ஆழியின் ஆதவன் 8





 ஆழி 8

நாட்கள் அதன் போக்கில் நகர பதினைந்து நாட்கள் வேகமாக ஓடி இருந்தது.

"புரிஞ்சிக்க ஆதவ். குழந்தை ஆழிகிட்ட மட்டும் தான் அழுகாம இருக்கா, ஆழி நம்ம கூட வரட்டும். பாப்பாகாக ஒத்துக்கடா" என்று வெண்மதி மகனிடம் கெஞ்சி கொண்டிருக்க, ஆதவ் முடியவே முடியாது என்று கத்திக்கொண்டிருந்தான்.

லட்சுமியும் வெண்மதியும் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துக் கொண்டு நிற்க,

ஆதவ் முன் நேருக்கு நேர் வந்து நின்ற ஆழினி, "லிசன் மிஸ்டர். ஆதவன்? எப்படியும் நீங்க பாப்பாவை பாத்துக்க ஒரு கேர் டேக்கர் பாக்கத்தான் போறீங்க, அது ஏன் நானா இருக்கக் கூடாது?" என்றவளை முறைத்த ஆதவ்,

"இங்க பாருங்க மேடம். என் வைஃப் உங்களுக்குப் பண்ணது பெரிய உதவி தான். அதுக்காக நீங்க என் பொண்ணைப் பாத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. என்னால ஆள் வச்சு குழந்தையை பாத்துக்க முடியும்" என்று காட்டமாக பதில் சொல்ல,

"சாரி மிஸ்டர். ஆதவ், எனக்கும் யார்கிட்டயும் ஓசில உதவி வாங்கி பழக்கம் இல்ல, சோ இப்ப சொன்னீங்களே ஆள் வச்சுப் பாப்பேன்னு, அந்த ஆளுக்கு என்ன சேலரி குடுப்பீங்களோ அதை எனக்கு குடுங்க நான் பாப்பாவ பாத்துக்குறேன். அன்ட் அதுவும் ரொம்ப நாளெல்லாம் உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். குட்டிப் பாப்பா கொஞ்சம் பெருசானதும், நீங்க சொல்லவே வேணாம். நானே என் வழிய பாத்துட்டு போய்டுவேன். இதுல என்னோட டீடெய்ல்ஸ் இருக்கு" என்று ஒரு ஃபைல்லை நீட்டியவள், "நீங்க நல்லா என்னைப் பத்தி வெரிஃபை பண்ணி பாத்துக்கோங்க" என்றவள் லட்சுமி அருகில் வந்து, அவரிடம் இருந்த குழந்தையை தன் கைகளில் வாங்கிக்கொண்டு, "நான் இவ கூட இருக்கற வரை, உங்க பேத்திக்கிட்ட ஒரு துரும்பை கூட நெருங்கவிட மாட்டேன். இது இவ அம்மா ஆஷா மேல சத்தியம்." என்றவள் குழந்தையுடன் வெளியே சென்றாள்.


சென்றது இனி மீளாது என்ற வார்த்தை உண்மை என்பது போல், நடந்து முடிந்த எதையும் மாற்றமுடியாது என்று புரிந்தும், நடந்ததையே நினைத்து தவிக்கும் இந்த மனதை என்ன தான் செய்வது...


சைத்ரா ஆழி தோளில் கை வைத்து, "என்ன ஆழி அந்த ஆக்சிடென்ட் நடக்காம இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சுட்டு இருக்கியா?" என்று கேட்க, ஆழினி ஆம் என்று தலையாட்டினாள்.


"ம்ம்ம் நடந்தது முடிஞ்சது பத்தி யோசிச்சு என்ன செய்றது ஆழி? அந்த ஆக்சிடென்ட் நடக்காம இருந்திருந்தா, இப்ப இவ்ளோ பிரச்சனையே இல்ல… நம்ம லைஃப் வேற மாதிரி இருந்திருக்கும். ஆனா, இப்ப நிலா பாப்பாவுக்காக நம்ம இதை செய்ய வேண்டி இருக்கு. பேக் டு தி பெவிலியனுங்குற மாதிரி ஆகிடுச்சு நம்ம சிட்டிவேஷன். உனக்கு மட்டும் அந்த ஆக்சிடென்ட் நடக்காம போயிருந்தா, அந்த பாப்பா உன் லைஃப்ல வந்திருக்கமாட்டா, இப்ப இந்த பிரச்சனை எல்லாம் இல்லாம நம்ம நிம்மதியா இருந்திருப்போம் இல்ல ஆழி" என்ற சைத்ராவைப் பார்த்து இடவலமாக இல்லை என்று தலையாட்டினாள் ஆழினி.


