ஆழியின் ஆதவன் 26

 

ஆழி 26


ஆதவன் கைகளைக் கட்டிக்கொண்டு கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க, விஷ்ணுவும் முகிலும் அவன் அருகில் வந்தனர்.


"இவங்க மூணு பேருக்கும் திடீர்னு‌ என்னச்சினே தெர்ல… யுக்தா பேரை கேட்டு ஏன் இப்டி ரியாக்ட் பண்றாங்கனே புரியல, ஏற்கனவே அவங்களை தெரியுமான்னு கேட்ட அதுக்கும் பதில் இல்ல, ம்ம்ம்… ஒன்னும்‌ புரிய மாட்டுது" என்ற முகிலை திரும்பி பார்த்த ஆதவன்,


"நான் நினைக்குறது சரின்னா யுக்தாவை இவங்களுக்கு இதுக்கு முன்னையே தெரிஞ்சிருக்கணும். யுக்தாகும் இவங்களை கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும். யுக்தா பேரை கேட்டதும் ஆழி முகத்துல தெரிஞ்ச மாற்றமே அதுக்கு சாட்சி. ஆனா இது நல்லாத கெட்டதன்னு தான் தெரியல. எங்க எந்த சூழ்நிலையில் இவங்க மீட்டிங் நடந்துன்றதை பொறுத்து தான் இனிமே இங்க எல்லாமே நடக்கும்."


"யு ஆர் ரைட் ஆதவ். பட் ஆழி கடைசிய சொன்னதை நீ கவனிச்சியா? நாங்கன்னு சொன்னவ மீரா, சைத்துவை பாத்த அப்றம் நான் இங்கிருந்து போய்டணும்னு சொன்ன… சோ அதுக்கு அர்த்தம் மீராவும் சைத்ராவும் இங்க இருந்த யுக்தாவால அவங்களுக்கு எதுவும் ஆகாது தானே?." 


"எஸ் முகில், நீ சொல்றதும் சரிதான். மீரா, சைத்ராக்கு ஒன்னுன்னா ஆழி கண்டிப்பா சும்மா இருக்க மாட்டா… சோ யுக்தா விஷயத்தில் இவங்க சேஃப். பட், யுக்தாவும்  இவங்களும் எந்த புள்ளில சேர்ந்தங்கனு நம்ம தெரிஞ்சிட்டே ஆகணும்." 


"எப்டி விஷ்ணு அது தெரியணும்னா இதுங்க மூண்ல ஒன்னாவது வாயா தொறக்கணுமே… அதுங்க தான் டேப் போட்டா வாயை ஒட்டி வச்சிருக்கே… நம்ம என்ன தான் பண்றது."


"நமக்கு வேற வழி இல்ல விஷ்ணு எப்டியாது இவங்க நாலு பேருக்கு நடுவுல இருக்க கனெக்ட்டை கண்டு புடிச்சே ஆகணும். அப்ப தான் நம்ம அடுத்து எதுவும் செய்ய முடியும்" என்ற‌ ஆதவனுக்கு ஏதோ ஞாபகம் வர, தன் ஃபோனை எடுத்து யாருக்கோ அழைத்து பேசி விட்டு வந்தவன்.


"நம்ம எல்லா கேள்விகளுக்கும் இன்னும் கொஞ்ச நாள்ல பதில் கிடைச்சிடும். ஆனா, அதுக்குள்ள யுவ்ராஜ் கதையை முடிச்சிடணும்." என்றதோடு அந்த நாள் முடிய, இரண்டு நாட்கள் வேகமாக ஓடி இருந்தது.


அன்று ஆழி மாலை போல் வீட்டிற்குள் நுழைய, ஆதவ்வின் சிரிப்பு சத்தத்துடன் கூடவே ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தமும் கேட்க, ஆழி உள்ளே சென்று பார்க்க, அங்கு நிலாவை மடியில் வைத்தபடி, ஆதவ்வுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தாள் ஆஷாவின் சித்தி மகள் பிரியா.


"ஆழி" என்று அன்பான குரல் வந்த திசையில் ஆழி திரும்பிப் பார்க்க, அங்கு ஆழியை நோக்கி கையை நீட்டியபடி ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டார் ஆஷா, விஷ்ணுவின் தாய்.


