ஆழியின் ஆதவன் 20

 

ஆழி 20




"ஏய் என்ன சொல்ற நீ!!? இவ்ளோ படிச்சிட்டு எதுக்கு நீங்க இந்த மாதிரி?" என்று அதிர்ந்த ஆதவுக்கு அடுத்து என்ன கேட்பது என்று தெரியவில்லை.


"ம்ம்ம் படிச்சோம்… படிச்சிருக்கோம். அந்த படிப்பு எப்படி வந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா? அத விடுங்க, நான் கொலைகாரின்னு உங்களுக்கு தெரியும். ஆனா, எந்த வயசுல, எந்த சூழ்நிலையில  நான் என்னோட முதல் கொலையை  செஞ்சேன்னு உங்களுக்கு தெரியுமா?" என்ற ஆழியின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.


"எனக்கு பதிமூணு வயசு இருக்கும் போது, என்னோட அம்மா, அப்பா ரெண்டு பேரும் ஒரு அக்சிடென்ட்ல இறந்துட்டாங்க, சொந்த பந்தம்னு யாரும் இல்லாம இருந்த என்னை அக்கம் பக்கம் இருந்தவங்க, மும்பைல இருக்க ஒரு சின்ன அநாதை இல்லத்துல சேர்த்து விட்டாங்க, நான் அங்க சேர்ந்த ஆறு மாசம் கழிச்சு மீராவும் அங்க வந்து சேர்ந்தா. குடிக்க காசு குடுக்கலன்னு இவ அப்பன், இவ அம்மாவை குத்திக் கொன்னுட்டு ஜெயிலுக்கு போய்ட்டான். இவ இல்லத்துக்கு வந்துட்டா, அடுத்து கொஞ்ச நாள்  கழிச்சு சைத்ரா வந்தா, அவ அம்மா, அப்பா இறந்துட்டாங்க, அவ அம்மாவோட தம்பியால இவளை பாத்துக்க முடியலன்னு சொல்லி அங்க கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டான்." என்ற ஆழியை விழி உயர்த்திப் பார்த்த முகில், 


"அப்ப  சைலேஷ்?" என்று கேட்க,


"ம்ம்ம் ஆமா, சைத்ரா அம்மாவோட சித்தப்பா பையன் தான் அந்த பொறம்போக்கு சைலேஷ்." என்றாள்.


"எங்க மூணு பேர்ல சைத்ரா தான் சின்னவ… ஏனோ பார்த்தவுடனேயே எங்களுக்கு அவளை புடிச்சுது. அவளும் எங்ககிட்ட ஒட்டிக்கிட்டா, எப்பவும் நாங்க மூணு பேரும் ஒன்னா தான் இருப்போம். நாங்க இருந்த இல்லத்துல பெருசா எந்த வசதியும் இல்லாட்டியும், ஓரளவு எங்களுக்கு சாப்பாடு போட்டு,‌ நல்லாவே பாத்துக்கிட்டாங்க. இல்லத்துல இருந்தபடியே அங்க பக்கத்துல இருந்த ஸ்கூல்ல நாங்க படிச்சிட்டு இருந்தோம். ஏனோ தானோன்னு வாழ்க்கை போய்ட்டு இருந்தது. நானும் மீராவும் ப்ளஸ் டூ முடிச்சிட்டு லீவ்ல இருந்த சமயம் அது. சைத்துவும் அப்ப டென்த் முடிச்சிருந்தா… அப்பதான் எங்க இல்லத்துக்கு அடிக்கடி வர்ற ஒரு பெரியவர் லீவ்ல இருந்த எங்களை அவர் கார்மெண்ட்ஸ்க்கு வேலைக்கு கூப்டாரு… அங்க வந்து வேலைய கத்துக்கிட்டா, பின்னாடி எங்களுக்கு அது உதவியா இருக்கும்னு சொன்னாரு… நாங்க பார்ட் டைம்மா அங்க வேலை பாத்துட்டே, மேல படிக்கலாம்னு சொன்னாரு, அதுக்கு உதவி பண்றதாவும் சொன்னாரு. நாங்க இருந்த இல்லத்துல அப்ப சாப்பாட்டுக்கே கஷ்டம், அதுனால வேற வழி இல்லாம நாங்க அங்கிருந்து வெளிய வந்தோம். நாங்க வேலைக்கு போனா, அவங்களுக்கு கொஞ்சம் உதவி பண்ண மாதிரி இருக்கும், அதோட எங்களுக்கும் ஒரு தொழில் தெரிஞ்சுக்கிட்ட மாதிரி இருக்கும்னு நெனச்சு, அந்த இல்லத்தை விட்டு வெளிய வந்தோம். சைத்துவும் யாருக்கும் தெரியாம எங்க பின்னாடியே ஓடி வந்துட்டா. ஒரு சின்ன வீட்டை வாடகைக்குப் புடிச்சு நாங்க மூணு பேரும் தங்கினோம். அங்க இருந்தே வேலைக்குப் போனோம். சைத்ரா நல்லா படம் வரைவா சோ அந்தப் பெரியவர் அவளையும் டிசைனிங் டிபார்ட்மென்ட்ல அசிஸ்டென்ட்டா போட்டாரு. எல்லாம் ஒழுங்கா தான் போச்சு, அந்த சைலேஷை நாங்க பாக்குற வரை." என்ற ஆழி கண்களை மூடிக்கொண்டாள்.


