ஆழியின் ஆதவன் 1

 









ஆழி 1


கிழக்கை வெளுப்பாக்க ஆதவன் வானில் நடைபயணம் செய்ய வேண்டிய நேரம் நெருங்கிவிட, வானத்து வாசலில் கால் வைத்துக் கதிரவன் காத்திருக்கும் அதிகாலை நான்கு மணிக்கு குழலின் இன்னிசைப் போல் ஒலித்த மழலையின் சிணுங்கல் ஒலியில் கண்விழித்தாள் ஆழினி.


மலர்ந்த இதழ்களுடன், கண்களைக் கசக்கியபடியே மெத்தையில் இருந்து மெதுவாக எழுந்து, குழந்தை படுத்திருந்த தொட்டில் அருகில் வந்த ஆழி, தூக்கத்தில் சிணுங்கும் அந்தக் குட்டி தேவதையின் பட்டுக் கன்னத்தை மெதுவாக வருடி, அப்படியே குழந்தையை தன் இரு கைகளில் அள்ளிக்கொள்ள, அவளின் ஸ்பரிசத்திலும், உடல் சூட்டிலும் தன்னைத் தூக்கியது யாரென்று உணர்ந்த குழந்தை சிணுங்களை நிறுத்தி விட்டு, தூக்கத்தில் சிரித்தபடி வழக்கம் போல் மீண்டும் தன் தூக்கத்தைத் தொடர, அந்த மழலை சிரிப்பில் மயங்கி மென்மையாகச் சிரித்தாள் ஆழினி.


"வர வர உன் குறும்புக்கு அளவே இல்லாம போய்டிருக்கு குட்டிப் பாப்பா. தினமும் இப்படி அழுது என்னை எழுப்பி விட்டு, நான் வந்து உன்னை தூக்கின உடனே அழுகையை ஸ்டாப் பண்ணிட்டு, நீ மறுபடியும் தூங்கிடுற… இதெல்லாம் ரொம்ப வன்முறை பாப்பா, டூ மச்" என்று சிரித்தபடியே தூங்கும் குழந்தையிடம், அதைப் பற்றியே புகார் செய்தவள், மெத்தையில் தன் அருகிலேயே குழந்தையைப் படுக்க வைத்து, போர்வையால் தங்கள் இருவரை மூடிக்கொண்டு, மெதுவாக குழந்தையைத் தட்டிக் கொடுத்தபடியே அவளும் தூங்கிப் போனாள்.


காலை எட்டு மணிக்கு குளித்து முடித்து, குழந்தைக்கான உணவை ஆழி தயார் செய்துக் கொண்டிருக்க, அவள் அருகில் வந்து நின்றான் ஆதவன்.


"எத்தனை முறை சொல்றது, இதையெல்லாம் நீ செய்யாத, நான் பாத்துக்கறேன்னு, நீ கேக்கவே மாட்டியா?" என்று எரிந்து விழுந்த ஆதவனை திரும்பி ஏற இறங்க ஒரு பார்வைப் பார்த்த ஆழி, மீண்டும் குழந்தைக்காக கஞ்சியை எடுத்து கிண்ணத்தில் ஊற்றும் வேலையைப் பார்த்தாள்.


"ஹலோ நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். நான் சொல்றத கேக்க கூடாதுன்னு ஒரு முடிவோட இருக்க இல்ல நீ" என்று கத்தியவன் முன், குழந்தை உண்ணும் பதத்தில் இருந்த கஞ்சியைக் கிண்ணத்தில் போட்டு நீட்டி, புருவத்தை உயர்த்தி பார்வையில் குழந்தையைக் காட்டி ஏதோ சமிக்ஞை செய்தாள்.


ஆதவனுக்கு அவள் செய்கையின் அர்த்தம் விளங்கியது போலும், "என்ன? எங்க உன் பொண்ணுக்கு இத ஊட்டி விட்டுக் காட்டுன்னு சவால் விடுறியா? அவ எம் பொண்ணு நான் ஊட்டிவிட்டா வழக்கத்தை விட இன்னும் நிறைய சாப்டுவா, நீ இன்னொரு கிண்ணம் கஞ்சிய எடுத்து வை" என்று கெத்தாகச் சொல்லிட்டு ஆதவன் குழந்தை அருகில் செல்ல,


ஆழியோ, 'போங்க சார் போங்க, ஒரு கிண்ணம் இல்ல, ஜஸ்ட் ஒரு ஸ்பூன் அவ வாங்கிடட்டும், நான் என் ஒரு பக்கத்து மீசைய எடுத்துடுறேன்' என்று தனக்குள் சிரித்தபடி குழந்தையிடம் வந்தாள்.


