கண்ட நாள் முதல் 3
அத்தியாயம் 3
நிலா கத்தியதும், அவன் உடனே சுதாரித்து, அந்த கத்தி வைத்திருந்தவன் மண்டையில் அங்கிருந்த கட்டையை எடுத்து ஓங்கி அடிக்க, அந்த மாமிச மலை சரிந்தது.
உடனே அவன் நிலாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து திக்கு தெரியாமல் ஓட, கடைசியாக ஓடி வந்த இருவரும் மரங்கள் அடர்ந்த காட்டு பகுதிக்குள் வந்து நின்றனர்.
"ரொம்ப தாங்ஸ்ங்க...
நீங்க மட்டும் வரலைன்னா? நா அந்த ஆளுங்க கிட்ட இருந்து தப்பிச்சு இருக்க முடியாது. ரொம்ப நன்றிங்க." என்ற நிலாவை திரும்பி பார்த்தவன்.
"நன்றி எல்லாம் இருக்கட்டும் உன் பேரு என்ன?"
"நிலானி"
"ம்ம்ம்ம்... சரி அவனுங்க கிட்ட நீ எப்படி சிக்குன?" என்ற கேள்வியில் நிலா ஒரு நிமிடம் அவனை உற்று பார்த்தவள்.
"நா...''
"நான்…''
"ஸ்கூல் லீவ்க்கு, இந்த ஊருக்கு வந்தேன். வழிதவறிப் போய் அவனுங்க கிட்ட மாட்டிக்கிட்டேன்" என்று தட்டுதடுமாறி சொல்ல.
அவள் பொய் சொல்வதை அவளின் கண்களே காட்டிக் கொடுக்க, மேற்கொண்டு ஏதுவும் கேட்காமல் அவள் எங்கே போக வேண்டும் என்று மட்டும் கேட்டான் அவன்.
"ப்ளீஸ்! என்னை தேணி வர கொண்டு விட்ருங்க ப்ளீஸ், எனக்கு ரொம்ப பயம இருக்குங்க, ப்ளீஸ்" என்று கெஞ்ச… அவனுக்கு அவளின் குழந்தை முகம் பார்க்கும்போது பரிதாபமாக இருக்க, "சரி வா போலாம்" என்றவனை அவள் நன்றியுடன் பார்க்க. அப்போது தான் அவன் கைகளில் கத்திக்குத்து பட்டது அவள் நினைவுக்கு வர காயத்தை பார்த்தாள்.
"அய்யோ உங்க கையில் ரத்தம் வருது" என்று அலறியவள். தன் துப்பட்டாவை கிழித்து அவன் காயத்தில் காட்டினாள்.
பின் இருவரும் நடக்க ஆரம்பித்து செல்ல... ஒரு இடத்தில் நிலா கால் வழுக்கி விழப்போக. அவன் அவளை இழுத்துப் பிடிக்க முயல. நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி உருண்டவர்கள், ஒரு புதரில் சரிந்தனர்.
அவர்கள் இருவரையும் மரத்தின் வேர்கள் சுற்றி இருக்க, அவன் மீது முழுதாய் ஒட்டியிருந்தாள் நிலா.
அதில் அவள் மிகவும் சங்கடமாக உணர. அவன் அவர்கள் மீது சுற்றி இருந்த வேர்களை மெதுவாக எடுக்க முயற்சி செய்தான். தவறி கூட நிலாவின் உடலில் தான் கரங்கள் படாமல் அவன் வேர்களை எடுத்துக் கொண்டு இருக்க, அவன் கண்ணியத்தை நினைத்து மெய் மறந்து அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் நிலா.
எல்லா வேர்களையும் பிடுங்கி எறிந்தவன். அவளை நோக்கி தன் கைகளை நீட்ட, அப்போதும் நிலா அவனையே பார்த்துக் கொண்டிருக்க.
அவள் முகத்திற்கு நேராக சொடக்கியவன், "ஏய்! என்னாச்சு..??" என்று கேட்க, அதில் சுய உணர்வுக்கு வந்த நிலா, அவன் கையை பிடித்து எந்திரிக்க முயல, நிற்க முடியாமல் தடுமாறி விழப் போனவளை, அவன் இழுத்து தன்னோடு சேர்த்தணைக்க, நிலா ஒரு நிமிடம் தடுமாறி தான் போனாள்.
