ஆழியின் ஆதவன் 15

 


ஆழி 15


"எஸ் ஆழி… அவங்களை அப்படியே விட எங்களால எப்படி முடியும்?. என்னோட தங்கச்சி ஆஷா… அவ பாவம் தெரியுமா… ரொம்ப அப்பாவி. அவளைப் போய்" என்று கோவத்தில் எழுந்த விஷ்ணு, "அந்தக் கமிஷனர் ராஸ்கலை நான் சும்மா விடமாட்டேன். இப்பவே போய் அவனை என்ன செய்றேன்னு பாரு" என்று எழுந்த விஷ்ணு கையைப் பிடித்து நிறுத்திய மீரா,


"போகும்போது மறக்காம ஒரு மலர்வளையம் வாங்கிட்டு போங்க, கரெக்டா நீங்க சென்னை போய் சேரும் நேரம் அந்த ஆளோட இறுதி ஊர்வலம் நடந்திட்டு இருக்கும்." என்ற மீராவை விஷ்ணு அதிர்ந்து பார்க்க, மீரா இதழோரமாகச் சிரித்தவள், "மேட்டர் தெரிஞ்ச பிறகும், எவிடன்ஸ் எதிர் பார்த்துட்டு சும்மா இருக்க நாங்க ஒன்னும் போலீஸ் இல்ல மிஸ்டர். விஷ்ணு. எங்களுக்கு வேண்டியது காரணம் தான், ஆதாரம் இல்ல. இப்ப இந்த உலகத்தில ஆஷா இல்லாம போனதுக்கு அந்த ஆளும் ஒரு காரணம். சோ... முடிச்சாச்சு" என்ற மீரா திரும்பி ஆழி, சைத்ராவை பார்க்க, அவர்கள் முகத்தில் வெற்றிப் புன்னகை.


மீரா சொன்னதை கேட்ட விஷ்ணு, உடனே தன் ஃபோனில் யாருக்கோ தொடர்பு கொண்டு பேசியவன், திரும்பி ஆதவ்வை பார்த்து தலையசைக்க, மீரா சொன்னது உண்மை என்று மூவருக்கும் புரிந்தது.


"நேத்து மிட்நைட் கமிஷனர் சூசைட் பண்ணிக்கிட்டாராம்." என்ற விஷ்ணுவை பார்த்து சிரித்த சைத்ரா, அவரா சூசைட் செய்யல, நாங்க செய்ய வச்சோம் டெப்டி" என்றது தான் தாமதம் விஷ்ணு அப்படியே அமர்ந்து விட்டான்.


"இது எப்ப நடந்தது? நீங்க மூணு பேரும் இங்க கொடைக்கானல்ல தான இருந்தீங்க… அப்புறம் எப்டி?"


"ஏங்க... படிப்பும், எக்ஸாம் கூட இப்ப எல்லாம் ஆன்லைன்ல வந்துடுச்சு, ஆஃப்டர் ஆல் ஒரு மர்டர். அதை எங்களால ஆன்லைன்ல பண்ண முடியாது… நாங்களும் அப்டேட் ஆகணும் இல்ல?" என்று சைத்து சிரிக்க, ஆழி விஷ்ணுவை பார்த்து,


