ஆழியின் ஆதவன் Epilogue

 


EPILOGUE


இரண்டு வருடங்களுக்குப் பிறகு,

ஆதவன் வீடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

திடீரென்று "அண்ணா" என்று மேலிருந்து கத்தும் ஓசை கேட்க, விஷ்ணுவும் முகிலும் பாய்ந்து மாடிக்கு ஓடிச்சென்று கதவை திறந்து பார்க்க, அங்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிய முகத்தை பாவம் போல் வைத்திருந்தவள் முகத்தை பார்த்ததும் இருவரும் ஆதவ் மீது பாய்ந்தனர்.

"டேய் என்ன பண்ண அவள, ஏன் அவ அழுகுறா… அதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், நான் என் தங்கச்சிய என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு… நீ தான் எம் பொண்டாட்டி என்கூட தான் இருப்பா, நான் அவளை கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்குறேன்னு சொல்லிட்டு, இப்ப அவளை கண்கலங்க வச்சிருக்க ராஸ்கல்… இது சரிபட்டு வராது… நான் இப்பவே என் தங்கச்சிய என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்" என்று விஷ்ணு குதிக்க, ஆதவ் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.

"டேய் ச்சீ அடங்கு… மொதல்ல இங்க என்ன நடந்ததுன்னே உனக்கு தெரியாது… நீயா ஒன்ன நெனச்சிட்டு சும்மா தைய்யதக்கான்னு குதிச்சிட்டு இருக்க. முதல்ல உன் அருமை தங்கச்சி கிட்ட, அவ எதுக்கு அழறான்னு கேளு" என்றவன் அவளிடம் திரும்பி,

"அடியேய் புருஷன் திட்டு வாங்கிட்டு இருக்கேன், நீ உக்காந்து ரசிச்சிட்டு இருக்கீயா…?" என்று அவளை முறைத்த ஆதவனை முதுகில் செமத்தியாக ஒரு அடி  போட்ட முகில், "டேய் என்னடா நாங்க இருக்கும் போதே, மறுபடியும் அவளை திட்ற," என்ற முகில் திரும்பி, "நீ சொல்லுடாம்மா, இவன் என்ன பண்ணான்?" என்று அக்கறையாக கேட்ட,

"இவரு ஒன்னும் பண்ணலன்னா, உங்க மருமகன் தான் வயித்துல பலமா உதைச்சிட்டான். அதான் கத்திட்டேன்" என்று சொல்ல, ஆதவ் திரும்பி புருவம் உயர்த்தி, "இப்ப என்னடா சொல்றீங்க?" என்று பார்க்க, விஷ்ணுவும் முகிலும் திருதிருவென முழித்தனர்.

விஷ்ணு  அவள் அருகில் குனிந்து, "இங்க பாரு மருமகனே… ஒழுங்கா நல்ல புள்ளையா இருக்கணும். இன்னொரு வாட்டி எங்க தங்கச்சிய உதைச்சேன்னு வை, அவ்ளோதான்… நீ பொறந்து வந்ததும் நாங்க உன்னை உதைப்போம்" என்ற விஷ்ணு தலையில் கொட்டி, அவன் காதைப் பிடித்து திருகியவள்,

"என் புள்ளைய நீங்க உதைப்பீங்களா, பிச்சு பிச்சு" என்று விரல் நீட்டி  முறைக்க,

"டேய் ஆதவ் பாருடா இவள, அண்ணன்னு மரியாதை இல்லாம எப்டி பேசுறானு" என்று விஷ்ணு கம்ப்ளைன்ட் செய்ய, "கிளிக்கு ரெக்கை முளச்சிடுச்சு,  பறந்து போயிடுச்சு" என்று சிவாஜி போல்  நெஞ்சில் குத்திக் கொண்ட முகிலை பார்த்து, அப்போது  தான் அங்கு வந்த மீராவும் சைத்ராவும் கூட சிரிக்க, நிறைமாத வயிற்றை பிடித்துக் கொண்டு வாய்விட்டு சிரித்தாள் ஆழினி.

பட்டுப்புடவையில், தலை நிறைய பூ வைத்து, கழுத்தில் ஆதவ் கட்டிய தாலியுடன் இன்னும் சில நகைகளும் இருக்க, நடு நெற்றியில் பொட்டும், உச்சி வகிட்டில் குங்குமம் வைத்து தாய்மை பூரிக்கும் அழகில், அழகு சேர்க்கும் விதமாக அவள்‌ புன்னகை கன்னத்தில் மின்ன, தேவதை போல் இருந்தவளைப் பார்த்து அனைவருக்கும் மனம் நிறைந்தது‌.