அவளை தாங்கி பிடித்தவன். அவள் இடது கையை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டு, அவளை தொட வாய்ப்பு கிடைத்தும் அதை செய்யாமல் அவளுக்கு சங்கடம் இல்லாதபடி அவளை தன்னோடு சேர்த்து பிடித்து நடக்க தொடங்கினான்.
நிலாவை கைதாங்கலாக அழைத்து வந்தவன். அந்த காட்டில் தெரிந்த ஒரு இடிந்த மண்டபத்திற்க்குள் நிலாவை அழைத்து சென்று அமர வைத்தான்.
நிலா காலில் அடிபட்ட இடத்தை பிடித்துக் கொண்டு வலி தாங்கமுடியாமல், பற்களால் உதட்டை கடித்து கொண்டிருக்க, நிலாவின் முகத்தை பார்த்தவன், "என்ன ரொம்ப வலிக்குதா'..? என்று கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள், "இல்ல ரொம்ப பசிக்குது" என்றவளை மூக்குமுட்ட முறைத்தவன். "நம்ம இப்ப எங்க? என்ன நெலமயில இருக்கோம். நீ சாப்பாடு பத்தி யோசிக்கிற இல்ல… உன்னை எல்லாம் என்னன்னு சொல்றது" என்று தலையில் அடித்துக்கொள்ள.
"நா நேத்து காலையில் சாப்பிட்டது. என்னை கடத்தின அந்த மூனு எருமையும், என்ன கருமத்த மூக்குல வச்சனுங்களோ, நேத்து காலையில் மயங்குனவ, இன்னைக்கு சாயங்காலம் தான் கண்ணே முழிச்சேன். முழுச்சதுல இருந்து ஓடிக்கிட்டே இருக்கேன். பசி உயிர் போகுது, என்னை என்ன செய்ய சொல்றீங்க?"
“நீ சொல்வதெல்லாம் சரிம்மா. அதுக்கு நா என்ன பண்ண முடியும்? இங்க என்ன ஹோட்டல இருக்கு சாப்பாடு வாங்கி தர... இல்ல பக்கத்துல ஆறு ஓடுத மீன் புடிச்சு குழம்பு வைக்க.''
“நீங்க மீனை புடிச்சு குழம்பு வைங்க, இல்ல டைனோசர் புடிச்சு கூட குழம்பு வைங்க, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல... எனக்கு இப்ப சாப்பிட எது. கிடைச்சாலும் ஓகே தான்"
“ஏது டைனோசர் குழம்பாஆஆஆஆ..
அம்மா தாயே நீ மனுஷி தான…??"
“ம்ம்ம பாத்த எப்டி தெரியுதாம்?"
"அதெல்லாம் பாக்க பொண்ணு மாதிரி தான் தெரியுது."
“அப்புறம் என்ன.? எனக்கு பசிக்குது ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க" என்று அவள் அழ ஆரம்பிக்க...
“ஏய் ஏய்! அழுகாத, சரி நீ இங்கயே இரு. நா போய் ஏதும் கிடைக்குதான்னு பாக்குறேன்." என்று அங்கிருந்து சென்றவன் சிறிது நேரம் கழித்து கையில் சில பழங்களுடன் வந்தவன். அவளிடம் பழங்களை கொடுத்தான்.
பழத்தை உண்ண ஆரம்பித்த நிலா. பாவம் என்று அவனுக்கும் கொஞ்ச பழத்தை கொடுத்தவள். ஓடி வந்ததில் ஏற்கனவே சோர்ந்து போய் இருந்த நிலா சாப்பிட்டு அப்படியே அந்த மண்டபத்திலேயே உறங்கி விட, உறங்கிக்கொண்டிருந்த அவள் உடல் ஏற்கனவே மழையில் நனைந்ததாலும், பயத்தாலும் நடுங்கிக் கொண்டிருந்தது.
அவள் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தவன் நடுங்கும் அவள் உடலை கண்டு தன் கைகளால் அவள் உள்ளங்கை, கால்களை நன்றாக சூடு பறக்கத் தேய்த்துவிட்டான். அவன் என்ன செய்தும் நிலாவின் உடல் குளிரில் நடுங்குவதை நிறுத்தவே இல்லை.
