ஆழியின் ஆதவன் 10

 


ஆழி 10


ஆழி வீட்டுக்குள் நுழையவும் ஆதவ் அவன் அறையில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

"என்ன ஆழி மேடம், வரவர நீங்க அடிக்கடி வெளிய போறீங்க, 

ரொம்ப நேரம் கழிச்சு தான் வீட்டுக்கு திரும்பி வரீங்க… என்ன மேட்டர்?" என்று கேட்க, அங்கு வந்தார் வெண்மதி.

"டேய் ஏன்டா எப்பப்பாரு அவளையே நோண்டிட்டு இருக்க? உனக்கு வேற வேலையே இல்லையா? நீதான எப்பவும் சொல்லுவ அவ நிலாக்கு வெறும் கேர் டேக்கர் தான், அதுக்கு நான் சம்பளம் தரேன்னு... அப்படி இருக்க, அவளை கேள்வி கேக்குற உரிமைய உனக்கு யார் தந்தது?." என்ற தன் தாயை செல்லமாக முறைத்த ஆதவ்,

"என்ன பேசுறீங்கம்மா நீங்க, அவ இந்த வீட்ல தான தங்கி இருக்கா, அந்த உரிமையில் தான் கேட்டேன்." என்று சமாளிக்க,

"அதெப்படி டா? அவ இங்க இருக்கனால உனக்கு உரிமை வந்துடுமா என்ன? அவ ஒன்னும் இந்த வீட்டு ஆள் இல்லயே, இந்த வீட்ல தங்கியிருக்கா அவ்ளோதான். ஆழி வெறும் பேயிங் கெஸ்ட் தான். நீ எப்படி மாச மாசம் அவளுக்கு சேலரி குடுக்கறியோ, அதே மாதிரி அவளும் இங்க தங்க வாடகை குடுக்குறாளே, சோ அவளை கேள்வி கேக்க உனக்கு எந்த ரைட்ஸ்சும் இல்லை" என்று வேண்டுமென்றே ஆதவ்வை வெறுப்பேற்ற ஆதவனுக்கு தன் அம்மாவை நினைத்து எரிச்சலாக வந்தது.

"விடுங்கம்மா, வர கொஞ்சம் டைம் ஆகிடுச்சு, அதான் கேக்குறாரு போல" என்ற ஆழி, ஆதவிடம் திரும்பி, "நான் உங்ககிட்ட பாப்பா கொஞ்சம் பெருசானதும் இங்க இருந்து போய்டுறேன்னு சொல்லி இருந்தேன். அப்படி நான் இங்க இருந்து போனதுக்கு அப்புறம் நான் வேலைக்குப் போகணும் தான, அதான் என்னோட வேலை விஷயமா வெளிய போயிருந்தேன். அங்க கொஞ்சம் லேட் ஆகிடுச்சு" என்ற ஆழியை ஆழமாகப் பார்த்த ஆதவ்,

"அப்ப உன்னோட பழைய வேலையை மறுபடியும் ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லு?" என்று ஆழ்ந்த குரலில் கேட்ட ஆதவின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து, திரும்பி வெண்மதியிடம் இருந்த நிலாவை தன் கைகளில் வாங்கிக்கொண்ட ஆழி,

 "பழசு எல்லாத்தையும் மொத்தமா, எந்த பாக்கியும் இல்லாம முடிச்சிட்டு தான் நாங்… நான் இங்க வந்தேன். சோ… ஐ அம் பேக் மோமென்ட் எல்லாம் இங்க இல்ல" என்றவள் நிலாவைப் பார்த்து, 

"இது வேற. இதை முடிக்கும் நேரமும், நான் இங்க இருந்து போகும் நேரமும் ஒன்னா இருக்கும். சோ நீங்க ஆசப்பட்ட மாதிரி நான் சீக்கிரம் இங்கிருந்து போய்டுவேன்" என்று சொல்ல வந்தவளின் வார்த்தைகளை பாதியில் நிற்க வைத்தது, நிலாவின் "ம்மா" என்று மழலை குரல்.

