கண்ட நாள் முதல் 6


அத்தியாயம் 6


இங்கு ஆபீஸ் வந்த நிலா வீட்டில் நடந்ததை நினைத்து குழம்பி போய் இருந்தாள். "இந்த மூனும் ஏதோ சித்து வேலை பண்றாஙங்கன்னு மட்டும் புரியுது... ஆனா, அது என்னனு தான் புரியல. இந்த சூன்ய பொம்மை வேற இன்னைக்குன்னு பாத்து  நம்ம அக்கான்னு கூப்பிடுது. அது மாதிரி நடக்க வாய்ப்பே இல்லயே" என்று யோசித்தவள். "அய்யோ என்ன இப்டி புலம்ப விட்டுட்டாங்களே" என்ற நிலா மீட்டிங்க்கு சென்றாள். 


11 மணி போல் மீட்டிங் முடித்து வெளியே வந்த நிலாவை பார்த்து  ரிசப்ஷனிஸ்ட்  பூஜாவை  ஹாய் சொல்ல.. பதிலுக்கு "ஹாய் பூஜா" என்றாள் சுரத்தே இல்லாமல்.


"என்ன நிலா மேடம் எப்பவும் முகத்துல பளீரென ஒரு பல்பு எரியும். இன்னைக்கு என்ன? இப்டி பீஸ் போய் இருக்கு. ஒருவேளை தேனு, தேவி இரண்டு பேரும் இல்லாததால மேடம்…?"


"அதெல்லாம் ஒன்னும் இல்ல பூஜா வீட்டை பத்தி நினைச்சுட்டு இருந்தேன் அதான்…"


"என்ன மேடம் எதுவும் பிரச்சனையா..?? 


"ஆமா பூஜா ஆனா, அது யாருக்குனு தான் புரியல.?? 


"என்ன நிலா மேடம் புதிர் போடுறீங்க.. எனக்கு ஒன்னும் புரியல…?"


"உனக்கு மட்டுமா புரியல, எனக்கு தான் எதுவும் புரியல. கொஞ்ச நாளா வீட்ல ஏதோ சீரியஸா பேசுறாங்க. நா போன சட்டுன்னு பேச்ச நிறுத்திடுறாங்க. கேட்ட ஒன்னும் இல்ல சும்மா பேசிட்டு இருந்தோம்னு வடிவேலு மாதிரி பதில் சொல்றாங்க.. எனக்கு மண்டை காயுது பூஜா…"


"ஏன் நிலா மேடம் நீங்களும் சந்தியாவும் தான் ரொம்ப குளோஸ் ஆச்சே அவ கிட்ட கேக்க வேண்டியது தானே."


"யாரு அந்த சூன்ய பொம்மை உன் ஃப்ரண்ட் சொல்றியா.? அட போம்மா. நீ வேற கடுப்பை கிளப்பிக்கிட்டு.. எனக்கு தெரிஞ்சு வீட்ல நடக்குற இந்த மர்ம எபிசோடுங்கு  ஸ்கிரீன்பிளே ரைட்டர்ரே அந்த சூதாடி சித்தி தான். ஆனா, டைரக்டர் யாருன்னு தான் தெரியல. குமார் எனக்கு புடிக்காத எதையும் பண்ண மாட்டாரு. கலை ஓட்ட வாயி. எல்லாத்தையும் கொட்டிடும். ஆனா, இந்த சந்தியா இருக்காளே புல்லா பிராடு அது தான் ஒரே டென்ஷன்."


"அதெப்படி மேடம் சந்தியா தான் காரணம்னு அவ்ளோ உறுதியா சொல்றீங்க.? அவளுக்கு ஒன்னும் தெரியாம கூட இருக்கலாம் இல்ல" என்று பூஜா சந்தியாவுக்கு வக்காலத்து வாங்க.


"ஒஒஒ ஃப்ரண்டுக்கு சாப்போட்டக்கும். உன்னை முதல்ல வேலைய விட்டு தூக்கணும். அப்ப தான் நீ அடங்குவ…'


"அய்யோ அக்கா! என்ன டக்குன்னு இப்டி சொல்லிட்டீங்க. எனக்கு நீங்க தான் முக்கியம். நீங்க சொன்னது தான் கரெக்ட் கா. உங்களுக்கு தெரியாம யாருக்கு தெரியும்.  அவ சரியான பிராடு தான்கா. பிராடின் கால் பிராட் அறியும். நா உங்களை நம்புறேன்கா. என்ன வேலைய விட்டு மட்டும் துரத்தி விட்டுடாதீங்க க்கா ப்ளீஸ் மீ பாவம்" என்று முகத்தை பாவம்  போல் வைத்து கொண்டு சொல்ல..