“ஐயோ!? இப்ப என்ன பண்றது? என்ன செஞ்சும் இந்த பொண்ணு உடம்பு குளிர்ல் நடுங்குறது நிக்கவே மாட்டேங்குது. இப்ப என்ன செய்யுறது?" என்று யோசித்தவன். உறங்கும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
குளிரில் நடுங்கும் நிலாவிற்கு தன் அணிந்திருந்த சட்டையை கழற்றி போட்டான். என்ன செய்தும் அவள் உடல் குளிரில் நடுங்குவதை நிறுத்தவில்லை. வேறுவழி தெரியாது அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.
நிலாவும் அவளை அறியாமல் அவனை இரு கைகளாலும் இறுக்கி அணைத்துக்கொண்டாள். அவனை அணைத்தபடியே உறங்கியவள். சிறிது நேரம் கழித்து கண்களை திறக்க, தன் அருகே தன்னை அணைத்தபடி உறங்கிய அவன் முகத்தை பார்த்தவள் இதழ் அவளையும் அறியாமல் புன்னகைத்தது.
"நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது. சரியான நேரத்தில வந்து என்னை காப்பாத்துனீங்க. நீங்க மட்டும் வரலைன்னா? நினைக்கவே பயமா இருக்கு. ஆனா, நா உங்க கிட்டயே பொய் சொல்லிட்டேன். மன்னிச்சுடுங்க, எனக்கு வேற வழி தெரியல, ரொம்ப சாரி" என்று உறங்குபவனுடன் பேசியவள் மீண்டும் உறங்கி போனாள்.
வானம் அரைகுறையாக விடிந்ததிருக்க கண்களை முதலில் கண்விழித்த அவன் நிலாவைப் பார்க்க அவள் அமைதியாக உறங்கி கொண்டிருந்தாள். கள்ளம் கபடமற்ற அவள் குழந்தை முகம் அவன் மனதில் பசக் என்று ஒட்டி கொண்டது. உறங்கும் அவளை அவன் தட்டி எழுப்ப கண்களை திறந்தவள் முதலில் திகைத்து. பின் நேற்று நடந்தது நினைவு வர தான் அருகில் இருந்தவனை நன்றியோடு பார்த்தவள். "ரொம்ப நன்றீங்க நேத்து நீங்க மட்டும் இல்லாம போயிருந்த என் நிலைமை என்னாகி இருக்குமோ? ரொம்ப நன்றி" என்றாள் கண்களில் நீருடன்.
“பரவாயில்லை விடு. இப்ப உன்னால நடக்க முடியும?? கால் வலி எப்டி இருக்கு??"
“இப்ப வலி இல்ல என்னால் நடக்க முடியும்"
“ம்ம்ம் சரி, அப்ப கிளம்பு பஸ் ஸ்டாண்ட் போவோம். உன்னை உன் ஊர் பஸ்ஸில் ஏத்தி விட்டு நான் கிளம்புறேன்" என்றவுடன் ஏனோ நிலா முகம் வாடிவிட்டது. தன் மீது போர்த்தியிருந்த அவன் சட்டையை எடுத்தவள். அந்த சட்டை பட்டனுடன் தன் கழுத்து சங்கிலி மாட்டியது தெரியாமல் அவள் வேகமாக இழுக்க சங்கிலி அறுந்து சட்டையில் சிக்கியது. அது தெரியாது அவள் சட்டையை அவனிடம் கொடுக்க, அவனும் சட்டையை வாங்கி மாட்டிக் கொண்டு கிளம்பினான். நிலாவும் எதுவும் பேசாமல் அவனுடன் நடந்தாள்.
இருவரும் நடந்து காட்டை கடந்து வெளியே வந்தனர். ஒரு இடத்தில் நிலா திடீரென அவன் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடிப்போய் ஒரு சுவரின் பின்னால் ஒளிந்து கொண்டாள். அவன் "என்ன?" என்று கேட்க நிலா கை நீட்டிய இடத்தில் அந்த மூன்று கடத்தல் தடியங்கள் நின்று கொண்டிருந்தனர். நிலா பயத்தில் அவன் கைகளை இருக்கி பிடித்து கொண்டாள். அவள் கை நடுக்கமே அவள் பயத்தை அவனுக்கு உணர்த்த, என்ன செய்வது என்று யோசித்தவன் சுற்றும் முற்றும் பார்த்தவன், அங்கு இருந்த ஒரு லாரியில் அவளை ஏற்றியவன் தானும் அவளுடன் ஏறிக்கொண்டான்.