ஆழி நிலாவையே இமைக்காமல் விழிவிரிய பார்த்திருக்க, நிலா ஆழியின் கன்னத்தை தன் பிஞ்சு கரத்தால் தடவியபடி மீண்டும், "ம்மா" என்றழைக்க ஆழிக்கு அந்த ஒரு நொடியை கடக்க, பல நிமிடங்கள் ஆனது.

ஆழி விட்டுப் போகிறேன் என்று சொல்லும் சமயம், அதுவரை அம்மா என்றழைக்காத குழந்தை, சரியாக அந்த நேரம் அந்த அமுத வார்த்தையைச் சொல்ல, ஆழியின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் கால்கள் தடுமாறிய ஆழி குழந்தையை நெஞ்சோடு சேர்த்து இறுக்கி அணைத்தபடி அவள் அறைக்குச் சென்றுவிட, ஆதவ் போகும் அவளையே புருவம் உயர்த்தி ஆழமாகப் பார்த்திருக்க, வெண்மதிக்கு தான் ஆசைப்பட்டது, தான் பேத்தியின் மூலம் கூடிய சீக்கிரம் நடந்து விடும் என்ற நம்பிக்கை பிறந்தது.


ஆழி மனது ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்க, அவள் நெஞ்சின் மீது தலை வைத்து, அவளின் இதயத் துடிப்பின் இசை தாலாட்டாக ஒலிக்க, ஆழியின் கழுத்தை கட்டிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் குழந்தை வெண்ணிலா.


தன்மீது மலர் கொத்தாகக் கிடந்த குழந்தையின் தலையை மெதுவாக வருடிய ஆழி, "ஏம் பாப்பா என்னை அப்படி கூப்ட? அதுவும் நான் உன்ன விட்டுப் போறேன்னு சொல்லும் போது, என் கால்ல விலங்கு போட்ட மாதிரி அந்த வார்த்தையைச் சொல்றீயே பாப்பா நீ… உனக்கு அம்மாவா இருக்க தகுதி எனக்கு இல்ல பாப்பா. உங்கம்மா ஆஷா இருந்த இடத்தில் என் நிழல் விழும் தகுதி கூட எனக்கில்ல, அப்படிப் பட்ட என்னைப் போய் நீ…" என்று உறங்கும் குழந்தையிடம் அவள் உள்ளக் குமுறலை இறக்கி வைக்க, தூக்கத்தில் ஆழியின் மார்பை உரசியபடி தலையை திருப்பிய நிலா தூக்கத்திலேயே மீண்டும் "ம்மா" என்றழைக்க ஆழி முழுவதும் உடைந்து விட்டாள்.


காலையில் டைனிங் டேபிள் மீது குழந்தையை உட்கார வைத்து உணவை ஊட்டிக்கொண்டிருந்த ஆழி மனதில்,காலையில் சைத்ரா ஃபோன் செய்து ப்ளான் என்ன ஆழி?, எப்ப கொடைக்கானல் கிளம்பனும்னு சீக்கிரம் சொல்லு ஆழி" என்று‌ கேட்டது தான் ஓடிக்கொண்டிருந்தது. 'எப்படி நிலாவை விட்டுக் கொடைக்கானல் போறது?' என்று அவள் யோசித்தபடி இருக்க, அந்த நேரம் அங்கு வந்தார் வெண்மதி.


"என்னம்மா ஆழி? பாப்பா ஒழுங்கா சாப்பிடுறாளா? இல்ல குறும்பு பண்றாளா?" என்று கேட்டபடி அங்கிருந்த சேரில் அமர்ந்த வெண்மதிக்கு, "ம்ம்ம் ஒழுங்கா சாப்பிடுறாமா, இப்ப எல்லாம் சேட்டை பண்ணாம சமத்தா இருக்கா" என்ற ஆழி மெதுவாக, "மதிம்மா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்று தயங்கி தயங்கி பேச,


"ம்ம்ம் சொல்லு ஆழி. என்ன சொல்லணும், என்கிட்ட என்ன தயக்கம் உனக்கு"


"அது வந்தும்மா… நான் வேலை விஷயமா நேத்து வெளிய போயிருந்தேன்னு சொன்னேன் இல்ல, அந்த ப்ராஜெக்ட் எனக்குக் கிடைச்சிருச்சு" என்றதும் மதியின் முகம் சோகத்தில் சுணங்கி விட்டது. 


