அப்படியே கழுத்தை தடவ அவள் கைகளில் ஏதோ தட்டுபட, "என்ன இது?" என்று இழுத்து பார்த்தவள், "ஆஆ…" என கத்தி விட்டாள்.


அவள் போட்ட சத்தத்தில் உதய் பதறி எழுந்தவன் யுக்தா அருகில் வந்து, "ஏய் சமி… நீ எப்ப டி வந்த? என்னடி ஆச்சு? எதுக்கு இப்ப இப்டி கத்துன?" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்



"ஏய் உதய்… நீ என் ரூம்ல என்ன பண்ற?" என்று முதல் குண்டை போட்டவள், "உதய் இங்க பாரு டா... என் கழுத்துல தாலி இருக்கு. எந்த ராஸ்கலோ நான் தூங்கும் போது எனக்குத் தாலி கட்டிட்டான்." என்று என்று அடுத்தக் குண்டை போட்டாள்.


"சரி தான்…" என்று உதய் தலையில் கைவைத்துத் தரையில் அமர்ந்தவன், "உனக்குத் தாலி கட்டின ராஸ்கல் வேற யாரும் இல்ல டி.. நான் தான். அதும் நீ தூங்கும் போதெல்லாம் கட்டல… ஊரை கூட்டி நம்ம ரெண்டு குடும்பம் முன்னால, காலையில் தான் கட்டுனேன். நான் தான் உன் புருஷன்!" என்று தலையில் அடித்துக் கொள்ள, யுக்தா அவனை ஆச்சரியமாகப் பார்த்தவள், தலையைச் சொறிந்து விட்டு,


"ஆமாம் நமக்கு இன்னைக்குக் காலையில தான் கல்யாணம் நடந்துச்சு இல்ல… நான் மறந்தே போய்டேன் உதய். தீடிர்னு கழுத்துல தாலியும், ரூம்ல உன்னையும் பார்த்துக் கன்பியூஸ் ஆகிட்டேன்…" என்று அசடு வழிய,


"ஆவ டி, ஆவ… பஸ்ட் நைட்டும் அதுவுமா புருஷனை தனியா விட்டுட்டு வெளிய வேலைன்னு போய்ட்டு பிசாசு மாதிரி நைட்டு வீட்டுக்கு வந்துட்டு எப்ப கல்யாணம் ஆச்சுன்னு என்னையே கேக்குற நீ? நீ எல்லா நல்ல வருவடி… நீ வருவ வருவேன்னு நான் ஒரு மணி வரை காத்திருந்தேன் தெரியுமா?" என்று சோகமாகச் சொன்னவனைப் பார்க்க யுக்தாவிற்கே பாவமாகி விட்டது.



"சாரி உதய் ரொம்பச் சாரி…" என்று இதயத்தில் இருந்து சொல்ல,


"ஏய் ச்சே... நமக்குள்ள என்ன சாரி அது இதுன்னிட்டு... உன்னைப் பத்தி முழுசும் தெரிஞ்சு தான நான் உன்னைக் கட்டிக்கிட்டேன். அப்பறம் எதுக்கு இந்தச் சாரி எல்லாம்? என்ன அட்லிஸ்ட் நீ இன்னைக்கு நைட்டு மட்டும் கொஞ்சம் கன்சிடர் பண்ணி இருக்கலாம். பாரு இந்த டெக்ரேஷன் எல்லா வீணா போச்சு…" என்று உச்சுக் கொட்ட,


யுக்தா அவன் கன்னத்தைப் பிடித்து நிமிர்த்தி அவன் முகம் பார்த்தவள் "சாரி டா உதய்…" என்று மீண்டும் சொல்ல,


"எனக்கு உன்னோட சாரி எல்லாம் வேணாம் போடி..." என்று முறுக்கி கொள்ள,


"அப்பறம் என் புருஷனுக்கு வேற என்ன வேணுமாம்?" என்று அவளும் விடாமல் கேட்க,


"எனக்கு இப்ப என் பொண்டாட்டி தான் வேணும்…" என்று கண்ணடிக்க,


அவன் சொல்வதின் அர்த்தம் புரிந்து யுக்தாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து விட, அவளை இறுக்கி அணைத்து, செவ்வானம் எனச் சிவந்திருந்த அவள் கன்னத்தில் தன் முதல் முத்தத்தைப் பதித்த உதய், அவள் பெண்மையை மொத்தமாகக் களவாடிக் கொண்டான்.