"அந்த ஆக்சிடென்ட் ஏன் நடந்ததுன்னு நான் வருத்தப் படுறேன்னு நீ சொன்னது ரைட் தான் சைத்து. ஆனா, அதுக்கு நீ சொன்ன காரணம் தான் தப்பு. இந்த நிமிஷம் வரை நிலா என் வாழ்க்கையில வந்ததுக்கு ஒரு நொடி கூட நான் வருத்தப்பட்டதே இல்ல. டூ பி ஹானஸ்ட் அவ என்கிட்ட வந்தது நெனச்சு எனக்கு சொல்ல முடியாத ஒரு பெரிய சந்தோஷம் உள்ளுக்குள்ள இருக்கு. ஏன்னா என் வாழ்க்கையில கல்யாணம், குடும்பம், குழந்தைனு எதுவும் நடக்காது. எப்ப நான் அடுத்த உயிர்களை எடுக்க ஆரம்பிச்சேனோ, அப்பவே எனக்குள்ள ஒரு உயிரை சுமக்குற தகுதிய நான் இழந்துட்டேன். அப்படிப்பட்ட எனக்கு, நிலா பாப்பாவை காலம் எனக்கு கொடுத்த வரமா தான் நான் பாக்கறேன். உங்களுக்கு நல்லா தெரியும் நான் பெருசா எதுக்கும் ரியாக்ட் பண்ண மாட்டேன். கிட்டத்தட்ட கல்லு மாதிரி நான். இதுக்கு முன்ன எனக்குள்ள உயிர் மட்டும் தான் இருந்தது. உணர்ச்சியோ, உயிர்ப்போ இருந்ததே இல்ல. இன்னைக்கு வரை என்னோட பெண்மையை நான் ஃபீல் பண்ணது இல்லன்னே சொல்லலாம். அதுக்கு நம்ம வாழ்ந்த வாழ்க்கை முறையும், நம்ம கடந்து வந்த கசப்பும் கூட ஒரு காரணமா இருக்கலாம். ஆனா, அன்னைக்கு ஹாஸ்பிடல்ல, அந்தப் பாப்பா என்னை தொட்ட அந்த நிமிஷம், அந்த ஒரு செகண்ட் எனக்குள்ள சொல்லமுடியாத ஒரு மாற்றம். அதை வார்த்தையில என்னால சொல்ல முடியல சைத்து, பட் அந்த நிமிஷம் எனக்குள்ள நான் உணர்ந்தது நிச்சயம் என்னோட பெண்மையை இல்லடி, அது தாய்மை… இந்த ஜென்மத்தில எனக்கு கிடைக்கவே கிடைக்காதுன்னு நான் நெனச்சிட்டு இருந்த ஒன்னு, எதிர்பாராத நேரத்தில் எனக்கு நிலா மூலம் கிடைச்சுது. அதை நெனச்சு எனக்கு எப்பவுமே சந்தோஷம் தானே தவிர, துளி கூட வருத்தமோ கஷ்டமோ இல்ல. ஆனா, அப்படி ஒன்னு நடக்க, ஆஷா மாதிரி ஒரு நல்ல ஆத்மா இந்த உலகத்தை விட்டுப் போனதை நெனச்சு தான் எனக்கு கஷ்டமா இருக்கு. சில சமயம் நான் கூட யோசிப்பேன். அன்னைக்கு ஒரு உயிர் தான் போகணும்னு விதி இருந்தா, பாப்பாக்காக நான் செத்துப் போய், நிலா அம்மா ஆஷா உயிரோட இருந்திருக்கலாம்னு" என்று சொல்லி முடிக்கும் முன், "ஆழி" என்று கோவத்தில் கத்தினர் மீராவும் சைத்ராவும்‌.


"என்ன பேசுற ஆழி நீ? லூசு மாதிரி உளறிட்டு, வாய மூடு" என்ற மீராவை பார்த்து லேசாகச் சிரித்த ஆழி,


"எப்ப இருந்து மீரா நமக்கு உயிர் மேல இவ்ளோ ஆசையும், சென்டிமென்டும் வந்துச்சு?" என்று கேட்க, மீரா அவளை ஆழமாக பார்த்தாள்.


