உன் விழியில் கைதானேன் 17
விழி 17 தேவா வீட்டுக்குச் சந்தியா வந்து முழுதாக ஒருநாள் ஓடியிருந்தது. நாள் முழுவதும் அறையிலேயே அடைந்து கிடக்கும் சந்தியாவைப் பார்த்த தேவாவுக்கு மனது பிசைந்தாலும், ஒரு பக்கம் ஏனோ அவன் மனதில் சொல்ல முடியாத ஒரு அமைதி நிலவியது, அவன் மட்டுமே அறிந்த உண்மை. அவளுக்குத் திருமணம் நிச்சயமாகி விட்டது என்று தெரிந்தபோது, அவன் உள்மனம் உணர்ந்த வலி அவனுக்கு மட்டும் தான் தெரியும். பின்பு தன் நிலை உணர்ந்தவன் எங்கிருந்தாலும் அவள் நன்றாக இருந்தால் போதுமென்று நினைத்து அவன் உணர்வுகளைத் தனக்குள் அடக்கி அணைகட்டி வைத்திருக்க, தீனா அவனின் வார்த்தைகளால் அந்த அணையைத் தகர்த்திருந்தான். தீனா அழைத்தபோது எங்கு அவளுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று அவன் இதயம் துடித்தது. அங்குச் சென்று அவளை நல்லபடியாய் பார்த்த பிறகுதான் அவனுக்கு மூச்சே வந்தது. அப்போதும் கூட அவனுக்குச் சந்தியாவைத் தன் வாழ்க்கையில் இணைக்கும் எண்ணம் இல்லை. ஆனால், தீனா கடைசியாகச் சொல்லிச் சென்ற வார்த்தைகளைக் கேட்டவனுக்கு, அதற்கு மேல் வேறு எதையும் நினைக்கத் தோன்றவில்லை. நேராக அவளை இழுத்துச் சென்று தாலியைக் கட்டி, அவளின் ஆயுளுக்கு, அவளுக்குப் பாத...