ஆழியின் ஆதவன் 22

 


ஆழி 22



இங்கு வீட்டில் உறக்கத்திலிருந்து எழுந்த சைத்ரா, "ஆழி… ஆழி" என்றழைக்க,


"அவ இங்க இல்ல, அவ ஆதவ் கூட அப்பவே போய்ட்டா" என்ற குரலில் கட்டிலில் இருந்து சட்டென இறங்கியவள், வெளியே வந்தாள்.


அங்கு ஃபோனை பார்த்தபடி அமர்ந்திருந்த முகிலை பாத்தவள், "நீங்க இங்க என்ன பண்றீங்க? மீரா எங்க?" என்றவள்‌, "மீரா… மீரா" என்று கத்த,


"மீராவும் வீட்ல இல்ல. வெளிய போய் இருக்கா" என்றதும் சைத்ரா பட்டென திரும்பி முகிலை பார்க்க, அவன் கவனம் முழுவதும் ஃபோனிலேயே இருந்தது.


சைத்ராவுக்கு ஏதோ வித்தியாசமாக தெரிய, முகில் எதிரில் அமர்ந்து அவனையே உற்றுப் பார்க்க, அவனும் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.


"ஓய் என்ன வேணும் உனக்கு? எதுக்கு இப்டி குறுகுறுன்னு என்னையே பாத்துட்டு இருக்க நீ? எதாவது வேணுமா? என்றவன், "ஓஓஓ உனக்குப் பசிக்குமில்ல..‌. அதுக்காக என்னை ஏன் இப்படி வச்ச கண்ணு வாங்காம பாத்தா எப்படி சைத்து? என்னை எல்லாம் திங்க முடியாதும்மா. இரு நான் போய் உனக்கு எதாவது எடுத்துட்டு வரேன்" என்றவனை முறைத்த சைத்ரா,


"இங்க என்ன நடக்குது?" என்று சற்று கோபமாக கேட்க,


"இங்கயா… இங்க நான் தான் இப்ப கிச்சனுக்கு நடக்குறேன்"


"ப்ச்..‌. என்ன ஜோக்கா… இதுக்கு நான் சிரிக்கணுமா?


"அது உன்னோட இஷ்டம். நான் போர்ஸ் பண்ண மாட்டேன்" என்றதும் சைத்ராவுக்கு நிஜமாகவே கோபம் வந்து விட, ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்" என்று கத்தியே விட்டாள்.


"எனக்கு சும்மா ஒரு தலைவலி, காய்ச்சல் வந்தாலே ஆழியும் மீராவும் என்னை அப்டி பாத்துப்பாங்க. ஆனா, இப்ப நான் என்ன நிலையில் இருப்பேன்னு நல்லா தெரிஞ்சும் அவங்க இங்க இல்லைன்னா, அது நார்மல் இல்லனு எனக்குப் புரியாதா மிஸ்டர். முகில். ஓகே அழி கூட நிலா பாப்பாக்காக ஆதவ் கூட போய் இருக்கலாம். பட், மீரா அவ கண்டிப்பா என்னை தனியா விட்டுப் போயிருக்க மாட்டா... அப்படி அவ போய் இருக்கான்னா அதுக்கு என்ன அர்த்தம்?" என்று கொதிக்க, அவள் முன் அவளை விட அதிக கொதி நிலையில் இருந்த சூப்பை வைத்தான் முகில்.


"பேசி பேசி… ம்ஹூம் சாரி, கத்தி கத்தி டயர்டா இருப்ப, இந்தா இதை குடி. குடிச்சிட்டு தெம்பா கத்து" என்றவனை வெட்டவா, குத்தவா என்பது போல் முறைத்தாள் சைத்ரா.