நிலா முதலில் சிரித்தவள். பின்பு பூஜா பேசியதன் அர்த்தம் உணர்ந்து... "ஏய் சந்தடி சாக்குல என்ன ப்ராடுனு சொல்றியா நீ. இரு உனக்கு டிஸ்மிஸ் கன்பர்ம்" என்று விளையாட்டாக நிலா முறைக்க. 


பூஜா, "நா என்னக்கா பண்றது? சில நேரத்தில் என்னால உண்மைய சொல்லாம இருக்க முடியல. அது தன்னால வெளியே வந்துருது." 


"அடியே உன்னை…" என்று நிலா பூஜாவை அடிக்க கை ஓங்க.. நிலாவின் ஃபோன் அடித்து பூஜாவை நிலாவிடம் இருந்து காப்பாற்றியது. 


ஃபோனை எடுத்த நிலா "சொல்லுமா" என்க. மறுமுனையில் "அடியேய் சூர்ப்பனகை. மீட்டிங் எல்லாம் முடிஞ்சிடுச்ச" என்றார் கலை. 


"ம்ம்ம்ம் எல்லாம் முடிஞ்சது  கிளம்பிடேன் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்."


"நீ ஒன்னும் வீட்டுக்கு வர வேணாம்" என்று கலை நிருத்த...


"அம்மாஆஆஆஆ? என்ன மா இது.?  காலையில் உன் பேச்ச கேக்காம வந்ததுக்கு என்னை நீ வீட்டுக்கு வராத ன்னு சொல்றது நியாயம் இல்லமா. இந்த மேட்டர் மட்டும் குமாருக்கு தெரிஞ்சது.. நீ அவ்ளோதான்?."


"ஏய் ச்சீ! முதல்ல உன் மொக்கைய நிறுத்து. சொல்றத முழுசா கேக்காம.. அப்பன் கிட்ட சொல்றலாம். அவரு பெரிய இவரு. அந்த மனுஷன் என்னை பார்த்து பயப்படாமல் இருந்த போதாது. இவ வேற நேரம் காலம் தெரியாம மொக்க காமெடி பண்ணிட்டு, சொல்றத முழுசா கேளுடி." 


"சரி ஜொள்ளும், ஜொள்ளி தொலையும்." 


"அடியேய் உனக்கு இன்னைக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்... முதுகு பார பார ன்னு இருக்க போல. தோசை கரண்டி வச்சு நாலு இழுப்பு இழுத்த எல்லாம் சரி ஆகிடும்." 


"ஒஒஒ இதை தான் முழுசா சொல்ல விடுன்னு பொலம்புனியமா. இது தினமும் நீ செய்றது தானா" என்று நிலா கலாய்க்க.


"ஏய் வேணாம்டி? என்ன வெறி ஏத்தாத சொல்லிட்டேன். நீ இப்ப முதல்ல கிளம்பி நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்க ரிஜிஸ்டர் ஆஃபீசுக்கு வா' என்றார் கலை.


"ஏது ரிஜிஸ்டர் ஆஃபீசுக்கா?? எதுக்கு..??


"உங்க அப்பா சொத்து ஒன்னு இருக்கு அதை கை மாத்தி விட தான். நீயும் கையெழுத்து போடணும். சீக்கிரம் வா நல்ல நேரம் போகுது."


"என்ன விளையாடுறியா நீ..?? எனக்கு தெரியாம ஏது அப்டி ஒரு சொத்து. சரி அப்டியே இருந்தாலும் அதை ஏன் இப்ப விக்கணும். ஏன் இத என் கிட்ட முதல்லயே சொல்லல?" என்றாள் கோபமாக...


"அதெல்லாம் உன் அருமை அப்பா கிட்ட கேட்டுக்கோ. இப்ப நீ கிளம்பி சீக்கிரம் வந்து சேரு. எல்லாரும் உனக்காக தான் வெயிட்டிங்" என்றவர் ஃபோனை கட் பண்ண. நிலா எதுவும் புரியாமல் அப்படியே நிற்க.. அவளை உலுக்கிய பூஜா "என்ன நிலாக்கா என்ன ஆச்சு அப்படியே நின்னுடீங்க.? எதுவும் பிரச்சனையா க்கா.?"


