ஆழியின் ஆதவன் 14

 


ஆழி 14


ஏய் நீ என்ன சொல்ற? நீ சொல்றது உண்மையா? இந்தக் கேஸ்ல சம்பந்தப்பட்டது மூணு பேர். அந்தப் பையன் விமல், அவன் அப்பன், அன்ட் அந்த சைலேஷ். இதுல யார் பத்தின எவிடன்ஸ் ஆஷா கிட்ட இருந்தது? இதை ஏன் ஆஷா எங்ககிட்ட சொல்லல?, இப்ப அந்த மெமரி கார்டு எங்க?" என்று சிபிஐ யாக மாறிய‌‌ ஆதவ் கேள்வி மேல் கேள்வி கேட்க,


ஆழி ஆதவனை நிமிர்ந்து பார்த்து, "சொல்லி இருப்பா மிஸ்டர். ஆதவ், சொல்லிருந்திருப்பா… அவ அண்ணா அந்த நேரம் அண்டர் கவர் ஆபரேஷனுக்குப் போகாம அவ பக்கத்துல இருந்திருந்தா சொல்லி இருப்பா, அவ கட்டிக்கிட்ட புருஷன்… நீங்க பெரிய சிபிஐ னு அவளுக்கு நீங்க சொல்லி இருந்தா, அவளும் உண்மையா சொல்லி இருப்பா… ஆனா, நீங்க பெத்த அம்மாகிட்டயும், கட்டின பொண்டாட்டிகிட்டயுமே உங்களைப் பத்தி சொல்லாம விட்டதின் விளைவு தான் ஒருவகையில்

ஆஷா சாவுக்கு காரணமா போச்சு, நாங்களும் ஆஷாகிட்ட இருந்த அந்த மெமரி கார்டை பாத்திருந்தா, அதுல இருந்தவன் கதைய நாங்க அன்னைக்கே முடிச்சிருந்தா… ஆஷா இப்ப உயிரோட இருந்திருப்ப. அந்த வகையில் நாங்களும் ஆஷா சாவுக்கு ஒரு காரணம் தான். ரெண்டு உயிரா இருந்த ஆஷாக்கு, எங்க அவகிட்ட இருந்த எவிடன்ஸ் பத்தி வெளியே சொல்லப்போய், தன்னோட சேர்ந்து, அவ வயித்துல இருந்த குழந்தைக்கும், அவ குடும்பத்துக்கும் ஏதாவது ஆகிடுமோன்ற பயம் தான் அவங்களை எதையும் வெளிய சொல்ல விடல" என்று ஆழியின் குற்றச்சாட்டு ஆதவின் இதயத்தைச் சுட, முழுவதும் கலங்கிப் போனான்.


"இதுல ஆதவ் மேல எந்தத் தப்பும் இல்ல. இது எங்க புரோபஷனல் எதிக்ஸ். அன்டர்கவர்ல இருக்க நாங்க, எங்களைப் பத்தி சொந்த குடும்பத்துக்கு கூட சொல்லக்கூடாது. அதை தான் ஆதவ் செஞ்சான். இதுல அவனை தப்பு சொல்ல ஒன்னும் இல்லை" என்று விஷ்ணு ஆதவ்காகப் பேச,


"நடந்ததை விடு ஆழி, இப்ப சொல்லு, யார் பத்தின எவிடன்ஸ் ஆஷா கிட்ட இருந்தது, யார் ஆஷாவ கொன்றது?." என்று கேட்டான் முகில்.


"நீங்க நினைக்கற மாதிரி அக்யூஸ்ட் மூணு பேர் இல்ல முகில், மொத்தம் ஐஞ்சு பேர்" என்று மீரா சொல்ல ஆதவும் விஷ்ணுவும் திகைத்தனர்.