ஆழினி கீழ் உதட்டைக் கடித்து, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க, ஆதவ் கஞ்சிக் கிண்ணத்தைக் கையில் வைத்துக் கொண்டு திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தான்.


"என்ன சார்? பொண்ணுக்கு, அதான் சார் உங்க பொண்ணுக்கு ஊட்டி முடிச்சிட்டீங்களா…?" என்று 'உங்க பொண்ணு' என்ற வார்த்தையை அழுத்திச் சொல்லி, "அடுத்த கிண்ணம் எடுத்துட்டு வரவா?" என்று ஆழினி அவனைக் கிண்டலடிக்க, ஆதவ் அவளைத் தீயாக முறைத்தான்.


"ஹலோ என்ன கிண்டலா, நீ வேணும்னே கஞ்சிய சூடா குடுத்திருக்க, அதான் அது கொஞ்சம் சூடு கம்மி ஆகட்டும்னு வெய்ட் பண்றேன்" என்று அண்ட புளுகு புளுக, ஆழினி சட்டென எழுந்து வந்து ஒரு ஸ்பூன் கஞ்சியை எடுத்து குழந்தை வாயருகே கொண்டுச் செல்ல, குழந்தை ஆவென்று வாயைத் திறந்து அதை வாங்கிக் கொள்ள, ஆதவ் கண்கள் வெளியே வந்து விடும்படி முழித்துக் கொண்டிருந்தான்.


"அட பிராடு குட்டி, உன்னைப் பெத்த அப்பன் நான், அரைமணி நேரமா போராடிட்டு இருந்தேன்‌‌. அரை இன்ச் கூட வாயைத் திறக்க மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணிட்டு, இப்ப அவளுக்கு மட்டும் அண்டா அளவுக்கு வாயத் திறந்து காட்டிட்டு இருக்க நீ… யூ டூ நிலா" என்று ஆதவன் மானசீகமாக மகளிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க, ஆழினி அவன் முகத்திற்கு முன் விரல் கொண்டு சொடுக்கி, "கஞ்சி எல்லாம் சூடு கரெக்டா தான் இருக்கு, இப்ப ஊட்டுங்க" என்றவள் அங்கிருந்த டேபிளில் சாய்ந்து, கைகளைக் கட்டியபடி நின்று நக்கலாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


"எல்லாம் என் நேரம், எனக்கு வந்ததும் சரியில்ல, நான் வர வச்சதும் சரியில்ல, காலையில யார் முகத்துல முழிச்சேன்னு தெரியல, நாள் ஆரம்பமே பல்ப் வாங்கி பிரகாசமா இருக்கு" என்று புலம்பியவன், வராத ஃபோனை எடுத்து, "ஹலோ, ஆமா நா ஆதவ் தான் பேசுறேன். என்ன உடனே வரணுமா, ரொம்ப அவசரமா?, ஹான் சரி சரி இதோ கிளம்பிட்டேன்" என்று எழுந்தவன், "எனக்கு ரொம்ப இம்பார்டன்ட் வேல வந்துடுச்சு, அதான் போறேன். கஞ்சி மட்டும் சூடு இல்லாம இருந்திருந்தா இந்நேரம் நான் நிலாக்கு ஊட்டிருப்பேன்‌. நீ வேணும் தான இப்படிச் செஞ்ச? நான் நாளைக்கு பாத்துக்கறேன்" என்றவன் கிட்டத்தட்ட அங்கிருந்து ஓடி இருந்தான்‌.


