கன்னத்தில் காதல் முத்தம் 23

 

காதல் 23


இருவரும் மதிய உணவை உண்டு முடித்துவிட்டு, பேசி சிரித்தபடி இருக்க, "தியா ஷால் ஐ அஸ்க் யூ சம்திங்?" என்று கேட்டான் அக்னி.


"இதென்னடா புதுசா பர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு இருக்க..‌. சும்மா கேளு" என்றாள் தியா.


"டூ யூ லவ் ஆதி?" என்று கேட்டவனுக்கு, அதற்கான விடை தெரிந்தே இருந்தாலும் அவளிடம் கேட்டு தெளிவு பெறவேண்டும் என்ற கட்டாயம் அவனுக்கு. அதற்காக தான் அந்த கேள்வியை கேட்டான்.


சட்டென திரும்பி அவனைப் பார்த்தவள், உடனே தன் பார்வையை தாழ்த்திக்கொண்டு, "எனக்கு என் மாமாவை ரொம்ப புடிக்கும் தேவ்… ரொம்ப ரொம்ப புடிக்கும். என் லைஃப்ல என் அப்பாக்கு அடுத்து நான் மரியாதை வச்சிருக்கிறது ஆதிமாமா மேல தான். அவர் மேல எனக்கு நிறைய அன்பும், மரியாதையும் இருக்கு தேவ். இதுவரை மாமான்ற சொல்லுக்கு நான் மறுவார்த்தை சொன்னதில்ல. உன்னை சகட்டுமேனிக்கு போடா வாடான்னு சொல்றனே, இதுவரை அவரை நான் வாங்க போங்கன்றதை தவிர வேற மாதிரி கூப்பிட்டதே இல்ல தேவ். அவ்ளோ மரியாதை வச்சிருக்கேன் அவர் மேல. ஆனா, காதல்?" என்றவள் இருபக்கமும் இல்லை என்பது போல் தலையாட்டியவள்,


"நீ இப்ப கேட்ட மாதிரி, என் ஃப்ரெண்ட்ஸ் உட்பட நிறையபேர் என்கிட்ட இதே கேள்வியை கேட்டிருக்காங்க… அவங்ககிட்டயும் நான் இதையே தான் சொன்னேன். எல்லாருக்கும் செம்ம ஷாக் தெரியுமா? அது எப்டி? ஒரே வீட்ல ஒன்னா இருக்கீங்க… உனக்கு அவரு முறைப் பையன் வேற, கல்யாணம் வேற நடக்கப் போகுது…


அப்டி இருக்க, அவர் மேல லவ் வர்லன்னு சொல்றீயேன்னு, இதெப்படி சாத்தியம்னு கூட கேட்டிருக்காங்க… ஆனா, நான் என்ன செய்றது தேவ், எனக்கு மாமா மேல அப்டி ஒரு ஃபீல் வரலயே… அவர் கூட இருக்கும் போது பாதுகாப்பை ஃபீல் பண்ணி இருக்கேன். ஆனா, லவ்…" என்று கண்களை மூடியவள்,


"அது எனக்கு வர்ல தேவ். அதுக்கான காரணம் என்னன்னு கூட எனக்கு தெரியல‌." என்றவள் தோளைத்தொட்ட அக்னி, "அதுக்கு காரணம் நீ ஆதியை ரொம்ப மதிக்கிற தியா. உன்னோட அப்பாக்கு அடுத்த இடத்தை அவனுக்கு கொடுத்திருக்க.


அந்த மதிப்பும் மரியாதையும் தான் உன்னை அவனை வேற மாதிரி பாக்க முடியாம செஞ்சிடுச்சு. இன் ஷாட் அதீத மரியாதை இருக்க இடத்தில் பக்தி தான் வரும்‌. காதல் வராது." என்றவன் வார்த்தையில் ஆரா முகத்தில் மெல்லிய புன்னகை. அது தன் தேவ் தன்னை புரிந்து கொண்டதால் வந்த புன்னகை.


இருவரும் பேசி பேசி மாலை போய் இரவும் வந்துவிட, ஆரா கிளம்ப தயாராக, "தியா ஒரு நிமிஷம்" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் கண்கள் சொன்ன செய்தியில் தடுமாறி நின்றாள்.


