அழகிய தமிழ் மகள் 1



அழகி 1



இருளைக் கிழித்துச் சூரியன் வெளியே வரக் காத்திருக்கும் விடியல் காலைப் பொழுதில், இருட்டைக் கிழித்து, வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது அந்தக் கார். தன் மொபைலில் இளையராஜாவின் பாடல்களை மெல்லிய ஓசையில் ஒலிக்க விட்டு, இன்னும் கொஞ்சம் நேரத்தில் விடியக் காத்திருக்கும் கூர்க்கின் (குடகு) அமைதியான அழகை ரசித்துக் கொண்டு வந்தான் ஆதித்யன்.


கூர்க் அல்லது குடகு என்றழைக்கப்படும் மலைப் பிரதேசம், கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்று. கர்நாடக மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலநாட் பிரதேசத்தில் இது உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டரிலிருந்து 1715 மீட்டர் வரையான உயரத்தில் அமைந்துள்ளது.


இந்த மலைப்பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளமான பசுமை பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து காணப்படும் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் மற்றும் சலசலவென ஓடும் ஓடைகள் என்று பல விதமான இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால், இது "கர்நாடகாவின் காஷ்மீர்" என்றும், "இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்றும் அழைக்கப்படுகிறது.


கூர்க் பிரதேசம் ஒரு புராதானமான அழகை கொண்டுள்ள ஆரவாரமில்லாத அமைதியான நகரம் ஆகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எந்த விதமான சந்தடியுமற்ற, மிதமான வேகத்தில் நகரும் ஒரு வாழ்க்கைச் சூழலை, மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்கு மற்றும் கிழக்குப் பக்க சரிவுகளின் வியக்கத்தக்க இயற்கை காட்சிகளுடன் இங்குப் பார்த்து ரசித்து அனுபவிக்கலாம். அமைதியான சூழலில் அழகாக வாழ்க்கை வாழ ஏற்ற இடம் கூர்க்.


தன்னுடைய புதிய வேலையில் சேர்வதற்காகக் கூர்க்கு சென்று கொண்டிருக்கிறான் ஆதித்யன். தன் நண்பன் ஒருவன் மூலம் கூர்க்கில் உள்ள காபி எஸ்டேட்டில் அவனுக்கு வேலை கிடைக்க, கிளம்பி விட்டான், இந்தியாவின் ஸ்காட்லாந்து நோக்கி.


ஆதித் தமிழன் என்று உரைக்கும் கவர்ந்து இழுக்கும் தேன் நிறம், வலிமையான உடல்வாகு, 6'2 உயரம், கருத்த மீசை, அதோடு ஒட்டி உறவாடும் ட்ரிம் செய்த தாடி, என்னிடம் கொஞ்சம் உஷாராக இரு என்று எச்சரிக்கும் கூர்மையான பார்வை, அடங்காமல் காற்றில் அலையும் அடங்கப்பிடாரி தலைமுடி, எதையும் சாதிக்க முடியும் என்ற திமிரும், தைரியமும் கொண்ட மனதுடைய முப்பது வயது ஆண்மகன்.


விடிந்து சூரிய வெப்பத்தில் பனித்துளி கரைந்து, வானம் வெளிச்சம் போர்த்தி இருந்த பொழுது, இயற்கை எழில் கொஞ்சும் காபி எஸ்டேட்டை ரசித்துக் கொண்டே நடந்தான் ஆதித். இனி இங்குத் தான் அவனுக்கு வேலை. அந்தக் காபி எஸ்டேட் ஓனருக்கு இந்தக் காபி எஸ்டேட்டோடு சேர்த்து, டீ எஸ்டேட்டும், ஆரஞ்சுத் தோட்டமும் உண்டு. இந்த எல்லா எஸ்டேட் மற்றும் தோட்டத்தைப் பார்த்துக் கொள்ளும் மேனேஜருக்கு உதவியாகத் தான் ஆதித் இங்கு வந்திருக்கிறான்.


அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்காக இருந்த வீடுகளில் தனக்காக ஒதுக்கப்பட்ட வீட்டிற்குச் சென்றவன், ஹீட்டரை போட்டு கொதிக்கும் தண்ணீரில் குஷியாகக் குளித்துவிட்டு, உடைகளை மாற்றி வெளியே வந்தவனை, கைகளில் காலை உணவோடு வரவேற்றார் வேலு.


