ஆழியின் ஆதவன் 12




ஆழி 12


இரண்டு நாட்களுக்குப் பிறகு, இரவு தோட்டத்தில் ஆதவ், விஷ்ணுவை கண்டபடி திட்டி கொண்டிருந்தான் முகில்.


"டேய் பாவம்டா அந்தப் பொண்ணு ஆழி. நிலா மேல இருக்க அன்புக்காக, திருந்தி வாழ இங்க வந்த பொண்ணு இப்ப மறுபடியும் அந்த இருட்டுக்குள்ள போக ரெடியாகிட்ட. அவ மட்டும் இல்ல, கூட இன்னும் ரெண்டு பேர் வேற, உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் அவங்களை நீ இப்படி உன் சுயநலத்துக்காக யூஸ் பண்றது சரியில்லடா… இது நம்ம பழி, அதை நம்ம தான் தீர்த்துக்கணும். அதை விட்டுட்டு எதுக்கு சம்பந்தமே இல்லாம அந்த மூணு பேர் உயிரோட வெளையாடாதீங்க. உங்க கையாலாகாத தனத்துக்கு அவங்க தான் பலியா?" என்ற முகிலின் வார்த்தையில் கோபம் கொண்ட ஆதவ் சட்டென்று அவன் சட்டையைப் பிடித்து விட்டான்.


"டேய் யார்கிட்ட பேசுறேன்னு தெரிஞ்சுப் பேசு… நீ பாட்டுக்கு வாய்க்கு வந்ததை பேசிட்டே போற… என்னடா நெனச்சிட்டு இருக்க நீ?." என்ற கத்திய ஆதவ், பின் தன்னை சமன் செய்து கொண்டு முகிலின் சட்டையில் இருந்து கையை எடுத்தவன், இழுத்து மூச்சு விட்டு, "என்னைப் பத்தி தெரிஞ்ச நீயே இப்படி பேசுறீயே முகில்." என்றான் ஆதங்கமாக,


நான் நெனச்ச ஒரே செகண்ட் போதும்டா அவங்க மூணு பேரையும் முடிக்க, அது உனக்கும் தெரியும்" என்றவன் சற்றுப் பொறுத்து, "ஆனா, இப்ப அது என்னால முடியாது முகில். நம்ம டிபார்ட்மெண்ட்ல இருக்க சில கரப்ட்டட் ஆபீசர்ஸ்னால, நான் ஏற்கனவே எம் பொண்டாட்டிய இழந்துட்டேன். அந்தக் குற்றவுணர்ச்சியே தினம் தினம் என்னைக் கொஞ்ச கொஞ்சமா கொன்னுட்டு இருக்கு. என்னை பழிவாங்க, பாவம் அந்த அப்பாவிப் பெண்ணை கொன்னுட்டாங்க, இப்ப மறுபடியும் நான் அவங்களை எதாவது செய்ய போய் அந்தக் கோபத்தை எம் பொண்ணு மேல காட்டிடுவாங்களோன்னு எனக்கு பயமா இருக்குடா, நான் என்னடா செய்றது. எனக்குனு இருக்குறது எம் பொண்ணு ஒருத்தி தான்டா, அவளை இழக்கும் தைரியம் எனக்கு இல்ல முகில்" என்றவன் உடல் தளர்ந்து கீழே மண்டியிட்டு உட்கார்ந்து விட, அவனைப் பார்த்த முகிலுக்கும் கண்கள் கலங்கியது.


"ஆஷா சாவுக்கு நீங்க காரணம் இல்ல மிஸ்டர். ஆதவ்" என்று கேட்ட குரலில் ஆண்கள் மூவரும் திரும்பிப் பார்க்க, அங்கு ஆழி, சைத்ரா, மீரா மூவரும் நின்றிருந்தனர்.


ஆழி, ஆதவ் அருகில் வந்தவள், "உங்களுக்கு வச்ச குறியில் ஆஷா மாட்டிக்கல, அவங்க குறி வச்சதே ஆஷாவுக்கு தான்." என்ற ஆழியின் வார்த்தையில் ஆண்கள் மூவரும் அதிர்ந்து நின்றனர்.


"ஏய் நீ… நீ என்ன சொல்ற? ஆஷா என்ன செஞ்சா? அவளை ஏன்? அவ என்ன தப்பு செஞ்சா? உ… உனக்கு எப்டி தெரியும்?" என்ற ஆதவ் கோவமாக ஆழி தோளைப் பிடித்து உலுக்க,


"ம்ம்ம் தப்பு தான்… தப்பு தான் செஞ்சாங்க… அதுவும் பெரிய‌ தப்பு. இந்த உலகத்தில உண்மையா, நல்ல மனசோட, எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனக்குறது தப்பு மட்டும் இல்ல மிஸ்டர். ஆதவ், அது பெரிய பாவமும் கூட, அதைத் தான் ஆஷா செஞ்சாங்க"


"நீ என்ன சொல்ற? உனக்கு எப்படி ஆஷாவை தெரியும்?" என்று கேட்ட விஷ்ணு கண்கள் வெகுவாக கலங்கி இருந்தது.