லாரி அங்கிருந்து கிளம்பி ரொம்ப தூரம் சென்ற பிறகும் கூட நிலாவின் நடுக்கம் குறையவில்லை.. அவள் கைகளை இறுக்கி பிடித்தவன், "ஒன்னு இல்ல, நம்ம ரொம்ப தூரம் வந்துட்டோம். இனி ஒன்னும் ஆகாது நீ பயப்படாத, சீக்கிரம் உன் வீட்டுக்கு போய்டலாம். உன் அம்மா, அப்பாவை பார்க்கலாம்" என்றதும் அவள் சட்டென்று அவனை திரும்பி பார்க்க.. அவன் "என்ன" என்று கேட்க "ஒன்றும் இல்லை" என்று தலையை குனிந்து கொண்டாள்.
அதன் பின் லாரி ஒரு இடத்தில் நிற்க இருவரும் அதிலிருந்து இறங்கினார். பின் அங்கு இருந்தவர்களிடம் வழி கேட்டு பஸ் ஸ்டாண்டை வந்தடைந்தனர். அங்கு தேணி செல்லும் பஸ்ஸில் அவளை உட்கார வைத்து தன்னிடம் இருந்த பணத்தை அவளிடம் கொடுத்து "பத்திரம ஊருக்கு போ. வழியில எங்கயும் இறங்காத, இந்த காச ஊருக்கு போற வரை செலவுக்கு வச்சிக்கே" என்றவன். "நா கிளம்புறேன் நீ பத்திரம போ" என்று அங்கிருந்து புறப்பட்டான்.
நிலா கிளம்பியவன் கைகளை இறுக்கி பிடித்தாள் "ப்ளீஸ் எனக்கு ரொம்ப பயம இருக்கு என்னை தனிய விட்டுட்டு போகாதீங்க. ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்ச, அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், "இப்ப என்னை என்ன தான்டி செய்ய சொல்ற நீ? கோபமாக கத்த.
அழுது வடிந்த கண்களை துடைத்தபடி, “ப்ளீஸ் ஊருக்கு போற வரைக்கும் என் கூட வாங்க ப்ளிஸ்" என்க
அவன் என்ன நினைத்தானோ சரி என்று அவளுடன் பயணிக்க முடிவு செய்தான்.
இருவரும் பேருந்தில் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்தனர். நிலா அவன் கூட வருகிறான் என்ற தைரியத்தில் நிம்மதியாக அவன் தோளில் சாய்ந்தபடியே உறங்கி இருந்தாள். அவன் உறங்கும் நிலாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். வழியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்க நிலாவை அழைத்துச் சென்று, இருவரும் சாப்பிட்டு முடித்து மீண்டும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
பயணம் முழுவதும் நிலா அவன் கைகளை விடவே இல்லை.. இறுக்கி பிடித்துக் கொண்டே வந்தாள். தன்னைப் பிடித்திருந்த அவள் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ, "இந்தப் பொண்ண அவங்க ஊர்ல பத்திரம கொண்டு போய் சேர்த்துட்டு இவள விட்டு உடனே போடணும்" என்று நினைத்தவன் அமைதியாக பயணத்தை தொடர்ந்தான்.
ஒருவழியாக இருவரும் தேணி வந்து சேர்ந்தனர்.
அவன் நிலாவை அழைத்துக்கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கியவன் நிலாவிடம் உன் ஊருக்கு வந்தாச்சு இனி ஒரு பிரச்சனையும் இல்ல, பயப்படாம நீ உன் வீட்டுக்கு போ நான் கிளம்புறேன் என்றதும், நிலா கண்ணீரோட அவனை பார்த்தவள், “ப்ளீஸ் இவ்ளோ தூரம் வந்துட்டீங்க, என் வீடு வரைக்கும் வாங்களேன்" என்று கெஞ்ச
“இல்ல மா எனக்கு நிறைய வேலை இருக்கு நான் இப்படியே கிளம்புறேன். நீ போ" என்றவன் கையை பிடித்து கொண்டவள், “ப்ளீஸ் தயவு செஞ்சு வீடு வரை வாங்க. ப்ளீஸ்" என்று மீண்டும் கெஞ்ச.
அவள் கையை உதறியவன், “ப்ளீஸ் நிலானி, புரிஞ்சுக்கே நான் எனக்கு இருந்த எல்லா வேலையையும் விட்டுட்டு உனக்கு துணைக்காக தான் இவ்ளோ தூரம் வந்தேன். எனக்கு நிறைய வேலை இருக்குமா, நான் இப்டியே கிளம்புறேன், ப்ளீஸ் நீயும் கிளம்பு" என்று அவன் அழுத்தமாக சொல்ல.