"நீ கேட்ட எந்த கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்ல. நான்‌ கொஞ்சம் வெளிய போறேன், நான் திரும்பி வர்ற வரை சைத்துக்கு துணைய இருங்க முகில்னு, மீரா ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்டதுனால தான் நான் இங்க இருக்கேன். மத்தபடி எனக்கென்ன ஆசைய உன்னோட இருக்க,‌ சும்மா என்னை முறைசசிட்டு இருக்காம, சூப்பை குடி" என்றவனை வெறித்துப் பார்த்த சைத்ரா,


"என்ன முகில் சார், என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க போல?" என்று நக்கலாக கேட்க, அதுவரை ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தவன் நிமிராமல், விழியை மட்டும் உயர்த்தி சைத்ராவை ஆழமாக பார்க்க,


"என்ன… என்னைப் பத்தி ஆழியும் மீராவும் எல்லாத்தையும் சொல்லிட்டாங்களா… அதான் சாருக்கு என் மேல சிம்பத்தி வந்துடுச்சு போல. பாவம் இந்த சைத்ரா, இவளை எல்லாம் யாரு கட்டிக்குவா, பேசாம நம்ளே வாழ்க்கை குடுக்கலாம்னு நினைக்கிறீங்க… என்ன சரியா" என்றவள் முகம் சட்டென மாற,


"ஏன்டா நீ தியாகி ஆக நான் தான் கெடச்சனா? எனக்கு வாழ்க்கை குடுன்னு நான் கேட்டனா? கேட்டனாடா… எங்க அந்த ஆழியும் மீராவும்? நீ கேட்டதும் ஓகே சொல்லிட்டு ஓடிட்டாங்களா… சைத்துவுக்கு உங்கள விட்ட யாரும் வாழ்க்கை தர முடியாது. எப்டியாது அவளை ஏத்துக்கோங்கன்னு சொன்னாங்களாக்கும்" என்று அவள் கண்டபடி கத்த, முகில் அமைதியாக எழுந்து அவள் அருகில் வந்தான்.


"கொஞ்சம் எழுந்து நில்லு" என்றவனை அவள் முறைக்க,


"ஏய் சொல்றேன் இல்ல எழுந்து நில்லுடி" என்று அவன் கத்த, அந்த சத்தத்தில் சட்டென எழுந்து நின்றாள் சைத்ரா.


முகில் மேலிருந்து கீழ் வரை அவளை நன்கு பார்த்தவன், "ஆமா‌ உனக்கு என்ன கேடு வந்துச்சுன்னு நான் உன்னை கல்யாணம் கட்டிக்கணும்னு சொல்லுடி. பாக்க நல்லா பொம்மை மாதிரி அழகா இருக்க, கண்ணு, காது, மூக்கு வாய் இதெல்லாம் இருக்க வேண்டிய இடத்துல அழகா பொருந்தி இருக்கு. கை, கால் எல்லாம் நல்லா தான் இருக்கு. நல்லா படிச்சிருக்க… அப்புறம் என்ன குறை இருக்குன்னு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்." என்றவனை அவள் புரியாமல் பார்க்க,


"ஏய் என்ன பாக்குற, நானு… உன்ன… உன்னைப் போய் நானு கல்யாணம்" என்று வாயை மூடிக்கொண்டு சிரித்தவன், "இங்க பாரு எனக்குன்னு வாழ்க்கைல ஒரு லட்சியம் இருக்கு… புருஷனை இழந்த பொண்ணு, இல்ல தப்பான ஆள் கிட்ட மாட்டி விவாகரத்து ஆன பொண்ணு, இல்ல வரதட்சணை கொடுக்க முடியாம கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்த பொண்ணு, இப்படி எதாவது ஒரு வகையில கஷ்டப்படும் ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி காலம் முழுக்க அவளை சந்தோஷமா வச்சிக்கணும்னு‌ ஒரு லட்சியத்தோட வாழ்ந்துட்டு இருக்கவன்டி  இந்த முகில். அப்படி இருக்க, உன்னை போய் கல்யாணம் பண்ணுவேன நானு… சொல்லு பாக்கலாம். உனக்கு தான் ஒரு குறையும் இல்லயே… சூப்பரா தான இருக்க உன்னை கட்டிக்க பசங்க கியூ கட்டி நிப்பாங்க." என்றவன் திரும்பி சைத்ராவை பார்க்க, அவள் இமைக்காமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


"இங்க பாரு சைத்து, உன்னை மாதிரி சாட்டர் பாக்ஸ் (chatterbox) எல்லாம் எனக்கு செட்டாகாது. என்னை கட்டிக்க போற பொண்ணுக்கு குறைந்தபட்ச தகுதி அவ அமைதியான பொண்ணா இருக்கணும். உதாரணத்துக்கு நம்ம மீரா மாதிரி இருக்கணும். அப்ப தான் என் வாழ்க்கை நிம்மதியா இருக்கும். உன்னை மாதிரி லொடலொட வாயை கட்டிக்கிட்டு என்னால குப்ப கொட்ட முடியாதுப்பா… எனக்கு டைம் ஆச்சு, நான் கெளம்புறேன்" என்றவன் சைத்ரா முகம் பார்க்க, அதில் சிறிதாகப் பொறாமை எட்டிப் பார்த்தது.