'கடவுளே தேவ் அப்டி எதுவும் சொல்லிடக் கூடாது… சொல்லிடக் கூடாது' என்று மனதில் புலம்பியபடியே, "எ… என்ன தேவ்?" என்று பதட்டமாக கேட்க, அவள் அருகில் வந்தவனுக்கு, தான் அவளிடம் என்ன சொல்லப்போகிறேன் என்று அவளுக்கும் புரிந்து விட்டது, அதனால் தான் இந்த பதட்டம் என்று உணர்ந்து உள்ளுக்குள் சிரித்தவன், அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி, "என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா தியா?" என்று கேட்டுவிட, அதிர்ச்சியில் அவள் கண்கள் சாசர் போல் விரிந்து கொண்டது.


அவன் காதலை சொல்வான் என்று அவள் எதிர்பார்க்க, அவனோ கல்யாணம் பற்றி பேசியதும் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.


"தேவ் என்ன சொல்ற நீ? எ… எனக்கு எங்கேஜ்மென்ட் ஆகிடுச்சு… உனக்கு தெரியுமில்ல?" என்று அவசரமாக சொல்ல, அக்னி அவள் முகத்தை பார்த்தபடி, "அந்த ஒரு காரணம் தவிர என்னை வேணாம்னு சொல்ல, உன்கிட்ட வேற காரணம் எதாவது இருக்கா தியா?" என்று கேட்க, அவளிடம் பதில் இல்லை.


இதுவே ஆதியுடன் அவளுக்கு நிச்சயம் நடக்காமல் இருந்திருந்து இந்த வார்த்தையை அவன் கேட்டிருந்தால், 'எப்படா நம்ம கல்யாணத்தை வச்சிக்கலாம்?' என்று கேட்டிருப்பாள். ஆனால், இப்போது அது அவளால் முடியாதே… அதனால் இல்லை என்று தலையாட்டி,


'இது நான் ஆதிமாமாக்கு பண்ற துரோகம்' என்று நினைத்தவளுக்கு புரிந்தது ஒன்றே ஒன்று தான், அவள் இப்போது தேவ் காதலை தவிர்ப்பது ஆதிக்கு துரோகம் செய்யக்கூடாது என்ற காரணத்திற்காக மட்டும் தான். அப்படியானால் அவளுக்கு தேவ் மேல் காதல் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் தேட அவளுக்கு தைரியம் இல்லை.


"நோ தேவ்…. இது தப்பு… நாம நல்ல பிரண்ட்ஸ். எதுக்கு லவ் அது இதுன்னு சொல்லி தேவை இல்லாம காம்ப்ளிகேட் பண்ணிக்கணும்? சொல்லு… லெட்ஸ் பீ ஏ குட் ப்ரண்ட்ஸ்." என்றவள் அருகில் வந்தவன்,


"லிசன் தியா… உனக்கு எங்கேஜ்மென்ட் நடக்கும் போது மிஞ்சு போனா உனக்கு பதினாறு, பதினேழு வயசு தான் இருந்திருக்கும். அந்த ஏஜ்ல அடுத்து என்ன படிக்கணும்னு டிசைட் பண்ற மெச்சூரிட்டி கூட உனக்கு இருந்திருக்காதே... அப்டி இருக்க, அந்த டைம்ல நடந்த எங்கேஜ்மென்ட்டை எந்த கணக்குல சேர்கிறது சொல்லு. உன் அப்பா அம்மா சொன்னாங்க, நீ ஒகே சொன்ன அவ்ளோதான்… அதோட நான் உன்னை இங்க பாத்து பழகிய கொஞ்ச நாள்லயே புரிஞ்சிக்கிடேன். உனக்கு ஆதி மேல அன்பு இருக்கே தவிர காதல் இல்லைன்னு. அதை தெளிவு படுத்திக்க தான், இப்ப நேரடியா நான் உன்னையே கேட்டேன். நீ ஆதிய லவ் பண்ணல. அதோட…" என்று அவள் கன்னத்தை தன் இரு கைகளாலும் பிடித்தவன்,


"நீ என்னை விரும்புற தியா. யூ ஆர் இன் லவ் வித் மீ. அது உனக்கு இன்னும் புரியல, அதை நீ உணரும் வரை நான் வெய்ட் பண்ணுவேன் தியா. அதுக்கு இந்த ஜென்மம் முழுக்க காத்திருக்கணும்னு நீ சொன்னாலும் காத்திருப்பேன்.