நிலாவுக்கு என் சொல்வதென்று
தெரியவில்லை ஏதோ ஒன்று அவள் இதயத்தை அழுத்தியது. அவனை விட்டு பிரியப் போகிறோம் என்ற உணர்வு அவளை உள்ளுக்கு உலுக்கிக்கொண்டிருந்தது. நேற்று இரவு அவனை பார்த்தது முதல் இப்ப வரை நடந்த அனைத்து சம்பவங்களும் அவள் கண் முன் வந்து போக, அவள் கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை.
“சரி என் கூட தான் வர முடியாதுன்னு சொல்லிட்டீங்க, அட்லீஸ்ட் உங்க பேர் என்ன? அதயாது சொல்லுங்க" என்று கண்ணீர் வடியும் கண்களுடன் அவள் கேட்க.
“வேணாம் நிலானி. நீ என் பேரை தெரிஞ்சுக்க வேணாம். உனக்கு என் பேரு ஞாபகம் வரும் போதெல்லாம் நடந்த இந்த சம்பவமும் ஞாபகம் வரும். தேவையில்லாம உனக்கு தான் மனக்கவலை. அதனால நீ என் பேரை தெரிஞ்சுக்காம இருக்கிறது தான் நல்லது. டைமாச்சு நீ கெளம்பு உங்க வீட்ல உன்னை காணாம எல்லாரும் தேடிட்டீருப்பாங்க. போ" என்றவன் நிமிர்ந்து பார்த்த நிலாவுக்கு ஒன்னும் புரியவில்லை, ஏதோ ஒன்று தன் கையை விட்டுப் போவது போல் உணர்ந்தவள் ஒரு தவிப்போடு அவனை பார்க்க.
“சரி இங்க இருந்து உன் வீட்டுக்கு எப்படி போக போற நீ. நான் வேணும்ன, உனக்கு ஆட்டோ எதுவும் புடிச்சு தரட்டும" என்று கேட்க
நிலா பதில் பேசாது அமைதியாகவே இருந்தாள்.
“ஏய்…! நான் கேட்டுட்டே இருக்கேன் நீ அமைதியா இருந்த என்ன அர்த்தம்? வீட்டுக்கு எப்படி போக போற? சொல்லு" என்று கோபமாக கத்த...
அப்போதும் அவள் எதுவும் பேசவில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்து, பொறுமை இழந்தவன் அங்கு சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் நிலாவை ஏற்றி விட்டு, ஆட்டோ டிரைவரிடம், "இந்த பொண்ண, அவ சொல்ற இடத்தில் கொண்டு போய் விட்டுடுங்க" என்றவன் ஆட்டோவுக்கான பணத்தை டிரைவரிடம் கொடுத்துவிட்டு நிலாவிடம் "நா போறேன். நீ பத்திரம வீட்டுக்கு போ" என்றவன் கிளம்பிவிட்டான்.
நிலா கண்ணீருடன் ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள். ஆட்டோ கொஞ்ச தூரம் சென்று நின்றது. இவன் என்னவோ என்று ஆட்டோவை திரும்பி பார்க்க நிலா ஆட்டோவிலிருந்து இறங்கி அவனை நோக்கி ஓடிவந்து அவன் முன் நின்றாள்.
“என்னச்சி நிலானி" என்றவனை உற்று பார்த்த நிலா. அவன் எதிர்பார்க்காத நேரம் தன் இதழ்களை அவன் கன்னத்தில் பதித்தாள். இதை எதிர்பார்க்காதவன் சற்று தடுமாறித்தான் போனான்.
அவன் கன்னத்தில் பதிந்திருந்த தன் இதழ்களை மெதுவாக எடுத்தவள். "ஐ லவ் யூ. நான் சொல்றது சரிய? தப்பான்னு எனக்கு தெரியல... ஆனா, இப்ப இத சொல்லனும்னு தோணுச்சு, சொல்லிட்டேன்" என்றவள் கண்ணீரோடு திரும்பிப் பார்க்காமல் ஓடியவள், ஆட்டோவில் ஏறி சென்று விட்டாள். அவனோ அவள் சென்ற திசையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
நிலா சொன்ன அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அரவிந்துக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
"அதுக்கப்புறம் நீங்க அந்த பையனை பார்க்கவே இல்லையா நிலா..??" என்று கேட்க.