அதை கவனித்த ஆழி, "என்னம்மா நான் எனக்கு ப்ராஜெக்ட் கிடைச்சிருக்குனு சொல்றேன், நீங்க அமைதியா இருக்கீங்க. உங்களுக்கு இது சந்தோஷமா இல்லயா?" என்று‌ கேட்ட ஆழியை கண்களில் ஏக்கம் தேக்கிப் பார்த்த வெண்மதி,


'எப்படிம்மா எனக்குச் சந்தோஷம் வரும். நீ இந்த வீட்டை, எம் பேத்தி, எம் புள்ளைய வீட்டு ஒரேயடியா போறதுக்கு முதல் அடிய எடுத்து வச்சிருக்கேன்னு தெரிஞ்சு, இதை நினைச்சு நான் எப்படி சந்தோஷப்பட முடியும்?' என்று மனதில் புலம்பிய மதியின் குரல் ஆழிக்கு கேட்டது போல, அவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.


ஆழியின் கையை மெதுவாக அழுத்திய மதி, "நீ ஆதவ் பத்தி ஒருமுறை யோச்சிப் பாரு ஆழி. அவனுக்காக இல்லாட்டியும் குழந்தைக்காகவாது உன் முடிவை நீ மாத்திக்ககூடாதா..." என்று தன் ஆதங்கத்தைக் கொட்டும் அந்த தாய்க்கு என்ன பதில் சொல்வது என்று தவித்திருந்தாள் ஆழி.


'உங்களுக்கு நான் என்ன சொல்லி என்னை புரிய வைக்குறதுனு எனக்குத் தெரியலம்மா… ஆனா, இந்த ஜென்மத்தில அந்த பாக்கியம் எனக்கு இல்ல, எப்ப வேணும்னாலும் என் உயிர் போகும்னு தெரிஞ்சே, ஒரு இருண்ட பாதையில, எரியாத விளக்க வச்சிட்டு, போகாத ஊருக்கு வழி தேடிட்டு இருக்க என்கிட்ட போய் நீங்க, உங்க பையன், பேத்தி எதிர்காலத்தை ஒப்படைக்க நினைக்கறீங்க… இதுக்கு என்னால நோ மட்டும் தான் பதிலா சொல்லமுடியும். அதுக்கான காரணத்தைக் கூட என்னால உங்ககிட்ட சொல்ல முடியாதும்மா' என்று உள்ளுக்குள் புலம்பிய ஆழி,


"ப்ளீஸ்மா… நான் ஏற்கனவே சொல்லிட்டேன் இது நடக்காதுனு. மறுபடியும் அதை பத்தி பேசி என் மனசை கஷ்டப் படுத்தாதீங்க ப்ளீஸ்" என்று கையெடுத்துக் கும்பிட்டவள்,


"நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன். எனக்குக் கிடைச்சிருக்க ப்ராஜெக்ட்காக நான் ஒரு நாலஞ்சு நாள் கொடைக்கானல் போய் தங்கவேண்டி இருக்கு, அதான் பாப்பாவை என் கூடக் கூட்டிட்டு..." என்று தயங்கியவள், "என்னை நம்பி பாப்பாவ என்கூட அனுப்பி வைப்பீங்களா?" என்று தயங்கி தயங்கி கேட்டாள்.


"என்ன கேள்வி இது ஆழி... நிலா விஷயத்தில உன்னை நம்பாம நான் வேறை யாரை நம்பப் போறேன் சொல்லு. அவ உன்னோட இருந்தா ஒரு தூசு, துரும்பு கூட அவ மேல படாம நீ உன் கண்ணுல வச்சு பாத்துக்குவேன்னு எனக்குத் தெரியும். ஆனா, இதுக்கு அந்த அரைவேக்காடு ஆதவ் ஒத்துக்கணுமேம்மா, இதைக் கேட்டா அவன் என்ன சொல்லுவான்னு… சொல்றதில்ல… எப்படி வெறிநாய் மாதிரி கத்துவான்னு உனக்கே நல்லா தெரியும் தான" என்றவரை தவிப்பாகப் பார்த்த ஆழினி,