வேலு அந்த எஸ்டேட்டிலேயே பிறந்து வளர்ந்தவர். இந்த எஸ்டேட்டில் தான் வேலை செய்கிறார். புதிதாக வந்த ஆதித்யனுக்குக் கூடமாட உதவி செய்ய, எஸ்டேட் ஓனர் பிரபு தான் வேலுவை இங்கு அனுப்பி இருக்கிறார். வேலுவிற்கு அங்கு இருக்கும் அனைவரைப் பற்றியும் நன்கு தெரியும்.


வேலுவுடன் இயல்பாக இணைந்து கொண்ட ஆதித் அந்த எஸ்டேட், அதைச் சுற்றியுள்ள இடங்கள், அவன் வேலை செய்யப் போகும் இடம் மற்றும் உடன் வேலை செய்யப் போகிறவர்கள் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டான். பிரபு வேலுவை, எஸ்டேட் மேனேஜரிடம் ஆதித்தை அறிமுகப்படுத்த சொல்லி சொல்லி இருந்தான்.


வேலுவோ அந்த மேனேஜரைப் பார்க்க எஸ்டேட் ஆஃபீஸ்க்குச் சென்றான் ஆதித். ஆஃபீஸ்க்குக் கொஞ்சம் தூரம் முன் ஒரு ஜீப் ரிப்பேராகி நிற்க, வேலு, "அது நம்ம எஸ்டேட் வண்டி மாதிரி இருக்கு தம்பி. வாங்க போய்ப் பாப்போம்..." என்றதும், ஆதித் வேலுவோடு அந்த ஜீப் அருகில் சென்றவன், ஜீப்புக்குக் கீழே ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து ஜீன்ஸ் போட்ட ரெண்டு கால்கள் மட்டும் வெளியில் தெரிவதைக் கண்டவன், "என்ன ப்ராப்ளம்?” என்று கேட்க, அந்த ஜீப் டிரைவர் ஆதித்தையும் வேலுவையும் பார்த்தவன், "இது யாரு வேலண்ணா?” என்று கேட்க,


"இவரு நம்ம எஸ்டேட்டில புதுசா வேலைக்குச் சேந்திருக்காரு டா... அது சரி வண்டிக்கு என்ன ஆச்சு? நான் வேணும்னா மெக்கானிக்கை கூட்டிட்டு வரட்டா?” என்று கேட்க, அந்த டிரைவர் வாய் திறக்கும் முன் "அதெல்லாம் வேணாம் வேலண்ணா. வேல முடிஞ்சிது..." என்று வந்த பெண் குரலில், ஆதித் அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்று சுற்றிமுற்றிப் பார்க்க, வேலுவுக்கு அந்தக் குரல் நல்ல பரிட்சையம் என்பதால், ஜீப் டிரைவரைப் பார்க்க அவன், ஆமாம் என்று தலையாட்டினான்.


ஜீப்புக்கு அடியில் இருந்து கையில் டூல் பாக்ஸுடன் வெளியே வந்தாள் ஒரு இருபத்தியேழு வயது பெண். கருப்பு நிற ஜீன்ஸ், அடர்நீல நிற முழுக்கைச் சட்டை, அதை முட்டி வரை மடித்து வைத்திருந்தாள். முகம், கைகளில் க்ரீஸ் ஒட்டி இருந்தது. மொத்த முடியையும் அள்ளி ஹேர்பண்ட் போட்டிருக்க, சில முடிகள் மட்டும் அவள் முகத்தில் தவழ்ந்து விளையாடியது. 5'7 அடி உயரத்தில், சற்றும் அலைபாயாத தீர்க்கமான கண்களுடன், ஊறவைத்துத் தோலுரித்த பாதாம் நிறத்தில், சற்றும் சதைப்பற்று இல்லாது, செதுக்கி வைத்த சிலை போன்ற உடல்வாகு; மொத்தத்தில் அந்த நிமிடம் அழுக்காய் இருந்த அழகுமலர் அவள்.