"நமக்கு உயிர் மேல ஆசை இதுவரை இருந்ததில்ல தான். ஆனா, சென்டிமென்ட் இருக்கு ஆழி. அதுக்குப் பெரிய சாட்சியே நீதான்" என்று மீரா அழுத்தமாகச் சொல்ல, ஆழி அவளை உற்றுப் பார்த்தாள்.


"சரி சரி...‌ போதும் பேச்சை நிறுத்துங்க. அந்த மூணு பேர் யார்னு பாத்துட்டு, அதுக்கு ஏத்த மாதிரி ப்ளான் பண்ணணும். சும்மா பேசிட்டு இருக்காம வேலைய பாப்போம்" என்று சூழ்நிலையை மாற்ற நினைத்த சைத்ரா, விஷ்ணு ஆழியிடம் தந்த அந்த பென்டிரைவ்வை தன் லேப்டாப்பில் பொருத்தினாள்‌.


இங்கு ஆதவ் முடியை அழுத்தி கோதி தன் கோவத்தை சமன் செய்யப் பார்க்க, விஷ்ணு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.


"ஏன்டா விஷ்ணு இவன் இப்டி இருக்கான்? இவனும் ஒரு போலீஸ்காரன் தான? அப்புறம் ஏன்டா நம்மள புரிஞ்சிக்காம பேசிட்டு இருக்கான் இந்த முகில்?." என்று ஆற்றாமையாக வந்தது ஆதவனின் குரல்.


"விடு ஆதவ். உனக்குத் தான் முகில் பத்தி தெரியும் இல்ல… அவனுக்கு சென்டிமென்ட்ஸ் கொஞ்சம் ஜாஸ்தி. கொஞ்ச நாளா இருந்ததாலும் முகில், அந்தப் பொண்ணு ஆழிய நிலாவோட அம்மா இடத்துல வச்சுப் பாத்துட்டான். எங்க அவ இல்லாம போய்ட்டா, நிலா மறுபடியும் அம்மாவை இழந்துடுவாளோன்னு பயந்து தான் இப்படி கத்திட்டு போறான்‌. கொஞ்சம் விட்டுப் புடிச்சா எல்லாம் சரியாகிடும்"


விஷ்ணு சொல்வது சரி என்று புரிந்த ஆதவ் நிமிர்ந்து விஷ்ணுவைப் பார்க்க, அவன் முகம் லேசாக குழம்பி இருந்தது.


"என்ன விஷ்ணு என்ன குழப்பம்?"


"அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆதவ். சும்மா எதையோ யோசிச்சுட்டு இருந்தேன். அவ்ளோதான்."


"உன்னால என்ட்ட பொய் சொல்ல முடியாது விஷ்ணு. சோ ப்ளீஸ்... என்னன்னு சொல்லு"


"இல்ல ஆதவ், அந்த ஆழியைப் பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன். என்னால அந்தப் பொண்ணை புரிஞ்சுக்கவே முடியல… அவளுக்கு நல்லா தெரியும் அவளுக்கு எதிரா பெருசா நம்மகிட்ட எந்த விதமான எவிடென்ஸூம் இல்ல, நம்மால அவளை ஒன்னும் பண்ண முடியாதுன்னு, அப்புறம் ஏன்டா அவ நம்ம ப்ளான்க்கு சம்மதிச்சா" என்றவன் ஆதவ்வை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து, "நிலா மேல அவளுக்கு இவ்ளோ அன்பு இருக்கும்னு சத்தியமா என்னால நம்பவே முடியல ஆதவ். எங்க நான் உன்கிட்ட அவளைப் பத்தி சொல்லி, குழந்தையை அவ கூட இருக்கவிடாம செஞ்சிடுவேனோன்ற பயம் தான் அவளை இதுக்கு ஒத்துக்க வச்சிருக்குனு நான் நெனைக்கிறேன். நீ என்ன நெனக்கிற ஆதவ்?"