"ப்ளீஸ்ம்மா. வெறும் நாலஞ்சு நாள் தான்‍, பாப்பாவ நான் பத்திரமா பாத்துக்குவேன். கொஞ்சம் உங்க பையன்கிட்ட சொல்லுங்களேன்." என்று அவள் கெஞ்சும் நேரம், 


"என்ன என்கிட்ட சொல்லணும் ஆழி? சொல்ல வேண்டியதை நீயே நேரடியா என்கிட்ட சொல்லேன். எதுக்கு அம்மா வாய வாடகைக்கு வாங்குற" என்றபடியே ஆதவ் ஆழி அருகில் வந்து நின்றான்.


ஆழி ஒரு நிமிடம் யோசித்தவள், "நான் என்னோட வேலை விஷயமா ஒரு அஞ்சு நாள் வெளியூர் போக வேண்டி இருக்கு" என்று நிறுத்தியவள், "அதான் நிலாவ‌ என்னோட அழைச்சிட்டுப் போக உங்ககிட்ட பர்மிஷன் கேக்க சொன்னேன்." என்றவள் மெதுவாக, "நான் பாப்பாவை கூட்டிட்டு போகவா?" என்று சொல்லி முடிக்கும் முன் "நோ வே" என்று கத்தினான் ஆதவ்.


"என்ன நெனச்சிட்டு இருக்க நீ? அதெல்லாம் என் பொண்ணை உன்னோட அனுப்ப முடியாது" என்று கத்த, ஆழி வெண்மதியைப் பார்த்து, 'மா நீங்க கொஞ்சம் சொல்லுங்க' என்று கண்களால் கெஞ்ச, மதி கண்களை மூடித் திறந்து, "இரு இரு நான் பாத்துக்கறேன்" என்றவர்,


"டேய் ஆதவ், அவ குழந்தைய நல்லா பாத்துக்குவாடா, நம்பி அனுப்பு, அவ இல்லாட்டி பாப்பா இங்க அழுதுட்டு இருக்கும். அதுக்கு அவ கூட கூட்டிட்டுப் போகட்டுமே,‌ வேணும்னா நீயும் ஒரு நாலு நாள் லீவு போட்டுட்டு அவங்க கூட போய்ட்டு வா, ரெண்டு பேருக்கும் பாதுகாப்பா இருக்கும்" என்று அசால்ட்டாக ஒரு பெரிய குண்டை தூக்கிப்போட, ஆழிக்குப் பதறிவிட்டது.


'ஏதே... இவரு என் கூட வா! கெட்டது குடி… அய்யோ என்ன இந்த மதிம்மா இப்படி சேம் சைட் கோல் போடுறாங்க!‌ ஒரே டைம்ல நல்லது கெட்டது ரெண்டையும் ஈக்குவலா செய்றாங்ளே' என்று உள்ளுக்குள் புலம்பினாள் ஆழி‌.


"ஹலோ மம்மி... என்னை என்ன இவளுக்குப் பாடிகார்ட்னு நெனச்சிங்களா… இவ கூட நான் போக… அதெல்லாம் என்னால முடியாது. நானும் போகமாட்டேன் ‌ இவளும் போகக்கூடாது"


"ஹலோ நீங்க வர்லனு சொல்லுங்க... அது உங்களுக்கு உரிமை‌ இருக்கு. ஆனா, என்னை போகக்கூடாதுனு சொல்ல நீங்க யாரு?" என்று கேட்க வந்து சற்று பொறுத்து, "என்னை ஏன் போகக்கூடாதுனு சொல்றீங்க?" என்று கேட்க,


அவள் வார்த்தை மாற்றத்தை உணர்ந்த ஆதவ் ஒரு சின்ன சிரிப்போடு அவளைப் பார்த்து, "ஆமா, நீ போகக்கூடாது. நான் அம்மா, பாப்பாவை கூட்டிட்டு ஒரு நாலஞ்சு நாள் டிரிப் மாதிரி போக ப்ளான் பண்ணி இருக்கேன். சோ நீ எங்கயும் போகல, எங்க கூடத் தான் வர, எல்லா ஏற்பாடும் முடிச்சாச்சு. நாளைக்குக் கிளம்புறோம்" என்று முடிவாகச் சொன்னவனைப் புரியாமல் பார்த்தாள் ஆழி‌.


