ஆழியின் ஆதவன் 3

 








ஆழி 3


ஆழி தன் கையில் இருந்த செய்தித்தாளை கீழே வைத்துவிட்டு எழுந்து சுவற்றைப் பிடித்தபடி மெதுவாகத் தன் அறைக்குள் வந்தாள்.


அங்கு ஒரு ஓரமாக இருந்த மர டேபிளில் ஒரு குட்டி வெள்ளி விநாயகர் சிலை இருக்க, அதற்கு முன் சின்ன வெள்ளி விளக்கு இருந்தது. ஆழி மெதுவாக அங்கிருந்த தீப்பெட்டியை எடுத்து விளக்கை ஏற்றி ஒரு நிமிடம் கண்களை மூடி நின்றவள், பின் கண் திறந்து சுற்றி முற்றி பார்த்து விட்டு, அங்கு யாரும் இல்லை என்பது தெரிந்த பிறகு, அந்த விநாயகர் சிலையை கையில் எடுத்துக் கீழ் பக்கமாக அவள் கட்டைவிரல் ரேகையை வைத்து அழுத்த, சிலையின் அடிப்பாகம் அவள் கையோடு வந்தது.


அதற்குள் இருந்து வாட்ச் போன்ற ஒன்றை எடுத்தவள், அதில் இருந்த சின்ன பட்டனை அழுத்த, சிகப்பு நிறத்தில் சின்ன லைட் எரிந்து அனைந்தது. ஆழி இழுத்து ஒரு பெருமூச்சு விட்டு, அந்த வாட்சை மீண்டும் அந்த சாமி சிலைக்குள் வைத்து பழையபடியே மூடி, விளக்கின் முன், இருந்தது இருந்தபடியே வைத்து விட்டு, மெதுவாகத் தன் அறையை விட்டு வெளியே வந்தவள், மயக்கத்தில் கால் தடுமாறி கீழே விழப் போகும் நேரம், அவளை இடையோடு சேர்த்து தாங்கிப் பிடித்தான் ஆதவ்‌.


"ஏய் உனக்குத் தான் மப்பு இன்னும் தெளியல இல்ல? அப்புறம் என்னத்துக்கு இங்கயும், அங்கயும் தவழ்ந்துட்டு இருக்க நீ? ஒழுங்கா ரூம்ல படுக்க வேண்டியது தான" என்றவன் கை இன்னும் அவள் இடுப்பிலேயே இருக்க, ஆழி நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.


ஏனோ இந்த இரண்டு நாட்களாக ஆதவின் நடவடிக்கையில் அதிக மாற்றங்கள் தெரிந்தது அவளுக்கு, அதிகம் தன்னிடம் பேசாது, பழகாது ஒதுங்கிச் செல்பவன், இப்பொழுது அவளிடம் அதிக உரிமையோடு டி போட்டும் பேசும் அளவுக்கு வந்துவிட்டான். வெண்மதி எவ்வளவு சொல்லியும் கேட்காமல், இரண்டு நாட்களாக அவன் தான் ஆழி அருகில் இருந்து கண்ணை இமை காப்பது போல் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஏன் இதையெல்லாம் செய்கிறான்‌ என்று ஆழிக்கு விளங்கவில்லை. ஆனால், அவள் மீதான அவன் பார்வை மாறி இருந்ததை அவளால் நன்கு உணர முடிந்தது. இது அவனுக்கு மட்டுமல்ல, தனக்கும் பிரச்சனையை உருவாக்கும், இதற்கு என்ன செய்யலாம் என்று ஆழி மனம்‌ யோசிக்க தொடங்கியது.