"எவ்ளோ நாள் ஆயிடுச்சு ஆழி உன்னைப் பாத்து… எப்டிமா இருக்க?" என்று அவர் அன்போடு விசாரிக்க அந்த தாயின் அன்பில் கரைந்து போனாள் ஆழி.


"நான் நல்லா இருக்கேம்மா… நீங்க எப்டி இருக்கீங்க?" என்று பரஸ்பரம் விசாரிப்புகள் முடியவே இரவு ஆகிவிட்டது.


வெகு நேரமாக அவளை  கவனிக்காமல் பிரியாவுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த ஆதவ்வை ஒரு தவிப்போடு ஆழி பார்த்திருக்க, ஆதவ்வும் உள்ளத்தின் தவிப்பில் வாடிய தளிர் போல் வதங்கி இருந்த ஆழி முகத்தை அவள் அறியாமல் கவனித்துக் கொண்டு இருந்தான்.


'ம்ம்ம் மனசுல எம்மேல இவ்ளோ ஆசைய வச்சிட்டு வெளிய வேணாம்னு வேணாம்னு வேஷம் போட்டுட்டா திரியுற நீயி… இருடி இதுக்கெல்லாம் உனக்கு இருக்கு' என்றவன் உதட்டில் மர்ம புன்னகை.


"ஆழிம்மா இங்க பக்கத்துல சொந்தக்காரங்க வீட்டுல ஒரு விசேஷம் இருக்கும்மா, நாங்க எல்லாம் அங்க போறோம். நாளைக்கு காலையில தான் வருவோம். அவங்க எல்லாம் நிலா பாப்பாவை பாக்கணும்னு சொல்லி கேட்டாங்கமா, நான் அவளையும் கூட்டிட்டு போறேன். இந்த ஆதவ் எங்கேயோ வெளிய போயிருக்கான். அவனுக்கு சாப்பாடு மட்டும் எடுத்து வச்சிடுமா" என்று அனைவரும் ஆழியை மட்டும் வீட்டில் விட்டு விட்டு சென்று விட, ஆழி ஆதவ்காக காத்திருந்தாள்.


"ஏன் மதிம்மா, உங்க ப்ளான் ஒர்க் அவுட் ஆகுமா?" என்ற முகிலை முறைத்த வெண்மதி,


"ஏன்டா… ஏன் ஆகுமான்னு... தொடங்கும் போதே வாய வைக்கிற..‌ அதெல்லாம் என் ப்ளான் சூப்பரா ஓர்க் ஆகும். நீ வேணும்னா பாரு… ஆதவ் மேல ஆழிக்கும் விருப்பம் இருக்கு தான், அது அவ முகத்தை பார்த்தாலே தெரியுது. ஆனா, ஏன்னு தெரியல அவ அதை ஒத்துக்க மட்டும் மாட்டேங்கறா, எனக்கு என்னமோ அவங்க ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசினாலே எல்லாம் சரியாகிடும்னு தோனுச்சு. அதான் விசேஷத்தை சாக்கா வச்சு எல்லாரும் இங்க வந்துட்டோம். நிலாவையும் தூக்கிட்டு வந்தாச்சு. இப்ப அவங்க ரெண்டு பேர் மட்டும் தான். இடையில் வேற யாரும் இல்ல. பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரட்டும்."


"அது சரி அத்த… ஆனா, என்ன இருந்தாலும் ரெண்டு சின்னஞ்சிறுசுகளை இப்டி வீட்ல தனியா விட்டுட்டு வந்திருக்கீங்களே, ஒரு வேளை பை சான்ஸ் எதாவது எக்குத்தப்பா ஆயிட்டா என்ன செய்வீங்க?" என்ற விஷ்ணுவை மேலிருந்து கீழாக நக்கலாக பார்த்த வெண்மதி,


"ம்ம்ம் வேற என்ன செய்வேன், ஒன்பதாம் மாசம் வளைகாப்பு செய்வேன்" என்று கூலாக சொல்ல, விஷ்ணுவும் முகிலும், "எதே" என்று வாய் பிளந்து நின்றனர்.