பிகாஸ் இது இன்னைக்கு நேத்து வந்த காதல் இல்லடி… நீ சொன்னதும் மறந்துபோக… என்னைக்கு உன்னைப் பாத்தேனோ, அன்னைக்கு தொடங்கின நேசம் இது. நான் சாகும்வரை… ஏன் அதுக்கு பிறகும் கூட மாறாது…" என்றவனை அவள் ஆழ்ந்து பார்க்க, அவள் விழிகளின் வீச்சில் அவன் மனம் மயங்கத்தொடங்க, மெல்ல அவள் இதழ் நோக்கி சென்றான்.


அவன் என்ன செய்யப்போகிறான் என்று உணர்ந்த ஆரா, இமைகளை இழுத்து மூடிக்கொள்ள, விழி மூடியிருந்தவளின் முகத்தை ரசித்துப் பார்த்தவன், அவளை நெருங்கி, அவள் குண்டு கன்னத்தில் லேசாக தன் இதழ்களை பதிக்க, அவள் இதழ்களில் மெல்லிய புன்னகை.


அவள் கன்னத்தை உரசியபடியே தன் இதழ்களை மெல்ல நகர்த்தி அவள் காதிலும் முத்தம் பதித்த அக்னி, "இந்த முத்தம் உனக்கு அருவருப்பை கொடுக்காம இருந்தா, உன் மனசுல நான் இருக்கேன்னு அர்த்தம் தியா…" என்றபடி அவளை விட்டு விலக, அவள் இன்னும் அவன் முத்தம் தந்த இனிய அதிர்வில் கண்களை மூடியபடி இருந்தாள்.


அவளின் அமைதியே அவனுக்கு அவள் மனதை தெளிவாக சொல்ல, "டைமாச்சு தியா… போலாம்" என்றவன் குரலில் சட்டென கண்களை திறந்தவளுக்கு, சில நொடிகள் தேவைப்பட்டது இப்போது அங்கு என்ன நடந்து? என்று புரிந்துகொள்ள.


அவன் தன்னை முத்தமிடும் போது தடுக்காமல் இருந்தவளுக்கு அதற்கான காரணம் புரிய, மனமே வாடிப்போது. மெல்ல நிமிர்ந்து அக்னியை பார்த்தவள், "கிளம்பலாம்." என்று சொல்லி விட்டு விறுவிறு என்று அங்கிருந்து சென்றுவிட, அக்னி அவள் பின்னால் சென்றான்.


தன் உடமைகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்ற ஆரா, திரும்பி அவனைப் பார்த்தவள், "என்னால என் மாமாக்கு துரோகம் பண்ண முடியாது. ஐ ஆம் சாரி தேவ்." என்றவள் கண்களில் அவள் கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீர் வழிய, தன் பெருவிரல் கொண்டு அவள் கண்ணீரை துடைத்தவன்,


"அதுதான் உன் முடிவுன்னா அதை நான் மனசார ஏத்துக்குவேன் தியா. ஆதி உன்னை நல்லா பாத்துக்குவான்னு எனக்கு தெரியும். எனக்கு நீ நல்லா இருந்தா அதுவே போதும். நீ அவனை கல்யாணம் பண்ணாலும் என் அன்பு மாறாதுடி…" என்று சொன்னவனை வேதனையோடு பார்த்தவள், "அப்ப நீ?"என்று கேட்டாள் தழுதழுத்த குரலில்.


அவளைப் பார்த்து மென்மையாக சிரித்தவன், "உன் நெனப்பு போதும்டி, நான் காலம் முழுக்க நிம்மதியா வாழ." என்றவன் அவள் கன்னத்தை மெதுவாக தட்டிவிட்டு, "கிளம்பு தியா, நீ மறுபடியும் பெங்களூர் வரும் போது. உன்னோட ஃப்ரண்ட் தேவ் இங்க உனக்காக காத்திட்டு இருப்பான்." என்றவனை திரும்பிப் திரும்பி பார்த்தபடி அவள் நடக்க, அவள் உள்ளே செல்லும் வரை அவளையே பார்த்தவன் கண்களில் இருந்து அவள் மறைந்த அடுத்த நொடி, வேகமாக ஓடி வந்து தன் காரில் அமர்ந்தவனின் கண்களில் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர், துளி துளியாக வெளிவந்தது.


ஆரா சென்னையில் இறங்க, அவளை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. அவள் தந்தை உடல்நலம் சரியில்லாமல் இருக்க, இரவு நேரத்தில் விமான நிலையம் வருகிறேன் என்றவரை வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாள் அவள்.


தன் உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள் முன் சிரித்தமுகமாக வந்து நின்றான் கௌதம்.