"ம்ம்ம் தெரியும் மிஸ்டர். டெப்டி கமிஷனர். எங்களுக்கு எல்லாம் தெரியும். ஆஷா பத்தி உங்களுக்குத் தெரியாதது கூட எங்களுக்குத் தெரியும். ஆஷா சாவுக்குப் பழிவாங்க ஆதவ் தான் உங்க மூலமா ஆழிய யூஸ் பண்றாருன்னும் தெரியும், நீங்க ஆஷாவோட அண்ணன்னு தெரியும், ஆதவ் சிபிஐ னு தெரியும், மிஸ்டர். முகில் அண்டர் கவர் காப்னு தெரியும். இதெல்லாம் நீங்க ஆழிய முதல் முறை மீட் பண்ண அடுத்த ரெண்டு நாள்ல நாங்க தெரிஞ்சிக்கிட்ட விஷயம்" என்று இழுத்து மூச்சு விட்டு, "ஆனா..., நீங்க உங்க தங்கச்சிய தெரிஞ்சிக்கல, ஆதவ் அவர் வைஃப்  பத்தி தெரிஞ்சிக்கல, ஆஷா அவங்க ஹஸ்பண்ட் பத்தி தெரிஞ்சுக்கல… அதான் இங்க, இப்ப, நம்ம எல்லாரும் ஒன்னா இந்த ஸ்டேஜ்ல நிக்க காரணம்" என்ற மீரா அருகில் வந்த விஷ்ணு,


"அவளை உங்களுக்கு எப்படி தெரியும்? சொல்லு எப்படி தெரியும். அவ என்ன செஞ்சா?" என்று கத்த,


"ஆஷாவை எங்களுக்குத் தெரியாது. பட்... பிரியதர்ஷினிய எங்களுக்குத் தெரியும். பிகாஸ் ஷி வாஸ் அவர் லாஸ்ட் அசைன்மென்ட்" என்ற ஆழியை ஆண்கள் மூவரும் திகைத்துப் பார்க்க,


"எஸ் கடைசியா எங்களுக்கு வந்த அசைன்மென்ட்‌, உங்க ஆஷா… ஐ மீன் மிஸ். ஆஷா பிரியதர்ஷினி தான்" என்ற மீராவின் கழுத்தை நெறித்திருந்தான் விஷ்ணு.


ஆழி, சைத்ரா, மீரா மூவரும் அமர்ந்திருக்க, அவர்கள் எதிரில் கண்களில்  கண்ணீரும், மனதில் உண்மையை தெரிந்து கொள்ளும் தவிப்புடன் உட்கார்ந்து இருந்தனர் ஆதவ், விஷ்ணு, முகில் மூவரும்.