ஆழி தோளை அழுத்திப்பிடித்த மீரா, "தீடிர்னு ஒரு நாள் அந்த சைலேஷ் மாமான்னு சொல்லிட்டு, சைத்ராவை பாக்க வந்தான். சொந்தம் பந்தம்னு எதுவும் இல்லாம அநாதையா இருந்த அவளுக்கு சொந்தம்னு சொல்லிட்டு ஒருத்தன் வரவும் அவளுக்கு அவ்ளோ சந்தோஷம். இனிமே சைத்துக்கு நல்ல காலம்ன்னு நெனச்சு நாங்களும் சந்தோஷப்பட்டோம். ஆனா, அப்ப எங்களுக்கு தெரியல, அவன் சொந்தத்துல அவளுக்கு மாமான்னு சொல்லிட்டு வர்ல, தொழில் முறையில் தான் அவளுக்கு மாமாவா இருக்க வந்தான்னும், அவனால் எங்க மூணு பேர் வாழ்க்கையும் அடியோடு மாறப்போகுதுனும்" 


"ஒரு நாள் நாங்க வேலை செஞ்சிட்டு இருந்த கார்மெண்ட்ஸ்ல சைலேஷை பாத்தோம். அவன் அந்த கார்மெண்ட்ஸ் பார்ட்னரோட ஃப்ரண்டுன்னும், அவரை பாக்க வந்ததாகவும் சொன்னான். அதுக்குப் பிறகு அவன் அடிக்கடி அங்க வந்தான். வரும்போதெல்லாம் சைத்ராவை வந்து பாத்துட்டு போவான்."


"அன்னைக்கு எங்களுக்கு வேலை முடிய ரொம்ப லேட் ஆகிடுச்சு, கிட்டத்தட்ட அங்க வேலை பார்த்துட்டு இருந்த எல்லாரும் கிளம்பி இருந்தாங்க. நானும் ஆழியும் சைத்துவை கூப்பிட‌ப்போனோம். அங்க சைலேஷ் வந்து அவளை கூட்டிட்டு போனதா சொன்னாங்க. எங்கன்னு கேட்டதுக்கு, அந்த கார்மெண்ட்ஸ் பார்ட்னர் சைத்ராகிட்ட ஏதோ டிசைன் வரைஞ்சு குடுக்க சொல்லி கேட்டதாகவும், அதுக்காக தான் சைலேஷ் வந்து அவளை அழைச்சிட்டுப் போனான்னு சொன்னாங்க… ஏற்கனவே அந்த பார்ட்னர் பத்தி எங்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்ல… அவன் ஒரு பொம்பளை பொறுக்கின்னு எங்களுக்குத் தெரியும். அவனை பாக்க சைத்ரா இந்த நேரத்துல போயிருக்கான்னு தெரிஞ்சுது. நாங்க உடனே அங்க போனோம்." என்ற மீரா தன் கட்டுப்பாட்டை இழந்து கதற ஆரம்பிக்க மூடி இருந்த ஆழியின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.


கதறும் மீராவின் தோளில் ஆதரவாக கைவைத்து அழுத்திய விஷ்ணு, "ப்ளீஸ் மீரா அழாத, கண்ட்ரோல் யுவர் செல்ஃப்" என்றவன் அவள் கண்களை‌ துடைத்துவிட, ஆதவ் ஆழி அருகில் அமர்ந்தவன், அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். 


ஆதரவுக்கு ஆதவின் தோள் கிடைத்தவுடன், அவள் மொத்த துக்கத்தையும் அவன் தோளில் கண்ணீராக இறக்கி வைத்தாள் ஆழி.