இரவு எட்டு மணி போல் ஆதவ் வீட்டுக்கு வர, அவனுக்காக உணவை எடுத்து வைத்தாள் ஆழி.


ஆழி முகத்தைப் பார்த்த படியே உண்டு முடித்த ஆதவ், மேலே தன் அறைக்கு சென்றவன், படியில் நின்றபடி, "ஆழி உன்கிட்ட கொஞ்சம் பேசணும், மேல வா" என்று குரல் கொடுக்க, ஆழிக்கு தனிமையில் அவனை சந்திக்கும் துணிவு இல்லாமல் போக, பல வருடங்களுக்குப் பிறகு தனக்குள் பயம் வருவதை உணர்ந்தாள்.


மெதுவாக ஆதவ் அறைக்குள் அவள் செல்ல, அது காலியாக இருந்தது. "எங்க இவரு?' என்று அறையைச் சுற்றிப் பார்த்த ஆழியின் கண்களில், தனக்குப் பின்னால் கதவில் சாய்ந்தபடி, வசீகரிக்கும் சிரிப்போடு நின்றிருந்த ஆதவ் விழுந்தான்.


அவன் நின்ற கோலத்திலேயே ஆழியின் மதி மயங்கி விட, அவனை ரசித்தபடி அப்படியே நின்றாள்.


மெதுவாக அவள் அருகில் வந்த ஆதவ், "நமக்கு பின்னாடி காதல் பண்ண ஆரம்பிச்சது எல்லாம் பிக்கப் ஆகி டாப் கியரில் போயிட்டு இருக்குடி… நம்ம மட்டும் இன்னும் இப்டி முரட்டு சிங்கிள்ஸ் மாதிரி இருந்தா எப்டிடி" என்று காதருகில் பேசியவன் குரல் அவள் மனதை உரச, அவன் மீசை முடிகள் அவள் காது மடலை மெல்ல உரச அந்த சின்ன தீண்டலில் சிக்கி சிதறி திண்டாடிக் கொண்டிருந்தாள் ஆழினி.


"எப்பதான்டி நீயும் என்னை லவ் பண்றேன்னு ஒத்துக்குவா?" என்றவன் குரலில் அதுவரை அவன் அணைப்பில் மயங்கி நின்ற ஆழிக்கு உணர்வு வர, சட்டென அவனை விட்டு தள்ளி நின்று, "நான் ஒன்னும் உங்களை லவ் பண்ணல… சும்மா நீங்களா ஏதாவது நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல" என்று எண்ணெயில் போட்ட கடுகு போல் பொறிய,


"இங்க பாரு ஆழி என் பொறுமைக்கும் ஒரு லிமிட் இருக்கு… நீ சும்மா இப்படியே பேசிட்டு இருந்த… அப்புறம் ரொம்ப நேரத்துக்கு நானும் குட் பாய்யா எல்லாம் இருக்க மாட்டேன்" என்று குறும்பாக பேசியவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க, அவனை முறைத்தாள் ஆழி.


"யாரு நீங்க குட் பாய்… அதை நாங்க நம்பனும்…" என்று கேட்க,


"எஸ் அஃப்கோர்ஸ் ஆழி. மீ குட் பாய் நம்பு" என்றவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவள்,


"ஒஒஒ… அப்ப இந்த குட் பாய்க்கு என்னோட லேப்டாப் பாஸ்வேர்டு எப்படி தெரிஞ்சுதாம்" என்று கேட்டு முறைக்க, ஆதவ் திருதிருவென முழிக்க,


"என்ன நல்லவரே பதிலை காணும்?"