"ஹாய் மேம்… ஐ அம் கௌதம், நீங்க மிஸ். தியா தானே..‌. அக்னி சார் உங்களை பிக் பண்ணி உங்க வீட்ல விட சொன்னாரு" என்றவன், "இதோ சார் வீடியோ கால்ல இருக்காரு மேம்" என்று அவள் முன் கைபேசியை நீட்ட, திரையில் தெரிந்த தேவ் முகத்தை இமைக்காமல் பார்த்தாள் அவள்.


"தியா, நீ உங்க கூட்டிப்போக அப்பா வர்லன்னு சொன்ன இல்ல. அதான் கௌதமை அனுப்பிவச்சேன். அவன் என் ஃப்ரெண்ட் தான். நீ பயப்படாம அவன் கூட போலாம். வீட்டுக்கு போனதும் எனக்கு ஒரு மெசேஜ் மட்டும் போடு…" என்றதும் ஆரா தலையை 'சரி' என்பது போல் ஆட்ட, "ஓகே தியா… டேக் கேர்…" என்று அவன் இணைப்பைத் துண்டிக்க, தன் மீது அவனுக்கு இருக்கும் அக்கறையை நினைத்து ஆரா துவண்டு போனாள்.


தேவ் சொன்னபடியே ஆராவை பாத்திரமாக அவள் வீட்டில் இறக்கிவிட்ட கௌதம், "மேம் ஒரு நிமிஷம். அக்னி உங்களை இறக்கிவிட்டதும், மறுபடியும் வீடியோ கால் பண்ண சொன்னாரு" என்று மீண்டும் அவனை அழைத்து சொல்லிவிட்டு கௌதம் அங்கிருந்து செல்ல, ஆராவை தேவ்வின் செய்கை ஒவ்வொன்றும் மனதளவில் அவளை இன்னும் அவனோடு நெருங்க வைத்தது.


ஆரா வீட்டில் நுழைய, "ஏய் ஆரா… வா வா" என்று வந்த ஆதியை பார்த்து புன்னகைத்த ஆரா, "எப்ப மாமா வந்தீங்க?" என்றாள்.


"மார்னிங் தான் வந்தேன் ஆரா." என்றவன் அவளைப் முழுதாக பார்த்துவிட்டு, "என்ன ஆரா போன தடவை பாத்ததுக்கு கொஞ்சம் குண்டான மாதிரி இருக்க? நிறைய ஜங்க் புட் சாப்டுறீயா என்ன?" என்று கண்டிப்பான குரலில் கேட்க,


"என்ன மாமா இப்டி கேட்டுட்டிங்க… உங்களுக்கு தெரியாதா? எனக்கு ஜங்க் புட்டே புடிக்காதுன்னு… எல்லாம் வீட்டு சாப்பாடு தான். எப்பாவாது தான் வெளிய சாப்டுவேன்"


"என்னது வீட்டு சாப்பாடா… நம்புற மாதிரி இல்லயே?" என்று ஆதி அவளை வம்பிழுக்க,


"ஏன்… ஏன் நம்ப முடியல?" என்றாள் இவளும் வீம்பாக…


"உன்னோட சமையல் திறமை தெரிஞ்சு எப்டி ஆரா என்னை நம்ப சொல்ற?" என்று அவன் சிரிக்க, ஆராவோ, "நான் சமைப்பேன்னு எப்ப சொன்னேன், எல்லாம் என்னோட தேவ் தான் எனக்காக சமைப்பான்…" என்று சொல்ல வந்தவள், சட்டென நாக்கை கடித்து வார்த்தையைத் தடுத்தவள்,


"என் ஃப்ரெண்டோட அம்மா எனக்கு சேர்த்து சமைத்து கொடுப்பாங்க மாமா" என்று மாற்றி சொன்னவளுக்கு, அவள் சொன்ன, "என்னோட தேவ்" என்ற வார்த்தை இனம்புரியாத இன்பத்தை தந்தது.


"மாமா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு மாமா… நான் தூங்கப்போறேன். காலையில பேசலாம்" என்று எழுந்துக் கொண்டவள், "குட் நைட் மாமா…" என்று விட்டு தான் அறைக்குச் சென்று விட்டாள்.


தூக்கம் வருவதாக சொல்லிவிட்டு வந்தவள், மனம் முழுவதிலும் இருந்த ஏக்கத்தில் வாடிப் போனாள்.


