ஆழியின் ஆதவன் 24

 

ஆழி 24


ஒரு மரத்தின் அருகில் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி சைத்ரா விசும்பிக் கொண்டிருக்க,


"இங்க நின்னுட்டு என்னடி பண்ற?" என்ற முகிலின் குரல் பின்னால் கேட்க, கோவமாக திரும்பியவள், "நான் என்னமோ பண்றேன், உனக்கென்ன வந்தது‌ அதை ஏன் நீ கேக்குற?"


"நீ என் வருங்காலப் பொண்டாட்டி, உன்னை நான் கேக்காம வேற எவன்டி கேட்பான்."


"அதான் என்னை கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டீயே… அப்புறம் என்னவாம்" என்று அவள் திருப்பி நின்று கொள்ள, அவள் குழந்தைத்தனத்தை உள்ளுக்குள் வெகுவாக ரசித்த முகில்,


"சரி.. நான் தான் அப்ப கட்டிக்க மாட்டேன்னு சொன்னேன். இப்ப நானே சொல்றேன் உன்னை தான் கட்டிக்குவேன்" என்றவன் திரும்பி பார்த்த சைத்ராவை முகிலை இழுத்து அணைத்துக் கொண்டான்.


சைத்ரா அவன் தோளில் முகம் புதைக்க, அவளின் ஆனந்தக் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.


"என்னை கட்டிப்பீங்களா?" என்று அவள் கேட்க,


"ஓய் வாயாடி இப்ப உன்னை கட்டிட்டு தானடி இருக்கேன்.?" என்று அவள் காதை உரசியபடி அவன் சொல்ல, லேசாக உடலை நெளித்த சைத்ரா, "நான் இந்த கட்டிக்கிறதை சொல்லல" என்று சினுங்கியவளைப் பார்த்து சத்தமாகச் சிரித்த முகில்,


"நீ இப்ப ஓகேன்னு சொல்லு, பேன்ட் பாக்கெட்ல தாலிய ரெடியா வச்சிருக்கேன். நம்ம ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி வச்சு இப்பவே உன்னை கட்டிக்கிறேன் போதுமா" என்றவன் தன் பாக்கெட்டில் இருந்த தாலியை வெளியே எடுத்துக் காட்ட, சைத்ரா கலங்கிய விழிகளுடன் அந்த தாலியை தொட்டுப் பார்த்தவள், முகிலை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டாள்.


தூரத்தில் இருந்து இவர்கள் இருவரையும் மனநிறைவோடு பார்த்துக்கொண்டிருந்த ஆழி அருகில் வந்த ஆதவ், நமக்குப் பின்னால ஸ்டார்ட் பண்ணி நம்மை முந்திட்டு போய்ட்டு இருக்காங்கடி, இந்த ரெண்டு ஜோடியும்" என்றவனை ஆழி திரும்பி பார்க்க,


"எப்ப டி எனக்கு கிரீன் சிக்னல் குடுப்ப?" என்று கேட்டு கண்ணடிக்க, ஆழி இடவலமாக தலையாட்டி "அது இந்த ஜென்மத்தில் நடக்காது" என்று அழுத்தமாக சொல்ல,


"அத நடத்திக்காட்டாம நான் விடமாட்டேன்" என்று ஆழி கையை இறுக்கிப்பிடித்தான் ஆதவ்.


அனைவரும் போட்ட ப்ளான் அருமையாக வேலை செய்ய சைத்ரா, முகில் ஜோடி இடையே காதல் தீ எக்குத்தப்பாக பற்றிக்கொண்டது.


வீட்டுக்கு வந்த சைத்ராவை ஆழியும் மீராவும் ஒருவர் மாற்றி ஒருவர் கிண்டல் செய்ய, சைத்ரா கன்னம் வெட்கத்தில் சிவந்தது.


"பாரு மீரா, இப்ப தான் அந்த முகில் உன்கிட்ட இவளை புடிச்சிருக்குன்னு சொன்ன மாதிரி இருக்கு. அதுவும் அதை இவ கிட்ட கூட சொல்லல, உன்கிட்ட தான் சொன்னான். ஆனா, அதுக்குள்ள இன்னைக்கு பாத்தா... பய தாலியோட வந்து நிக்குறான். அவன் காதல் மேல அவனுக்கு எவ்ளோ நம்பிக்கை பாரேன்" என்றதும் தன்னவன் தன் மீது வைத்த தூய்மையான அன்பை நினைத்து சைத்ரா உள்ளம் துள்ளி குதித்து.


