ஆழியின் ஆதவன் 9



 ஆழி 9

"சைத்ரா லேப்டாப்பை ப்ரொஜெக்டர்ல கனெக்ட் பண்ணி அந்தப் பென்டிரைவ்வ பிளே பண்ணு" என்றாள் ஆழினி.

"ம்ம்ம் ஓகே ஆழி" என்ற சைத்ரா அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த வேலையை முடித்திருந்தாள்.

முதல் ஃபோட்டோவைப் பார்த்தனர் பெண்கள் மூவரும்.

"இந்த ஆள் யாருன்னு அந்த டெப்டி டீடெயில்ஸ் குடுத்திருக்கு ஆழி, அதை பாக்கறியா" என்று கேட்ட சைத்ராவை திரும்பிப் பார்த்த ஆழி,

"அதை அப்படியே டெலீட் பண்ணிடு, உனக்கு ஐஞ்சு நிமிஷம் தான் டைம், நான் டீ போட்டுட்டு வர்றதுக்குள்ள, இந்த ஆள் யாருன்னு நீ கண்டு புடிச்சு… எங்களுக்கு சொல்லணும்… ஓகேவா?" என்று புருவத்தை உயர்த்திக் அழுத்தமாக கேட்க,

"டீ யோட எனக்கு சூடா பட்டர் பாப்கார்ன் கிடைக்கும்னா, நீ சொன்னத நான் செய்றேன். என்ன டீல் ஓகேவா?" என்று கட்டை விரலை உயர்த்திய சைத்ரா தலையில் செல்லமாக கொட்டிய மீரா,

"எரும மாடு மாதிரி வளர்ந்திருந்தாலும், இவளுக்கு குழந்தை தனம் இன்னமும் போகல ஆழி, பாரு சின்னப் புள்ள மாதிரி பாப்கார்ன்க்கு அலையுறத" என்று சிரித்தபடியே ஆழியும் மீராவும் சமையலறையில் நுழைய, சைத்ரா தன் வேலையை தொடங்கினாள்.


ஆழியும் மீராவும் சமையலறையில் இருக்க, சைத்ரா கத்தி அலறும் சத்தம் கேட்டு இருவரும் ஹாலுக்கு ஓடி வர அங்கு சைத்ரா முகத்தை மூடியபடி தரையில் அமர்ந்திருக்க, அவள் உடல் முழுவதும் வேர்த்திருந்தது.


ஆழியும் மீராவும் அவள் அருகில் சென்று அவள் தோளைத் தொட, பாய்ந்து வந்து இருவரையும் கட்டிக்கொண்டாள் சைத்ரா.


அவள் உடல் முழுவதும் நடுநடுங்கி இருக்க, அதை உணர்ந்த ஆழி, அவளை தன் நெஞ்சோடு இறுக்கி கட்டிப்பிடித்தபடி, அவள் தலையை மெதுவாக வருடிவிட, மீரா வேகமாகச் சென்று தண்ணீர் எடுத்து வந்து சைத்துவுக்குப் புகட்டி விட்டு, கண்ணீர் கோடுகளாக இருந்த அவள் கன்னத்தை தன் துப்பட்டா கொண்டு துடைத்து விட்டாள்.


"என்னடா? என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி பயந்து போய் இருக்க, என்னம்மா ஆச்சு?" என்று ஆழி கேட்க, சைத்து தன் கையை உயர்த்தி விரலை நீட்டிக் காட்ட, அவள் விரல் தொட்ட திசையில் இருந்த வெள்ளைத் திரையில் தெரிந்தவன் முகத்தைப் பார்த்து ஆழி, மீரா இருவரும் ஒரே நேரத்தில், "சைலேஷ்…!!" என்றவர்கள் திகைத்துப் போயினர். 