"ஆஷாக்கு அந்த மெமரி கார்ட்டை யார் கிட்ட தர்றதுன்னு புரியல விஷ்ணு‌. ஆனா, பிரியா எப்படியாவது அந்த குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தரணும்னு கடைசியா சொன்னதையும் அப்படியே விடவும் முடியல. அந்த நேரம் தான் அவங்க வளைகாப்புக்கு அந்தக் கமிஷனர் வந்திருக்காரு, நீங்க அந்த ஆளை பத்தி ஆஷாகிட்ட நல்லவிதமா சொன்னதை நம்பி அவங்களும் அந்த ஆள்கிட்ட ஹெல்ப் கேட்டிருக்காங்க" என்று இழுத்து மூச்சுவிட்ட ஆழி, "பட், அப்ப ஆஷாக்கு தெரியல, அந்த ஆள் தான் அவங்க சாவுக்கு காரணமாகப் போறான்னு. கமிஷனர் பொண்ணோட மோசமான ஃபோட்டோஸ் வச்சு ப்ளாக் மெயில் செஞ்சு தான் அவரை அந்த விமலும், சைலேஷும் அவங்க கண்ட்ரோல்ல வச்சிருந்தாங்க, ஆஷா பத்தி அவங்ககிட்ட சொல்லி, அந்த மெமரி கார்ட்டை விமல்கிட்ட குடுத்து, தன் மகளோட ஃபோட்டோவை டெலீட் பண்ண வைக்கலாம்னு அந்த ஆள் ப்ளான் போட்டிருக்கான். அதுக்காக ஆஷாவை சைலேஷ் கிட்ட காட்டிக் குடுத்திட்டான்…"


"அவன் பொண்ணை காப்பாத்த, அவன் ஆஷாவை பலி குடுத்திருக்கான். அவன் பொண்ணு மாதிரி ஆஷாவும் ஒரு பொண்ணு தான, அதுவும் வயித்துல புள்ளையோட இருந்த பொண்ணைப்போய்..." என்ற குமுறிய முகில், "அந்த ஆளை எப்படி தற்கொலை பண்ணிக்க வச்சிங்க?" என்று கேட்டான்.


"எந்தப் பொண்ணுக்காக அவன் ஆஷாவை காட்டிக்கொடுத்து, அவங்க சாவுக்கு காரணமா இருந்தானோ, அந்தப் பொண்ணை வச்சே அவன் கதைய முடிச்சோம். விமல் சிஸ்டம் ஹாக் பண்ணி அதுல இருந்த எல்லாத்தையும் நாங்க டெலீட் பண்ணோம்‌. அப்படி செய்யும்போது அதுல கமிஷனர் பொண்ணு பிக்ஸ் இருந்ததைப் பாத்தோம். எதுக்கும் இருக்கட்டும்னு அதை விமல் சிஸ்டம்ல இருந்து டெலீட் பண்ணிட்டு நாங்க எங்க டேட்டாபேஸ்ல சேவ் பண்ணி வச்சோம். அதை அந்தக் கமிஷனர் கிட்ட சொல்லி, ஒழுங்கா நீயே தற்கொலை பண்ணிக்கிட்டா, மானம், மரியாதையாது மிஞ்சும். இல்லாட்டி நாளைக்கு காலையில என்ன நடக்கும்னு நாங்க சொல்லவேண்டியது இல்லைனு சொன்னோம். அவ்ளோதான் தான் வேலை முடிஞ்சது. அன்ட் நாங்க அந்த ஆளுக்கு வாக்கு குடுத்த மாதிரி அந்தப் பொண்ணு ஃபோட்டோ எல்லாத்தையும் மொத்தமா டெலீட் பண்ணிட்டோம்" என்று நடந்ததை சொல்லி முடிக்க, ஆதவ் ஆழியை தீயாக முறைத்தான்.


"என்ன வேலை பாத்திருக்க நீ?? அந்த விமலுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்டி இருக்கு. நீயும் ஒரு பொண்ணா இருந்துட்டு, இப்படி செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது… கமிஷனர் அயோக்கியன் தான் அதுக்கு அந்தப் பொண்ணு என்ன செஞ்சா? அவளை வச்சு… ச்சீ. இது உனக்கு தப்பா தெரியல" என்ற ஆதவ்வை பார்த்து நக்கலாகச் சிரித்த ஆழி, 


"இந்த அறிவு என்னோட பாஸ்வேர்டு தெரிஞ்சிக்கும் போது எங்க போச்சு மிஸ்டர். சிபிஐ…? புல் மேய போய்டுச்சா?!" என்று அவன் மட்டும் கேட்கும் குரலில் கேட்க, ஆதவ் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.