"ஆமா ஆழி. முகில் மட்டும் இல்ல அவங்க மூணு பேரும் ஒரு முடிவோட தான் சுத்திட்டு இருக்காங்க. ஒன்னு நாம அவங்களை கல்யாணம் பண்ணனுமாம். இல்லாட்டி… அவங்க நம்மள கல்யாணம் பண்ணிக்குறேன்னு புதுசா பேசிட்டு திரியுறாங்கடி… அதுக்கு சாட்சி தான் முகில் கைல இருந்த தாலி. சைத்ரா மட்டும் முகிலுக்கு ஓகே சொல்லாம இருந்திருந்த, அவரு அங்க ரெஸ்டாரென்ட்ல வச்சே இவளுக்கு தாலி கட்டி இருப்பாரு. நல்லவேள இவ ஓகே சொல்லிட்டா… நீயும் கூட சீக்கிரம் ஆதவ்க்கு ஓகே சொல்லிடுடி இல்லாட்டி உனக்கும் இதே தான் நடக்கும். அவ்ளோதான் சொல்லிட்டேன்" என்ற மீராவை ஆழி‌ முறைக்க,


"ஏய் இப்ப ஏன்டி நீ மீராவ முறைக்கிற… அவ சரியா தான் சொல்றா… அன்னைக்கு இருந்த சூழ்நிலையை பாத்து முகில் என் மேல பரிதாபப்பட்டு தான் என்னை ஏத்துக்க நினைக்குறாருன்னு நெனச்சு முதல்ல எனக்கு ரொம்ப கோவம் வந்துச்சு, அப்புறம் அவர் சொன்னதை கேட்ட அப்புறம் தான் எனக்கே புரிஞ்சுது. எனக்கு என்ன குறைன்னு… பாக்க உன்னை மாதிரி சூப்பரா இல்லாட்டியும் நானும் கொஞ்சம் அழகா தான் இருக்கேன். தென் நல்லா படிச்சிருக்கேன். என்னோட சொந்தக்கால்ல நிக்குற தைரியம் எனக்கு இருக்கு… எல்லாத்துக்கும் மேல ஏஞ்சல் மாதிரி நீங்க ரெண்டு பேர் என் கூட இருக்கீங்க… அப்புறம் என்கிட்ட என்ன குறை இருக்குன்னு யோசிச்சேன். எனக்கு நடந்ததுல கூட என்னோட தப்பு எதுவும் இல்லையே… வெறி புடிச்ச ரெண்டு நாய்ங்க என்னை கடிச்சதுல என்னோட தப்பு என்ன இருக்கு சொல்லு… அப்படி இருக்கும் போது நான் ஏன் என் வாழ்க்கைய எனக்கு புடிச்ச மாதிரி, புடிச்சவர் கூட வாழக்கூடாதுனு தோனுச்சு… ஆனா, முகிலுக்கும் என்னை புடிக்குமான்னு ஒரு பயம் சின்னதா உள்ளுக்குள்ள இருந்துச்சு. இன்னைக்கு ரெஸ்டாரன்ட்ல அவருக்கு பொண்ணு பாக்கணும்னு ஆதவ் சொல்லும்போது எனக்கு உள்ள பக்குன்னு இருந்துச்சு தெரியுமா… அப்புறம் விஷ்ணு நீ முகிலை கட்டிக்கிறீயான்னு கேக்கும் போது எனக்கு அவ்ளோ சந்தோஷம். நான் சரி சொல்ல தொடங்கும் முன்ன முகில் எதையோ பேச, நானும் பதிலுக்குப் பேச" என்று சைத்ரா சொல்ல,


"கடைசில எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது" என்ற ஆழியும் மீராவும் சைத்ராவை கட்டியணைத்துக் கொண்டனர்.


"நீ டாப்பிக்கை மாத்தாத ஆழி… நீ ஆதவ்க்கு ஏன்  ஒகே சொல்ல மாட்ற..‌. அத சொல்லு..."


"ப்ச் அந்த கதை இப்ப வேணாம் சைத்து… இப்ப நம்ம ஹாப்பியா இருக்கோம். முதல்ல அதை முழுசா அனுபவிப்போம். எப்படியோ உன் ரூட் கிளியர், ம்ம்ம் அடுத்து விஷ்ணு என்ன பண்றாருன்னு பாப்போம்"


"விஷ்ணு என்ன பண்ணனும் ஆழி?" என்று சைத்ரா புரியாமல் கேட்க,


"ம்ம்ம் அவரும் மீராகிட்ட அவர் லவ் பத்தி லைட்டா கோடு போட்டு காமிச்சு இருக்காரு. பட், நம்ம மேடம் அதெல்லாம் புரியாத மாதிரியே மெயின்டெய்ன் பண்ணிட்டு வந்துட்டாங்க… சோ விஷ்ணு கண்டிப்பா வேற எதாவது குட்டி கலாட்டா பண்ணுவாரு… இவ வாயால ஓகே சொல்றவரை விட மாட்டாரு… நீ வேணும்னா பாரு" என்ற ஆழி,


"ஒஒஒ அதான் ஆதவ் எனக்கும் விஷ்ணுவுக்கும் பொண்ணு ரெடியா இருக்குன்னு சொன்னார்?" என்று‌ கேட்க,‌ " எனக்கு டைம் ஆச்சு நான் கெளம்புறேன்" என்று ஆழி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டாள்.