அமைதியான அவர்கள் வாழ்க்கையில் புயல் போல் நுழைந்து மூவரின் வாழ்வையும் இருட்டில் திருப்பி விட்டவனின் முகத்தை பல வருடங்கள் கழித்து பார்த்தபோது பெண்கள் மூவரும் உடைந்து தான் போயினர் தங்க பாதை மாறிப் போனதை நினைத்து.


மீரா மடியில் தலையை புதைத்துக் கொண்டு சைத்ரா விசும்பிக் கொண்டு இருக்க, அவள் கால்களை மெதுவாக பிடித்துக் கொண்டிருந்தாள் ஆழினி.


ஒரு வழியாக சைத்ராவை சமாதானம் செய்து உட்கார வைத்து அவள் எதிரே அமர்ந்தனர் ஆழியும் மீராவும்.


"இப்ப என்ன செய்யணும்னு நீயே சொல்லு சைத்து. நம்ம இங்கிருந்து போகணும்னு நீ சொன்னாலும் எனக்கு ஓகே தான், உடனே எங்கயாவது போய்டலாம். எனக்கு நிலா பாப்பா முக்கியம் தான். ஆனா, பாப்பாவ விட எனக்கு நீ முக்கியம் சைத்து" என்ற ஆழியைப் பார்த்து இடவலமாக தலையாட்டிய சைத்ரா,


"அவன் சாகணும், அதுவும் என் கண் முன்ன அவன் துடிச்சு துடிச்சு சாகுறதை நான் பாக்கணும் ஆழி, எனக்காக நீ இதை செய்வியா?" என்று கேட்க, ஆழி ஒரு கர்வச் சிரிப்போடு சைத்ராவைப் பார்த்து, "தட்ஸ் மை சைத்து" என்று அவள் கன்னத்தில் தட்டி,‌ "அஸ் யுவர் விஷ், நீ கேட்டு எதை நாங்க செய்யாம இருந்திருக்கோம் சைத்து" என்ற மீரா, ஆழி இருவரையும் கட்டிக்கொண்டாள் சைத்ரா.


"முதல்ல அந்த விஷ்ணு குடுத்த ஃபோட்டோசை நான் சரியா கவனிக்காம விட்டுட்டேன். அதான் சைலேஷ் இருந்தது எனக்கு தெரியல" என்றாள் ஆழினி‌.


"இல்ல ஆழி, இவன் நம்ம முன்ன பாத்த மாதிரி இல்ல, நிறையா சேஞ்சஸ் தெரியுது இவன்ட்ட, மே பீ மாறுவேஷத்துல சுத்திட்டு இருக்கான் போல"


"ம்ம்ம் இருக்கும் மீரா, இனிமே நம்ம எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். ஏன்னா சைலேஷ்க்கு நம்மை தெரிய வாய்ப்பிருக்கு. என்னதான் அவன் நம்மள பாத்து பல வருஷமாகிருந்தாலும், அவன் நம்மை மீட் பண்ண சிட்டுவேஷன் நார்மல் சிட்டுவேஷன் இல்ல, சோ நம்ம எப்படி எதையும் மறக்கலயோ, அதே மாதிரி அவனும் நம்ம செஞ்சதை மறந்திருக்க மாட்டான். சோ வி ஹாவ் டு பீ கேர்ஃபுல்." என்றாள் ஆழினி.


"ஓகே ஓகே கைய்ஸ். நம்ம கேர்ஃபுல்லாவே இருப்போம். இனிமே இது அந்த வெண்ண வெட்டி விஷ்ணுவோட ப்ராஜெக்ட் இல்ல, நம்ம ப்ராஜெக்ட், சோ தீயா வேலை செய்யணும் குமாரிகளா... சொல்லுங்க சொல்லுங்க முதல்ல யாருக்குப் பிண்டம் வைக்கலாம்" என்ற சைத்ராவின் துள்ளல் பேச்சில் அவள் தேறி விட்டாள் என்று தெரிந்து இருவர் மனதிற்கும் நிம்மதியாக இருந்தது.