நிலா. " இல்லை" என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
நிலாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அரவிந்த். "நீ சொல்றது உனக்கே சரிய படுத நிலா? அவன் பேரு தெரியாது. எந்த ஊருன்னு தெரியாது. அப்டிப்பட்ட ஒருத்தனுக்காக, நீ வாழ்க்கை முழுசும் வெயிட் பண்ணிட்டிருக்க போறேன்னு சொல்றீயே? இது உனக்கே சின்னப்புள்ளத்தனமா தெரியல?" என்றவனை பார்த்து வெறுமையாக சிரித்த நிலா, "உங்களுக்கு அப்டி தெரியலாம். ஆனா, எனக்கு அப்டி இல்லை. அன்னைக்கு அவர்கிட்ட நான் சொன்ன ஐ லவ் யூ. அப்ப இருந்த எமோஷன்ல, அவர் என்னை விட்டு போறருன்ற தவிப்புல சொன்னதுன்னு தான் நானும் நெனச்சேன்.. நாளாக நாளாக அது மாறிடு்ன்னு நெனச்னேன். ஆனா, இப்ப வரை அவரை என்னால மறக்க முடியல.. இன்னும் சொல்லனும்ன எனக்கு அவர் முகம் கூட சரிய ஞாபகம் இல்ல. இப்ப அவர் என் கண்ணுக்கு முன்ன வந்து நின்ன கூட அவரை என்னால கண்டுபிடிக்க முடியாது. அவ்ளோ ஏன்? நான் சொன்ன ஐ லவ் யூ க்கு கூட காதல்னு அர்த்தமில்ல. அப்டியிருந்தும் இந்த ஒன்பது வருஷத்தில் ஒரு நாள்கூட அவர் ஞாபகம் எனக்கு வராம இருந்ததில்ல. அப்டியிருக்க நான் எப்படி இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க முடியும்னு நீங்க நெனைக்கிறீங்க?"
"நீ சொல்றது சரிதான் நிலா. ஆனா, நடைமுறைக்கு நீ சொல்றது சரிப்பட்டு வரும்னு நினைக்கிறியா..?"
“அத பத்தி எனக்கு கவலையில்ல. என்னால வேற ஒருத்தரை நெனச்சு பார்க்க முடியாது. அவ்ளோதான்."
அரவிந்த் அவளையே உற்று பார்த்தான், "இது மட்டும் தான் நீ கல்யாணம் வேணாம்னு சொல்ல காரணம நிலா?" என்றவனின் குரலில் இருந்த மாறுதல் நிலாவை ஏதோ செய்ய. அதுவரை அவன் முகம் பார்த்து பேசிவள். சட்டென்று தலையை குனிந்து கொண்டு "ஆமாம்" என்றாள். அவளின் அந்த மாற்றமே அவள் சொல்வது பொய் என்று சொல்ல.
அரவிந்த் இழுத்து மூச்சு விட்டவன், “சரி நிலா டைம் ஆச்சு நம்ம கெளம்பலாம்" என்பவனிடம் "எதுவுமே சொல்லாமலே போறீங்களே" என்ற நிலாவை ஆழ்ந்து பார்த்த அரவிந்த்,
“சாரி நிலா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. நா கொஞ்சம் யோசிக்கனும். ஐ நீட் சாம் டைம், முடிஞ்ச நீயும் நல்ல யோசி. நீ எடுத்திருக்க முடிவு சரியான்னு..."
“அதுக்கு அவசியம் இல்லை மிஸ்டர். அரவிந்த். அப்புறம் நீங்க என்ன வேணாம்னு சொல்றது தான் உங்களுக்கு நல்லது. மீறி ஏதும் மாத்தி யோசிச்சீங்க, அப்புறம் நடக்குற பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல.. நா கிளம்புறேன்" என்றவள் அங்கிருந்து செல்ல.
அரவிந்த் போகும் நிலாவையே பார்த்து கொண்டிருந்தான்.
இங்கு வீட்டிற்கு வந்த நிலாவை பிடித்துக் கொண்ட கலை, "என்னடி என்னச்சு? அந்த பையனை பார்த்திய? பேசினீய? என்ன முடிவு பண்ணி இருக்கீங்க.." என்று ஆர்வமாக கேட்க.
