ஆழியின் ஆதவன் 16



 ஆழி 16


"ஏய் அது உனக்கு எப்படி தெரியும்?" என்றவன் சட்டென உதட்டை கடித்துக்கொள்ள,


"ம்ம்ம் நீங்க போட்ட மாறுவேஷம் அந்த லட்சணம் போலீஸ்காரர். மண்டைய மறைச்ச நீங்க உங்க மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டீங்க" என்று சிரித்தபடியே சைத்ரா அவன் அருகில் வர, சற்று முன் அந்தக் கத்து கத்தியவள் இவள்தானா என்று முகிலுக்கு குழப்பமாக இருந்தது.


"என்ன முகில் சைத்து சொல்றது புரியலயா?" என்ற மீராவை அப்பாவியாகப் பார்த்த முகில், "எனக்கு இவங்க சொல்றது மட்டும் இல்ல, இவங்களையே சரியா புரியல மீரா"


"போகப்போக புரிஞ்சுக்குவீங்க மிஸ்டர். போலீஸ்காரர். இப்ப நம்ம கொண்டை மேட்டருக்கு வருவோம், ஆமா நாங்க தான் ஹேக்கிங், ட்ராக், பக் (bug) இதெல்லாம் பண்ற ஆளுங்கன்னு தெரியும் இல்ல… அப்புறம் என்ன வெண்ணைக்கு ஆழி பின்னாடி போனீங்க…" என்ற சைத்ராவை புரியாமல் பார்த்த முகில், சட்டென கண்கள் விரிய,


"ஏய் அப்ப நீங்க என்னை ட்ராக் பண்ணிட்டு இருக்கீங்களா?" என்று அதிர்ந்தவனைப் பார்த்து வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்த சைத்ரா, "ஆழி இது டியூப்லைட் கூட இல்லடி... வாழ மட்டை..‌. ரொம்பக் கஷ்டம்." என்று சொல்லி சொல்லி சிரிக்க, அவளை மூக்கு முட்ட முறைத்தான் முகில்.


"சாரி முகில்… எங்களுக்கு வேற‌ ஆப்ஷன் இல்ல. சோ உன்னையும் ட்ராக் பண்ணோம், பண்ணிட்டு தான் இருக்கோம். அன்ட் ட்ராக்கர் கூட சேர்த்து உன்னை மாட்டி விட்டது உன்னோட ஆசை புல்லட். நானும் நிலாவும் எங்க போனாலும் நீ எங்க பின்னாடியே வந்திருக்க, நான் சில டைம் உன்னோட புல்லட்டை பாத்திருக்கேன். முதல்ல நீ நிலாக்காகத் தான் வரேன்னு நெனச்சேன். அதுக்குப் பிறகு எனக்கு டவுட் வந்து, சைத்துவை செக் பண்ண சொன்னேன். அப்ப தான் தெரிஞ்சது, நான் தனியா வெளிய போனா எல்லா இடத்திலயும் கூட நீ இருந்திருக்கன்னு" என்று முகிலை அழுத்தமாக பார்த்து "ஏன் முகில்?" என்று கேட்ட ஆழி கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முகில் அமைதியாக நின்றான்.


"என்ன முகில் பதில் சொல்ல முடியலயா...? வேணும்னா நான் சொல்லவா?" என்றதும் முகில் சட்டென்று ஆழியை நிமிர்ந்து பார்த்து, 


"உ… உனக்குத் தெரியுமா ஆழி?" என்றவனை பார்த்து அலட்சியமாகச் சிரித்த ஆழி,


"இது கூட தெரியாட்டி, நானெல்லாம் இந்த வேலைக்கு அன்ஃபிட் முகில், சொன்ன வேலை முடிஞ்சதும் ஆதவ் என்னை ஒரேயடியா முடிச்சிடுவேன்னு சொல்லி இருப்பாரு… அப்படி எதுவும் நடக்கக்கூடாது… எனக்கு எதுவும் ஆகிடக்கூடாதுனு பயந்து, நீ எனக்கு பாதுகாப்பா என்னையே சுத்திட்டு இருக்க… அம் ஐ ரைட்" என்றதும் முகிலின் தலை ஆமாம் என்று தன்னால் ஆடியது.


"நீ சொன்னது உண்மைதான். என்ன தான் எனக்கு ஆதவ், விஷ்ணு மேல எனக்கு நம்பிக்கை இருந்தாலும், எங்களுக்கு போலீஸ் புத்தியாச்சே... ஒருவேளை எங்க வேலை முடிஞ்சதும் உன்னை உயிரோடு விட்டு வைக்க வேணாம்னு தோனி, உன்னை எதுவும் செஞ்சிட்டா என்ன பண்றது… அதான் நான்" என்றவனை பார்த்த மூவரின் மனதும் மகிழ்ந்தது.