"நாங்க கொஞ்ச நாள் டெல்லில இருந்தோம். அப்ப தான் பிரியா, ஐ மீன், உங்க ஆஷாவோட அசைன்மென்ட் எங்களுக்கு வந்தது. அதுவும் கொல பண்ண இல்ல, கிட்நாப் செய்ய சொல்லி, நாங்க  பொதுவ கிட்நாப், லேடிஸ் வச்சு அசைன்மென்ட் வந்தா அதை எல்லாம் எடுக்க மாட்டோம். அன்ட் ஒரு ஆளைப் பற்றி தரோவா செக் பண்ணி அவன் வாழ தகுதி இல்லாத ஆள்னு எங்களுக்கு 100% கிளியர் ஆனா மட்டும் தான் நாங்க ஸ்கெட்ச் போடுவோம். அந்த வகைல முதல் தடவை ஆஷா ஃபோட்டோவை பார்த்தவுடனேயே எங்களுக்கு தெரிஞ்சு போச்சு, இவங்க எந்த தப்பான வேலைக்கும் போற ஆள் இல்லைனு, இருந்தாலும் எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு வாரம் ஆஷாவ ஃபாலோ பண்ணி அவங்க ரொம்ப நார்மலான பொண்ணுன்னு தெரிஞ்சிக்கிட்டோம். கூடவே அவங்க ஏதோ பெரிய‌ சிக்கல்ல மாட்டி இருக்காங்கன்னும் புரிஞ்சுது. அதோட அவங்களை வேற சிலபேர் டார்கெட் பண்ண ட்ரை பண்ணதையும் கவனிச்சோம். எங்களுக்கு ஆஷாவோட அசைன்மென்ட் வந்த மாதிரி இன்னும் சிலருக்கும் போயிருக்கும் போல, அவங்க ஆஷாவ கிட்நாப் பண்ணதை அவங்களை வாட்ச் பண்ணிட்டு இருந்தத சைத்து எங்க கிட்ட சொன்னா… ஏன்னு தெரியல அவங்க எப்படியோ போகட்டும்னு விட எங்களுக்கு மனசு வர்ல, அதுக்கு அவங்க குழந்தைத்தனமான  ஃபேஸ் கூட காரணமா இருக்கலாம். அவங்களை காப்பாத்தனும்னு நாங்க டிசைட் பண்ணோம். நல்ல வேலையா சைத்ரா ஆஷாவை ஃபாலோ பண்ண ஈசியா இருக்கும்னு அவங்க ஹேண்ட் பேக்ல அவங்களுக்கே தெரியாம ஒரு ட்ராக்கிங் சிப் வச்சிருந்தா, அதுல டிரேஸ் பண்ணி நாங்க ஆஷாவை சேவ் பண்ணி எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம். ஆஷாவ கடத்தி வச்சிருந்தவங்க அவங்களுக்கு ஹெவி டோஸ் மயக்க மருந்து குடுத்தாங்க போல, நாங்க அவங்களை வீட்டுக்கு தூக்கிட்டு வந்து முழுசா ஒரு நாள் கழிச்சு தான் அவங்க கண்ணு முழிச்சாங்க" என்ற ஆழியின் நினைவுகள் ஆஷாவுடன் இருந்த நாட்களுக்கு சென்றது.


மயக்கம் தெளிந்த ஆஷா, தான் எங்கிருக்கிறேன் என்று புரியாமல் வெகுவாக பயந்தவள், மெதுவாக அவள் படுத்திருந்த அறையைவிட்டு வெளியே வந்து, மெதுவாக கண்களால் அந்த வீட்டை இன்ச் இன்ச்சாக அளந்து பார்க்க, அந்த வீட்டின் ஹாலில் சைத்ரா, ஆழி இருவரும் லேப்டாப் முன்னால் உட்கார்ந்து எதையோ உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்ததையும், மீரா கிச்சனில் எதையோ கிண்டி கொண்டு இருந்ததையும் பார்த்தாள்.


அந்த நேரம் எதார்த்தமாக திரும்பிய ஆழி, ஆஷாவை பார்த்தாள்.


"ஏய்… கண்ணு முடிச்சிட்டீங்களா?" என்று கேட்டபடி ஆஷா அருகில் வர, ஆஷா பயத்தில் ஓரடி பின்னால் சென்றாள்.


"அய்யோ… எங்களை பார்த்து பயப்படாதீங்க, நாங்க உங்களை ஒன்னும் செய்ய மாட்டோம். நீங்க இங்க சேஃப்பா தான் இருக்கீங்க" என்ற ஆழியை பயந்த பார்வை பார்த்த ஆஷா, 


"நீங்க யாரு? என்னை எதுக்கு கடத்துனீங்க?" என்று கேட்க, ஆழி ஒரு நிமிடம் அவளை ஆழ்ந்து பார்க்க, சிரித்தபடியே ஆஷா அருகில் வந்தாள் சைத்ரா.


"ஹலோ பேபிம்மா, என்ன பேச்சு பேசுற நீ? எங்களை பாத்தா புள்ள புடிக்கும் கும்பல் மாதிரியா தெரியுது?. சரி எங்க  ஆழிய  பாக்க கொஞ்சம்  பூச்சாண்டி மாதிரி தெரியலாம், அதனால உனக்கு சந்தேகம் வந்திருக்கலாம். ஆனா, இவ்ளோ அழகா இன்னசென்ட் பேஸ்சோட இருக்க என்னை பார்த்த பிறகும் நீ இப்டி ஒரு வார்த்தை கேட்டுபுட்டியேமா... அய்யோ என்‌ பிஞ்சு நெஞ்சு இந்த நஞ்சு சொல்லை தாங்கலியே" என்று பழைய பட ஹீரோயின் போல பேசிய சைத்ரா காலில் நச்சென மிதித்தாள் ஆழி.