"பதினாலு வயசு பொண்ணு ஆதவ் அவ, சின்… சின்ன குழந்தை… அவள… அவளை அவனுங்க" என்ற ஆழி பெரும் குரலெடுத்துக் கதற… ஆதவ்வுடன் விஷ்ணு முகில் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது.


"நாங்க அந்தக் கதவை திறக்க எவ்வளவோ ட்ரை பண்ணோம் ஆதவ், ஆ... ஆனா..., எங்களால முடியல. அந்த நேரம் சைத்து 'ஆழி, மீரா என்னை விட சொல்லுங்க… எனக்கு வலிக்குது... வலிக்குது... என்னை விடுங்கன்னு' கதறுன கதறல் இன்னும் எங்க காதுல கேட்டுட்டு இருக்கு… என்ன நடக்குது, அவனுங்க அவளை என்ன பண்றாணுங்கன்னு கூட தெரியாத வயசு ஆதவ் அவளுக்கு… அவளைப் போய்…"


"எங்க ரெண்டு பேர் கண்ணு முன்னாடியே அவளை" என்ற ஆழி ஆதவ் மடியிலேயே முகம் புதைத்து கதற, மீராவும் முகத்தை மூடிக்கொள்ள விஷ்ணு அவளை அணைத்துக்கொண்டான். 


"அங்க இருந்த ஒரு இரும்பு கம்பிய‌ எடுத்து அந்த ரூம் ஜன்னல் கண்ணாடியை உடச்சிட்டு உள்ள போனோம். அங்க தரையில பாதி உயிரா செதஞ்சு போயி, உடம்பு முழுக்க ரத்தக் காயத்தோட, துணி இல்லாம" என்ற மீராவுக்கு தொண்டை அடைக்க, அந்த காட்சியை இப்போது நினைக்கவும் அவள் இதயம் பதறியது.


"நாங்க குழந்தை மாதிரி பாத்து பாத்து வளர்த்த புள்ளைய, எங்க கண்ணு முன்னாடியே கசக்கி கிடக்குறதை பாத்த அடுத்த நிமிஷம், எனக்கு எல்லாம் மறந்துப் போச்சு, என் எண்ணம் முழுக்க என் சைத்து தான் இருந்தா… அவளை இப்படி செஞ்சவனை உயிரோட விடக்கூடாதுனு மட்டும் தான் தோணுச்சு, கையில இருந்த இரும்பு கம்பியால அந்த வெறி புடிச்ச நாயை அடிச்சேன்,‌ அடிச்சிட்டே இருந்தேன்… அடிச்சே அந்த நாயை கொன்னேன். அந்த நேரம் மீராவோட கவனம் சைத்ரா மேல இருக்க, அதை யூஸ் பண்ணி அந்த பொறுக்கி நாய் சைலேஷ் அங்கிருந்து தப்பிச்சிட்டான்… இல்லாட்டி அன்னைக்கே அவனையும் நான் அடிச்சுக் கொன்னுருப்பேன்." என்ற ஆழி குரலில் இயலாமை அப்பட்டமாக தெரிந்தது.


அந்த வீடே அமைதியாக இருந்தது. ஆழிக்கும் மீராவுக்கும் கண்களில் கண்ணீர் வறண்டு விட, அழுக கூட முடியாமல் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்து இருக்க, முகில் பார்வை முழுவதும், இன்று பிறந்த குழந்தை போல் நிர்மலமான முகத்தோடு உறங்கிக்கொண்டிருந்த சைத்ரா மேலேயே நிலைத்து நின்றது.


"அந்த நாளுக்கு பிறகு எங்க வாழ்க்கையே அடியோடு மாறிடுச்சு… செத்துக் கிடந்தவன் பக்கத்துல பாதி செத்துக்கிடந்த சைத்ராவை மடில போட்டுட்டு அடுத்து என்னனு தெரியாம உக்காந்துட்டு இருந்தோம். அப்ப தான் அங்க பாக்க ரெளவுடி மாதிரி இருந்த நாலஞ்சு பேர் வந்தாங்க, அங்க இருந்த சூழ்நிலையை பாத்துட்டு, யாருக்கோ ஃபோன் பண்ணி பேசினாங்க, அதுக்கு அப்புறம் உடனே அந்த டெட்பாடிய அங்கிருந்து டிஸ்போஸ் பண்ணிட்டு சைத்ராவை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய் அட்மிட் பண்ணிட்டு, எங்க ரெண்டு பேரையும் எங்கயோ கூட்டிட்டு போய் ஒருத்தன் முன்னாடி நிறுத்துனாங்க… அங்க போன அப்புறம் தான் தெரிஞ்சுது அது அண்டர்கிரவுண்ட் வேலை எல்லாம் செய்ற இடம்னும், அந்த ஆள் மும்பைல பெரிய ரெளவுடினும்…"