"சைலேஷ் ப்ளான் இப்ப வேணாம். ஏன்னா அவன் நம்ம சைத்துவோட ஸ்பெஷல் டார்கெட், சோ கொஞ்சம் டைமெடுத்து வச்சு செம்மயா செய்யலாம். அந்த முதல் ஃபோட்டோல இருக்குற‌ அந்தப் பையன யாரு சைத்து. பாக்க பால்வாடி பையன் மாதிரி இருக்கான். இவன எதுக்குக் கொல்ல சொன்னாங்க?!" என்று கேட்ட ஆழியைப் பார்த்து அசட்டையாகச் சிரித்த சைத்து,


"இந்தப் பால்வாடி பையன் பண்ண வேலை தெரிஞ்சா நீ இப்படிச் சொல்லமாட்ட ஆழி."


"அப்படி என்ன பண்ணிட்டான்?" என்று கேட்டாள்‌ மீரா.


"இவனுக்கு என்ன வயசு இருக்கும் மீரா?"


"ம்ம்ம்‌... என்ன ஒரு இருபது, இருவத்தி ஒன்னு இருக்கும் போல"


"எக்ஸாக்ட்லி மீரா, இவனுக்கு இருவது வயசு தான். ஆனா, இதுவரை இவன்மேல கிட்டத்தட்ட ஏழு ரேப் கேஸ் இருக்குன்னு சொன்னா நீ நம்புவியா? என்ற சைத்துவின் பதிலில் ஆழி, மீரா இருவரும் திகைத்து நின்றனர்.


"என்னடி சொல்ற? உண்மையாவா?"


"ஆமா மீரா. அதுவும் அவனோட பதினேழு வயசுல ஒரு பொண்ணை ரேப் பண்ண ட்ரை பண்ணி இருக்கான். அந்தப் பொண்ணு இவன்ட்ட இருந்து தப்பிக்க மாடில இருந்து குதிச்சு செத்துப்போச்சு, அந்தக் கேஸ்ல இவன் மைனர்ன்ற‌ ஒரு பாய்ண்ட்ட வச்சு இவனை ஈசியா வெளிய கொண்டு வந்துட்டாங்க" என்று சைத்ரா பல்லை கடித்தாள்.


"வாட்?!... என்னடி சொல்ற, ஒரு மைனர் பையன் ரேப் பண்ண ட்ரை பண்ணது தப்பில்ல. ஆனா, அவனுக்கு தண்டனை குடுத்தா அது தப்பா? என்ன எழவுடி இது?" என்று மீரா கொதிக்க,


"பையனோட அப்பாக்கு எவ்ளோ சொத்து தேறும் சைத்து?" என்ற ஆழியைப் பார்த்து வறண்டுச் சிரித்த சைத்து, "சென்னை பணக்காரங்க லிஸ்ட்ல இருக்கார"


"ம்ம்ம்… அப்புறம் பையன் மைனரா இருந்த என்ன? மேஜரா இருந்த என்ன?… வெளிய விட்ற வேண்டியது தான" என்ற ஆழியின் கண்களில் அத்தனை கோவம்.


"பின்ன அவன் வெளிய இருந்தா தான நம்ம அவனை முடிக்க முடியும். இல்லாட்டி இவனை முடிக்க நம்மாள ஜெயிலுக்கு போக முடியும். நமக்கு அதிகம் கஷ்டம் இருக்கக்கூடாதுனு அவன் அப்பனே அவன் வெளியே அலைய விட்டிருக்கான். நமக்கு வேலை மிச்சம்" என்ற சைத்ரா கன்னத்தில் செல்லமாக கிள்ளினாள் மீரா.


"அதுவும் கரெக்ட் தான். அதுசரி சார் இப்ப என்ன பண்ணிட்டு இருக்காரு இந்த மிஸ்டர் மைனர் டாஷ்…?" என கேட்ட ஆழிக்கு,


"இவனெல்லாம் என்ன திருந்தி காவியமா எழுதப்போறான் ஆழி?. எங்கயாது எவளாவது கிடைப்பாளான்னு அலைஞ்சிட்டு இருப்பான்… என்ன சைத்து சரிதான?."