"ஏன் தேவ் என்னை இவ்ளோ காதலிக்கிறான்? ஏன் எனக்கு ஆதிமாமா கூட எங்கேஜ்மென்ட் ஆச்சு? ஏன் நான் தேவ்வை முன்னையே சந்திக்காம போய்ட்டோம்? ஏன் ஆதிமாமா தேவ் செத்துப் போய்ட்டதா சொன்னாரு?" என்றவள் எண்ணம் முழுவதும் ஏன்? ஏன்? ஏன்? என்ற கேள்வியும் அது தந்த வலியும் அவளை நிலைதடுமாற வைக்க… கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தவள், "சாரி தேவ்.. இந்த ஜென்மத்தில் என்னால உன் காதலை ஏத்துக்க முடியாது. அது என் மாமாக்கு நான் செய்யும் துரோகம். ஆனா, அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா கண்டிப்பா நானே உன்னை தேடி வந்து, ஆசைதீர காதலிச்சு அப்றம் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்டா… இது ப்ராமிஸ்" என்று அழுதுக் கொண்டே இருந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.


இரவு நேரம் கடந்து உறங்கியதால் தாமதமாக கண்விழித்தவள் நினைவில் முதலில் வந்தது என்னவோ தேவ் தான். உடனே தான் கைப்பேசியை எடுத்துப் பார்க்க, தினமும் காலையில் அவன் அனுப்பும் மெசேஜ் இன்றும் தவறாமல் வந்திருக்க, அதை திறந்து பார்த்தாள்.


"குட் மார்னிங் தியா. எதைப் பத்தியும் யோசிக்காம அப்பாகூட ஜாலியா வீக்கென்ட் என்ஜாய் பண்ணிட்டு வா…"என்ற குறுஞ்செய்தி இருக்க, அதை வாசித்தவள் முகத்தில் மெல்லிய புன்னகை.


வெகு நாள் கழித்து ஆதி வந்திருப்பதால் ஆதி, ஆராவை வெளியில் அழைக்க, அவளோ அவளுக்கு பிடித்தமான அம்மன் கோயிலுக்கு போக வேண்டும் என்றதும், அவளை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்றான் ஆதி.


கண்களை மூடியபடி தன் அம்மனிடம் மனதோடு பேசிய ஆரா, "ஏம்மா என்னை இப்டி ஒரு இக்கட்டில் நிக்க வச்சிருக்க? நான் இப்ப என்னதான் செய்றது? ஒரு பக்கம் மாமா, இன்னொரு பக்கம் தேவ். ரெண்டு பேருமே எனக்கு ரொம்ப முக்கியம். இதுல யாருக்குன்னு நான் பாக்குறது? நீயே சொல்லுமா..." என்றவள் காதில் "இந்தம்மா இதை வாங்கிக்க.." என்று குரல் கேட்க, கண்களை திறந்தவள், முன் நின்றிருந்தார் ஒரு நடுத்தர வயது பெண்மணி.


மஞ்சள் பூசிய முகத்தில் அழகான குங்கும பொட்டு வைத்து, பட்டுச்சேலையில் தன் முன் நின்றவரை பார்த்த ஆராவுக்கு அந்த அம்மனே தன் கண்முன்னே வந்து நின்றது போல் இருந்தது.


"என் பொண்ணுக்கு நல்லபடி கல்யாணம் நடந்தால், கன்னிப்பெண்களுக்கு பூ, தாலிக் கயிறு, மஞ்சள், குங்குமம் கொடுக்கிறதா வேண்டி இருந்தேன். இந்தாம்மா வாங்கிக்க" என்று அவள் முன் அவர் தட்டை நீட்ட, ஆரா அவரையே இமைக்காமல் பார்த்தபடியே கைகளை நீட்ட, அந்த பெண்மணி, "உன் மனசுக்கு புடிச்சவன் கூடவே உனக்கு கல்யாணம் நடக்கும்." என்று ஆசீர்வதித்தபடி அவள் நெற்றியில் குங்குமம்த்தை வைக்க,


ஆராவுக்கு அவர் வார்த்தைகள் அனைத்தும் அந்த அம்மனே சொன்னது போல் இருக்க, அவரை கையெடுத்து கும்பிட்டவள், "ரொம்ப நன்றிம்மா. எங்கம்மாவே வந்து என்னை ஆசீர்வாதம் பண்ண மாதிரி மனசுக்கு நிறைவ இருக்கு." என்றவள் அந்த நிறைவோடு ஆதியுடன் புறப்பட்டாள்.