"ஆதவ் நல்லவன் தான் ஆழி, ஆன வேலைன்னு வந்துட்டா அவன் வேர மாதிரி மாறிடுவான். அவனுக்கு தப்புன்ன தப்பு தான். யாருக்காகவும் மாற மாட்டான், நீங்க காசு வாங்கிட்டு பண்ற வேலைய அவன் கடைமைக்காக பண்றான். இதுவரை எடுத்த எந்த கேஸ்ளையும் அவன் தோத்ததே இல்ல தெரியுமா, யாரலையும் முடியலைன்னு கைவிட்ட கேஸ் எடுத்து அதை சக்ஸஸ் பண்ணி காட்டுவான்," என்று இழுத்து மூச்சு விட்டவன், "அப்டி இருந்த ஆதவ் ஆஷா போனதுக்கு அப்பறம் அப்படியே முழுசா மாறிட்டான். எங்க நிலாவுக்கு ஏதும் அகிடுமோன்ற பயம் அவனை மேற்கொண்டு யோசிக்கவே விடல ஆழி. அதுனால தான் எங்க உன் விஷயத்தில் எங்க அவன் ஏதாவது தப்பு பனிடுவானோன்னு பயந்து நான் உன் பின்னாடி வரேன்." என்றவனை சின்ன சிரிப்போடு பார்த்த பெண்கள்,


"தேங்க்ஸ் முகில்…" என்று மூவரும் ஒரே குரலில் சொல்ல முகில், "எதுக்கு தேங்க்ஸ்?" என்று புரியாமல் கேட்டான் முகில்.


"ப்ச்ச்‌… ஒன்னும் இல்ல முகில், சும்மா சொல்லணும்னு தோனுச்சு அவ்ளோதான். ஜஸ்ட் லைக் தட்" என்ற ஆழி,


"நீங்க நெனச்ச மாதிரி எனக்கு ஒன்னும் ஆகாது முகில். அவங்க ரெண்டு பேரும் என்னை எதுவும் செய்ய மாட்டாங்க. யூ டோண்ட் வொரி. அப்படி எதும் நடந்தாலும் என்னை காப்பாத்திக்குற தைரியம் என்கிட்ட இருக்கு" என்றவள் திரும்பி சைத்து, மீராவை பார்த்து,


"இன்கேஸ் எனக்கு எதாவது ஆகிட்டா இவங்க ரெண்டு பேரையும் சேஃப்பா வேற‌ எதாவது கன்ட்ரிக்கு அனுப்பி வச்சிடு முகில்"


"ஏய் ச்சீ வாயமூடு… எப்ப பாரு அச்சாணியமா பேசிட்டு… அதெல்லாம் நீ நூறு வயசு வரை இருந்து எங்க உயிரை எடுப்ப… இப்ப வந்து அந்த நாய்க்கு என்ன ப்ளான் வச்சிருக்க அதை சொல்லு" என்ற சைத்ரா, ஆழி காதை பிடித்து இழுத்துச் சென்றாள்.


***


மாலை மூன்று மணிக்கு கையில் நிலாவுடன் சவுக்குத் தோப்பில், தவிப்போடு அங்கும் இங்கும் எதையோ பார்த்தபடி நடந்து கொண்டிருந்த ஆழி அருகில் வந்தான் விமல்.


"ஹாய் ஐ அம் விமல்." என்று‌ அவன் ஆழி முன் தன் வலது கையை நீட்ட, ஆழி அவனை முறைத்து விட்டு, முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.


"சாரி மேடம், என்னை தப்பா நினைக்காதீங்க... நானும் கொஞ்ச நேரமா பாத்துட்டு இருக்கேன். நீங்க ரொம்ப நெர்வசா இருக்கீங்க… அங்கயும் இங்கயும் பார்த்துட்டே இருந்தீங்க, எனி ப்ராப்ளம்? மே ஐ ஹெல்ப் யூ?" என்று ஈஈஈயென இளிக்க, ஆழி அவனை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்து,


'வாடி மகனே வா… மொளச்சு மூணு இல விடல, அதுக்குள்ள உனக்கு பொம்பள சோக்கு கேக்குது இல்ல, பொறுக்கி நாயே இருடி இரு உனக்கு இருக்கு… என்னை பாத்தாலே நான் உன்னைவிட பெரிய பொண்ணுன்னு உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கும், தெரிஞ்சும் என்கிட்ட வந்து ஜொள்ளு விட்டுட்டு நிக்கிற நீயி… வுடுடா வுடு, வாய்ல இருக்க மொத்த ஜொள்ளையும் இப்பவே வுட்று, இனிமே உன் வாய்ல இருந்து ஒன்னு வரும்னா, அது ரத்தம் மட்டும் தான். கூட அய்யோ… அம்மானு சத்தமும் வரும்' என்று மனதில் நினைத்தவள், அதை துளியும் முகத்தில் காட்டாமல்,