"ஏய் ஆழி... அது… அது வந்து..‌. நான் ஒன்னும் வேணும்னு அங்க எல்லாம் பாக்கல..‌. அன்னைக்கு நீ வலில துடிச்சிட்டு இருந்த, டாக்டர் ஆன்ட்டி உன்னோட உடம்புல நிறைய வயர்ஸ் மாட்டிட்டு போய்ட்டாங்க… மிட்நைட் டைம் நர்ஸ் யாரும் பக்கத்துல இல்லாத நேரம், உன் நெஞ்சுல மாட்டி இருந்த வயரோட பின் அவுந்து இருந்ததைப் பாத்தேன். சரி நம்மளே மாட்டி விடுவோம்னு நெனச்சு ஜஸ்ட் இவ்ளோ தான், இத்துனூண்டு தான் உன்னோட ஷர்ட்டை ஓபன் பண்ணி அந்தப் பின்னை மாட்டிவிட்டேன். அப்ப தான் அந்த இடத்தில் எதோ கருப்பா தெரிஞ்சது. எதுவும் பூச்சியோன்னு இன்னும் கொஞ்சம் விலக்கி பாக்கும்போது தான் அது டாட்டூனு தெரிஞ்சுது‌. பாரதியார் மீசை போட்டு அதுக்கு கீழ அச்சமில்லை னு டாட்டூ பண்ணி இருந்ததைப் பாத்தேன்." என்று அசடு வழிந்தவன், "அப்புறம் நான் போட்டு பார்த்த பாஸ்வேர்டு எல்லாம் ராங்னு வரவும், சும்மா ஒரு ட்ரைக்கு அச்சமில்லை னு போட்டேன். லேப்டாப் ஓபன் ஆயிடுச்சு" என்றவனை அவள் முறைக்க,


"சாரிடி நான் வேணும்னு எல்லாம் பண்ணல, அப்ப அது தப்பு தான் பட்… இப்ப அது தப்பு இல்ல…" என்றவன் அருகில் கோபமாக வந்த ஆழி,


"ஏன்… ஏன்… ஏன் தப்பில்ல..‌. அதெப்படி தப்பில்லாம போகும்." என்று கண்களை உருட்டி மிரட்டி கேட்க, அவளை இழுத்து தன் நெஞ்சோடு சேர்த்து அவள் இடையை இரு கைகளால் இறுக்கி கட்டிக் கொண்டவன், "பிகாஸ் அப்ப நீ யாரோ..‌. ஆனா, இப்ப நீ என்னோட ஆழி… இப்ப நீயே முழுசா எனக்கு சொந்தமாக கிட்ட பிறகு தப்பு எங்கிருந்து வரும்" என்றவன் கைகள் அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொள்ள, அவன் அணைப்பில் தன்னிலை மறந்து நின்றாள் ஆழினி.


ஜன்னல் வழியே வந்த குளிர் காற்று இருவர் உடலையும் சிலிர்க்க செய்ய, இருவரின் அணைப்பும் இன்னும் இறுகியது. ஒருவருக்குள் ஒருவர் புதைந்து விடும் அளவு இருவரும் பினைந்து கிடக்க… 


காலமோ, காதலோ, காமமோ, இல்லை ஜன்னல் வழியே வந்த சில்லென்ற காற்றோ… ஏதோ ஒன்று, ஒரே நேரத்தில் இருவரையும் தாக்க, ஒருவர் அணைப்பில் ஒருவர் தனிமையில் தன்னிலை மறந்தனர். 


ஆரம்பித்தது மட்டுமே அவன், அதன் பின் நடந்த அனைத்திற்கும் இருவருமே பொறுப்பு.


அவன் அவளிடம் தன் தேடலை தொடங்க, அவள் அதற்கு இசைந்து இடம் கொடுத்தாள். அவன் மேல் உண்மை காதல் கொண்ட அவளின் மனம் அவனை முழுதாக தன்னுள் ஏற்றுக்கொண்டது.


அவன் அவளை எடுக்க நினைக்கவில்லை. ஆனால், மொத்தமாக எடுத்துக் கொண்டான். அவள் அவனை விலக்க தான் நினைத்தாள், ஆனால், மொத்தமாக அவனுக்குள்ளேயே புதைந்து விட்டாள்.


இல்லறம் நடத்த தனக்கு தகுதி இல்லை என்று தள்ளி நின்றவள், இன்று உடலோடு உயிராக அவனுடன் கலந்து விட்டிருந்தாள். ஆனால், இருவருக்குள்ளும் நடந்த இந்தச் சங்கமம் ஆழி எடுத்திருக்கும் முடிவை மாற்றுமா???