உன் விழியில் கைதானேன் 11
விழி 11 அந்த மருத்துவமனையில் தேவாவுக்குச் சிகிச்சை நடந்து கொண்டிருக்க, அந்த அறுவை சிகிச்சை அறையின் முன் தன் கையில் ஒட்டியிருந்த தேவாவின் உதிரத்தை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் சந்தியா. அறுவை சிகிச்சை முடிந்து தேவா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு இருந்தான். சந்தியாவின் மொத்தக் குடும்பமும் அங்கு தான் இருந்தது. ஆர்த்தி ஒரு பக்கம் அழுது கொண்டு இருக்க, அவள் கணவன் அருள் அவளைச் சமாதானம் செய்து கொண்டு இருந்தான். மருத்துவர்கள் அந்த அறையை விட்டு வெளியே வர, மொத்தக் குடும்பமும் அவரைச் சூழ்ந்து கொண்டது. “தேவாக்கு இப்ப எப்படி இருக்கு டாக்டர்?” என்று ஆர்த்தி கண்ணீரோடு கேட்க, சந்தியா ஒருவிதத் தவிப்போடு டாக்டர் முகத்தையே பார்த்திருந்தாள். “ஆப்பரேஷன் முடிஞ்சது. புல்லட்டை ரிமூவ் பண்ணியாச்சு. பட்…” என்று அவர் இழுக்கச் சந்தியாவுக்கு நெஞ்செல்லாம் அடைத்தது. “என்ன டாக்டர், என் தம்பிக்கு என்ன?” என்று ஆர்த்தி பதற சூர்யா முன்னால் வந்தவன், “என்ன டாக்டர், என்ன ப்ராப்ளம்? எதுவா இருந்தாலும் சொல்லுங்க. இன்னும் டாக்டர்ஸ் வேணுமா? இல்ல இதைவிடப் பெரிய ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போகணுமா?...