"ம்ம்ம்... நீ சொல்றது ரைட் தான் விஷ்ணு. அவளுக்கு நிலா மேல இருக்குறது வெறும் அன்பு இல்ல, அதுக்கும் மேல… ஆஷா இல்லாத குறை பாப்பாக்கு தெரியக்கூடாதுனு ஒவ்வொன்னும் பாத்து பாத்து செய்வா, அதனால தான் அம்மாவும் முகிலும் அவளை எனக்கு கட்டி வைக்க ட்ரை பண்றாங்க. பட், அதுக்கு நானும் சம்மதிக்கல, அவளும் ஒத்துக்கவே இல்ல. பாப்பா கொஞ்சம் வளர்ந்ததும் இங்கிருந்து போய்டுவேன்னு முடிவா சொல்லிட்டா… ஆனா, அம்மாவும் முகிலும் தான் விடாம முயற்சி பண்ணிட்டு இருக்காங்க."


"அத்தைய சொல்ற ஓகே. ஆனா, முகில் எப்படிடா இதுக்கு ஒத்துக்கிட்டான். அதுவும் ஆழி யார்னு தெரிஞ்சப் பிறகும்"


"முதல்ல ஆழி பத்தி எங்க யாருக்குமே தெரியாது விஷ்ணு. அவ தந்த ஃபைல் வச்சு வெரிஃபை பண்ணும் போது கூட, அதுல அவ ஒரு ஃப்ரீலான்ஸ் இன்டீரியர் டிசைனர், இதுக்கு முன்ன யூரோப்ல ஏதோ ஒரு கன்ட்ரில இருந்தான்னு பக்காவா டீடெயில்ஸ் இருந்தது. அதை வச்சு தான் அவளை நிலாவுக்கு கேர்டேக்கரா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். ஆனாலும் எனக்கு அவ மேல முழுசா ‌ நம்பிக்கை வர்ல. அதுக்கு அவளைப் பத்தின டீடெயில்ஸ் ரொம்ப பர்ஃபெக்ட்டா இருந்ததும் ஒரு காரணம். அதுவே எனக்கு ஒரு உறுத்தலா இருந்துச்சு. பட், அவளைப் பத்தி அதுக்கு மேல எதுவும் தெரிஞ்சுக்கவே முடியல. ஒரு நாள் வீட்ல அம்மா இல்லாத டைம், அவளுக்கு ரொம்ப நெஞ்சு வலிக்குதுன்னு நான் தான் அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன். அப்ப அவ நல்லா தூங்கனும்னு டாக்டர் ஆன்ட்டி கொஞ்சம் ஹெவி டோஸ் மருந்து குடுத்திருந்தாங்க. அன்னைக்கு தான் மருந்து மயக்கத்துல இருந்தவ கண்டபடி உளற ஆரம்பிச்சா. மீரா, சைத்துனு… அப்புறம் ஆஷா நீங்க கவலைப்படாதீங்க, நான் கொலைகாரி தான், அதுக்காக என்னை தப்பா நினைக்காதீங்க,

உங்க பாப்பாவை நான் நல்லா பாத்துக்கறேன். நான் அவ கூட இருக்க வரை என் உயிரைக் ‌ குடுத்து உங்க பாப்பாவை பாத்துப்பேன்னு என்னென்னவோ பேசிட்டே இருந்தா… எனக்கு டப்புன்னு தூக்கிவாரிப் போட்ருச்சு. என்ன பண்றதுன்னு புரியாம யோசிக்கும் போதுதான், அவ ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடல்ல இருக்கும் போது அவளோட திங்ஸ்ல ஃபோன், லேப்டாப் இருந்தது நினைவுக்கு வந்தது. உடனே வீட்டுக்கு போய் அவ ரூம்ல இருந்த அவ ஃபோனை எடுத்துப் பாத்தேன். சொன்ன நீ நம்பமாட்ட‌ விஷ்ணு, நம்ம போலீஸ் சைபர் கிரைம் டிபார்ட்மெண்ட்ல கூட அவ்ளோ சேஃப்டி இருக்காது போல, அவ ஃபோன் அவ்ளோ செக்யூர்டா இருந்தது. அதுதான் எனக்கு அவ மேல இருந்த டவுட்டை அதிகம் ஆக்குச்சு. ஒரு சாதாரண இன்டீரியர் டிசைனர்க்கு ஏன் இவ்ளோ செக்யூரிட்டினு டவுட் வந்துச்சு. ரெண்டு மூணு தடவை அவ ஃபோனை ஓபன் பண்ண ட்ரை பண்ணேன்‌. பட், தப்பா எதுவும் ட்ரை பண்ணா அதுல இருக்க மொத்த டீடெயில்ஸூம் தானா டெலீட் ஆகிரும்னு அலர்ட் மெசேஜ் வந்தது. அந்த மாதிரி செட்டிங்ஸ் செஞ்சு வச்சி இருந்தது. சரியான பாஸ்வேர்டு இருந்தா மட்டும் தான் அதுல இருக்க விஷயங்களை தெரிஞ்சிக்க முடியும். அப்படி ஒரு ஸ்ட்ராங் ஃபயர் வால் செட்டிங் பண்ணி வச்சிருந்தாடா அந்த ஃபோன்ல"