"இல்ல பூஜா. அதெல்லாம் ஒன்னு இல்ல. அவசர வேலை நா கிளம்புறேன். கொஞ்சம் பேப்பர்  வொர்க் இருக்கு, அத நா வந்து முடிக்கிறேன்னு எம்.டி கிட்ட சொல்லிடு. நா இப்ப கிளம்புறேன்" என்றவள் தான் வண்டியை எடுத்து கொண்டு புறப்பட்டாள்.


போகும் வழி எல்லாம் யோசித்து கொண்டே சென்றவள். ரிஜிஸ்டர் ஆபீஸ் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே செல்ல, அங்கு ராம்குமார் பதற்றமாக நின்று கொண்டு இருக்க, அவர் அருகே சென்றவள், "இப்ப எதுக்கு இங்க வந்திருக்கீங்க.? எனக்கு தெரியாம நீங்க எப்ப சொத்து வாங்குனீங்க. சரி அப்படியே இருந்தாலும் எதுக்கு இப்ப அதை விக்கணும். அப்படி என்ன அவசியம் வந்துது இப்ப? இததான் மூனு பேரும் கூடி கூடி  பேசினீங்களா"  என்று கோபமாக கத்தும் மகளை

நிமிர்ந்து கூட பார்க்காமல் ராம்குமார் தலை குனிந்து. நிற்க.


"நா உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் பதில் சொல்லுங்க?" என்றவள் அருகில் யாரோ வருவது தெரிந்து அமைதியாக இருக்க..  வந்தவர், "சார் எல்லாம் ரெடி உங்க பொண்ணு வந்து கையெழுத்து போட வேண்டியது தான் பாக்கி. இன்னொரு அரை மணிநேரத்தில் எல்லாம் முடிஞ்சிடும்" என்றவர் நிலாவை பார்க்க, "சார் உங்க பொண்ணு வந்துட்டாங்க போல? இவங்களுக்கு தான் இன்னைக்கு கல்யாணமா?" என்க.. ராம்குமார்  தலைகுனிந்தபடியே "ஆமாம்" என்றார். 


நிலா தன் காதுகளில் விழுந்தது உண்மைதானா என்பது போல் ராம்குமாரை பார்க்க அவர் தலை கவிழ்ந்து நின்றார். 

நிலா அடக்கிய கோபத்துடன், "இங்க என்ன நடக்குது.?? உங்களை தான் கேக்குறேன் இங்க என்ன நடக்குதுன்னு சொல்லுங்க?" என்று கத்த... 


"உனக்கு கல்யாணம் நடக்க போகுது" என்று பின்னால் இருந்து குரல் வர நிலா திரும்பி பார்க்க அங்கு கலை,சந்தியாவுடன் அரவிந்த் நின்றுகொண்டிருந்தான்.


அரவிந்தை பார்த்த நிலா முதலில்  அதிர?! பின் இவன் வேலைதானா இதெல்லாம் என்று அவனை முறைக்க...


"அங்க என்னடி முறைப்பு? இங்க என்கிட்ட பேசுடி" என்று கலையின் குரல் கோபமாக வர.


"ஏம்மா? ஏன் இப்படி பண்றீங்க.? திடீர்ன்னு வர சொல்லி இப்படி கல்யாணம்னு சொல்றது உங்களுக்கே நியாயமா இருக்க.?" என்றாள் விழியில் வழியும் கண்ணீரை துடைத்தபடி.


"ஊரு பேரு தெரியாத ஒருத்தனுக்கு, நீ காலம் பூர காத்திருக்கிறது நியாயம்னா  இதுவும் நியாயம் தான்டி."


"அம்மா ப்ளீஸ் மா என்னால கல்யாணமெல்லாம் பண்ணிக்க முடியாது. புரிஞ்சுக்க ம்மா…"


"ஏன்டி முடியாது.? ஏன் முடியாது.? நா ஒத்துக்கிறேன். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் உன்னை காப்பாத்துன அந்த பையன் மேல உனக்கு ஒரு ஈர்ப்பு வந்து இருக்கு. அது நியாயம் தான். ஆனா, அதுக்காக நீ கடைசி வர அந்த பையனயே நினைச்சுட்டு இருப்பேன்னு சொல்றதில் ஒரு அர்த்தமும் இல்ல நிலா."


நிலா அரவிந்தை மறுபடி முறைத்தவள், " ஏன்டா மர வேதாளம் உன்னை நம்பி தானே, உன் கிட்ட நா எல்லாத்தையும் சொன்னேன். ஏன்டா இப்படி பண்ண? உன்ன" என்று நிலா கோபமாக வர. கலை அவளை தடுத்தவர்.. 