"இப்ப நீங்க சொன்ன இந்த டயலாக் எல்லாத்தையும் என் இடுப்புல இருந்து கையை எடுத்துட்டு கூடச் சொல்லலாம்னு நினைக்கிறேன் மிஸ்டர். ஆதவ்." என்று அவள் இடுப்பில் அழுத்தமாக பதிந்திருக்கும் அவன் கையை காட்டி சொல்ல,


"ம்ம்ம் சொல்லலாம் தான் மிஸ். ஆழினி. பட் நீங்க கீழே விழுந்துட்டீங்கன்னா என்ன பண்றது சொல்லுங்க? அதோட இதுவும் கொஞ்சம் நல்லா தான் இருக்கு" என்று ஒரு மாதிரி இழுக்க, ஆழி அவனை மீண்டும் முறைக்க, "க்ரிப்பா இருக்குன்னு சொல்ல வந்தேன் மேடம். நீங்க வேற ஏதோ நினைச்சுட்டீங்க போல" என்று குறும்பாக சொன்ன, ஆதவின் கையைத் தட்டி விட்ட ஆழி வெளியே நகர, அவள் கையைப் பிடித்துக் கொண்டான் ஆதவ்.


"ஏய் உன்ன போய் ரெஸ்ட் எடுக்கச் சொன்னா, எங்க போற நீ? சாப்ட இல்ல, இந்த இந்த மருந்தை போட்டுட்டு மரியாதையா போய் படு" என்றவனை அவள் சற்றும் மதிக்காமல் மீண்டும் அங்கிருந்து நகர, இந்த முறை ஆதவ்வுக்கு கோபம் வந்துவிட்டது.


 "ஏய் சொல்லிட்டே இருக்கேன். நீ பாட்டுக்குப் போற, அப்டி எங்க தான்டி போற? என்று ஆதவ் கோவத்தில் கத்த, ஆழி திரும்பி அவனைப் பார்த்து,


"பாப்பாவ பாக்கணும்" என்று அமைதியாகச் சொல்ல, ஆதவ் ஒரு நிமிடம் இமைக்காமல் அவளைப் பார்த்தவன்‌, "நிலாக்கு ஒன்னும் இல்லன்னு நான் தான் சொன்னேன் இல்ல, அவ நல்லா தான் இருக்கா, நீ போய் ரெஸ்ட் எடு?"


"எனக்குப் பாப்பாவ பாக்கணும். நா சாப்ட்டேன். ஆனா, குட்டி சாப்ட்டுச்சா இல்லயான்னு தெரியல?" என்றவளை என்ன சொல்வதென்று ஆதவ்வுக்குப் புரியவில்லை.


"நா தெரியாம தான் கேக்கறேன், உனக்கே நிலா மேல இவ்ளோ அக்கறை இருக்கும்போது, அவள பெத்த அப்பன் நான், எனக்கு இருக்காதா… அதெல்லாம் அவ நல்லா சாப்ட்டு, வெளயாடிட்டு தான் இருக்கா, நீ அதைப் பத்தி எல்லாம் யோசிக்காத" என்றவனை ஆழி நம்பாத பார்வை பார்க்க, ஆதவ் இழுத்து மூச்சு விட்டான்.


"சரி நான் பொய் தான் சொல்றேன். ரெண்டு நாளா நீ இல்லாம அவ ரொம்ப அழுதுட்டே இருந்தா, சாப்ட மாட்டேன்னு ஒரே அடம், அப்டி இப்டின்னு கஷ்டப்பட்டு அம்மாவும், முகிலும் தான் அவளைப் பாத்துக்குறாங்க, டாக்டர் உனக்கு உடம்பு சரியாக இன்னும் எப்படியும் ரெண்டு, மூணு நாள் ஆகும்னு சொன்னாங்க, அதான் பாப்பாவ உன்கிட்ட விடல, போதுமா... இப்ப நீ போ, இன்னும் ரெண்டு, மூணு நாள் தானே நானும், அம்மாவும் நிலாவ பாத்துக்குறோம்."


"நோ நீட் சார். ஐம் ஓகே நவ். நானே பாப்பாவ பாத்துக்குறேன். அதுக்குத் தான மாச மாசம் சம்பளம் தரீங்க, வாங்குற‌ சம்பளத்துக்கு நா வேலை பாத்துதான ஆகணும்" என்று வேண்டுமென்றே அவனை வார்த்தையால் அடித்தவள் அங்கிருந்து நகர,


"நான் குடுக்குற பணத்துக்காகத் மட்டும் தான் நீ என் குழந்தைய‌ பாத்துக்கறியா ஆழி?" என்றவனை சட்டென திரும்பிப் பார்த்தாள் ஆழினி‌.