"ம்ம்ம் அவ செம்ம ஹாட் மட்டும் இல்ல, ரொம்ப ஷார்ப்பும் கூடன்னு சொல்ற, அப்படி தான?" என்று ஆழியின் அழகை வர்ணித்த விஷ்ணு, ஆதவின் அக்னிப் பார்வையை பார்த்து வாயை கப்பென மூடிக்கொண்டான்‌.


"சரி ஆதவ் அப்புறம் எப்படி தான் நீ அவளைப் பத்தி இவ்ளோ டீடெயில்ஸ் தெரிஞ்சுக்கிட்ட?" என்று கேட்டான் விஷ்ணு.


"எல்லாம் அவ ஃபோன் வச்சு தான். பாஸ்வேர்ட் போட்டு அதிலிருந்த சில விஷயங்களைப் பாத்ததும் புரிஞ்சுப் போச்சு மேடம் என்ன வேலை பாத்துட்டு இருந்தான்னு" என்றவனைப் புரியாத பார்வை பார்த்த விஷ்ணு,


"ஏய் என்னடா சொல்ற நீ? அவ பாஸ்வேர்டு உனக்கு எப்படி கிடைச்சுது" என்று விஷ்ணு கேட்க, அவனுக்கு முகத்தை காட்டாமல் திரும்பி கொண்ட ஆதவ், "எப்படியோ கெடச்சது… அது எதுக்கு இப்ப… அதை விடு" என்று ஆதவ் கடுகடுக்க விஷ்ணுவுக்கு மூளை குழம்பியது.


"நான் இப்ப என்ன கேட்டேன்னு நீ இவ்ளோ டென்ஷன் ஆகுற? பாஸ்வேர்டு" என்று ஆரம்பிக்கும் போதே ஆதவ் மீண்டும் விஷ்ணுவை முறைக்க,


'ம்ம்ம் பாஸ்வேர்டுல ஏதோ கோல்மால் நடந்திருக்கும் போல, அதான் இவன் இப்படி பாப்கார்ன் மாதிரி பொறிஞ்சிட்டு இருக்கான்.' என்று புரிந்து கொண்ட விஷ்ணு, 


"சரி ஆதவ் நீ ஏன் அப்பவே அந்த ஃபோன்ல இருந்த டீடெயில்ஸை ஒரு காப்பி எடுக்காம விட்ட?"


"நீ சொன்னீயே அவ ஷார்ப்னு அது 100% உண்மை. அந்த ஃபோன்ல இருந்து எதையும் வேற எந்த டிவைஸுக்கும் ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியாதபடி செட்டிங்ஸ் செஞ்சு வச்சிருந்தாடா அவ, அதை மீறி அப்டி ட்ரான்ஸ்ஃபர் பண்ண ட்ரை பண்ணா மொத்தமும் டெலீட் ஆகிடும்" என்று ஆதவ் இயலாமையோடு சொல்ல, விஷ்ணுவுக்கு ஆச்சரியத்தில் கண்கள் வெளியே வந்து விட்டது.


"ம்ம்ம் இவளுங்க மட்டும் போலீஸ் இல்ல ஆர்மி இன்டெலிஜென்ஸ்ல இருந்திருந்தா இந்நேரம் எங்கயோ போயிருக்குங்க, அதுங்க கெரகம் இப்படி கில்லரா மாறி அதே வேலைய அன் அபீஷியல்லா செஞ்சிட்டு இருக்கு."


"உண்மை தான் விஷ்ணு… ஆனா, அதுக்காக எல்லாம் அவங்க செய்றதை நியாயப்படுத்த முடியாது. என்ன இருந்தாலும் ஆழி பண்றது தப்பு தான்" என்றவனது மனம், 'அப்ப நீ இப்ப செஞ்சிட்டு இருக்கறது மட்டும் சரியா?' என்று கேள்வி கேட்க, அதற்கு ஆதவிடம் பதில் இல்லை.