"சரி சரி வளைகாப்புக்கு நேரமாச்சு, கீழ அத்தை கத்திட்டு இருக்காங்க, நீங்க மூணு பேரும் போங்க நாங்க இவளை கூட்டிட்டு வரோம்‌." என்று மீராவும் சைத்ராவும் அவர்களை விரட்டி விட்டு ஆழியை தயார் செய்யும் வேலையில் இறங்கினர்.

"என்ன நாத்தனாரே, சும்மா பையன் உள்ள உதைச்சதுக்கே, அண்ணனுங்க ரெண்டு பேரும் வரிஞ்சு கட்டிட்டு மருமகன் கூட சண்டைக்கு வந்துட்டாங்க" என்று சொல்லி சிரிக்க, ஆழிக்கும் சிரிப்பு வந்தது.

"ஆமா மீரா. அவங்க ரெண்டு பேருக்கும் நான்னா ரொம்ப உயிர். விஷ்ணு கூட பரவாயில்ல என் கூட பொறந்த அண்ணா..‌. ஆனா, முகில பாரு… விஷ்ணு அண்ணாவை விட அவருக்கு தான் என் மேல பிரியம் அதிகம். அவர் மட்டும் இல்ல நீங்க ரெண்டு பேரும் கூட என் மேல எவ்ளோ பாசமா இருக்கீங்க… என்னை சுத்தி எல்லாரும் என்னை நேசிக்கிறவங்கள இருக்கீங்க… அதுவும் அவரு… என் மேல உயிரா இருக்காரு… அதுக்கு சாட்சி இந்த வளைகாப்பு.  நான் கூட சொன்னேன் முதல் பாப்பாக்கு தான் பொதுவா இதெல்லாம் பண்ணுவாங்க, ரெண்டாவது பாப்பாக்கு எதுக்குன்னு. ஆனா, அவர் தான் நடந்த அக்சிடென்ட்ல உனக்கு எல்லாம் மறந்துப் போச்சு, உன்னை பத்தியே உனக்கு ஞாபகம் இல்ல, உன்னோட பேர் கூட நாங்க சொல்லி தான் உனக்கு தெரியும். நமக்கு கல்யாணம் நடந்தது, ஏன் நம்ம பொண்ணு நிலா பொறந்தது கூட உனக்கு ஞாபகம் இல்ல… அதெல்லாம் ஸ்வீட் மெமரிஸ் அதை நம்ம ஆயுசுக்கும் நினைவுல வச்சிக்கணும்‌. அதுக்காக மறுபடியும் நம்ம கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி, என்னை மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு, அதே மாதிரி நிலா பாப்பாவை கன்சீவ் ஆனது, அவ பொறந்தது கூட எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா, எல்லாத்தையும் மறந்த எனக்கு, எம் பொண்ணு வெண்ணிலா முகம் மட்டும் ஞாபகம் இருந்துச்சு தெரியுமா" என்று கர்வமாக சொன்னவளை பார்க்கவே மீரா, சைத்ராவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது‌.

"எனக்கு ஸ்வீட் மெமரிஸ் இருக்கணும்னு தான் மறுபடியும் எனக்கு வளைகாப்பு பண்றாரு… நான் கூட பலமுறை அவர்கிட்ட கேட்டேன். நம்ம கல்யாண ஃபோட்டோ, சீமந்தம் ஃபோட்டோஸ் இருக்குமே அதை பாக்கணுமனு. ஆனா, சென்னையில இருந்து இந்த ஊருக்கு ஷிஃப்ட் ஆகும்போது அதெல்லாம் காணாம போய்டுச்சாம். அதான் எல்லாத்தையும் புதுசா பண்றேன்னு சொல்லுவாரு" என்று புருஷன் புகழ் பாடியவளை, முழுதாக தயார் செய்திருந்தனர் அவள் ஆசை அண்ணிகள் மீராவும்‌ சைத்ராவும்.

ஆதவ் நான் தான் என் பொண்டாட்டிக்கு முதல்ல நலங்கு வைப்பேன் என்று அடம்பிடித்து அவளுக்கு சந்தனம் பூசி விட, வெண்மதி அம்மா உள்ளம் நிறைந்தது‌.

ஆக்சிடென்ட் ஆகி பிழைப்பாளா? மாட்டாளா? என்று ஒவ்வொரு நொடியும் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்க, பத்து நாட்கள் கழித்து கண்விழித்த ஆழினிக்கு அவளைப் பற்றிய‌ அனைத்தும் மறந்திருந்தது.

தலையில் பட்ட‌ பலமான அடியால், அவள் மூளை நரம்புகள் பாதிக்கப்பட, இனி அவளுக்கு பழைய ஞாபகங்கள் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று டாக்டர் சொல்லி விட, அவள் உயிர் பிழைத்ததே போதும் என்று அனைவரும் நிம்மதி கொண்டனர்.