அவள் இந்த வீட்டிற்கு வந்த இந்த ஒரு வருடத்தில் ஆதவ் இன்று தான் அவளைப் பேர் சொல்லி அழைக்கிறான்.


ஆழி அவனையே பார்த்திருக்க, "சொல்லு ஆழி… பணத்துக்காக மட்டும் தான் நீ நிலா கூட, இந்த வீட்ல இருக்கியா?" என்றதற்கு அவளிடம் பதில் இல்லாமல் போக அவள் அமைதியாக இருந்தாள்.


"பதில் இல்லல்ல, ம்ஹூம்... நீ சொல்லவேண்டிய அவசியமே இல்ல ஆழி, பிகாஸ் ஐ நோ. நிலாக்கும் உனக்கும் நடுவுல பணம் மட்டும் இல்ல, வேற எதுவும் வராது. உன்னோட உயிர விட நிலா தான் உனக்கு இம்பார்டன்ட்னு அன்னைக்கு அந்த நிலையிலும் உன் நெஞ்சோட குழந்தைய நீ விடாம கட்டிக்கிட்டு இருந்ததில்லயே எனக்குப் புரிஞ்சுப் போச்சு, சோ தேவையில்லாம என்னை வெறுப்பேத்த, இப்படி எல்லாம் சொல்லாத, இப்ப உனக்கென்ன? நிலா‌வ தான பாக்கணும்? அவ்ளோதான?" என்றவன் அடுத்த நொடி அவளை தன் இரு கைகளில் தூக்கிக் கொண்டான்.


"ஏய் என்ன பண்றீங்க? கீழ விடுங்க என்னை" என்ற அவள் சத்தமெல்லாம் அவன் காதில் விழாதது போல் அவளை தூக்கிக்கொண்டு நிலா இருந்த அறைக்குச் செல்ல, அவன் ஆழியை தூக்கிக் கொண்டு செல்வதைப் பார்த்த வெண்மதியும், முகிலும் சந்தோஷத்தில் hi-fi அடித்துக் கொண்டனர்.


"டேய் முகில் சீக்கிரம் இதுங்க கல்யாணத்தை முடிக்கணும். கொஞ்சம் விட்டாலும் மறுபடியும் ரெண்டு வேதாளமும்‌ முருங்க மரம் ஏறிடும். சீக்கிரம் நாள் பாருடா" என்று வெண்மதி முகிலை விரட்ட,


"ம்மா..‌. நீங்க வேற சும்மா இருங்கம்மா… இதுல அவசரப்பட்டு எதுவும் செஞ்சா, அப்புறம் முதலுக்கே மோசமாகிடும். ஆதவ் கொஞ்சம் மாறி இருக்கான். அது தெளிவா தெரியுது. ஆனா, அந்த ஆறும் அது ஆழமில்ல ஆழி மேடம் மனசுல ஒன்னும் இல்ல போலயே, எப்டி வெறப்பா பேசிட்டு போகுது பாருங்க, சோ இதுல சட்டுன்னு நம்ம ஒன்னும் பண்ண வேணாம். முதல்ல நா ஆதவ் கிட்ட பிட்டு போட்டு மேட்டர் என்னன்னு தெரிஞ்சிட்டு வரேன். அப்பறம் நம்ம ஆப்ரேஷன் ஆதவ், ஆழிய ஸ்டார்ட் பண்ணலாம்" என்ற முகில்  'எப்படியும் ஆதவ், ஆழி கல்யாணம் நடக்கணும் கடவுளே' என்று மனதார இறைவனிடம் வேண்டிக் கொண்டான். 


அடுத்த மூன்று நாட்கள் அமைதியாகக் கழிய, ஆழினி முழுமையாக தேறியிருந்தாள்.