'ம்ம்ம் சும்மா மீரா மாதிரின்னு சொன்னதுக்கே, மேடம் முகம் சுருங்கிப் போச்சு, ம்ம்ம்ம் நம்ம ரிவர்ஸ் சைக்காலஜி சரியா தான் வேலை செய்யுது... , இந்த ரூட்ல போனாதான் இவளை நம்ம‌ வழிக்கு இழுக்க முடியும்' என்று நினைத்தவன், "நான் கெளம்புறேன்" என்றவன் முகம் முழுவதும் புன்னகையோடு

வெளியே நடக்க, சைத்ரா போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


***


மறுநாள் காலையிலேயே சைத்ராவை பார்க்க நிலாவை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள் ஆழி.


நிலாவை பார்த்த அடுத்த நிமிடம் முகம் மலர ஓடி வந்த சைத்ரா, "ஏய்‌ நிலா பாப்பா என்னை பாக்க நீங்களே வந்துட்டீங்களா, வாங்க வாங்க" என்று கையை நீட்ட, நிலா ஆழியிடம் இருந்து சைத்ராவிடம் தாவினாள் வெண்ணிலா.


"இங்க பாரு மீரா இவள, என்கிட்ட இருக்கும்போது அவங்க அப்பா கூப்ட கூட போக மாட்டா… ஆனா, இப்ப இவ கூப்டதும் உடனே ஓடிட்டா பாரேன்" என்ற ஆழி குரலில் லேசாகப் பொறாமை எட்டிப்பார்த்தது.


"என்ன ஆழி மேடம் உங்க பேச்சுல பொறாமை வாசம் காத்தோட கலந்து வீசுது" என்று சிரித்த சைத்ராவை செல்லமாக முறைத்தாள் ஆழி.


"பொறாமையும் இல்ல வெறும் ஆமையும் இல்ல..‌. கொடைக்கானல்ல நீ அவ கூட விளையாடிட்டு இருந்த ஞாபகம். அதான் நீ கூப்டதும் வந்துட்டா… மத்தபடி அவளுக்கு அவங்க அப்பாவை விட என்னைத் தான் புடிக்கும்" என்று வீம்பாக நின்றவளை பார்த்துச் சிரித்த சைத்ரா,


"பாருடா பாப்பா உங்கம்மா கீழ விழுந்தாலும் மீசைல டஸ்ட் ஒட்டலன்னு சீன் போடுறா" என்றபடி ஆழி முகம் பார்க்க, ஆழி முகம் சடுதியில் வாடிவிட்டது.


"ஏய் சாரி ஆழி, நான் ஒரு ஃப்லோல அம்மான்னு சொல்லிட்டேன்… சாரி சாரி" என்று சைத்ரா கெஞ்ச, சரியாக அந்த நேரம் குழந்தையும் "சதிம்மா சதி" என்று தன் மழலை மொழியில் ஆழியை அம்மா என்று அழைக்க, ஆழிக்கு கண்கள் கலங்கி விட்டது.


"அய்யோ நிலா பாப்பா, இந்த ஆழி பொண்ணு சரியான அழுமூஞ்சி பொண்ணு ஆகிட்டா, இவ நமக்கு வேணாம். வா நம்ம உள்ள போய் விளையாடலாம்" என்று துள்ளிக்குதித்த படி நிலாவை தூக்கிக்கொண்டு சைத்ரா சொல்ல, சைத்ரா இயல்புக்கு திரும்பியதை பார்த்து மீரா, ஆழி இருவருக்கும் நிம்மதியாக இருந்தது.


"ஆழி உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்"


"சொல்லு மீரா… என்ன அந்த யுவராஜ் பத்தி எதுவும் புது மேட்டர் தெரிஞ்சுதா?"


"இல்ல ஆழி. அவன் பிஸ்னஸ் டூர்காக ஃபாரின் போயிருக்கான், திரும்பி இந்தியா வர, எப்படியும் பத்து நாள் மேல ஆகும். இது அவனை பத்தி இல்ல, வேற‌ மேட்டர்..."