விஷ்ணு கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்து எதையோ தீவிரமாக யோசிக்க, அதை பார்த்த ஆதவும் முகிலும், "டேய் என்னடா ரொம்ப நேரமா என்னத்தையோ யோசிச்சுட்டு இருக்க, அது என்னன்னு தான் சொல்லி தொலையேன். என்ன ஏதாவது புது கேஸா…?" என்று ஆதவன் கேட்க,


"கேஸ்காக எல்லாம் இப்படி உக்காந்துட்டு யோசிக்கிற ஆளாடா இவன்... நீ வேற ஆதவ். சார் இப்ப தீவிரமா மீராவை எப்படி கரெக்ட் பண்றதுன்னு திங்க் பண்ணிட்டு இருக்காரு… என்னடா விஷ்ணு நான் சொல்றது சரிதானே…?"


"சென்பர்சென்ட் கரெக்ட்டா முகில்… அன்னைக்கு நான் ரெஸ்டாரன்ட்ல பேசினது அவளுக்கு நல்லா புரிஞ்சுதுடா‌. ஆனா, ஏன்னு தெரியல ஒன்னும் தெரியாத மாதிரி போய்ட்டா… அதான் எப்டி அவ லவ்வை வெளிய கொண்டு வர்றதுனு திங்க் பண்ணிட்டு இருக்கேன்."


"டேய் அதை இங்க உக்காந்துட்டு யோசிச்சு என்ன யூஸ். கிளம்பி மீரா வீட்டுக்குப் போடா..‌. அவ பக்கத்துல இருந்தா தான், எதாவது தோணும்… போடா முதல்ல"


"கரெக்ட் முகில்… நான் அவ கூட இருந்தா, சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் என்னோட லவ்வை அவளுக்கு உணர்த்திட்டே இருப்பேன்‌. தேங்க்ஸ்டா…"


"இங்க பாருடா கொஞ்ச நாள் முன்னாடி வரை அவங்க மூணு பேரையும் கண்ட மேனிக்கு திட்டிட்டு இருந்தவன், என்னைக்கு மீராவை பாத்தானோ, டக்குன்னு அப்படியே அந்தர் பல்டி அடிச்சு மாறிட்டான்." என்ற ஆதவ் அருகில் வந்த விஷ்ணு,


"ஆமாடா, நான் மீராவை பாத்ததும் மாறிட்டேன் தான். சரி… இங்க மட்டும் என்ன வாழுதாம். என்னமோ நம்ம வேலை முடிஞ்சதும் மிஸ். ஆழினி ஒரேயடியா மிஸ் ஆகிடுவான்னு டைலாக் எல்லாம் பேசின, இப்ப என்னடான்ன எங்கும் ஆழி, எதிலும் அழின்னு சுத்திட்டு இருக்க… நீ என்னை சொல்றீயா?" என்று ஆதவ் காலை வார, ஆதவ் விஷ்ணு தோள் மீது கைப்போட்டவன்,


"டேய் மச்சான் நான் அன்னைக்கு சொன்னதை தான் இன்னைக்கும் சொல்றேன். இந்த வேலை முடிஞ்சதும், மிஸ். ஆழினி மிஸ் ஆகிடுவா, இனிமே அவ மிஸ். ஆழினி இல்லை" என்றவனை விஷ்ணுவும் முகிலும் புரியாமல் பார்த்தனர்.


"என்ன புரியலயா? நான் சொன்னதை நீங்க தெளிவாவே புரிஞ்சிக்கலடா. நான் என்ன சொன்னேன்… இந்த வேலை முடிஞ்சதும் மிஸ். ஆழினி, மிஸஸ். ஆழினி ஆதவன்னு மாறிடுவா… அதை தான் அன்னைக்கு நான் சொன்னேன்." என்றவனை கையெடுத்துக் கும்பிட்ட விஷ்ணு, "தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க," என்று சொல்ல, அவன் தோளை தட்டிக் கொடுத்த ஆதவ்,


"நான் எங்கயோ போறது இருக்கட்டும், நீ முதல்ல கெளம்பு,‌

கெளம்பி சீக்கிரம் மீராவை பாக்க போடா" என்றதும் மின்னல் வேகத்தில் மீரா வீட்டிற்கு விரைந்திருந்தான் விஷ்ணு.