புதிதாகப் பிறந்த குழந்தை போல் இருந்த ஆழியை அனைவரும் ஆஷாவின் இடத்தில் வைத்தனர். நிலாவுக்கு தாயாக, ஆதவ்வுக்கு மனைவியாக, விஷ்ணு முகிலுக்கு தங்கையாக, ஆஷாவின் அம்மா லட்சுமிக்கு மகளாக மீண்டும் பிறந்த ஆழிக்குள், ஆஷாவின் அடையாளத்தை விதைத்தனர்.

தன் தகுதியை நினைத்து ஆதவ்வை விட்டு விலக நினைத்த ஆழி, தன்னைப் பற்றி மறந்தது கூட ஒரு வகையில் நல்லது என்று அனைவரும் அமைதியாக இருந்துவிட்டனர்.

ஆதவ், ஆழி திருமணம் முடிந்த அடுத்த ஒரு மாதம் கழித்து மீரா விஷ்ணு, முகில் சைத்ரா திருமணம் நடந்தது. சென்னையில் இருந்தால் ஆஷா பற்றி யாராவது ஆழியிடம் சொல்ல வாய்ப்பு இருக்கிறது என்று ஆதவ் அவளை அழைத்துக் கொண்டு வேறு ஊருக்கு வந்து விட்டான்.

ஆதவ்வை ஆழி ஏற்காமல் இருந்ததற்கு அவன் போலீஸ் என்பதும் ஒரு பெரிய காரணமாக இருக்க, ஆழிக்காக தன் வேலையை விட்டுவிட முடிவு செய்திருந்தான் ஆதவ். அந்த செய்தியை திருமண பரிசாக ஆழிக்கு சொல்ல நினைத்தான். ஆனால், இப்போது நிலைமை வேறு மாதிரி மாறி விட்டாலும்,  ஒருவேளை ஆழிக்கு என்றாவது பழைய விஷயங்கள் ஞாபகம் வந்தால் அப்போது அவளுக்கு ஆதவ்வின் வேலை ஒரு உறுத்தலாக இருக்க கூடாது என்று ஆதவ் தன் வேலையை ராஜினாமா செய்திருந்தான்.

விஷ்ணுவும் முகிலும் கூட நாளை மீரா, சைத்ராவுக்கு அவர்கள் வேலையால் எந்த வித குற்றவுணர்ச்சியும் வந்துவிடக் கூடாது என்று அவர்களும் வேலையை விட்டு விட்டு ஆதவ்வுடனேயே வந்து விட்டனர். ஏற்கனவே மூவரும் செய்துக் கொண்டிருந்த பிஸ்னஸை இன்னும் விரிவு படுத்தி கொண்டு ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.

வளைகாப்பு நல்லபடியாக முடிய, சோர்ந்து போயிருந்தாள் ஆழி.

"அம்மா" என்று ஓடி வந்த நிலா ஆழி வயிற்றை கட்டிக்கொள்ள, அவள் பின்னால் வந்த விஷ்ணுவின் மகள் அபியும், முகிலின் மகன் ஆரவ்வும், "அத்த அத்த" என்று ஆழியை கட்டிக் கொண்டனர்.

"அம்மா தம்பி பாப்பா எப்ப வரும்" என்று நிலா கேட்க, "ஆமா ஆமா, குட்டி பாப்பா எப்ப வதும் அத்த?" அபியும், ஆரவ்வும் ஆழி வயிற்றில் கிச்சு கிச்சு மூட்ட,

"ஏய் நீங்க இப்படியே  கிச்சு கிச்சு பண்ணா கூச்சம் தாங்காம, குட்டிப்‌ பையன் இப்பவே வெளிய வந்துடுவான்" என்று சொல்லி முடிக்கும் முன்னே, ஆழியின் நடு முதுகில் சுள்ளென்று வலி எடுக்க, வலியில் கத்திய அவள் சத்தத்தில் முழு குடும்பமும் பதறி விட்டது.

சிறிது நேரம் அனைவரையும் தவிக்கவிட்ட ஆழி, ஆதவ்வின் மகன், தன் பிஞ்சு பாதத்தை பூமியில் வைக்க, அந்த அன்பான குருவிக் கூட்டில்  அழகாக இன்னொரு உயிரும் சேர, அவர்கள் மகிழ்ச்சி பன்மடங்கு பெருகியது. இனி எல்லாம் சுபமே என்று அனைவரும் நிம்மதி கொள்ள, நாமும் மகிழ்ச்சியோடு செல்வோம்.

                          **************** சுபம் *****************