"சென் பர்சன்ட் ரைட் மீரா. இந்த நாய்‌ பார்ட்டினு பெரிய பெரிய வீட்டுப் பொண்ணுங்களை இவன் வீட்டுக்கு வரவச்சு, அவங்க ட்ரிங்க்ஸ்ல போதை மாத்திரை கலந்து குடுத்து, அவங்க மயக்கத்தில் இருக்கும் போது அவங்களை அசிங்கமா ஃபோட்டோ எடுத்து வச்சிட்டு, அவங்களை எல்லாம் பிளாக்மெயில் பண்ணி அவனுக்கு தேவையான எல்லாத்தையும் சாதிச்சிட்டு இருக்கான். இதுல நோட் பண்ண வேண்டிய மெயின் மேட்டர், இவன் செய்ற வேலைக்கு இதோட அப்பனும் கூட்டு."


"த்தூ கருமம் புடிச்ச அப்பனா இருப்பான் போல. பையன் மார்கழி மாச நாயின்னா, அப்பன் சொறிபுடிச்ச வெறி நாய் போல, போலீஸ் இதுங்களை ஒன்னும் செய்யலயா சைத்து?"


"அந்த ஃபோட்டோ பொண்ணுங்கள்ல கமிஷனர் பொண்ணும் ஒருத்தி மீரா"


"கிழிஞ்சுது… இப்ப புரியுது, அந்த டெப்டி ஏன் இந்த வேலைய நம்மகிட்ட தந்தான்னு."


"சரி சைத்து அதுல கமிஷனர் பொண்ணு இருக்குன்னு உனக்கு எப்படி தெரிஞ்சுது‌?" என்று கேட்டாள்‌ ஆழி.


"அந்தப் பக்கியோட ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் பண்ணி, அவன் ஐபி அட்ரஸ் ட்ராக் பண்ணி, அவன் சிஸ்டம் குள்ள போயி பாத்தேன். சனியம் புடிச்ச கழுசடை ஆழி அவன். அதுல இருந்த சில ஃபோட்டோஸ் பாத்து எனக்குக் குடலே வெளிய வந்துடுற‌ அளவு வாந்தி வந்திடுச்சு தெரியுமா..."


"அப்புறம் என்ன பண்ண சைத்து?"


"இதென்னடி கேள்வி?! வாந்தி எடுத்தா, என்ன பண்ணுவாங்க, வாயை கழுவுவாங்க தான, அதுதான உலக வழக்கம். அதைத் தான் நானும் செஞ்சேன்" என்ற சைத்துவை முறைத்தாள் ஆழி.


"சரி சரி மொறைக்காத, அந்தப் பையன் சிஸ்டம்க்கு ஒரு சின்ன வைரஸை அனுப்பி விட்டேன். அவன் எங்க லாகின் பண்ணாலும் அந்த டிவைஸ் புளிப்போட்டு வெளக்குன பித்தளை பாத்திரம் மாதிரி பளபளன்னு கிளீன் ஆகிடும். ஐ மீன் அவன்ட்ட‌ ஒரு பொண்ணோட ஃபோட்டோவும் இனிமே இருக்காது. எவ்ளோ பெரிய‌ தில்லாலங்கடி கம்ப்யூட்டர் இன்ஜினியர் வந்தாலும், போனதை ரெக்கவர் பண்ண முடியாது. வடக்குப்பட்டி ராமசாமிக்குக் குடுத்த பணம் உஊஊதான்..." என்று சிரித்தாள் சைத்ரா.


"ம்ம்ம் குட் சைத்து, இனி இவனுக்கு ஸ்கெட்ச் போட்டுடலாம்."