நிலா சைத்ரா மடியில் அமைதியாக தூங்கி கொண்டு இருக்க, மீரா, சைத்ரா, ஆழி மூவரும் எதை பற்றியோ பேசிக் கொண்டிருக்க சரியாக அந்த நேரம் அங்கு வந்து சேர்ந்தான் விஷ்ணு.


ஆழி, சைத்து, மீராவை பார்த்து, 'நான் சொன்னது சரியா போச்சா' என்று கண்களால் சமிக்ஞை செய்ய, மீரா வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள்.


"என்ன ஆழி ஏதோ முக்கியமா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க போல, மே ஐ கம் இன்" என்றபடி மீராவை ஓரக்கண்ணால் பார்த்தபடியே உட்கார்ந்தான் விஷ்ணு.


"ம்ம்ம் ஆமா விஷ்ணு… ஒரு கன்சைன்மெண்ட் வாங்கப்போகணும், எனக்கும் சைத்துக்கும் ஒரு முக்கியமான வேலை இருக்கு, அதான் மீராவை அனுப்பலாம்னு இருக்கேன்" என்று சொல்ல மீரா ஆழியை "எதே…" என்று அதிர்ந்து பார்க்க, சைத்ரா வந்த சிரிப்பை அடக்க படாதபாடுபட்டாள்.


"ஏய் ஆழி என்னடி… கன்சைன்மெண்ட் வாங்க நீ தான போறேன்னு சொன்ன… இப்ப என்ன என்னை போகச் சொல்ற" என்று ஆழி காதைக் கடித்தாள் மீரா.


"அது அப்ப… இது இப்ப… எல்லாம் ஒரு காரணமா தான் சொல்றேன், நீ வாய மூடிட்டு ஒழுங்கா கிளம்பு" என்று மெதுவாகப் பல்லை கடித்துக் கொண்டு பேசிய ஆழி,


"அப்புறம் விஷ்ணு என்ன இந்தப் பக்கம்" என்று வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க,


"அது ஒன்னும் இல்ல ஆழி… அந்த யுவராஜ்க்கு என்ன ப்ளான் முடிவு பண்ணி இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்க தான் வந்தேன்" என்று அசடு வழிய,


"ம்ம்ம் பாத்தாலே தெரியுது… உங்களுக்கு கடமை தான் முக்கியம்னு எனக்கு நல்லாவே தெரியுமே… கரெக்ட் டைம்க்கு தான் வந்திருக்கீங்க, நேத்து தான் நெட்ல ஒரு சூப்பர் மேட்டர் புடிச்சேன். நம்ம நல்ல நேரம் எங்களுக்கு மெட்டீரியல் சப்ளை பண்ற ஏஜெண்ட் கிட்ட அது ஸ்டாக் இருக்காம். யாருக்கோ வர வச்சது… டபுள் பேமெண்ட் குடுத்து அதை நான் வாங்கிட்டேன். அதை கலெக்ட் பண்ண தான் மீரா போறா" என்ற சொல்ல, ஒரு நிமிடம் எதையோ யோசித்த விஷ்ணு,


"ஏஜெண்ட்னா யாரு அந்த விமல் பையனுக்கு பூச்சியோ புழுவோ குடுத்தானே அவனா…" என்று பதற, ஆழி உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டே,


"ஆமா விஷ்ணு அவனே தான்… நான் கூட மீரா மேல அவனுக்கு ஒரு க்ரஷ்னு சொன்னனே அவனே தான்" என்று அலுங்காமல் ஒரு குண்டை தூக்கிப் போட சட்டென எழுந்து கொண்டான் விஷ்ணு.


"ஏன்‌ ஆழி, மீரா எதுக்கு தனியா போகணும். நான் இப்ப ஃப்ரீ தான், பேசாம நானே கூட்டிட்டு போய்ட்டு வரேனே" என்றதும் ஆழி திரும்பி மீராவை பார்த்து கண்ணடித்து,


"நோ ப்ராப்ளம் விஷ்ணு‌… அவ வந்தா நீங்க கூட்டிட்டுப் போங்க..." என்றவள்,


"மீரா கன்சைன்மெண்ட் பத்திரம். வெண்மதி அம்மாகிட்ட ஒரு புது காண்ட்ராக்ட் கிடைக்கிற மாதிரி இருக்கு, அது விஷயமா ஒருத்தரை பாக்க போறேன்னு சொல்லிட்டு வந்தேன். நான் சீக்கிரம் போகணும், நானும் கிளம்புறேன். சைத்ரா பை டி" என்றவள் ரகசியமாக, "ஆல் தி பெஸ்ட் மீரா" என்றுவிட்டு நிலாவை தூங்கிக் கொண்டு செல்ல, விஷ்ணுவுடன் புறப்பட்டாள் மீரா.