"என்ன மிஸ்டர். ஆதவ் பதிலையே காணோம்." என்று நக்கலாகச் சிரித்தவள், "ஐ திங்க் நாங்க யாருன்னு உங்களுக்கு மறந்து போச்சு போல? வீ ஆர் நாட் ஏ நார்மல் பொண்ணுங்க மிஸ்டர் சிபிஐ. எங்களுக்குப் போற வழி முக்கியம் இல்ல. எங்க வேலை முடியனும் அவ்ளோதான், அப்படித்தான் நாங்க இருந்தோம். அந்த வழியில் இருந்து எங்களை, வெளியே கொண்டு வந்த ஒரு நல்ல ஆத்மா சாகக் காரணமா இருந்தவங்களை அழிக்க, இது இல்ல... இதை விடக் கீழ, மோசமான எந்த எல்லைக்கும் இறங்கி கூட நாங்க வேலை செய்வோம். நாங்க வீட்டுச் செடி இல்ல மிஸ்டர், காட்டு மரம் எங்க இஷ்டத்துக்குத் தான் எங்க கிளை போகும்." என்று அங்கிருந்து எழுந்த ஆழியை நிறுத்திய ஆதவ்,


"அந்த மெமரி கார்டு உங்ககிட்ட இல்லனு தானே நீ சொன்ன… அப்புறம் உனக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது" என்று கேட்ட ஆதவ்வை, திரும்பிப் பார்த்தாள் சைத்ரா.


"நீங்க சந்தேகப்படும் ஆளை பத்தி விசாரிச்சு, எவிடன்ஸ் கேதர் பண்ணி, அப்புறம் புடிப்பிங்க. பட், எங்க வழி தனி வழி. ஆளை புடிச்சிட்டு தான் அடுத்த வேலைய பாப்போம்." என்று திமிராகச் சொல்ல, முகில் அவள் அருகில் சென்று, "யாரு அந்த சைலேஷா!?" என்று ஆச்சரியமாகக் கேட்க, சைத்ரா புருவம் உயர்த்தி அவனைப் பார்த்து, "பரவாயில்ல உங்களுக்கு கூட கொஞ்சம் மேல் மாடி வேலை செய்யும் போல" என்றபடி மூன்று பெண்களும் அங்கிருந்து செல்ல, ஆதவ், விஷ்ணு அடுத்து என்ன என்று குழம்பி இருந்தனர்.


விமல் மற்றும் அவன் அப்பனையும் முகில் விடாமல் தொடர்வதால், ஆழி அவர்களை கடத்தி இருந்தால் அது முகிலுக்கு தெரிந்திருக்கும். சைலேஷ் ஒருவன் மட்டும் தான் எங்கிருக்கிறான் என்று மூவருக்கும் தெரியாது. அதனால் ஆழி கடத்தியது சைலேஷை என்று முகில் புரிந்துக் கொண்டான். ஆனால், போலீஸூக்கே சிக்காத சைலேஷ் இந்தப் பெண்கள் பொறியில் எப்படி சிக்கினான் என்று மூன்று போலீஸ் மூளைக்கும் புரியவில்லை.


முகில் போய்க்கொண்டிருந்த பெண்களை நிறுத்தி, அவன் சந்தேகத்தை கேட்க, ஆழி அவனைப் பார்த்து சிரித்தபடி, "விஷ்ணு என்னை பர்ஸ்ட் டைம் பாக்கும் போது ஒன்னு சொன்னாரு, நீ செம்ம அழகா ஹாட்டா இருக்கன்னு" என்றவள் சிரித்துக்கொண்டே அங்கிருந்து செல்ல, மூவருக்கும் புரிந்துவிட்டது. சைலேஷ் எப்படி இந்த அழகு பெண்களிடம், அலேக்காக சிக்கி இருப்பான் என்று. ஆனால், இது எப்போது நடந்தது…?


****"


"ஆழி ப்ளான் ரெடியா?" என்று கேட்ட சைத்ராவை பார்த்து கட்டைவிரலை உயர்த்திக் காட்டினாள் ஆழினி.


"எப்ப ஆழி ஸ்டார்ட் பண்ணணும்?"