"என்ன சொல்ற நீ? இதெப்படி? யார் அது?" என்ற ஆதவ்வை நேருக்கு நேராகப் பார்த்த ஆழி,


"இதுல நீங்க சொன்ன மூணு பேரும் வெறும் காசுக்காக வேலை பாக்குறவங்க… நாலாவது ஆள்… ம்ஹூம்… பாசத்துக்கும், மானத்துக்கும் பயந்து இதுல சேர்ந்த ஆள். அந்தக் கடைசி ஆள். தி மாஸ்டர் மைண்ட்... நீங்க நெனச்சு கூடப் பாக்க முடியாத உயரத்தில இருக்க ஆள்‌. நீங்க என்ன... உங்க கவர்மெண்ட்டே அவன் இருக்க திசைப் பக்கம், சும்மா விரல் நீட்டக் கூட பயப்படும். அப்படி பட்ட ஒருத்தன் மொத்த ஜாதகத்தையும் கையில வச்சிட்டு இருந்த ஆஷாவை மட்டும் இல்ல, அவ குடும்பத்தையே தூக்க தான அவன் நினைப்பான்" என்ற ஆழியின் கண்கள் சிவக்க, அவள்‌ உடல் இறுகியது.


"யாரது? யாரு ஆழி அது? அவன் யார்னு சொல்லு?" என்ற விஷ்ணு ஆழி சொன்ன பேரைக் கேட்டு உறைந்து நின்றான்.


"நீ… நீ… என்ன சொல்ற? அவரா?" என்ற ஆண்கள் மூவரும் ஆழி சொன்னதை நம்ப முடியாமல் ஸ்தம்பித்து நின்றனர்.


"எஸ்..‌. நாங்க சொன்னது உண்மை தான். ஆஷா சாவுக்கு மட்டும் இல்ல, ஆஷா ஃப்ரண்ட் பிரியங்கா, அவங்க சிஸ்டர் காவ்யானு இன்னும் நிறைய பேரோட சாவுக்கு காரணம், நீங்க சொன்ன அந்த அவர்… இந்தியா'ஸ் யங் பிஸ்னஸ் மேன்… ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவரோட புள்ளை, இன்னைக்கு தேதியில அந்தக் கட்சியின் அடுத்த தலைவர்னு சொல்ற அளவுக்கு செல்வாக்கோடு இருக்க, ஒன்னா நம்பர் சைக்கோ… மிஸ்டர் யுவ்ராஜ் பிரதாப் தான் இதுக்கெல்லாம் காரணம்."


ஆதவ், முகில், விஷ்ணுவால் ஆழி சொன்னதை நம்பமுடியவில்லை.


"இதெப்படி, அவனுக்கு சொசைட்டில நல்ல பேர் இருக்கு, யார கேட்டாலும் அவன் ரொம்ப நல்லவன், ஒழுக்கமான ஆளுன்னு தான் சொல்வாங்க, அப்பா பெரிய அரசியல்வாதியா இருந்தாலும் ரொம்ப நேர்மையான மனுஷன், இவனும் அவங்க அப்பா பவரை எதுவும் யூஸ் பண்ணாம, தன் சொந்த முயற்சியில நம்பர் ஒன் பிஸ்னஸ் மேன்ற இடத்தில இருக்க ஆளு, அவன் போய்... ஏன்? எதுக்காக? என்ன காரணம்?" என்ற ஆதவ் மண்டையை பிய்த்துக் கொள்ள, ஆழி இமைகளை உயர்த்தி ஆதவ்வை பார்த்து, "ஹீ இஸ் எ சைக்கோ" என்றாள் ஒரே வார்த்தையில்.


"ஆமா ஆதவ்‌. அந்த யுவ்ராஜ் ஒரு சைக்கோ. இது வெளிய யாருக்கும், ஏன் அவனோட அப்பாக்கு கூட தெரியாது. அவனைப் பத்தி தெரிஞ்ச ஒரே ஆள், யுவ்ராஜோட பர்சனல் மாமா சைலேஷ் தான்" என்ற சைத்ரா கண்களில் அத்தனை கோவம்.