"இல்ல சார்… ரெண்டு மணிக்கு என்னோட ஃப்ரண்ட் இங்க வரேன்னு சொன்னா… பட் இப்ப மணி மூணு ஆயிடுச்சு… இன்னும் அவளை காணோம். பாப்பா மதியம் சாப்டது, இன்னும் கொஞ்ச நேரம் போனா பசில அழுக ஆரம்பிச்சுடுவா… எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல" என்று அப்பாவியாக சொல்ல,


"ஓ மை காட்! என்ன கெட்ட பழக்கம் இது… ஒரு இடத்துக்கு வரேன்னு சொன்ன சொன்ன நேரத்துக்கு வரவேணாம்? இப்படியா ஒரு அழகு குட்டியை காக்க வைக்கிறது" என்றவனை ஆழி அழுத்தமாகப் பார்க்க,


"அய்யோ தப்பா நினைக்காதீங்க… நான் குழந்தைய சொன்னேன்" என்றவன் நிலா கன்னத்தைக் கிள்ள வர, அவன் கை குழந்தையை தொடுவதை விரும்பாத ஆழி, வெடுக்கென்று நிலாவின் முகத்தை தான் தோளில் அழுத்திக்கொண்டாள்.


"சாரி... பாப்பாக்கு வெளி ஆளுங்க அவளை தொட்டா பிடிக்காது. அழுக ஆரம்பிச்சிடுவா"


"ஓ… இட்ஸ் ஓகே, இட்ஸ் ஓகே. சரி இப்ப நீங்க என்ன செய்யப்போறீங்க? உங்க ஃப்ரண்டுக்காக இன்னும் வெய்ட் பண்ணப்போறீங்களா? பாவம் இந்தக் குளிர்ல நீங்க இப்படி நிக்கறதைப் பாக்க என் மனசு தாங்கல"  என்று வழிய… ஆழியோடு சேர்த்து அங்கு நடப்பதை ப்ளூடூத் ஹெட்செட் மூலமாக கேட்டுக்கொண்டிருந்த சைத்ரா, மீராவுக்கும் கூட பற்றிக்கொண்டு வந்தது.


"ஆழி என்னால முடியலடி… சீக்கிரம் அந்தப் பரதேசிய அப்படியே தூக்கிட்டு வா. எனக்கு அவன் மண்டைய ரெண்டா பொளக்குற அளவு வெறி வருது." என்று சைத்ரா ஹெட்செடில் கத்த, அந்த சத்தத்தில் ஆழி காது வலித்தது.


"என்ன மேடம் நான் கேட்டுட்டு இருக்கேன், நீங்க அமைதியா இருக்கீங்க" என்ற விமலை பார்த்த ஆழி,


"ஹான்… இல்ல சார் இதுக்கு மேல இங்க வெய்ட் பண்ண முடியாது,‌ நான் வீட்டுக்குப் போகணும், வீட்ல வேற யாரும் இல்ல." என்றதும் உடனே விமலின் குறுக்கு புத்தி உள்ளே ஒரு திட்டம் போட, அவன் மரணமோ, "சீக்கிரம் என்னைப் பாக்க நீயே ப்ளான் போடுறீயேடா..." என்று அவனைப் பார்த்துச் சிரித்தது.


"இப்ப என்ன பண்ணப்போறீங்க மேடம்?" என்று பாவம் போல் கேட்டவன், "வேணும்னா நான் உங்களை வீட்ல ட்ராப் பண்ணவா?" என்று ஆழிக்கு வலையை வீச… அவனுக்கு தெரியாது அவன் வீசிய வலையில் அவனே விழப்போகிறான் என்று.


"ஒ... ரொம்ப தேங்க்ஸ் சார். இங்க வண்டி எதுவும் அவ்ளோ சீக்கிரம் கிடைக்காது, அதோட என் வீடு கொஞ்சம் உள்ள இருக்கு, டாக்ஸி கூடக் கிடைக்காது. என்னடா செய்றதுன்னு தவிச்சுப் போயிருந்தேன். ரொம்ப தேங்க்ஸ் சார்" என்ற ஆழி அவன் காரில் ஏறிக் கொண்டவள், கார் கதவில் சின்ன டிவைஸ் ஒன்றை ஒட்டி விட்டாள். இனி அந்தக் காரின் ஜி.பி.எஸ் சை வைத்து விமல் போன திசையை யாரும் கண்டுபிடிக்க முடியாது.