"நீ ஏன்டி அந்த தம்பி கிட்ட ஏகுர்ர… எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுடி... எவனோ ஒருத்தனுக்காக இப்டி யோசிக்கிறியே.? தோ இருக்காரே உங்க அப்பா. அவர பத்தி கொஞ்சமாவது யோச்சிய நீ. உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணனும்னு அந்த மனுஷனுக்கு அவ்ளோ ஆசைடி. இருந்தாலும் உனக்கு விருப்பம் இல்லாம அது நடக்க கூடாதுன்னு. அவர் பொறுமையா இருக்காரு. அவர பத்தி உனக்கு கவலை இல்ல, இல்ல?" என்று கலை தனது கடைசி பந்தை போட நிலா இப்போது கிளீன் போல்ட் ஆகி இருந்தாள்.


கலை மீண்டும் "ஏங்க நீங்க என்ன சும்மா வாய மூடிட்டு இருக்கீங்க. ஏதாவது சொல்லுங்க" என்று ராம்குமாரை உலுக்க. நிலா நனைந்த விழிகளுடன் அவரை பார்க்க., அவர் கண்களும் கலங்கி இருந்தது. "என்னை மன்னிச்சுடு நிலாம்மா. எனக்கு வேற வழி தெரியல டா. எங்க நீ இப்டியே  இருந்திடுவியேன்னு பயந்து தான்  இப்படி பண்ணிட்டேன். ஆனா, நீ இப்படி கண் கலங்கி  நிற்கிறது பார்க்கும்போது என் மனசு கேட்கல. உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைன்னா விட்டுட்டு. நம்ம இப்படியே இங்கிருந்து போயிடலாம்.  இவ்வளவு மனசு கஷ்டப்பட்டு நீ இந்த கல்யாணம் பண்ணிக்க வேணாம்." என்றவார் அரவிந்திடம் "எங்களை மன்னிச்சுடுங்க தம்பி" என்று சொல்லி விட்டு நிலாவின் கைகளை பிடித்து கொண்டு அங்கிருந்து போக முயல.


கலை அவரை தடுத்து, "என்ன பண்றீங்க நீங்க?" என்று அவரிடம் சண்டையிட. சந்தியா என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க. "எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்" என்று வந்த நிலாவின் குரலில் அனைவரும் அப்படியே நின்று விட்டனர். 


"நிலா நீ என்னடா சொல்ற.?? உனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதமா?" என்று  ராம்குமார் கேட்க.. நிலா "ஆமாம்" என்று தலை ஆட்டினாள். "நிலா நல்ல யோசிச்சு சொல்லுமா, இது உன் வாழ்க்கை பிரச்சனை. அப்பா சொன்னேன்னு நீ இந்த முடிவு எடுக்காத" என்று  அமைதியாக சொல்ல.  "இல்ல குமார். எனக்கு முழு சம்மதம் நீ எதுக்கு கவலைப் படாம ஆக வேண்டிய வேலைய பாரு" என்று அமைதியாக சொல்ல. "நிலா நீ உண்மையா தான் சொல்றீய?" என்று ராம்குமார் மறுபடியும் கேட்க.. 


சந்தியா அவர் முன் வந்து நின்று, "யோவ் அப்பா. லூசப்பா நீ? அந்த வேதாளமே, இப்ப தான் இறங்கி வந்து ஓகே சொல்லி இருக்கு. நீ வேற திரும்ப திரும்ப ஓகேவ ஓகேவான்னு ஆப்ஷன்  கொடுத்துட்டு இருக்க... நீ  முதல்ல கிளம்பு உள்ள போய் எல்லாம் ரெடியா ன்னு பாரு, போ கிளம்பு முதல்ல" என்று அவரை விரட்டி விட்டவள். பின் நிலாவின் அருகில் அமர்ந்து "ஐ ஆம் சோ ஹாப்பி கா" என்று சொல்லி அவள் கன்னத்தை கிள்ள.. நிலா சந்தியாவை  ஒரு முறை முறைத்துவிட்டு "இது எல்லாத்துக்கும் நீதானடி காரணம்..??  இததான நீங்க ஒரு மாசமா மறைச்சு மறைச்சு பேசிட்டு இருந்தீங்க.??  இருக்கட்டும் இருக்கட்டும். எனக்கும் ஒரு டைம் வரும் அப்போ உன்னை பாத்துக்குறேன்'  என்றவள்

 திரும்பி அங்கு நின்றிருந்த அரவிந்தனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் உள்ளே சென்றாள்.