"யுவ்ராஜ்கு ஒரு பெக்கீயூலியர் மனநோய். அவனோட அம்மா சின்ன வயசில அவங்களை விட்டு வேற ஆள் கூடப் போய்ட்டாங்க, அதனால் சின்ன வயசுலயே அவனுக்கு லேடீஸ்னா ஒரு வெறுப்பு. அதை அவங்க அப்பா கவனிக்காம விட்டதோட விளைவு, பல பொண்ணுங்க சாவு. யுவ்ராஜ் லேடீஸ்சை கொடுமைப்படுத்தி, அவங்களை அடிச்சி சித்ரவதை பண்ணி அவங்க கதறி அழுகுறதை, இவன்கிட்ட அவங்க பயத்தில உயிருக்காகக் கெஞ்சுறதைப் பாத்து ரசிக்குற ஒரு சைக்கோ. அதுதான் அவனோட ப்ராப்ளம். இது சின்ன வயசுல இருந்து அவனோட பழகின சைலேஷ்க்கு மட்டும் தான் தெரியும். அத அவன் அவனுக்கு ஃபேவரா யூஸ் பண்ணி, அவன் பணம் பாக்க ஆரம்பிச்சிட்டான். யுவ்ராஜ்க்கு தன்னோட மனசோட வன்மத்தை தீர்க்க ஒரு பொண்ணு வேணும். ஆனா, இது மட்டும் அவன் அப்பாக்கு தெரிஞ்சா, மகன்னு கூடப் பாக்காம அவர் கண்டிப்பா இவனை போலீஸ்ல புடிச்சிக்குடுக்க, இல்ல கொல்ல செய்ய கூட தயங்க மாட்டாரு, சோ யுவ்ராஜ்க்கு சைலேஷை விட்டா வேற வழி இல்லை. அந்த நேரம் பணத்துக்காக எதை வேணும்னாலும் செய்ற, அந்த ***** விமல், அவனோட அப்பன் பிரண்ட்ஷிப் சைலேஷ்க்கு கிடைக்க… முடிவு… தே பிகம் பார்ட்னர் இன் க்ரைம். பொண்ணுங்களை கடத்தியோ, இல்ல அவங்களை மயக்கியோ அசிங்கமா ஃபோட்டோ எடுத்து அவங்களை ப்ளாக் மெயில் பண்ணி கெடுக்கிறது விமல் அண்ட் சைலேஷ். அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணுங்களை யுவராஜ் கிட்ட அனுப்பிடுவானுங்க. அவன் அந்தப் பொண்ணுங்களை" என்ற சைத்ரா குரல் கமற, ஆண்கள் மூவருக்கும் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தது‌.


இந்தியா முழுவதும் நிறைய இடங்களில் இருந்து, பல பெண்கள் காணாமல் போய், பின் பல நாட்கள் கழித்து சிதைந்த உடலாகப் பல இடங்களில் அவர்கள் உடல் மட்டும் கிடைக்க, அதைப் பற்றி விசாரிக்கத் தான் விஷ்ணு மற்றும் ஆதவ் இன்வெஸ்டிகேஷன் செய்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்கள் சாவதற்கு முன் பலவிதமாகச் சித்திரவதை செய்து மிகவும் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது, இவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால், சைத்ரா அதை சொல்லமுடியாமல் தவிக்கிறாள் என்று புரிந்துக் கொண்டனர்.


"இதெல்லாம் உங்களுக்கு எப்டி தெரிஞ்சிது. அப்ப அந்த மெமரி கார்டு உங்ககிட்ட தான் இருக்கா? என்ற விஷ்ணுவுக்கு இல்லை என்று தலையாட்டிய மீரா,


"அந்த மெமரி கார்டு எங்ககிட்ட இல்ல, அதை ஆஷா வேற ஒரு ஆள்கிட்ட குடுத்துட்டாங்க" என்று சொல்ல,


"யாரது?" என்று ஆதவ் கேட்க,


"உங்க கமிஷனர்" என்று வந்த பதிலில் மூவரும் மீண்டும் ஆடிப்போனார்.


ஆழி கமிஷனர் பேரைச் சொன்னதும் அதை நம்பமுடியாமல் குழம்பி நின்றனர் மூன்று ஆண்களும்.


"நீ என்ன சொல்ற ஆழி? ஆஷா கமிஷனர் கிட்டயா அந்த மெமரி கார்ட்டை குடுத்தா? அதை ஏன் அவர் இவ்ளோ நாளா எங்ககிட்ட சொல்லல? ஏன் அவர் எந்த ஆக்ஷனும் எடுக்கல?"