"இன்னைக்கு ஈவ்னிங் மீரா. அந்த விமல் பரதேசி சவுக்குத் தோப்பு பக்கம் இன்னைக்கு பொம்பளைங்களை பொறுக்க‌ போகுதாம். நம்ம அங்க வச்சு அவனை தூக்கிடலாம்."


"ஏன் ஆழி தூக்கணும்னு சொல்ற? பேசாம அங்கயே முடிச்சி விட்ற வேண்டியது தான… எதுக்கு தேவை இல்லாத டைம் வேஸ்ட்" என்ற மீராவை பார்த்து இடவலமாக இல்லை என்று தலையாட்டிய ஆழி,


"இல்ல மீரா. அப்படி செஞ்சா அவனோட டெட்பாடி அவன் அப்பனுக்கு கெடச்சிடும். அப்புறம் ஊரே கூடி ஒப்பாரி வச்சி சகல மரியாதையோட அவனை அடக்கம் பண்ணிடுவாங்க. அது நடக்க கூடாது. அந்த **** பொணத்துக்குக் கூட எந்த மரியாதையும் கிடைக்க கூடாது. எத்தனை பொண்ணுங்க மானமும், உயிரும் போக அந்தப் பொறம்போக்கு காரணமா இருந்துச்சு. அதோட சாவு அவ்ளோ சாதாரணமா இருக்க கூடாது‌. அதோட அவனோட சாவு ஆதவ், விஷ்ணு கண்ணு முன்னாடி தான் நடக்கணும்."


"யூ ஆர் ரைட் ஆழி. இவன் மட்டும் இல்ல, மீதி இருக்க மூனு பேர் பொணம் கூட யாருக்கும் கிடைக்க கூடாது… அதுவும் அந்த சைலேஷ்..." என்று கோவத்தில் பல்லைக் கடித்த சைத்ரா தோளில் யாரோ கை வைக்க, அவள் சட்டென திரும்பிப் பார்க்க, அங்கு முகில் நின்று கொண்டிருந்தான்.


"அதென்ன அந்த சைலேஷ் மேல மட்டும் உனக்கு இவ்ளோ கோவம். நீங்க அங்க பேசும்போதே உன்னை கவனிச்சேன். அவன் பேரை கேக்கும் போதெல்லாம் உன் முகம் ஒரு மாதிரி மாறுச்சு…?" என்றவனை முறைத்த சைத்ரா தோளில் இருந்த அவன் கையை தட்டி விட்டு, 


"அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். நீங்க யார் என்னை கேள்வி கேக்க? போய் உங்க வேலையைப் பாருங்க… வந்துட்டாரு பெரிய இவுராட்டம்" என்று கத்த,


"சைத்ரா," என்று மீரா அதட்ட, சைத்ரா மீராவை முறைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.


"விடுங்க மீரா… அவங்க மேல தப்பில்ல, நான் தான் அவங்க முகம் வாடி இருந்ததை பார்த்து, ஒரு வேகத்துல கேட்டுட்டேன். அவங்க சொன்னது கரெக்ட் தான… நான் யார் அவங்க சொந்த விஷயத்தில தலையிட, இவ்ளோ நாள் பழகுற ஆழியே என்னை ஃப்ரண்டா இல்ல, ஒரு ஆளா கூட பாத்தது இல்ல. அப்புறம் இவங்கள என்ன சொல்றது" என்ற முகில் அங்கிருந்து நகர, "முகில்" என்ற ஆழியின் குரலில் அங்கேயே நின்றான்.


"நான் யாருன்னு உனக்கு முன்னாடியே தெரியும் இல்ல?" என்று கேட்க, முகில் ஆமாம் என்று தலையாட்டினான்.


"நீ ஏன் அதை என்கிட்ட சொல்லல? இல்ல... ஏன் என்கிட்ட அது பத்தி எதுவும் கேக்கல?"