"ஹலோ ஹலோ ஸ்டாப் ஸ்டாப்... என்னங்க? என்ன தான் நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க? இல்ல எனக்கு புரியல... நிஜமா எனக்கு வெளங்கள, அதெப்படி என்னை ஒரு வார்த்தை கூடக் கேக்காம, நீங்களா ஒரு‌ முடிவு பண்ணிட்டு, வா போகலாம்னு சொன்னா என்ன அர்த்தம்? நான் என்ன உங்க ஷர்ட்ல மாட்டி இருக்க டையா, கழுத்துல தொங்கிட்டு நீங்க போற இடமெல்லாம் உங்க கூடவே வர்றதுக்கு" என்று ஆழி கத்த, ஆதவ் அவளை நக்கலாக பார்த்து,


"ம்ம்ம்ம் அப்படிதான் வச்சிக்கோயேன். நீ என்கிட்ட மாட்டிக்கிட்டு தான் இருக்க… அதுனால என்ன கெட்டுப் போச்சு இப்ப, அடுத்து  என்ன அர்த்தம்னு கேட்ட இல்ல? அதுக்கு பதில் நான் சொன்ன நீ கேக்கணும்னு அர்த்தம், வேற என்ன" என்றவனை தீயாக முறைத்தாள் ஆழி.


ஆதவ் ஆழியிடம் உரிமையெடுத்து பேசுவது மதி அம்மாவுக்கு உள்ளுக்குள் அத்தனை சந்தோஷமாக இருந்தாலும், 'அய்யோ இந்த சீனை பாக்க இந்த நேரம் முகில் இங்க இல்லாம போட்டாலே' என்று மனதில் நினைத்தவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "டேய் ஆதவ் என்னடா இது விளையாட்டு?" என்று அதட்ட,


 ஆதவ் அவரைப் பார்த்து கண்ணடித்து, "விளையாட்டே இனிமே தான் ஆரம்பிக்கப் போகுதுமா, ஜஸ்ட் வெய்ட் அண்ட் வாட்ச்" என்றவன் ஆழியிடம் திரும்பி, "போய் உனக்கும் நிலாவுக்கும் தேவையான டிரஸ் எல்லாம் எடுத்து வை, ம்ம்ம் அப்புறம், கொடைக்கானல்ல குளிர் அதிகம், சோ அதுக்குத் தகுந்த மாதிரி டிரஸ் எடுத்து வச்சிடு, நம்ம‌ முகில்கு அங்க ஒரு வீடு இருக்கு, நம்ம அங்க தான் தங்க போறோம். அவனும் நம்ம கூட வரான்." என்றவன் ஆழியை ஆழமான பார்வை (ஆழம்) பார்த்து விட்டு செல்ல, ஆழி போகும் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவள் பார்வையின் வீச்சை உணர்ந்த ஆதவ் இதழோரமாகச் சிரித்தபடியே சென்றான்‌.


"நீ நெனச்சது நடந்துடுச்சு, உன்னோட வரமாட்டேன்னு சொன்னவன், நீ போகணும்னு சொன்ன இடத்துக்கு, இப்ப அவனே கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டான். இப்ப உனக்கு சந்தோஷம் தான? உன்னோட வேலையும் ஒரு பக்கம் நடக்கும், நிலாவும் உன்னோடயே இருப்பா, வேலைக்கு வேலையும் ஆச்சு அலமாரியும் வெள்ளையாச்சு போதுமா. போ… போய் தேவையானதை எல்லாம் இப்பவே எடுத்து வச்சிடு, அப்பதான் கெளம்பும் போது டென்ஷன் இல்லாம இருக்கும்" என்ற வெண்மதிக்கு எங்கு தெரியும், அவர் மகன் அவள் தலையில் டென்ஷனை, டன் கணக்கில் இறக்கி விட்டுச் சென்றிருக்கிறான் என்று…