காலையில ஆதவ் ஆஃபிஸ் சென்றிருக்க, நிலாவுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்‌ ஆழி. தன் ஃபோன் மணி அடிக்க, அதை எடுத்து பார்த்தவள் புருவத்தில் யோசனை முடிச்சுகள் விழ, ஃபோனை அட்டன் செய்து, "ஹலோ" என்றதும் அந்தப் பக்கம் நக்கலாகச் சிரிக்கும் சத்தம் கேட்டது.


"என்ன மிஸ் ஆழி மேடம்,‌ ஒரு வருஷம் கழிச்சு மறுபடியும் உங்க வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்க போல, ஆழி இஸ் பேக்னு சொல்ற‌ அளவுக்குப் பயங்கர சம்பவம் செஞ்சிருக்கீங்க" என்ற அந்த ஃபோன் ஆசாமி சிரிக்க, ஆழி அமைதியாக இருந்தாள்.


"என்ன ஆழி மேடம், பேச்சையே காணோம். ம்ம்ம் நீங்க எல்லாம் பெரிய ஆளு! எங்ககிட்ட எல்லாம் பேசுவீங்களா?, ஆனாலும் மேடம் ஒரு கடத்தலுக்குப் போய், நீங்க இப்டி அந்த ஆளை நடுரோட்டில் கொன்னுப் போட்டிருக்க வேணாம்."


"எங்க பாக்கணும்" என்று ஆழி ஒரே வார்த்தை கேட்க,


"என்ன கேட்ட நீ? எனக்குப் புரியல? நீ எதுக்கு என்னைப் பாக்கணும்?" என்று அவன் குறுக்குக் கேள்வி கேட்டான்.


"ம்ஹூம், எனக்கு உன்ன பாக்கணும்னு‌ சொல்லல, உனக்கு என்னை எப்ப பாக்கணும்னு கேட்டேன். அதுக்காக தான ஸ்கூல் புள்ள மாதிரி ஃபோன் பண்ணி என்னை மிரட்டுறேன்னு காமெடி பண்ணிட்டு இருக்க? சொல்லு எங்க வரணும்" என்று ஆழி அலட்சியமாகக் கேட்க,


"நீ ரொம்ப புத்திசாலி தான். ஓகே இன்னும் கொஞ்ச நேரத்தில ஸ்பாட் பிக்ஸ் பண்ணிட்டு உனக்குச் சொல்றேன்." என்றவன் ஃபோனை கட் செய்து விட, ஆழி திரும்பி நிலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் மெயில் இன்பாக்ஸை ஓபன் செய்து பார்த்தவள் இதழோரம் ஏளனப் புன்னகை.


அந்த விநாயகர் சிலைக்குள் இருந்த வாட்சை எடுத்து கையில் கட்டிக்கொண்டு, குழந்தை நிலா நல்ல உறக்கத்தில் இருக்க, வெண்மதியிடம் கோவிலுக்குப் போவதாகச் சொல்லி விட்டு வெளியே வந்தாள் ஆழினி.


சென்னைக்கு சற்று ஒதுக்குப்புறமாக இருந்தது அந்த ஒன்பது மாடி அப்பார்ட்மெண்ட். லிஃப்டில்‌ ஏறி ஒன்பதாவது மாடிக்குச் சென்ற ஆழி அங்கு யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, அங்கு கடைசியாக இருந்த பிளாட் வாசலில் கதவுக்கு முன் வந்து நின்று, அங்கிருந்த பிங்கர் பிரிண்ட் சென்சார் லாக்கில் அவள் விரலை வைத்து அழுத்த, அந்தக் கதவு சட்டென திறந்துக் கொண்டது. அவள் வீட்டுக்கு உள்ளே சென்ற அடுத்த நிமிடம் அவளை வந்து கட்டிக் கொண்டது நான்கு கைகள்.


"ஹவ் ஆர் யூ ஆழி?" என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்க, ஆழி மெல்லியதாகச் சிரித்து, "ம்ம்ம் ஐம் குட்" என்றாள்.