“ம்ம்ம்ம் எல்லாம் பார்த்தேன்.. கேக்க வேண்டியத நல்லா நறுக்குனு கேட்டுட்டு, சொல்லவேண்டியதையும் நல்லா நச்சுன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். இனி அந்த பையன் சொல்றத வச்சு தான் என்னோட ஆக்க்ஷன் என்னன்னு பாக்கணும்" என்று சொன்னவள் ஏதோ சிந்தனையில் இருக்க. "என்னது ஆக்க்ஷன? என்ன டி சொல்ற?" என்று கேட்டுக்கொண்டே வந்தாள் சந்தியா. சந்தியாவின் குரலில் சிந்தனை கலைந்த நிலா, "நா எப்படி ஆக்க்ஷன்னு சொன்னேன். நா டெசிஷன்னு தான் சொன்னேன்."
“ஏய் பொய் சொல்லாத. நான் நல்லா கேட்டேன். நீ ஆக்க்ஷன்னு தான் சொன்ன. அம்மா நீயே சொல்லும்மா, இவ என்ன சொன்னன்னு?"
“ஏய் ஏன்டி இது? இப்டி சப்ப மேட்டர்ருக்கு சண்ட போறீங்க?."
“ஏது சப்பா மேட்டரா!! அம்மா.. என்ன பேசுறா நீ.." என்று சந்தியா அலற...
“ச்சீ கருமம். உங்க இரண்டு பேர் கூடவும் பேசி பேசி எனக்கு உங்க பாஷை வருது ச்சீ..."
“அய்யோ! அத விடும்மா. இப்ப இவ ஆக்க்ஷன் சொன்னால? இல்ல டெசிஷன்னு சொன்னால? அத கேளு முதல்ல. அவ சொன்னது ஏ காதுல நல்லா கேட்டுச்சும்மா"
“உன் காதுல கேட்ட அதை நான் சொன்னேன்னு ஆகிடுமாடி, போடி டமாரம்" என்று நிலா கத்த
“நீ போடி பிராடு.." என்று சந்தியா கத்த
“ஏய்! நிறுத்துங்கடி உங்க சண்டைய!... எப்ப பாரு கத்திட்டு, ச்சீ போங்கடி அந்தாண்டா."
சந்தியா, “கலை நீ வேணும்ன பாரு? இவ ஏதோ பிராடு வேலை பண்ற.. உஷார் அவ்வளவு தான் சொல்லிபுட்டேன்''
“எடு அந்த வெளக்கமாத்த… இதுதான் சமயம்னு பேர் சொல்லிய கூப்புடுறிய நீ! உன்ன" என்று கலை அடிக்க வர சந்தியா சைக்கிள் கேப்பில் எஸ்கேப் ஆகி ஓடிவிட்டாள்.
“இந்த பயபுள்ளகிட்ட ரொம்ப உஷாராக இருக்கணும். பக்கி முகத்தை பாத்தே, மைன்ட கேட்ச் பண்ற" என்று நினைத்தவள் தன் அறைக்கு சென்று கட்டிலில் அமர்ந்து, இன்று நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்க்க, "ஏன்டா என் வாழ்கையில வந்த? இந்த ஓம்பது வருஷம, உன்னை மறக்க முயற்சி பண்ண ஒவ்வொரு முறையும் உன் ஞாபகம் இன்னும் அதிகம் ஆகுதே தவிர குறையவே இல்ல. இப்பவரை உன் முகம் எனக்கு ஞாபகம் வரவே இல்ல. ஆனா, என் மனசு முழுக்க உன்னோட நினைப்பு தான் நெறஞ்சு கெடக்கு. ஏன் டா என்னை இப்படி பண்ண? உன் பேரு கூட சொல்லாம போய்டியேடா" என்று புலம்பினாள்.
அதோடு அரவிந்த் கேட்ட இன்னொரு கேள்வி, "நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்ல இந்த காதல் மட்டும்தான் காரணம நிலா..?? என்ற கேள்வ நிலா காதுகளில்
மீண்டும் மீண்டும் ஒலிக்க. பல வருடங்களுக்கு முன் புரையோடிப் போயிருந்த நிலாவின் காயம். இன்று அரவிந்த் கேட்ட கேள்வியால் மீண்டும் புதிதாய் குத்திக்கிழித்து வலியை ஏற்படுத்தியது.