"ம்ம்ம் அப்ப இன்னும் பத்து நாள் தான் அவனுக்கு வேலிடிட்டினு சொல்லு… சரி வேற என்ன விஷயம் மீரா?"


"முகில் உன்கிட்ட எதாவது பேசினாரா?"


"ம்ம்ம் ஆமா மீரா. காலையில கால் பண்ணாரு, அப்ப பாத்து பாப்பா அழுதா, நான் அப்புறம் பேசுறேன்னு ஃபோனை வச்சிட்டேன். ஏன் அவர் உன்கிட்ட எதுவும் சொன்னாரா?"


"ம்ம்ம் ஆமா ஆழி… நேத்து நீ போனதுக்கு அப்புறம் அவர் என்கிட்ட பேசினாரு" என்று தொடங்கி நேற்று நடந்த அனைத்தையும் கொட்டி முடித்தாள் விஷ்ணு அவளிடம் பேசியது உட்பட.


ஆழி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், "முகில் மாதிரி ஒருத்தர் கிடைச்சா நம்ம சைத்து ரொம்ப லக்கி தான். ரொம்ப பாசமான கேரக்டர். விஷ்ணுவும் நல்ல டைப் தான். பட் கோவம் கொஞ்சம் அதிகம் வரும் அவ்ளோதான்."


"அப்ப நீ என்ன சொல்ற ஆழி… உனக்கு ஓகேவா?"


"இதுல நான் சொல்ல ஒன்னும் இல்ல மீரா‌. இது உங்க லைஃப். நீங்க தான் முடிவு செய்யணும். லைஃப் பார்ட்னர் செலக்ட் பண்றது ஒரு பொண்ணோட தனிப்பட்ட உரிமை. இதுல நீயும் சைத்துவும் தான் முடிவெடுக்கணும். என்னை பொறுத்தவரை முகிலும் விஷ்ணுவும் தி பெஸ்ட் சாய்ஸ்" எனும் போது சைத்ராவும் நிலாவும் சிரிக்கும் சத்தம் அந்த வீடு முழுவதும் கேக்க,


"நீ பாப்பாவை இங்க கூட்டிட்டு வந்தது நல்லதா போச்சு ஆழி. பாரேன் நிலாவை பாத்ததும் அவ முகத்துல எவ்ளோ சந்தோஷம்னு."


"கரெக்ட் மீரா… நிலா பாப்பா கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு. எப்பவும் அவ கூட இருக்க எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க… நான் கிளம்பும்போது ஆதவ் தான், நிலாவை பாத்தா சைத்துக்கு சந்தோஷமா இருக்கும். நீ இவளையும் தூக்கிட்டுப் போன்னு சொன்னாரு. அது சரியா இருக்கு. கொஞ்ச நாள் பழக்கமா இருந்தாலும் ஆதவ்க்கு சைத்து மேல எவ்ளோ அக்கறை இல்ல" என்ற ஆழி முன் சூடான காஃபியை வைத்தாள் மீரா.


"சரி முகில், விஷ்ணு பத்தி சொல்லிட்ட, அப்ப ஆதவ்?" என்று மீரா கேட்ட கேள்வியில் குழப்பமாக மீராவை பார்த்தாள் ஆழி.


"ஆதவ்க்கு என்ன? இதுல அவர் எங்கிருந்து வந்தாரு?"


"வந்தாரா… முதல்ல இதை ஆரம்பிச்சதே உன் ஆளு தான்" என்றதும் ஆழிக்கு கோபம் வந்து விட,


"வாட் நான்சென்ஸ் மீரா? என்னோட ஆளா...‌ என்ன பேச்சு இது?" என்ற ஆழி மீரா கொடுத்த காபியை ஒரு வாய் குடிக்க,


"நான் சென்ஸோட தான் பேசுறேன். ஆதவ் சார் உன்னை லவ் பண்றாரு" என்றவள் நேற்று விஷ்ணு அவளிடம் ஆதவ் சொன்னதாகச் சொன்ன அனைத்தையும் ஒப்பிக்க, ஆழிக்கு காபியோடு மீரா சொன்ன தகவலும் தொண்டை தாண்டி உள்ளே செல்லாமல் சிக்கிக்கொண்டு கசந்தது.