ஆழி சொன்ன வழியில், விமல் காரை ஓட்ட, காரின் சைடு வியூ மிரர் வழியே, அவர்கள் சென்ற காரின் பின்னால் சைத்ரா, மீரா கார் பின் தொடர, அந்தக் கார்க்குப் பின்னால் வந்த புல்லடை கவனித்த ஆழி முகத்தில் சின்னதாய் புன்னகை.


விமலுடன் ஆழி, பாதி காட்டுக்குள் தனியே தன்னந்தனியே என்று ஒற்றையாக நின்ற அந்த வீட்டிற்கு முன் காரில் வந்து இறங்கினாள்.


நிலாவை தூக்கிக்கொண்டு ஆழி காரில் இருந்து இறங்கியவள், "ரொம்ப தேங்க்ஸ் சார். நீங்க மட்டும் இல்லாட்டி நானும் குழந்தையும் இவ்ளோ சீக்கிரம் வீடு வந்து சேர்ந்திருக்க முடியாது. ரொம்ப தேங்க்ஸ்" என்றவள் வீட்டுக்குள் செல்லப் போக,


"ஹலோ ஏங்க ஒரு நிமிஷம்" என்ற விமலின் குரலைக் கேட்ட ஆழி உதட்டில் வெற்றிப் புன்னகையுடன், மெதுவாகத் திரும்பி விமலை பார்த்தாள்.


"என்ன சார்?" என்று அப்பாவியாகக் கேட்க,


"என்னங்க நீங்க? இந்தக் குளிர்ல இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு இந்தக் காட்டுக்குள்ள, உங்களுக்காக காரை ஓட்டிட்டு வந்திருக்கேன். இவ்ளோ தூரம் வந்தது எனக்கு தலையெல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா?, நீங்க என்னடான்னா வெறும் தேங்க்ஸ்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லிட்டுப் போறீங்க, என்னங்க இது? அட்லீஸ்ட் வீட்டுக்குள்ள கூப்ட்டு ஒரு டீ இல்ல காபியாது குடுக்கலாம் இல்ல, அது தானுங்க பண்பாடு" என்றுவனை வாயில் குண்டு வைத்து வெடிக்கலாம் என்று எண்ணும் அளவு ஆழிக்கு உள்ளுக்குள் கொதிக்க,


இங்கு சைத்ராவோ, "அடிங்கு பரதேசி… பண்ணாட, இது பொழைக்கிற பொழப்புக்கு இது பண்பாடு பத்தி பேசுது‌ பாரு மீரா. அப்படியே அந்த வாய மட்டும் தனியா வெட்டி எடுத்து, இனிமே இப்படிப் பேசுவீயா… பேசுவீயான்னு நம்ம நிலா பாப்பா செருப்பைக் கொண்டு நல்லா அடிச்சி வெளுக்கணும்டி இவனை" என்றவள் அவனை வண்ட வண்டையாகத் திட்ட, அந்த வார்த்தைகளைக் கேட்க முடியாமல் மீரா காதை மூடிக்கொள்ள, பாவம் ஆழியால் அது கூட முடியவில்லை.


"ஹலோ என்னங்க நான் சொல்லியும் கூட வீட்டுக்குள்ள கூப்பிட மாட்டேங்குறீங்க" என்ற விமலை பார்த்த ஆழி,


"அதில்ல சார்… வீட்ல யாரும் இல்ல" என்று சற்றுத் தயங்கியவள், "இட்ஸ் ஓகே சார், விதி யாரை விட்டது, நீங்க உள்ள வாங்க" என்றாள்.


"எது விதியா? என்ன சொல்றீங்க நீங்க? என்று விமல் கேட்க,


"அது ஒன்னும் இல்லீங்க சார், நான் போடுற டீயை குடிக்கறதும் வெஷத்தை குடிக்கறதும் ஒன்னு தான், அதை தான் சொன்னேன். நீங்க வேற எதுவும் தப்பா நெனைக்காதீங்க" என்றதும் சத்தம் போட்டு சிரித்த விமல்,


"நோ ப்ராப்ளம்… உங்க கையால நீங்க வெஷத்தை குடுத்தாலும் நான் குடிக்க ரெடி" என்று இளிக்க, ஆழி அவனை நக்கலாகப் பார்த்தவள்,


"அப்ப உள்ள வாங்க சார், உங்க ஆசப்படி என் கையாலயே உங்களுக்கு விஷத்தையே தரேன்" என்றவள் பின்னாடியே வால் பிடித்து கொண்டு சென்றான் விமல்.


இனி விமல் கதி??? ஆழியின் ஆட்டம் ஆரம்பம்…