***


ஆழினி, மீராவை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன், "என்னோட ஆட்கள் அங்க வந்ததே, நீ கொன்னீயே... அந்த நாயை போட்டுத்தள்ள தான். ஆனா, அந்த வேலைய நீ செஞ்சிட்ட… ஹாஸ்பிடல்ல இருக்க அந்தப் பொண்ணோட ட்ரீட்மென்ட், அதோட நீ செஞ்ச கொலை, இது ரெண்டையும் நான் பாத்துக்குறேன், அதுக்குப் பதில் இனிமே நான் சொல்ற எல்லா வேலையையும் நீங்க செய்யனும்." என்றான்.


ஆழியும் மீராவும் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் சைத்ராவுக்காக சரி என்று சொல்ல, அந்த நொடி மூவரின் வாழ்க்கை பாதையும் தடம்புரண்டது.


"அவங்க எங்களை தப்பான தொழில் எதுலையும் யூஸ் பண்ணல, சில இடங்கள்ல எங்களை மாதிரி பொண்ணுங்க ஈசியா நுழைஞ்சிட முடியும். அந்த மாதிரி இடத்துல எங்களை வச்சு அவங்க வேலைய முடிப்பாங்க… பெரிய பெரிய இடங்கள்ல இன்பர்மேஷன் கலெக்ட் பண்ண, சில பணக்கார பசங்களுக்கு எங்களை வச்சு ஆசை காட்டி கடத்தி பணம் புடுங்குறதுனு இப்படி நிறைய… கொஞ்ச நாள்ல சைத்துவும் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தா, போக வேற இடம் இல்லாம போய்டவே, அவளையும் எங்க கூடவே வச்சிக்க வேண்டிய சூழ்நிலை… கடைசி வரை எங்க வாழ்க்கை இப்படியே போய்டுமோன்னு பயம் வந்துடுச்ச. அதனால அந்த ரெளடி ஹெட் கிட்ட நாங்க மேல படிக்கணும்னு கேட்டோம்.  இங்கிலீஷ் பேசுற பொண்ணுங்க கேங்ல இருந்தா பலவிதத்துல அவனுக்கு உதவும்னு எங்களை படிக்க அலோவ் பண்ணான்… நாங்களும் மேல படிச்சோம். எங்க அழகு, படிப்பு, புத்திசாலித்தனம் எல்லாம் நாளுக்கு நாள் வளர, அது அவனுக்கு பணமா மாறுச்சு… அங்கயே இருந்து இருந்து நாங்களும் அவனுங்க மாதிரி மாறிட்டோம். கொலை எல்லாம் எங்களுக்கு ஒரு பெரிய மேட்டரே இல்லன்ற அளவுக்கு ஆகிடுச்சு... ஒரு ஸ்டேஜ்ல அந்த ஆள், எங்களை வச்சு வேற வழில பணம் சம்பாதிக்க திட்டம் போட்டான். வேற வழி இல்லாம அவனை நான் கொன்னுட்டேன். ஒரு வெறில் அவனை கொன்னுட்டேன் தான். ஆனா, அடுத்து என்னன்னு யோசிக்கும்போது உள்ளுக்குள்ள ரொம்ப பயமா இருந்துச்சி, நான் மட்டும் தனிய இருந்திருந்த என்ன ஆனாலும் பரவாயில்லனு தைரியம இருந்திருப்பேன். ஆனா, என்னோட மீரா, சைத்து உயிரும் ஆபத்துல இருக்குன்னு யோசிக்கும்போது எனக்கு என்ன பண்றதுன்னு புரிய, போலீஸ் கேஸ்னு போன அவ்ளோதான் எங்க மூணு பேருக்கும் எதிர்காலன்னு  ஒன்னு இருக்காதுனு நெனச்சு குழம்பி இருக்கும் போது தான், அவங்க  எங்க வாழ்க்கையில் வந்தாங்க… அவன்கிட்ட இருந்து எங்களை எந்த கேஸூம் இல்லாம காப்பாத்தி விட்டாங்க " என்ற‌ ஆழியின் முகம் உணர்வு துடைத்து இருந்தது.