ஆதவ் ஓடுவதைப் பார்த்து ஆழி, "ஃபோன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆகுது மிஸ்டர் பன்னிக்குட்டி ராமசாமி" என்று சத்தமாகச் சொல்லி சிரிக்க, அவள் சிரிப்பதைப் பார்த்த குழந்தைக்கு என்ன புரிந்ததோ, குட்டி குட்டியாக முளைத்திருந்த தன் பால் பற்கள் தெரிய 'கெக்க பெக்க' என்று சிரிக்க, ஆழினி நிலாவைத் தூக்கி தான் இடுப்பில் வைத்துக் கொண்டு, "பாருடா பாப்பா உங்க அப்பாவ, மீசையில மண்ணு ஒட்டாத மாதிரி எப்படி கெத்தை மெயின்டெய்ன் பண்ணிட்டுப் போறாரு" என்று மீண்டும் சிரிக்க, நிலாவும் தன் பட்டுக் கன்னத்தில் குழி விழுக அழகாகச் சிரித்தாள்.


நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆதவனின் தாய் வெண்மதி, "என்னம்மா ஆழி வழக்கம் போல இன்னைக்கு உங்களுக்குள்ள நடந்த வாய்க்கா சண்டையில நீதான் ஜெயிச்ச போல, எம்புள்ள இப்படித் தலதெறிக்க ஓடிட்டு இருக்கான்" என்று சிரிக்க,


"பின்ன என்ன மதிம்மா, எப்பப்பாரு என்கிட்ட கத்திட்டே இருந்தா நானும் எத்தனை நாள் தான் சும்மா இருக்கறது. ஆனா, அம்மா இன்னைக்கு நான் ஒன்னும் பண்ணல, என் பாப்பு குட்டி என் சார்பா அவரை நல்லா வச்சி செஞ்சிட்டா" என்று நடந்ததைச் சொல்லி சிரிக்க, வெண்மதி அவள் சிரிப்பை ரசித்தபடியே அவள் எதிரில் அமர்ந்தார்.


"ம்ம்ம் நானும் பாத்தேன் ஆழி, பொதுவா சொல்லுவாங்க பொம்பள பிள்ளைங்க அப்பா மேல தான் அதிகம் பாசமா இருக்கும்னு. ஆனா, நிலா விசயத்துல அப்படியே உல்டா, இவ அம்மா மேல உயிரா இருக்கா" என்றது தான் தாமதம், அதுவரை சிரித்துக் கொண்டிருந்த ஆழியின் முகம் சடுதியில் வாடி விட, அதை வெண்மதியும் கவனித்துவிட்டார்.


"ம்மா நா உங்களுக்கு டிபன் எடுத்துட்டு வரேன்" என்றபடி ஆழி அங்கிருந்து எழுந்துச் சென்றுவிட, வெண்மதியின் மனது மகனையும், பேத்தியையும் நினைத்து கவலை கொண்டது.


இங்கு சீக்கிரமே ஆபிஸ் வந்த ஆதவனைப் பார்த்து புருவம் சுருக்கிய அவன் நண்பன் முகில், "என்னடா இது அதிசயம்! மணி இன்னும் ஒன்பது கூட ஆகல அதுக்குள்ள ஆபிஸ் வந்துட்ட? என்ன பின்னாடி நாய் எதுவும் தொறத்துச்சா என்ன? அதுக்குப் பயந்து வேகமா ஓடியே ஆபிஸ் வந்துட்டியா? என்று அவனைக் கிண்டலடிக்க, ஆதவ் அவனைக் கண்களைச் சுருக்கி முறைத்தான்.


"ஏன்டா கேக்கமாட்ட, அங்க நான் பெத்ததும் என்னை மதிக்க மாட்டேங்குது, இங்க நீயும்‌ ஒரு பாஸ்னு மதிக்கமாட்டேங்கிற… எல்லாம் என் நேரம்டா, நான் ஒன்னும் நாய்க்கு பயந்து ஓடி வர்ல, ஒரு பேய் முன்னாடி, ஒரு குட்டி வில்லியால என் மானம் காத்துல பறக்க, விட்டா போதும்னு ஓடி வந்தேன்" என்று தலையில் கை வைத்துக் கொண்டான்.


"டேய் என்னடா உளர்ற, நிலா உன்னை மதிக்கலயா? டேய் அவ குழந்தைடா, இன்னும் பேச்சுக்கூட வராத குட்டிப் பாப்பா உன்ன என்னடா செஞ்சா? என்ற முகிலை பாவமாகப் பார்த்த ஆதவ், காலையில் நடந்ததைச் சொல்ல, முகில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான்.