"அந்தப் பொறுக்கி இன்னும் மூணு நாள் கழிச்சு கொடைக்கானல் போகுது ஆழி. அங்க வச்சு ஸ்கெட்ச் போட்டா சரியா இருக்கும். ஏன்னா சென்னையில அவனுக்கு அவங்கப்பன் டைட் செக்யூரிட்டி போட்டிருக்கான். அதுல இருந்து எஸ்ஸாகத் தான் அந்த நாய் கொடைக்கானலுக்குப் பொறுக்க போகுது. சோ நம்ம வேலைக்கு ஈசியா இருக்கும்."


"சைத்து சொல்றதும் நல்ல ஐடியா தான் ஆழி. நீயென்ன சொல்ற?"


"இது நல்லா ஐடியா தான்.‌ நமக்கும் வேலை ஈசியா முடியும். பட் இதுக்காக நம்ம எப்படியும் நாலு இல்ல ஐஞ்சு நாளைக்கு கொடைக்கானல் போகவேண்டியது இருக்குமே... நான் அந்த ஆதவ்கிட்ட என்னன்னு சொல்லிட்டு வர்றது. அதோட பாப்பா இத்தனை நாள் என்னை விட்டு இருக்கமாட்டாளே…" என்ற ஆழியைப் பார்த்த மீரா,


"நீ சொல்றது புரியுது ஆழி. பட் இது நமக்குக் கிடைச்ச பெஸ்ட் சான்ஸ், டோண்ட் வேஸ்ட் இட்" என்ற மீராவைப் பார்த்து ஆமோதித்து தலையாட்டிய ஆழி,


"ம்ம்ம்…" என்று தன் கையில் இருந்த வாட்சைப் பார்த்து, "சரிடி டைம் ஆகுது. நான் கெளம்புறேன். ப்ளான் என்னன்னு ஸ்கெட்ச் போட்டுட்டு ஃபோன் பண்றேன். பை, டேக் கேர்" என்ற ஆழி அங்கிருந்து கிளம்ப, போகும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர் மீராவும் சைத்ராவும்.


"ஆழிகிட்ட இப்பெல்லாம் நெறைய சேஞ்ஜஸ் தெரியுது மீரா. அந்தப் பாப்பாவோட சேர்த்து அந்த வீட்டு ஆளுங்க கூடவும் இவ அட்டாச் ஆகிட்ட மாதிரி தோணுது." என்ற சைத்ராவைப் பார்த்த மீரா,


"அவ நேச்சரே அப்படித்தான சைத்து, ஏன் நம்ம விஷயத்தையே எடுத்துக்க, இதுவரை எந்த ஒரு பிராஜக்ட்லயாது நேரடிய அவ நம்மள இறக்கி இருக்காளா சொல்லு? இந்த ரத்தம், சாவு, கொலை எல்லாம் என் ஒருத்தியோட போகட்டும். உங்க ரெண்டு பேருக்கும் இது வேணாம்னு, எல்லாத்துலையும் நம்மள ஒதுக்கி தான வச்சிருக்கா. டெக்னிக்கல் சப்பேர்ட், டீடெயில்ஸ் கலெக்ட் பண்றது இந்த மாதிரி தான் நமக்கு வேல கொடுப்பா, நம்ம கைல எந்த ரத்தக் கரையும் படியக் கூடாதுன்றதுல அவ ரொம்ப அடமெண்ட்டா இருந்தா, இப்பவும் அப்படித்தான் இருக்கா, அவ சொல்லலாம் நிலாவை பாத்த பிறகு தான் அவ தாய்மைய உணர்ந்தான்னு, பட் உண்மை என்னன்னா, அவ நமக்கு செய்ற எல்லாமே ஒரு அம்மா அவ குழந்தைக்குச் செய்றது மாதிரி தான். அது அவளுக்குத் தான் புரியல" என்ற மீராவின் வார்த்தை உண்மை என்று தலையாட்டினாள் சைத்ரா.