"ம்ம்ம் சொல்லு ஆழி என்ன விஷயம், இன்னும் ஆறுமாசம் ஆகலியே, அதுக்குள்ள எதுக்கு சிக்னல் குடுத்த?, அதோட இந்த வீட்ல மீட் பண்ணலாம்னு வேற மெயில் பண்ணி இருந்த, அப்படி என்ன அவசரம்? என்ன ஆச்சு?"


"அவசரம் ஒன்னும் இல்ல மீரா,‌ ஒரு சின்ன அவசியம், அதான் உங்கள கூப்டேன்." என்ற ஆழி ஒரு நியூஸ் பேப்பரை எடுத்து அங்கிருந்த டேபிள் மீது வைத்து, அந்தக் கடத்தல்காரன் இறந்த செய்தி மீது விரல் வைத்து, "ஐ நோ இத நீங்க செய்யல, பட் ஐ வாண்ட் டூ நோ… இத யாரு செஞ்ச?" என்றவளை கேள்வியாகப் பார்த்தாள் சைத்ரா.


"இது யாரு ஆழி?" என்று கேட்ட சைத்ராவிடம் நடந்ததை ஆழி சொல்ல, "ம்ம்ம், உனக்கு இத நாங்க செய்யலன்னு தெரிஞ்சு போச்சு, சோ, இப்ப உனக்கு என்ன தெரியணும் ஆழி?" என்று‌‌ கேட்டாள் மீரா.


"எனக்கு ஃபோன் பண்ணி மிரட்ட ட்ரை பண்றவன், இந்த நாய நான் தான் போட்டேன்னு சொல்றான். பட், இத நா செய்யல, அது அவனுக்கும் தெரியும்னு எனக்குப் புரியுது, பட் இதை ஒரு ரீசன்னு வச்சு என்னை ப்ளாக் மெயில் பண்ண ட்ரை பண்றான்."


"சோ, இந்தக் கொலையை நம்ம பண்ணலன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கு, அண்ட் நம்மள பத்தியும் அவனுக்கு தெரிஞ்சிருக்கு, அப்டி தான ஆழி"


"நம்மள பத்தி இல்ல சைத்ரா, என்னைப் பத்தி, என்னைப் பத்தி மட்டும் தான் அவனுக்குத் தெரிஞ்சிருக்கு, அதுவும் கூட முழுசா இல்ல, முழுசா என்னைப் பத்தி தெரிஞ்சா, நான் இருக்கத் திசை பக்கம் வர்ற தைரியம் கூட அவனுக்கு வராது. சும்மா ஏதோ சின்ன லீடு கிடைச்சிருக்கு போல, அத வச்சி ஏதோ ப்ளான் பண்றான்."


"ஓகே ஆழி இப்ப அவனைப் பத்தி என்ன தெரியும்"


"A to z மீரா, ஐ வாண்ட் ஹிஸ் ஃபுல் ஹிஸ்டரி" என்க, சைத்ராவும் மீராவும் ஆழியைப் பார்க்க, அவள்‌ அசால்ட்டாக தோளைக் குலுக்கினாள்.


"அவன் நம்பர்" என்று சின்ன சிரிப்போடு கேட்ட சைத்ராவிடம் ஆழி ஃபோன் நம்பரைக் கொடுக்க, அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆழியை ஃபோனில் மிரட்டுபவன் யார் என்பதைக் கண்டுபிடித்த சைத்ரா, இன்னும் ஒன் ஹவர்ல அவன் ஜாதகம் உன் கையில இருக்கும். அவன் உன்ன எங்க வரச்சொன்னான் ஆழி"


"இங்க பக்கத்துல இருக்கக் குடோனுக்கு"


"ம்ம்ம்ம் ஓகே, கிளம்பு" என்ற மீராவும், சைத்ராவும் ஆழியிடம் இருந்தது போலவே இருந்த வாட்ச்சை கையில் கட்டிக்கொண்டு, லேப்டாப்பையும் எடுத்துக் கொள்ள, மூவரும் ப்ளூடூத் ஹெட்செட்டை காதில் மாட்டிக்கொண்டு அந்தக் குடோனுக்கு கிளம்பினர்.