"மரண பங்கம்டா ஆதவ். நிலா உன்னை நல்லா வச்சி செஞ்சிட்டா" என்று மீண்டும் சிரித்தான்.


"ஏன்டா உனக்குத் தான் ஆழிய தவிர்த்து வேற யார் ஊட்டினாலும் நிலா சாப்பிட மாட்டான்னு தெரியும் இல்ல. அப்புறம் என்ன வெண்ணைக்கு நீ வீர வசனம் எல்லாம் பேசுற? ஒழுங்கா காலையில எழுந்தியா, தட்டுல போட்டதை முழுங்குனியா, ஆபிஸ் வந்தியான்னு இல்லாம, உனக்கு ஏன் இந்த வெட்டி வேலை, அதான் ஆழி இருக்கா இல்ல, அப்புறம் என்ன?" என்ன முகிலை நிமிர்ந்து பார்த்த ஆதவன்,


"இன்னும் எத்தனை நாளுக்கு?" என்க, வறண்டு வந்த ஆதவ் குரலைக் கேட்ட முகில், ஆதவ் முகத்தைப் பார்க்க, அது வாடி இருந்தது.


"என்னாச்சு ஆதவ்? ஏதும் ப்ராப்ளமா?"


"இப்ப ப்ராப்ளம் இல்ல. ஆனா, கண்டிப்பா ஒரு நாள் ப்ராப்ளம் வரும் முகில். நிலா அவகிட்ட ரொம்ப நெருக்கமா இருக்கா, அவ இல்லாம சாப்ட மாட்டேங்கறா, தூங்க மாட்டேங்கறா... இவளும் எப்பவும் அவளைத் தூக்கி வச்சிட்டே சுத்திட்டு இருக்கா… அது தான் பயமா இருக்கு, நாளைக்கு அவ இல்லாம போயிட்டா, எம் பொண்ணுக்கு எப்படி வலிக்கும், பாவம்‌ அவ ரொம்ப ஏங்கிப் போய்டுவளே முகில்"


"என்னடா உளர்ற, ஆழி ஏன் போகப்போறா? அவளும் தான் நிலா மேல உயிரா இருக்கா, அப்படியெல்லாம் போய்ட மாட்டா, நீ தேவை இல்லாம பயப்படுற"


"இல்ல முகில், அதுதான் நிஜம், இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கு அப்புறம் அவ வீட்டை விட்டு போய்டுவா, அப்புறம் நிலா?" என்றவன் கண்கள் கலங்கிவிட, முகில் அவன் தோளை ஆதரவாக அழுத்தினான்.


"ஆழி வீட்டை விட்டு, நிலாவ விட்டுப் போகாம, உங்க கூடவே இருக்க வைக்க உன்னால முடியும். ஆனா, நீதான் அதுக்கு சம்மதிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்க... நீ ஏன் உங்க அம்மா சொன்னதைப் பத்தி யோசிச்சு பார்க்கக்கூடாது" என்றவனை முறைத்தான் ஆதவ்.


"ப்ளீஸ் முகில் தயவுசெஞ்சு அதைப் பத்தி பேசாத, அது நடக்காது. இன்னும் கொஞ்ச நாள் தான், அதுக்கு அப்புறம் அவ அவளோட வழியில போய்டுவா, நான் என் வழில. இதுல எந்த மாற்றமும் இல்லை" என்று தன் முடிவை முடிவாகச் சொல்லிவிட, முகில் என்ன செய்வதென்று புரியாமல் நின்றான்.