"நீங்க கேட்டதுக்கு நாங்க பதில் சொல்றது இருக்கட்டும், முதல்ல நாங்க கேக்குறதுக்கு நீங்க பதில் சொல்லுங்க. இந்தக் கேஸ்காக தான நீங்க மூணு பேரும் வேற வேற இடத்தில விசாரணை பண்ணிட்டு இருந்தீங்க? அதுல நீங்க என்ன கண்டுபுடிச்சிங்க? ஏன் உங்களுக்கு இதெல்லாம் தெரியவர்ல?" என்ற ஆழியை நிமிர்ந்து பார்த்த ஆதவ்,


"முதல்லயே இந்தக் கேஸ் எங்களுக்கு வர்ல, வேற ஆபிசர்ஸ் தான் இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருந்தாங்க, பட், ஒரு வருஷம் மேல ஆகியும் அவங்களால எதுவும் கண்டுபுடிக்க முடியலைனு, அதோட அந்தக் கேஸ் இன்வெஸ்டிகேஷன்ல இருந்த ஆபிசர்ஸ் பாதிபேர் வேலைய விட்டுட்டாங்க, சிலபேர் இறந்துப் போய்ட்டாங்க, அதுக்குப் பிறகு இந்தக் கேஸை எடுக்கவே போலீஸ்ல சிலபேர் தயங்கினாங்க… அப்ப தான் காணாம போன சில பொண்ணுங்க பேரன்ட்ஸ் இந்தக் கேஸை சிபிஐக்கு மாத்த சொல்லி கோர்ட்ல மனு போட, இந்தக் கேஸ் என் கைக்கு வந்தது. இந்தக் கேஸ்ல கமிஷனர் தான், நாங்க மூணு பேரும் ஃப்ரண்ட்ஸ்னு தெரிஞ்சு, எனக்கு துணையா போலீஸ்ல இருந்து விஷ்ணு, முகிலை என் கூட ஜாயின் பண்ணி விட்டாரு, நாங்களும் பல ஊர்ல இன்வெஸ்டிகேட் பண்ணோம். அதுல கடைசியா அந்த விமல், அவன் அப்பன் மாட்னாங்க. பட், ஸ்ட்ராங் எவிடன்ஸ் எதுவும் வசமா கிடைக்கல, அதை தேடித்தான் நாங்க அலைஞ்சிட்டு இருந்தோம். பட், எப்டின்னு தெரியல நாங்க எங்க எல்லாம் அவங்களை புடிக்க ப்ளான் போட்டோமோ, அந்த எல்லா இடத்துலையும் அவங்க சொல்லி வச்ச மாதிரி எஸ்கேப் ஆனாங்க"


"ஏற்கனவே சொல்லி வச்சதுனால தான் அவங்க எஸ் ஆனாங்க, சொன்னது உங்க கமிஷனர்… ம்ம்ம் மேல சொல்லுங்க" என்றாள் சைத்ரா.


"நாங்க கஷ்டப்பட்டு ஒரு ஸ்டெப் எடுத்தா, மூணு ஸ்டெப் பின்னாடி இழுத்திருக்கான் அந்தக் கமிஷனர்" என்று பல்லைக் கடித்த விஷ்ணு,


"நாங்க ஒரு வழியா விமல் அன்ட் அவன் அப்பனோட சேர்த்து இதுல சைலேஷ்னு ஒருத்தன் இருக்குறதை கண்டுபுடிச்சோம். அதுக்கு அப்புறம்..." என்றவன் குரல்‌ உடைந்தது.


"சைலேஷ் பத்தி தெரிஞ்சு நாங்க அவனை டார்கெட் பண்ண டைம்‌ பாத்துட்டு இருக்கும் போது தான்…" என்று தொடங்கி ஆதவ்வும் அதற்கு மேல் பேசமுடியாது கலங்கிப்போக, பெண்களுக்குப் புரிந்தது. அப்போது தான் ஆஷாவுக்கு விபத்து நடந்திருக்கிறது என்று.