"ஏய் ச்சீ போதும் நிறுத்து… ஏற்கனவே அந்தப் பொண்ணு பயந்திருக்கு, நீ இப்படி பேசுறதைப் பாத்து அய்யோ பைத்தியம்னு நெனச்சு தெறிச்சு ஓடப்போகுது" என்றவள் சட்டென சைத்ரா காதைப் பிடித்துத் திருகி, "அதென்ன சொன்ன? என்னை பாத்தா பூச்சாண்டி மாதிரி இருக்கா உனக்கு? நீங்க அப்படியே மன்மதன் போட்ட கடைசி குட்டி பாரு… மூஞ்ச பாரு நல்லா ஹக்கி வக்கில(huggy wuggy) வர கிழிஞ்ச வாயன் மாதிரி வச்சுட்டு என்ன சொல்றியா நீ?" என்று ஆழியும் சைத்ராவும் சண்டை போடத்தொடங்க ஆஷா பயம் குறைந்து அவர்கள் செல்லச் சண்டையை பார்த்து  சிரித்தபடியே இருக்க, கையில் சூட சூட டீயும், பிரட் ஆம்லெட் எடுத்து வந்த மீரா, 


"இந்தாம்மா புதுப் பொண்ணு  அதுங்க இப்படித்தான் அடிக்கடி அடிச்சிக்கும். நீ வா நம்ம‌ சூடா டீ குடிக்கலாம்" என்ற மீராவை முறைத்த ஆழியும் சைத்துவும்,


"இந்தாடி நாங்க வராம நீ டீய வாய்ல வச்ச, அவ்ளோதான் சொல்லிட்டோம். ஒழுங்கா எங்களுக்கு டீய கப்ல ஊத்திவை, நாங்க டூ மினிட்ஸ்ல இந்த சண்டைய‌ பைசல் பண்ணிட்டு வரோம்" என்ற சைத்ரா, "ஹலோ பேபிம்மா நீ போய் பிரட் ஆம்லெட்  தின்னுட்டு இரு, நாங்க இதோ வரோம்" என்ற விட்டு அழியும் சைத்ராவும் மீண்டும் தங்கள் வாய்க்கால் தகராறை தொடங்கி நடத்த, ஆஷா மெல்ல மெல்ல பயம் துறந்து இயல்புக்கு வந்தாள்.


ஒரு நாள்  முழுவதும் பட்டினியாக இருந்த ஆஷாவுக்குள் சூடான டீயும், ஆம்லெட்டும் இறங்க, அப்போது தான் ஆஷாவுக்கு போன‌ உயிர் திரும்பி வந்தது.


"ம்ம்ம் இப்ப சொல்லு, யார் நீ? எதுக்காக உன்னை கிட்நாப் பண்ண இவ்ளோ பேர் ட்ரை பண்றாங்க? எங்களுக்கு தெரிந்த வரை நீ ரொம்ப நார்மலான பொண்ணு, பெரிய விஐபி, இல்ல பெரிய பேக்ரவுண்ட் இருக்க ஆளெல்லாம் இல்ல. அப்படி இருக்க இவ்ளோ பெரிய நெட்வொர்க் வச்சு, எதுக்கு உன்ன புடிக்க நினைக்குறாங்க?" என்று வரிசையாக கேள்வி கேட்ட ஆழியை நிமிர்ந்து பார்த்த ஆஷாவுக்கு கொஞ்ச நேரம் முன் சின்ன பிள்ளை போல் சண்டை போட்டது இவள் தானா என்ற சந்தேகம் வந்தது.


"உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? நீங்க எப்படி என்னை சரியான டைம்ல வந்து காப்பாத்துனீங்க? நீங்க மூணு பேரும் யாரு?" என்ற ஆஷாவைப் பார்த்து இழுத்து மூச்சு விட்ட ஆழி திரும்பி மீரா, சைத்ராவை பார்க்க, அவர்கள் இமைகளை மூடித் திறக்க, ஆழி சரியென்று தலையாட்டி, "இங்க பாரும்மா நாங்க உன்னை ஒன்னும் பண்ண மாட்டோம். நீ சேஃப்பா தான் இருக்க, முதல்ல நீ அதை நம்பணும்" என்றவள் சற்று பெருத்து, "உன்னை கிட்நாப் பண்ண சொல்லி எங்களுக்கும் அசைன்மென்ட் வந்தது." என்றதும்  சட்டென எழுந்து நின்ற ஆஷா, "அ… அப்ப… நீங்க கடத்தல்காரங்களா?" என்று பதற,


சைத்ரா ஆஷா அருகில் வந்து அவள் தோளில் கைபோட்டு, "அய்யோ நாங்க அவ்ளோ பெரிய ஆள்லாம் இல்ல பேபிம்மா, கடத்துற அளவுக்கு எல்லாம் நாங்க ஒர்த் இல்ல, நாங்க சும்மா எங்க சக்திக்குத் தகுந்த மாதிரி, ஜஸ்ட் மர்டர் மட்டும் தான் செய்வோம்" என்றது தான் தாமதம் ஆஷா குலை நடுங்கி விட்டாள்.