"இவனுக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கறது‌ என்ன சொன்னாலும் இந்தப் பக்கிக்கு புரியவே மாட்டேங்குது, சரி இந்த ஆம்பள எரும கிட்ட பேசி ஒரு டாஷ்க்கும் பிரயோஜனம் இல்லன்னு அந்த பொம்பள குட்டிச்சாத்தான் ஆழி கிட்ட பேசினா... அது எப்ப இருந்து இந்த வேலை பார்க்க ஆரம்பிச்சீங்கன்னு என்னையே கலாய்ச்சு விடுது. இதுல வெண்மதி அம்மா வேற அடிக்கடி ஃபோன் பண்ணி என்னாச்சு என்னாச்சுனு கிரிக்கெட் கமெண்டரி மாதிரி நொடிக்கு நொடி அப்டேட் கேக்குறாங்க… நான் என்ன தான் செய்றது. விட்டா இவங்க மூணு பேரும் சேர்ந்து என்னைக் கிறுக்காக்கி விட்ருவாங்க போலயே முருகா, தயவுசெய்து உன் புள்ளைய இந்தக் குடும்பத்து கிட்ட இருந்து காப்பாத்து" என்று கடவுளை வேண்டிக் கொண்டான் முகில்.


மறுநாள் காலை வழக்கம் போல் ஆழி குழந்தைக்கு காலை உணவை ஊட்டி கொண்டிருக்க, அவளைப் பார்த்தும் பார்க்காத மாதிரியே, அமைதியாக பூரியை தொண்டையில் இறக்கிக் கொண்டிருந்தான் ஆதவ்.


அவன் அமைதியின் காரணம் புரிந்த ஆழி, உள்ளுக்குள் சிரித்தபடியே குழந்தைக்கு உணவை ஊட்டி முடித்த வேளை, அவள் ஃபோன் சினுங்கியது.


அவள் ஃபோனை எடுத்துப் பார்க்க, அதில் பிரைவேட் நம்பர் என்று வந்தது. யாராக இருக்கும் என்று யோசித்தபடியே அவள் ஃபோனை அட்டெண்ட் செய்து காதில் வைத்து "ஹலோ" என்றதும் கால் கட் ஆகி விட்டது. ஆழி ஃபோன் டேபிள் மீது வைத்து விட்டு இரண்டடி நகர, ஃபோன் மீண்டும் ஒலித்தது. இந்த முறையும் பிரைவேட் நம்பர் என்று காட்ட, அட்டன் செய்து "ஹலோ யாருங்க அது, ஃபோன் பண்ணிட்டு ஏன் பேச மாட்டேங்கிறீங்க" என்று சற்று சத்தமாகக் கேட்க, ஆதவ் திரும்பி அவளைப் பார்த்து, புருவம் உயர்த்தி 'என்ன' என்பது போலக் கேட்க, ஆழி இதழ் பிதுக்கி தெரியல என்று செய்கை செய்து, "ஹலோ யார் அது?" என்றாள் மீண்டும்.


"இப்ப நான் யார்னு உனக்குத் தெரியாது மிஸ். ஆழினி. பட் கண்டிப்பா நீ என்னைத் தெரிஞ்சுக்குற நேரம் வரும். அதுவரைக்கும் எவ்ளோ ஹாப்பியா இருக்க முடியுமோ அவ்ளோ ஹாப்பியா இருந்துக்கோ. பிகாஸ் இதுக்கு அப்புறம் உனக்கு அப்படி ஒரு வாய்ப்பே கிடையாது" என்று கொடுரமாகச் சிரித்தவன் ஃபோனை கட் செய்துவிட, ஆழி திரும்பி ஆதவைப் பார்த்து தீயாக முறைத்தாள்.


"ஏய் இப்ப எதுக்கு என்னை இப்படி முறைச்சிட்டு இருக்க நீ?"


"ம்ம்ம் முறைக்காம, நீங்க பண்ண வேலைக்கு உங்களுக்கு ஆரத்தி சுத்துவாங்களாக்கும்… என்ன விளையாட்டு இது? இதெல்லாம் சுத்தமா சரி இல்ல. இன்னொரு வாட்டி இப்படிப் பண்ணிங்க… அவ்ளோதான் சொல்லிட்டேன் ஆமா" என்று கத்திக்கொண்டே ஆதவை நன்றாக முறைத்து விட்டு ஆழி செல்ல,


"ஏய் எதுக்கு இப்ப நீ என்னை திட்டிட்டு போற? அத சொல்லிட்டு போ" என்று கத்த, அவள் அந்த வார்த்தைகள் கேட்காத தூரம் சென்றிருந்தாள்.


'எதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லாமயே போறாளே…' என்று மைண்ட் வாய்ஸில் புலம்பியபடியே ஆபிஸுக்கு சென்றான்