ஆதித் அந்தப் பெண்ணையே பார்த்திருக்க, "உங்கள பாக்க தாம்மா எஸ்டேட்டுக்கு வந்திட்டு இருந்தோம்..." என்ற வேலுவை, "என்ன?” என்பது போல் பார்த்தவள், டூல் பாக்ஸை ஜீப்பில் வைத்துவிட்டு தன் ஜெர்கீனை எடுத்துப் போட்டுக் கொண்டே, "என்ன வேலண்ணா? என்ன விஷயம்? இவ்ளோ காலையில என்ன பாக்க வந்திருக்கீங்க? இவரு யாரு?” என்று ஆதித்தை பார்த்துக் கேட்க,


"இவரு பேரு ஆதித்யன் மா. முதலாளி புதுசா ஒருத்தர் வேலைக்கு வராருன்னு சொல்லி இருந்தாரே, அவர் தான் மா. உங்கள பார்க்க தான் கூட்டிட்டு வந்தேன்..." என்றவர் ஆதித்திடம் திரும்பி, "இவங்க தான் தம்பி நம்ம மேனேஜர்..." என்று அவளை அறிமுகம் செய்து வைத்தார்.



ஆதித், "ஹாய் மேடம், ஐ அம் ஆதித்யன். இன் ஷாட் ஆதித்..." என்று தன் வலது கையை நீட்ட, தன் இரு கைகளைச் சேர்த்து, "வணக்கம்" என்றவள், "ஹாய் மிஸ்டர் ஆதித்யன். ஐ அம் சம்யுக்தா. நைஸ் டூ மீட் யூ..." என்று கம்பீரமாகச் சொன்னவள், திரும்பி ஜீப் டிரைவரிடம், "வண்டிய ஸ்டார்ட் பண்ணி பாரு..." என்று சொல்ல, அவள் கைப்பட்ட நேரம், வண்டி உடனே ஸ்டார்ட் ஆனது.


"ம்ம்ம்..." என்று தலையாட்டியவள், "ஓ.கே. தென் எனக்கு டைம் ஆச்சு. ஐம் லீவிங்..." என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு சென்றுவிட, 'சரியான திமிர் புடிச்சவளா இருப்பா போலயே... ஆனால் வேலு இந்தப் பொண்ணை ஆஹோ, ஓஹோன்னு புகழ்ந்தாரு...' என்று ஆதித் மனம் யுக்தாவைப் பற்றி யோசித்தது.


வேலு ஜீப் டிரைவரிடம், "என்ன ஆச்சு?” என்று விசாரிக்க, "நான் இந்தப் பக்கம் வரும்போது திடீர்னு வண்டி மக்கர் பண்ணிடுச்சு வேலண்ணா. வண்டியில முக்கியமான பொருள் இருக்கு. கரெக்ட் டைமுக்கு டெலிவரி பண்ணனும். வண்டி இப்படி ஆகவும் எனக்கு என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியாம நின்னுட்டு இருந்தேன். அப்ப தான் நம்ம மேனேஜர் அம்மா புள்ளைய ஸ்கூல்ல விட்டுட்டு இந்த வழியா வந்தாங்க... என்னைப் பாத்து என்ன வெவரம்னு கேட்டுட்டு அவங்களே ஜீப்ப ரிப்பேர் பண்ணிக் கொடுத்துட்டு போறாங்க..." என்று வண்டி சரியான சந்தோஷத்தை சொன்னான்.


ஆதித் குழப்பம் மேலிட "இவ்ளோ பெரிய எஸ்டேட் மேனேஜர், அவங்களே வலிய வந்து வண்டிய ரிப்பேர் பண்ணி தந்துட்டு போறாங்களா?” என்று ஆச்சரியமாகச் கேட்டான்.


"அது தான் தம்பி அவங்க... நல்ல பொண்ணு, எல்லாரையும் ஒரே மாதிரி தான் பாப்பாங்க. அவங்க இங்க வந்து ரெண்டு வருஷம் தான் ஆச்சு. அதிகம் யார் கூடவும் பேசமாட்டாங்க... அவங்க உண்டு, அவங்க வேல உண்டுன்னு இருப்பாங்க... ஆனா எங்களுக்கு நெறய உதவி செய்து இருக்காங்க. இங்க இருக்க எல்லாருக்கும் அவங்கள ரொம்பப் புடிக்கும். ஆள் பாத்து பழகமாட்டாங்க... அவங்களுக்கு எல்லாரும் ஒன்னும் தான். ஒய்வு நேரத்துல இங்க இருக்கச் சின்னப் புள்ளைகளுக்குப் படிப்பு கூடச் சொல்லித் தருவாங்க தம்பி.