"சொல்லாததுக்கு காரணம் ஆதவ். அவன் என்னை நம்பி, என்கிட்ட சொன்ன விஷயத்தை உன்கிட்ட சொல்லி, அவன் என்ன மேல வச்சிருக்க நம்பிக்கையை உடைக்க என்னால முடியாது. பிகாஸ் ஹீ இஸ் மை ஃப்ரண்ட். கேக்காததுக்கு காரணம்… நீங்க பண்ணது எனக்கு பெரிய தப்பா தெரியல. நீங்க தப்பான ஆளுங்களை தான் டார்கெட் பண்ணி இருக்கீங்க… அதுவும் ஒரு வகையில இந்த நாட்டுக்கு நன்மை தான். அஸ் அ சிட்டிசன், அதை நான் தப்பு சொல்ல மாட்டேன். அதான் உன்கிட்ட எதுவும் கேக்கல" என்றவனைப் பார்த்து லேசாக இதழ் வளைத்த ஆழி,


"ஒருவேளை நீ என்கிட்ட கேட்டிருந்தா நான் அதை பத்தி உன்கிட்ட பேசி இருப்பேன்னு நீ நினைக்கறீயா?" என்ற ஆழியை கண்கள் சுருக்கிப் பார்த்தான் முகில்.


"ம்க்கும்... அப்படியே சொல்லிட்டாலும், இதோ இப்ப சைத்ரா சொன்ன அதே டைலாக், நீ யாரு என்னை கேள்வி கேக்க ன்னு தான் நீயும் கேட்டிருப்ப…" எனும்போதே, "கண்டிப்பா சொல்லி இருப்பேன்" என்ற ஆழியின் பதிலில் முகில் திரும்பி ஆழியை பார்த்தான்.


"ஆமா முகில் நீ கேட்டிருந்தா நான் கண்டிப்பா சொல்லி இருப்பேன். பிகாஸ் ஒரு வகையில நீயும் ஆஷா மாதிரி தான். நா என் வாழ்க்கையில ஆஷாக்கு அடுத்து பார்த்த மூணாவது நல்ல சோல் நீ தான். உனக்கு என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சப் பிறகும் கூட நீ என்கிட்ட வேற மாதிரி பிஹேவ் பண்ணது இல்ல… நீ என்னை முதல் தடவை எந்த மரியாதையோட என்னை பாத்தியோ, அதே மரியாதை இந்த நிமிஷம் வரை உன் கண்ணுல எனக்காக நான் பாக்குறேன். நான் யார்னு தெரிஞ்சும் மதி அம்மா கூட சேர்ந்து ஆதவ் கூட எனக்கு கல்யாணம் நடக்க ப்ளான் போட்டுட்டு இருக்க, உன்கிட்ட என்னைப் பத்தி சொல்லாம வேற யார் கிட்ட நான் சொல்லப்போறேன்" என்ற ஆழியின் வார்த்தையில் முகில் கண்கள் லேசாகக் கலங்கியது.


"ஏய் சும்மா பொய் எல்லாம் சொல்லாத… நான் ஆதவ் பத்தி பேசும்போது, எப்ப தொழிலை மாத்துனீங்கன்னு கேட்டு என்ன நீ கலாய்க்கல… அப்ப இருந்து நான் உன் மேல செம்ம காண்டுல இருக்கேன் தெரியுமா? " என்றவன் முகத்தை திருப்பிக் கொண்டு தன் கண்களை துடைத்துக் கொள்ள, ஆழியும் மீராவும் அவனைப் பார்த்து புன்னகைக்க, சைத்ரா கூட கோவம் குறைந்து லேசாகச் சிரித்தாள்.


"ஓஓஓ அப்படியா சார். நீங்க செம்ம கடுப்புல இருக்கீங்க இல்ல…" என்று கேலியாகச் சிரித்தவள், "அப்ப எதுக்கு சார் கொஞ்ச நாளா நான் எங்க போனாலும் பாடிகார்ட் மாதிரி என்னை ஃபாலோ பண்ணிட்டு வரீங்க?" என்றவளை அதிர்ந்து பார்த்தான் முகில்.