"அப்ப தான் ஆழி ஆஷா அக்சிடென்ட் நடந்தது. அதைக் கேட்ட பிறகு எங்களுக்கு வேற எதுவும் ஓடல, உடனே ஹாஸ்பிடல் வந்துட்டோம். ஆதவ்வும் விஷ்ணுவும் ஷாக்ல பிரம்ம புடிச்ச மாதிரி ஆகிட்டாங்க, அது உனக்கும் தான் தெரியுமே ஆழி, நீயும் தான அப்போ ஆதவ் வீட்டுல இருந்த, கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆச்சு இவனுங்க நார்மலா ஆக, அந்தக் கேப்ல அந்த நாதாரி கமிஷனர், இந்தக் கேஸ்னால தான், ஆஷா இறந்திருக்காங்க, சைலேஷ் அண்ட் விமல் தான் ஆஷா ஆக்சிடென்ட் செஞ்சது, இதுக்கு மேல நீ இந்தக் கேஸ்ல இருந்தா, உன் அம்மாவையும் குழந்தையையும் கொன்னுடுவாங்கன்னு ஆதவ் கிட்ட சொல்லி, அந்த கேஸ்ச வேற ஆபீசர்க்கு மாத்திட்டதா சொல்லி இருக்கான். ஆதவும் ஆஷாவை தான் இழந்துட்டேன். நிலாவையும் இழக்க தயாரா இல்லைனு அந்தக் கேஸ்ல இருந்து விலகுறதா சொல்லிட்டான். ஆனா, ஆஃப் தி ரெக்கார்ட் நாங்க மூணு பேரும் இன்னும் இந்தக் கேஸ் பத்தி யாருக்கும் தெரியாம விசாரணை பண்ணிட்டு தான் இருக்கோம். அதுல சைலேஷ்க்கு மேல யாரோ இருக்காங்கனு எங்களுக்கு தெரிஞ்சிது. பட்… அது யார்னு எங்களுக்கு தெரில, சைலேஷ் எங்க இருக்கானோ தெரியல… சோ அன்ஆபீஷியலா விமலையும் அவங்க அப்பாவையும் கடத்தி விசாரிச்சோம். பட், அவங்களுக்கும் எதுவுமே தெரியல. அதுக்குள்ள கமிஷனர் அங்க வந்து, இந்தக் கேஸ்ல இருந்து உங்களை ரிலீவ் பண்ண பிறகு நீங்க இப்படி அன்ஆபீஷியலா இவங்களை கடத்தி இருக்க விஷயம் வெளிய தெரிஞ்சா எவ்ளோ பெரிய பிரச்சனை வரும்னு தெரியுமான்னு கம்பி கட்ற கதையெல்லாம் சொல்லிட்டு அவங்களை கூட்டிட்டு போய்ட்டாரு. அப்ப தான் நாங்க அவங்களை கடத்தின மேட்டர் கமிஷனருக்கு எப்படி தெரிஞ்சுதுனு எங்களுக்கு சந்தேகம் வந்தது, அதுல இருந்து எங்க இன்வெஸ்டிகேஷன் பத்தி அந்த ஆளுக்கு எதுவும் தெரியாம பாத்துக்கிட்டோம். அதோட நிலாக்கு ஒன்னும் ஆகிட கூடாதுன்ற பயம் வேற" என்று முகில் நடந்ததைச் சொல்ல,


"விமலுக்கும், அவன் அப்பனுக்கும் சைலேஷை மட்டும் தான் தெரியும். யுவ்ராஜ் பத்தி அவனுங்களுக்கு எதுவும் தெரியாது. அப்படி ஒருத்தனுக்காக தான் அவனுங்க வேலை பாக்குறானுங்கன்னு கூட அவனுங்களுக்கு தெரியாது" என்று நிமிர்ந்து ஆதவ்வை பார்த்த ஆழி, "சோ... நேர் வழியில போனா, பாப்பாக்கு எதாவது ஆகிடும்னு‌ பயந்து, என்ன செய்றதுனு யோசிக்கும் போது, அந்த நேரம் என்னைப் பத்தி தெரிஞ்சு, அவங்களை முடிக்கிற வேலைய என்கிட்ட குடுத்தீங்க… ஆம் ஐ கரெக்ட்" என்ற ஆழியை நிமிர்ந்து பார்த்தான் ஆதவ்.