உதவின்னு கேட்டு போனா அவங்களால முடிஞ்சதை கண்டிப்பா செய்வாங்க. இங்க வந்த கொஞ்ச நாள்ல எங்களுக்கு நல்ல வீடு, சின்ன ஹாஸ்பிடல், இன்னும் அடிப்படை தேவைகளை எல்லாம் முதலாளி கிட்ட பேசி செஞ்சி தந்தாங்க தம்பி. அந்தப் பொண்ணு எங்க எல்லார் மனசுலையும் அசைக்க முடியாத இடத்தைப் புடிச்சிட்டாங்க!" என்று வேலுவும் அந்த டிரைவரும் யுக்தாவை புகழ்ந்து தள்ள ஆதித்துக்குக் கூடக் கௌரவம் பார்க்காமல், யுக்தா நடுரோட்டில் தரையில் படுத்துக் கொண்டு ஜீப்பை ரிப்பேர் செய்ததைப் பார்த்த பிறகு, வேலு அவளைப் புகழ்வது சரி என்றே பட்டது.


ஆதித் அன்று முழுவதும் எஸ்டேட் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் இடங்களைப் பார்ப்பதிலேயே முழுநாளும் கழித்துவிட, மாலை நேரத்தில் அவன் வீட்டுக்குச் செல்லும் வழியில் நடந்து வரும் போது ஒரு சிறுவன் வேகமாக ஓடி வந்து சாலையில் தவறி விழுவதைப் பார்த்தவன், வேகமாகச் சென்று அந்தச் சிறுவனைத் தூக்கியவன், "என்ன குட்டிப் பையா பாத்து வர கூடாது? இப்படியா வேகமா ஓடி வரது? எங்கயாது அடிப்பட்டுச்சா?” என்று சிறுவன் முகம் பார்த்துக் கேட்க, அந்தச் சிறுவன் இல்லை என்று தலையாட்ட, "ப்ரணவ்..." என்று ஓடி வந்த யுக்தா குழந்தையைப் பார்த்ததும்,


"என்ன ப்ரணவ் இது? இப்படி வேகமா ஓடாதன்னு எத்தனை தடவ சொல்றது..." என்று அதட்டியவள், ஆதித்தைப் பார்த்து, "தேங்க்ஸ்..." என்றாள்.


''இட்ஸ் ஓ.கே. மேடம். உங்க பையானா?” என்றவன் ப்ரணவ்விடம், "என்ன குட்டிப் பையா, நீங்க தேங்க்ஸ் எல்லாம் சொல்ல மாட்டீங்களா?” என்று விளையாட்டாகக் கேட்க, "அவன் பேச மாட்டான்..." என்று சொல்லிக்கொண்டே ப்ரணவ்வை அணைத்தாள் யுக்தா.


"ஏன் மேடம்?”


"அவனுக்குப் பேச வராது. ஒரு ஆக்ஸிடென்ட்ல அவனுக்கு இப்படி ஆகிடுச்சு..." என்று விரக்தியாக, எங்கோ பார்த்துக் கொண்டு அவள் சொல்ல ஆதித்க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.


ப்ரணவ் அளவு குனிந்தவன், "சாரி..." என்று செய்கையிலேயே சொல்ல ப்ரணவ் மலர்ந்து சிரித்தவன், "இட்ஸ் ஓ.கே." என்று செய்கையிலேயே பதில் தந்தான். அங்கு யாருக்கும் சைன் லாங்குவேஜ் தெரியாது என்பதால், ப்ரணவ் யாருடனும் அதிகம் பழகுவது இல்லை. இப்போது ஆதித் சைன் லாங்குவேஜில் ப்ரணவ்விடம் பேச, முப்பது வயது ஆதித்க்கும், ஆறு வயது ப்ரணவ்விற்க்கும் இடையில் புதிதாக ஒரு குட்டி நட்பு மலர்ந்தது.


ஆதித் ஏதேதோ கேட்க, கடைசியாக "உங்க அப்பா எங்க?” என்று கேட்க, ப்ரணவ் செய்த செய்கையில் அதிர்ந்த ஆதித், யுக்தாவை பார்த்தான்.


யுக்தா மெதுவாகத் தலையாட்டியவள், "ஹீ இஸ் நோ மோர். செத்து ரெண்டு வருஷம் ஆகுது..." என்று அழுத்தமாகச் சொன்னவள், ப்ரணவ்வை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட, போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித் பார்வையில் இப்போது யுக்தா மீது மதிப்புக் கூடியிருந்தது